சொந்தங்கள்: நான் ரசித்த புத்தகம்

0

— உமாஸ்ரீ.

சொந்தங்கள்நான் சமீபத்தில் ஹேமா கிருஷ்ணமூர்த்தி எழுதிய “சொந்தங்கள்” என்ற நாவலைப் படித்தேன். நூற்று நாற்பத்து நான்கு பக்கங்கள் கொண்ட அழகான நடையுடன் கூடிய தித்திக்கும் புதினம்.

கதை ஆந்திர மாநிலத்தில் உள்ள செகந்தாராபாத் நகருக்கு அருகிலுள்ள ஒரு ரயில்வே காலனியில் ஆரம்பிக்கிறது. ரயில்வே காலனியில் உள்ள அனைவரையும் பற்றி சிறப்பான அறிமுகம் கொடுக்கிறார் ஆசிரியர். இதில் நகைச்சுவை பொங்கி வழிகிறது.

ரயில்வேயில் வேலை செய்யும் ரங்கநாதன், கணேஷ் இருவரும் நல்ல நண்பர்கள். அது போலவே ரங்கநாதன் மகள் சாந்தியும் கணேஷ் மகன் ரமேஷூம் நண்பர்கள். இருவரும் ஒன்றாகவே ரயில்வே ஸ்கூலுக்குப் போய் வந்தார்கள். கால ஒட்டத்தில் ரமேஷ் பி. காம். பாஸ் செய்து மெடிக்கல் ரெப்ரசெண்டேடிவ் வேலையில் சேர்ந்து விட்டான். சாந்தி எம். ஏ. இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய தந்தை கல்யாணத்திற்கு வரன் பார்த்தார். ரமேஷ் அவரிடம் பெண்ணிற்கு வரன் பார்க்கிறீங்களா என்று கேட்டான். அதற்கு அவர் “ உனக்கு அவளைக் கல்யாணம் செய்து கொள்ள விருப்பமா? ”என்று கேட்டதும் அதிர்ந்து போனான் ரமேஷ்.

“அந்த மாதிரி விருப்பமே எனக்கு இருந்ததில்லை. இனியும் இருக்காது. குழந்தைகளாக விளையாடியபோது கூட அப்பா அம்மா விளையாட்டு விளையாடியது இல்லை. அவளை மனைவியாய் நினைத்து கூடப் பார்க்க முடியாது . எப்படி நீங்கள் அப்படிக் கேட்கலாம்,“ என்றான்.

சாந்தியைப் பெண் பார்க்க வந்தது ஒரு சினிமா டைரக்டர் குடும்பம் . மாப்பிள்ளையும் சினிமா துறையில் உதவி டைரக்டராக இருக்கிறான். அவர்களுக்குப் பெண் பிடித்துப் போய் கல்யாணமும் சென்னையில் நடந்தது. சாந்தி சென்னைக்குப் போய் விட்டாள். காலச் சக்கரம் சுழன்றது. கணேஷ் வானுலகம் சென்று விட ரமேஷ் குவாட்டர்ஸை காலி செய்து விட்டான். அவனுக்குப் பம்பாயில் வேலை கிடைத்து விடவே அவன் தன் தாயாருடன் பம்பாய் சென்று விட்டான். சாந்தியின் கணவன் ரவி குடிகாரன் . படம் எடுப்பதற்காக ஏராளமாய் கடன் வாங்கி தத்தளித்துக் கொண்டிருந்தது அந்தக் குடும்பம்.

ரமேஷ் பம்பாயில் வசிக்கும் மீரா என்ற மிக அழகிய பெண்ணை மணம் செய்து கொண்டான். அவனுக்குப் பெண் குழந்தை பிறந்தது. அவள் குழந்தை சுமதி.

குமுதம் பத்திரிகையில் வந்த அந்தப் பேட்டியை தற்செயலாய் படித்த ரமேஷ், சாந்தி நடிக்க வந்துவிட்டாளே என்று வருந்தினான். மீராவின் மனதில் ரமேஷின் அடிமனதில் சாந்தி இருக்கிறாளோ? நான் ஏமாந்தவளா?……. சந்தேகம் என்னும் இருள் படர்ந்தது. மீராவும் ரமேஷும் ஒரு முறை சென்று சாந்தியைப் பார்த்து விட்டு வந்தார்கள். அங்கு போனதும் சாந்தியிடம் பழகியதும் மீராவுக்கு ரமேஷிடம் ஏற்பட்ட சந்தேகம் அறவே நீங்கி விட்டது. சாந்தியிடமிருந்து முதலில் கடிதம் வந்து கொண்டிருந்தது . பிறகு நின்று விட்டது. ஒரு நாள் சாந்தியிடமிருந்து ”சீக்கிரம் வந்து என்னைப் பார் ”என்று கடிதம் வந்திருந்தது. ரமேஷ் சென்னைக்குப் போய் சாந்தியைப் பார்த்தான். அவள் தனியாகத்தான் தங்கியிருந்தாள். கணவன் ரவி வேறு ஒருத்தியுடன் குடியும் குடித்தனமாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தான். என்னுடைய பெண்ணை டாக்டர் குல்கர்னிக்கு தத்து கொடுத்துவிட்டேன் என்று கூறி அதற்கான காரணத்தையும் சொன்ன போது அதிர்ந்து போனான் ரமேஷ். அவளுக்கு மாலைக் கண் நோய். அதுமட்டுமில்லாமல் புற்று நோய். ரவி சுமதியை திரைப்படத்தில் நடிக்க வைக்க முயன்றான். அவனிடமிருந்து பாதுகாக்க வேறுவழியில்லாமல் சுமதியைத் தத்து கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பம்பாய் வந்ததும் ரமேஷ், டாக்டர் குல்கர்னியைத் தேடி கடைசியில் சுமதி குல்கர்னியை கண்டு பிடித்து விட்டான். ஆனால் சுமதி தன் தாயை பார்க்க மறுத்து விட்டாள். ரமேஷ் காரணத்தைச் சொல்லியவுடன் சம்மதித்தாள். தாயும் மகளும் சந்தித்தனர். உருக்குலைந்த அம்மாவை பார்த்துத் திடுக்கிட்டாள் சுமதி. அம்மாவைப் பத்தி என்னவெல்லாம் நினைத்திருக்கிறேன்- சுயநலக்காரி, கல்மனசு கொண்டவள் என்று … நெஞ்சு பொறுக்காமல் அழுதாள்.

சாந்தி அடுத்த நாள் அங்கிருந்து போக வேண்டும். படுக்கையில் படுத்தவள் நடு இரவில் தூக்கம் கலைந்து விழித்துக் கொண்டாள். ஒரு வண்ணத்துப் பூச்சி, உயர உயரக் கிளம்பி கண் பார்வையிலிருந்து மறைந்தது என்று அவள் மறைவுடன் கதை முடிகிறது. சாந்திக்கும் ரமேஷூக்கும் உள்ள உறவு ஒரு பந்தம் ஒரு விசித்திரம் . பூர்வ ஜென்ம தொடர்பு . இருவரும் நண்பர்களாகவே இருக்க முடியும் என்பதைக் காட்டியிருக்கிறார் ஆசிரியர். காதல், மகிழ்ச்சி, நட்பு, சோகம் ஆகிய எல்லா ரசங்களும் கலந்த ஆரம்பம் முதல் முடிவு வரை விருவிருப்பான கதை.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.