செண்பக ஜெகதீசன்

     

உருவுகண் டெள்ளாமை வேண்டு முருள்பெருந்தேர்க்

கச்சாணி யன்னா ருடைத்து.

      -திருக்குறள் -667(வினைத் திட்பம்)

 

புதுக் கவிதையில்…

உருளும் பெரிய தேரும்

உருண்டோடிச் சென்றிடத்

தேவை,

உருவில் சிறிய அச்சாணி..

 

இதுபோல் திடமொடு

மாந்தர்

அகிலத்திலுண்டு..

 

அதனாலவர்

உருவத்தை வைத்து

எள்ளி நகையாடுதல்

ஏற்றதல்ல…!

 

குறும்பாவில்…

பெருந்தேருக்கு சிறு அச்சாணிபோல்

புவியில் மாந்தர் உளதால்,

உருவம் கண்டு எள்ளல் உதவாது…!

 

    மரபுக் கவிதையில்…

தேரது பெரிதாய் இருந்தாலும்,

     திடமாய்த் தெருவில் ஓடிடவே

வேரதாய் வேண்டும் நிச்சயமாய்

     உருவில் சிறிய அச்சாணி,

பாரது சிறந்திட உருசிறிதாய்ப்

     பல்லோர் இங்கே உளதாலே

நேரதாய்க் கொண்டிடு உள்ளத்திலே,

     நீக்கிடு சிறிதெனும் நினைவினையே…!

 

லிமரைக்கூ…

சிறிய அச்சாணியால் ஓடுது தேர்,

குறைவாய் எண்ணாதே..

சிறிய உருவினிலும் சிறப்புடையோர் பார்…!

 

கிராமிய பாணியில்…

தேரோட்டம் தேரோட்டம்

தெருவுலத்தான் தேரோட்டம்..

 

பாருபாரு பெரிய தேரு

சீரா ஓட சின்ன அச்சாணி..

 

தேரோட்டம் தேரோட்டம்

தெருவுலத்தான் தேரோட்டம்..

 

அதால,

ஆளப்பாத்து உருவம்பாத்து

எடபோடாத,

அச்சிபோலச் சின்னவரும்

அறிவு தெறம உள்ளவுருதான்..

 

அந்த

ஆளப்பாத்து உருவம்பாத்து

கொறசொல்லாத..

 

தேரோட்டம் தேரோட்டம்

தெருவுலத்தான் தேரோட்டம்…!

 

-செண்பக ஜெகதீசன்…

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *