நீ என்னென்ன சொன்னாலும் கவிதை …
— கவிஞர் காவிரிமைந்தன்.
நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
பாடல் தோன்றிய கதை:
ஆற்காடு முதலி தெரு, தி.நகரில் மக்கள் திலகம் இல்லத்திலிருந்து புறப்படுகையில் புலவர் புலமைப்பித்தன் வந்து சேர்கிறார். தமிழைத் தன் உயிராய் நேசித்த தலைவன் அல்லவா? உடுமலை நாராயண கவி, தஞ்சை ராமையாதாஸ், மருதகாசி, கண்ணதாசன், பட்டுக்கோட்டை, வாலி, புலமைப்பித்தன், முத்துலிங்கம், , நா.காமராசன் என கவிஞர் பெருமக்களைக் கவர்ந்திழுந்த கதாநாயகன் அல்லவா? புலவரைக் கண்டதும் புளகாங்கிதம் அடைகிறார்! நல விசாரிப்புகள் தொடர்கின்றன.
அடுத்து புலவரை நோக்கி, நான் மதிய உணவிற்கு இங்குதான் வருகிறேன். நீங்கள் இங்கு தங்கியிருந்து ஒரு இனிய பல்லவியை எழுதி வையுங்கள்! அந்தப் பல்லவி என்னை அசத்தும் அளவிற்கு இருக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துப் புறப்படுகிறார்.
புலவர் கையில் ஏடெடுத்து, எழுதும் கோலெடுத்து, கற்பனை வானில் உலா வருகிறார். பொன்மனச்செம்மலின் புகழ்மணம் பற்றி புதிதாய் என்ன சொல்ல? அவரின் புற அழகை வர்ணிக்கவா? அக அழகை எண்ணிப்பூரிக்கவா? என்ன எழுதலாம் என்று எண்ணத்தேரோட்டம் நடத்துகிறார். தமிழன்னையின் இனிய முகவரி அது! என்னென்ன சொன்னாலும் கவிதைதானே!! கிடைத்துவிட்டது பல்லவி!!
நீ என்னென்ன சொன்னாலும் …
நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை
நீ என்னென்ன செய்தாலும் புதுமை
உன்னை எங்கெங்கு தொட்டாலும் இளமை … இனிமை… இளமை…
புரட்சித்தலைவர் மதிய உணவிற்கு இல்லம் திரும்புகிறார். வாசலிலே நின்று வரவேற்ற புலவரை, எங்கே பல்லவி என்று கேட்க, ஏடெடுத்து தான் எழுதி வைத்ததைக் காட்ட, உச்சிமுகந்து மெச்சிப்புகழ்ந்த பல்லவியாய் அது ஆனது!
நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை
நீ என்னென்ன செய்தாலும் புதுமை
உன்னை எங்கெங்கு தொட்டாலும் இளமை
பல்லவியைத் தொடர்ந்து சரணங்களை மதிய உணவிற்குப் பின் எழுதிவிடுங்கள் என்று எம்.ஜி.ஆர் கூற, புலவரோ, தலைவா எந்த ஒரு புலவனும் பசித்திருக்கும்போது சிந்தனைப் பிரவாகமெடுக்கும்! நீங்கள் குளித்துவிட்டு உணவு மேசைக்கு வரும் முன்னர் எழுதிவிடுகிறேன் என்றார்!
அவ்வண்ணமே பாடல் முழுமை அடைகிறது!
நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை
நீ என்னென்ன செய்தாலும் புதுமை
உன்னை எங்கெங்கு தொட்டாலும் இளமை ( நீ )
சின்னஞ் சிறுமலர் பனியினில் நனைந்து
என்னைக் கொஞ்சம் வந்து தழுவிட நினைந்து
முல்லைக் கொடியென கரங்களில் வளைந்து
முத்துச் சரமென குறுநகை புரிந்து ( நீ )
பொன்னில் அழகிய மனதினை வரைந்து
பொங்கும் தமிழினி ல்கவிதைகள் புனைந்து
பன்னீர் புதுமலர் இதழ்களில் நனைந்து
கங்கை நதியென உறவினில் கலந்து
உறவினில் கலந்து… ( நீ )
வெள்ளிப் பனிமலை அருவியில் விழுந்து
வெற்றித் திருமகன் மடியினில் கிடந்து
உள்ள சுகத்தினை முழுவதும் அளந்து
இந்த உலகினை ஒருகணம் மறந்து
ஒருகணம் மறந்து… ( நீ )
சுகமான தமிழல்லவா? சுந்தர மொழியல்லவா? தன் நெஞ்சில் நிறைந்து அன்பில் ஆளும் தலைவனுக்காக இசையமைப்பாளர் அருகில் இல்லாமல், தயாரிப்பாளர் அருகில் இல்லாமல், இயக்குனர் கூட அருகில் இல்லாமல் எந்த நெருக்கடியும் இல்லாமல் தமிழே அருவியாய் பொழிந்த மழை! இது “நேற்று இன்று நாளைக்காக!!” ஆம்… மூன்று காலத்திற்கும் பொருந்தும் கவிதையை, காதல் கீதத்தை மெல்லிசை மன்னரின் கூட்டணியில் பாடும் குயில்களாக டி.எம்.செளந்திரராஜன் பி.சுசீலா பாட இதோ …
காணொளி: https://youtu.be/AKVgl3X95ow