(ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

மீ.விசுவநாதன்

அத்யாயம்: 20

நா.பா. என்னும் இலட்சியவாதி”

அவனுக்கு நா. பார்த்தசாரதியின் (நா.பா) கதைகள் பிடிக்கும். அவர் கதைகளில் இருக்கும் சத்திய வேட்கையும், கவித்துவமான நடையும் அவரது கதைகளைப் படிக்கவேண்டும் என்ற எண்ணத்தை அவனுக்குள் ஏற்படுத்தி இருந்தது. அதோடு மணிவண்ணன் என்ற பெயரில் அவர் எழுதிய கவிதைகளிலும் அவனுக்கு நாட்டமிருந்தது. அவரது “தீபம்” பத்திரிகையை நூலகத்தில் படித்திருக்கிறான். சென்னைக்கு வந்த பிறகு தவறாமல் அதை வாங்கிப் படித்தும் வந்தான். அது அவனது இலக்கியப் பசிக்குக் கொஞ்சம் தீனி போட்டு வந்தது.

1971ம் வருடம் ஏப்ரல் மாதம் கல்லிடைகுறிச்சியில் ஸ்ரீராமநவமி உற்சவ சமயத்தில் ஒரு பட்டிமன்றம் நடந்தது. “ராம நாம யக்ய மண்டலி” என்ற அமைப்பின் மூலமாக “டாபே” மகாதேவன் என்பவரின் முயற்ச்சியால் வீரப்பபுரம் தெருவில் அமைக்கப் பட்டிருந்த பெரிய பந்தலில் வைத்து நடைபெற்ற அந்தப் பட்டிமன்றத்திற்கு நடுவர் நா.பார்த்தசாரதி . பாரதி கலைக்கழகத் தலைவர் பாரதி இரா.சுராஜ், பாரதி காவலர் கே.ராமமூர்த்தி, ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணிக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் “தமிழ் ஐயா” என்று அழைக்கப் பட்ட “லக்ஷ்மிநாராயணன்”, பேராசிரியர் பழனிச்சாமி, திலகர் வித்யாலய உயர்நிலைப் பள்ளியின் தமிழாசிரியர் கே.ஏ. நீலகண்ட ஐயர் போன்ற தமிழ் அறிஞர்கள் அந்தப் பட்டிமன்றத்தில் தமிழருவியாகக் கொட்டிக் களித்தனர். தம்பியரில் சிறந்தவர் இலக்குவனா, பரதனா, கும்பகர்ணனா என்பதே பட்டிமன்றத் தலைப்பு. ஒவ்வொரு அணியினரும் தங்கள் கருத்தை எடுத்துரைக்கும் பொழுது பார்வையாளர்கள் கைகளைத் தட்டித் தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொடிருந்தனர். இறுதியில் தீர்ப்புச் சொன்ன நா.பா. அவர்கள்,” இது உங்கள் பட்டிமன்றம். இங்கு பேசியவர்களின் கருத்துக்களை நீங்கள் ரொம்பவும் கைதட்டி ரசித்தீர்கள். அதனால் அதிகமாக “ஐம்பத்தொரு முறை கைதட்டல்கள்” வாங்கிய அணியையே வென்றதாகத் தீர்பளிக்கிறேன்” என்று ஒரு புதிய கோணத்தில் தீர்ப்பு வழங்கினார். அப்பொழுது அவராற்றிய தமிழுரையில் அவன் சொக்கித்தான் போனான். அவரது அந்த மேடைப் பேச்சு அவனைக் காந்தம்போல அவரிடம் ஈர்த்தது. நூலகத்தில் அவரது நாவல்களைத் தேடிப் படித்தான். அவனது பி.யூ.சி. வகுப்புக்கு நா.பா.வின் “பிறந்த மண்” என்ற அற்புதமான நாவலைப் பாடமாக வைத்திருந்தனர். அவன் ரசித்து ரசித்து அந்த நாவலைப் படித்தான். இன்றும் அந்தப் புத்தகத்தை அவன் பத்திரமாக வைத்திருக்கிறான். அந்தப் பழைய புத்தகத்தைப் புரட்டும் பொழுது அதைப் பாடாமாக நடத்தி விளக்கிய ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணிக் கல்லூரியின் பேராசிரியர் ஆழ்வான் சார் நினைவுக்கு வருவார்.

bank

பேங்க் கிருஷ்ணமூர்த்தி மாமா”

கல்லிடைகுறிச்சியில் நா.பா.வின் நெருங்கிய நண்பர் கிருஷ்ணமூர்த்தி. அவர் முதலில் “இந்தோ கமர்ஷியல் பேங்க்”ல் வேலை செய்து, பின்னாளில் அது பஞ்சாப் நேஷனல் பேங்க்கோடு இணைந்ததால் அதிலும் பணியாற்றி ஒய்வு பெற்றவர். அவரை எல்லோரும் பேங்க் கிருஷ்ணமூர்த்தி என்றுதான் அழைப்பார்கள். நல்ல தமிழார்வமும், இலக்கிய ஆர்வமும் கொண்டவர். ஒருமுறை நா.பா. கல்லிடைகுறிச்சிக்கு வந்திருந்த பொழுது பேங்க் கிருஷ்ணமூர்த்தி மாமாவும் , நா.பா.வும் ஒரு மாலை வேளையில் ஆற்றங்கரைக்கு நடந்து போய்க் கொண்டிருந்தனர். அவன் சிவன்கோவில் வாய்க்கால் பாலத்தின் திண்டில் அமர்ந்து கொண்டிருந்தான். அப்பொழுது அவர்கள் இருவரும் அவனைக் கடந்து செல்வதைப் பார்த்து அவனுக்கு நா.பா.விடம் பேசவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அவன் மெதுவாக அவர்களுக்குப் பின்னால் ஒரு இருபதடி தூரத்தில் அவர்களைத் தொடர்ந்து நடந்தான். அவர்கள் பாதையை விட்டு வயல்வரப்புகள் வழியாக நடக்கத் தொடங்கினர். நா.பா. மேற்குத் தொடர்ச்சி மலையையும் , வயல் வெளிகளையும் தன்னுடைய கைகளைக் காட்டிக் காட்டிப் பேசியபடியே சென்று கொண்டிருந்தார். ஆயிரங்கால் மண்டபம் கடந்து, ஆற்றங்கரைக்குள் இறங்கி அங்கிருக்கும் சிறிய சிவன் பாறைக்கு எதிரில் பரந்திருந்த ஆற்று மணலில் அமர்ந்து கொண்டனர். அப்பொழுதெல்லாம் ஆற்றில் நிறைய மணல் இருக்கும். மணற்கொள்ளை அவ்வளாவாக நடைபெறாத காலம். அவன் அந்தச் சிவன் பாறையில் ஏறி அமர்ந்து கொண்டு, அவர்களைப் பார்த்தும், ஆற்று நீரைப் பார்த்துக் கொண்டும் சிறிது நேரம் இருந்தான். பிறகு மெதுவாக எழுந்து அவர்களின் அருகில் சென்றான். அவன் அவர்கள் பக்கமாக வருவதைப் பார்த்த கிருஷ்ணமூர்த்தி மாமா,” என்ன கண்ணா …இங்கவா..இவரைத் தெரியுமோ” என்றார். அவன் அவரது கதைகளைப் படித்திருக்கிறேன் என்றும், நேரில் பார்த்ததில்லை என்றும் சொன்னான். கிருஷ்ணமூர்த்தி மாமா நா.பா.விடம்,” இவன் பேர் விஸ்வநாதன்…கவிதைகள் எழுதுவான்…இலக்கியத்தில் நல்ல ஆர்வமுண்டு என்றார். “அப்படியா” என்று என்னைப் பார்த்து,” நிறையப் படியுங்கள்..எழுத்து தானாக வரும்” என்று நா.பா. அவனை வாழ்த்தினார். அவனுக்கு உள்ளத்தில் ஏக குஷி. சில மாதங்கள் சென்று கலைமகள் பத்திரிகையில் “நீல நயனங்கள்” என்றொரு நாவலை நா.பா. எழுதினர். அதில் அந்தக் கல்லிடைகுறிச்சியின் அழகையும், வயல்வெளிகளின் பசுமையையும், தாமிரபரணியின் குளிர்ச்சியையும் பதிவு செய்திருப்பார். நா.பா.வின் கம்பீரமான தோற்றமும், நிமிர்ந்தபடியே கைகளை வீசிக்கொண்டு நடக்கும் அழகும், நல்ல தமிழ்ப் பேச்சும் அவனுக்கு அவர்மீது பெரிய மரியாதையை ஏற்படுத்தியது.

ஒருசமயம் அவனுக்கு நண்பரும், சிறந்த எழுத்தாளரும் , கவிஞருமான சுப்ரபாலன் அவர்களின் அசோக்நகர் இல்லத்தில் 15.08.1987ம் வருடம் “இந்திய சுதந்திர தினத்தன்று” பாரதி கலைகழகம் சார்பில் கவியரங்கம் நடைபெற்றது. நா.பா.தான் தலைமை தாங்கினார். கவிதைக்கு “தேசம் எனது தேசம்” என்று தலைப்புத் தந்திருந்தனர். கவிமாமணி தமிழழகன், கவிமாமணி நா.சீ.வரதராஜன், கவிமாமணி தேவநாராயணன், கவிமாமணி பஞ்சநதீசன் போன்ற மூத்த கவிஞர்களுடன் நிறையக் கவிஞர்கள் கலந்து கொண்டு நல்ல கவிதைகளைப் படைத்தனர். அவனும் அன்று ஒரு கவிதையைப் படித்தான். அவன் கவிதையைப் படித்து முடித்தவுடன்,”உங்களது கவிதையில் ஒழுங்கும், இன்றைய நடைமுறையின் கோபமும் இருக்கிறது. இன்னும் இதுபோல் நிறைய ஆழமாக சிந்தித்து எழுதுங்கள்” என்று நா.பா. பாராட்டினார். அதை அவன் ஒரு மோதிரக் குட்டாகக் கொண்டான். கவிமாமணி தேவநாராயணன் அவனது கவிதையைப் பாராட்டியதோடு, சுதந்திர தினத்தன்று தியாகிகளின் பெருமையைச் சொல்ல வேண்டும் என்ற அவரது கருத்தைச் சொன்னார். அடுத்ததாக தேவநாராயணன் அவரது கவிதையைப் படிக்க அழைக்கப்பட்டார். அருமையான கவிதையை அவர் படித்து, இசைத்தார். அதில் பாரத தேசம் புண்ணிய தேசம் என்ற தனது கருத்தை வலியுறித்தி இருந்தார். அப்பொழுது நா.பா. அவர்கள் , “நமது பாரதம் மட்டும் புண்ணிய தேசமில்லை. எல்லா தேசமுமே புண்ணிய தேசந்தான். நமது நாட்டில் கள்ளப் பணத்தைக் கொண்டு “சுவிஸ்வங்கி”யில் போடுபவர்கள் இல்லையா..நேர்மைக் குறைவான அரசியல் வாதிகள் இல்லையா…அதேபோல மற்ற தேசங்களில் சிறந்த மனிதர்கள் இல்லையா, இலக்கியம் இல்லையா….அதனால் வாழுகின்ற மனிதர்களின் குணநலன்களைக் கொண்டுதான் ஒரு தேசத்தை நாம் கணிக்க வேண்டும்” என்றார். அப்பொழுது கவிமாமணி தேவநாராயணன் தனது கருத்தை மீண்டும் வலியுறுத்திப் பேசினார். ஒரு சிறிய இலக்கியச் சர்ச்சையே அப்பொழுது அங்கு நடந்தது. அதெல்லாம் அவனுக்கு ஒரு அனுபவமாகப் பட்டது. கவிமாமணி தேவநாராயணனுக்கு அவன்மீது ஒரு தனி வாஞ்சையே உண்டு. அந்தக் கவியரங்கத்திற்கு அவனது மனைவியும், எழுத்தாளருமான “சீதாலக்ஷ்மி விஷ்வநாத்”தும் வந்திருதார். அவரும் நா.பா.வின் தீவிர ரசிகை. அன்று அவன் படித்த அந்தக் கவிதையை நீங்களும் இங்கே படிக்கப் பதிவு செய்கிறான்.

“தேசம் எனது தேசம்”

“இவரொரு இந்தியர் ! தீவிரத் தியாகிதான் !
சிவனென இருக்காமல் சிறைக்கதவுக் குள்ளும்தன்
இந்திய மண்ணிற்காய் சிந்திய ரத்தமிவர்
பிந்திய பிறப்புக்குத் தெரியவா போகிறது ?
மனதினது தூய்மையை மாசுபடா திருக்கவே
தினமுமே தாய்மண்ணைத் தியானமாய்ச் செய்துவந்த
உன்னதத் தியாகிகளின் உணர்ச்சிமிகு வாழ்க்கையை
இன்றைய இளைஞனின் இதயந்தான் அறியுமா?

தாமிரப் பட்டயம் தருவார்கள் எனஎண்ணியா
ஆயிர மாயிரமாய் அந்நிய உடைமைகளைத்
தீயிலே கருக்கிநம் விடுதலை வேள்வியை
தீவிரப் படுத்தினர் ! திரண்டதன் செல்வங்கள்
அனைத்தையும் இந்ததன் அற்புத நாட்டினது
கனவுகள் நனவாகக் கற்பூரங் காட்டினர் !

ஏழ்மையின் கொடுமையில் இவரது குடும்பங்கள்
கூழுக்கு அலைகிற கொடுமைகள் பெற்றினும்
பாரதப் பரம்பரை பண்புடன் வாழவே
வீரவிடு தலையைத்தான் வேண்டியே பெற்றனர்!

பாரத பூமியோ பசுமையில் செழித்தநல்
நீர்வளம் மிகுந்ததோர் நித்திய சுமங்கலி !
ஞானத்தில் ஓங்கிய ஞானியர் உள்மனம்
நாடிடும் ஈசனை நமக்குள்ளே காட்டிடும்
பக்தியில் மிகுந்தநற் பண்புள்ள நாடிது !
எத்தனை வேற்றுமை இருந்திட்ட போதிலும்
ஒருமுகமாய் எல்லோரும் ஒருகுலமாய் நின்றுகொண்டு
வருவதனைத் தன்னாட்டின் வளமான மேன்மைக்காய்
சூழ்சிகளை விரட்டியும் சோதனையே வந்தாலும்
வாழ்த்தியும் வணங்கியும் “வந்தேமா தரத்தினை”
ஓதியும் தரமுடனே ஒளிமிகுந்த உளத்துடனே
சாதிமத பேதமின்றி சரிநிகராய் வாழ்ந்தனர் !

இரவுபகல் பாராமல் செய்துவந்த தியாகத்தால்
வரவெனநம் சுதந்திரம் வந்ததே இப்படித்தான்!
தியாகத்தின் பரம்பரை திரும்பியே பார்க்கையில்
மாயமாய்ப் போனதே மண்ணினது பக்திதான்!

ஊழலே இன்றெங்கும் ஊர்வலமாய்ச் சுற்றியே
வாழலாம் வாவெனவே வாசலில் கூவுதே !
தியாகியின் பிள்ளையே திருடரின் தலைவானாய்ப்
போகிறான் இன்றிந்தப் புண்ணியமாம் பூமியிலே !

பொய்களும் கரும்பணப் புழக்கமும் கொடுமைக்
கைகளாய் நீண்டதோர் கயமைமிகு நாடென
மாறியே போனதை மறைக்கவா சொல்வது?
காறியே உமிழாதோ கண்ணிய நல்மனங்கள்!

பத்திரிக்கை கூடத்தான் பகல்வேடம் போடுதய்யா !
இத்தனையும் மீறியிங்கே எவனோதான் துணிந்தெழுந்து
உண்மையை எழுதினாலோ உதைபடுவார் என்கிற
கண்ணியங் குறைந்தகீழ் கயமையாய்ப் போனதே !

பிஞ்சான மனங்களைப் பிரியமாய்க் கவர்ந்தே
நஞ்சினைப் பாய்ச்சும் கல்வியின் திட்டங்கள்!
நுனிப்புல்லை மேய்கின்ற நூலாளர் கூட்டத்தைப்
பணியிலே அமர்த்திய பாபத்தின் சுமைகளுக்கு
இக்கால இளைஞர்தான் எதிகாலம் தவித்திடுவார் !
தக்கதோர் கல்வியைத் தரும்சூழல் நிலைஇல்லை!
நிறைகளைக் காணாமல் நீசரின் செயல்களால்
குறையேதான் கண்டானிக் குருடனென எவறென்னைப்
பழித்தாலும் எனக்கொரு பாதகமும் இல்லையடா !
சுழித்தோடும் காலத்தின் சூக்குமத்தை கவிதையாய்ப்
படிக்கின்ற பேறுபெற்றேன்! பளிச்செனச் சொல்லவே
பிடித்தஎன் பேனாவோர் பேரமும் பேசாது!

தேசம் எனது தேசம் -அதில்
நாசம் விளைதல் நன்றோ? – யாரும்
கூசும் செய்கை கூடிப் போனால்
தேசம் என்ன தேசம்?”

அந்தக் கவியரங்கம் முடிந்து அனைவருக்கும் வயிறார உணவு பரிமாறப்பட்டது. அதன் பிறகு அங்கிருந்த அனைவரிடமும் நா.பா. மிகுந்த வாஞ்சையோடு பேசிகொண்டிருந்தார். அவனிடம்,” நீங்கள் எங்கே வேலை பார்க்கிறீர்கள்?” என்றார். “காட்பரீஸ் கம்பெனியில்” என்றான். உடனே அவர்,” உங்களுக்கு ஆதிலக்ஷ்மணனைத் தெரியுமா” என்றார். “தெரியும். அவர்தான் எனக்கு வேலை வாங்கித்தந்தார்” என்றான். ஆதிலக்ஷ்மணன் அந்தக் கம்பெனியில் உயர் அதிகாரியாகப் பணியில் இருந்தவர். நா.பா.வின் நெருங்கிய நண்பர். பம்பாய்த் தமிழ்ச் சங்கத்திற்கும் தலைவராக இருந்து, தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர்களையும், கவிஞர்களையும், நாடகக் கலைஞர்களையும், பேச்சாளர்களையும் தமிழ்ச் சங்கத்திற்கு அழைத்துப் பெருமைப் படுத்தியவர். அவரைப் பற்றி அவன் தனியாகவே இங்கே ஒரு அத்தியாயத்தில் பதிவு செய்ய இருக்கிறான்.

09.07.2015 அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

 படம்  உதவி   “, கிச்சாப்பூ” . நன்றி.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “அவன், அது , ஆத்மா (20)

  1. நல்ல ஓட்டம். அற்புதமான தேசீய நீரோட்டம் கலந்த ஒரு கவிதை. படிக்க இனித்தது, யோகியார்

  2. அடுத்த வாரம் எப்பொழுது வரும் என்று ஏங்கி நிற்கிறேன். 
    இலக்கியப் பணி இனிதே தொடரட்டும்-
    காட்பரீஸ் சாக்லேட் இனிமை ”அவன், அது, ஆத்மா” 

Leave a Reply

Your email address will not be published.