Month: August 2015

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy
    ”நாக்கால் நவநீதன், மூக்கால் மணிவண்ணன்,
    கேட்கும் இருசெவியில் கோவிந்தன் -நோக்கும்
    விழியால் வரதன், விரலால் அரியென்(று)
    ஒழிந்தபோ(து) எல்லாம் ஒழுகு”….கிரேசி மோகன்….

    Share
  • அவன்,அது,ஆத்மா (26)

    ஒரு எளிய மனிதனின் சுயசரிதை

    மீ.விசுவநாதன்

    அத்யாயம்: 26

    “செங்கோட்டைச் சித்தப்பா”

    amv

    முன்பெல்லாம் விடுமுறை நாட்களில் மாமா, அத்தை, சித்தப்பா என்று உறவினர் வீடுகளுக்குச் செல்வது குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான ஒன்று. வீட்டுப் பெரியவர்கள் அவர்களை ஆசையோடு வரவேற்று அணைத்துக் கொஞ்சி மகிழ்வார்கள். குழந்தைகள் செய்யும் விஷமத்தனத்தையும், விளையாட்டுக்களையும் செல்லக் கண்டிப்போடு ரசித்துக் களிப்பார்கள். எளிய வாழ்க்கையையும், கூட்டுக் குடும்பத்தின் சிறப்பையும் அந்தக் குழந்தைகள் அறிவதற்கு அந்த முறை மிகவும் பயனாக இருந்தது. இப்பொழுது மெல்ல மெல்ல அப்பழக்கம் மறைந்து வருவது வருத்தமாகத்தான் இருக்கிறது.

    அவன் சிறுவயதில் பள்ளிக் கால விடுமுறை நாட்களில் அவனுக்கு மாமா, அத்தை, சித்தப்பா வீடுகளுக்கு அவனுக்கு அக்காவுடன் சென்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்து விட்டு வருவான். அப்படி அவன் அடிக்கடிச் செல்லுமிடம் “செங்கோட்டை”ச் சித்தப்பா என்று அவனால் அன்போடு அழைக்கப்பட்ட அவனுக்கு அப்பாவின் ஒன்று விட்ட சகோதரர் இரா. அனந்தனாராயணனின் இல்லம். அவர் கடையம், தச்சநல்லூர், செங்கோட்டை, குற்றாலம் போன்ற ஊர்களில் “போஸ்ட் மாஸ்டராக” வேலை பார்த்து வந்தவர். மிகவும் நாணயமான மனிதர். உபகாரி. ஒல்லியான, உயரமான தேகம். கொஞ்சம் கரகரத்த குரலில் பேசுவார். அவனது குடும்பத்தில் அந்தக் காலத்தில் கல்லூரிக்குச் சென்று படித்து பி.எஸ்.சி. பட்டம் வாங்கிய முதலாளவர். கடையத்தில் இருந்த பொழுது அவனுக்குச் சித்தப்பா அனந்தனாராயணனும், மீனாக்ஷிச் சித்தியும் அவனை அழைத்துக் கொண்டு சென்று நான்கைந்து நாட்கள் தங்களுடன் வைத்துக் கொண்டிருந்தனர். தெருவுக்குப் பின்னல் ஓடும் வாய்க்காலில் அவனை நீந்தச் சொல்லி ரசிப்பார் சித்தப்பா. கடையத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு ஒவ்வொரு நாளும் அழைத்துச் சென்று ஒவ்வொரு சந்நிதியாக நின்று அவனுக்கு சுலோகங்கள் சொல்லித்தருவார். அவன் ஒரு இடத்தில் நிற்க மாட்டான். கோவிலுக்குள் அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டே இருப்பான். அவர் அவனை அன்போடு கையைப் பிடித்து அழைத்து வருவார். ஒருநாளும் கடிந்து பேசியது கிடையாது. அவரோடு அவனும் பூஜைக்குப் பூக்கள் பறித்துத் தருவான். சித்தப்பாவின் வீட்டில் அவரது தகப்பனாரும், அவனுக்குச் சின்னத்தாத்தாவுமான ராமலிங்க ஐயரும், பார்வதிப் பாட்டியும் இருந்தனர். அவனது விஷமத்தனம் தாங்காமல்,” கண்ணா நீ ரொம்பப் பொசுக்கி எடுத்துப் பொட்டில வாரறாய்..வா..வா. ஊருக்குப்போய் ஒன்னோட அம்மாட்டச் சொல்லறேன்” என்று பார்வதிப்பாட்டி அவனிடம் சொல்லுவாள். ஒவ்வொரு நாளும் மதிய வேளையில் பஜ்ஜி, முறுக்கு, தட்டை என்று ஏதேனும் பக்ஷணம் தின்பதற்குத் தருவாள்.

    சித்தப்பாவுக்கு , அவனுக்கு அப்பாவின் மீது மிகுந்த மரியாதையும், அன்பும் உண்டு. அவர், அவனுக்கு அப்பாவின் ஒன்று விட்ட சகோதரர் என்று யாருமே சொல்ல முடியாது. “சுந்தரம் அண்ணா, சுந்தரம் அண்ணா” என்று அப்படிப் பாசத்தோடு பழகுவார். தனக்கு அண்ணா சொன்னதை மறுவார்த்தை பேசாமல் கேட்கும் குணம் அவருக்கு இருந்தது. அதையெல்லாம் பார்த்து வளர்ந்த அவனும், அவனுக்கு அக்கா “பாலாவும்” அப்பாவைப் போலவே அவர்களது சித்தப்பவிடமும் பாசத்தோடு இருந்து வருகின்றனர். “கோந்தே” என்றுதான் அவனையும், அவனது அக்காவையும் செங்கோட்டைச் சித்தப்பாவும், மீனாக்ஷிச் சித்தியும் அழைப்பார்கள். உங்களுக்கு எத்தனை வயசானாலும் எங்களுக்கு குழந்தைதானே என்று சொல்வார்கள்.

    “சிறுசேமிப்பும் சித்தப்பாவும்”

    சித்தப்பா தச்சநல்லூரில் “போஸ்ட்மாஸ்டராக” வேலை பார்த்து வந்த சமயம் அவனும், அவனுக்கு ஒன்று விட்ட அத்தையின் (சகுந்தலா அத்தை) மகன் ஸ்ரீதரும் விடுமுறைக்குச் சென்றிருந்தனர். போஸ்ட்ஆபீஸ்சும், அவரது வீடும் ஒரே இடத்தில் இருந்தது. வீட்டின் முன்புறம் அலுவலகமும், பின்புறம் வீடும் இருந்தது. அப்பொழுதெல்லாம் மாலை ஏழுமணிக்கு மேல் “தந்தி” வந்தால் அதை அந்த சரியான நபரிடம் கொண்டு சேர்க்கும் வேலையை அவனுக்கும், அவனது அத்தை மகன் ஸ்ரீதருக்கும் தருவார். ஸ்ரீதர் அவருக்கு மருமகன். சரியாக விலாசம் சொல்லி அவர்களை அனுப்பி வைத்து, அவர்கள் அந்த வேலையைச் செய்து முடித்து விட்டு வரும்பொழுது “இருவருக்கும் ஐம்பது” காசுகள் தருவார். எப்படி? இரண்டு இருபத்தைந்து பைசாக்களுக்கான “ஸ்டாம்ப்” தந்து அவனது பெயரிலும், ஸ்ரீதர் பெயரிலும் “சிறுசேமிப்புக் கணக்கை”த் துவக்கி வைத்தார். ஒவ்வொரு முறையும் அவர்தரும் காசுகள் இருபத்தைந்து பைசா “ஸ்டாம்ப்”பாக அவனது சிறுசேமிப்புக் கணக்குப் புத்தகத்தில் ஒட்டப்பட்டு தபால் அலுவலக முத்திரையும் பதிக்கப்பட்டுவிடும். “என்னடா..சித்தப்பா இப்படி ஸ்டாம்பா ஒட்டித் தராரே..அவர் தரும் காசுக்குக் கடலை மிட்டாய் வாங்க முடியவில்லையே” என்று முதலில் அவனுக்கு அது வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால் ஒரு இரண்டாண்டுகள் சென்ற பின்பு அவனது சிறுசேமிப்புக் கணக்கில் இருந்து சுமார் முன்னூறு ரூபாய்கள் வந்தது. அதில் அவனது பத்தாவது வகுப்பிற்குத் தேவையான புத்தகங்களையும், அருமையான பேனாவும், அழகான சீருடைகளும், சந்தன நிறத்தில் “சான்டக்” செருப்பும் வாங்கித் தந்து,”இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாச் சேத்துண்டுவா.. அது பின்னால ஒனக்கு ரொம்ப உபயோகமாருக்கும்” என்று அவனுக்கு அம்மா அவனிடம் சொன்னாள். திருமணமானபின் அவனும், அவனுக்கு மனைவியும் சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தில் சென்னையில் ஒரு வீடு வாங்கினார்கள். அந்த சேமிக்கும் பழக்கத்தை சிறுவயதிலேயே மனதில் விதைத்த “செங்கோட்டைச் சித்தப்பாவை” அவன் எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருக்கிறான்.

    “திருக்குற்றால மலையில்”

    amv1
    திருக்குற்றால மலை பார்க்கப் பார்க்க மீண்டும் பார்க்கத் தூண்டும் அழகிய மலை. அந்த மலைக்கு இறைவன் பாலபிஷேகம் செய்வதுபோல அருவி விழும் அழகைக் கண்டு எழுத எந்தக் கவிஞனாலும் முடியாது. ஒன்பதாவது வகுப்பில் அவனுக்கு திரிகூடராசப்பக் கவிராயர் எழுதிய “திருக்குற்றாலக் குறவஞ்சி”யில் உள்ள சில பாடல்கள் பாடமாக இருந்தது. அதில் “வானரங்கள் கனிகொடுத்து மந்தியோடு கொஞ்சும், மந்தி சிந்தும் கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்” என்ற வரிகளை மிகுந்த இலக்கிய ரசத்தோடு அவனுக்கு தமிழாசிரியராக இருந்த கே.ஏ. நீலகண்டையர் விளக்குவார். அவன் அப்பொழுது மானசீகமாகவே குற்றால மலைகளில் அந்த வானரங்களோடு திரிவது போலவும், மலைகளில் பழங்களைப் பறித்து ருசித்து உண்பது போலவும், அருவிகளில் நீராடிக் களிப்பதுபோலவும் கற்பனை செய்து கொள்வான். அப்படி அந்தக் கவிதையை அவனது ஆசிரியர் விளக்கிக் கூறுவார். அதிலிருந்து அவனுக்கு அந்த மலைமீது ஏறிப் பார்க்கவேண்டும் என்ற கனவு உள்ளுக்குள் இருந்து கொண்டே இருந்தது. அப்படி ஒரு சந்தர்ப்பம் அவனுக்குக் கிடைத்தது. செங்கோட்டைச் சித்தப்பாவுக்குக் குற்றாலம் போஸ்ட் மாஸ்டராக மாற்றல் ஆனது. அங்கே போஸ்ட் ஆபீஸ்சும் வீடும் ஒரே இடமாகத்தான் இருந்தது. நல்ல பெரிய வீடு. அதுவும் குற்றாலம் பெரிய அருவிக்கு மிக அருகிலேயேதான் இருந்தது. அந்த வருட விடுமுறைக்கு அவனும், அவனுக்கு அத்தை மகன் ஸ்ரீதரும் குற்றாலத்திற்குச் சென்றார்கள். அவனும், ஸ்ரீதரும் தினமும் காலையில் எழுந்தவுடன் காலைக்கடன்களை முடித்து, காப்பி குடித்து விட்டு போஸ்ட் ஆபீஸ் வாசலில் வந்து நின்று அந்த பெரிய அருவியின் அழகைப் பார்த்து ரசிப்பார்கள். பின்பு அங்கிருந்து மெதுவாக நடந்து குற்றாலநாதர் கோவிலுக்குச் சென்று வெளி மதில்களில் அமர்திருக்கும் குரங்குகளின் விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அந்தக் கோவிலின் உள்ளும், வெளியிலும் நிறையக் குரங்குகள் இருக்கும். அப்படியே காலை எட்டு மணிக்கு வீட்டிற்கு வந்து குளித்து விட்டு, இட்டிலி சாப்பிட்டவுடன், “இங்க பார்க் வரை போயிட்டு வரோம்” என்று சொல்லி,

    வீட்டின் பின்புற மலைவழியாக மேலே ஏறிச் சென்று அந்தக் காட்டுப் பகுதிகளைச் சுற்றிப் பார்த்து வருவார்கள். அவனை விட ஸ்ரீதர் மூன்று வயது இளையவன். ஸ்ரீதருக்கு முதலில் அப்படிக் காட்டுப் பகுதிகளில் தனியாகச் செல்ல பயமாகத்தான் இருந்தது. “கண்ணா..திரும்பப் போயுடலாம் வா..” என்று ஸ்ரீதர் சொல்லும் போது,”ஒண்ணும் பயப்படாதே…தைரியமா வா…” என்று அவன் ஸ்ரீதரின் கையைப் பிடித்துக் கொண்டு மலையில் நடப்பான். எங்கு பார்த்தாலும் நெடிய மரங்களும், பெயர் தெரியாத பூக்களும், முகம் தெரியாத அற்புதமான வாசனையும், பஞ்சு பஞ்சாக கருப்பும், வெளுப்புமாக மேகங்களும் அவனைத் தொட்டுக் கெஞ்சும். “அடப் பட்டுக் குஞ்சலங்களா” என்று அவன் மனது அந்த இயற்கை வனப்பை ஆச்சரியமாகப் பார்த்துப் பார்த்துக் கொஞ்சும். அப்படி ஒரு நாள் காலையில் அந்த மலையில் அவன் ஸ்ரீதரையும் அழைத்துக் கொண்டு “செண்பகாதேவி” அருவிவரை சென்று விட்டான். அது ஒரு அற்புதமான இடம். அந்த அருவியில் குளிக்க ஆனந்தமாக இருக்கும். ஆனால் அன்று அவர்கள் அதில் குளிக்கவில்லை. அதை ரசித்துக் கொண்டே இருந்ததில் பொழுது போனது அவர்களுக்குத் தெரிய வில்லை. வீட்டில் தேடுவார்கள் என்று பயந்து ஓடியேதான் அந்த மலையில் திரும்பி வந்தார்கள். வீட்டிற்க்குள் நுழையும் பொழுது மதியம் மணி ஒன்று. அவர்களைக் காணாமல் தேடி இருக்கிறார்கள். கண்டதும் அன்போடு கடிந்து கொண்டு, அவர்கள் செண்பகாதேவி அருவிக்குச் சென்று வந்ததை அறிந்து பதறிப் போனார்கள். “இந்த ரெண்டும் மகாப்பொல்லாதா இருக்கு…ஒன்னு கெடக்க ஒன்னானா நாங்க என்னடா பதில் சொல்லுவோம்” என்று சித்திம்மா (பார்வதிப் பாட்டி) சத்தம் போட்டாள். “நீ சும்மா வாய மூடிண்டிருடி..கொழந்தைகள் இப்படித்தான் தைர்யமா இருக்கணும்” என்று சின்னத்தாத்தா அவர்களைக் கட்டிக் கொண்டார். பாட்டி, தாத்தாவின் செல்லச் சண்டைக்கு நடுவில் அவர்களுக்கு மீனாக்ஷி சித்தி சாதம் போட்டாள். நல்ல பசி. ருசித்துச் சாப்பிட்டான். “கோந்தே..இனிமே இப்படி சொல்லிக்காம தனியா போக்கூடாது…அந்தக் காட்டுல பாம்பு, மிருகங்கள் இருக்கும்…அதனாலதான் சொல்லறேன்…இன்னிக்கு சாயங்காலமா சித்தப்பாவோட கோவிலுக்குப் போயிட்டு வாங்கோ…” என்று அன்போடு சித்தி சொன்னாள். இப்படி அவனும், ஸ்ரீதரும் பல நாட்கள் அந்தக் குற்றால மலையிலும், அருவிக்கரையிலும் கவலை இன்றித் திரிந்தனர் என்றால் அதற்கு அந்த செங்கோட்டைச் சித்தப்பா, சித்தியின் அன்புதான் காரணம். அவர்களுக்குக் குழந்தை இல்லை. அதனால் சித்தப்பாவின் சகோதரி சகுந்தாலா அத்தையின் இளைய மகன் “ஹரிஹரனை” தத்தெடுத்துக் கொண்டார். அந்த வழியில் பேரனும் பேத்தியும் பெற்று மகிழ்ச்சியாக எண்பது வயதுவரை வாழ்ந்தனர் அந்தச் செங்கோட்டைச் சித்தப்பாவும் சித்தியும். அவர்கள் ஆரோக்கியமாக இருந்தவரை அவனது குடும்பத்தில் நடந்த அத்தனை நிகழ்ச்சிகளுக்கும் அவர்கள் மிகுந்த உள்ளன்போடு கலந்து கொண்டது அவர்களது நல்ல பண்பைக் காட்டியது. அப்படித்தானே நல்ல உறவுகள் நமக்குப் பாடம் சொல்லி நம்மை வழி நடத்துகிறது. அவனும் அந்த உறவின் வலிமையை அறிந்து கொண்டு நடப்பதால் அவனது அடுத்த தலைமுறைக்கும் அத்தெய்வ குணங்களே வழித் துணையாக இருக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் உண்டோ?.

    20.08.2015
    அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

    Share
  • வளவன் கனவு-12

    சு.கோதண்டராமன்

    திருஷ்டி பட்டது

     vallavan-kanavu1111111

    உடம்புபோர் சீவரர் ஊண்தொழிற் சமணர்கள்
      விடம்படும் உரையவை மெய்யல விரிபுனல்
    வடம்படு மலர்கொடு வணங்குமின் வைகலுந்
          தடம்புனல் சூழ்தரு சக்கரப் பள்ளியே.

    -சம்பந்தர்

    ஹரதத்தருக்கு உறவினர்கள் எவரும் இல்லை. திருமணத்துக்கு அக்கம்பக்கத்தில் ஐந்தாறு கிராமங்களில் இருந்த வடமர்களை அழைத்திருந்தார். அவர்கள் வந்து நடத்திக் கொடுத்து வாழ்த்திச் சென்றனர்.

    முருகையனுக்கோ ஜனக்கட்டு மிகுதி. உள்ளூரிலும் அக்கம் பக்கத்துக் கிராமங்களிலும் அவருக்கு உறவினர்கள் நிறைய இருந்தனர். திருமணத்துக்குப் பின் அவர்கள் ஒவ்வொருவராக புது தம்பதிகளைத் தத்தம் வீட்டிற்கு அழைத்து விருந்தளித்து உபசரித்தனர்.

    திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆயிற்று. இன்னும் விருந்து ஓய்ந்தபாடில்லை. மல்லிகையின் தாய் மாமன் இடும்பன் இரு நாழிகைத் தொலைவில் உள்ள தீபங்குடி* என்னும் கிராமத்தில் ஊர்த்தலைவராக இருந்தார். அவர் விருந்துக்குக் கூப்பிட்டிருந்தார். முருகையன் ஒரு வண்டி கட்டி இருவரையும் அனுப்பினார்.  விருந்து முடிந்தது. ‘போய்ட்டு வரோம், மாமா’ என்று சொல்லிக் கொண்டு மல்லிகை வண்டியில் ஏறினாள். பின்னால் வாயில் வெற்றிலையை மென்றுகொண்டு பசுபதியும் ஏறினான். வண்டி புறப்பட்டது.

    பசுபதி பேசாமல் கண்ணை மூடிக் கொண்டு வந்தான். உண்ட மயக்கம் தூங்குகிறார் போலும் என்று மல்லிகை எண்ணினாள். வீடு சமீபித்தபோது அவனைத் தட்டி எழுப்ப வேண்டியிருந்தது. அரை மயக்கமாக இருந்தான். இறங்கியவுடன் வாந்தி எடுத்தான். தள்ளாடிக் கொண்டே வந்த அவனைப் படுக்க வைத்தார்கள்.

    சாப்பிட்டதும் சாப்பிடாததுமாக வண்டியில் குலுங்கிக் குலுங்கி வந்ததுதான் வாந்திக்குக் காரணமாக இருக்கும் என்று நினைத்த அவனுடைய அம்மா ‘சுக்கு வெந்நீர் போட்டுத் தருகிறேன், சாப்பிட்டால் சரியாகிவிடும்’ என்று சொல்லிக் கொண்டு உள்ளே போனாள்.

    மாமியார் போட்டு எடுத்து வந்த வெந்நீரை மல்லிகா அவன் வாயில் விட்டாள். அது வழிந்து விட்டது. இது சாதாரண அஜீரணம் இல்லை என்று எல்லோருக்கும் பட்டது. முருகையனும் அங்கே இருந்தார். வைத்தியரை அழைத்து வரச் சொல்லி ஆள் அனுப்பினார். வைத்தியர் வந்து பார்த்தார். ‘நாடி விழுந்து விட்டது. உடம்பெல்லாம் நீலம் பாரித்து இருக்கிறது. ஏதோ விஷகடி’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். எல்லோருக்கும் இடி விழுந்தாற்போல் இருந்தது.

    சற்று நேரத்தில் ஊர் மக்கள் எல்லோரும் அங்கே கூடினர். ஊரே சோகத்தில் மூழ்கியது. ‘ஐயோ, எவ்வளவு நல்ல பிள்ளை, எவ்வளவு நல்ல பெண், இவர்களுக்கா இப்படி ஆகவேண்டும்’ என்று பரிதாபப்பட்டனர். ‘நேற்று தாழம்பூ பறித்து வந்து மனைவிக்குக் கொடுத்தான். அதில் இருந்த பூநாகம் ஏதாவது தீண்டி இருக்குமோ?’ என்றார்கள் சிலர். ‘வண்டியிலே விரிப்பின் கீழே போட்டிருந்த வைக்கோலுக்குள் தேள், நண்டுவாக்காளி எதாவது இருந்து கொட்டியிருக்கும்’ என்றார்கள் சிலர். பசுபதியின் நண்பர் பட்டாளம் வந்து கதறியது. உறவினர்களுக்கெல்லாம் சொல்லி அனுப்பப்பட்டது. ஹரதத்தர் திருமணத்திற்கு வந்திருந்த வடமர்களுக்குச் செய்தி அனுப்பினார்.

    சுடுகாட்டில் ஏகப்பட்ட கூட்டம். பிரேதத்தைச் சிதையில் அடுக்கினார்கள். வடமப் பிராமணர் ஒருவர் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தார். நடைப்பிணமாகத் தென்பட்ட ஹரதத்தர் கண்களில் நீர் வழிய அவர் சொல்லியபடி சடங்குகளைச் செய்து கொண்டிருந்தார். அருகில் முருகையன் வாயில் துணியைப் புதைத்துக் கொண்டு நின்றுகொண்டிருந்தார்.

    இந்த அகால மரணம் அனைவரையும் உலுக்கி எடுத்துவிட்டது. வாழ்க்கையின் நிலையாமையை மனிதன் பிரத்தியட்சமாக உணரும் தருணம் அது. ‘பதினெட்டு வயது என்பது சாகக்கூடிய வயதா, எந்த நிமிஷம் யாருக்கு என்ன ஆகும் என்பது தெரியவில்லை. இன்று இவர், நாளை யாரோ’ என்று ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார். அவரை எதிரொலிப்பது போல, ஆனால் தணிந்த குரலில் இடும்பன் தன் பக்கத்தில் நின்றிருந்தவரிடம், ‘இன்று இவர், நாளை அவர்’ என்று சொல்லிக் கண்களால் சைகை காட்டினார். அவர் பேசியதையும் அவர் கண் காட்டிய திசையில் இரு வடமர்கள் நின்றுகொண்டிருந்ததையும் பசுபதியின் நண்பன் ஒருவன் கவனித்துவிட்டான். இடும்பன் முகத்திலும் அவரது நண்பர் முகத்திலும் ஒரு விஷமத்தனமான புன்னகை தோன்றி மறைந்ததும் அவன் பார்வையிலிருந்து தப்பவில்லை. உடனே முருகையனிடம் சென்று தான் கவனித்ததைக் கூறினான்.

    முருகையன் சீறிக்கொண்டு வந்தார். “மகாபாவி, என் மருமகனை நீயாடா கொன்றாய்?” என்று கேட்டுக் கொண்டே அவர் முகத்தில் மாறி மாறிக் கைகளால் ஆக்ரோஷமாகக் குத்தினார். எதிர்பாராத தாக்குதலால் நிலை குலைந்த இடும்பன் கீழே விழுந்தார். சிலர் அவரையும் முருகையனையும் பிரித்தனர். விஷயம் பரவியது.

    “உண்மையாக இருந்தாலும் இருக்கும், வடமர்களை எல்லாம் நாட்டை விட்டுத் துரத்தணும்னு இவர் எப்பவும் சொல்லிக்கிட்டு இருப்பாரு.”

    “அதுக்காக இப்படியா, சொந்தத் தங்கச்சி மருமகனையா விஷம் வெச்சுக் கொல்வாங்க?”

    “இந்தப் பொண்ணை இடும்பன் தன் மகனுக்குக் கட்டி வெக்கணும்னு நினைச்சிருப்பார் போல. அது நடக்கல்லைன்னதும் இப்படிப் பழி வாங்கிட்டாரு.”

    “ஒரு வருசமா ஒரு சமணத்துறவியும் வேறு சில ஆளுங்களும் இவரை வந்து அடிக்கடி பார்த்துப் பேசிக்கிட்டு இருக்காங்க. அதிலிருந்து இவர் இந்தப் பிராமணர்களை எல்லாம் நாட்டை விட்டுத் துரத்தணும்னு சொல்லிக்கிட்டு இருப்பாரு.”

    ஊர் மக்கள் பலவாறாகப் பேசிக் கொண்டார்கள். கூட்டத்தில் இருந்த ஊர்த்தலைவருக்கு விஷயம் எட்டியது. சிதை எரியத் தொடங்கியதும் எல்லோரும்  திரும்ப எத்தனித்தபோது ஊர்த்தலைவர், “யாரும் இந்த இடத்தை விட்டுப் போகக் கூடாது. யார் யாருக்கு என்ன தெரியுமோ அதை எல்லாம் பஞ்சாயத்தார் முன்னிலையில் தெரிவித்துச் சத்தியப் பிரமாணம் செய்து விட்டுத்தான் போகவேண்டும்” என்று அறிவித்தார். ஓலைகளும் எழுத்தாணிகளும் தருவிக்கப்பட்டன.

    அங்கு வந்த மக்களை ஒவ்வொருவராக விசாரித்தார். அவரவர் தனக்குத் தெரிந்ததைச் சொன்னார்கள். அவை ஏட்டில் எழுதப்பட்டு கையொப்பம் பெறப்பட்டன. இடும்பன் அடிக்கடி சமணத் துறவியுடன் சுற்றியதைப் பலரும் கவனித்திருந்தார்கள். சமணத் துறவிக்கும் உங்களுக்கும் நெருக்கத்திற்குக் காரணம் என்ன என்பதற்கு இடும்பனால் சரியான விடை அளிக்க முடியவில்லை. பல கோணங்களில் அவரை நெருக்கிய பிறகு, தான் பசுபதிக்கு வெற்றிலையில் விஷம் தடவிக் கொடுத்ததை ஒப்புக் கொண்டார்.

    கடைசியில் ஊர்த்தலைவர் சொன்னார், “இவர்கள் சொல்வதை எல்லாம் பார்த்தால்  இது கொலை வழக்கு என்று தெரிகிறது. அதனாலும், குற்றம் சாட்டப்பட்டவரும் ஒரு ஊர்த்தலைவர் என்பதாலும் நாங்கள் இதில் விசாரித்துத் தீர்ப்பு வழங்க முடியாது. இதை அரசர்தான் விசாரிக்க வேண்டும், அவருக்குத் தகவல் அனுப்புகிறேன்” என்று அறிவித்தார்.

    ———————————————————– ————————————————————————

    * திருவாஞ்சியம் அருகில் உள்ள தீபங்குடி ஒரு சமணக் கேந்திரமாக இருந்திருக்கிறது. இன்றும் அங்கு ஒரு ஜினாலயம் உள்ளது.

    Share
  • உடையது!

    உடையது!

    உடையது உடையது
    பெண்ணுக்கு ஆர்வம் உடையது
    கட்டுக் கட்டாய்
    அடுக்கி ௮டுக்கி வைத்தும் தீராது
    உடையது மீதே கண் உடையது!

    தடையது இல்லை
    உடையது மீதே
    கடையது சென்றால் பார்வை
    உடையது உடையது வேண்டுமென உடையது!

    அள்ளி வாங்கி வந்த
    உடையது போதாமல் உடையது வேறு
    பெண் அணிந்த உடையது மீதே
    உடையது உடையது போல்
    தனக்கில்லையென்ற ஏக்கம்
    உடையது மீதே பெண்பார்வை உடையது!

    அளவுக்கு மீறியதாக ஆசை
    உடையது தனக்கு உடையது
    சிறப்பு உடையது இல்லை என்றே
    மற்றோர் உடையது நோக்கி
    நடனம் புரியும் ஆசை
    உடையது உடையது பெண்ணுக்கே
    உடையது மனதிலென்றும் உடையது!

    உடையது தீரா ஆவல்
    உடையது மீதில் இருப்பதை உடை யது
    உடையது வேளைக்கொருரக உடையே பெருமை
    உடையது என்றெண்ணத்தை உடை யது
    உடையது பெண்ணுக்குப் பெருமை உடை அது!

    … நாகினி

    Share
  • காலம் (19)

    மீ. விசுவநாதன்

    vallamai111-300x1501111111111
    ஓடைக் கரையோராம் ஓடுகின்ற பாம்புதனின்
    வாடை தெரிந்தால் வலைக்குள்ளே ஓடுகின்ற
    நண்டிடம் கற்றேன், “நமைத்தேடும் சூததனைக்
    கண்டிபாய் கண்டு கட”. (191) 09.07.2015

    பெண்களைப் பூசிக்கப் பிள்ளைமனம் வேண்டுமாம் !
    அண்மையில் அம்மாவாய் , அன்புடைய உண்மை
    மனைவியாய்த் தோழியாய் வந்த திருவை
    நினைவில் நிறுத்தல் நெறி. (192) 10.07.2015

    பிறந்தே(ன்) இருந்தேன் பிரியமாய் வாழ
    மறந்தே(ன்) இதற்காநான் வந்தேன் – சிறந்தே,
    உறவை மதித்தே உயர்குரு தாளை
    மறவா திருக்கவே தான்.. (193) 11.07.2015

    வாயாற வாழ்த்தவும் வந்தோர்கள் உள்ளத்து
    நோயாறப் பேசவும் நூலோரைப் போற்றவும்
    மேலான ஞானியர்கள் மெச்சவுமே வாழ்வோர்க்கு
    பூலோகம் இன்ப புரி. (194) 12.07.2015

    பொன்வண்டு பூவறியும் பூங்காற்று காடறியும்
    முன்கொண்ட நட்பை முகமறிந்து நன்றாய்ச்
    சிரித்தே ஒளிவீசும் ! தீராநோய் “நானைத்”
    தெரிந்தறிந்தோர் நாளெலாம் தேன். (195) 13.07.2015

    கட்டுகட்டாய்ப் புத்தகங்கள் காட்சிக்காய் வைத்தாலும்
    சொட்டாசை வந்தால்தான் புத்தகத்தைத் தொட்டெடுத்துப்
    பார்ப்பார்கள் ! தெய்வப் பழக்கமும் அப்படித்தான் !
    பார்பார்நீ உள்ளே பழகு. (196) 14.07.2015

    மெல்லிசை மன்னர் விசுவநாதன் சங்கீதம்
    நல்லிசையாய் என்றுமே நம்முள்ளே மெல்லியதாய்
    கேட்டிடுமே ! அந்தசுகம் கொட்டியவர் ஈசனருள்
    விட்டு விலகா விசு. (197) 15.07.2015

    வானவில் வண்ணம் மனதில் அழகினைத்
    தானாகத் தூண்டும் ; தவசிகள் ஞானவண்ணம்
    மூர்க்கத்தைப் போக்கி முழுஅறிவைத் தூண்டிவிடும் !
    சேர்க்கை நலமே சிறப்பு. (198) 16.07.2015

    கண்ணன் நிறமோ கருப்பென்றேன் ; தின்னுகிற
    வெண்ணை நிறமோ வெளுப்பென்றாள் – மண்ணுண்ட
    வாய்க்குள் சிவப்பென்றேன் ; மாறாத வண்ணனே
    தாய்க்குள்ளே பாலென்றா ளே ! (199) 17.07.2015

    இளமையும் மூப்பும் எதிர்மறைத் தோழர் !
    வளமையும் ஏழ்மையும் வாழ்வின் விளைவுகள்!
    வித்தையும் பண்பும் விலகிய பாதைகள் !
    சுத்தறிவே தூய துணை. (200) 18.07.2015

    Share
  • சினமென்னும் நச்சுமரம் …

    தேமொழி.

     

    நச்சு மரமொன்று

    –வில்லியம் ப்ளேக்

    சினம் கொண்டேன் ஆருயிர் நண்பனிடம்
    சீறினேன், கொட்டினேன் மனக்குமுறலை
    குறைந்ததே சினம், மறைந்ததே மாயமென!!!
    சினம் கொண்டேன் பிறவிப் பகைவனிடம்
    சீறவழியில்லை, குமைந்தேன் மனதிற்குள்
    குறையாத மனச்சுமையோ வளர்ந்தது வஞ்சமென !!!

    அச்சமெனும் நீரூற்றியே வளர்த்தேனதை நாளும்
    கண்ணீர்விட்டே வளர்த்தேன் இரவுபகலாய் நானும்
    குரூரப் புன்னகை எனும் கதிரொளிபெற்று
    குன்றாத வஞ்சகமே சூழ்ச்சியென துளிர்த்தது

    அருமையாக வளர்ந்தது இரவுபகலாக
    ஆப்பிளாகக் கனிந்தது அருஞ்சுவையாக
    பட்டது அது பகைவனின் கவனத்திலும்
    நட்டது நானென்று நன்கறிவான் அவனும்

    கள்ளமனதுடன் நுழைந்தான் தோட்டத்தில்
    காரிருளில் சிக்கிவிட்டான் என்பொறியில்
    புலர்ந்தபொழுதில் கண்டேனவனை, நச்சுக்கனி
    வீழ்த்திய மரமாய் வீழ்ந்திருந்தான் மரத்தின்கீழே

    லண்டனில் வாழ்ந்த ஆங்கிலக் கவிஞர் வில்லியம் பிளேக் (1757 – 1827) அவர்கள் எழுதிய “பாய்சன் ட்ரீ” என்ற கவிதை.
    மொழிபெயர்ப்பு: தேமொழி

    ◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

    William Blake1

    A Poison Tree

    –William Blake

    I was angry with my friend:
    I told my wrath, my wrath did end.
    I was angry with my foe:
    I told it not, my wrath did grow.

    And I watered it in fears,
    Night and morning with my tears;
    And I sunned it with smiles,
    And with soft deceitful wiles.

    And it grew both day and night,
    Till it bore an apple bright.
    And my foe beheld it shine.
    And he knew that it was mine,

    And into my garden stole
    When the night had veiled the pole;
    In the morning glad I see
    My foe outstretched beneath the tree.

    Share
  • அறிந்துகொள்வோம்!

    -மேகலா இராமமூர்த்தி

    உட்டோபியாவில் ஓர் உலா!

    உலகமக்கள் அனைவருக்கும் தற்போது பரவலாகப் பரிச்சயமாகிவிட்ட ’தத்துவம்’ எனும் துறையை மேற்குலகுக்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தியது கிரேக்கமே (Greece) ஆகும். இத்துறையைக் குறிப்பிட ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் Philosophy என்ற சொல்லானது Philo + Sophy என்ற இருசொற்களின் இணைப்பாகும். ’Philo’ என்பது காதலையும், ’Sophy’ என்பது அறிவையும் குறிக்கும் கிரேக்கச் சொற்கள். ஆதலால், ’அறிவின் மீது கொள்ளும் அளவற்ற காதலே’ (Love of Wisdom) தத்துவமாகும் என்பது தெற்றெனப் புலப்படுகின்றது.

    இவ்வாறு அறிவுத்தேட்டத்தோடு வாழ்க்கையை அணுகியவர் கிரேக்கத் தத்துவத்துறையின் பிதாமகராய் அறியப்படும் மாமேதை சாக்ரடீஸ். ஒரு சிற்பியின் மகனாய்ப் பிறந்து சிற்பியாகவே தன் வாழ்க்கையைத் தொடங்கிய அவர், அறிவுத்துறையின் தந்தையானது விந்தையே! வீதிகளில் திரிந்தவண்ணம் ஏதென்ஸ் நகர இளைஞர்களுக்கு அறிவுகொளுத்திய சான்றோர் அவர். ”உன்னையே நீ அறிவாய்” என்பது அவருடைய புகழ்பெற்ற வாசகமாய் இன்றளவும் பேசப்படுகின்றது. ”தன்னை அறிய தனக்கொரு கேடில்லை’ என்ற திருமந்திரமும் இதே கருத்தைத்தான் எடுத்தியம்புகின்றது. ”ஏன்? எதற்கு? என்று கேள்வி கேள்! எதையும் அப்படியே நம்பிவிடாதே!” என்றுகூறி மெய்ப்பொருள் காணும் அறிவுக்கு வித்திட்டவர் சாக்ரடீஸ். அவருடைய அறிவார்ந்த சிந்தனைகளால் அன்று ஈர்க்கப்பட்டனர் ஏதென்ஸ் நகரத்து இளைஞர்கள் பலர்.

    அத்தகையோரில் குறிப்பிடத்தக்க ஒருவர் ஏதென்ஸ் நகரின் Platoசெல்வச்செழிப்பான குடும்பமொன்றில் கி.மு. 427/428-இல் பிறந்து பொருட்செல்வத்தில் பற்றற்றவராய், சாக்ரடீஸின் அறிவுச்செல்வத்தின் மீது பற்றுவைத்து அவரைத் தன் குருவாக ஏற்றுக்கொண்ட பிளேட்டோ. தன் இருபதாவது வயதில் சாக்ரடீஸின் சீடராய் இணைந்தார் பிளேட்டோ என்று கூறப்படுகின்றது. ஆயினும் நீண்டகாலம் குருவும் சீடரும் இணைந்திருக்கவியலாதபடி விதி குறுக்கிட்டுவிட்டது.

    ஆம்! சாக்ரடீஸின் பகுத்தறிவுச் சிந்தனைகளையும் தத்துவ அறிவையும் புரிந்துகொள்ளாத கிரேக்கம், அவர் கடவுளுக்கு எதிரான சிந்தனைகளை விதைக்கிறார்; ஏதென்ஸ் நகர இளைஞர்களை ஒழுக்கக்கேடான பாதைக்கு இட்டுச்செல்கின்றார் என்றெல்லாம் அவர்மீது அபாண்டமாகப் பழிசுமத்திச் சிறையிலடைத்தது. அத்தோடு விட்டதா? ஹெம்லாக் (hemlock) எனும் கொடிய விஷத்தையும் அவரைப் பருகவைத்து அவர் உயிரைக் குடித்தது. அப்போது பிளேட்டோவின் வயது இருபத்தெட்டுதான்!

    குருவின் கொடூரமரணம் சீடரின் உள்ளத்தை வெகுவாய்ப் பாதித்தது. ”சாக்ரடீஸுக்கு மரணதண்டனை அளித்த ஆட்சி ஓர் இழிவான ஆட்சியே!” என்று துணிந்து குற்றஞ்சாட்டிய பிளேட்டோவுக்கும் அதிகாரவர்க்கத்தால் ஆபத்து நேர இருந்ததால் அவர் உடனடியாக ஏதென்ஸைவிட்டு வெளியேறினார். இத்தாலி, எகிப்து, சிசிலி போன்ற பல நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அம்மக்களின் வாழ்க்கைமுறைகளை ஊன்றிக் கவனித்தார்.

    பத்தாண்டுகளுக்கு மேலாகத் தன் வாழ்நாளை வெளிநாடுகளில் கழித்துவிட்டு ஏதன்ஸ் திரும்பிய பிளேட்டோ, அங்கே கி.மு. 380களின் தொடக்கத்தில் ’கலைக்கழகம்’ (Academy) ஒன்றை நிறுவிக் கல்விகற்பிக்கத் தொடங்கினார். கணிதம் முதல் உயிரியல் ஈறாக, தத்துவம் முதல் வானியல் ஈறாகப் பல்வேறு துறைகளும் அக்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்பட்டன. அவர் தொடங்கிய கலைக்கழகமே பின்னாளைய பல்கலைக்கழகங்களுக்கெல்லாம் முன்னோடியாகும் (Plato’s Academy was the ultimate ancestor of the modern university; the English term ‘Academic’ had been derived from that ’Academy’). இந்தக் கலைக்கழகத்தில் பயின்றவர்தான் பிளேட்டோவின் புகழ்பெற்ற மாணாக்கரும், கிரேக்கத்தின் சிறந்த தத்துவஞானியும், மாவீரன் அலெக்சாண்டரின் குருவுமான அரிஸ்டாட்டில். அவர் இக்கழகத்தில் கல்விபயிலச்சேர்ந்தபோது அவருடைய வயது பதினேழு; அப்போது பிளேட்டோவின் வயது அறுபதாகும்.

    தாம் தோற்றுவித்த கலைக்கழகத்தில் மாணாக்கர்களுக்குக் கல்வி பயிற்றுவித்த அதேகாலத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட அரசியல், அறவியல், தத்துவம் சார்ந்த புத்தகங்களையும் எழுதியிருக்கின்றார் பிளேட்டோ என்பது குறிப்பிடத்தக்கது. பிளேட்டோவின் நூல்களில் இன்றளவும் பேசப்படும் அவருடைய சாதனைநூல் (masterpiece) ’குடியரசு’ (The Republic) எனும் அரசியல் நூலேயாகும்.

    ’எண்ணமே செயலுக்கு அடிப்படை’ எனும் கொள்கையுடைய பிளேட்டோ, பலகாலம் ஓயாது சிந்தித்து ஓர் இலட்சியக் குடியரசு எவ்வாறிருக்கவேண்டும் எனும் தன் எண்ணத்தைத் தம்முடைய ’குடியரசு’ நூலில் பதிவு செய்திருக்கின்றார். ஏதென்ஸ் நகரத்து மக்களோடும், வெளிநாட்டினரோடும் தம் குருநாதர் சாக்ரடீஸ் நீதியின் பொருள்குறித்து உரையாடுகின்ற வகையில் இந்நூல் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இதில் பிளேட்டோ படைத்துக்காட்டிய கற்பனையான சொர்க்கபுரி (Utopia) நடைமுறைக்குச் சாத்தியப்படாத ஒன்று என அவருக்குப் பின்வந்தோர் (ஏன் அரிஸ்டாட்டிலே அக்கருத்துடையவர்தான்) முத்திரை குத்திச் சென்றாலும் பிளேட்டோ விவரிக்கும் அந்த அதிசயச் சமூகத்தில், அற்புதக் குடியரசில் நாமும் வாழமாட்டோமா என்று நம்மை ஏங்கவைக்கின்றது இந்நூலில் அவர் படைத்துக்காட்டியிருக்கும் சிறந்த குடியாட்சிமுறை!

    ’அறிவுடையோரே ஆளுதல் வேண்டும்’ எனும் சாக்ரடீஸின் கோட்பாட்டைத் தன் உள்ளத்தில் ஆழப்பதித்திருந்த பிளேட்டோ, அதனை மையமாக வைத்து, மூன்றுவகை மனிதர்களை உள்ளடக்கிய தம் கற்பனைக் குடியாட்சியை ஒரு பிரமிட் வடிவில் உருவாக்கியிருந்தார்.

    1. அதன் தலைமை நிலையில் இருப்பவர்கள் அறிவிற்சிறந்த  அரச ஞானிகள் (Philosopher-rulers).

    2. இரண்டாம் நிலையில் இருப்பவர்கள் போர்வீரர்கள்/காப்பாளர்கள் (Warriors/ Guardians).

    3. மூன்றாம் நிலையில் இருப்பவர்கள் தொழிலாளர்கள் (Workers).

    ஓர் நல்ல மனிதனின் பண்புகள் யாவை? ஓர் இலட்சியச் சமுதாயம் என்பது என்ன? ஆட்சியாளரின் பண்புகள் எவை எவை? உயர்ந்த சமுதாயத்தை உருவாக்குவதில் கல்வியின் பங்கு யாது? என்பன போன்ற பல வினாக்களுக்கு இந்நூலில் விடைகாண முயன்றிருக்கின்றார் ’மேற்குலகின் முதல் அரசியல் சிந்தனையாளர்’ என்று போற்றப்படும் பிளேட்டோ.

    செருப்பு அறுந்துபோனாலோ, வீட்டுக்கதவு பழுதானாலோ, அல்லது நோய் வந்தாலோ அதனைச் சரிசெய்வதற்கு ஏற்ற மனிதரைத் தேடிச்செல்லும் நாம், ஆட்சிப் பொறுப்பை மட்டும் எந்தத் தகுதியும் இல்லாதவரிடத்து ஒப்படைப்பது சரியானதா? என்று வினாயெழுப்பி, ஆட்சியாளர்களுக்கென்று சில தகுதிகளை வரையறை செய்திருக்கின்றார் அவர்.

    பத்து வயதுவரைச் சுதந்திரமாகவும், அதற்குப்பின் கட்டாயப்படுத்தலின்றி பத்து வருடகாலம் விருப்பத்தோடு கல்விபயின்றும், அதன்பின்பு தத்துவ அறிவுபெறச் சுற்றுப்பயணம் செய்து மக்களின் வாழ்வை நேரடியாக அறிந்துமென… இவ்வகையில் தன் வாழ்நாளின் ஐம்பதாண்டு காலத்தைச் செலவழித்து, படிப்பறிவும் பட்டறிவும், மெய்யியல் அறிவும் ஒருங்கே பெற்றவனாகவும், மக்களுக்காக உழைக்கும் தன்னலமற்ற குணம் உடையவனாகவும் எவன் இருக்கிறானோ அவனே நாட்டைத் தலைமையேற்று நடத்த வல்லவன் என்பது பிளேட்டோவின் தீர்மானம்.

    அரசாள்வோரோ அல்லது சமுதாயக் காப்பாளரோ யாருமே பிறப்பதில்லை; மாறாக அவர்கள் முறையான கல்வியாலேயே அவ்வாறு உருவாக்கப் படுகின்றார்கள்  என வலுவாக நம்பிய பிளேட்டோ, தன்னுடைய இலட்சிய அரசினை உருவாக்குவதற்கு ஏற்ற கல்வித்திட்டம் ஒன்றையும் வகுக்கத் தவறவில்லை. ’எல்லாரும் சமன்’ என்ற கருத்து, கல்வியையும் அறிவாற்றலையும் பொறுத்தவரையில் தவறானது என்ற நிலைப்பாடுடைய அவர், அவரவர் ஆற்றலுக்கேற்பக் கல்வி பெறப்படுவதனாலும், பணிகள் பங்கிடப்படுவதனாலுமே சமுதாய அமைப்புச் சீரடையும்; கல்வியானது அறிவுசார் கருத்துக்களை மனிதனுக்குள் திணிப்பதற்கு பதிலாக அக்கருத்துக்களின் உள்ளீடான நற்பண்புகளை அவனிடத்து விதைப்பதாய், வெளிப்படுத்துவதாய் இருக்கவேண்டும் என்றார்.

    மக்களுக்கு வழங்கப்படும் கல்வி அடிப்படைக்கல்வி, உயர் கல்வி என இரண்டாகப் பிரிக்கப்படும். இருபது வயதுவரை  அடிப்படைக்கல்வியும், இருபதிலிருந்து முப்பத்தைந்து வயதுவரை உயர்கல்வியும் அவர்களுக்கு அளிக்கப்படும். இத்தகைய கல்வித்திட்டமானது அறிஞர்களை ஆள்வோராக உருவாக்குவதையும், உடல்வலிமையில் வல்லோரைக் காப்பாளராக நியமிப்பதையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இத்தகைய கல்விநிலைகளை எட்டாத எவரும் ஆட்சியாளராக முடியாது எனக் கட்டுப்பாடு விதிக்கின்றது பிளேட்டோவின் குடியரசு.

    அடுத்து, பிளேட்டோ முன்வைக்கும் முக்கியக் கருத்து ஆண், பெண் இருபாலர்க்கும் சமமான கல்வி தரப்படவேண்டும் என்பது. தான் காண விழைந்த இலட்சியக் குடியரசில் ஆண்களுக்குச் சமமாகப் பெண்களும் பொதுப்பணியில் ஈடுபட வேண்டும் என்று பிளேட்டோ விரும்பினார். ஆணுக்கும் பெண்ணுக்கும் அறிவில், ஆற்றலில் வேறுபாடு உண்டு என்பதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை (he rejected the notion of the sexes having different capacities). ஆடவர்க்கு இணையான கல்வி பெண்களுக்கு அளிக்கப்படாவிட்டால் அவர்களால் சமுதாயத் தொண்டுகளைத் திறம்பட ஆற்றமுடியாது என்றெண்ணிய அவர், மக்கள் தொகையில் (ஏறத்தாழ) பாதியளவுள்ள பெண்களைப் பொதுப்பணிகளிலிருந்து விலக்கிவைப்பது அறியாமையும், சமுதாயத்திற்குப் பேரிழப்பை ஏற்படுத்தும் செயலுமாகும் என்று உறுதிபடக் கூறினார்.

    அனைத்திற்கும் மேலாக, நாட்டைக் காக்கும் பொறுப்பிலிருப்பவர்கள் தம் கடமையை வழுவின்றிச் செய்யவேண்டுமானால் அவர்களுக்கென்று குடும்பமோ, தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களோ இருக்கக்கூடாது; பொருள்தேடவேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்கக்கூடாது என்று வலியுறுத்திய பிளேட்டோ, சுயநலமெனும் கடுகு உள்ளமற்றுப் பொதுநலமெனும் தாயுள்ளம் – தொண்டுள்ளம் கொண்ட ஓர் பொதுவுடைமைவாதியே நாட்டின் தலைவனாயிருக்கவேண்டும் என்று விரும்பினார்.

    ஆள்வோரைத் ’தலை’க்கும், போர்வீரர்களை ’நெஞ்சு’க்கும், தொழிலாளர்களை ’வயிற்று’க்கும் ஒப்பிட்டார் பிளேட்டோ. ஆள்வோர் மூளைபலம் மிக்கோராயும் , போர்வீரர்கள் நெஞ்சுரம் மிகுந்தோராயும், தொழிலாளர்கள் உலகாயதங்களில் நாட்டம் கொண்டோராயும் இருப்பர். வெவ்வேறு சிந்தனையும், செயல்திறனுமுடைய இம்மூவகைப் பிரிவினரும் ஒருங்கிணைந்து செயற்படுவது ஓர் இலட்சிய அரசை – ஆதர்ச சமூகத்தை உருவாக்கும் என்பது அரசியல் அறிஞர் பிளேட்டோவின் அசைக்கமுடியாத நம்பிக்கையாயிருந்தது.

    ஆனால், சராசரி மனிதர்களையே அதிகம் கொண்ட சமுதாயத்திற்குப் பிளேட்டோவின் உயர் இலட்சியங்களைக் கொண்ட குடியரசை உருவாக்குவது சாத்தியப்படாமல் போய்விட்டபோதினும், ஆட்சியாளர்களுக்கு இன்றியமையாதது என்று அவர் போதித்த பொதுவுடைமைத் தத்துவமே பின்னாளில் கார்ல் மார்க்ஸ் (Karl Marx) போன்றோரின் அரசியல் சித்தாந்தங்களுக்கு அடிப்படையாய், ஆதாரமாய்த் திகழ்ந்தது என்பது அரசியல் அறிஞர்களின் துணிபு.

    ’பிளேட்டோ’ என்ற சொல்லுக்குக் கிரேக்க மொழியில் ’பரந்த’ (the broad one) என்று பொருள். (அவருடைய தோள்கள் பரந்து விரிந்திருந்தமையால் இப்பெயர் அவருக்கு ஏற்பட்டது என்று கூறப்படுகிறது). பெயருக்கேற்பவே பரந்த சிந்தனைகளுக்குச் சொந்தக்காரராய், பொன்னுலகைத் தன் எழுத்துக்களில் உருவாக்கிக் காட்டிய தன்னலமற்ற தகைமையாளராய்த் திகழ்ந்த பிளேட்டோ, மேற்குலகின் தத்துவத்துறை வளர்ச்சிக்கும், அரசியல் மறுமலர்ச்சிக்கும் பெரும் வழிகாட்டியாய்த் திகழ்ந்திருக்கின்றார் என்பதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை.

    ***

    கட்டுரைக்குத் துணைநின்ற தளங்கள்:

    https://en.wikipedia.org/wiki/Plato

    http://www.koodal.com/youth/history/biography.asp?id=37&content=tamil&name=plato

    100 philosophers – Peter J. King

     

    Share
  • பிழைக்கும் கவித்துவம்…!

    -வேதா இலங்காதிலகம்

    நந்தவனப் பூ மெத்தையில் சிறு நதி ஓரத்தில்
    சொந்தம் யாருமின்றி இயற்கையை மிக விரும்பி ரசித்தல்

    வண்டுகள் ரீங்காரித்துப் பறக்க வண்ணத்துப் பூச்சிகளும் சிறகசைக்க,
    கண்டிட முடியாத் தென்றலை உணர்ந்து குளிர்மையை ரசிக்க  vetha

    எவரமைத்தார் இந்த நந்தவனத்தை?! அருகினில் ஒரு இதம்
    கவருகின்ற தென்னை மரச்சோலையும் பறவைகள் ஒலியும் பரவசம்!

    பொல்லாக் காற்று இல்லாததால் தென்றலும் மெல்லிசைக் கடை
    தொல்லையில்லா ரசனை! கவிதை பொங்கிட ஏது தடை?!

    தலையசைத்த மலர்கள் வாசனையை இதயத்துள் மெதுவாகத் தூவின
    தலை ஆட்டும் தென்னோலைகள் சில தேங்காய்கள் தந்தன

    தனிமை இல்லையே! எங்கோ போனது! வண்டுகள் ஓசையும்
    இனிமை சேர்க்கச் சோலைநிழல் காட்டியது கோலம்

    குழலோசை ஒன்று குயிலோசையாய்த் தவழ மயக்கம் வந்தது
    உழவுமழையாய் உள்ளத்தில் பொழிந்து அரங்கத்தில் அமருமுணர்வு கூட்டியது

    ஆகா! அற்புதம்! என்னே இயற்கை! எழுதலாம் எழுதலாம்
    சாகா வரிகள்! பிழைக்கும் கவிஞன் திறமை என்றும்!

     

    Share
  • நீயே தமிழ்த் தாயே!

    -தமிழ்நேசன் த. நாகராஜ்

    உன்னை நினைத்து
    நான் கடக்க…

    சிலர் என்னையும்                                              Tamizh Annai
    நினைத்தார்
    அந்த நினைப்பில் நீயே – தாயே!

    உன்னை  பற்றிப் பேச
    நான் தகிக்க…

    பலர் என்னையும்
    பற்றிப் பேசினார்
    அந்தப் பேச்சு நீயே – தாயே!

    உன்னைச் சிறப்பு என்று
    நான் துதிக்க…

    சிலர் என்னையும்
    சிறப்பு என்றார்
    அந்தச் சிறப்பு நீயே – தாயே!

    நீ தந்த வழித் தடத்தில்
    நான் நடக்க…

    எனது வாழ்க்கைத்
    தடமேல்லாம் நீயே – தமிழ்த் தாயே!

     

    Share
  • சொந்தங்கள்: நான் ரசித்த புத்தகம்

    — உமாஸ்ரீ.

    சொந்தங்கள்நான் சமீபத்தில் ஹேமா கிருஷ்ணமூர்த்தி எழுதிய “சொந்தங்கள்” என்ற நாவலைப் படித்தேன். நூற்று நாற்பத்து நான்கு பக்கங்கள் கொண்ட அழகான நடையுடன் கூடிய தித்திக்கும் புதினம்.

    கதை ஆந்திர மாநிலத்தில் உள்ள செகந்தாராபாத் நகருக்கு அருகிலுள்ள ஒரு ரயில்வே காலனியில் ஆரம்பிக்கிறது. ரயில்வே காலனியில் உள்ள அனைவரையும் பற்றி சிறப்பான அறிமுகம் கொடுக்கிறார் ஆசிரியர். இதில் நகைச்சுவை பொங்கி வழிகிறது.

    ரயில்வேயில் வேலை செய்யும் ரங்கநாதன், கணேஷ் இருவரும் நல்ல நண்பர்கள். அது போலவே ரங்கநாதன் மகள் சாந்தியும் கணேஷ் மகன் ரமேஷூம் நண்பர்கள். இருவரும் ஒன்றாகவே ரயில்வே ஸ்கூலுக்குப் போய் வந்தார்கள். கால ஒட்டத்தில் ரமேஷ் பி. காம். பாஸ் செய்து மெடிக்கல் ரெப்ரசெண்டேடிவ் வேலையில் சேர்ந்து விட்டான். சாந்தி எம். ஏ. இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய தந்தை கல்யாணத்திற்கு வரன் பார்த்தார். ரமேஷ் அவரிடம் பெண்ணிற்கு வரன் பார்க்கிறீங்களா என்று கேட்டான். அதற்கு அவர் “ உனக்கு அவளைக் கல்யாணம் செய்து கொள்ள விருப்பமா? ”என்று கேட்டதும் அதிர்ந்து போனான் ரமேஷ்.

    “அந்த மாதிரி விருப்பமே எனக்கு இருந்ததில்லை. இனியும் இருக்காது. குழந்தைகளாக விளையாடியபோது கூட அப்பா அம்மா விளையாட்டு விளையாடியது இல்லை. அவளை மனைவியாய் நினைத்து கூடப் பார்க்க முடியாது . எப்படி நீங்கள் அப்படிக் கேட்கலாம்,“ என்றான்.

    சாந்தியைப் பெண் பார்க்க வந்தது ஒரு சினிமா டைரக்டர் குடும்பம் . மாப்பிள்ளையும் சினிமா துறையில் உதவி டைரக்டராக இருக்கிறான். அவர்களுக்குப் பெண் பிடித்துப் போய் கல்யாணமும் சென்னையில் நடந்தது. சாந்தி சென்னைக்குப் போய் விட்டாள். காலச் சக்கரம் சுழன்றது. கணேஷ் வானுலகம் சென்று விட ரமேஷ் குவாட்டர்ஸை காலி செய்து விட்டான். அவனுக்குப் பம்பாயில் வேலை கிடைத்து விடவே அவன் தன் தாயாருடன் பம்பாய் சென்று விட்டான். சாந்தியின் கணவன் ரவி குடிகாரன் . படம் எடுப்பதற்காக ஏராளமாய் கடன் வாங்கி தத்தளித்துக் கொண்டிருந்தது அந்தக் குடும்பம்.

    ரமேஷ் பம்பாயில் வசிக்கும் மீரா என்ற மிக அழகிய பெண்ணை மணம் செய்து கொண்டான். அவனுக்குப் பெண் குழந்தை பிறந்தது. அவள் குழந்தை சுமதி.

    குமுதம் பத்திரிகையில் வந்த அந்தப் பேட்டியை தற்செயலாய் படித்த ரமேஷ், சாந்தி நடிக்க வந்துவிட்டாளே என்று வருந்தினான். மீராவின் மனதில் ரமேஷின் அடிமனதில் சாந்தி இருக்கிறாளோ? நான் ஏமாந்தவளா?……. சந்தேகம் என்னும் இருள் படர்ந்தது. மீராவும் ரமேஷும் ஒரு முறை சென்று சாந்தியைப் பார்த்து விட்டு வந்தார்கள். அங்கு போனதும் சாந்தியிடம் பழகியதும் மீராவுக்கு ரமேஷிடம் ஏற்பட்ட சந்தேகம் அறவே நீங்கி விட்டது. சாந்தியிடமிருந்து முதலில் கடிதம் வந்து கொண்டிருந்தது . பிறகு நின்று விட்டது. ஒரு நாள் சாந்தியிடமிருந்து ”சீக்கிரம் வந்து என்னைப் பார் ”என்று கடிதம் வந்திருந்தது. ரமேஷ் சென்னைக்குப் போய் சாந்தியைப் பார்த்தான். அவள் தனியாகத்தான் தங்கியிருந்தாள். கணவன் ரவி வேறு ஒருத்தியுடன் குடியும் குடித்தனமாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தான். என்னுடைய பெண்ணை டாக்டர் குல்கர்னிக்கு தத்து கொடுத்துவிட்டேன் என்று கூறி அதற்கான காரணத்தையும் சொன்ன போது அதிர்ந்து போனான் ரமேஷ். அவளுக்கு மாலைக் கண் நோய். அதுமட்டுமில்லாமல் புற்று நோய். ரவி சுமதியை திரைப்படத்தில் நடிக்க வைக்க முயன்றான். அவனிடமிருந்து பாதுகாக்க வேறுவழியில்லாமல் சுமதியைத் தத்து கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பம்பாய் வந்ததும் ரமேஷ், டாக்டர் குல்கர்னியைத் தேடி கடைசியில் சுமதி குல்கர்னியை கண்டு பிடித்து விட்டான். ஆனால் சுமதி தன் தாயை பார்க்க மறுத்து விட்டாள். ரமேஷ் காரணத்தைச் சொல்லியவுடன் சம்மதித்தாள். தாயும் மகளும் சந்தித்தனர். உருக்குலைந்த அம்மாவை பார்த்துத் திடுக்கிட்டாள் சுமதி. அம்மாவைப் பத்தி என்னவெல்லாம் நினைத்திருக்கிறேன்- சுயநலக்காரி, கல்மனசு கொண்டவள் என்று … நெஞ்சு பொறுக்காமல் அழுதாள்.

    சாந்தி அடுத்த நாள் அங்கிருந்து போக வேண்டும். படுக்கையில் படுத்தவள் நடு இரவில் தூக்கம் கலைந்து விழித்துக் கொண்டாள். ஒரு வண்ணத்துப் பூச்சி, உயர உயரக் கிளம்பி கண் பார்வையிலிருந்து மறைந்தது என்று அவள் மறைவுடன் கதை முடிகிறது. சாந்திக்கும் ரமேஷூக்கும் உள்ள உறவு ஒரு பந்தம் ஒரு விசித்திரம் . பூர்வ ஜென்ம தொடர்பு . இருவரும் நண்பர்களாகவே இருக்க முடியும் என்பதைக் காட்டியிருக்கிறார் ஆசிரியர். காதல், மகிழ்ச்சி, நட்பு, சோகம் ஆகிய எல்லா ரசங்களும் கலந்த ஆரம்பம் முதல் முடிவு வரை விருவிருப்பான கதை.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

     

    ”ஆடிவந் தாச்சு, அவபொறந்தாம் போயாச்சு,
    வாடிஅவ சக்களத்தி வெண்பாவாய், -மாடிக்கு,
    ஆசுகவி ஆகிடுவோம், ஆனந்த மாய்க்கூடி,
    கேசவ் புகழ்குளிரில் காய்ந்து’’….கிரேசி மோகன்….

    Share
  • அநாகரீக அரசியல்வாதிகள்

    நமது நாட்டில் அதுவும் நம் தமிழ்த் திருநாட்டில் எத்தனை தலைவர்கள் தங்கள் செயலிலும், பேச்சிலும் நாகரீகம் காத்தனர். கொள்கைளை விமர்சித்தார்கள். வெள்ளையர்களோ கொள்ளையர்களோ அவர்களை நாகரீகமான முறையிலேதான் விமர்சித்தார்கள். என்னுடைய தலைமுறையில் நான் நேரில் பார்த்து வியந்த தலைவர்களில் பெருந்தலைவர் காமராஜர் என் மனதில் இன்றும் சிம்மாசனம் போட்டு அமர்துள்ள அரிய தலைவர். இன்றைய தலைமுறை அறிந்துகொள்ள வேண்டிய அருமையான தலைவரும் கூட.

    1973ம் வருடம் சென்னையில் தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. கூட்டம் துவங்குவதற்கு முன்பாக திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்களது குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அது முடிந்தவுடன் கூட்டம் துவங்கியது. தலைவர் காமராஜர் மேடையில் அமர்ந்திருந்தார். சின்ன அண்ணாமலை, குமரி அனந்தன்,சிவாஜி கணேசன், கண்ணதாசன் போன்றவர்கள் மேடையில் அமர்ந்திருந்தனர். ஒரு பேச்சாளர் தனது உரையில் தி.மு.க.தலைவர்களை ஒருமையில் அழைத்துப் பேசத் துவங்கினார். உடனேயே மிகுந்த கோபத்துடன்,” பேச்ச நிறுத்தைய்யா..” என்று தலைவர் காமராஜர் உரத்த குரலில் அவரைப் பார்த்துக் கூற அவரும் உடனேயே நிறுத்திக் கொண்டு திரும்பி விட்டார். மேடைக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்ததால் இதை நான் நன்றாகக் கவனிக்க முடிந்தது. எப்படிப் பட்ட உயர்ந்த தலைவர், பண்பாளர் காமராஜர் அவர்கள் என்ற எண்ணம் என்னுள்ளே ஆழப் பதிந்தது. 1971ம் வருடம் நடைபெற்ற தேர்தலில் சுதந்திராக் கட்சியின் சார்பாக நின்ற டாக்டர் மத்தியாஸ் அவர்களை ஆதரித்து ஒரு கூட்டம் கல்லிடைக்குறிச்சியில் உள்ள வீரப்பபுரம் தெருவில் நடைபெற்றது. கூட்டத்தில் காமராஜர் பேசத் துவங்கும் பொழுது பெண்கள் பகுதில் கூச்சலும் பேச்சுமாக இருந்தது. “இப்படி பொம்பள ஆட்கள்லாம் பேசிட்டிருந்தா…நான் எதுக்குப் பேசணும்னேன்…உங்க வேட்பாளர் நல்லவருன்னு ஒட்டுக் கேக்க வந்தேன்…நீங்க கேக்காம பேசிக்கிட்டிருந்தா எப்படி” என்று தனது உரையை முடித்துக் கொண்டு சென்று விட்டார். அவர் யாரையும் அநாகரீகமாகப் பேசிக் கேட்டதில்லை. ஆனால் அந்த மகத்தான தலைவரை மிக வும் இழிவாகப் பேசிய திராவிட இயக்கப் பேச்சாளர்களை, அவர்களது தலைவர்களே ஆதரித்ததை நாடு நன்றாக அறியும். 1967ல் சென்னை சட்டமன்றத்தில் தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்திற்கான விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர் திருமதி. அனந்தநாயகி அம்மையார் கேட்ட கேள்விக்கு அப்பொழுது அமைச்சராக இருந்த மு.கருணாநிதி அவர்கள் தரம்தாழ்ந்த விதத்தில் பதில் கூறி, அதற்கு அவருக்கே உரிய தமிழில் கேலியாக விளக்கம் தந்ததையும் “ஆஹா..என்ன அருமையான தமிழ்” என்று அவரது ஆதரவாளர்கள் வியந்தார்களே தவிர அப்படிச் சொன்னது தப்பு என்று கூற யாருமே முன்வர வில்லை. அதனால்தான் “தலைவன் எவ்வழி, தொண்டன் அவ்வழி” என்ற நிலையை இன்றும் காண்கிறோம். இன்றைய நிலையில் நாடு முழுவதும், குறிப்பாகத் தமிழகத்தில் நாகாரீக அரசியல் இல்லவே இல்லை. அதன் ஒரு காட்சிதான் தமிழக காங்கிரஸ் தலைவராக இருக்கின்ற திரு. இளங்கோவனின் சமீபத்திய தரம்தாழ்த்த, மலிவான பேச்சு. அவரது நாகரீகமற்ற பேச்சைக் கண்டிக்காமல் காழ்ப்புணர்ச்சியில் அவருக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவிக்கின்றன. தமிழகத்தில் ஒரு தலைவர்கூட திரு. இளங்கோவனின் அநாகரீகமான பேச்சைக் கண்டிக்கவில்லை.(இளைஞனாக இருக்கும் பொழுது திரு. E.V.K. சம்பத் அவர்களது உரையைக் கேட்டிருக்கிறேன்…அவருக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லையே அவருடைய மகன் இளங்கோவனின் பேச்சு என்று வருந்துகிறேன்) மாறாக ஆதரவு தெரிவிக்கின்றனர். ஆளும் கட்சியோ எதிர்க் கட்சியோ இரண்டிலுமே நாகரீகமான தலைவருக்குப் பஞ்சம்தான். அப்படியே இருக்கும் ஒன்றிரண்டு நல்ல தலைவர்களின் வழிகாட்டுதல்களையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் “தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு இல்லை. இந்தப் பதவிப் பித்தர்களுக்கு நேர்மையான நம் தேசத்து இளைஞர்கள்தான் சாதி, மத,பேதம் இல்லாமல் ஒன்றிணைத்து நல்ல பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும். இன்னும் நம்பிக்கை இருக்கிறது. நீரைக் கொதிக்க வைத்துக் கிருமிகளை அழிப்பதுபோல் நேர்மையும், எளிமையும், நாகரிகமும் உள்ள இளைய சமுதாயம் நம் தேசத்தைக் காக்கும். அதை என் தலைமுறை காணும் நாள் விரைவில் வரும்.

    ” தெய்வம் மனுஷ்ய ரூபேண”
    அன்பன்,
    மீ.விசுவநாதன்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    Belated Happy Birth Day Wishes Keshav….

    காலையில் கேசவ் கூட டெலிபோனில் பேசியபோது
    வாழ்த்த வயது ரொம்ப இருந்ததால், ஆன வயதுக்கே உரிய
    மறதியில் வாழ்த்த மறந்து விட்டேன்….செய்த தவறு மதியம் உதயமானது….
    அதனால்தான் ‘’Belated Wishes”….ஸாரி கேசவ்….
    தினமும் கண்ணனை தனது ‘’கேன்வாஸில்’’ பிரசவித்து
    பிறந்த நாள் கொண்டாடும் கேசவ்வுக்கு வாழ்த்துக்கள்
    In Fact கிருஷ்ணனுக்கே ‘’பி லேடெட் விஷெஸ்தான்’’….
    ஜெயிலில் பிறந்து மறுநாள் கோகுலத்தில் BELATEDடாக,
    ஜென்மாஷ்டமி கொண்டாடியனாயிற்றே….!தப்பில்ல….
    கண்ணன் என்ற சைத்ரிகன் வரைந்த ஓவியமே கேசவ்….
    ஓவியம் கேசவ் ஓவியன் கேசவ் ஆகி பதில் மரியாதையாக
    கண்ணனை வரைகிறார்….வாழ்க கேசவ்….வளர்க அவர் தூரிகை….

    crazy

    ”சிறையில் பிறந்தாலும் சீராயர் பாடித்
    தரையில்BE LATEடாய்த் தவழ்ந்தோன் -வரைந்தவனே,
    ஓவியா கேசவ் உனதுபிறந்த நாள்மறந்தேன்,!
    தாவியென் வாழ்த்துBELA TED”….கிரேசி மோகன்….

    Share
  • சிகரம் நோக்கி . . . . . . (15)

    சுரேஜமீ

    எண்ணங்கள்

     

    பிறந்ததன் பயனை வாழ்வு சொல்லவேண்டுமெனில், வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என தீர்மானிப்பது நம் எண்ணங்கள்தான் என்பதை அறியும் எவரும் மண்ணில் வீழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை. அந்த அளவிற்கு நம்மைச் செதுக்குவது நம் எண்ணங்கள்!

    அத்தகைய உயர்ந்த எண்ணங்கள் உருவாக அடிப்படைக் காரணிகள் எவை? அத்தகைய எண்ணங்களைச் செயலாக்குவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? அதன் மூலம் நம் வாழ்வின் பயனை அடைவது எப்படி? என்று அலசுவதுதான் இந்தப் பதிவின் இலக்கு ஆகும்.

    எண்ணம்போல் வாழ்வு என்று கூறக்கேட்டிருக்கிறோம். ஏனோ நம் மனம் அதை ஒரு வார்த்தையாகவே பார்த்திருக்கிறது. மனம் என்ற மாளிகையை அலங்கரிக்கும் ஒப்பற்ற ஓவியமாக நம்முடைய எண்ணங்கள் இருக்கிறது என்பதை அறிந்தவர்கள்தான் வெற்றியாளார்கள் என்று சொன்னால் மிகையாகாது.

    எதை நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிவிடுகிறாய் என்று சொல்கிறது வேதம்!

    ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்கிறார் திருவள்ளுவர்.

    peak1111111111-11

    ஆக, வாழ்வின் உயரிய நோக்கங்களை வெளிப்படுத்துகிற எண்ண ஊற்று எப்படி இருக்க வேண்டும்?

    என்பதைத் தீர்மானிக்கும் காரணிகளான சிலவற்றை உங்களின் பார்வைக்குத் தருகிறேன்!

    1. கல்வி
    2. குடும்பம்
    3. சமூகம்
    4. புத்தகம்
    5. இலட்சியம்
    6. சாதனையாளர்களின் வரலாறு
    7. மன உறுதி

    காரணிகளைச் சற்று விரிவாக, நம் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில், சுருக்கமாகக் காண்போம்!

    1. கல்வி 

    கல்விச்சாலை எனும் அறிவுக்கோயிலில் நம் மனதைத் திறந்து வைக்க முதலில் கற்றுக்கொள்ள வேன்டும். ஏதோ தேர்வுக்காகப் படிக்கும் பழக்கத்தைக் கைவிட்டு, நம்மைத் தேர்வாக்க நடைமுறைப் படுத்த வேண்டிய அணுகுமுறைகளாக,
    எந்தப் பாடமாக இருந்தாலும், ,வாழ்வியல் சிந்தனைகளோடும், வாழ்க்கை நெறிகளோடும் ஒப்பீடு செய்து, நம்மை வளர்த்துக்கொள்ள ஏதுவாகப் படிக்க வேண்டும்.
    அந்த வகையில், நம் எண்ணங்களை வலுவாக உற்பத்தியாக்கி, மேம்படுத்தும் பங்கில், மிக முக்கிய அங்கமாக இருப்பது கல்விமுறை என்பதைப் புரிந்துகொள்ளல் வேண்டும்.

    2. குடும்பம்

    நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் என்று சொல்வார்கள்.

    நல்ல எண்ணங்கள் உருவாவதற்கு அடுத்த காரணியாக இருப்பது குடும்பம். நம்மை வாழ்வின் அடுத்தடுத்த நிலைக்கு அழைத்துச் செல்வதில், குடும்பத்தின் பங்கு தலையாயது ஆகும்.

    ‘சான்றோனாக்குவது தந்தைக்கு கடமை!’ – புறநானூறு

    எத்தனையோ சாதனையாளர்களின் வெற்றிக்குக் காரணமாக, அவர்களது குடும்பச் சூழல் இருந்திருக்கிறது என்பதை வரலாறு சொல்கிறது. தந்தையின் செந்நீரும்; தாயின் கண்ணீரும் வாழ்வியல் லட்சியங்களை உருவாக்கும் ஒப்பற்ற எண்ணங்களுக்கு ஆணி வேராக இருந்திருக்கிறது என்றால், மறுப்பதற்கில்லை.

    ஆகவே, நல்ல எண்ணங்களை வளர்ப்பதில் குடும்பத்தின் பங்கு இன்றியமையாதது.

    3. சமூகம்

    யாரோடு நாம் தொடர்பில் இருக்கிறோம் என்பது, நாம் எத்தகைய பண்பாளர் என்பதைக் காட்டிவிடும். நம் வாழ்வியல் மாற்றங்களுக்கு மிக முக்கியக் காரணமாக இருப்பது நம் சமூகம் எனும் கட்டமைப்பு ஆகும். வாழ்வில் வெற்றி பெற்றவர்களை அடிக்கடி சந்திப்பதும்; அவர்களோடு தொடர்பில் இருப்பதும், அவர்கள் அனுபவங்களை நினைவில் ஏற்றிக் கொள்வதும், நம் எண்ணங்களைச் செம்மைப் படுத்தும் என்பதை நம் அனுபவம் நமக்குச் சொல்லும்!

    4. புத்தகம்

    நண்பர்கள் செய்ய இயலாததை ஒரு நல்ல புத்தகம் செய்யக் கூடிய ஆற்றல் வாய்ந்தது. நல்ல புத்தகங்கள் நம்முள் எண்ணற்ற மாற்றங்களை ஏற்படுத்தும் ஒப்பற்ற உயர்வான எண்ணங்களுக்கு வித்தாக இருக்கக் கூடியது. அத்தகைய புத்தகங்களை மீண்டும், மீண்டும் படிக்க வேண்டும்.

    படித்தால் மட்டும் போதுமா? அடுத்து என்ன செய்ய வேண்டும்? அதன் பயனாக விளைந்த நல்ல எண்ணங்களை உருவேற்றிச் செயலாக்கம் கொடுப்பதில்தான் வெற்றி அடங்கி இருக்கிறது.

    5. இலட்சியம்

    இலக்கு இல்லாத வாழ்வு திசை அறியாமல் செல்லும் படகு போன்றது. உயர்ந்த இலக்குகளுக்கு அடிப்படையாக இருப்பது நம்முள் தோன்றும் எண்ணங்களே!

    வலுவாக வேரூன்றும் எந்த எண்ணமும் அதற்கான பலனை வழங்காமல் இருந்ததில்லை என்பதற்கு நம் வாழ்வின் அனுபவங்களே மிகச் சிறந்த சான்றாக விளங்கும்.

    ஆகவே, மிகச் சிறந்த இலட்சியங்களை, நம் பெற்றோருக்கும், மற்றோருக்கும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய சாதனைகளாக இருக்கக்கூடிய இலட்சியங்களை,

    நோக்கி நகர்வதற்கு அடிப்படையானது எண்ணங்கள்தான் என்பதை மறுப்பதற்கில்லை.

    6. சாதனையாளர்களின் வரலாறு

    என்னதான் இருந்தாலும், நமக்குத் தேவையாக இருப்பது

    ஒரு உந்துதல்;
    நம்மை வெற்றி நோக்கி நகரச் செய்யும் ஒரு சக்தி:
    ஒரு நம்பிக்கை;
    ஒரு ஊன்றுகோல்;
    ஒரு அனுபவ அறிவாக இருப்பது

    வெற்றியாளர்களின் வரலாறு ஆகும்.

    அத்தகைய வெற்றியாளர்களின் வாழ்க்கை நிகழ்வுகள், அவர்களின் தொடர் முயர்சிகள், வாழ்வியல் சிக்கல்கள், உயர்ந்த இலட்சியங்களை அடைய அவர்கள் தந்த விலை என ஒவ்வொரு நகர்வும்,

    நம்மை வெற்றி நோக்கி அழைத்துச் செல்லும் எண்ணங்களை விதைக்கும் ஒப்பற்ற செய்திகளைச் சொல்லும்!

    7. மன உறுதி

    இவை அனைத்தும் இருந்தாலும் மகாகவி பாரதி சொல்வது போல, நமக்குத் தேவை

    மனதில் உறுதி;
    வாக்கினில் இனிமை;
    நினைவு நல்லது;

    இவை இருந்தால் போதும். நம் எண்ணங்கள் வலுவாக இருப்பதற்கு வேறென்ன வெண்டும்?

    எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
    திண்ணியர் ஆகப் பெறின் – திருக்குறள்

    இதிலிருந்து நாம் கற்றுக் கொள்வது, நம் எண்ணங்களை மேம்படுத்தக் கூடிய சக்திகளை நம்மைச் சுற்றி வளர்த்துக் கொள்வதும்,

    நம் தலையாய கடமையாக இருந்தால்,

    வெற்றி நம் கதவைத் தட்டும் என்பது சத்தியம்!

    எழுமின்! விழிமின்! அயராது உழைமின்!

    என்ற தாரக மந்திரத்தை உச்சாடனம் செய்து, எண்ணங்க்களைச் செதுக்குவோம்!

    வெற்றி தன்னைச் செதுக்கட்டும் நம் வாழ்வின் பக்கங்களை வைத்து…..

    அதுவரை தொடர்ந்து சிந்திப்போம்………

    அன்புடன்
    சுரேஜமீ

    Share
  • செந்தாமரையே செந்தேனிதழே …

    கவிஞர் காவிரிமைந்தன்.

    புகுந்தவீடுபுகுந்தவீடு என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற ஏ.எம்.ராஜா, ஜிக்கி பாடிய பாடலிது! பாடலை இயற்றியவர் விசித்ரா.

    பாடலின் பல்லவி முதலாக பற்றிக் கொள்கிற இனிமை, இறுதிவரை தொடர்கிறது. பாடிய குரல்கள் தரும் மயக்கத்தில் இப்பாடலைக் கேட்பவரும் மயக்கத்திற்கு அடிமையாகிறோம். அடிமனதை வருடுகின்ற சுகம்தருகிறார் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்.

    மெல்லிசை என்னும் சொல்லுக்குப் பொருள் சொல்லும் இன்னிசையிது என்று ரசிகர்கள் சத்தியம் செய்யலாம். தமிழ் மொழியின் இனிமையைப் பறைசாற்ற சான்று பகரும் தமிழ்த்திரையிசைப்பாடல்களில் இதுவும் ஒன்று! காதலர்களின் இதயப் பரிமாற்றம் நடைபெறும் நேரம் நலம் பாடும் வளமான சொற்கள் பரிமாறப்படுகின்றன. இன்பத்தின் உரையை எழுதிவைத்தாற்போல்… இதோ ஒரு காதல் பாடல் கவிதை மொழியாக்கப்பட்டுள்ளது.

    திரைப்படம்: புகுந்த வீடு
    பாடல்: செந்தாமரையே
    பாடகர்கள்: ஏ. எம். ராஜா, ஜிக்கி
    இசை: சங்கர் கணேஷ்
    பாடல் ஆசிரியர்: விசித்திரா

    ஆண்:
    செந்தாமரையே செந்தேனிதழே
    பெண்ணோவியமே கண்ணே வருக … கண்ணே வருக …

    பெண்:
    முல்லைக்குத் தேர் கொடுத்த மன்னவன் நீயோ
    மல்லிகையின் நலம் மதுவண்டோ
    [செந்தாமரையே]

    ஆண்:
    புகுந்த வீட்டின் புது வரவு
    நீ பூத்துக் குலுங்கும் புது நினைவு

    பெண்:
    மங்கையின் வாழ்வில் ஒளி விளக்கு
    அது மன்னவன் ஏற்றிய திரு விளக்கு

    ஆண்:
    இளமை தரும் மயக்கம்

    பெண்:
    இனிமை அதில் பிறக்கும்
    [செந்தாமரையே]

    பெண்:
    நீலவானின் முழுநிலவே
    உன்னை நெருங்கி மகிழும் என் மனமே

    ஆண்:
    ஆசை மனதின் தேனமுதே
    உன்னை அருந்தத் துடிக்கும் என் உறவே

    பெண்:
    கொடுத்தேன் என்னைக் கொடுத்தேன்

    ஆண்:
    எடுத்தேன் அள்ளி எடுத்தேன்
    [செந்தாமரையே]

    காணொளி: https://youtu.be/ZIJgMsoGUu8

    Share