பிறவி வேண்டும்
பிச்சினிக்காடு இளங்கோ
இன்னொரு பிறவிவேண்டும்
இழந்ததை ஈட்டவேண்டும்
தூங்கித் தூங்கிக்
கழித்த பொழுதைத்
துடிப்பாய் விழித்துச்
செயல்படவேண்டும்
ஏங்கி ஏங்கிக்
கரைந்த காதல்
மீண்டும் பூக்க
நீர்விட வேண்டும்
குடித்துக் குடித்துக்
களித்த பொழுதைப்
படித்துப் படித்துப்
பயனுற வேண்டும்
எல்லாம் செய்யும்
பொருளைச் செய்து
ஏக்கம் இன்றி
எல்லாம் செய்ய
இன்னொரு பிறவிவேண்டும்
இழந்ததை மீட்கவேண்டும்
விழித்துத் தூங்கும்
இடைவெளி எல்லாம்
விழிப்பாய் இருந்து
செயல்பட வேண்டும்( 07.12.2011)
மானுடம் வாழ
மனிதம் செழிக்க
உடல்பொருள் ஆவி
உருகிட வேண்டும்
அன்பால் கலந்து
அன்பில் கரைந்து
மலராய்ச் சிரித்து
மகிழ்ந்திட வேண்டும்
உயிர்கள் அனைத்தும்
ஒன்றென எண்ணி
உள்ளம் கரைந்து
வாழ்ந்திட வேண்டும்
இன்னொரு பிறவிவேண்டும்
இழந்ததை மீடகவேண்டும்