இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . . (106)

அன்பினியவர்களே !

அன்பான வணக்கங்களுடன் கூடிய மடலுடன் உங்கள் முன்னே மற்றொரு வாரத்தில் சந்திப்பதில் பெரு மகிழ்வடைகிறேன். நான் இந்த மடலை எழுதிக் கொண்டிருக்கும் இன்று மே மாதம் முதலாம் திகதி. உழைப்பவர்களின் மகத்துவத்தைப் போற்றும் உன்னதமான தினம். வாழ்க்கை முழுவதும் உழைத்து உருக்குலைவோருக்காய் உலகம் முழுவதும் அவர்களை உயர்த்திப் பிடிக்கும் ஒரு தினம்.

உழைப்பு என்பது எத்தனை மகத்தானதோ உழைப்பதற்காய் எமக்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களும் அத்தனை மகத்தானவையே. தொழிலாளி எனும் திரைப்படத்தில் கவிஞர் ஆலங்குடி சோமு அவர்களின் வரிகளில் டி.எம்,எஸ் இன் கணீர் குரலில் மக்கள் திலகம் நடித்திருந்த பாடல்,

ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி

எனும் பாடல் மிகவும் அர்த்தம் வாய்ந்த பாடலாகும். உழைப்பு எனும் பதம் என் வாழ்வில் எடுத்த பங்குகளை நான் ஒரு கணம் திரும்பிப் பார்க்கிறேன். எனது 18வது வயது வரை நான்கு பிள்ளைகள் உள்ள ஒரு குடும்பத்தில் கடைசிச் செல்லப்பிள்ளையாக வளர்ந்த நான் ஈழத்திலிருந்து இங்கிலாந்து மண்ணிலே போடப்பட்ட போது எனக்கு வயதோ வெறும் 181/2 யே. மாணவனாக இங்கிலாந்துக்குள் காலடி வைத்த நான் அந்நாளைய வழக்கப்படி பகுதிநேர வேலையோடு கூடிய முழுநேர மாணவனாக வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகினேன். உழைப்பின் மகத்துவம் அப்போதுதான் எனக்கு மெதுவாகப் புரிய ஆரம்பித்தது. வாழ்க்கையின் புதிர்களும் ஒவ்வொன்றாக அவிழத் தொடங்கியது உழைப்பு என்பது வெறும் உதியத்திற்காக செய்வது மட்டுமல்ல ஒரு மாணவனாக நான் வந்த லட்ச்சியத்தை நிறைவேற்றுவதற்காக அஏஏஇய மொழியில் கல்வி கற்பது கூட ஒருவகை உழைப்பே என்பது புரிய ஆரம்பித்தது. உழைப்பின் பலனின் ஆனந்தமும் அப்போதுதான் விளங்க ஆரம்பித்தது. வார விடுமுறைகளில் கட்டிடங்களில் காவல்காரனாகப் பணிபுரிந்து கொண்டு வார நாட்களில் முழுநேர மாண்வனாக வாழ்ந்து கொண்டிருக்கும் போதுதான் என் ஒருவனின் வாழ்ப்வாத்ரத்திற்காகவே இவ்வளவு கடினமாக உழைக்க வேண்டுமானல் நான்கு பிளளைகளை வளர்த்தெடுக்க என் பெற்றோர் செய்திருக்கக்கூடிய உழைப்பின் கடினம் புரிய ஆரம்பித்தது. எனது பெர்றோர் எனக்காக செய்தவைகள் ஏதோ அவர்களது கடமை என்ற வகையில் அதுவரைகாலமும் வாழ்ந்து முடித்த என் வாழ்க்கையின் தன்னலத்தை எண்ணியபோது என்மீது எனக்கே வெறுப்பு ஏற்பட்ட கணங்கள் எண்ணிலடங்காதவை.

மாணவனாக இருக்கும் போதே மணமுடித்துக் கொண்ட எனது கல்வியை முடித்துக் கொள்வதற்காக என் அன்புக்குரிய என் மனைவி செய்த கடுமையான உழைப்பு , ஒரு மகனை ஈன்ற பின்னும் கூட முழுநேர பணியுடன் இரவு நேர கல்லூரிப் படிப்பின் மூலம் தனது கல்வித்தகமைகளைப் பெற்றுப் பட்டம் வாங்கிய என் மனைவியின் கடின உழைப்பு எனக்கு மேலும் பல பாடங்களைப் புகட்டியது.

இந்த உழைப்பாளர் தினம் என்பதெல்லாம் எதற்காக என்று எண்ணும் பலர் இருக்கிறார்கள். இதை எமது வாழ்நாளில் நாம் செய்த உழைப்பினை அல்லது செய்திருக்கக்கூடிய செய்யாமல் விட்டுப்போன உழைப்பினை மீள்பரீசீலிப்பதற்கான ஒருநாளாகக் கூட எடுத்துக் கொள்ளலாம் தானே !

இன்று என் கண்முன்னே நான் காணும் பலவகை மனிதர்கள். தமக்குக் கொடுக்கப்பட்ட நேரம் அனைத்தையும் கடும் உழைப்பில் பயன்படுத்தித் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் வாழவைத்துக் கொண்டிருப்போர் ஒருபுறம், தாம் உழைக்காமல் இருப்பதனை நியாயப்படுத்தப் பலவிதமான காரணங்களைக் கண்டுபிடித்துச் சோம்பலில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ஒருபுறம், உழைக்க வேண்டும் எனும் அவா இருந்து உழைக்க முடியமால் வேதனையுறும் உடல் ஊனமுற்றோர் ஒருபுறம் என எத்தனையோ வகையினர்.

இவ்வாழ்க்கை எமக்குக் கிடைத்த மகத்தான வரப்பிரசாதம். எமக்குக் கிடைக்கும் தருணங்களைப் பயன்படுத்தி எமது உழைப்பின் மூலம் எமது நிலையை உயர்த்துவதோடு எம்மால் உதவக்கூடியவர்களுக்கு உதவும் மனப்பான்மையோடு வாழ்வதே இவ்வாழ்க்கையை எமக்குக் கொடுத்த அந்த அனைவருக்கும் பொதுவான சக்திக்கு நாம் செய்யும் கைமாறாகும்.

எனது அன்பினிய உறவுகள் அனைத்திற்கும் எனது அன்பான உழைப்பளர் தின வாழ்த்துகள்

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *