சுரேஜமீ

எண்ணங்கள்

 

பிறந்ததன் பயனை வாழ்வு சொல்லவேண்டுமெனில், வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என தீர்மானிப்பது நம் எண்ணங்கள்தான் என்பதை அறியும் எவரும் மண்ணில் வீழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை. அந்த அளவிற்கு நம்மைச் செதுக்குவது நம் எண்ணங்கள்!

அத்தகைய உயர்ந்த எண்ணங்கள் உருவாக அடிப்படைக் காரணிகள் எவை? அத்தகைய எண்ணங்களைச் செயலாக்குவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? அதன் மூலம் நம் வாழ்வின் பயனை அடைவது எப்படி? என்று அலசுவதுதான் இந்தப் பதிவின் இலக்கு ஆகும்.

எண்ணம்போல் வாழ்வு என்று கூறக்கேட்டிருக்கிறோம். ஏனோ நம் மனம் அதை ஒரு வார்த்தையாகவே பார்த்திருக்கிறது. மனம் என்ற மாளிகையை அலங்கரிக்கும் ஒப்பற்ற ஓவியமாக நம்முடைய எண்ணங்கள் இருக்கிறது என்பதை அறிந்தவர்கள்தான் வெற்றியாளார்கள் என்று சொன்னால் மிகையாகாது.

எதை நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிவிடுகிறாய் என்று சொல்கிறது வேதம்!

‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்கிறார் திருவள்ளுவர்.

peak1111111111-11

ஆக, வாழ்வின் உயரிய நோக்கங்களை வெளிப்படுத்துகிற எண்ண ஊற்று எப்படி இருக்க வேண்டும்?

என்பதைத் தீர்மானிக்கும் காரணிகளான சிலவற்றை உங்களின் பார்வைக்குத் தருகிறேன்!

1. கல்வி
2. குடும்பம்
3. சமூகம்
4. புத்தகம்
5. இலட்சியம்
6. சாதனையாளர்களின் வரலாறு
7. மன உறுதி

காரணிகளைச் சற்று விரிவாக, நம் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில், சுருக்கமாகக் காண்போம்!

1. கல்வி 

கல்விச்சாலை எனும் அறிவுக்கோயிலில் நம் மனதைத் திறந்து வைக்க முதலில் கற்றுக்கொள்ள வேன்டும். ஏதோ தேர்வுக்காகப் படிக்கும் பழக்கத்தைக் கைவிட்டு, நம்மைத் தேர்வாக்க நடைமுறைப் படுத்த வேண்டிய அணுகுமுறைகளாக,
எந்தப் பாடமாக இருந்தாலும், ,வாழ்வியல் சிந்தனைகளோடும், வாழ்க்கை நெறிகளோடும் ஒப்பீடு செய்து, நம்மை வளர்த்துக்கொள்ள ஏதுவாகப் படிக்க வேண்டும்.
அந்த வகையில், நம் எண்ணங்களை வலுவாக உற்பத்தியாக்கி, மேம்படுத்தும் பங்கில், மிக முக்கிய அங்கமாக இருப்பது கல்விமுறை என்பதைப் புரிந்துகொள்ளல் வேண்டும்.

2. குடும்பம்

நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் என்று சொல்வார்கள்.

நல்ல எண்ணங்கள் உருவாவதற்கு அடுத்த காரணியாக இருப்பது குடும்பம். நம்மை வாழ்வின் அடுத்தடுத்த நிலைக்கு அழைத்துச் செல்வதில், குடும்பத்தின் பங்கு தலையாயது ஆகும்.

‘சான்றோனாக்குவது தந்தைக்கு கடமை!’ – புறநானூறு

எத்தனையோ சாதனையாளர்களின் வெற்றிக்குக் காரணமாக, அவர்களது குடும்பச் சூழல் இருந்திருக்கிறது என்பதை வரலாறு சொல்கிறது. தந்தையின் செந்நீரும்; தாயின் கண்ணீரும் வாழ்வியல் லட்சியங்களை உருவாக்கும் ஒப்பற்ற எண்ணங்களுக்கு ஆணி வேராக இருந்திருக்கிறது என்றால், மறுப்பதற்கில்லை.

ஆகவே, நல்ல எண்ணங்களை வளர்ப்பதில் குடும்பத்தின் பங்கு இன்றியமையாதது.

3. சமூகம்

யாரோடு நாம் தொடர்பில் இருக்கிறோம் என்பது, நாம் எத்தகைய பண்பாளர் என்பதைக் காட்டிவிடும். நம் வாழ்வியல் மாற்றங்களுக்கு மிக முக்கியக் காரணமாக இருப்பது நம் சமூகம் எனும் கட்டமைப்பு ஆகும். வாழ்வில் வெற்றி பெற்றவர்களை அடிக்கடி சந்திப்பதும்; அவர்களோடு தொடர்பில் இருப்பதும், அவர்கள் அனுபவங்களை நினைவில் ஏற்றிக் கொள்வதும், நம் எண்ணங்களைச் செம்மைப் படுத்தும் என்பதை நம் அனுபவம் நமக்குச் சொல்லும்!

4. புத்தகம்

நண்பர்கள் செய்ய இயலாததை ஒரு நல்ல புத்தகம் செய்யக் கூடிய ஆற்றல் வாய்ந்தது. நல்ல புத்தகங்கள் நம்முள் எண்ணற்ற மாற்றங்களை ஏற்படுத்தும் ஒப்பற்ற உயர்வான எண்ணங்களுக்கு வித்தாக இருக்கக் கூடியது. அத்தகைய புத்தகங்களை மீண்டும், மீண்டும் படிக்க வேண்டும்.

படித்தால் மட்டும் போதுமா? அடுத்து என்ன செய்ய வேண்டும்? அதன் பயனாக விளைந்த நல்ல எண்ணங்களை உருவேற்றிச் செயலாக்கம் கொடுப்பதில்தான் வெற்றி அடங்கி இருக்கிறது.

5. இலட்சியம்

இலக்கு இல்லாத வாழ்வு திசை அறியாமல் செல்லும் படகு போன்றது. உயர்ந்த இலக்குகளுக்கு அடிப்படையாக இருப்பது நம்முள் தோன்றும் எண்ணங்களே!

வலுவாக வேரூன்றும் எந்த எண்ணமும் அதற்கான பலனை வழங்காமல் இருந்ததில்லை என்பதற்கு நம் வாழ்வின் அனுபவங்களே மிகச் சிறந்த சான்றாக விளங்கும்.

ஆகவே, மிகச் சிறந்த இலட்சியங்களை, நம் பெற்றோருக்கும், மற்றோருக்கும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய சாதனைகளாக இருக்கக்கூடிய இலட்சியங்களை,

நோக்கி நகர்வதற்கு அடிப்படையானது எண்ணங்கள்தான் என்பதை மறுப்பதற்கில்லை.

6. சாதனையாளர்களின் வரலாறு

என்னதான் இருந்தாலும், நமக்குத் தேவையாக இருப்பது

ஒரு உந்துதல்;
நம்மை வெற்றி நோக்கி நகரச் செய்யும் ஒரு சக்தி:
ஒரு நம்பிக்கை;
ஒரு ஊன்றுகோல்;
ஒரு அனுபவ அறிவாக இருப்பது

வெற்றியாளர்களின் வரலாறு ஆகும்.

அத்தகைய வெற்றியாளர்களின் வாழ்க்கை நிகழ்வுகள், அவர்களின் தொடர் முயர்சிகள், வாழ்வியல் சிக்கல்கள், உயர்ந்த இலட்சியங்களை அடைய அவர்கள் தந்த விலை என ஒவ்வொரு நகர்வும்,

நம்மை வெற்றி நோக்கி அழைத்துச் செல்லும் எண்ணங்களை விதைக்கும் ஒப்பற்ற செய்திகளைச் சொல்லும்!

7. மன உறுதி

இவை அனைத்தும் இருந்தாலும் மகாகவி பாரதி சொல்வது போல, நமக்குத் தேவை

மனதில் உறுதி;
வாக்கினில் இனிமை;
நினைவு நல்லது;

இவை இருந்தால் போதும். நம் எண்ணங்கள் வலுவாக இருப்பதற்கு வேறென்ன வெண்டும்?

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின் – திருக்குறள்

இதிலிருந்து நாம் கற்றுக் கொள்வது, நம் எண்ணங்களை மேம்படுத்தக் கூடிய சக்திகளை நம்மைச் சுற்றி வளர்த்துக் கொள்வதும்,

நம் தலையாய கடமையாக இருந்தால்,

வெற்றி நம் கதவைத் தட்டும் என்பது சத்தியம்!

எழுமின்! விழிமின்! அயராது உழைமின்!

என்ற தாரக மந்திரத்தை உச்சாடனம் செய்து, எண்ணங்க்களைச் செதுக்குவோம்!

வெற்றி தன்னைச் செதுக்கட்டும் நம் வாழ்வின் பக்கங்களை வைத்து…..

அதுவரை தொடர்ந்து சிந்திப்போம்………

அன்புடன்
சுரேஜமீ

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *