ஒரு எளிய மனிதனின் சுயசரிதை

மீ.விசுவநாதன்

அத்யாயம்: 26

“செங்கோட்டைச் சித்தப்பா”

amv

முன்பெல்லாம் விடுமுறை நாட்களில் மாமா, அத்தை, சித்தப்பா என்று உறவினர் வீடுகளுக்குச் செல்வது குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான ஒன்று. வீட்டுப் பெரியவர்கள் அவர்களை ஆசையோடு வரவேற்று அணைத்துக் கொஞ்சி மகிழ்வார்கள். குழந்தைகள் செய்யும் விஷமத்தனத்தையும், விளையாட்டுக்களையும் செல்லக் கண்டிப்போடு ரசித்துக் களிப்பார்கள். எளிய வாழ்க்கையையும், கூட்டுக் குடும்பத்தின் சிறப்பையும் அந்தக் குழந்தைகள் அறிவதற்கு அந்த முறை மிகவும் பயனாக இருந்தது. இப்பொழுது மெல்ல மெல்ல அப்பழக்கம் மறைந்து வருவது வருத்தமாகத்தான் இருக்கிறது.

அவன் சிறுவயதில் பள்ளிக் கால விடுமுறை நாட்களில் அவனுக்கு மாமா, அத்தை, சித்தப்பா வீடுகளுக்கு அவனுக்கு அக்காவுடன் சென்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்து விட்டு வருவான். அப்படி அவன் அடிக்கடிச் செல்லுமிடம் “செங்கோட்டை”ச் சித்தப்பா என்று அவனால் அன்போடு அழைக்கப்பட்ட அவனுக்கு அப்பாவின் ஒன்று விட்ட சகோதரர் இரா. அனந்தனாராயணனின் இல்லம். அவர் கடையம், தச்சநல்லூர், செங்கோட்டை, குற்றாலம் போன்ற ஊர்களில் “போஸ்ட் மாஸ்டராக” வேலை பார்த்து வந்தவர். மிகவும் நாணயமான மனிதர். உபகாரி. ஒல்லியான, உயரமான தேகம். கொஞ்சம் கரகரத்த குரலில் பேசுவார். அவனது குடும்பத்தில் அந்தக் காலத்தில் கல்லூரிக்குச் சென்று படித்து பி.எஸ்.சி. பட்டம் வாங்கிய முதலாளவர். கடையத்தில் இருந்த பொழுது அவனுக்குச் சித்தப்பா அனந்தனாராயணனும், மீனாக்ஷிச் சித்தியும் அவனை அழைத்துக் கொண்டு சென்று நான்கைந்து நாட்கள் தங்களுடன் வைத்துக் கொண்டிருந்தனர். தெருவுக்குப் பின்னல் ஓடும் வாய்க்காலில் அவனை நீந்தச் சொல்லி ரசிப்பார் சித்தப்பா. கடையத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு ஒவ்வொரு நாளும் அழைத்துச் சென்று ஒவ்வொரு சந்நிதியாக நின்று அவனுக்கு சுலோகங்கள் சொல்லித்தருவார். அவன் ஒரு இடத்தில் நிற்க மாட்டான். கோவிலுக்குள் அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டே இருப்பான். அவர் அவனை அன்போடு கையைப் பிடித்து அழைத்து வருவார். ஒருநாளும் கடிந்து பேசியது கிடையாது. அவரோடு அவனும் பூஜைக்குப் பூக்கள் பறித்துத் தருவான். சித்தப்பாவின் வீட்டில் அவரது தகப்பனாரும், அவனுக்குச் சின்னத்தாத்தாவுமான ராமலிங்க ஐயரும், பார்வதிப் பாட்டியும் இருந்தனர். அவனது விஷமத்தனம் தாங்காமல்,” கண்ணா நீ ரொம்பப் பொசுக்கி எடுத்துப் பொட்டில வாரறாய்..வா..வா. ஊருக்குப்போய் ஒன்னோட அம்மாட்டச் சொல்லறேன்” என்று பார்வதிப்பாட்டி அவனிடம் சொல்லுவாள். ஒவ்வொரு நாளும் மதிய வேளையில் பஜ்ஜி, முறுக்கு, தட்டை என்று ஏதேனும் பக்ஷணம் தின்பதற்குத் தருவாள்.

சித்தப்பாவுக்கு , அவனுக்கு அப்பாவின் மீது மிகுந்த மரியாதையும், அன்பும் உண்டு. அவர், அவனுக்கு அப்பாவின் ஒன்று விட்ட சகோதரர் என்று யாருமே சொல்ல முடியாது. “சுந்தரம் அண்ணா, சுந்தரம் அண்ணா” என்று அப்படிப் பாசத்தோடு பழகுவார். தனக்கு அண்ணா சொன்னதை மறுவார்த்தை பேசாமல் கேட்கும் குணம் அவருக்கு இருந்தது. அதையெல்லாம் பார்த்து வளர்ந்த அவனும், அவனுக்கு அக்கா “பாலாவும்” அப்பாவைப் போலவே அவர்களது சித்தப்பவிடமும் பாசத்தோடு இருந்து வருகின்றனர். “கோந்தே” என்றுதான் அவனையும், அவனது அக்காவையும் செங்கோட்டைச் சித்தப்பாவும், மீனாக்ஷிச் சித்தியும் அழைப்பார்கள். உங்களுக்கு எத்தனை வயசானாலும் எங்களுக்கு குழந்தைதானே என்று சொல்வார்கள்.

“சிறுசேமிப்பும் சித்தப்பாவும்”

சித்தப்பா தச்சநல்லூரில் “போஸ்ட்மாஸ்டராக” வேலை பார்த்து வந்த சமயம் அவனும், அவனுக்கு ஒன்று விட்ட அத்தையின் (சகுந்தலா அத்தை) மகன் ஸ்ரீதரும் விடுமுறைக்குச் சென்றிருந்தனர். போஸ்ட்ஆபீஸ்சும், அவரது வீடும் ஒரே இடத்தில் இருந்தது. வீட்டின் முன்புறம் அலுவலகமும், பின்புறம் வீடும் இருந்தது. அப்பொழுதெல்லாம் மாலை ஏழுமணிக்கு மேல் “தந்தி” வந்தால் அதை அந்த சரியான நபரிடம் கொண்டு சேர்க்கும் வேலையை அவனுக்கும், அவனது அத்தை மகன் ஸ்ரீதருக்கும் தருவார். ஸ்ரீதர் அவருக்கு மருமகன். சரியாக விலாசம் சொல்லி அவர்களை அனுப்பி வைத்து, அவர்கள் அந்த வேலையைச் செய்து முடித்து விட்டு வரும்பொழுது “இருவருக்கும் ஐம்பது” காசுகள் தருவார். எப்படி? இரண்டு இருபத்தைந்து பைசாக்களுக்கான “ஸ்டாம்ப்” தந்து அவனது பெயரிலும், ஸ்ரீதர் பெயரிலும் “சிறுசேமிப்புக் கணக்கை”த் துவக்கி வைத்தார். ஒவ்வொரு முறையும் அவர்தரும் காசுகள் இருபத்தைந்து பைசா “ஸ்டாம்ப்”பாக அவனது சிறுசேமிப்புக் கணக்குப் புத்தகத்தில் ஒட்டப்பட்டு தபால் அலுவலக முத்திரையும் பதிக்கப்பட்டுவிடும். “என்னடா..சித்தப்பா இப்படி ஸ்டாம்பா ஒட்டித் தராரே..அவர் தரும் காசுக்குக் கடலை மிட்டாய் வாங்க முடியவில்லையே” என்று முதலில் அவனுக்கு அது வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால் ஒரு இரண்டாண்டுகள் சென்ற பின்பு அவனது சிறுசேமிப்புக் கணக்கில் இருந்து சுமார் முன்னூறு ரூபாய்கள் வந்தது. அதில் அவனது பத்தாவது வகுப்பிற்குத் தேவையான புத்தகங்களையும், அருமையான பேனாவும், அழகான சீருடைகளும், சந்தன நிறத்தில் “சான்டக்” செருப்பும் வாங்கித் தந்து,”இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாச் சேத்துண்டுவா.. அது பின்னால ஒனக்கு ரொம்ப உபயோகமாருக்கும்” என்று அவனுக்கு அம்மா அவனிடம் சொன்னாள். திருமணமானபின் அவனும், அவனுக்கு மனைவியும் சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தில் சென்னையில் ஒரு வீடு வாங்கினார்கள். அந்த சேமிக்கும் பழக்கத்தை சிறுவயதிலேயே மனதில் விதைத்த “செங்கோட்டைச் சித்தப்பாவை” அவன் எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருக்கிறான்.

“திருக்குற்றால மலையில்”

amv1
திருக்குற்றால மலை பார்க்கப் பார்க்க மீண்டும் பார்க்கத் தூண்டும் அழகிய மலை. அந்த மலைக்கு இறைவன் பாலபிஷேகம் செய்வதுபோல அருவி விழும் அழகைக் கண்டு எழுத எந்தக் கவிஞனாலும் முடியாது. ஒன்பதாவது வகுப்பில் அவனுக்கு திரிகூடராசப்பக் கவிராயர் எழுதிய “திருக்குற்றாலக் குறவஞ்சி”யில் உள்ள சில பாடல்கள் பாடமாக இருந்தது. அதில் “வானரங்கள் கனிகொடுத்து மந்தியோடு கொஞ்சும், மந்தி சிந்தும் கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்” என்ற வரிகளை மிகுந்த இலக்கிய ரசத்தோடு அவனுக்கு தமிழாசிரியராக இருந்த கே.ஏ. நீலகண்டையர் விளக்குவார். அவன் அப்பொழுது மானசீகமாகவே குற்றால மலைகளில் அந்த வானரங்களோடு திரிவது போலவும், மலைகளில் பழங்களைப் பறித்து ருசித்து உண்பது போலவும், அருவிகளில் நீராடிக் களிப்பதுபோலவும் கற்பனை செய்து கொள்வான். அப்படி அந்தக் கவிதையை அவனது ஆசிரியர் விளக்கிக் கூறுவார். அதிலிருந்து அவனுக்கு அந்த மலைமீது ஏறிப் பார்க்கவேண்டும் என்ற கனவு உள்ளுக்குள் இருந்து கொண்டே இருந்தது. அப்படி ஒரு சந்தர்ப்பம் அவனுக்குக் கிடைத்தது. செங்கோட்டைச் சித்தப்பாவுக்குக் குற்றாலம் போஸ்ட் மாஸ்டராக மாற்றல் ஆனது. அங்கே போஸ்ட் ஆபீஸ்சும் வீடும் ஒரே இடமாகத்தான் இருந்தது. நல்ல பெரிய வீடு. அதுவும் குற்றாலம் பெரிய அருவிக்கு மிக அருகிலேயேதான் இருந்தது. அந்த வருட விடுமுறைக்கு அவனும், அவனுக்கு அத்தை மகன் ஸ்ரீதரும் குற்றாலத்திற்குச் சென்றார்கள். அவனும், ஸ்ரீதரும் தினமும் காலையில் எழுந்தவுடன் காலைக்கடன்களை முடித்து, காப்பி குடித்து விட்டு போஸ்ட் ஆபீஸ் வாசலில் வந்து நின்று அந்த பெரிய அருவியின் அழகைப் பார்த்து ரசிப்பார்கள். பின்பு அங்கிருந்து மெதுவாக நடந்து குற்றாலநாதர் கோவிலுக்குச் சென்று வெளி மதில்களில் அமர்திருக்கும் குரங்குகளின் விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அந்தக் கோவிலின் உள்ளும், வெளியிலும் நிறையக் குரங்குகள் இருக்கும். அப்படியே காலை எட்டு மணிக்கு வீட்டிற்கு வந்து குளித்து விட்டு, இட்டிலி சாப்பிட்டவுடன், “இங்க பார்க் வரை போயிட்டு வரோம்” என்று சொல்லி,

வீட்டின் பின்புற மலைவழியாக மேலே ஏறிச் சென்று அந்தக் காட்டுப் பகுதிகளைச் சுற்றிப் பார்த்து வருவார்கள். அவனை விட ஸ்ரீதர் மூன்று வயது இளையவன். ஸ்ரீதருக்கு முதலில் அப்படிக் காட்டுப் பகுதிகளில் தனியாகச் செல்ல பயமாகத்தான் இருந்தது. “கண்ணா..திரும்பப் போயுடலாம் வா..” என்று ஸ்ரீதர் சொல்லும் போது,”ஒண்ணும் பயப்படாதே…தைரியமா வா…” என்று அவன் ஸ்ரீதரின் கையைப் பிடித்துக் கொண்டு மலையில் நடப்பான். எங்கு பார்த்தாலும் நெடிய மரங்களும், பெயர் தெரியாத பூக்களும், முகம் தெரியாத அற்புதமான வாசனையும், பஞ்சு பஞ்சாக கருப்பும், வெளுப்புமாக மேகங்களும் அவனைத் தொட்டுக் கெஞ்சும். “அடப் பட்டுக் குஞ்சலங்களா” என்று அவன் மனது அந்த இயற்கை வனப்பை ஆச்சரியமாகப் பார்த்துப் பார்த்துக் கொஞ்சும். அப்படி ஒரு நாள் காலையில் அந்த மலையில் அவன் ஸ்ரீதரையும் அழைத்துக் கொண்டு “செண்பகாதேவி” அருவிவரை சென்று விட்டான். அது ஒரு அற்புதமான இடம். அந்த அருவியில் குளிக்க ஆனந்தமாக இருக்கும். ஆனால் அன்று அவர்கள் அதில் குளிக்கவில்லை. அதை ரசித்துக் கொண்டே இருந்ததில் பொழுது போனது அவர்களுக்குத் தெரிய வில்லை. வீட்டில் தேடுவார்கள் என்று பயந்து ஓடியேதான் அந்த மலையில் திரும்பி வந்தார்கள். வீட்டிற்க்குள் நுழையும் பொழுது மதியம் மணி ஒன்று. அவர்களைக் காணாமல் தேடி இருக்கிறார்கள். கண்டதும் அன்போடு கடிந்து கொண்டு, அவர்கள் செண்பகாதேவி அருவிக்குச் சென்று வந்ததை அறிந்து பதறிப் போனார்கள். “இந்த ரெண்டும் மகாப்பொல்லாதா இருக்கு…ஒன்னு கெடக்க ஒன்னானா நாங்க என்னடா பதில் சொல்லுவோம்” என்று சித்திம்மா (பார்வதிப் பாட்டி) சத்தம் போட்டாள். “நீ சும்மா வாய மூடிண்டிருடி..கொழந்தைகள் இப்படித்தான் தைர்யமா இருக்கணும்” என்று சின்னத்தாத்தா அவர்களைக் கட்டிக் கொண்டார். பாட்டி, தாத்தாவின் செல்லச் சண்டைக்கு நடுவில் அவர்களுக்கு மீனாக்ஷி சித்தி சாதம் போட்டாள். நல்ல பசி. ருசித்துச் சாப்பிட்டான். “கோந்தே..இனிமே இப்படி சொல்லிக்காம தனியா போக்கூடாது…அந்தக் காட்டுல பாம்பு, மிருகங்கள் இருக்கும்…அதனாலதான் சொல்லறேன்…இன்னிக்கு சாயங்காலமா சித்தப்பாவோட கோவிலுக்குப் போயிட்டு வாங்கோ…” என்று அன்போடு சித்தி சொன்னாள். இப்படி அவனும், ஸ்ரீதரும் பல நாட்கள் அந்தக் குற்றால மலையிலும், அருவிக்கரையிலும் கவலை இன்றித் திரிந்தனர் என்றால் அதற்கு அந்த செங்கோட்டைச் சித்தப்பா, சித்தியின் அன்புதான் காரணம். அவர்களுக்குக் குழந்தை இல்லை. அதனால் சித்தப்பாவின் சகோதரி சகுந்தாலா அத்தையின் இளைய மகன் “ஹரிஹரனை” தத்தெடுத்துக் கொண்டார். அந்த வழியில் பேரனும் பேத்தியும் பெற்று மகிழ்ச்சியாக எண்பது வயதுவரை வாழ்ந்தனர் அந்தச் செங்கோட்டைச் சித்தப்பாவும் சித்தியும். அவர்கள் ஆரோக்கியமாக இருந்தவரை அவனது குடும்பத்தில் நடந்த அத்தனை நிகழ்ச்சிகளுக்கும் அவர்கள் மிகுந்த உள்ளன்போடு கலந்து கொண்டது அவர்களது நல்ல பண்பைக் காட்டியது. அப்படித்தானே நல்ல உறவுகள் நமக்குப் பாடம் சொல்லி நம்மை வழி நடத்துகிறது. அவனும் அந்த உறவின் வலிமையை அறிந்து கொண்டு நடப்பதால் அவனது அடுத்த தலைமுறைக்கும் அத்தெய்வ குணங்களே வழித் துணையாக இருக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் உண்டோ?.

20.08.2015
அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

Leave a Reply

Your email address will not be published.