Month: July 2015

  • என்னையா ஊர் இது .?

    சேசாத்திரி பாஸ்கர்

    ஒரு சினிமா கொட்டகையில் இப்போது குறைந்த பட்சம் டிக்கெட் விலை நூற்றி இருபது ருபாய் .இரு சக்கர வாகனம் நிறுத்த கட்டணம் முப்பது ருபாய் .வெளியே வாங்கிய தின்பண்டங்களை உள்ளே எடுத்து செல்ல அனுமதி இல்லை . முன்பு கபாலி காமதேனு தியேட்டர்களில் கூட ஒரு எவர்சில்வர் அண்டா போல பாத்திரத்தில் குடிநீர் இருக்கும் .ஒரு டம்ப்ளரில் நீரை பிடித்து குடிக்க வேண்டும் .களவு போகாமல் இருக்க டம்ப்ளரில் ஒரு செயின் கட்டி இருப்பார்கள் .தலையை கீழே குனிந்து குடிக்க சட்டையெல்லாம் வீணாகும் .அது பரவாயில்லை போல்இருக்கிறது . இப்போது இந்த பெரிய கொட்டகையில் பாட்டில் தண்ணீர் தான் .நாற்பது ருபாய் .சின்ன பாப்கார்ன் பொட்டலம் என்பது ரூபாயாம் . அடப்பாவிகளா ? என்னை போல் ஆசாமிகள் உள்ளே சென்றால் சண்டை தான் .இத்தனைக்கும் கிட்டத்தட்ட எல்லா சினிமாவுக்கும் இப்போது வரிவிலக்கு.இவ்வளவு வசதிகள் அரசிடம் இருந்து பெற்று கொண்டு விடுமறை நாளில் பத்து காட்சிகள் வரை திரையிட அனுமதி பெற்றும் இவர்கள் ஆசை அடங்கவில்லை .ஒரு சின்ன கணக்கு நேற்று இரவு போட்டு பார்த்தேன் . ஒரு காட்சியில் ஆயிரம் இருக்கைகள் கொண்ட அரங்கில் முந்நூறு பேர் இரு சக்கர வண்டியில் வருவோர் என்றால் அவர்கள் தரும் தொகை சுமார் ஒன்பது ஆயிரம் ருபாய் .இது ஒரு காட்சிக்கு .ஒரு நாள் வசூல் சுமார் இருபத்தி ஏழாயிரம் என்றால் வருஷம் கிட்டத்தட்ட ஒன்பது கோடி .தனி மனித ஒழுக்கம் , நேர்மையான வியபாரம் , தொழில் தர்மம் எல்லாம் போதித்தவர்கள் எல்லாம் முட்டாளா ?இந்த சமூகம் நல்லவர்களை நகர்த்தி கொண்டிருக்கிறது .எல்லாம் நியாயம் என்றால் என்னையா ஊர் இது .? காந்தி நீதிமன்றம் வந்த போது நீதிபதியே எழுந்து நின்ற இந்த தேசத்தில் இப்படியா ?மனசு ஆறவில்லை …….Agitated .

    Baskar CS
    Chennai 4

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

     

    ‘பத்மா சணமிட்டு பாதம் பசுவருட
    சத்யவான் கண்ணனவன் சிம்மேந்த்ர, -மத்யமாவில்
    சிந்திக்கிறான் தப்பிக்க, சிங்கமாய்ப் போயொளிய
    .அவன் ஒளிந்த தூண் துரும்பாகும்….
    துரும்பு தூணாகும்….ஜ்வ்லந்தம் சர்வதோமுகன்….
    …கிரேசி மோகன்….

    Share
  • அடையாளம்

    மாதவன் ஸ்ரீரங்கம்.

    கதைக்குமுன்பு ஒரு நிமிடம் :
    நீங்கள் ஒரு இடத்தில் கண்விழித்து எழுகின்றீர்கள். அப்பொழுது உங்களைச் சுற்றியுள்ளவற்றை பற்றியோ, உங்களைப்பற்றியோ, உங்களுக்கு எதுவும் நினைவிலில்லை. மற்றவர்களுக்கும் உங்களைப்பற்றி எதுவுமே தெரியவில்லை என்றால் …

    நீங்கள் என்பது யார் ?

    _____________________________________________________________________

    இப்போது அவனுக்கு பயமாக இருந்தது.

    சுமாராக இரண்டு மூன்றுமணிநேரங்களாக அவன் அந்த கடற்கரையில் உட்கார்ந்திருக்கிறான். அந்த இடம் முழுவதும் மனிதர்களால் நிரம்பியிருந்தது. அங்கிருந்த ஒருவருக்கும் அவனை அடையாளம் தெரியவில்லை. அவர்கள் யாரென்றும் அவனுக்குத் தெரியவில்லை. அவ்வளவு ஏன், அவனுக்கு தன்னைப்பற்றியே யாரென்று தெரியவில்லை. கண்விழித்தபோது கொஞ்சம் குழப்பமாக இருந்தது. பிறகு அது ஒருவகையில் அவனுக்கு சவுகரியமாகவும்கூட இருந்தது. ஆனால் நேரம் செல்லச்செல்ல அவனால் தாங்கமுடியாத அளவிற்கு இது ஒரு பயங்கரமான கனவாக இருக்குமோ என்றுகூடத்தோன்றியது.

    அங்கு விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை வைத்து கொஞ்சம் பயம்விலகி சமாதானமாகிக்கொண்டு மெல்ல எழுந்தான். அங்கங்கே மனிதர்கள் ஆடையேதும் அணியாமல் வெயிலில் குளித்துக்கொண்டிருந்தார்கள். சிலர் அலைகளில் கால்நனைத்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். குழந்தைகள் அனைவரும் மிக மும்மறமாக மணலில் உருண்டுகொண்டிருந்தார்கள்.

    அவன் மெல்ல நடந்து சென்று, தனியாக உட்கார்ந்திருந்த அந்த முதியவரை நெருங்கி எதையோ பேசமுற்பட்டான். குரல் வரவில்லை அவனுக்கு. கிழவர் சலனமின்றி இவனைப்பார்த்துவிட்டு அருகில் அமரச்சொல்லி சைகை செய்தார். இவன் உட்கார்ந்தபடி அவரிடம் கேட்டான்.

    “ஐயா இது என்ன இடம் ? நான் யார் ? நீங்கள் யார் ?…”

    இவன் கேள்விகளை முடிக்குமுன்பே கிழவர் தடுத்துவிட்டு பேசத்தொடங்கினார்.

    “இது ஒரு அடையாளமற்ற இடம். இடத்திற்கு மட்டுமல்ல. இங்கிருக்கும் எவருக்குமே எந்தவித அடையாளமும் இல்லை”

    இவன் குழப்பம் இப்போது அதிகரித்தது. புரியாமல் அவரையே பார்த்தான். அவர் மெலிதான புன்னகையோடு தொடர்ந்தார்.

    “நீ இந்த இடத்திற்கு வந்து சிலமணிநேரங்கள்தான் ஆகின்றது. அதனால்தான் உனக்கு இன்னும் முழுமையாக இந்த இடம் பற்றிப் புரியவில்லை. அதோ அங்கே பார்”…

    அந்தக்கிழவர் கைகாட்டிய திசையில். விதவிதமான பறவைகளும் மிருகங்களும் பிராணிகளும் ஒன்றாக பறந்துகொண்டிருந்தன. நடுநடுவே மனிதர்களும் அவ்வப்போது பறந்துகொண்டும் மிதந்துகொண்டுமிருந்தனர். கிழவர் மறுபடி தொடர்ந்தார்.

    “உண்மையில் இந்த இடம் எந்தவிதமான அடையாளங்களுமற்றது. கடல் மனிதர்கள் பறவைகள் மிருகங்கள் குழந்தைகள் கிழவர்கள் போன்ற அடையாள வார்த்தைகளெல்லாம்கூட, இதை எழுதிக்கொண்டிருக்கும் ஒருவரின் துயரம் மட்டுமே. மற்றபடி இங்கு எந்த உயிரிலும் எவ்வித வேறுபாடுகளும் கிடையாது.

    இங்கு எவருக்கும் பசியில்லை தாகமில்லை காமமில்லை முதுமையில்லை நோய்களில்லை மரணமும் இல்லை. இங்கிருப்பவர்களெல்லாம் வெறுமனே இருக்கிறார்கள். அவ்வளவுதான். எவருக்கும் எவரோடும் பேசத்தேவையில்லை. இங்கு இயற்கை மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறது எப்போதும். உனது வாயைவிட காதுகள் மிகக்கூர்மையானது. உன்பேச்சை விட்டுவிட்டு இந்தக் கடலை, பறவை, விலங்குகளை மனிதரை உற்று கவனி நிறையப் புரியும்”.

    அவன் அவரிடம் மிகநிதானமாகக் கேட்டான்.

    “ஆனால் எனக்குக் கேள்விகள் வந்துகொண்டேயிருக்கின்றன ஐயா. உதாரணத்திற்கு, நான் யார்?”

    கிழவர் பலமாக ஒருமுறை சிரித்தார்.

    “அதை பெரிதுபடுத்தாதே. இயல்பில் அது சாத்தியமானதே. உன்னில் மிச்சமிருக்கும் பழைய அடையாளக் கலாச்சாரத்தின் எச்சம்தான் உனது கேள்விகள். இங்கு உனது தொடர்ந்த இருப்பினால் மட்டுமே அவை மறைந்துபோகும் சாத்தியமுண்டு. உனக்கு உன்னைப்பற்றி தெரியாததைப் போலவே எனக்கும் என்னைப்பற்றி எதுவும் தெரியாது. இங்கு வந்த புதிதில் எனக்கும் நான் யார் என்பதில் மிகுந்த குழப்பமும் கேள்விகளும் இருந்தது. தொடர்ந்த எனது பொறுமையின் காத்திருப்பால் கேள்விகள் குழப்பங்களெல்லாம் ஒருநாள் காணாமல் போயிற்று.

    இங்கு எல்லோருக்குமே அப்படித்தான். ஆனால் நான், நீ, அவர்கள் என்னும் பண்டைய அடையாள உலகில் அதிக ஆழத்தில், தான் இன்னார் என்பதில் அதீத நம்பிக்கை கொண்டவர்களை, சிறிது அதிககாலம் இந்தக்கேள்விகள் இங்கு துரத்திவரும். நீ விரும்பினால் இங்கு அதற்கும்கூட வழியுண்டு. அதோ. உன் பழைய நினைவுகளை மீட்டெடுப்பதற்கான வழி”.

    சற்றே தனிமையான மேட்டுப்பாங்கான இடத்திலிருந்த பெரிய மரத்தில் ஒரு ஊஞ்சல் தொங்கிக்கொண்டிருந்தது. கிழவர் சொன்னார்.

    “அந்த ஊஞ்சல் ஒரு கால ஊர்தி. அதில் உட்கார்ந்துகொண்டு ஆடத்துவங்கினால், நீ விரும்புகின்ற உனது பிறவிகளுக்கெல்லாம் அது உன்னை அழைத்துச்செல்லும். ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் நினைவில் வைத்துக்கொள். உனது எந்தப்பிறவியிலும் எவரோடும் பேசிவிடாதே. பிறகு நீ அங்கேயே தங்கிவிடுவாய். பலவிதமான பிறவிகளின் தொடர்ந்த சலிப்பினால்தான் நீ இங்கு வந்து சேர்ந்திருக்கிறாய்.

    வலிகளும், புன்னகையும், காதலும், நோய்களும், முதுமையும், சூழ்ச்சிகளும், பொய்களும் தொடர்ச்சியாக உன்னை வறுத்தெடுத்ததாலும், நீ ஆத்மார்த்தமாகவே அவற்றையெல்லாம் கடந்துவிட விரும்பியதாலும்தான் இங்கு வந்திருக்கிறாய். இவையெல்லாம் பலகோடி ஆண்டுகளாக படிப்படியாக நிகழ்ந்தது. ஒருவேளை ஏதேனும் பிறவியில் நீ சிக்கிக்கொண்டால், மறுபடி இங்கே வர பலநூறுகோடி ஆண்டுகள் ஆகக்கூடும் ஜாக்கிரதை.”

    இப்போது அவன் மிகப்பெரிய நிம்மதியை உணர்ந்தான். சற்றே யோசித்துப்பார்த்ததில், உண்மையில் அவனுக்கு இங்கு என்ன குறை ? கிட்டத்தட்ட மாலை வந்துவிட்டது. சிலமணிகளில் இருட்டிவிடும். இதுவரை பசியென்ற உணர்வே தோன்றவில்லை அவனுக்கு. உடலின் எடையைக்கூட உணரவில்லை. மிக எளிமையாகச் சொன்னால், அவனுக்கு இங்கு தேவையென்றே எதுவுமில்லை. நிம்மதியும் திருப்தியும் சுதந்திரமாகவுமாக இருக்கின்றான். இங்கேயே இப்படியே எந்த அடையாளமுமற்று இருந்துவிடவே அவனுக்கும் விருப்பமிருந்தது.

    ஆனாலும் துரதிர்ஷ்டவசமாக, தான் யார் என்று தெரிந்துகொள்ளும் தீராத உந்துதலில் அவன் ஊஞ்சல் நோக்கி நகர்ந்தான். இப்போது அங்கிருந்த மனிதர்களெல்லாம் நடுவில் நெருப்பிட்டு அதைச்சுற்றிவந்து நடனமாடினார்கள். அவர்கள் கைகள் ஒருவருக்கொருவர் சங்கிலிபோலப் பிணைத்திருந்தார்கள். அவர்களது நடனத்தின் லயத்தை ரசித்தபடியே அவன் ஊஞ்சலி உட்கார்ந்துகொண்டான். அவர்கள் இன்னும் பரவசமாக ஆடினார்கள். அந்த நெருப்பின் ஜ்வாலையும்கூட அவர்களோடு சேர்ந்து ஆடியதுபோலத்தோன்றியது அவனுக்கு.

    மெல்ல ஊஞ்சல் ஆடத்தொடங்கியதும் அவனைப் பிறவிகள் ஆக்கிரமித்தன. மாறிமாறி அவன் பல பிறவிகளுக்குள் பிரவேசித்தான். ஒரு பிறவியில் அவன் டைனோசராய் இருந்தான். இன்னொன்றில் அவன் எறும்பாய் இருந்தான். மற்றொன்றில் அவன் அலெக்ஸாண்டராய் இருந்தான். ஒரு விஞ்ஞானியாக, கிழவியாக, புல்லாக, பாம்பாக, உருவமற்ற பிண்டமாக, நீக்ரோவாக, ஐரோப்பியனாக, மரமாக, பசுவாக, காகமாக, எழுத்தாளனாக, நடிகனாக, ரசிகனாக, கடத்தல்காரனாக, பாதிரியாராக, நீச்சல்வீரனாக, கொலைகாரனாக, அடிமையாக, மன்னனாக, அலியாக, தவளையாக, பல்லியாக….. அவன் சலித்துப்போனான்.

    சபிக்கப்பட்ட இத்தனை பிறவிகளிலிருந்தும் அவனால் தான் யார் என்னும்டையாளத்தை மீட்டுக்கொள்ள முடியாத குழப்பத்திலிருந்தபோது, அவன் பட்டாம்பூச்சியாக ஒரு சிறுவனின் கையில் அகப்பட்டபோது ‘ஐயோ’ என்று கத்திவிட்டான்.

    Share
  • திருக்கருகாவூர் – தல புராணம்

    பவள சங்கரி

    கருணை மழை பொழியும் கருகாவூர் கற்பக நாயகி!

    11698584_861438480611445_8838361490820937760_n
    திருக்கருகாவூர் – திருத்தாண்டகம்

    குருகாம் வயிரமாங் கூறு நாளாங்
    கொள்ளுங் கிழமையாங் கோளே தானாம்
    பருகா அமுதமாம் பாலின் நெய்யாம்
    பழத்தின் இரதமாம் பாட்டிற் பண்ணாம்
    ஒருகா லுமையாளோர் பாக னுமாம்
    உள்நின்ற நாவிற் குரையா டியாங்
    கருவா யுலகுக்கு முன்னே தோன்றுங்
    கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. – [திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
    (ஆறாம் திருமுறை)]

    முத்தி லங்குமுறு வல்லுமை யஞ்சவே
    மத்த யானைமறு கவ்வுரி வாங்கியக்
    கத்தை போர்த்தகட வுள்கரு காவூரெம்
    அத்தர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.[திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
    திருக்கருகாவூர் தேவாரத் திருப்பதிகம் – (மூன்றாம் திருமுறை 46வது திருப்பதிகம்)]

    நம் நாட்டில் மூவரின் பாடல் பெற்று சிறப்புற்று விளங்கும் தேவாரத் திருத்தலங்கள் மொத்தம் 275. அவற்றுள் திருக்கருகாவூர் என்ற இத்திருத்தலம் காவிரியின் தென் கரையில் அமைந்துள்ள 18ஆவது சிவத்தலம்.

    தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களின் பட்டியல்

    திருக்காருகாவூர் எனும் இத்திருத்தலத்தை, திருக்களாவூர், முல்லை வனம், மாதவி வனம், கர்ப்பபுரி என பல பெயர்களில் நூல்கள் குறிக்கின்றன. முல்லைக்கொடியை தல விருட்சமாகக் கொண்டதால் இத்தலம் முல்லைவனம் என்றும், இறைவன் முல்லை வன நாதர், என்றும் மாதவீவனேசுவரர் என்றும் அழைக்கப்பெறுகிறார்.

    நாற்புறமிருந்தும் எளிதாக வந்துபோகும் வகையில், சோழ வள நாட்டின் செழிப்பான தஞ்சை மாவட்டத்தில், பாபநாசம் எனும் ஊரின் தெற்கே ஆறு கிலோமீட்டர், கும்பகோணத்திற்கு தென்மேற்கில், வடக்கில் 20 கிலோ மீட்டர் மற்றும் சாலியமங்கலத்திற்கு வடக்கில் 10 கிலோமீட்டரில் இத்திருத்தலம் அமையப் பெற்றுள்ளது. தஞ்சாவூருக்கு வடக்கில் 20 கிலோமீட்டரில், வெட்டாற்றின் தென்கரையில் இக்கோவில் உள்ளது.

    இக்கோவிலில் சிவபெருமான், கற்பக விநாயகர் என அழைக்கப்பெறும் தல விநாயகர் , நந்தி என மூவரும் சுயம்பு மூர்த்திகளாகவும், சுவாமி ஆலயத்தின் பின்புறம் இருக்கும், லிங்கோத்பவரின் குடவரையில் அர்த்தநாரீசுவரர், அமைந்திருப்பது சிறப்பு. முல்லை வனத்தில் சுயம்புவாக, புற்றுருவில் தோன்றியதால் இலிங்கத் திருமேனியில் முல்லைக்கொடி படர்ந்து, வடுவை ஏற்படுத்தியிருப்பதை இன்றும் காணலாம். இறைவன் இன்றும் புற்றுருவிலேயே காட்சியளிப்பதால், வழமையான அபிடேகங்கள் ஏதுமின்றி, புனுகு மட்டுமே சாத்தப்படுகிறது.

    10665717_861438130611480_5514288486832340212_n

    இம்மண்ணில் தோன்றும் அனைத்துயிர்களின் ஆதியாய், கருவைக் காத்தருளும் கர்ப்பரட்சகியாய், கருகாத்த நாயகியாய், கரும்பானையாள் எனும் அன்னையாய் அழகே உருவாய் எழுந்தருளியிருக்கிறார். பிள்ளைப்பேறு வேண்டி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரம் அருளுபவள் அன்னை. அன்னையின் திருவடியில் வைத்து பூசித்து வழங்கப்படும் பசு நெய் உண்டவர்களுக்கு பிள்ளை வரம் கிடைப்பதாக பக்தர்கள் தீவிர நம்பிக்கை கொண்டுள்ளனர். எண்ணெய் வைத்து பூசை செய்து, அதை கர்ப்பிணிப் பெண்கள் வயிற்றில் பூசிவர சுகப்பிரசவம் ஆகிறது என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள்.

    இங்கு உள்ள மூலவராகிய முல்லைவனநாதர் சந்நதி, கர்ப்பகரட்சகி அம்மன், இடையில் அமைந்துள்ள ஆறுமுகர் சந்நதி ஆகிய மூன்றும் ஒரே வரிசையில் உள்ளபோது தரிசிப்பது பெரும் பேறு என்கின்றனர். அதாவது, சோமாசுகந்தர் அமைப்பில் இருக்கும் மூன்று சந்நதிகளையும் ஒரு சேர வலம் வந்து தரிசிப்பவர்களுக்கு. புத்திரப் பேறும், கருவை நன் முறையில் காத்து அருளும் பேறும் வாய்க்கப் பெறுவது உறுதி. அதற்கான அமைப்பில் சுற்றுப் பிரகாரம் இருப்பதும் சிறப்பு. கோவிலுக்கு முன்னால் அமைந்துள்ள பாற்குளம் காமதேனு என்ற தெய்வப் பசு தம் காலால் உருவாக்கிய குளம் என்றும் சிவராத்திரிக் காலங்களில் பெருமான் இங்கு தீர்த்தம் அருளுவதாகவும் நம்பிக்கை உள்ளது.

    11692672_861439787277981_6858674562650678376_n

    கோவில் அமைப்பு : மிகப் பழமையான இக்கோவில் நான்கு வீதிகளுக்கு இடையில் அழகான வடிவமைப்பில் அமைந்துள்ளது. 460 அடி நீளமும், 284 அடி அகலமும் உடையது. கோவிலின் தென்புறம் நுழைவு வாயிலும், கிழக்கு புறம் இராசகோபுரமும் அமைந்துள்ளது. ஆலயத்தினுள் நுழைந்தவுடன் வடக்குபுறம் வசந்த மண்டபம் உள்ளது. அடுத்து முதலில் உள்ள பெரிய பிரகாரத்தில் முல்லைவனநாதரும், இடப்பக்கம் கர்ப்பகரட்சாம்பிகை கோவிலும் தனித்தனி பிரகாரத்தில் உள்ளது.

    ஈசனின் ஆலயத்தின் முன்னால் கொடி மரம், பலி பீடம், நந்தி ஆகியவையும், தென்கிழக்கில் மடப்பள்ளி, அறுபத்து மூன்று நாயன்மார்களும், வட கிழக்கில் நடராசர் சபா முன் மண்டபமும், யாக சாலையும் இருக்கின்றன. மேற்புறம் சுவாமிக்கு வடகிழக்கில் நடராசர் சந்நதியும், நவக்கிரகங்களும், தென்பக்கம் சோமாசுகந்தர் சந்நதியும், அருகில் தென்கிழக்கில் தல விநாயகர் கற்பகப் பிள்ளையார் சந்நதியும் உள்ளன. உட்பிரகாரத்தில் நடராசருக்கு எதிரில் சேக்கிழார், சந்தனாச்சாரியார், நால்வர் சந்நதிகளும், தென்புறம் தட்சிணாமூர்த்தி, நிருதிவிநாயகர் சந்நதிகளும், மேல்புறம் அர்த்தநாரீசுவரர், மகாலட்சுமி சந்நதிகளும், வடபுறம் ஆறுமுகர், பிரம்மன், துர்க்கை, சண்டேசுவரர் மற்றும் தல விருட்சமாகிய முல்லைக்கொடியும் அமைந்துள்ளன.

    துலாபாரப் பிரார்த்தனை மற்றும் தங்கத்தொட்டில் பிரார்த்தனை ஆகியவை இங்கு பிரசித்தம்.

    இத்திருக்கோவில் கல்வெட்டில், திருக்கருகாவூர் , மகாதேவர் திருக்கருகாவூர் ஆழ்வார், திருமுல்லைவனமுடைய மகாதேவர் என்று குறிக்கப் பெற்றுள்ளது.

    திருக்கருகாவூர் கல்வெட்டுகள் குறித்து குடவாயில் பாலசுப்பிரமணியன் எம்.ஏ., எம்.பில். அவர்களின் தொகுப்பு:

    இத்திருக்கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் இதுவரை 31 கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டுள்ளன. அவை முதல் பராந்தக சோழன் காலத்திலிருந்து பிற்காலச் சோழர் ஆட்சிக்காலம் முடியும் வரை உள்ள கால எல்லையில் வெட்டுவிக்கப் பெற்றவையாகும். இத்திருக்கோயில் முதல் பராந்தக சோழனின் காலத்தில் (கி.பி. 907 – 953) கற்றளியாக புதுப்பிக்கப் பெற்றதோடு அப்பெருவேந்தனின் 17 கல்வெட்டுகளும் அங்கு சாசனமாக இடம் பெற்றுள்ளன. இவற்றை அடுத்து உத்தம சோழனின் கல்வெட்டு ஒன்றும், இராச இராச சோழனின் கல்வெட்டுகள் இரண்டும், விக்கிரம சோழனின் கல்வெட்டு ஒன்றும் இராஜகேசரி என்ற பட்டப் பெயர் பொறிக்கப்பட்ட சோழன் கல்வெட்டுகள் நான்கும், பரகேசரி என்ற பட்டத்துடன் உள்ள கல்வெட்டுகள் மூன்றும் உள்ளன.

    ஊர்த்தவ மகரிஷியின் சாபத்தால் நித்துவரின் மனைவி வேதிகைக்கு ஏற்பட்ட கருச்சிதைவை இறைவன் மருத்துவம் பார்த்து அவள் கருவைக் காத்ததால் – கருகாவூர் என்று பெயர் பெற்றது என்பது போன்று புராணக் கதைகள் அதிகம் இருந்தாலும், தட்ச சாபத்தால் இன்னலுற்ற சந்திரன் ஒரு பங்குனி மாத பௌர்ணமியில் இத்தலத்தில் சிவபூசை செய்து நற்கதி அடைந்ததன் விளைவாக, ஒவ்வொரு பங்குனி பௌர்ணமி நாளிலும் நிலவொளி இறைவன் திருமேனியில் பிரகாசிப்பதைக் காணலாம் என்பது ஆதாரமாக விளங்குகிறது.

    கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரசவம் பெற்று நன்மக்கட்பேறு பெற, கீழ்கண்ட இந்த சுலோகத்தை 108 முறை பாராயணம் செய்வது நலம்.

    ஹிமவத்யுத்தரே பார்ஸ்வே சுரதா நாம யலிஷீனி
    தஸ்யா ஸ்மர்ண மாத்ரேணா விசல்யா
    கர்ப்பிணிபவேது

    திருமணம் கூடிவர, குழந்தை உண்டாக பிரார்த்தனை சுலோகம்:

    தேவேந்திராணி நமஸ்துப்யம்
    தேவேந்திர பிரியபாமினி
    விவாக பாக்யம் ஆரோக்யம்
    புத்ரலாபம்ச தேஹிமே
    பதிம் தேஹி சுதம் தேஹி
    சௌபாக்யம் தேஹிமே சுபே
    சௌமாங்கல்யம் சுபம் ஞானம்
    தேஹிமே கர்ப்பரஷகே
    காத்யாயிணி மஹாமாயே
    மஹாயோகின்யதீஸ்வரி
    நந்த கோப சுதம் தேவி
    பதிம் மே குருதே நம

    சுகப்பிரசவம் வேண்டி

    ஹே சங்கர ஸ்மரஹர பிரமதாதி நாதரி
    மன்னாத சாம்ப சசிசூட
    ஹரதிரிசூலின் சம்போஸூகபிரசவ க்ருத்பவமே
    தயாளோ ஹேமாதவி வனேச பாளையமாம் நமஸ்தே.

    ஓம் கருகாக்கும் நாயகியே போற்றி
    ஓம் கர்ப்ப ரக்‌ஷாம்பிகையே போற்றி
    ஓம் கருகாவூர்தேவியே போற்றி
    ஓம் கஷ்டங்கள் தீர்ப்பாய் போற்றி

    Share
  • அறிந்துகொள்வோம்!

    -மேகலா இராமமூர்த்தி

    மன்னுயிர்க்கெலாம் அன்பு செய்த மாமனிதர் – ஆல்பர்ட் சுவைட்சர்

    ஜெர்மனியிலுள்ள கய்சர்பர்க் (Kayserburg) எனும் கிராமத்தில், சனவரி 14, 1875-இல், தேவாலயத்தில் கிராமபோதகராய்ப் பணிசெய்துவந்த (the local Lutheran-Evangelical pastor) ஒருவரின் மகனாய்ப் பிறந்தவர் ஆல்பர்ட் சுவைட்சர் (Albert Schweitzer) எனும் பெருமகனார்.

    மெய்யறிவாளர், மதபோதகர், இசைத்துறை வல்லுநர், புகழ்பெற்ற மருத்துவர் இப்படிப் பன்முக ஆற்றலளாராய் மிளிர்ந்த சுவைட்சர், மன்னுயிர்பால் நேயம் கொண்ட மாமனிதராய்த் திகழ்ந்து மன்பதையில் அழியாப் புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Albert_Schweitzerஇளவயது முதலே இரக்ககுணம் நிரம்பப் பெற்றவராக விளங்கிய சுவைட்சர், மக்களிடத்தும் உயிருள்ள அனைத்துப் பொருள்களிடத்தும் அன்புகாட்ட வேண்டும் எனும் கொள்கையைக் கொண்டவராய் விளங்கினார். ஒவ்வொரு நாளும் தான் உறங்கப்போகும்முன் செய்யும் வழிபாட்டில், “மூச்சுவிடுகின்ற எல்லா உயிர்களையும் ஆண்டவரே நீர் காப்பாற்றி அருள்க! தீமையினின்று அவற்றைக் காப்பாற்றுக! அவை அமைதியோடு உறங்கட்டும்!” என்று வேண்டிக்கொண்ட பின்பே உறங்கச் செல்வதைத் தன் வழக்கமாகக் கொண்டிருந்தாராம்.

    இசை, வேதாகமம் போன்ற துறைகளில் தேர்ச்சிபெற்றிருந்த அவர், பின்பு மெய்ந்நூலிலும் (theology) முனைவர் பட்டம்பெற்று, ஜெர்மனியின் ஸ்டார்ஸ்பர்க் (Strasbourg) பல்கலைக்கழகத்தில் சில ஆண்டுகள் மெய்ந்நூலியல் விரிவுரையாளராய்ப் பணியாற்றியபின், அங்குள்ள சமயக் கல்லூரி ஒன்றில் முதல்வராய்ப் பணிபுரிந்திருக்கின்றார்.

    சமயநூற் கல்வி, இசைநூற் கல்வி, மெய்ந்நூற் கல்வி என்று பலவற்றிலும் தேர்ச்சிபெற்றுப் புகழோடு திகழ்ந்துகொண்டிருந்தாலும் இவற்றால் சுவைட்சர் மனநிறைவு கொண்டாரில்லை. பிறருக்கு உழைக்கவேண்டும் எனும் எண்ணம் கொண்ட அவர்மனம் அதற்கான வழிகள் குறித்தே சிந்தித்துக்கொண்டிருந்தது.

    அவ்வேளையில், ’உறங்கும் நோயால்’ (sleeping sickness) ஆப்பிரிக்க மக்கள் மிகுந்த இடர்ப்பட்டு நூற்றுக்கணக்கில் இறந்துகொண்டிருப்பதை அறிந்து மிகுந்த வருத்தமுற்றார் அவர். அம்மக்களின் துயர்துடைப்பதே தன் வாழ்வின் இலட்சியம் என்றெண்ணியவர், தன் கனவு மெய்ப்பட 1906-ஆம் ஆண்டு மீண்டும் ஸ்டார்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துறை மாணாக்கராய்ச் சேர்ந்துவிட்டார்.

    ஏழாண்டுகள் அத்துறையில் பயின்று மருத்துவராய்த் தகுதிபெற்றார். தன் முப்பத்தேழாவது வயதில் ஹெலன் பிரஸ்லௌ (Helen Bresslau) எனும் பெண்மணியை மணந்தார் சுவைட்சர். இருவரும் கருத்தொருமித்த காதலராய் விளங்கினர். ஆப்பிரிக்காவிற்குச் சென்று மக்களுக்குச் சேவை செய்யவேண்டும் எனும் சுவைட்சரின் எண்ணத்திற்கு ஹெலன் பெரிதும் துணைநின்றார். ஆப்பிரிக்காவிலுள்ள லாம்பரின் (Lambarene) எனும் குன்றுகள் நிறைந்த பகுதிக்குத் தன் மனைவியோடு கப்பலில் பயணம் மேற்கொண்ட சுவைட்சர், இயற்கைச் சீற்றங்கள் பலவற்றைக் கடந்து அவ்விடத்தை அடைந்தார். குன்றுகள் நிறைந்த அப்பகுதில் குன்றாத மனவுறுதியோடு ஏழைமக்களுக்குத் தொண்டு செய்யத் தொடங்கினார்.

    ஐரோப்பா கண்டத்தில் வெள்ளை இனத்தில் பிறந்த அவர் ஆப்பிரிக்கக் கறுப்பினத்தவரின் நோய்களை குணப்படுத்தி அவர்தம் வாழ்க்கையில் புத்தொளி பாய்ச்ச விழைந்ததை எண்ணுகையில், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனும் புறநானூற்று வரிகளின் உதாரண மனிதராய் அவர் திகழ்ந்திருப்பது தெற்றெனப் புலப்படுகின்றது.

    ’உயிர்கள் தொழத்தக்கவை’ எனும் உறுதியான எண்ணங்கொண்ட அவர், மனிதர்கள் வாழ்வதற்கு ஆசைப்படுவதுபோலவே பிற உயிர்களும் ஆசைப்படுகின்றன என்பதைக் கண்டார். அனைத்து உயிர்களையும் பாதுகாப்பதில் அளவிலா ஆவல் கொண்டார். சுவைட்சரின் உயிரிரக்கம், நம் இராமலிங்க வள்ளலின் சீவகாருண்யக் கோட்பாட்டோடு ஒப்பிடத்தக்கதாகும்.

    லாம்பரீனில் அவர் பணிசெய்துகொண்டிருந்த நேரத்தில் முதல் உலகப்போர் மூண்டது. அவரால் தொடர்ந்து அங்கே மருத்துவப் பணி செய்யமுடியாத சூழல் ஏற்பட்டதால் வேதனையோடு தன் சொந்த நாட்டிற்குத் திரும்பினார். மருத்துவத்துறையை ஒதுக்கிவைத்துவிட்டு தத்துவ போதகராகவும் இசை ஆசிரியராகவும் அவர் மீண்டும் பணிபுரிந்துவந்த வேளையில், சுவீடனில் சொற்பொழிவுகள் நிகழ்த்துவதற்கு அவருக்கு அழைப்பு வந்தது. அதனால் உற்சாகம் கொண்ட சுவைட்சர், ”மரப்பெட்டியினுள்ளே மறைந்து கிடக்கும் காசு போன்ற என்னை மக்கள் மறக்கவில்லை” என்று தனக்குத்தானே கூறி மகிழ்ந்தார்.

    சில ஆண்டுகளில் சுவிட்சர்லாந்திலுள்ள சூரிச் பல்கலைக்கழகம் (Zurich University) அவருக்கு ’கவுரவ டாக்டர் பட்டம்’ அளித்துச் சிறப்பித்தது. அதைத்தொடர்ந்து, ’பழைய காட்டோரத்தில்’ (On the edge of the primeval forest) எனும் பெயர்கொண்ட அவருடைய நூலொன்று வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு பல மொழிகளிலும் அறிஞர்களால் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டது. ’நாகரிகமும் அறமும்’ (civilization and ethics) எனும் அவரின் மற்றொரு நூல் 1923-ஆம் ஆண்டு வெளியானது. அந்நூலில், “மனிதர்களின் நாகரிகம் பாழாகிக்கொண்டிருப்பதைத் தடுக்கவேண்டுமானால் ‘உயிர்களின் தொழுதகைமை’ (reverence for life) என்ற அறவுள்ளத்தால் மட்டுமே அது சாத்தியமாகும்” என்று தெளிவாய்க் குறிப்பிட்டிருந்தார் சுவைட்சர்.

    மனக்கட்டுப்பாட்டில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த சுவைட்சர், ”மனம் சென்றவிடத்திலெல்லாம் அதனை விட்டுவிடுதல் கூடாது என்றும் அதனைத் தீயதிலிருந்து நீக்கி நல்லதன்கண் கொண்டு செலுத்துதல் வேண்டும்” என்றும் விளம்பினார்.

    சென்ற இடத்தாற் செலவிடாத் தீதொரீஇ
    நன்றின்பால் உய்ப்ப தறிவு
    எனும் தெய்வப்புலவரின் பொய்யாமொழி ஈண்டு நினைவுகூரத்தக்கது.

    ’மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’ எனும் அற்புளத்தோடு பணியாற்றிக்கொண்டிருந்த சுவைட்சருக்கு 1953-ஆம் ஆண்டு வரவேற்புப் பதக்கம் (Welcome Medal) எனும் பெரும்பரிசும் பணமுடிப்பும் அளிக்கப்பட்டன. அப்பணம் முழுவதையும் ஆப்பிரிக்கப் பெருநோயாளிகளின் (தொழுநோய்) சிகிச்சைகளுக்காகவே செலவிட்டார் அம்மாமனிதர். சமுதாயத்தால் அருவருப்போடு ஒதுக்கப்பட்ட, அங்கம் அழுகிப்போன தொழுநோயாளிகளுக்கு மருத்துவம் செய்து அவர்களின் தொழத்தக்க தெய்வமாக விளங்கினார் சுவைட்சர். அவருடைய அருந்தொண்டைப் பாராட்டும் வகையில் 1952-ஆம் ஆண்டு அவருக்கு நோபல் சமாதானப்பரிசு (Noble peace prize) வழங்கப்பட்டது.

    வயது முதிர்ந்த நிலையிலும் மக்கள் சேவையை நிறுத்தாத அம்மனிதருள் மாணிக்கம், அற்றார்க்கொன்று ஆற்றுவதிலேயே தன் உள்ளத்தைச் செலுத்தினார். அவரின் மகத்தான பணிகளை அறிந்த எலிசபெத் மகாராணியார் அவருக்கு ’Order of Merit’ எனும் சிறந்ததொரு பட்டத்தை 1965-இல் அளித்து மகிழ்ந்தார்.

    பல்வேறு நாடுகளுக்கும் சென்று சொற்பொழிவாற்றும் வழக்கத்தைக் கொண்டிருந்த சுவைட்சர், தம் பொழிவுகளில் கூறிய அறக்கருத்துக்கள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை ஆகும். ”பெருங்குடி மக்களாய்ப் பிறந்தவர்கள் பணியொன்றும் செய்யத் தேவையில்லை; பணியாற்றப் பிறந்தவர்கள் இழிகுடி மக்களே ஆவர்” என்று கிரேக்க அறிஞர்கள் பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்றோர் கூறிய கருத்துக்களைக் கடுமையாக எதிர்த்த சுவைட்சர், உயிர்களுக்குள் பிரிவினையும் வேறுபாடும் கூடாது என்று வலியுறுத்திப் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” எனும் வான்புகழ் வள்ளுவரின் கருத்தைப் பரப்புரை செய்திருப்பது போற்றுதலுக்குரியது.

    ’தமக்கென்றே உழைத்துக்கொண்டிராமல் பிறர்க்காகப் பாடுபடுவோரால்தான் உலகம் உயர்வடையும்’ என்பதையே தன் வாழ்வின் தலையாயக் கொள்கையாய்க் கொண்டிருந்தவர் சுவைட்சர்.
    ”தமக்கென முயலா நோன்தாள்
    பிறர்க்கென முயலுநர் உண்மையானே”
    என்ற புறப்பாட்டின் வரிகளும் இதைத்தானே செப்புகின்றன.

    சுவைட்சரின் பேச்சுக்கள் அவர் உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழுந்தவை; ஆகவே அவைப் பிறர் உள்ளத்தை எளிதில் தொடுவனவாயின. நாள்தோறும் பிறர்க்கு உழைப்பதையே கடமையாய்க் கொண்டிருந்த சுவைட்சரைப் பார்த்து அவர் மனைவி ஒருநாள், “எவ்வளவு நாட்களுக்கு இப்படி ஊருக்காகவே உழைத்துக்கொண்டிருக்கப் போகிறீர்கள்?” என்று வினவியதற்கு, “என் மூச்சு உள்ளவரையில்” என்று புன்னகையோடு பதிலளித்தாராம் சுவைட்சர். இவரன்றோ பேராண்மையாளர்!

    திருக்குறள்பால் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட சுவைட்சர், ”வாழ்வுக்குரிய அன்பு நெறியையும்,  உயர்ந்த ஞானத்தையும் புகட்டும் ஒப்பற்ற நூல் திருக்குறள்; இதுபோன்றதொரு நூல் உலக இலக்கியத்தில் வேறெங்குமே இல்லை” என அறுதியிட்டு உறுதிபட உரைத்துள்ளார்.

    ”மனித நாகரிகம் என்பது ஆடம்பரங்களில் இல்லை; அஃது ஆன்ம வளர்ச்சியில் இருக்கின்றது” என்று முழங்கிய அப்பேரறிஞர், ஒல்லும் வாயெல்லாம் வினையாற்றிய பேரருளாளரும் ஆவார். பொறிகளைக் கையாளுவதில் மக்களுக்கிருக்கும் ஆர்வம், நல்ல நெறிகளைக் கைக்கொள்வதிலும் இருத்தல் அவசியம் என்றார்.

    தன் வாணாளின் கடைசி நிமிடம்வரைப் பிறருக்காகவே வாழ்ந்து மறைந்த மகாத்மாவான சுவைட்சரின் வாழ்க்கையும், அவரின் அறவுரைகளும் நாமனைவரும் படித்துப் பின்பற்றவேண்டியவை.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: யாப்பினுள் அட்டிய நீர்

     

    நூக்கி அவர்வெலினும் தாம்வெலினும் வெஞ்சமத்துள்
    தாக்கி எதிர்ப்படுவர் தக்கவர்; அஃதன்றிக்
    காப்பி னகத்திருந்து காய்வார் மிகவுரைத்தல்
    யாப்பினுள் அட்டிய நீர்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    நூக்கி அவர் வெலினும், தாம் வெலினும், வெஞ் சமத்துள்
    தாக்கி எதிர்ப்படுவர், தக்கவர்; அஃது அன்றி,
    காப்பின் அகத்து இருந்து, காய்வார் மிக உரைத்தல்
    யாப்பினுள் அட்டிய நீர்.

    பொருள் விளக்கம்:
    போரில் பிறர் வென்றாலும், தான் வென்றாலும் (என வெற்றி யாருடையதாக இருப்பினும்), கொடிய போர்க்களத்தில் தாக்கி எதிர்ப்பவரே வீரர் எனக் கூறத் தகுதியுடையவர். அவ்வாறின்றி, பாதுகாப்பான அரணுக்குள் இருந்துகொண்டு, சினம் கொண்டவர் போல பேசும் வாய்ச்சொல் வீரம் என்பது வயலில் பாய்ச்சிய நீர் (பயிர் வளர உதவுவது போல, பகையென்னும் பயிரை வளர்க்கவே உதவும்).

    பழமொழி சொல்லும் பாடம்: அஞ்சாமையுடன் போர்புரிந்து, பகையழித்து வெற்றியை எதிர்கொள்பவரே வீரர்கள் எனப் பாராட்டத் தக்கவர்கள். வாய்ச்சொல் வீரர்கள் உண்மையில்  வீரர்களே அல்லர். குறள் கூறும் படைவீரர் கொண்டிருக்க வேண்டிய வீரர்களது பண்பாகக் குறிக்கப்படுவது,

    கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
    ஆற்ற லதுவே படை. (குறள்: 765)

    உயிரைப் பறிக்கும் சாவு எதிர்கொண்டு வந்தாலும் அஞ்சாமல் கூடி நின்று எதிர்த்துச் சண்டை இடும் ஆற்றலைக் கொண்டவரே படையினர் என்பதாகும்.

    Share
  • ஏன் இப்படியாச்சு?

    -துஷ்யந்தி

    மனிதனின் உள்ளத்தில்
    சுயநலம் புகுந்தாச்சு
    இயற்கையை எண்ணிப்பார்க்க
    நேரம் குறைந்தாச்சு!                                  dhushyanthi

    பசுமையான நிலமெல்லாம்
    பாலைவனமாய் மாறியாச்சு
    பூமியிலே புதிதாக
    ஓசோன் ஓட்டையாச்சு!

    பூமிக்குள்ளே ஊதாக்கதிரின்
    வருகை கூடிப்போச்சு
    புதுப்புது நோயெல்லாம்
    இதனால் உருவாச்சு!

    பச்சை நிறத்தின் பசுமைபோய்
    தூசு படிந்தாச்சு
    சுவாசிக்கும் காற்றுகூட
    விஷக்காற்றாகிப் போச்சு!

    வானிலை வட்டமெல்லாம்
    சுற்று மாறிப்போச்சு
    பூகம்பமாயும் வெள்ளமாயும்
    பூமியைத் தாக்கியாச்சு!

    மக்களெல்லாம் அநாதையாய்
    அலையவேண்டியதாச்சு
    களவும் கொள்ளையும்
    தலை மீறலாச்சு!

    மனிதத்தின் தனித்துவம்
    மண்ணில் அழிந்துபோச்சு
    தலைக்குமேல் வெள்ளம் போன
    நிலைக்கு தள்ளலாச்சு!

    சந்ததியின் எதிர்காலம்
    கேள்விக்குறியாச்சு
    கேள்விக்கு விடைதேட
    அவசரம் வந்தாச்சு!

    ஆளுக்கொரு மரம் நடணுமென
    எண்ணம் தோன்றியாச்சு
    அழகான பூமிக்கு
    அத்திவாரம் தோன்றியாச்சு!

     

    Share
  • வளவன் கனவு-6

    சு.கோதண்டராமன்

    vallavan-kanavu11

    லகுலீசர்

     

    நமஸ்தே ருத்ர மன்யவ உதோத இஷவே நம:

    நமஸ்தே அஸ்து தன்வனே பாஹுப்யாம் உத தே நம:

    -ஸ்ரீருத்ரம்

    ருத்திரனின் கோபத்துக்கு வணக்கம், அவரது அம்புக்கும், வில்லுக்கும்

    கைகளுக்கும் வணக்கம்.

    புலவர் பரிசு பெற்றுக் கொண்டு போன எட்டாம் நாள் அரசவைக்கு ஒரு வடதேசப் பிராமணர் வந்தார். அவரது தோற்றமே வித்தியாசமானதாக இருந்தது. சோழியர்களைப் போல் அல்லாமல் அவரது உடல் நல்ல சிவந்த நிறமாக இருந்தது. சோழநாட்டில் பிராமணரும் பிறரும் குடுமியை முன்பக்கமாக நெற்றிக்கு மேல் அலங்காரமாக இருக்கும்படி முடிந்துகொள்வது வழக்கம். இவரோ தலையை முன்பக்கம் மழித்து, குடுமியைப் பின்பக்கம் முடிந்துகொண்டிருந்தார். சோழியர்களின் நெற்றியை அலங்கரித்தது ‘ப’ வடிவச் சந்தனக் கோடு. இவரோ சாம்பலைக் குழைத்து படுக்கைவாட்டில் மூன்று கோடுகளாக அணிந்திருந்தார். சோழியர்கள் வேட்டியைத் தட்டாடையாக  அணிவது வழக்கம். இவர் ஒரு நீண்ட வேட்டியின் முனைகளை விசிறி மடிப்பாக மடித்து முன்புறமும் பின்புறமும் சொருகியிருந்தார்.

    அரசர் அவரை வரவேற்று இருக்கையில் அமரச் செய்து, “எங்கிருந்து வருகிறீர்கள்? இங்கு வந்த நோக்கம் என்ன?” என்று விசாரித்தார். வந்தவர் பேசத் தொடங்கினார்.

    “நான் அவந்தி நாட்டிலிருந்து வருகிறேன். எங்கள் பேரரசர் நரசிம்மகுப்தர் பாடலிபுத்திரத்தில் உள்ளார். அவந்தியின் தலைநகரான உஜ்ஜயினியில் எங்கள் சிற்றரசர் அக்னிகுப்தர் ஆட்சி செய்கிறார். பர்த்ருஹரி, காளிதாஸர் போன்ற பல புகழ்பெற்ற கவிஞர்களும் ப்ரம்மகுப்தர், பாஸ்கராசார்யர் போன்ற கணித அறிஞர்களும் தோன்றிய பூமி உஜ்ஜயினி. அங்கே சில காலமாக செல்வாக்குடன் வளர்ந்து வரும் ஒரு சமயத்தைப் பற்றித் தங்களுக்குத் தெரிவிக்கவே வந்தேன்” என்றார். அரசர் காது கொடுத்துக் கவனமாகக் கேட்டார்.

    “உஜ்ஜயினிக்கு தென்மேற்கில் நர்மதை நதிக்கு வடக்கில் காயாவரோகணம் என்னும் ஒரு சிறு நகரம் உள்ளது. அதன் பெயருக்குக் காரணமானவர் ஒரு மகான். யுவா சர்மா என்ற பெயர் கொண்ட அவர் 16 வயதாக இருக்கும்போது மரத்திலிருந்து தவறி விழுந்தார். நீண்ட நேரம் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்ததால் அவர் இறந்து விட்டார் என்று எண்ணி அவரைச் சுடுகாட்டுக்குத் தூக்கிச் சென்று சிதையில் கிடத்தித் தீ வைத்துவிட்டு வந்து விட்டனர்.

    உண்மையில் அவர் இறக்கவில்லை. சூடு பட்டதும் அவருக்குப் பிரக்ஞை வந்தது. கை கால்களை உதறிக்கொண்டு சிதையிலிருந்து வெளிவந்தார். தீ நேரடியாகப் பட்டதால் நெஞ்சுப் பகுதி மட்டும் கறுத்துவிட்டது. மற்றபடி அவருக்கு உடலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தான் எங்கிருக்கிறோம் என்று உணரச் சிறிது காலம் பிடித்தது. தான் இறந்துவிட்டதாக எண்ணி உறவினர்கள் இவ்வாறு செய்திருக்கிறார்கள் என்பதை அறிந்தார். தான் இறக்கவில்லை என்று அறிந்தால் அவர்கள் மகிழ்வார்கள் என்று எண்ணி வீடு நோக்கி நடந்தார். நரிகள் கூட்டமாக அவரைச் சூழ்ந்து கொண்டு வேட்டையாடத் துடித்தன. அவற்றை விரட்டுவதற்காக அங்கு கிடந்த பாடையின் மூங்கிலைக் கையில் எடுத்துக் கொண்டார். சிதையில் வைக்கும்போது உடலிலிருந்து ஆடையை அகற்றிவிடுவது வழக்கம். எனவே அவர் நிர்வாணமாகவே நடந்தார். அவரை ஊர் எல்லையில் கண்ட உடனேயே எல்லோரும் யுவா சர்மாவின் ஆவிதான் பேய் வடிவில் வந்துள்ளது எனப் பயந்து ஓடத் தொடங்கினார்கள். தன் வீட்டு வாசலில் நின்று கூப்பிட்டார். உள்ளிருந்து எவரும் வெளிவரவில்லை. இவருக்கோ பசி. உணவிடுங்கள் அம்மா என்று கூவிக் கொண்டே தெருத்தெருவாக அலைந்தார். எவரும் கதவு திறக்கவில்லை. நம் கதி இப்படியா ஆகவேண்டும் என்று நொந்துகொண்டு மீண்டும் சுடுகாட்டிற்கே போனார். பசி மிக வாட்டியது. இங்கு கிடைக்கும் இலை எதையாவது தின்போம். பசி தீரலாம். விஷச் செடியாக இருந்தாலும் நல்லதுதான். உண்மையாகவே உயிர் போய் விடும் என்று தீர்மானித்து அங்கிருந்த ஊமத்தைச் செடியின் இலைகளைப் பறித்து வயிறு கொண்ட மட்டும் தின்றார். சற்று நேரத்தில் அவருக்குக் கனவா, மயக்கமா, உறக்கமா என்று புரியாத நிலை ஏற்பட்டது.

    அந்நிலையில் அவருக்கு ஒரு மானதக் காட்சி தோன்றியது. ஒரு பெரிய மலை. அதன் உச்சியில் பனி படர்ந்திருக்கிறது. அதன் கீழ்ப் பகுதிகளில் அடர்ந்த காடு. அழகாகவும் காணப்படுகிறது, அச்சம் தருவதாகவும் இருக்கிறது. அங்கே ஒரு ஆறு பெருக்கெடுத்துக் கீழ்நோக்கி இறங்குகிறது. சற்று நேரத்தில் அந்த மலை ஒரு மனித உருவாக மாறுகிறது.  மலை உச்சி தெரிந்த இடத்தில் பிறைச் சந்திரன் தெரிகிறது. காடு அவரது சடையாக மாறுகிறது. அந்த ஆற்று நீர் அவரது சடை மேல் கொட்டிக் கொண்டிருக்கிறது. அவருடைய இடப்பக்கம்  பெண் உருவமாக இருக்கிறது. அவரைச் சுற்றிப் பல விதமான மிருகங்கள் நிற்கின்றன. அவரது கையில் வில் கத்தி போன்ற பல ஆயுதங்கள். அச்சம் தரும் இந்தத் தெய்வம் யார் என்று இந்த இளைஞர் திகைத்து நின்றபோது அவர் கற்ற வேதம் நினைவுக்கு வந்தது. ஆம், இது ருத்ரன்தான். உடனே அவர் நமஸ்தே ருத்ர மன்யவ உதோத இஷவே நம: என்று ருத்ர மந்திரத்தைச் சொல்லத் தொடங்கினார். காட்சி மறைந்தது. அவருக்குச் சுய நினைவு வந்தது. அது முதல் அவருக்குப் பசி உணர்வே அற்றுப் போய் விட்டது. ஊர்ப் பக்கம் போக வேண்டிய தேவையும் இல்லாமல் போயிற்று. கள்ளிச் செடிகள் சூழ்ந்த சுடுகாட்டிலேயே ருத்ரத்தைச் சொல்லிக் கொண்டு நாட்களைக் கழிக்கலானார்.

    மக்கள் அவரை மறந்துவிட்டார்கள். நீண்ட காலம் கழித்து ஒரு நாள் அந்த ஊரில் ஒரு பெண்மணி இறந்துவிட்டார். அவரைத் தூக்கிக் கொண்டு ஒரு கூட்டம் சுடுகாட்டுக்கு வந்தது. மேய்ச்சலுக்கு வந்த மாடுகள் வெய்யில் நேரத்தில் ஒரு ஆலமரத்தடியில் படுத்து அசை போட்டுக் கொண்டிருந்தன. அவற்றின் நடுவே ஒரு கல்லின் மேல் யுவா சர்மா ஆடையில்லாமல் உட்கார்ந்திருந்தார். அவரைப் பார்த்த உடன் தூக்கி வந்தவர்களும் பிறரும் பாடையைத் தொப்பென்று கீழே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர். இறந்தவரின் மகன் மட்டும் தீச்சட்டியுடன் செய்வதறியாது திகைத்தும் பயத்தால் நடுங்கிக் கொண்டும் நின்றான்.

    யுவா சர்மா அவனைப் பார்த்து, “பயப்படாதே, நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன்” என்று கூறினார். அவன் சற்றே தைரியமடைந்து கீழே கிடந்த தன் தாயின் உடலைப் பார்த்தான். யுவா சர்மா அருகில் சென்று அந்தப் பிரேதத்தைத் தூக்கிச் சிதையில் வைத்து உரிய மந்திரங்களைக் கூறி, அவனைக் கொண்டு எரி மூட்டச் செய்தார்.  தன் கடமை நிறைவேறியதில் திருப்தி கொண்ட அவன் அவரை நன்றியுடன் வணங்கினான்.

    அவன் ஊருக்குள் சென்று சுடுகாட்டில் நடந்ததை எல்லாம் விவரித்தான். ஊர் மக்கள்  தைரியம் அடைந்து ஒவ்வொருவராகச் சுடுகாட்டுக்கு வந்து இவரைப் பார்த்துப் பேசத் தொடங்கினர். இவரும் தனக்கு ஏற்பட்ட மானதக் காட்சியையும் பசியில்லாமல் போனதையும் வந்தவர்களிடம் தெரிவித்தார். ருத்ரனே இவருடைய இறந்துபோன உடலில் வந்து இறங்கியதாக ஊர் மக்கள் நம்பினர். இந்த நிகழ்வை காயாவரோகணம் (உடலில் இறங்குதல்) என்று கொண்டாடினர். அதனால் அந்த ஊரின் பெயரே காயாவரோகணம் ஆயிற்று. அது சுருங்கி இப்பொழுது கார்வான் என்று அழைக்கப்படுகிறது.

    யுவா சர்மாவை ஊருக்குள் அழைக்க எவரும் துணியவில்லை. அவரைத் தெய்வமாகக் கருதி சுடுகாட்டுக்கு வந்து வணங்கினர். கையில் கோல் வைத்திருந்ததால் அவரை லகுலீசர் என்று அழைத்தனர். அவரது பழைய பெயர் மறைந்து விட்டது.

    தனக்குக் காட்சி தந்த பசுபதியை ருத்ரம் முதலான வேத மந்திரங்களைக் கூறி வழிபடுமாறு அவர் உபதேசித்தார். அவரது போதனைகள் பாசுபதம் எனப்பட்டன. பலர் அவருக்குச் சீடர்கள் ஆயினர். அவர்கள் பாரதத்தின் பல பகுதிகளுக்கும் சென்று அவரது போதனைகளைப் பரப்பினர். தமிழ்நாட்டுக்குக் கூடச் சிலர் வந்திருக்கிறார்கள். இதெல்லாம்  நடந்து இருநூறு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன.  காலப்போக்கில் அவரது போதனைகள் உருமாறின. லகுலீசர் நெஞ்சு கறுப்பாக இருப்பதை நினைவூட்டும் வகையில் சிலர் தங்கள் முகங்களில் கரி பூசிக் கொண்டு திரிந்தனர். அவர்கள் காலாமுகர்கள் என அழைக்கப்பட்டனர். காபாலிகர் எனப்பட்ட வேறு சிலர் உடம்பெல்லாம் சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிக் கொண்டு மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து திரிந்தனர். இதனால் லகுலீசரின் புகழுக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது.”

    வடதேச பிராமணர் நிறுத்தினார். அரசருக்குப் பனி மூட்டம் கலைந்து சூரிய உதயம் ஆனாற்போல இதுவரை புரியாத பல விஷயங்கள் புலப்பட்டன. புறநானூறு முதலான தமிழ் நூல்களில் நீல மணி மிடற்றன், கள்ளிக் காட்டில் அமர்ந்திருப்பவர், ஆலமர் செல்வன், விடையேறி என்று குறிப்பிடப்படும் தெய்வம் லகுலீசரின் சீடர்கள் பரப்பிய தெய்வமாகத்தான் இருக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. லகுலீசர் 16வது வயதில் யமன் பிடியிலிருந்து மீண்டது இங்கு மார்க்கண்டேயன் கதையாக உருமாறி இருக்கவேண்டும் என நினைத்தார். அதுவே இறைவன் யமனைக் காலால் உதைத்தாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. லகுலீசர் உணவு தேடி ஒரு நாள் ஆடையில்லாமல் பிச்சை எடுக்கச் சென்ற நிகழ்ச்சியை இறைவன் பலி ஏற்றுத் திரிவதாக அம்மையார் குறிப்பிட்டுள்ளார். லகுலீசர் நெஞ்சில் தீ சுட்டுக் கறுத்தது நஞ்சு உண்டு அவர் கழுத்துக் கருமை அடைந்ததாகக் கூறப்பட்டுள்ளது. அம்மையாருக்கு உபதேசம் செய்தவர் லகுலீச சம்பிரதாயத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். செவி வழிச் செய்தியாகப் பரவும்போது கால தேச இடைவெளி காரணமாக இவை சில சில மாற்றங்களை அடைந்துள்ளன என்று நினைத்தார் அரசர்.

     தொடரும்

    Share
  • அவன், அது , ஆத்மா (20)

    (ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

    மீ.விசுவநாதன்

    அத்யாயம்: 20

    நா.பா. என்னும் இலட்சியவாதி”

    அவனுக்கு நா. பார்த்தசாரதியின் (நா.பா) கதைகள் பிடிக்கும். அவர் கதைகளில் இருக்கும் சத்திய வேட்கையும், கவித்துவமான நடையும் அவரது கதைகளைப் படிக்கவேண்டும் என்ற எண்ணத்தை அவனுக்குள் ஏற்படுத்தி இருந்தது. அதோடு மணிவண்ணன் என்ற பெயரில் அவர் எழுதிய கவிதைகளிலும் அவனுக்கு நாட்டமிருந்தது. அவரது “தீபம்” பத்திரிகையை நூலகத்தில் படித்திருக்கிறான். சென்னைக்கு வந்த பிறகு தவறாமல் அதை வாங்கிப் படித்தும் வந்தான். அது அவனது இலக்கியப் பசிக்குக் கொஞ்சம் தீனி போட்டு வந்தது.

    1971ம் வருடம் ஏப்ரல் மாதம் கல்லிடைகுறிச்சியில் ஸ்ரீராமநவமி உற்சவ சமயத்தில் ஒரு பட்டிமன்றம் நடந்தது. “ராம நாம யக்ய மண்டலி” என்ற அமைப்பின் மூலமாக “டாபே” மகாதேவன் என்பவரின் முயற்ச்சியால் வீரப்பபுரம் தெருவில் அமைக்கப் பட்டிருந்த பெரிய பந்தலில் வைத்து நடைபெற்ற அந்தப் பட்டிமன்றத்திற்கு நடுவர் நா.பார்த்தசாரதி . பாரதி கலைக்கழகத் தலைவர் பாரதி இரா.சுராஜ், பாரதி காவலர் கே.ராமமூர்த்தி, ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணிக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் “தமிழ் ஐயா” என்று அழைக்கப் பட்ட “லக்ஷ்மிநாராயணன்”, பேராசிரியர் பழனிச்சாமி, திலகர் வித்யாலய உயர்நிலைப் பள்ளியின் தமிழாசிரியர் கே.ஏ. நீலகண்ட ஐயர் போன்ற தமிழ் அறிஞர்கள் அந்தப் பட்டிமன்றத்தில் தமிழருவியாகக் கொட்டிக் களித்தனர். தம்பியரில் சிறந்தவர் இலக்குவனா, பரதனா, கும்பகர்ணனா என்பதே பட்டிமன்றத் தலைப்பு. ஒவ்வொரு அணியினரும் தங்கள் கருத்தை எடுத்துரைக்கும் பொழுது பார்வையாளர்கள் கைகளைத் தட்டித் தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொடிருந்தனர். இறுதியில் தீர்ப்புச் சொன்ன நா.பா. அவர்கள்,” இது உங்கள் பட்டிமன்றம். இங்கு பேசியவர்களின் கருத்துக்களை நீங்கள் ரொம்பவும் கைதட்டி ரசித்தீர்கள். அதனால் அதிகமாக “ஐம்பத்தொரு முறை கைதட்டல்கள்” வாங்கிய அணியையே வென்றதாகத் தீர்பளிக்கிறேன்” என்று ஒரு புதிய கோணத்தில் தீர்ப்பு வழங்கினார். அப்பொழுது அவராற்றிய தமிழுரையில் அவன் சொக்கித்தான் போனான். அவரது அந்த மேடைப் பேச்சு அவனைக் காந்தம்போல அவரிடம் ஈர்த்தது. நூலகத்தில் அவரது நாவல்களைத் தேடிப் படித்தான். அவனது பி.யூ.சி. வகுப்புக்கு நா.பா.வின் “பிறந்த மண்” என்ற அற்புதமான நாவலைப் பாடமாக வைத்திருந்தனர். அவன் ரசித்து ரசித்து அந்த நாவலைப் படித்தான். இன்றும் அந்தப் புத்தகத்தை அவன் பத்திரமாக வைத்திருக்கிறான். அந்தப் பழைய புத்தகத்தைப் புரட்டும் பொழுது அதைப் பாடாமாக நடத்தி விளக்கிய ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணிக் கல்லூரியின் பேராசிரியர் ஆழ்வான் சார் நினைவுக்கு வருவார்.

    bank

    பேங்க் கிருஷ்ணமூர்த்தி மாமா”

    கல்லிடைகுறிச்சியில் நா.பா.வின் நெருங்கிய நண்பர் கிருஷ்ணமூர்த்தி. அவர் முதலில் “இந்தோ கமர்ஷியல் பேங்க்”ல் வேலை செய்து, பின்னாளில் அது பஞ்சாப் நேஷனல் பேங்க்கோடு இணைந்ததால் அதிலும் பணியாற்றி ஒய்வு பெற்றவர். அவரை எல்லோரும் பேங்க் கிருஷ்ணமூர்த்தி என்றுதான் அழைப்பார்கள். நல்ல தமிழார்வமும், இலக்கிய ஆர்வமும் கொண்டவர். ஒருமுறை நா.பா. கல்லிடைகுறிச்சிக்கு வந்திருந்த பொழுது பேங்க் கிருஷ்ணமூர்த்தி மாமாவும் , நா.பா.வும் ஒரு மாலை வேளையில் ஆற்றங்கரைக்கு நடந்து போய்க் கொண்டிருந்தனர். அவன் சிவன்கோவில் வாய்க்கால் பாலத்தின் திண்டில் அமர்ந்து கொண்டிருந்தான். அப்பொழுது அவர்கள் இருவரும் அவனைக் கடந்து செல்வதைப் பார்த்து அவனுக்கு நா.பா.விடம் பேசவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அவன் மெதுவாக அவர்களுக்குப் பின்னால் ஒரு இருபதடி தூரத்தில் அவர்களைத் தொடர்ந்து நடந்தான். அவர்கள் பாதையை விட்டு வயல்வரப்புகள் வழியாக நடக்கத் தொடங்கினர். நா.பா. மேற்குத் தொடர்ச்சி மலையையும் , வயல் வெளிகளையும் தன்னுடைய கைகளைக் காட்டிக் காட்டிப் பேசியபடியே சென்று கொண்டிருந்தார். ஆயிரங்கால் மண்டபம் கடந்து, ஆற்றங்கரைக்குள் இறங்கி அங்கிருக்கும் சிறிய சிவன் பாறைக்கு எதிரில் பரந்திருந்த ஆற்று மணலில் அமர்ந்து கொண்டனர். அப்பொழுதெல்லாம் ஆற்றில் நிறைய மணல் இருக்கும். மணற்கொள்ளை அவ்வளாவாக நடைபெறாத காலம். அவன் அந்தச் சிவன் பாறையில் ஏறி அமர்ந்து கொண்டு, அவர்களைப் பார்த்தும், ஆற்று நீரைப் பார்த்துக் கொண்டும் சிறிது நேரம் இருந்தான். பிறகு மெதுவாக எழுந்து அவர்களின் அருகில் சென்றான். அவன் அவர்கள் பக்கமாக வருவதைப் பார்த்த கிருஷ்ணமூர்த்தி மாமா,” என்ன கண்ணா …இங்கவா..இவரைத் தெரியுமோ” என்றார். அவன் அவரது கதைகளைப் படித்திருக்கிறேன் என்றும், நேரில் பார்த்ததில்லை என்றும் சொன்னான். கிருஷ்ணமூர்த்தி மாமா நா.பா.விடம்,” இவன் பேர் விஸ்வநாதன்…கவிதைகள் எழுதுவான்…இலக்கியத்தில் நல்ல ஆர்வமுண்டு என்றார். “அப்படியா” என்று என்னைப் பார்த்து,” நிறையப் படியுங்கள்..எழுத்து தானாக வரும்” என்று நா.பா. அவனை வாழ்த்தினார். அவனுக்கு உள்ளத்தில் ஏக குஷி. சில மாதங்கள் சென்று கலைமகள் பத்திரிகையில் “நீல நயனங்கள்” என்றொரு நாவலை நா.பா. எழுதினர். அதில் அந்தக் கல்லிடைகுறிச்சியின் அழகையும், வயல்வெளிகளின் பசுமையையும், தாமிரபரணியின் குளிர்ச்சியையும் பதிவு செய்திருப்பார். நா.பா.வின் கம்பீரமான தோற்றமும், நிமிர்ந்தபடியே கைகளை வீசிக்கொண்டு நடக்கும் அழகும், நல்ல தமிழ்ப் பேச்சும் அவனுக்கு அவர்மீது பெரிய மரியாதையை ஏற்படுத்தியது.

    ஒருசமயம் அவனுக்கு நண்பரும், சிறந்த எழுத்தாளரும் , கவிஞருமான சுப்ரபாலன் அவர்களின் அசோக்நகர் இல்லத்தில் 15.08.1987ம் வருடம் “இந்திய சுதந்திர தினத்தன்று” பாரதி கலைகழகம் சார்பில் கவியரங்கம் நடைபெற்றது. நா.பா.தான் தலைமை தாங்கினார். கவிதைக்கு “தேசம் எனது தேசம்” என்று தலைப்புத் தந்திருந்தனர். கவிமாமணி தமிழழகன், கவிமாமணி நா.சீ.வரதராஜன், கவிமாமணி தேவநாராயணன், கவிமாமணி பஞ்சநதீசன் போன்ற மூத்த கவிஞர்களுடன் நிறையக் கவிஞர்கள் கலந்து கொண்டு நல்ல கவிதைகளைப் படைத்தனர். அவனும் அன்று ஒரு கவிதையைப் படித்தான். அவன் கவிதையைப் படித்து முடித்தவுடன்,”உங்களது கவிதையில் ஒழுங்கும், இன்றைய நடைமுறையின் கோபமும் இருக்கிறது. இன்னும் இதுபோல் நிறைய ஆழமாக சிந்தித்து எழுதுங்கள்” என்று நா.பா. பாராட்டினார். அதை அவன் ஒரு மோதிரக் குட்டாகக் கொண்டான். கவிமாமணி தேவநாராயணன் அவனது கவிதையைப் பாராட்டியதோடு, சுதந்திர தினத்தன்று தியாகிகளின் பெருமையைச் சொல்ல வேண்டும் என்ற அவரது கருத்தைச் சொன்னார். அடுத்ததாக தேவநாராயணன் அவரது கவிதையைப் படிக்க அழைக்கப்பட்டார். அருமையான கவிதையை அவர் படித்து, இசைத்தார். அதில் பாரத தேசம் புண்ணிய தேசம் என்ற தனது கருத்தை வலியுறித்தி இருந்தார். அப்பொழுது நா.பா. அவர்கள் , “நமது பாரதம் மட்டும் புண்ணிய தேசமில்லை. எல்லா தேசமுமே புண்ணிய தேசந்தான். நமது நாட்டில் கள்ளப் பணத்தைக் கொண்டு “சுவிஸ்வங்கி”யில் போடுபவர்கள் இல்லையா..நேர்மைக் குறைவான அரசியல் வாதிகள் இல்லையா…அதேபோல மற்ற தேசங்களில் சிறந்த மனிதர்கள் இல்லையா, இலக்கியம் இல்லையா….அதனால் வாழுகின்ற மனிதர்களின் குணநலன்களைக் கொண்டுதான் ஒரு தேசத்தை நாம் கணிக்க வேண்டும்” என்றார். அப்பொழுது கவிமாமணி தேவநாராயணன் தனது கருத்தை மீண்டும் வலியுறுத்திப் பேசினார். ஒரு சிறிய இலக்கியச் சர்ச்சையே அப்பொழுது அங்கு நடந்தது. அதெல்லாம் அவனுக்கு ஒரு அனுபவமாகப் பட்டது. கவிமாமணி தேவநாராயணனுக்கு அவன்மீது ஒரு தனி வாஞ்சையே உண்டு. அந்தக் கவியரங்கத்திற்கு அவனது மனைவியும், எழுத்தாளருமான “சீதாலக்ஷ்மி விஷ்வநாத்”தும் வந்திருதார். அவரும் நா.பா.வின் தீவிர ரசிகை. அன்று அவன் படித்த அந்தக் கவிதையை நீங்களும் இங்கே படிக்கப் பதிவு செய்கிறான்.

    “தேசம் எனது தேசம்”

    “இவரொரு இந்தியர் ! தீவிரத் தியாகிதான் !
    சிவனென இருக்காமல் சிறைக்கதவுக் குள்ளும்தன்
    இந்திய மண்ணிற்காய் சிந்திய ரத்தமிவர்
    பிந்திய பிறப்புக்குத் தெரியவா போகிறது ?
    மனதினது தூய்மையை மாசுபடா திருக்கவே
    தினமுமே தாய்மண்ணைத் தியானமாய்ச் செய்துவந்த
    உன்னதத் தியாகிகளின் உணர்ச்சிமிகு வாழ்க்கையை
    இன்றைய இளைஞனின் இதயந்தான் அறியுமா?

    தாமிரப் பட்டயம் தருவார்கள் எனஎண்ணியா
    ஆயிர மாயிரமாய் அந்நிய உடைமைகளைத்
    தீயிலே கருக்கிநம் விடுதலை வேள்வியை
    தீவிரப் படுத்தினர் ! திரண்டதன் செல்வங்கள்
    அனைத்தையும் இந்ததன் அற்புத நாட்டினது
    கனவுகள் நனவாகக் கற்பூரங் காட்டினர் !

    ஏழ்மையின் கொடுமையில் இவரது குடும்பங்கள்
    கூழுக்கு அலைகிற கொடுமைகள் பெற்றினும்
    பாரதப் பரம்பரை பண்புடன் வாழவே
    வீரவிடு தலையைத்தான் வேண்டியே பெற்றனர்!

    பாரத பூமியோ பசுமையில் செழித்தநல்
    நீர்வளம் மிகுந்ததோர் நித்திய சுமங்கலி !
    ஞானத்தில் ஓங்கிய ஞானியர் உள்மனம்
    நாடிடும் ஈசனை நமக்குள்ளே காட்டிடும்
    பக்தியில் மிகுந்தநற் பண்புள்ள நாடிது !
    எத்தனை வேற்றுமை இருந்திட்ட போதிலும்
    ஒருமுகமாய் எல்லோரும் ஒருகுலமாய் நின்றுகொண்டு
    வருவதனைத் தன்னாட்டின் வளமான மேன்மைக்காய்
    சூழ்சிகளை விரட்டியும் சோதனையே வந்தாலும்
    வாழ்த்தியும் வணங்கியும் “வந்தேமா தரத்தினை”
    ஓதியும் தரமுடனே ஒளிமிகுந்த உளத்துடனே
    சாதிமத பேதமின்றி சரிநிகராய் வாழ்ந்தனர் !

    இரவுபகல் பாராமல் செய்துவந்த தியாகத்தால்
    வரவெனநம் சுதந்திரம் வந்ததே இப்படித்தான்!
    தியாகத்தின் பரம்பரை திரும்பியே பார்க்கையில்
    மாயமாய்ப் போனதே மண்ணினது பக்திதான்!

    ஊழலே இன்றெங்கும் ஊர்வலமாய்ச் சுற்றியே
    வாழலாம் வாவெனவே வாசலில் கூவுதே !
    தியாகியின் பிள்ளையே திருடரின் தலைவானாய்ப்
    போகிறான் இன்றிந்தப் புண்ணியமாம் பூமியிலே !

    பொய்களும் கரும்பணப் புழக்கமும் கொடுமைக்
    கைகளாய் நீண்டதோர் கயமைமிகு நாடென
    மாறியே போனதை மறைக்கவா சொல்வது?
    காறியே உமிழாதோ கண்ணிய நல்மனங்கள்!

    பத்திரிக்கை கூடத்தான் பகல்வேடம் போடுதய்யா !
    இத்தனையும் மீறியிங்கே எவனோதான் துணிந்தெழுந்து
    உண்மையை எழுதினாலோ உதைபடுவார் என்கிற
    கண்ணியங் குறைந்தகீழ் கயமையாய்ப் போனதே !

    பிஞ்சான மனங்களைப் பிரியமாய்க் கவர்ந்தே
    நஞ்சினைப் பாய்ச்சும் கல்வியின் திட்டங்கள்!
    நுனிப்புல்லை மேய்கின்ற நூலாளர் கூட்டத்தைப்
    பணியிலே அமர்த்திய பாபத்தின் சுமைகளுக்கு
    இக்கால இளைஞர்தான் எதிகாலம் தவித்திடுவார் !
    தக்கதோர் கல்வியைத் தரும்சூழல் நிலைஇல்லை!
    நிறைகளைக் காணாமல் நீசரின் செயல்களால்
    குறையேதான் கண்டானிக் குருடனென எவறென்னைப்
    பழித்தாலும் எனக்கொரு பாதகமும் இல்லையடா !
    சுழித்தோடும் காலத்தின் சூக்குமத்தை கவிதையாய்ப்
    படிக்கின்ற பேறுபெற்றேன்! பளிச்செனச் சொல்லவே
    பிடித்தஎன் பேனாவோர் பேரமும் பேசாது!

    தேசம் எனது தேசம் -அதில்
    நாசம் விளைதல் நன்றோ? – யாரும்
    கூசும் செய்கை கூடிப் போனால்
    தேசம் என்ன தேசம்?”

    அந்தக் கவியரங்கம் முடிந்து அனைவருக்கும் வயிறார உணவு பரிமாறப்பட்டது. அதன் பிறகு அங்கிருந்த அனைவரிடமும் நா.பா. மிகுந்த வாஞ்சையோடு பேசிகொண்டிருந்தார். அவனிடம்,” நீங்கள் எங்கே வேலை பார்க்கிறீர்கள்?” என்றார். “காட்பரீஸ் கம்பெனியில்” என்றான். உடனே அவர்,” உங்களுக்கு ஆதிலக்ஷ்மணனைத் தெரியுமா” என்றார். “தெரியும். அவர்தான் எனக்கு வேலை வாங்கித்தந்தார்” என்றான். ஆதிலக்ஷ்மணன் அந்தக் கம்பெனியில் உயர் அதிகாரியாகப் பணியில் இருந்தவர். நா.பா.வின் நெருங்கிய நண்பர். பம்பாய்த் தமிழ்ச் சங்கத்திற்கும் தலைவராக இருந்து, தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர்களையும், கவிஞர்களையும், நாடகக் கலைஞர்களையும், பேச்சாளர்களையும் தமிழ்ச் சங்கத்திற்கு அழைத்துப் பெருமைப் படுத்தியவர். அவரைப் பற்றி அவன் தனியாகவே இங்கே ஒரு அத்தியாயத்தில் பதிவு செய்ய இருக்கிறான்.

    09.07.2015 அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

     படம்  உதவி   “, கிச்சாப்பூ” . நன்றி.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(156)

    –சக்தி சக்திதாசன்.

     

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    ஒருவார இடைவெளியின் பின்னால் உங்களுடன் இந்த மடல் மூலம் இணைகிறேன். வாழ்க்கை எனும் இந்த ஓட்டப்பந்தயத்தில் ஓடும் குதிரைகள்தான் நாம். எம்மைக் காலம் எனும் குதிரை ஓட்டுனர் இயற்கை வகுத்த வழிகளில் இழுத்துக் கொண்டு ஓடுகிறார்.

    நான் செய்ய எத்தனிக்கும் விடயங்கள் நாம் எண்ணும் போது செய்து முடிக்க முடியாமல் போய் விடுகிறது.

    எது இப்போது நடைபெறாது என்று நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோமோ அது கண்ணிமைக்கும் பொழுதுக்குள் நிகழ்ந்து விடுகிறது.

    ஆம் எம்மனைவருக்கும் தெரிந்த வாழ்க்கைக் கணக்கைத்தான் நான் குறிப்பிடுகிறேன்.

    சீட்டாட்டத்தில் ஒவ்வொருவருக்கும் சீட்டுக்கள் வீசப்படுகின்றன. யாருக்கு என்ன சீட்டு விழப்போகிறது என்பது யாருக்கும் தெரியாது கையில் கிடைக்கும் அந்த சீட்டுக்களை வைத்துக் கொண்டு எதிராளியை திணறப்பண்ணுவதே சீட்டாடத்தின் திறமை.

    அதேபோல எமது ஒவ்வொவருக்கும் எவ்வகையான வாழ்க்கை அமையப் போகிறது என்பது எவருக்குமே முன்னால் தெரிவது இல்லை.

    அப்படித் தெரிந்தால் சுவாரஸ்யம் குறைந்து விடும் என்பதால் தானோ என்னவோ அது மறைத்து வைக்கப்படுகிறது ?

    எமக்கு கிடைப்பவைகளை வைத்து ஒவ்வொருவரும் தத்தமது வாழ்வை, தமது எண்ணத்தின் படி, தமக்கு வசதியாக அமைத்துக் கொள்வதற்காகப் போராடுகிறார்கள்.

    சிலர் அதில் வெற்றியடைகிறார்கள். பலர் அதை நோக்கிய தமது போராட்டத்தை முடிக்காமலே தமது வாழ்வை முடித்துக் கொள்கிறார்கள்.

    என்னடா இது ? எதற்காக சக்தி இந்தப் பீடிகை போடுகிறான் என்று எண்ணுகிறீர்களா ?

    வேறொன்றுமில்லை பதினெட்டு வருடங்களின் பின்னால் முதன் முதலாக கன்சர்வேடிவ் கட்சி தமது வரவு செலவுத் திட்டத்தை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. ஆமாம், 2015 மே மாதம் நடந்த பொதுத்தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றியீட்டிய டேவிட் கமரன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி அநேக எதிர்பார்ப்புகளுடன் கூடிய வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்துள்ளது.

    என்ன கடந்த முறையும் டேவிட் கமரன் தானே பிரதமராகவிருந்தார். அப்போது சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டங்களுக்கும் இப்போது சமர்ப்பிக்கும் வரவு செலவுத் திட்டத்திற்கும் என்ன வேறுபாடு எனும் எண்ணம் எழுவது இயற்கை… கடந்த டேவிட் கமரன் தலைமையிலான அரசு ஒரு கூட்டரசாங்கம். அப்போது சமர்ப்பிக்கப்பட்ட அத்தனை வரவு செலவுத் திட்டங்களும் லிபரல் கட்சியின் அனுசரணையுடன் சமர்ப்பிக்கப்பட்டதினால் பல கன்சர்வேடிவ் கட்சியின் கொள்கைகளை நடைமுறைக்கு கொண்டு வரமுடியவில்லை. ஆனால் இப்போது அவர்கள் தனித்துவமாக அரசமைத்திருப்பதால், தமது கொள்கைப் பிரகடனங்களை முன்னிறுத்தி இவ்வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    அரசியல் அவதானிகள் வேறொரு முக்கிய விடயத்தையும் முன்வைக்கிறார்கள். டேவிட் கமரன் அவர்கள் தாம் இம்முறை பிரதமரானால் இதுவே தமது கடைசிமுறை என்றும் தான் அக்கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகி விடுவதாகவும் அறிவித்திருந்தார். விளைவு ! ஐந்து வருடங்களின் பின்னால் அரசமைத்திருக்கும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைமைப் பதவி வெற்றிடமாகும். அதற்கு போட்டியிடுவதற்கு இப்போதைய நிதியமைச்சர் ஜார்ஜ் ஒஸ்போன் தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறார் என்றும், இந்த வரவு செலவுத் திட்டம் அதற்கான முதல் அடி இது என்பதே அக்கருத்தாகும்.

    budget-Osborne 2015

    சரி அப்படி என்ன முக்கிய விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது ?

    # இங்கிலாந்தின் கடன் தொகையைக் குறைத்து 2020ம் ஆண்டு கணக்கில் செலவை விட வரவை அதிகரிக்கப்பண்ணும் கொள்கையில் இவ்வருடத்திற்கு 12 பில்லியன் ஸ்ரெலிங் பவுண்ஸ் இங்கிலாந்து அரசால் மீதப்படுத்தப்பட வேண்டும்.

    # அரச உதவி பெறும் வேலையற்ரொருக்கான உதவிப்பணம் வருடமொன்றுக்கு ஒரு இல்லத்திற்கு 23000 பவுண்ஸ் ஆக குறைக்கப்பட்டுள்ளது.

    # 18 – 21 வயது கொண்ட இளையோர் மேற்படிப்புக்குச் செல்லாமல் இருந்தால் அவர்களுக்கு உதவிப் பணம் வழங்கப்பட மாட்டாது. அவர்கள் வேலை ஒன்றைத் தேடிக் கொள்ள வேன்டும் இல்லையெனில் ஏதாவது ஒரு துறையில் தமது பயிற்சியை ஆரம்பிக்க வேண்டும்.

    # பலர் பகுதிநேர வேலையில் ஈடுப்பட்டிருக்கிறார்கள். இதுவரை வருடத்திற்கு 6500 பவுண்ஸ்க்கு குறைவாக ஊதியம் பெறுவோருக்கு அரச உதவி கிடைத்து வந்தது. அதை இப்போது 3500 பவுண்ஸ் ஆக குறைத்துள்ளார்கள்.

    # தேசிய அளவிலான அதிகுறைந்த ஊதியம் மணியொன்றுக்கு 7 பவுண்ஸ் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது இனி சட்டமூலமாக்கப்ப்படுகிறது.

    இப்படியாக பலவழிகளில் அரசாங்கச் செலவினைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை இவ்வருட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்துகிறார்கள்.

    அதே நேரம் முதல் 12000 பவுண்ஸ் வரை வரி அளவிடப்படமாட்டாது என்று அதன் அளவைக் கூட்டி அடிமட்டத் தொழிலாளர்களுக்கு தாம் உதவி புரிந்துள்ளோம் என்கிறார்கள்.

    இத்திட்டங்களுக்கு சார்பாகவும், எதிராகவும் பலமுனைகளில் இருந்து வாதங்கள் கிளம்புகின்றன. பொதுவாக எடுத்துப்பார்த்தால் ஓய்வூதியம் பெறுவோரும், வாழ்வின் மத்தியதர வர்கத்தினரின் கூடுதலான ஆதரவாகவும்; மாணவர்கள், வேலையற்றோர், இளையோர் எனும் பகுதியினர் எதிராக இருப்பது போலவும் தென்படுகிறது.

    அடுத்த பிரதமராக வேண்டும் எனும் இலட்சியத்தில் முதல் அடி எடுத்து வைத்துள்ள நிதியமைச்சர் ஜோர்ஜ் ஒஸ்போன் அவர்களின் கனவு நனவாகுமா? இல்லையேல் கனவாகவே கலைந்து விடுமா?

    மக்கள் குரலே மகேசன் குரல் !

    மீண்டும் அடுத்தவார மடலுடன்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 6

    சி. ஜெயபாரதன்.

    kahlil-gibran

    (1883-1931)

    ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

    மூலம் : கலில் கிப்ரான்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     

    காதல் சேயிடம் என் இதயம் கேட்டது : “அன்பே ! எங்கே நான் மனநிறைவைக் காண்பேன் ? உன்னுடன் சேர இங்கு அது வரப் போவதாய்க் கேள்விப்பட்டேன்.”

    காதல் சேய் அதற்குப் பதில் உரைத்தாள் : “பேராசையும், லஞ்சமும் முதன்மையான நகருக்கு மன நிறைவு ஏற்கனவே உபதேசம் செய்யப் போய் விட்டாள். நமக்கு அவள் தேவை யில்லை.”
    – கலில் கிப்ரான் (The House of Fortune) (Tears & Laughter)

    “உனக்கு வலி உண்டாகும், நீ புரிந்து கொண்ட அறிவுக் கோட்டை தகர்க்கப்படும் போது.”
    – கலில் கிப்ரான்

    “நான் ஏகாந்தத்தைத் தேடியதற்குக் காரணம் : தம்மையே விற்று அதே பணத்திற்குத் தம்மை விடத் தாழ்வான ஆன்மீக அல்லது உலோகாயுதப் பொருட்களை வாங்கும் மனிதரின் முகத்தைக் காணாமல் இருப்பதற்கு !”
    – கலில் கிப்ரான் (From A Treasury of Kahlil Gibran 1951)

     

    மரணமே கவிஞன் வாழ்வு

    வருவாய் அழகிய மரணமே !

    வாஞ்சை யோடு
    ஏங்கிடும் உன்னைத்தான்
    என் ஆத்மா !
    வா என்னை நெருங்கி !
    வந்தென் வாழ்க்கையின்
    இரும்புத்
    தளைகளை அவிழ்த்திடு !
    களைத்துப் போனேன்
    அவற்றின்
    கனத்தைச் சுமந்து !
    வருவாய் இனிய மரணமே !
    வந்தென்னை விடுவிப்பாய்
    வழிப் போக்கனாய்
    என்னை நோக்கிடும்
    பக்கத்துச் சொந்த
    பந்தங்களிருந்து !
    என்னெனில் நான் அவருக்கு
    விளக்கிச் சொல்வேன்
    தேவதை களின் வாசகத்தை !

    வருவாய் மௌன மரணமே !
    இருட்டு மூலை
    மறதியில்
    விட்டுச் சென்ற என்னை கடத்திச் செல்
    இந்தக் கும்பலிட மிருந்து !
    எனெனில்
    எளியவர் குருதியை நான்
    அவரைப் போல்
    பிழிந்திட மாட்டேன் !

    வருவாய் சாந்த மரணமே !
    இழுத்துக் கொள்
    என்னை
    உந்தன் வெள்ளை
    இறக்கைக் குள்ளே !
    ஏனெனில்
    என்னாட்டு மாந்தருக்கு
    இனி நான்
    தேவை யில்லாதவன் !

    தழுவிடு என்னை மரணமே !
    முழுப் பரிவோடு அன்பு
    கொண்டு !
    உன் உதடுகள் தொடட்டும்
    என் உதடுகளை !
    அன்னையின் முத்தங்கள்
    சுவைக் காதவை !
    தங்கையின் கன்னத்தைத்
    தடவா தவை !
    அருமைக் காதலியின்
    விரல் நுனிகளை
    வருடா தவை !
    வா வந்தென்னை
    ஏற்றுக் கொள்
    என்னினிய மரணக் காதலி !

    (From : “A Poet’s Death is His Life” By Kahlil Gibran)

     

    உன்னிதயம் ஓர் எரிமலையாக இருக்குமேயானால் அதிலிருந்து பூக்கள் மலரும் என்று எப்படி நீ எதிர்பார்க்கலாம் ?”

    “அழ முடியாத அறிவு, புன்னகை சிந்தாத வேதாந்தம், குழந்தைகள் முன் பணியாத உன்னதம் ஆகியவற்றிலிருந்து நீ விலகி நில்.”

    “விடுதலை இல்லாத வாழ்வு ஆன்மா இல்லாத உடம்பை ஒத்தது.”

    “ஆன்மா ஆழ்ந்து செழிப்புறுவதைத் தவிர நட்பில் வேறெந்தக் குறிக்கோளும் இருக்கக் கூடாது.”
    – கலில் கிப்ரான்

    கவிஞன் யார் ?

    இந்த உலகிற்கும் எதிர்கால உலகிற்கும்
    இணைப்புப் பாலம் அவன்.
    தாகமுற்ற ஆத்மாக்கள்
    தண்ணீர் குடிக்க வந்திடும்
    தடாகத் தூய நீர் ஊற்று அவன்.
    எழில் நதி நீர் பாய்ச்சிப்
    பசித்தோர் பசி அடக்கும்
    பழங்கனி காய்க்கும் மரம் அவன்.

    இன்னிசைக் கானம் பாடி
    மனத்தாழ்வை ஒழிக்கும் வானம் பாடி !
    விண்வெளி முகம்
    முழுதும் நிரம்பும் வரை
    அடிவான் மீது
    மேலும் கீழும்
    தோன்றும் வெண்முகில் அவன்.
    பின்பு ஒளியை அனுமதிக்க
    வாழ்வுத் தள மலர்கள் மேல் படிந்து
    இதழ்களை விரிப்பான் !

    தெய்வம் அனுப்பிய தேவன் அவன்
    மெய்யான உபதேசம்
    செய்திட வந்தவன்.
    இருள் வெல்லாத
    ஒளிச்சுடர் விளக்கு !
    புயல் அணைக்காத ஒளி விளக்கு.
    காதல் தேவதை
    எண்ணை ஊற்றி
    இசைக் கீதம் ஏற்றிய தீபம் !

    ஏகாந்த வாதி அவன் !
    பரிவோடு
    எளிய உடை
    உடுப்பவன் அவன் !
    உள்ளெழுச்சி தனைத்
    தூண்டி விட
    இயற்கை மடி மீது
    அமர்பவன் அவன் !
    ஆத்மீகம் வரவேற்கக்
    காத்திருந்து
    இரவு மௌனத்தில்
    தியானிப் பவன் !

    தனது இதயத்தில்
    விதைகளை நட்டு வைத்து
    வன வயல்களில் பரிவு விதை
    விதைப்பவன்.
    மனித இனம் அவற்றை
    அறுவடை செய்யும்
    தமக்குணவாய் ஊட்டித்
    தான் வளர்வதற்கு !

     

     

    Share
  • காலம் (13)

     

    மீ.விசுவநாதன்

    vallamai111-300x15011111

     

    மலையில், இலையில், மணிக்கிளிப் பொந்தில்,
    அலைகடல் மீதில், அழகுச் சிலையென
    அத்தனை மீதுமே ஆதவன் பட்டாலும்
    சுத்தமே என்றும் சுடர். (121) 30.04.2015

    குற்றாலம் என்றால் குளிரருவி எண்ணந்தான்
    முற்றாக உள்ளிருக்கும் ! மோனத்தில் முற்றாய்க்
    கலந்தால் , “கருணையே” கண்ணொளியாய் நன்கு
    மலர்ந்து சிரிக்கும் மலர். (122) 01.05.2015

    ஒவ்வொரு நாளுமே ஓரோர் அனுபவம்
    கவ்விப் பிடித்துக் கலக்குவதில் ஜிவ்வென்றே
    உள்ளுள்ள தேன்கூட்டில் ஓர்துளி சிந்துவதால்
    அள்ளிக் களிக்கு(ம்) அகம். (123) 02.05.2015

    குழந்தையின் கண்களில் கோகுலக் கண்ணன்
    கழலினைக் காண்கிறேன் ! காதல் பழகி
    பகையை மறக்கிறேன் ! பாப்பா முகத்து
    நகையே புதுமை நகை. (124) 03.05.2015

    பேச்சில், சிரிப்பில், பிரிய நடிப்பிலே,
    கூச்சமே இல்லாக் குலவலில் சீச்சீ
    இவர்போல் கபடதாரி எங்கடா சொல்லு ?
    எவர்க்குள்ளும் கொஞ்ச(ம்) இவர். (125) 04.05.2015

    போதையில் வீழ்ந்து புரண்டு கிடக்கிறான்
    பாதையில் ! எப்படியோ பாரிலே “மேதைகளும்,
    ஞானியரும், நண்பருடன் நானும்” புகழ்போதை
    மானிடத் தோற்றத்து மாசு. (126) 05.05.2015

    இருக்கின்ற நாள்வரை எல்லோர்க்கும் நன்மை
    பெருக்கிடும் வார்த்தையே பேசி வருவோம் ;
    செருக்கின்றி பண்பும் சிறப்புமாய்ச் செல்ல
    பெருமாள் கருணை பெரிது (127) 06.05.2015

    மலரும் தினத்தில் மனதின் சிறுமை
    உலரும் படியாய் ஒளியோன் அருள்க !
    பலரும் இணைந்து பலமாய் இருந்தால்
    புலரும் உலகே புதுசு. (128) 07.05.2015

    தேர்வில் மதிப்பெண் திகட்டிடப் பெற்றாலும்
    ஊரிலே கல்லூரி ஒன்றிலும் சேர
    முடியாதாம் ! சாதிகள் முட்டி முனகும்
    பிடிவாதப் போக்கே பிழைப்பு. (129) 08.05.2015

    சிறகை விரித்தேன் சிறுநொடிப் போதில்
    திறந்த வெளியில் திரிந்து பறந்தேன் !
    அடடா ! அடடா ! அடைமழை , வெய்யில்
    இடையிலே தானே இதம். (130) 09.05.2015

    Share
  • நீ என்னென்ன சொன்னாலும் கவிதை …

    கவிஞர் காவிரிமைந்தன்.

     

    நீ என்னென்ன சொன்னாலும் கவிதை

    பாடல் தோன்றிய கதை:
    ennenna2ஆற்காடு முதலி தெரு, தி.நகரில் மக்கள் திலகம் இல்லத்திலிருந்து புறப்படுகையில் புலவர் புலமைப்பித்தன் வந்து சேர்கிறார். தமிழைத் தன் உயிராய் நேசித்த தலைவன் அல்லவா? உடுமலை நாராயண கவி, தஞ்சை ராமையாதாஸ், மருதகாசி, கண்ணதாசன், பட்டுக்கோட்டை, வாலி, புலமைப்பித்தன், முத்துலிங்கம், , நா.காமராசன் என கவிஞர் பெருமக்களைக் கவர்ந்திழுந்த கதாநாயகன் அல்லவா? புலவரைக் கண்டதும் புளகாங்கிதம் அடைகிறார்! நல விசாரிப்புகள் தொடர்கின்றன.

    அடுத்து புலவரை நோக்கி, நான் மதிய உணவிற்கு இங்குதான் வருகிறேன். நீங்கள் இங்கு தங்கியிருந்து ஒரு இனிய பல்லவியை எழுதி வையுங்கள்! அந்தப் பல்லவி என்னை அசத்தும் அளவிற்கு இருக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துப் புறப்படுகிறார்.

    புலவர் கையில் ஏடெடுத்து, எழுதும் கோலெடுத்து, கற்பனை வானில் உலா வருகிறார். பொன்மனச்செம்மலின் புகழ்மணம் பற்றி புதிதாய் என்ன சொல்ல? அவரின் புற அழகை வர்ணிக்கவா? அக அழகை எண்ணிப்பூரிக்கவா? என்ன எழுதலாம் என்று எண்ணத்தேரோட்டம் நடத்துகிறார். தமிழன்னையின் இனிய முகவரி அது! என்னென்ன சொன்னாலும் கவிதைதானே!! கிடைத்துவிட்டது பல்லவி!!

    நீ என்னென்ன சொன்னாலும் …

    நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
    உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை
    நீ என்னென்ன செய்தாலும் புதுமை
    உன்னை எங்கெங்கு தொட்டாலும் இளமை … இனிமை… இளமை…

    புரட்சித்தலைவர் மதிய உணவிற்கு இல்லம் திரும்புகிறார். வாசலிலே நின்று வரவேற்ற புலவரை, எங்கே பல்லவி என்று கேட்க, ஏடெடுத்து தான் எழுதி வைத்ததைக் காட்ட, உச்சிமுகந்து மெச்சிப்புகழ்ந்த பல்லவியாய் அது ஆனது!

    நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
    உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை
    நீ என்னென்ன செய்தாலும் புதுமை
    உன்னை எங்கெங்கு தொட்டாலும் இளமை

    பல்லவியைத் தொடர்ந்து சரணங்களை மதிய உணவிற்குப் பின் எழுதிவிடுங்கள் என்று எம்.ஜி.ஆர் கூற, புலவரோ, தலைவா எந்த ஒரு புலவனும் பசித்திருக்கும்போது சிந்தனைப் பிரவாகமெடுக்கும்! நீங்கள் குளித்துவிட்டு உணவு மேசைக்கு வரும் முன்னர் எழுதிவிடுகிறேன் என்றார்!
    அவ்வண்ணமே பாடல் முழுமை அடைகிறது!

    நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
    உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை
    நீ என்னென்ன செய்தாலும் புதுமை
    உன்னை எங்கெங்கு தொட்டாலும் இளமை ( நீ )

    சின்னஞ் சிறுமலர் பனியினில் நனைந்து
    என்னைக் கொஞ்சம் வந்து தழுவிட நினைந்து
    முல்லைக் கொடியென கரங்களில் வளைந்து
    முத்துச் சரமென குறுநகை புரிந்து ( நீ )

    பொன்னில் அழகிய மனதினை வரைந்து
    பொங்கும் தமிழினி ல்கவிதைகள் புனைந்து
    பன்னீர் புதுமலர் இதழ்களில் நனைந்து
    கங்கை நதியென உறவினில் கலந்து
    உறவினில் கலந்து… ( நீ )

    வெள்ளிப் பனிமலை அருவியில் விழுந்து
    வெற்றித் திருமகன் மடியினில் கிடந்து
    உள்ள சுகத்தினை முழுவதும் அளந்து
    இந்த உலகினை ஒருகணம் மறந்து
    ஒருகணம் மறந்து… ( நீ )

    சுகமான தமிழல்லவா? சுந்தர மொழியல்லவா? தன் நெஞ்சில் நிறைந்து அன்பில் ஆளும் தலைவனுக்காக இசையமைப்பாளர் அருகில் இல்லாமல், தயாரிப்பாளர் அருகில் இல்லாமல், இயக்குனர் கூட அருகில் இல்லாமல் எந்த நெருக்கடியும் இல்லாமல் தமிழே அருவியாய் பொழிந்த மழை! இது “நேற்று இன்று நாளைக்காக!!” ஆம்… மூன்று காலத்திற்கும் பொருந்தும் கவிதையை, காதல் கீதத்தை மெல்லிசை மன்னரின் கூட்டணியில் பாடும் குயில்களாக டி.எம்.செளந்திரராஜன் பி.சுசீலா பாட இதோ …

    காணொளி: https://youtu.be/AKVgl3X95ow

    https://youtu.be/AKVgl3X95ow

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

     

    அன்பே எதுகையாய், ஆர்வமே மோனையாய்,
    உன்பால் தளையற்ற உந்துதலால், -வெண்பாக்கள்,
    பாடிக்கை கூப்புகிறேன், வேடிக்கைக்(கு) அல்லகண்ணா
    வாடிக்கை யாளனாக வா”….

    ஒழுக உறிவெண்ணை, உனைத்தொடர்ந்து வந்த,
    பழகு பயல்கள் பதுங்க -அழுத,
    விழியோடன்(று) ஆய்ச்சியர் வீட்டிலகப் பட்டுப்,
    பழியோடு நிற்கும் பரம்’’….

    அழைக்கும் குரலைக்கேட்(டு) ஆடா(து) அசங்காது
    உழைக்கவரு வானவன் ஓடி -மழைக்குக்
    குடையாய் மலையேந்தி கோகுலம் காத்த
    இடையன் இணைப்பில் இரு’’….கிரேசி மோகன்….

    Share
  • தல விருட்சம்

    பவள சங்கரி

    201411241735412096_TreeShiva_SECVPF

    அனைத்து கோவில்களிலும் தல விருட்சம் என்று இருக்கிறதே. அதன் தாத்பரியம் என்ன என்று தெரியுமா? ஆதி காலத்தில் நம் முன்னோர்கள் காடுகளில் குடில் அமைத்து கூட்டமாக வாழ்த்து வந்தனர். பெரிய கட்டிடங்கள் எல்லாம் இல்லை. அந்த காலத்தில் மரத்தினடியில் இறை உருவை எழுந்தருளச் செய்து வழிபட்டு வந்தனர். பின்னர் நாகரீக வளர்ச்சியில், காடுகள், நாடு, நகரமாகவும் மாறி, கட்டிட அமைப்புகளும் உருவாக ஆரம்பித்தன. பிரம்மாண்டமான ஆலயங்களும் உருவாயின. மரத்தடியில் இருந்த தெய்வச் சிலைகள் ஆலயங்களில், மூலத்தானத்தில் வைக்கப்பட்டபோது, ஆண்டவனுக்கு அடைக்கலமான மரங்கள் தல விருட்சங்களாக பாதுகாக்கப்பட்டு வருவதாக ஐதீகம்…. சுவையான தகவல் அல்லவா?

    சிவன் கோவிலில் பெரும்பாலும் வில்வ மரங்களே தல விருட்சமாக இருக்கும்.

    Share