வளவன் கனவு-12
சு.கோதண்டராமன்
திருஷ்டி பட்டது
உடம்புபோர் சீவரர் ஊண்தொழிற் சமணர்கள்
விடம்படும் உரையவை மெய்யல விரிபுனல்
வடம்படு மலர்கொடு வணங்குமின் வைகலுந்
தடம்புனல் சூழ்தரு சக்கரப் பள்ளியே.
-சம்பந்தர்
ஹரதத்தருக்கு உறவினர்கள் எவரும் இல்லை. திருமணத்துக்கு அக்கம்பக்கத்தில் ஐந்தாறு கிராமங்களில் இருந்த வடமர்களை அழைத்திருந்தார். அவர்கள் வந்து நடத்திக் கொடுத்து வாழ்த்திச் சென்றனர்.
முருகையனுக்கோ ஜனக்கட்டு மிகுதி. உள்ளூரிலும் அக்கம் பக்கத்துக் கிராமங்களிலும் அவருக்கு உறவினர்கள் நிறைய இருந்தனர். திருமணத்துக்குப் பின் அவர்கள் ஒவ்வொருவராக புது தம்பதிகளைத் தத்தம் வீட்டிற்கு அழைத்து விருந்தளித்து உபசரித்தனர்.
திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆயிற்று. இன்னும் விருந்து ஓய்ந்தபாடில்லை. மல்லிகையின் தாய் மாமன் இடும்பன் இரு நாழிகைத் தொலைவில் உள்ள தீபங்குடி* என்னும் கிராமத்தில் ஊர்த்தலைவராக இருந்தார். அவர் விருந்துக்குக் கூப்பிட்டிருந்தார். முருகையன் ஒரு வண்டி கட்டி இருவரையும் அனுப்பினார். விருந்து முடிந்தது. ‘போய்ட்டு வரோம், மாமா’ என்று சொல்லிக் கொண்டு மல்லிகை வண்டியில் ஏறினாள். பின்னால் வாயில் வெற்றிலையை மென்றுகொண்டு பசுபதியும் ஏறினான். வண்டி புறப்பட்டது.
பசுபதி பேசாமல் கண்ணை மூடிக் கொண்டு வந்தான். உண்ட மயக்கம் தூங்குகிறார் போலும் என்று மல்லிகை எண்ணினாள். வீடு சமீபித்தபோது அவனைத் தட்டி எழுப்ப வேண்டியிருந்தது. அரை மயக்கமாக இருந்தான். இறங்கியவுடன் வாந்தி எடுத்தான். தள்ளாடிக் கொண்டே வந்த அவனைப் படுக்க வைத்தார்கள்.
சாப்பிட்டதும் சாப்பிடாததுமாக வண்டியில் குலுங்கிக் குலுங்கி வந்ததுதான் வாந்திக்குக் காரணமாக இருக்கும் என்று நினைத்த அவனுடைய அம்மா ‘சுக்கு வெந்நீர் போட்டுத் தருகிறேன், சாப்பிட்டால் சரியாகிவிடும்’ என்று சொல்லிக் கொண்டு உள்ளே போனாள்.
மாமியார் போட்டு எடுத்து வந்த வெந்நீரை மல்லிகா அவன் வாயில் விட்டாள். அது வழிந்து விட்டது. இது சாதாரண அஜீரணம் இல்லை என்று எல்லோருக்கும் பட்டது. முருகையனும் அங்கே இருந்தார். வைத்தியரை அழைத்து வரச் சொல்லி ஆள் அனுப்பினார். வைத்தியர் வந்து பார்த்தார். ‘நாடி விழுந்து விட்டது. உடம்பெல்லாம் நீலம் பாரித்து இருக்கிறது. ஏதோ விஷகடி’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். எல்லோருக்கும் இடி விழுந்தாற்போல் இருந்தது.
சற்று நேரத்தில் ஊர் மக்கள் எல்லோரும் அங்கே கூடினர். ஊரே சோகத்தில் மூழ்கியது. ‘ஐயோ, எவ்வளவு நல்ல பிள்ளை, எவ்வளவு நல்ல பெண், இவர்களுக்கா இப்படி ஆகவேண்டும்’ என்று பரிதாபப்பட்டனர். ‘நேற்று தாழம்பூ பறித்து வந்து மனைவிக்குக் கொடுத்தான். அதில் இருந்த பூநாகம் ஏதாவது தீண்டி இருக்குமோ?’ என்றார்கள் சிலர். ‘வண்டியிலே விரிப்பின் கீழே போட்டிருந்த வைக்கோலுக்குள் தேள், நண்டுவாக்காளி எதாவது இருந்து கொட்டியிருக்கும்’ என்றார்கள் சிலர். பசுபதியின் நண்பர் பட்டாளம் வந்து கதறியது. உறவினர்களுக்கெல்லாம் சொல்லி அனுப்பப்பட்டது. ஹரதத்தர் திருமணத்திற்கு வந்திருந்த வடமர்களுக்குச் செய்தி அனுப்பினார்.
சுடுகாட்டில் ஏகப்பட்ட கூட்டம். பிரேதத்தைச் சிதையில் அடுக்கினார்கள். வடமப் பிராமணர் ஒருவர் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தார். நடைப்பிணமாகத் தென்பட்ட ஹரதத்தர் கண்களில் நீர் வழிய அவர் சொல்லியபடி சடங்குகளைச் செய்து கொண்டிருந்தார். அருகில் முருகையன் வாயில் துணியைப் புதைத்துக் கொண்டு நின்றுகொண்டிருந்தார்.
இந்த அகால மரணம் அனைவரையும் உலுக்கி எடுத்துவிட்டது. வாழ்க்கையின் நிலையாமையை மனிதன் பிரத்தியட்சமாக உணரும் தருணம் அது. ‘பதினெட்டு வயது என்பது சாகக்கூடிய வயதா, எந்த நிமிஷம் யாருக்கு என்ன ஆகும் என்பது தெரியவில்லை. இன்று இவர், நாளை யாரோ’ என்று ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார். அவரை எதிரொலிப்பது போல, ஆனால் தணிந்த குரலில் இடும்பன் தன் பக்கத்தில் நின்றிருந்தவரிடம், ‘இன்று இவர், நாளை அவர்’ என்று சொல்லிக் கண்களால் சைகை காட்டினார். அவர் பேசியதையும் அவர் கண் காட்டிய திசையில் இரு வடமர்கள் நின்றுகொண்டிருந்ததையும் பசுபதியின் நண்பன் ஒருவன் கவனித்துவிட்டான். இடும்பன் முகத்திலும் அவரது நண்பர் முகத்திலும் ஒரு விஷமத்தனமான புன்னகை தோன்றி மறைந்ததும் அவன் பார்வையிலிருந்து தப்பவில்லை. உடனே முருகையனிடம் சென்று தான் கவனித்ததைக் கூறினான்.
முருகையன் சீறிக்கொண்டு வந்தார். “மகாபாவி, என் மருமகனை நீயாடா கொன்றாய்?” என்று கேட்டுக் கொண்டே அவர் முகத்தில் மாறி மாறிக் கைகளால் ஆக்ரோஷமாகக் குத்தினார். எதிர்பாராத தாக்குதலால் நிலை குலைந்த இடும்பன் கீழே விழுந்தார். சிலர் அவரையும் முருகையனையும் பிரித்தனர். விஷயம் பரவியது.
“உண்மையாக இருந்தாலும் இருக்கும், வடமர்களை எல்லாம் நாட்டை விட்டுத் துரத்தணும்னு இவர் எப்பவும் சொல்லிக்கிட்டு இருப்பாரு.”
“அதுக்காக இப்படியா, சொந்தத் தங்கச்சி மருமகனையா விஷம் வெச்சுக் கொல்வாங்க?”
“இந்தப் பொண்ணை இடும்பன் தன் மகனுக்குக் கட்டி வெக்கணும்னு நினைச்சிருப்பார் போல. அது நடக்கல்லைன்னதும் இப்படிப் பழி வாங்கிட்டாரு.”
“ஒரு வருசமா ஒரு சமணத்துறவியும் வேறு சில ஆளுங்களும் இவரை வந்து அடிக்கடி பார்த்துப் பேசிக்கிட்டு இருக்காங்க. அதிலிருந்து இவர் இந்தப் பிராமணர்களை எல்லாம் நாட்டை விட்டுத் துரத்தணும்னு சொல்லிக்கிட்டு இருப்பாரு.”
ஊர் மக்கள் பலவாறாகப் பேசிக் கொண்டார்கள். கூட்டத்தில் இருந்த ஊர்த்தலைவருக்கு விஷயம் எட்டியது. சிதை எரியத் தொடங்கியதும் எல்லோரும் திரும்ப எத்தனித்தபோது ஊர்த்தலைவர், “யாரும் இந்த இடத்தை விட்டுப் போகக் கூடாது. யார் யாருக்கு என்ன தெரியுமோ அதை எல்லாம் பஞ்சாயத்தார் முன்னிலையில் தெரிவித்துச் சத்தியப் பிரமாணம் செய்து விட்டுத்தான் போகவேண்டும்” என்று அறிவித்தார். ஓலைகளும் எழுத்தாணிகளும் தருவிக்கப்பட்டன.
அங்கு வந்த மக்களை ஒவ்வொருவராக விசாரித்தார். அவரவர் தனக்குத் தெரிந்ததைச் சொன்னார்கள். அவை ஏட்டில் எழுதப்பட்டு கையொப்பம் பெறப்பட்டன. இடும்பன் அடிக்கடி சமணத் துறவியுடன் சுற்றியதைப் பலரும் கவனித்திருந்தார்கள். சமணத் துறவிக்கும் உங்களுக்கும் நெருக்கத்திற்குக் காரணம் என்ன என்பதற்கு இடும்பனால் சரியான விடை அளிக்க முடியவில்லை. பல கோணங்களில் அவரை நெருக்கிய பிறகு, தான் பசுபதிக்கு வெற்றிலையில் விஷம் தடவிக் கொடுத்ததை ஒப்புக் கொண்டார்.
கடைசியில் ஊர்த்தலைவர் சொன்னார், “இவர்கள் சொல்வதை எல்லாம் பார்த்தால் இது கொலை வழக்கு என்று தெரிகிறது. அதனாலும், குற்றம் சாட்டப்பட்டவரும் ஒரு ஊர்த்தலைவர் என்பதாலும் நாங்கள் இதில் விசாரித்துத் தீர்ப்பு வழங்க முடியாது. இதை அரசர்தான் விசாரிக்க வேண்டும், அவருக்குத் தகவல் அனுப்புகிறேன்” என்று அறிவித்தார்.
———————————————————– ————————————————————————
* திருவாஞ்சியம் அருகில் உள்ள தீபங்குடி ஒரு சமணக் கேந்திரமாக இருந்திருக்கிறது. இன்றும் அங்கு ஒரு ஜினாலயம் உள்ளது.