Month: October 2015

  • அறிந்துகொள்வோம் -21 (பரிதிமாற் கலைஞர்)

    -மேகலா இராமமூர்த்தி

    தமிழ்வானில் ஒளிரும் எழிற்பரிதி!

    தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடும் சூழ்கலைவாணரும் இவள் என்று பிறந்தவள் என்று உணரமுடியாத தொன்மையுடையவள் நம் தமிழன்னை. நெஞ்சையள்ளும் சிலம்பும், மனங்கவரும் மேகலையும், சிந்தை மயக்கும் சிந்தாமணியும் அன்னையவள் எழிலைக் கூட்டின. தேவாரமும் திருவாசகமும் திருவாய்மொழியும், இன்னபிற பனுவல்களும் பக்திமணம் பரப்பி அவளைப் பரவசமாக்கின. ஆனால் காலப்போக்கில் நம்மனோர் தாய்த்தமிழின் சிறப்பை மறந்து வடமொழிபால் அதிகவேட்கை கொள்வாராயினர்.

    வடமொழியும் தமிழும் கலந்து எழுதுவது மணியும் முத்தும் கலந்ததுபோல் அதிக அழகுடைத்து என்றெண்ணியவராய், ’மணிப்பவள நடை’யை உருவாக்கி அதில் எழுதலாயினர். இதனால் தாய்த்தமிழின் தூய்மை அழிந்ததேயொழிய அதன் அழகு சிறக்கவில்லை. இதனைக் கண்ணுற்ற தமிழறிஞர் சிலர் மணிப்பவள நடைக்கு விடைகொடுத்து, மணியான தமிழ்நடையிலேயே எழுதுதல் வேண்டும் எனச் சிந்திக்கத்தொடங்கினர். இந்தத் தனித்தமிழ்ச் சிந்தனையைத் தமிழ்மண்ணில் விதைத்த முன்னோடிகளில் குறிப்பிடத்தக்கவர் சூரியநாராயண சாஸ்திரியார் எனும் திருநாமம் கொண்ட பெருந்தகையாளர்.

    parithiமாடமலி கூடலில் (மதுரையில்) பரங்குன்றிற்கு அருகிலுள்ள விளாச்சேரி எனுமிடத்தில் 1870-ஆம் ஆண்டு, ஆகஸ்டு 11(?)-இல் கோவிந்த சாஸ்திரி – இலட்சுமி அம்மாள் இணையருக்குத் தவப்புதல்வராய்த் தோன்றினார் சூரியநாராயண சாஸ்திரியார். தந்தையிடம் சமஸ்கிருதமும், மதுரை சபாபதி முதலியாரிடம் தமிழும் பயின்ற சாஸ்திரியார், மதுரை உயர்நிலைப்பள்ளியில் தம் பள்ளிப்படிப்பை நிறைவுசெய்து, இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியின் உதவித்தொகையுடன் சென்னை கிறித்தவக் கல்லூரியில் இளங்கலை வகுப்பில் மாணாக்கராய்ச் சேர்ந்தார். அதில், மாநிலத்திலேயே முதல் மாணாக்கராய்த் தேறிய அவருக்கு அதே கல்லூரியில் நிறைந்த ஊதியத்துடன் தத்துவத் துறையில் பணிபுரிய வாய்ப்புக் கிடைத்தும் அதனை மறுத்துக் குறைந்த ஊதியத்தில் தமிழ்த்துறை ஆசிரியராய்ப் பணியமர்ந்தார். அப்போது கிறித்தவக் கல்லூரியின் முதல்வராயிருந்த டாக்டர் மில்லர் (A Scottish Educationalist),  சாஸ்திரியாரின் தமிழார்வத்தைக் கண்டு வியந்து, பிறதுறை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் அதே (உயர்)ஊதியத்தை அவருக்கும் வழங்கினார். கல்லூரியளவில் தமிழாசிரியர் பணியை விரும்பி ஏற்றுக்கொண்ட முதல் பட்டதாரி சூரிய நாராயணரே என்பது குறிப்பிடத்தக்கது.

    கேட்டார்ப் பிணிக்கும் பைந்தமிழ் நடையில் அவர் நடாத்தும் பாடங்களைக் கேட்டின்புறுவதற்காகப் பிறதுறை மாணாக்கரும் மலரை மொய்க்கும் வண்டுகளாய் அவர் வகுப்பில் வந்து கூடுவராம். தமிழறிவும் ஆர்வமும் மிகுந்த மாணாக்கர்கட்குத் தம் இல்லத்திலும் தனியாக வகுப்புக்கள் எடுத்துத் தமிழ்த்தேனை அவர்களுக்கு அள்ளி வழங்கியுள்ளார் சாஸ்திரியார்.

    இவரது தேர்ந்த தமிழ்ப்புலமை கண்ட பதிப்புச்செம்மல், யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரம் பிள்ளையவர்கள், சூரியநாராயண சாஸ்திரியாரைத் ’திராவிட சாஸ்திரி’ எனும் பட்டம் தந்து சிறப்பித்திருக்கின்றார்.

    தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் எனும் மும்மொழிப் புலமை நிரம்பப் பெற்றவர் சூரியநாராயண சாஸ்திரியார். ஆயினும், தமிழ்மீது தணியாத காதல்கொண்ட அவ்விளம் அறிஞர் வடமொழியில் அமைந்திருந்த தம் பெயரைத் தனித்தமிழில் ’பரிதிமாற் கலைஞர்’ என்று மாற்றிக்கொண்டதைத் ’தனிப்பாசுரத் தொகை’ எனும் அவருடைய செய்யுள்நூல் நமக்கு அறியத்தருகின்றது. இத்தனிப்பாசுரத் தொகையிலுள்ள செய்யுள்கள் அனைத்தும் ஆங்கிலத்திலுள்ள சானட்டைப் போல் (Sonnet – a poem of 14 lines) தமிழில் 14 அடிகளில் அழகுற இயற்றப்பட்டிருக்கின்றன.

    காட்டாக, ’புள்’ எனும் தலைப்பில் பரிதிமாற் கலைஞர் எழுதிய அருமையான  செய்யுளொன்று:

    புள் (பறவை)

    புள்ளே மென்சிறைப் புள்ளே பல்வகை
    வண்ணமும் மேவிய வனப்புடைப் பறவாய்

    எண்ணிய எண்ணமும் என்கொலோ அறியேன்
    தானுமின் புற்றுத் தன்னிசை அதனால்
    ஏனைய உயிர்க்கும் இன்பம் செய்குவை
    வேண்டுழிச் செல்வை வேண்டுந புரிகுவை
    வேண்டா என்றுநீ விழைசெயல் தகைக்குநர்  
    ஈண்டுச் சிலருளர் இன்ப உருவினோய்
    கவற்சிகொண் டுழலும்அக் கண்ணில்புன் மாக்கள்   
    ஐயகோ நின்னை அருமையிற் பேணார்
    வெய்ய கணைகொடு வீழ்ப்பர் அதான்று     
    நெய்பெய் தட்டுநிற் குய்ம்மணம் கமழ
    எயிற்றிடை மென்று வயிற்றின்
    இட்டு நாள்தொறும் கெட்டுலை வாரே!

    (தகைக்குநர்-தடுப்பவர்; அதான்று -அதுமட்டுமல்லாமல்; குய்ம்மணம் -தாளிக்கும் மணம்)

    வண்ணத்தாலும் இசையாலும் மக்களை மகிழ்விக்கும் புள்ளின் பெருமையறியா ம(மா)க்கள் அதன் விருப்பப்படி அதனைச் சுதந்திரமாய்ப் பறக்கவிடாது, கணையால் வீழ்த்தி நெய்சொரிந்து அதனைச் சமைத்துண்ணும் அவலத்தை இச்செய்யுளில் கண்டிக்கின்றார் பரிதியார்.

    தமிழை இயல், இசை, நாடகம் எனும் மூன்று துறைகள் கொண்ட ’முத்தமிழ்’ என்று தமிழர்கள் பெருமிதத்தோடு பகர்வதுண்டு. இவற்றில் முதலிரண்டையும் வளர்த்த அளவிற்கு நாடகத்தமிழை முனைப்புடன் வளர்க்கத் தவறிவிட்டனர் நம் முன்னோர். குற்றுயிரும் குலை உயிருமாக அழிவின் விளிம்பில் நின்றுகொண்டிருந்த அவ்வினிய நாடகத் தமிழுக்குப் புத்துயிர் ஊட்டத் தலைப்பட்டனர் மூவர். அவர்கள், சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார், மற்றும் பரிதிமாற் கலைஞர் ஆகியோர். இவர்களைத் ’தமிழ் நாடக மூவர்’ என்று மக்கள் அன்போடு அழைத்துவருகின்றனர்.

    நாடகக்கலைக்கு மறுவாழ்வளித்தவர்களில் ஒருவராகத் திகழும் பரிதிமாற் கலைஞர், கலாவதி, ரூபாவதி அல்லது காணாமற்போன மகள் முதலிய நாடகங்களை அழகிய உரைநடைத் தமிழில் படைத்தளித்துள்ளார். அதுமட்டுமல்லாது, நாடகங்களை எவ்வாறு இயற்றவேண்டும், அதற்குரிய இலக்கணங்கள் யாவை என்பவற்றை விளக்கி ‘நாடகவியல்’ எனும் அரிய நூலொன்றையும் யாத்துள்ளார்.

    செய்யுள் வடிவில் இவரியற்றிய மற்றொரு நாடகம் ’மான விஜயம்’ (மானத்தின் வெற்றி) என்பதாகும். இந்நூலில் கோச்செங்கட் சோழனால் சிறைப்படுத்தப்பட்ட கணைக்கால் இரும்பொறை, மானமே பெரிதென்று சிறையில் உயிர்நீத்ததனை மிகவும் உயிரோட்டமாய்க் காட்சிப்படுத்தியுள்ளார். (இம்மன்னன் இறக்கும் தறுவாயில் எழுதிய ’குழவி இறப்பினும்’ என்று தொடங்கும் வீரம்செறிந்த பாடல் புறநானூற்றில் 74-ஆம் பாடலாக இடம்பெற்றுள்ளதை அறிக.)

    இவையேயன்றி, ‘மதிவாணன்’ எனும் நாவல், `பாவலர் விருந்து’ `சித்திர கவி விளக்கம்’ போன்ற கவிதை நூல்கள், நற்றமிழ்ப் புலவோரின் வாழ்க்கை வரலாற்றைச் சுட்டும் ’தமிழ்ப்புலவர் சரித்திரம்’ எனும் கட்டுரை நூல் ஆகியவையும் பரிதிமாற் கலைஞரின் கைவண்ணத்தில் உருவாகியுள்ளன.

    அவர் இயற்றிய நூல்களிலேயே பெரிதும் போற்றப்படுவது ‘தமிழ்மொழியின் வரலாறு’ எனும் ஆராய்ச்சி நூலேயாகும். அதில், தமிழ் ஓர் உயர்தனிச் செம்மொழியாவது யாங்ஙனம்?’ என்பதைச் சுவைபட விளக்கியுள்ளார் அச்சான்றோர்.

    அவ்விளக்கத்தை நாமும் அறிந்துகொள்வோமே…

    ”தான் வழங்கும் நாட்டின்கண் உள்ள பலமொழிகளினும் தலைமையுடையதும் அவற்றினும் மிக்க தகவுடையதுமான ஓர் மொழியே உயர்மொழியாகும். இவ்விலக்கணங்கொண்டு ஆராயுமிடத்து, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளுக்கெல்லாம் தலைமையுடையதும் அவற்றினும் மேதகவுடையதுமாகிய ’நம்தமிழ் ஓர் உயர்மொழி’யாகும்!

    தான் வழங்கும் நாட்டில் பயின்றுவரும் பிறமொழிகளின் உதவியின்றித் தனித்தியங்கும் தன்மையுடைய மொழியே தனிமொழி எனும் தகுதியுடைத்து. தான் பிறமொழிகளுக்குச் செய்யும் உதவி மிகுந்தும், தனக்குப் பிறமொழிகள் செய்யும் உதவி குறைந்துமிருத்தலே வழக்காறு. தமிழின் உதவியின்றித் தெலுங்கு முதலிய மொழிகள் இயங்கமாட்டா. ஆனால் அவற்றின் உதவியின்றித் தமிழ் தனித்தியங்கும் பெற்றியது. ஆதலின் தமிழ் ஓர் தனிமொழியே!

    இனிச் செம்மொழியாவது யாது?

    ’திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி புகல் செம்மொழியாம்’ என்பது இலக்கணம். இம்மொழிநூல் இலக்கணத்திற்குச் சாலப் பொருத்தமுடையது தமிழ்மொழி. பிறமொழிச் சொற்களன்றித் தன்மொழிச் சொற்கள் மிகுந்திருத்தலே தூய்மொழியாகும். அவ்வகையில் தமிழ் தூய்மொழியுமாகும். அவ்வாறே தமிழில் ஆளப்படும் சொற்கள் நம் மக்களின் பண்பாலும் நாகரிகத்தாலும் செழுமையுற்றவை. எனவே தமிழ்மொழி ’செம்மொழி’ என்பது திண்ணம். இதனாலன்றோ நந்தமிழ் செந்தமிழ் என்று நல்லிசைப் புலவரால் தொன்றுதொட்டு நவின்றோதப்படுகின்றது. ஆதலால் செந்தமிழ் நாட்டின்கண் சிறந்தொளிரும் அமிழ்தினுமினிய தமிழ்மொழி எவ்வாற்றான் ஆராயினும் உயர்தனிச் செம்மொழியே ஆகும் என்று தெளிக!” என்கிறார். 

    நம்மொழியைச் செம்மொழி என்று முதன்முதலில் தமிழ்கூறு நல்லுலகுக்கு மெய்ப்பித்துக் காட்டிய பெருமை பரிதிமாற் கலைஞரையே சாரும்.  (He was the first person to campaign for the recognition of Tamil as a classical language.)

    இத்துணைச் சிறப்புக்கள் வாய்க்கப்பெற்ற தமிழை, கல்லூரிப் பாடத்திட்டத்திலிருந்து வில‌க்குவதற்குச் சென்னைப் பல்கலைக்கழகம் (University of Madras) 1902-ஆம் ஆண்டு முடிவெடுத்தது. என்னே நம் மக்களின் பேதைமை! அதனையறிந்த பரிதிமாற் கலைஞர், தமிழ்த்தொண்டர் மு.சி.பூரணலிங்கம் பிள்ளையுடன்  இணைந்து அம்முடிவை முறியடித்தார். கல்லூரிப் பாடத்திட்டத்தில் தமிழ்மொழியும் தொடர வழிவகுத்தார் என்பது வரலாறு காட்டும் உண்மை.

    தமிழ்க்குழந்தைகள் தம் தாய்மொழியாம் தமிழிலேயே கல்விகற்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியவர் இந்நல்லறிஞர். தமிழ் வாழவும், தமிழர் வாழவும் தம் வாணாளின் இறுதிவரை உறுதியோடு பாடுபட்ட பரிதிமாற் கலைஞர், 1903-ஆம் ஆண்டு தம் 33-ஆம் அகவையில் பொன்னுடல் நீத்துப் புகழுடல் கொண்டார். ஆம்! இரக்கமற்ற எலும்புருக்கி நோய் (tuberculosis), தமிழ்வேட்கை மிகுந்த அவ்விளைஞரை அகாலத்தில் வாரிச்சென்றது நம் தவக்குறைவே!

    பரிதிமாற் கலைஞரின் மறைவைக் கேட்ட கிறித்தவக் கல்லூரி முதல்வர் டாக்டர் மில்லர், ”என் புருவம் சுருக்கமேறி, கண்களை மறைக்கும் முதுமையில் வாடுகின்றேன் நான்; ஆனால் நடுவயது வருவதற்கு முன்னரே நற்றமிழ்ப்பரிதி அகன்றானே!” என்று கையற்றுக் கலங்கியுள்ளார்.

    ”இவர்மட்டும் அதிககாலம் வாழ்ந்திருந்தால் தமிழன்னையை அரியாசனத்தில்…அவளுக்கேற்ற சரியாசனத்தில் அமர்த்தி அழகுபார்த்திருப்பார்” என்று இத்தனித்தமிழ் மறவருக்குப் புகழாராம் சூட்டியுள்ளார் தமிழ்த்தென்றல் திரு.வி.க.

    தமிழ் செம்மொழியாய்ப் போற்றப்படல் வேண்டும் எனும் பரிதிமாற் கலைஞரின் நற்கனவு நெடுங்காலத்திற்குப்பின் இப்போது நனவாகியிருப்பது அவரது அரிய முயற்சிக்குக் கிடைத்த பெரிய வெற்றியே!

    தமிழெனும் தையல்நல்லாள் இத்தரணியில் பீடுநடை பயிலுங் காலம்வரைச் செம்பரிதியாய்ச் சுடர்விட்டுப் புகழ்பரப்பிக்கொண்டிருப்பார் பரிதிமாற் கலைஞர்! 

    கட்டுரைக்கு உதவிய தளங்கள்:

    https://en.wikipedia.org/wiki/Parithimar_Kalaignar
    http://tamil.thehindu.com/opinion/blogs/பரிதிமாற்-கலைஞர்-10/article7391399.ece
    https://ta.wikipedia.org/wiki/ பரிதிமாற்_கலைஞர்

     

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

    பழமொழி: பறைக்கண் கடிப்பிடு மாறு

    வெள்ளமாண் பெல்லாம் உடைய தமரிருப்ப,
    உள்ளமாண் பில்லா ஒருவரைத் – தெள்ளி
    மறைக்கண் பிரித்தவரை மாற்றா தொழிதல்,
    பறைக்கண் கடிப்பிடு மாறு.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    வெள்ள மாண்பு எல்லாம் உடைய தமர் இருப்ப,
    உள்ளம் மாண்பு இல்லா ஒருவரைத் தெள்ளி,
    மறைக்கண் பிரித்து, அவரை மாற்றாது ஒழிதல்-
    பறைக்கண் கடிப்பு இடுமாறு.

    பொருள் விளக்கம்:
    (அளவிட இயலாத, மிகுந்த) வெள்ளம் போன்ற நற்பண்புகள் யாவும் கொண்ட உறவினர்கள் இருந்திட, உள்ளத்தில் நற்பண்பு இல்லாத ஒருவரும் உடனிருந்தால், தெளிவாக ஆராய்ந்து, மறைக்கப்பட வேண்டிய இரகசியம் ஒன்றைப் பேசும்பொழுது பிரித்து, அவரை வெளியேற்றத் தவறினால், அது (தமுக்கு அடிப்பது போல) பறையின் மேல் சிறுதடி கொண்டு அடிப்பதாகும் (தகவலை அக்கயவர் பரப்பிவிடுவார்).

    பழமொழி சொல்லும் பாடம்: மறைக்கப்படவேண்டியவற்றைப் பேசும்பொழுது, இரகசியத்தைக் காப்பாற்றத் தெரியாத குணமுள்ளவரை விலக்காவிட்டால், தமுக்கடிபடிப்பது போல அவரே இரகசியத்தைப் பரப்பிவிடுவார். இதனைக் குறள்,

    அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
    மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான். (குறள்: 1076)

    தாம் அறிந்த இரகசியங்களை வலியச் சென்று பிறருக்குப் பரப்பிவிடும் கயவரை, செய்தி அறிவிக்க அடிக்கப்படும் பறைக்கு ஒப்பானவர் என்று கூறுகிறது.

    Share
  • திருக்குறளுக்குப் புது விளக்கம் – 20

    – புலவர் இரா. இராமமூர்த்தி.

    காதலின் பெருமையை சற்றும் தாழ்த்தாமல், மிகவும் உயர்வாகக் கூறிக் கற்பவர் உள்ளத்தில் பெருமிதத்தை உருவாக்கியவர் திருவள்ளுவரே! அவர் இயற்றிய காமத்துப் பால் என்ற பகுதி முழுவதும் இனிமையும், மென்மையும் கலந்து நம் உள்ளத்தை மேலுயர்த்துகின்றது! காமம் என்ற சொல்லின் சிறப்பை அவரே ஒரு திருக்குறளில் வெளிப்படுத்துகிறார்!

    “மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
    செவ்வி தலைப்படு வார்!” (1269)

    என்பதே அக்குறட்பா! ”காதல் அடைதல் உயிரியற்கை” என்பது பாவேந்தரின் கவிதை வரி! எந்த உயிரும் காதல் வசப்படும்! மனிதன் மட்டும் காதலின் சிறப்பை அறியாமல் காமவெறி கொண்டு குற்றம் புரிகிறான்! பொருளாசை, உடலாசை என்பன மனித குலத்தின் தாழ்வுக்கே வழி வகுக்கின்றன! அவற்றைக் ”காம காஞ்சனம்” என்று அடையாளப் படுத்தி அவற்றை நீக்க வேண்டும் என்று குருதேவர் ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்சர் உபதேசிக்கிறார்!

    மக்களின் காதல், அறநெறியை விட்டு விலகும்போதுதான் பெண்ணாசையாகிக் காமம் கொள்ள வைக்கிறது! இந்தக் காமம் பற்றிய திருவள்ளுவரின் குறட்பாக்கள் தமிழின் பழைய இலக்கண நூலான தொல்காப்பியத்தின் அகப்பொருள் கருத்துக்களின் விளக்கமாகவே அமைந்ததை இதற்கு முன் எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறேன்! காட்சி, ஐயம், தெளிவு, குறிப்பறிதல் என்ற களவியல் நிகழ்ச்சிகளின் வரிசையை ”அணங்குகொல்” எனத் தொடங்கும் குறட்பாவில் நாம் கண்டறியலாம் என்றே குறிப்பிட்டுள்ளேன்! [http://www.vallamai.com/?p=62666]

    காதலியும் காதலனும் தற்செயலாகச் சந்தித்துக் கொண்டபின், அவர்களின் அன்பு மேலும் வளர்ந்து மீண்டும் மீண்டும் சந்திக்க வைக்கிறது! இந்தச் சந்திப்பு, இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற்கூட்டம், என்று மேலும் வளர்கிறது. தலைவன் தன் தோழனிடமும், தலைவி தன் தோழியிடமும் மட்டுமே காதலைப் பற்றிக் கூறுவர்! மற்றவர் அறியாமல் வளரும் காதலே களவியல் எனப்படும்! இங்கே தலைவன் தோழனிடம் தன் காதலியைப் பற்றிச் சொல்லி, அவளை அடிக்கடி சந்திக்க உரிய உதவிகளைச் செய்யுமாறு தோழனை வேண்டுகிறான்! தோழனிடம் தலைவன், உதவி வேண்டுவதை மகாகவி பாரதியார்,

    ”பொன்னவிர் மேனி சுபத்திரை மாதினைப்
    புறங்கொண்டு போவதற்கே
    என்ன உபாயம் எனக்கேட்டால் அதை
    இருகணத்தே உரைப்பான்!”

    என்ற பாடலில் விளக்குகிறார்! கடவுளே தோழனாக விளங்கிக் காதலை நிறைவேற்றிய சிறப்பை நம் சமயம், கண்ணன்- அருச்சுனன் ; சிவபெருமான்- சுந்தரர் வரலாறுகளில் குறிப்பிடுவதைக் காணலாம்!

    பண்டைத் தமிழர்களின் காதல் வாழ்க்கையின் சிறந்த பகுதிகளைக் காட்டும் திருவள்ளுவரின் ‘காமத்துப்பால்’படிப்போர் உள்ளத்தில் ஆனந்தக் கனவுகளை உருவாக்குகின்றது! நம்மை அந்தக் காலத்துக்கே அழைத்துச் செல்கின்றது! அவ்வகையில் இங்கே ஒரு திருக்குறள் புதிய விளக்கத்தை அளிக்கிறது! தலைவியின் அழகைத் தோழனிடம் வருணித்த தலைவன் அவளுடைய கண்களின் அழகைப் பாராட்டுகிறான்! அப்போது, ”இவள் கண்ணழகை கண்ட குவளைமலர் இவளது கண்ணழகு போல் தன்னழகு இல்லையே என்று நாணித் தலை குனிந்து நிலத்தை நோக்கும்” என்று கூறுகிறான்! இதனைக் கூற வந்த வள்ளுவர், ‘காணின்’ என்ற சொல்லை முதலில் கூறுகிறார்! இந்தக் குவளை மலருக்குக் காணும் ஆற்றல் அமைந்து, அது இவள் கண்ணைக் காணின், என்பது இதன் பொருள்! இது நமக்கு ஒரு புதிய அணுகுமுறையைக் காட்டுகிறது! அதனால்தான் குறுந்தொகைப் பாட்டில் நீயறிந்த பூக்களில் ஏதேனும், இவள் கூந்தலுக்கு நிகரான நறுமணம் பெற்றுள்ளதோ ?” என்று வண்டினைக் கேட்பதாக இறையனாரின் பாடல் உள்ளது!

    அஃறிணைப் பொருள்களுக்கும், உயர்திணைக்குரிய காணும் திறனும், கேட்கும் திறனும், பேசும் திறனும் இருப்பதாக இலக்கியங்களின் அகத்திணைப் பாடல்கள் கூறுகின்றன! அவ்வகையில் இங்கே குவளை மலர் காணும் திறன் பெற்றிருப்பதாக வள்ளுவர் கூறுகிறார்! இப்பாடலில்,” மாணிழை கண்ணுக்கு நாம் ஒப்பாக மாட்டோம் என்று குவளைமலர்கள் கருதி, நாணம் கொண்டு தலை குனிந்து நிலம் நோக்கும் ” என்ற பொருளில் , ”மாணிழை கண் ஒவ்வேம் என்று குவளை கவிழ்ந்து நிலன் நோக்கும் ” என்று பாடுகிறார்! குவளை கவிழ்ந்து நிலன் நோக்குவது, இது வரை மேல்நோக்கி மலர்ந்த நீலப்பூ , இவள் கண்ணைக் கண்டு வெட்கித் தலைகுனிவதை மட்டுமே குறிக்கின்றது என்றுதான் கருதினேன்! ஆனால் கவிழ்ந்து தலைகுனியும் என்று கூறாமல், ”நிலன் நோக்கும்” என்று வள்ளுவர் கூறியதில் ஒரு புதிய பார்வை இருப்பதாக எனக்குத் தோன்றியது!

    அதாவது, குவளைமலர், நீரில் தோன்றிய பூ! இந்தப் பெண்ணோ, நிலத்தில் தோன்றியவள்! இந்தப் பெண்ணின் கண்கள் என்னை விட வண்ணத்திலும், வடிவிலும், மென்மையிலும், உயிர்ப்பிலும் மிகச்சிறந்து விளங்குவதற்கு, இவள் தோன்றிய பூமியின் தனிச் சிறப்புதான் காரணமோ? என்று, அக்குவளைமலர் சற்றே கவிழ்ந்து, இவள் தோன்றிய தரையை நோக்கிப் பெருமூச்சு விடுகிறதோ? என்று கருதினார் போலும்! இதனைக் குறிக்கவே ”கவிழ்ந்து நிலன் நோக்கும்!” என்று எழுதினார். என்பது இந்தத் திருக் குறளுக்கேற்ற பதிய விளக்கமாக நாம் கொள்ளலாமல்லவா? இப்போது அந்தக் குறளைப் படிப்போம்.

    “காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
    மாணிழை கண்ணொவ்வேம் என்று!”(1014)

    “தெள்ளுத மிழ்நடை சின்னஞ் சிறிய இரண்டடிகள்
    அள்ளுதொ றுஞ்சுவை உள்ளுந்தொறும்உணர் வாகும்வண்ணம்
    கொள்ளும் அறம்பொருள் இன்பம்அ னைத்தும் கொடுத்ததிரு
    வள்ளுவ னைப்பெற்ற தால்பெற்ற தேபுகழ் வையகமே!”

    என்று பாவேந்தர் பாடியதன் உண்மையை இங்கே நாமும் உணர்ந்து இன்புறுகின்றோம்!

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (171)

    –சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    மானிட வாழ்க்கை என்பது மனிதருக்கு வாய்ப்பது அவர்கள் அறிந்த வகையில் ஒரேயொரு முறைதான். விந்தாக அன்னையின் கருவறையில் விதைக்கப்பட்டு மானிட உருவமாக இம்மண்ணின் மடியில் விழுகிறோம். குழந்தை, வாலிபம், வயோதிகம் எனும் மனித பருவத்தின் காலங்களைக் கடக்கும் நமக்கு ஒவ்வொரு பருவத்திலும் சமூகத்தினால் எதிர்பார்க்கப்படும் கடமைகள் எம்மீது திணிக்கப்படுகிறது. விரும்பியோ, விரும்பாமலோ இக்கடமைகளை நிறைவேற்றும் கட்டாயத்திற்குள்ளாக்கப்படும் நம்மில் சிலர் இதனை முற்றாக நிராகரித்து நடக்க முற்படும்போது அவர்களின் மீது சமுதாயம் ஒரு முத்திரை குத்துகிறது. வாழ்வில் எதிர்பார்க்கப்பட்ட கடமைகளை முடிந்தளவு திருப்திகரமாக நிறைவேற்றி விட்டு வயோதிகம் எனும் பருவத்தினுள் காலடி எடுத்து வைக்கிறோம்.

    அறையின் மூலையில் இருக்கும் பழைய புத்தகங்களை அடுக்கி வைக்கும் பீரோவைப் பார்த்திருப்பீர்கள். அதனுள் இருக்கும் பல புத்தகங்கள் தமது உபயோகம் முடிந்த காரணத்தினால் கவனிப்பாரற்று தூசு படிந்து இருக்கும். ஓய்வு பெற்ற வயோதிகர் எனும் முத்திரை குத்தப்பட்ட பலரும் இன்றைய சூழலில் அப்படியாக ஒதுக்கி வைக்கப்படுகிறார்களோ எனும் ஒரு கேள்வி எழுகிறது. குறிப்பாக எமது புலம்பெயர்ந்தோர் சமூகத்தில் இத்தகைய ஒரு நிலை காணப்படுவது போலத் தென்படுகிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது.

    வாழ்வின் அனுபவங்களைத் தம்முள் சுமந்தபடி அதனைப் பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் எதுவும் கிடைக்காமல், வெறும் தூசு படிந்த அருமையான புத்தகங்களைப் போல அவர்களும் விரயமாகிப் போகிறார்களோ எனும் எண்ணம் மிகவும் சத்தமாக உள்ளத்தில் எழுகிறது. இந்நிலை குறிப்பாக ஈழத்துப் புலம்பெயர் சமூகத்தினிடையே காணப்படுவது போல் ஒரு கருத்து உள்ளத்தில் சதிராடுகிறது. இதற்கான காரணங்கள் பலவிருக்கலாம். ஈழத்தில் பலகாலமாக தமிழரிடையே இருந்து வந்த பாதுகாப்பற்ற சூழலினால் இடம்பெயர்ந்தோர் ஏராளம். இவர்களில் ஓய்வு பெற்ற வயோதிகர் பலரடங்குவார்.

    ஈழத்திலே வாழ்ந்திருந்தபோது இயல்பாக தம்முடைய பணிகளைத் தாமே பார்த்து வந்தபோது அவர்கள் தமது இருப்பை நியாயப்படுத்தி வந்தார்கள். ஆனால், திடீரென முற்றாக அந்நியமான ஒரு சமூகச்சூழலில் சிக்கிக் கொள்ளும்போது, எதை மிக இலகுவாக தாமே செய்து வந்தார்களோ அதற்காக மற்றவர்களுடன் தங்கி இருக்க வேண்டிய சூழல் உருவாகிறது. அவர்கள் தமக்குள் தாமே தம்மைத் தாழ்வாக மதிப்பிட்டுக் கொள்ளும் ஒரு நிலை உருவாகிறது. இவர்களில் பலர் தமது உறவினர்களோடு தங்கியிருக்க வேண்டிய நிலையில் தமது வாழ்வின் அத்தியாவசிய தேவைகளுக்காய் காத்திருக்க வேண்டியுள்ளது.

    இது யாருடைய தவறும் அல்ல. வாழ்க்கை வீசும் எதிர்பாரா சவால்களினால் பாதிக்கப்பட்டு தமது இயற்கையான சூழலை விட்டு அந்நியநாடுகளுக்குப் புலம்பெயரும் தமது உறவினர்களைத் தம்மோடு வைத்துக் கொள்வோர்கள் தாம் தமது வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதற்காகப் பணிகள் புரியும் ஒரு கட்டாயமேற்படுகிறது. இதனால் அவர்களுடன் தங்கியிருக்கும் உறவினர்களும் தமது சிக்கல்களைத் தீர்ப்பதற்கான வழியைத் தேடி அவஸ்தைக்குள்ளாகிறார்கள்.

    சுமார் இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னே எனது அன்னை, தந்தை என்னோடு தமது எஞ்சிய காலத்தைக் கழிப்பதற்காக வந்தபோது இதை முற்றாக உணர்ந்தவன் நான். பாசத்தில் எந்தவித குறை வைக்காவிட்டாலும் நானும், எனது மனைவியும் பணிபுரிய வேண்டிய கட்டாயத்தினால் நாங்கள் எம்மால் விரும்புமளவிற்கு எமது பெற்றோருடன் எமது நேரத்தைச் செலவு செய்ய முடியாத இக்கட்டான சூழல். இங்கே மனவருத்தத்திற்குரிய விடயம் என்னவென்றால் எமது சமூகத்தின் வயதானவர்களின் அனுபவங்களின் மூலம் அவர்கள் எத்தனையோ பங்களிப்புகளைச் செய்யக்கூடிய திறமையிருந்தும் அவர்களால் பங்குபெற முடியாத நிலையே!

    இதற்கான நிவர்த்தி என்ன என்பதை நாம் வாழும் இந்தப் புலம்பெயர்ந்த சமூகத்தில் சமுதாய அங்கமான மற்றைய இனத்தவர் தமது வயோதிகர்களை எவ்வாறு தம்முடன் இணைத்துக் கொள்கிறார்கள் என்பதன் மூலம் நாமும் அதற்கான மாற்றங்களைச் செய்வதிலே தான் தங்கியுள்ளது. அனைவருமே அந்த நிலையில் தான் இருக்கிறார்கள் என்று சொல்லி விட முடியாது. எனது தந்தையின் நண்பர் ஒருவர், அவரும் ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்தவர் தன்னுடைய அனுபவத்தை, அறிவை எவ்வாறு பகிர்ந்து கொண்டார் என்பது மிகவும் சுவாரஸ்யமானது.

    senior citizensஈழத்தில் கல்வித் திணைக்களத்தில் உயர் கல்வி அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் அவர். நல்ல ஆங்கிலப்புலமை கொண்டவர். ஈழத்தில் இருந்து அப்போது இடம்பெயர்ந்தவர்களுக்கு வரும் உத்தியோகபூர்வமான கடிதங்களை மொழிபெயர்த்து அவர்களுக்கு விளக்கி அதற்கான பதிலையும் எழுதிக் கொடுப்பார். அது மட்டுமின்றி அத்தகையோரின் பிள்ளைகளின் பள்ளிகளில் மொழிப்பிரச்சனையால் அல்லலுறுவோருக்கு தனது வீட்டில் இலவசமாகப் பிரத்தியேக பாடங்கள் சொல்லிக் கொடுத்து உதவுவர். அது மட்டுமின்றி தாம் வாழ்ந்த கட்டிடத் தொகுதியில் இருக்கும் குடியிருப்போர் சங்கத்தில் காரியதரிசியாக செயலாற்றி அவர்களுக்கான குறைகளை நிவர்த்தி செய்ய முயற்சிப்பார். இத்தகைய செய்கைகளின் மூலம் தான் தனது ஓய்வு நேரத்தை மிகவும் உபயோகமான வழியில் கழித்ததோடு தனது வாழ்வியல் அனுபவங்களை முறையாக மற்றையோருக்காக உபயோகித்தார். சில வருடங்களுக்கு முன்னால் தனது தொண்ணூறாவது வயதுகளில் காலதேவன் அவரைத் தன்னுடன் அழைத்துக் கொண்டான்.

    எமது சமூக முதியோர்களை ஒன்றிணைத்து அவர்களின் அனுபவ அறிவை வளரும் எமது தலைமுறைகள் உள்வாங்கிக் கொள்வதற்கான எத்தகைய நடவடிக்கைகளில் நாம் ஈடுபட்டிருக்கிறோம் என்று எம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய வேளை இது. ஆங்காங்கே வயோதிகர்களுக்கான சுற்றுலாக்களை சில இங்கிலாந்தின் சில பகுதிகளில் செயல்படுத்துகிறார்கள்.

    ஆனால் இவற்றில் எத்தனைபேர் பங்கெடுக்கிறார்கள் என்பதுவும், ஒன்றிணைந்து சுற்றுலா செல்வது மட்டுமின்றி தாம் வாழும் சமுதாயத்தில் தாம் பங்களிக்கிறோம் எனும் திருப்தி ஏற்படும் வகையிலான செயற்பாடுகளில் இவர்களை ஈடுபடுத்துவதற்கான முன்னெடுப்புகள் நடைபெறுகின்றனவா ? என்பதுவே கேள்வி.

    மூப்பு என்பது நோயல்ல அது வாழ்வின் ஒரு கட்டம்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • வளவன் கனவு (21)

    சு. கோதண்டராமன்

    காழிப்பிரான்

    vallavan-kanavu121

    வேதநெறி தழைத் தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்
    பூதபரம்ப ரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத
    சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர்
    பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்

    -சேக்கிழார்

    தென்னைமர உச்சியில் லிங்கத் திருமேனியைத் தாங்கி நின்ற விச்வேசரின் பேரன் சிவபாத இருதயர். அவர் ஒரு நாள் வழக்கம்போல் தன் குழந்தையை அழைத்துக் கொண்டு குளத்துக்குப் போனார். சூரிய உதயத்துக்கு முன் நீரில் மூழ்கிக் குளித்து அனுஷ்டானங்களைச் செய்வது அவரது வழக்கம்.

    மேற்படியில் குழந்தையை உட்கார வைத்தார். ‘இங்கேயே சமர்த்தாக உட்கார்ந்திரு. அப்பா குளித்துவிட்டு வருகிறேன்’ என்று சொல்லிப் படி இறங்கினார். சித்திரை மாதம். குளத்தில் நீர் நிரம்பியிருக்கவில்லை நாலைந்து படிகள் இறங்கித்தான் நீரை அடைய வேண்டியிருந்தது. கங்கை, யமுனை, கோதாவரி, ஸரஸ்வதி, நர்மதை, சிந்து காவேரி ஆகிய புண்ணிய தீர்த்தங்கள், தான் குளிக்கும்  நீரில் கலந்து அதைப் புனிதப்படுத்த வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.  தான் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் தன்னை விட்டு நீங்க வேண்டுமென்று உள்ளத் தூய்மைக்காக அகமர்ஷண சூக்தம் சொல்லி நீரில் மூழ்கினார். அவரது தலை தண்ணீருக்குள் மறைந்த நேரம் பார்த்துக் குழந்தை அழுதது. ‘குழந்தைக்குப் பசி நேரம் இல்லையே, என்னைக் காணவில்லை என்று அழுததோ’ என்று நினைத்துக் கொண்டே நீரிலிருந்து தலையைத் தூக்கிய அவர் திரும்பிப் பாராமலேயே, ‘பயப்படாதே, அப்பா இதோ வந்துவிட்டேன்’ என்று சொல்லிக் கொண்டே மேலும் இரண்டு முழுக்குகள் போட்டார். உடல் அழுக்கும் உள்ள அழுக்கும் நீங்கப் பெற்றவராக அவர் படியேறி மேலே வந்த போது குழந்தை அழவில்லை. அது பால் ஒழுகும் வாயுடன் சிரித்துக் கொண்டிருந்தது.

    ‘ஏது இந்தப் பால்? யார் கொடுத்திருப்பார்கள்?’

    “பசித்ததா, குழந்தாய்? யார் அப்பா உனக்குப் பால் கொடுத்தது?” என்று வினவினார்.

    குழந்தை விடையளித்தது. “அவன் காதில் தோடு அணிந்திருந்தான் அப்பா.”

    ‘யாரோ ஆண் வந்திருக்கிறான் போலும். அவன் எதற்குக் குழந்தைக்குப் பால் கொடுக்க வேண்டும்? பொதுவாக ஆண்கள் குழைதான் அணிவார்கள். இவன் வித்தியாசமாக இருந்ததால் குழந்தை மனதில் அந்த அடையாளம் நன்றாகப் பதிந்திருக்கிறது போலும்.’

    குழந்தை மேலும் பேசியது, “அவன் காளை மீது வந்தான்.”

    ‘காளை பூட்டிய வண்டியில் வந்திருப்பான். குழந்தை சொல்லத் தெரியாமல் சொல்கிறது’ என நினைத்துக் கொண்டார்.

    “அவன் தலையில் ஒரு சந்திரன் இருந்தது, அப்பா.”

    ‘தலையில் சந்திரனா? குழந்தைகளுக்குக் கற்பனை அதிகம். எதையோ பார்த்துவிட்டு சந்திரன் என்கிறது போலும்.’

    “சுடுகாட்டுச் சாம்பலைப் பூசியிருந்தான் அப்பா.”

    ‘யாரேனும் காபாலிகனோ?’ முற்காலத்தில் காபாலிகர் என்ற சிலர் உடல் முழுவதும் சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிக் கொண்டு திரிந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறார். இவர் பார்த்ததில்லை. ‘அப்படி யாரேனும் வந்துவிட்டானோ? விஷம் கலந்த பாலைக் கொடுத்திருப்பானோ?’ சிவபாத இருதயருக்கு அச்சம் ஏற்பட்டது

    “என் மனதைக் கவர்ந்த திருடன் அப்பா அவன்.”

    ‘அந்தக் காபாலி குழந்தையைப் பயமுறுத்தவில்லை. இதற்கு மகிழ்ச்சி ஊட்டி இருக்கிறான்.’ சற்றே ஆறுதலாக இருந்தது.

    “முற்காலத்தில் தன்னை வழிபட்ட பிரம்மாவுக்கு அருள் புரிந்தவன்.”

    “என்னது இது? நீ என்ன சொல்கிறாய், குழந்தாய்?”

    “பிரமாபுரத்தில் இருக்கின்ற பெம்மான்.”

    “என்னது? நம் சிவனா? என்னென்னவோ புதிர் போட்டு என்னைக் குழப்பிவிட்டாயடா குழந்தாய். சிவன் கொடுத்த பாலையா குடித்தாய்? அதனால்தான் இவ்வளவு அழகாகப் பேசுகிறாயா? எங்கே மறுபடியும் சொல்.”

    “தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்

    காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்

    ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த

    பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.”

    குழந்தை தாளம் போட்டுக் கொண்டு இசையுடன் பாடியது. மெய் மறந்தார் சிவபாத இருதயர். என்ன அழகு! என்ன இனிமை! இவனுக்கு இசை கற்பித்தது யார்? எனக்கே தெரியாத தமிழ்ப் பாடல் இலக்கணத்தை இவன் எங்கே கற்றான்? பல இதழ் கொண்ட  தாமரைப் பூவை ஏடுடைய மலர் என்கிறானே, என்ன சொல்லாட்சி!

    “எங்கே, மறுபடியும் சொல்?”

    மழலைக் குரல் இனித்ததா, இசை இனித்ததா, பாடலின் அமைப்பு இனித்ததா, பாடலின் பொருளான சிவம் இனித்ததா? மயங்கினார் தந்தை

    அவருக்கு அனுஷ்டானத்தில் மனம் செல்லவில்லை. ‘வீட்டுக்குப் போய் செய்துகொள்ளலாம். பகவதி இதைக் கேட்டால் மகிழ்வாள். உடனே வீட்டுக்குப் போகவேண்டும்.’ குழந்தையைத் தோளில் சார்த்திக் கொண்டு ஈர ஆடைகளைக் கையில் எடுத்துக் கொண்டு போனார். போகும்வழி எல்லாம் அந்தப் பாடலைத் திரும்பத் திரும்பச் சொல்லச் சொல்லிக் கேட்டுக் கொண்டே போனார். அவருக்கு அந்தப் பாடல் மனப்பாடம் ஆகிவிட்டது.

    “பகவதீ, உன் பிள்ளை பாட்டுப் பாடுகிறான் கேள். பாடடா குழந்தாய்”

    தாய் கேட்டாள்.

    “எவ்வளவு அழகாகப் பாடுகிறான்! நீங்கள் சொல்லிக் கொடுத்தீர்களா?”

    “இல்லை. அவனாகவே பாடினான்.”

    “அவனாகவேயா?”

    “அதே பாடலையே திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்களே, இன்னும் கேளுங்கள்” என்றது குழந்தை.

    அதற்குள் அந்தப் பாடலை ஓலையில் எழுதி வைத்துக் கொண்டார் தந்தை. ஏடும் எழுத்தாணியும் எடுத்து வந்து, “பாடடா, குழந்தை” என்றார்.

    குழந்தை அதே நட்டபாடைப் பண்ணில் பாடத் தொங்கியது. அவற்றின் சுவையை அனுபவித்தபடியே ஏட்டில் எழுதிவந்தார் தந்தை.

    ஆமை ஓடு, நாகம், பன்றியின் பல் இவற்றை மாலையாக அணிந்தவன், கபாலம் ஏந்தி பிச்சை எடுப்பவன், தொழுதவர்கட்கு அருள்பவன், கங்கை நீர் நிரம்பிய சடைமுடியன், பெண்கள் உள்ளத்தைக் கவர்பவன், மும்மதில்களையும் அம்பு எய்தி அழித்தவன், கொன்றை மலர் அணிந்தவன், இடப்பாகத்தே உமையைக்  கொண்டவன், வேதத்தைப் பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் இருப்பவன், மழுவாயுதம் கொண்டவன், கரத்தில் அனலை உடையவன், நடனமாடித் திரிந்தவன், கயிலை மலையைப் பெயர்த்த ராவணனின் வலிமையை அழித்தவன், திருமாலும், நான்முகனும் தேடிச் செயலற, அண்ணா மலையாய் நிமிர்ந்தவன், மத யானைத் தோலை உரித்துப் போர்த்தவன். பித்தன்  என்று இறைவனின் தோற்றத்தையும் வீரச் செயல்களையும்  பலவாறாக வர்ணித்த குழந்தை ஒவ்வொரு பாட்டிலும் இத்தகையன் பிரளய காலத்திலும் அழியாது நிலை பெற்ற இந்தப் பிரமபுரம் மேவியிருக்கிறான், அவனே என் உள்ளம் கவர் கள்வன் என்றது.

    இந்த இறைவனைத் தொழப் புண்ணியம் இன்மையால் புத்தர்களும் அறிவற்ற சமணர்களும் பிழைபட்ட கருத்துக்களைச் சொல்லித் திரிகிறார்கள் என்று சொல்லி முடித்தது.

    “இந்தப் பத்துப் பாடல்களையும் நீயேதான் இயற்றினாயா, வேறு யாரிடமிருந்தாவது கற்றுக் கொண்டாயா?” என்று கேட்டாள் தாய். விடையும் பாட்டாகவே வந்தது.

    ‘இறைவனிடம் மனத்தைப் பதித்து உணரும் ஞானசம்பந்தனாகிய நான்தான் இயற்றினேன்’ என்று உறுதி செய்தது குழந்தை. அது மட்டுமல்ல. ‘இப்பதிகத்தை ஓதுபவர்களின் பழவினைகள் தீர்தல் எளிதாகும்’ என்றும் சொல்லியது.

    எல்லாத் தாய்மார்களும் தங்கள் தங்கள் குழந்தையைத் தெய்வ அம்சமாகத்தான் கருதுவார்கள். ஆனால் பகவதி அவ்வாறு கருதிப் பெருமைப்படுவதற்குத் தக்க நியாயம் இருந்தது.

    தந்தை அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு குழந்தையை எடுத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்றார். அதற்குள் அவரது மனைவி மூலமாக அக்கம் பக்கத்தவருக்குச் செய்தி பரவி விட்டது. அத்தனை பேரும் இந்தத் தெய்வக் குழந்தையைக் காணக் குழுமினர்.

    கோவிலில் குழந்தை தக்கேசிப் பண்ணில் இனிமையாகப் பாடுகிறது. உள்ளத்திலிருந்து தமிழ் பொங்கி வந்தது. பல நாள் சாதகம் செய்த பாடல் போலத் தங்கு தடை இன்றிப் பாடுகிறது.

    பத்துப் பாடல்களை முடித்தபின் அவனது தாய் மனதில் தோன்றிய கேள்வி எல்லோர் மனதிலும் தோன்றியது. அதற்கு விடையளிக்கும்  முறையில், “தன்னார்வஞ்செய் தமிழின்விரகனாகிய நான் உரைத்த இந்தத் தமிழ்மாலையைப்  பல நாளும் பாடி ஆடுங்கள், பரலோகம் நிச்சயம்”  என்று கூறி முடித்தது. அனைவரும் வியந்து போற்றினர்.

    மறுநாள் சிவபாத இருதயர் அனுஷ்டானங்களை முடித்தபின், குழந்தை கேட்டது, “இந்தக் காழி தவிர வேறு எங்கு கோயில்கள் உள்ளன?”

    “இதோ சற்றுத் தூரத்தில் கோலக்கா உள்ளது. அங்கும் உன்னை அழைத்துப் போகிறேன்” என்றார்.

    தந்தை தோளில் அமர்ந்து குழந்தை வர, காழி அன்பர்கள் யாவரும் உடன் வந்தனர்.

    கோலக்கா கோவிலை அடைந்ததும் உள்ளூர் மக்களும் கூடிவிட்டனர். குழந்தை இறைவனை வணங்கி தக்கராகப் பண்ணை இசைத்து அதில் ஒரு பதிகம் பாடுகிறது.  கேட்ட அன்பர்கள் ‘இது விட்ட குறை தொட்ட குறைதான். சென்ற பிறவியில் தமிழும் இசையும் முழுமையாகக் கற்றிருந்தால் அன்றி இவ்வாறு பாடமுடியாது’ என்றனர் சிலர்.

    “நமது ஊர்க் குளத்தை வருணிக்கிறது பாருங்கள், ஆற்றிலிருந்து நீர் பாயும் மடையில் வாளை மீன் துள்ளி விளையாடுவதையும் அங்கு மகளிர் நீராடுவதையும் எவ்வளவு அனாயாசமாக ஒரு வரியில் கூறிவிட்டது பாருங்கள்” என்றார் மற்றொருவர்.

    “நிழலார் சோலை நீலவண்டினம் குழலார் பண்செய் கோலக்காவு என்று வர்ணிக்கிறதே, என்ன அழகு!” என்று வியந்தார் மற்றொருவர்.

    “நேற்று காழியில் பாடிய இரண்டு பதிகங்களும் இரு வேறு பண்கள். இன்று வேறு பண். இசைக் கலையை முழுமையாகக் கற்றவர் தவிர மற்ற யார் இது போலப் பாடமுடியும்?” என்று வியந்தார் மற்றொருவர்.

    “பாவம் போக வேண்டுமென்றால் சமணர்களைப் போல் உடம்பைத் துன்புறுத்திக் கொள்ள வேண்டாம் என்கிறது இக்குழந்தை. இந்தப் பாடல்களைப் பாடினாலே இறைவன் வசப்படுவான். பாவத்தை நீக்கி விடுவான்” என்றார் மற்றொருவர்.

    “எவ்வளவு அழகாகக் கைகளைத் தட்டித் தாளம் போடுகிறது. பாவம், தாளம் போட்டுப் போட்டுப் பிஞ்சுக் கைகள் கன்றிவிட்டனவே” என்று பரிதாபப்பட்டனர் சிலர். சற்றுநேரத்தில் குழந்தையின் கைகளில் யாரோ ஒரு தாளத்தைக் கொண்டுவந்து கொடுத்தார்கள்.

    Share
  • ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 24

    சி. ஜெயபாரதன்.

    கலில் கிப்ரான்

    (1883-1931)

    ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

    மூலம் : கலில் கிப்ரான்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     

    நேற்று, இன்று, நாளை
    ______________
    “காலம் எத்தகைய வியப்பாக உள்ளது ! நாமெல்லாம் எத்தகைய முரண்பாடு உடையவர் ! காலம் மெய்யாகவே மாறி விட்டது. நம்மையும் காலம் மாற்றி விட்டது. ஓர் எட்டு முன்னடி வைத்து, முகத்தைத் திரையிட்டு, நமக்கு எச்சரிக்கை விடுத்துப் பிறகு உணர்ச்சி ஊட்டி விட்டது காலம் !”
    கலில் கிப்ரான். (The Sons of the Goddess & the Sons of the Monkeys)
    ______________

    நேற்று, இன்று, நாளை
    ______________

    நண்பனிடம் நான் கூறினேன் :
    “பார் அந்த மாதை !
    சாய்ந்துள்ளாள் அவன் தோள் மீது !
    நேற்று என் தோள் மீது
    சாய்ந்தி ருந்தாள் அந்த மாது !”
    நண்பன் என்னிடம் கூறினான் :
    “நாளை சாய்ந்தி ருப்பாள்
    என் தோள் மீது
    அந்த மாது”
    ______________

    நண்பனிடம் நான் கூறினேன் :
    “பார் அந்த மாதை !
    அமர்ந்துள்ளாள் அவன் அருகே !
    நேற்று அந்த மாது
    என்னருகே அமர்ந்திருந்தாள்”
    நண்பன் என்னிடம் கூறினான் :
    “நாளை அவள் என்னருகே
    அமர்ந்திருப்பாள்.”
    ______________

    நண்பனிடம் நான் கூறினேன் :
    “பார்க்க வில்லையா அவளை நீ
    அவன் கிண்ணத்தில்
    பருகி வருவதை ?
    நேற்று என் கிண்ணத்தில்
    அவள் பருகினாள் !”
    நண்பன் என்னிடம் கூறினான் :
    “நாளை அந்த மாது
    என் கிண்ணத்தில் பருகுவாள் !”
    ______________

    நண்பனிடம் நான் கூறினேன் :
    “பார் அவனை நோக்கும்
    அந்த மாதின்
    காதற் கண்களை !”
    நேற்று அப்படித்தான் அவள்
    என்னை நோக்கினாள்.”
    நண்பன் என்னிடம் கூறினான் :
    “நாளை அதுபோல்
    என்னை நோக்கும் அவள் கண்கள்.”
    ______________

    நண்பனிடம் நான் கூறினேன் :
    “காதற் பாடலை
    அந்த மாது அவன் காதில்
    முணுப்பதைக் கேட்டாயா !
    நேற்றவள் அதே பாடலை
    முணுமுணுத்தாள்
    என் காதில் !”
    நண்பன் என்னிடம் கூறினான் :
    “நாளை அப்பாடலை என் காதில்
    முணுமுணுப்பாள் !”
    ______________

    நண்பனிடம் நான் கூறினேன் :
    “பார் அந்த மாது
    அவனை அணைத்துக் கொள்வதை !
    நேற்றவள் அணைத்தாள்
    என்னை.”
    நண்பன் என்னிடம் கூறினான் :
    “நாளை அணைப்பாள்
    என்னை அவள்.”
    நான் வியந்தேன் அவளை
    “எப்படிப் பட்ட பெண்ணென்று.”
    நண்பன் பதில் அளித்தான்
    “அப்படி இருப்பதுதான்
    அவள் வாழ்க்கை !”
    ______________

    Share
  • தெய்வ தரிசனம்

    -ரமணி 

    03. மூவகையாகும் பிரும்மம்

    (குறும்பா)

    நிர்குண பிரும்மம்

    நிர்குணத்த பிரும்மமெனும் போதினிலே
    நிர்மலமே, உருவென்றே ஏதுமிலை
    . . தன்னுள்ளே கூறில்லை
    . . தன்னைப்போல் வேறில்லை
    நிர்நாம நிர்வாண மானதுவே. … 1

    நீக்கமற எங்கணுமே நிறைந்திருக்கும்
    போக்கறவே செயலற்றே உறைந்திருக்கும்
    . . உறவற்றே தனியதுவாய்
    . . மறுவற்றே இனியதுவாய்
    வாக்கற்ற வத்துவெனச் சிறந்திருக்கும். … 2

    எப்போதும் இருப்பதனால் சத்தெனவாம்
    ஒப்பில்லா ஞானமெனும் சித்தெனவாம்
    . . குறையாத ஆனந்தம்
    . . நிறைவாகும் மோனந்தான்
    இப்பேர்-சச் சிதானந்த வத்தெனவாம். … 3

    நிர்குணத்தின் ஒளிவெள்ளம் வெண்மையென்போம்
    தர்க்கமற்ற நிலையாகும் உண்மையென்போம்
    . . காரணமாம் தத்துவமே
    . . பூரணமாம் வத்துவிதே
    வர்க்கமற்ற ஒன்றென்னும் தண்மையென்போம். … 4

    சகுண பிரும்மம்

    தோற்றமிலாத் தத்துவமாம் காரணமே
    மாற்றமொன்று பெறுவதனால் காரியமாம்
    . . வாக்கினின்று நாமமெழும்
    . . பார்க்கவொரு ரூபமெழும்
    ஆற்றலுடன் அறிவுகொண்ட பூரிதமாம். … 5   [பூரிதம் = வெகுகளிப்பு]

    களிமண்ணே மாற்றமொன்றை யுட்கொளவே
    களிமண்ணால் உருவாகும் மட்கலனே
    . . களிமண்ணே உருக்கொள்ளும்
    . . களிமண்ணே பேர்கொள்ளும்
    களிமண்ணே மட்கலனில் உட்கருவே. … 6

    வெளித்தோன்றா நாமரூபம் மாயையாகும்
    வெளித்தோன்றும் நாமரூபம் லோகமாகும்
    . . உருநாமம் எல்லாமே
    . . பிரும்மத்தின் உள்ளாமே
    ஒளிர்பிரும்மம் மாயைசத் குணமாகும். … 7

    குணமற்ற பிரும்மமாயை சேர்வதுவே
    குணமுள்சத் குணபிரும்ம மாவதுவே
    . . சற்குணமே மூன்றுதெய்வம்
    . . நற்குணமே யூன்றுதெய்வம்
    இணைகொள்ளும் ஆண்பெண்ணாய் நேர்வதுவே. … 8

    நாத பிரும்மம்

    பஞ்சபூத முதல்பூதம் ஆகாயம்
    அஞ்சுபுலன் காணாத கண்மாயம்
    . . நாதமொன்றே தன்மையென
    . . நாதபிரும்ம நன்மையென
    விஞ்சியது உள்ளடக்கும் ஆதாரம். … 9

    தானெனவே நாதபிரும்மம் பதிவாக
    வானதுவே ஓமென்னும் அதிர்வாகும்
    . . அதிர்வொலியே முப்போதும்
    . . புதுமையென எப்போதும்
    ஆனதுவே ஆதாரப் பொதுவாகும். … 10

    களிமண்ணின் உருபேரில் உலகமெழும்
    களிமண்ணுள் உறையுருவாய் மாயையெழும்
    . . பிரும்மந்தான் எல்லாமே
    . . உருநாமம் சொல்லாமே
    களிமண்ணே காணவரின் பிரும்மமெழும். … 11

    வழிபாடு

    நிர்குணத்தை உள்ளத்தில் ஏற்றிடுவோம்
    சற்குணத்தை வழிபட்டுப் போற்றிடுவோம்
    . . ஆறுதெய்வம் அவர்சக்தி
    . . ஆறுதலாய் நம்பக்தி
    நற்கதியைத் தருசெயல்கள் ஆற்றிடுவோம். … 12

    *****

     

    Share
  • திருவெம்பாவையும் மார்கழியும் !

     எம் . ஜெயராமசர்மா ..மெல்பேண் .. அவுஸ்திரேலியா 

    மார்கழி மாதத்தைப் பீடை பிடித்தமாதம் என்று சொல்லி –

    சுபநிகழ்ச்சிகள் செய்வதைத் தவிர்த்துவிட்ட நிலையினைக் காண்கின்றோம். இது பற்றிய விளக்கத்தை நாம் அறிந்து கொள்ளுதல் அவசியமானதே. பல பெயர்கள் காலத்தின் போக்கால் கருத்து மாறுபட்டு வேறு ஒரு பொருளை உணர்த்துவது நடந்தே வந்திருக்கிறது.” ஒப்பிலி அப்பன்” என்னும் சுவாமியின் பெயரை உப்பிலி அப்பன் என மாற்றி – அந்த சுவாமிக்கு உப்பில்லாத பொருட் களையே நிவேதனம் செய்யும் வழக்கம் நாளடைவில் ஏற்பட்டுவிட்டது.அதே போன்றதே மார்கழி மாதம் பற்றியதுமாகும்.” பீடுடைய மாதம்” என்பது பீடை உடைய மாதமாக்கப் பட்டுவிட்டது.பீடு என்றால் பெருமையானது, உயர்வானது என்பது பொருளாகும்.

    திருவாதிரை நட்சத்திரம் ” ஆருத்ரா ” என சமஸ்கிருதத்தில் வழங்கப்ப டுகின்றது.சிவனையும் ஆதிரையான் எனக் குறிப்பிடும் வழமையும் எமது சமயத்தில் இருக்கிறது.மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திரதுக்கு முந்திய பத்து நாட்களும் திருவெம்பாவையாகக் கருதி திருவாதிரை இடம்பெறும் பத்தாம் நாளை ” ஆருர்த்தா ” தரிசனம் எனப் போற்றி சிவனை வழிபடும் வழக்கமும் இந்த மார்கழிக்கே உரியது என்பதும் முக்கியமானதாகும்.அதுமட்டுமல்ல சம்பந்தப் பெருமான் அவதாரம் செய்ததுகூட மார்கழித்திருவாதிரை என்றும், சேந்தனார் திருப்பல்லாண்டு பாடி அசையாத தேரை அசையச் செய்து சிவனது தேரினை வலம்வரச் செய்ததும் மார்கழித்திருவாதிரை என்றும், வியாக்கிரபாதர்.. பதஞ்சலி ஆகிய சிவனருள் பெற்ற முனிவர்களுக்குச் சிவன் தனது அருட் கூத்தினை நிகழ்த்திக் காட்டியதும் கூட மார்கழித் திருவாதிரையில்த்தான் என்றும் அறியக் கிடக்கின்றது. இந்த வகையிலும் மார்கழி மாதம் முக்கியத்துவம் மிக்கதாகவும் கொள்ளப் படுகின்றது.

    மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாளாகும்.தை முதல் ஆனிமாத இறுதிவரை பகல்.ஆடிமுதல் மார்கழி மாத இறுதிவரை இரவு. இந்த இறுதியானது தேவர்களுக்கு விடியற்காலமாகும்.இதனால் மார்கழி என்பது தேவர்களின் விடியற் பொழுதாக இருப்பதால் அக்காலங்களில் காலை யில் எழுந்து குளித்து,அனைவரும் பூஜை வழிபாடுகளை ஆற்றுவது மிகவும் நலனை விளைவிக்கும் என்பது நம்பிக்கையாகும்.இதனால்த்தான் மார்கழி மாதம் தேவ காரியங்களுக்கு என்று ஒதுக்கப்பட்டது.

    இந்தக் காலத்தில்த்தான் மார்கழி நோன்பும் வருகிறது. மணிவாசகப் பெருமானின் திருவெம்பாவையும் பாடப்படுகிறது.ஆண்டாளின் திருப்பாவையும் பாடப்படுகிறது. திருப்பள்ளி எழுச்சியும் பாடப்படுவதும் குறிப்பிடத்தக்கது.தேவர்களுக்கு மட்டுமே உரிய மாதத்தில் வேறு எந்தவிதச் சிந்தனைகளுக்கும் இடம் கொடுக்கும் வண்ணம் ஏனைய விஷயங்களைச் செய்தல் தவிக்கப்பட்டதே அன்றி மார்கழி கூடாதது என்பதற்காகவோ மார்கழி பீடை பிடித்தது என்பதற்காகவே அல்ல என்பதை நாங்கள் யாவரும் நன்கு விளங்கிக் கொள்ளுதல் மிகவும் அவசியமாகும்.

    ” மாதங்களிலே நான் மார்கழி ” என கண்ணன் பகவத்கீதையில் சொல்லு வதை மனத்தில் கொண்டால் மார்கழியின் மகத்துவம் யாவருக்கும் விளங்கி விடும்.வடமொழியில் ” மார்கசீர்ஷம் ” என்று மார்கழி மாதம் அழைக்கப் படுகிறது.” மார்க்கம் ” என்றால் வழி என்பது பொருள். ” சீர்ஷம் ” என்றால் உயர்ந்த என்பது பொருள்.எனவே மார்கழி என்பது உயர்வுடையது என்பதை வடமொழியும் கூட எடுத்துக் காட்டுகிறது அல்லவா?

    திருவண்ணாமலையில் மணிவாசகரால் பாடப்பட்டதுதான்’திருவெம்பாவை”. திருவெம்பாவைப் பாடல்கள் அனைத்துமே கன்னிப் பெண்களால் பாடப்படும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றது. இப்படியாகப் பாடும் பாடல் வகைகள் சங்ககாலத்திலேயே இருந்திருக்கிறது.

    பரிபாடல், நற்றிணை, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய சங்ககால நூல்களில் மார்கழி நோன்பு பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன. இங்கு பாவை நோன்பு பற்றிய செய்திகளையும் காண்கின்றோம்.எனவே மணி வாசகப் பெருமானின் பாவையர் பற்றிய இந்தவகையானது முந்தியும் இருக்கலாம் அல்லது பிந்தியதாகவும் இருக்கலாம் என்ற கருத்தும் இலக்கிய ஆராய்ச்சியாளரிடம் காணப்படுகின்றது. எது எப்படி இருப்பினும் – மார்கழி நோன்பு என்பது திருவெம்பாவையுடன் இணைகின்றது என்பதே முக்கிய செய்தி எனலாம்.

    ” திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் ” என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும்.மேல்நாட்டிலிருந்து இந்தியா வந்த டாக்டர் ஜி.யூ. போப் என்னும் ஆங்கிலேயரின் மனத்தைத் தொட்டதே இந்தத் திருவாசம்தான். தனது மனத்தைப் பறிகொடுத்த திருவாசகத்தை ஆங்கில மொழியில் மொழிமாற்றம் செய்தார் என்பதை யாவரும் அறிகின்றோம்.அந்த அளவுக்கு ஆத்மாவையே உருக்கி ஆண்டவனின் நினைப்பை ஊட்டவல்லது திருவாசகம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை என்பது எல்லோரதும் அவிப்பிராயமாகும்.

    அந்தத்திருவாசகத்துக்குள் அமைந்திருப்பதுதான் ” திருவெம்பாவை ” ஆகும்.விடியற்காலையிலே எழுந்த கன்னிப்பெண்கள் வீடுதோறும் சென்று இறைவனது பெருமையினை எடுத்துச் சொல்லி இன்னும் ஏன் நித்திரை செய்கின்றாய் விரைவாக எழுந்துவா எல்லோரும் நீராடி இறைவனது புகழை ஏத்திப் பாடுவோம் என்று பக்தி ததும்ப அழைக்கும் விதத்தில் அமைந்ததுதான் ” திருவெம்பாவை ” என்பது குறிப்பிடத்தக்கது.

    திரு + எம் + பாவை என்பது திருவெம்பாவை ஆகும்.தெய்வத்தை நோக்கிய பக்தி நிலையில் நின்று பாடும் பாடல்கள் என்பதே இதன் அர்த்தம் எனவும் கொள்ளலாம்.ஒவ்வொரு பாடலின் முடிவிலும் ” ஏலோர் எம்பாவா ” என்றே முடிகின்றதைக் காண்கின்றோம்.இதனைப் பாவைப் பாட்டு என்றும் நீராட்டுப் பாட்டு என்றும் குறிப்பிடுவார்கள்.

    இளம்பெண்கள் தங்களுக்கு நல்ல கணவர் அமைய வேண்டும் எனக்கருதி மார்கழிமாதத்தில் நோன்பு நோற்பது வழக்கம்.இந்தப் பெண்கள் அதிகாலை எழுந்து இறைவனது புகழைப்பாடி நீராடச் செல்லும் போது ” திருவெம்பாவை ” பாடல்களைப் பாடிச்சென்றுள்ளனர் என்பதையே இங்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.இதற்கு ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவையும் சான்றாகி நிற்கிறதெனலாம்.

    இதனால்த்தான் சைவத்தலங்களில் ” திருவெம்பாவையும் ” வைஷ்ணவத் தலங்களில் ” திருப்பாவையும் ” மார்கழிமாதத்தில் பாடப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    முதல் நான்கு பாடல்களும் அதிகாலையில் நீராடப் புறப்பட்ட பெண்கள் இன்னும் நித்திரைவிட்டு எழாத தமது தோழியரை எழுப்புவதாக , அதற்கு அப்பெண்ணானவள் மறுமொழி கூறுவதாகவும் அமைந்திருக்கின்றது.

    ஐந்தாம் பாடல் தொடக்கம் எட்டாம் பாடல் வரை உள்ளன நித்திரை விட்டெழும் பெண்கள் கூறும் விதமாக இருக்கின்றன.
    ஒன்பதாம் பாடல் முதல் இருபதாம் பாடல் வரை நித்திரை கலைந்த பெண்கள் இறைவனைத் துதித்துப் பாடும் வகையில் அமைந்திருக்கின்றன.

    ” ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி ” ” மாலறியா நான்முகனும் காணா மலையினை ” ” என்னானை என் அரையன் இன்னமுது என்று எல்லோமும் சொன்னோம் கேள் ” கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை”

    ” முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே – பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே ” “இவ்வானும் குவலயமும் எல்லோரும் – காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி”

    ” வேதப்பொருள் பாடி அப்பொருளாம் மாபாடி
    சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தாழ்பாடி
    ஆதி திறம்பாடி அந்தமாம் மாபாடிப் பேதித்து “

    ” விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக் – கண்ணார் அமுதமுமாய் நின்றான் ” என்று திருவெம்பாவைப் பாடல்கள் – எல்லாம் வல்ல இறைவனைப் பற்றிப் பெண்கள் பாடிப் பரவுவதாக எமக்கொல்லாம் விளக்கி நிற்கின்றது எனலாம்.

    திருவெம்பாவையும் திருப்பாவையும் மார்கழியில் அதிகாலை நேரத்திலே பாடும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே முதலில் சுட்டிக் காட்டப்பட்ட படி தேவர்களின் காலைப்பொழுதாக இருப்பது ஒருமுக்கிய காரணம் என்பதை நம்பிக்கை எனக்கொள்வோம். அதற்குப் பின்னும் பல காரணங்களும் இருக்கின்றன என்பதும் முக்கியமானதாகும்.

    அதிகாலையில் துயில் எழுவது என்பதே ஆரோக்கியத்துக் அடிப்படை அல்லவா? அதுவும் மார்கழியில் அதிகாலை துயில் எழுந்து நீராடுவது என்பது உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்டதாகும். மார்கழியில் ஏற்படும் காலநிலை மாற்றமானது உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது என்று எமது முன்னோர்கள் அறிந்து வைத்திருந்தனர். அதனை அறிவுரை ஆக்கினால் யாவரும் புறந்தள்ளியும் விடக்கூடும் என்பதால் அதனை திருவெம்பாவையுடன் இணை த்துவிட்டனர் என்றே எண்ண வேண்டியிருக்கிறது.

    அதிகாலையில் விழித்தால் புத்தி தெளியும்.உடம்பில் இரத்தத்தில் நல்ல மாற்றம் ஏற்படும் நரம்புகழ் உற்சாகம் பெறும்.பித்தம் தணியும்.வாத, பித்தம் சமனிலை அடையும்.இவையெல்லாம் ஆரோக்கியம் சம்பந்தமானவை. இவையாயுமே திருவெம்பாவையினுள் அடங்கி இருக்கிறது என்பதே இங்கு மிகவும் இன்றியமையாத விஷயமாகும் என்பதை அறிதல் வேண்டும்.

    தமிழ்ப் பண்பு, அன்புணர்வு, ஒழுக்க நிலை, சமயமரபு, ஆத்மஞானம் அத்தனையும் திருவெம்பாவால் எமக்குக் கிடைக்கின்றது என்பதை யாவரும் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

    வெறுமனவே திருவெம்பாவைப் பாடாமல் அதனூடாக எங்களுக்குக் கிடக்கும் அரிய பெரிய விஷயங்களை அறிந்து கொண்டு கோவிலில் பாடுவோமேயானால் நிச்சயம் திருவெம்பா எமக்கெல்லாம் பெரும் பயன் உடையாதாகவே இருக்கும்.

    வைகறைப் பொழுதை ” பிரம்ம முகூர்த்தம் ” என்று குறிப்பிடுவதையும் நாம் நோக்குதல் வேண்டும்.

    மார்கழியை பகவத்கீதை போற்றுகின்றது. மார்கழியில்த்தான் “ஆருர்த்தா” தரிசனம் நடக்கின்றது. மார்கழியில்த்தான் ” சுவர்க்க வாசல் ஏகாதசி ” உற்சவமும் இடம்பெறுகிறது.சைவர்களுக்கும் வைஷ்ணவர்களுக்கும் உகந்த தெய்வீக மாதமாக மார்கழி திகழ்கிறது என்பதையும் மனத்தில் கொள்ளுதல் முக்கியமானதே.திருவெம்பாவையும்,திருப்பாவையும், இறைவன் புகழ் சேர்ப் பதற்கு மார்கழியில்த்தான் கோவில்கள் தோறும் பக்தியுடன் பாடப்படுகின்றன என்பதும் மிகவும் முக்கிய கருத்து என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.எனவே மார்கழியில் இறைவன் புகழ்பாடி எங்களின் வாழ்வு வளம்பெறப் பிரார்த்திப்போம்.

    Share
  • அவன்,அது,ஆத்மா (35)

    (ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

    மீ.விசுவநாதன்

    அத்யாயம்: 35

    டாக்டர். ஆ. சங்கரநாராயணன்

    amvஅவனுக்கு நெருங்கிய நண்பர்களில் சங்கரும் ஒருவன். அவனைவிட மூன்று வயது மூத்தவன். அவனுடைய வீட்டிருக்கு அருகில் இருக்கின்ற ஆதிவராக மாமாவின் மூத்த மகன். முழுப் பெயர் ஆ. சங்கரநாராயணன். அவன் அனேகமாக சங்கரின் வீட்டில்தான் விளையாடிக் கொண்டிருப்பான். சங்கரின் தம்பி ரகுவும் அவனுக்கு நண்பன். ஒரு முறை அவனும், சங்கர், ரகு, கபாலி இன்னும் சிலருமாக சங்கரின் வீட்டு நடையில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது, சங்கரின் அம்மாவழித் தாத்தா அவனைப் பார்த்து,” நீ யாராதுப் பையன்” என்று கேட்டார். அப்பொழுது அங்கு வந்த சங்கரின் அம்மா கல்யாணி மாமி ,” அப்பா…இவனும் என்னோடு கொழந்தைதான்…இவனோடு அம்மா என்னோடு தோழி…இவன் பேரு கண்ணன்” என்று சொன்னாள். கல்யாணி மாமி, ” இவனும் என்னோடு கொழந்தை” என்று சொன்ன அந்த அன்பான வார்த்தை இன்னும் அவனுக்கு இதயத்தில் இருக்கிறது. கிராமத்து மனிதர்களிடம் இருக்கும் அன்பு கள்ளம் இல்லாதது.

    சங்கர் சிறுவயது முதலே நல்ல படிப்பாளி. விளையாட்டிலும் திறமைசாலி. வானொலிப் பெட்டியில் ஹிந்திப் படப் பாடல்களைக் கேட்டுக் கொண்டே தன்னுடைய பாடங்களைப் படிக்கக் கூடிய கவனம் சங்கருக்கு இருந்தது. அப்பொழுது “ஆராதனா” என்ற ஹிந்தித் திரைப்படம் வந்த சமயம். சங்கர் வானொலியில் “ரூப்புதேரா மஸ்தானா” பாடலைக் கேட்டு ரசித்தபடி “இப்படி ஒரு டுயூன்” தமிழ்ல இருக்கா” என்றான். அவனுக்கு இந்திப் பாடல்கள் புரியாது. ஆனால் அதன் இசை பிடிக்கும். “தமிழ்ல எம்.எஸ்.வி. பாட்டு பிரமாத மாக இருக்கும்” என்று அவன் தமிழுக்குக் கொடிபிடித்தான்.

    ஒரு முறை அவனுக்கும் சங்கருக்கும் சண்டை வந்து, சங்கர் அவனை அடித்து விட்டான். அப்பொழுது அங்கிருந்த சங்கரின் அப்பா ஆதிவராக மாமா சங்கரின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டார். எல்லோருக்கும் முன்னால் அவர் அப்படி அடித்ததில் சங்கருக்கு அவமானமாகப் போய்விட, கோபித்துக் கொண்டு வீட்டின் உள்ளே ஒட்டியே போனவன்தான். நீண்ட நேரமாகியும் சங்கரைக் காணவில்லை. வீட்டு வேலைக் காரர்களும் தேடினார்கள். யார் கண்ணிலும் அகப்பட வில்லை. எல்லோருக்கும் கவலையாகி விட்டது. அவனுக்கு அம்மா,” எல்லார் கூடவும் சண்டை போடராய்…இப்ப பாரு ஒன்னால சங்கர் எங்க போனான்னே தெரியலை..” என்று அவனைச் சத்தம் போட்டாள். சந்தியாகாலம் இருட்டும் வேளை சங்கர் மெதுவாக மாடியில் இருந்து இறங்கி வந்தான். மாடியில் ஒரு தொட்டி போன்ற ஒரு இடத்தில் ஒளிந்து கொண்டிருந்ததாகச் சொன்னான். மறுநாள் காலையில் அவனும், சங்கர், ரகு, கபாலி, சுரேஷ் நண்பர்கள் சூழ ஆத்தங்கரைக்குக் குளிக்கச் சென்றனர்.

    சங்கருக்கு கிரிக்கெட் விளையாட்டில் மிகுந்த ஈடுபாடு உண்டு. அதனால் “கல்லிடை கிரிக்கெட் கிளப்” ( K.C.C ) என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தினான். தெருவில் உள்ள நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவோம். சங்கரின் வீட்டு வாசலில் மூன்று “ஸ்டெம்ப்”களை நட்டு கிரிக்கெட் விளையாட்டு மிக மும்முரமாக நடக்கும். ஸ்டெம்ப், பேட், பந்து எல்லாமே சங்கரும், ரகுவும் வாங்கி வைத்திருந்தார்கள். சங்கர் பந்து வீசும் பொழுது “கமெண்ட்ரி” சொல்லிக்கொண்டே இருப்பான். பந்து, மட்டையில் படுவதற்கு முன்பே ,” he is out..he is out” என்று கத்திக் கலக்குவான். அந்த பயத்திலேயே பாதிபேர் “அவுட்” ஆகிப் போவார்கள். ஒரு முறை என்.ஆர். (இப்பொழுது மும்பையில் ராமசுப்ரமணிய சாஸ்திரிகள்) “பேட்டிங்”. சங்கர் ஓடியே வந்து பந்தை வீசியபடி ” he is out..he is out” என்றான். ,” சங்கர்.. என்னப்பா …பந்தே இன்னும் வல்லை…அதுக்குள்ளே நான் அவுட்டா…” என்று என்.ஆர். கேட்டதும் எல்லோரும் சிரித்து விட்டனர். சங்கரின் பழக்கத்தில்தான் அவனுக்குக் கொஞ்சம் கிரிக்கெட் வாசனை அடித்தது. கவாஸ்கர், குண்டப்பா விஸ்வநாத், பட்டோடி, சந்திரசேகர் போன்ற கிரிக்கெட் வீரர்களின் சாகசங்களை சங்கர் சொல்லி அவன் ரசித்திருக்கிறான். சங்கரின் வீட்டு வானொலியில் நண்பர்களுடன் அவனும் கிரிக்கெட் கமெண்டரி கேட்கும் பழக்கம் இருந்தது. சங்கரின் அப்பாவுக்கும் கிரிக்கெட் கமெண்டரி கேட்பதில் ஆர்வம் உண்டு. கிரிக்கெட் விளையாடும் பொழுது நண்பன் கபாலியை “கபிடலி” என்றுதான் ஆதிவராக மாமா அழைப்பார். ஒரு தெருவுக்கும், இன்னொரு தெருவுக்கும் போட்டி வைத்து பயிற்சி எல்லாம் தருவான். தோல்வி என்றால் அவனுக்குக் கோவம் வந்து விடும். எதிலுமே ஜெயிக்கவேண்டும் என்ற எண்ணம் சங்கருக்கு இயற்கையாகவே இருந்தது.

    சங்கர் கல்லூரிப் படிப்பை முடித்து மும்பையில் B. A. R .C.ல் விஞ்ஞானியாகப் பணியில் சேர்ந்தான். அணு உலையில் வேலை. நாட்டின் பாதுகாப்பிற்கான பணி என்ற பெருமையோடு வேலை செய்து நற்பெயர் எடுத்தான். அறிவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று, “டாக்டர். ஆ. சங்கரநாராயணன்” ஆனான்.

    அணு உலையில் வேலை செய்ததால், இறைவனின் படைப்பின் ரகசியத்தை அணு அணுவாக உணர முடிந்தது என்றும், எல்லாம் அந்த “சித்தி விநாயகர்” செயல் என்றும் சங்கர் சொல்லுவான். இசையில் உள்ள ஆர்வத்தால் “வயலில்” வாசிக்கக் கற்றுக் கொண்டான். நேரம் கிடைக்கும் பொழுது தன் வீட்டில் வாசித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறான். சங்கரின் குடும்பமே இசையில் வளர்ந்தது என்றுதான் சொல்லவேண்டும். சங்கீதக் கலாநிதி வேதாந்த பாகவதரின் சகோதரர் ஸ்ரீ ராமலிங்க பாகவதரின் சீடர்கள்தான் சங்கரின் அப்பா, சித்தப்பா, அத்தை, சகோதரிகள் எல்லோரும். மாட்டு வண்டி அனுப்பி, ஸ்ரீ ராமலிங்க பாகவதரை அழைத்து வந்து தன் வீட்டில் அவரிடம் சங்கீதம் கற்றுக் கொண்டவர்கள். தீக்ஷிதரின் நவாவர்ண கிருதிகளை ஸ்ரீ ராமலிங்க பாகவதர் பாடி கேட்க வேண்டும். அத்தனை ஈர்ப்பு அதிலே இருக்கும். பாகவதர் பாட்டு கற்றுத் தரும் பொழுது பல நாள்கள் அவனும் தன் காது குளிர அந்த இசையைக் கேட்டிருக்கிறான். சங்கரின் கோமு அத்தையும், சகோதரிகள் சுதா, வசு எல்லோருமே நன்றாகப் பாடுவார்கள்.

    இரண்டு வருடங்கள் முன்பு பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும் இன்னும் துடிப்போடு விஞ்ஞானியின் உணர்வோடு சங்கர் வாழ்வது அவனுக்குப் புரிகிறது. சமீபத்தில் ஒரு “வாக்கிங் ஸ்டிக்” தயாரித்திருப்பதாகவும், அது முக்கியமாக வயதானவர்களுக்கு, அதிலும் நினைவு மறதி உள்ள முதியவர்களுக்காகவே வடிவமைத்ததாகவும் சொன்னான். அந்த “வாக்கிங் ஸ்டிக்” கைப்பிடியில் ஒரு “மைக்ரோ சிப்” வைக்கப்பட்டிருக்கும். அதன் மூலம் அந்த முதியவர்களின் இருப்பிடத்தை எளிதாகத் தெரிந்து கொள்ள முடியும் என்றும், அதன் உரிமையைத் தான் வைத்திருப்பதாகவும் சொன்னான். விரைவில் ஒரு நல்ல நிறுவனம் மூலம் அதைத் தயாரிக்க வேண்டும் என்றும் அவனிடம் சொன்னது பெருமையாக இருந்தது.

    ஒருநாள் மகாகவி பாரதியாரின் “சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா, செல்வக் களஞ்சியமே” என்ற வரிகளைப் பாடிக்காட்டி, “செல்வக் களஞ்சியம் ..என்றால் என்ன தெரியுமோ கண்ணா…அன்பு. குழந்தைகள் அன்பின் செல்வக் களஞ்சியங்கள். எடுக்க எடுக்கக் குறையாத அன்பு குழந்தைகளிடம்தான் இருக்கிறது. அதைத்தான் பாரதியார் “செல்வக் களஞ்சியமே” என்றார்” என்று சங்கர் சொன்னது அவன் மனத்தைத் தொட்டது.

    அவனுக்கு நண்பன் டாக்டர். ஆ.சங்கரநாராயணனும் அன்பில் செல்வக் களஞ்சியமே….

    22.10.2015

    அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

    Share
  • தேவதைகள் தூங்குகிறார்கள் …

    — கவிஜி.

    தேவதைகள் கொல்கிறார்கள் என்றுதான் எழுத நினைத்தேன், ஒரு மணி நேரத்துக்கு முன்னால். ஆனால் ஒரு மணி நேரத்துக்கு பின்னால் தேவதைகள் தூங்குகிறார்கள் என்று எழுதி விட்டேன். மனம் அப்படித்தானே அது எழுதிக் கொண்டே அழிக்கவும் செய்யும். மாய வித்தைகளின் எல்லாப் பக்கங்களையும் தன் மாய மைகளினால் நிரப்பிக் கொண்டே செல்லும். செல்கிறது. ‘காண்பதெல்லாம்’ கனவினைப் போல், புதைந்தழிந்தே போனதனால் நானும் ‘ஆழ் மனமோ’ என்ற பாரதியையும் உணர்ந்தேன். சொந்த மனம் தன்னை ஒதுக்குவதை தாங்கி கொள்ளும் சக்தி ஏனோ எனக்கு மனம் கூட்டி வந்திருக்கிறது. சொல்லடி சிவசக்தி எனைச் சுடர் மிகு அறிவுடன் படைத்து விட்டாய், என்பதைக் கொஞ்சம் மாற்றி சுடர் மிகு பலத்துடன் படைத்து விட்டாய் என்று முணு முணுத்துக் கொண்டேன்.

    மனதைக் கீறி அதில் நானும் தேவதையே என்று எழுதும் தேவதைகளின் மன தைரியத்தை பாராட்டியே தீர வேண்டும் என்று ஓங்கி அழும் பேராசைகளின் இரைச்சலின் கூப்பாடுகளாக எனது துளியெல்லாம் நிறமற்ற ரத்தமானதைப் போல உணர்ந்து சிரித்தேன். சிரித்து உணர்ந்தேன். அல்லது இரண்டும் அற்ற இடைவெளியில் இல்லாமலே உணர்ந்தேன். சிரித்தேன்.

    நான் எதிர் திசையின் எதிர்ப்பதமாகவே எப்போதும் இருப்பதால், திமிரின் பிள்ளையென தீண்டியும் தூண்டியும் செய்ய முடியாத ஆழத்தில் நீந்தி நீந்தி நீராவதால், கடல் ஒன்றும் பெருங் கனவல்ல என்று கூடி நரைத்து கிழம் எய்திய சங்கத் தமிழின் ஒன்றும் அறியா தினமாக மாறும் மனதுக்குள் முண்டியடித்து அமர்ந்து விட்டேன். நிதானம் இழக்க அவகாசம் தேடும் மனதுக்குள் நான் பெரும் தானங்களின் கவிதையாக கிறுக்கு பிடித்து தலை சிலுப்பிய ஏதோ ஒரு அடுக்கின் கலைதலின் புலம்பல்களாக கொஞ்சம் மது தேடித் திரிந்து, மிஞ்சும் சதி பின்னித் திரியும், நீள வான ஓடைக்குள் மூழ்கிடவே விரும்பினேன். தேவதைகள் கொல்கிறார்கள் என்று உரக்க சொல்லும் துணிச்சல் உண்டு என்பதால் அணைத்து தள்ளிப் போன காலத்தின் முகமூடிக்குள் தலை சாய்த்துக் கொண்டேன்.

    காரணம் இல்லாமல் வெறுக்கும் கலைகளை நல்லவேளை நான் கற்றுக் கொள்ளவே இல்லை. கற்றதையெல்லாம் அன்பின் சுவடுகளாகவே வீசி எறிகிறேன். சில போது அதன் தீச்சுடரை பந்தமாய் கொளுத்தி விடுகிறேன். கொழித்து செழுமையாகப் பீறிடும் முத்தத்தால் மீண்டும் மீண்டும் காதலையே விதைக்கிறேன். விதைந்த போது தேவதைகள் தூங்குகிறார்கள் என்று எழுதத் தோன்றியது. ஆம், தேவதை தூங்கிக் கொண்டுதான் இருந்தாள்.

    கவிஜி கதைரயில் பயணத்தில் எப்போதாவது எப்போதும் மறக்க முடியாத பெண் ஒருத்தி நம்மோடு பயணித்து விடுகிறாள். இன்று அப்படி ஒருத்தி என்னோடு பயணித்தாள். என்னோடு மட்டுமே பயணித்தது போல பக்கவாட்டு மேல் பெர்த்தில் அவள் தூங்கிக் கொண்டிருந்தாள். பெட்ஷீட் கழுத்து வரை போர்த்தி முகம் தெரியும் அளவுக்கு இடம் விட்டிருந்தாள். அல்லது கண்களை மூடிக் கொண்டிருந்தாள், தமிழன்பனின் புதுக் கவிதையென பார்த்ததும் பிடித்து விடும் முகம். பிடித்து விட்ட முகம். வேர்த்து விறுவிறுத்து கனத்து, சிவந்த கிடந்த மனதுக்குள் அந்த முகம் ஒரு மஞ்சள் நிலவை விதைத்தது. அரும்பு மீசை போல உள்ள பூனை ரோமத்தில் முயங்கித் திரண்ட வியர்வைத் துளிகளின் சூட்டை, ஒரு சில் காற்றின் ஈரத்தோடு என் கண்கள் நனைத்து நின்றன. தூண்டில் கண், ஜப்பான் மூக்கு, தொங்கட்டான் காது, இரண்டடுக்கு ஆரஞ்சு சுளையின் இதழ்கள் கொண்ட சற்றே பெரிய நெற்றியில் சிறிய பொட்டு கொண்ட வட்ட முகம். ஜப்பான்காரியாவதற்கு முந்தைய நிமிடத்தில் நின்று விட்ட தமிழ் முகம்.

    வலது பக்க மேல் பெர்த்தில் நான். தம்பி தன் இடத்தை எனக்கு விட்டுக் கொடுத்து அவன் கீழ் பெர்த்தில் படுத்துக் கொண்டான். எனக்கு நேராக எதிர் பெர்த்தில் என் நண்பன் படுத்ததும் தூங்கி விட்டான். அவனுக்கு கீழே ஒரு ஹிந்திக்காரன். அவன் பாடல் கேட்பதில் மூழ்கி விட்டான். அவனுக்கு கீழே அந்த தேவதையின் மொட்டைத்தலை அப்பா தூங்கியே விட்டார். எனக்கும் தம்பிக்கும் இடையில் ஒரு பெரியவர். அவரைப் பற்றி நான் யோசிக்கவே இல்லை. தேவதை பெர்த்துக்கு கீழ் இருந்த பெர்த்தில் ஒரு நடுத்தரம். கண்கள் இறுக மூடியேதான் புரண்டு கொண்டிருந்தது.

    தேவதை அவளின் முதல் வார்த்தையை, வாக்கியத்தை, சொற்றொடரை கவிதையாகவே கூறினாள். கவிதைக்கு கவிதைதானே வரும் என்று ஒரு சிறுவனைப் போல யோசித்தது கவிதைகளற்ற மனம்.

    “அந்த லைட்ட கொஞ்சம் அணைக்க முடியுமா?”!!!!!!. நான் கண்களால் அணைத்தேன். எனது நடுங்கிக் கொண்டிருக்கும் என் மனதுக்குள் அவளின் வார்த்தைகள் தேவையாய் இருந்ததை நான் உணர்ந்தபடியே லைட்டை நிஜமாகவே அணைத்தேன். கதவுப் பக்கமாகவே எங்கள் இருக்கை அமைந்து விட்டதால் அங்கு எரிந்து கொண்டிருந்த லைட்டின் வெளிச்சம் அவளுக்கும் எனக்கும் ஒரு ஒரு மெல்லிய கோடாய் ஒளிச் சிதறலை அவள் நிறத்திலேயே படற விட்டுக் கொண்டிருந்தது. அவள் கண்கள் இப்போது ஆழமாக மூடி இருந்தன. நான் வலது பக்கம் திரும்பி படுத்து தலைக்கு வலக்கையை அணைக் கொடுத்து அவளைப் பார்த்துக் கொண்டேயிருந்தேன். ஒரு மயிலிறகாய் அவளின் சாந்த முகம் காந்தம் பரப்பிக் கொண்டிருந்தது.

    “இந்த மாதிரி தேவதைகளைக் காதலித்துக் கொண்டே இருக்கலாமோ”- என்று எனது மனம் கோபச் செழுமைக்குள் இருந்து அன்பின் வரட்சிக்குள் மிதக்கத் தொடங்கியது.

    நான் பார்த்துக் கொண்டேயிருந்தேன் ரயிலின் ஆட்டத்துக்கு அவளின் பூசின உடம்பு குலுங்கிக் கொண்டேயிருந்தது ஒரு சாவி கொடுத்த குழந்தை பொம்மையாக. எனக்கு காரணமே இல்லாமல் புன்னகை வந்தது, காரணமே இல்லாமல் கோபம் வந்ததைப் போல. விட்டு தூரம் சென்று ஓடி மறைந்து என்னை ஆசுவாசப் படுத்திக் கொண்ட பொழுதை இந்த ஜப்பான் முகம் மனதால் ஏந்திக் கொண்டதைப் போலவே உணர்ந்தேன். அந்த முகத்தில் அத்து மீறி நுழைந்த என் பார்வையை ஏதோ ஒரு பெண் மனத் தவிப்பின் உட்புறம் புரிந்து கொண்ட புள்ளியில் சட்டென்று கண் விழித்தாள். விழிக்கும் போதே அந்த பார்வையின் நீட்சி சரியாக என் கண்களை நோக்கியே சரிந்தது. அவள் கண்கள் என் கண்களில் படரும் நொடியில் தொடர்ச்சியாக நான் சட்டென என் கண்களை மூடிக் கொண்டேன் தூங்குவது போல. தூங்கிய விழிகளுக்குள் இரு பூமிப் பந்தாய் மனம் சுழன்றது. “இன்னும் பார்த்து கொண்டு இருப்பாளோ? பார்த்து விட்டாளோ? அயோ என்ன நினைப்பாள்?” என்று தேவையே இல்லாத கற்பனைகளை தொடர விட்டு மீண்டும் கண்களை மெல்லத் திறந்தேன், அவள் கண்கள் மூடி இருந்தன. ஒரு வட்ட தத்துவம் போல அல்லது ஜென் கவிதையின் ஜின் சிந்தனையைப் போல.

    ‘இத்தனை விதமாக தூங்க முடியுமா’ என்று அவள் ஆச்சரியப் பட வைத்தாள். திரும்பி படுத்தாள், தலைக்கு கையை அணைக் கொடுத்துப் படுத்தாள். கால்களை சற்று தூக்கி வைத்துக் கொண்டு படுத்தாள். ஒருக்களித்துப் படுத்தாள். கழுத்தை இப்பக்கம் அப்பக்கம் என்று ஒரு ஓவிய தொடரைப் போல அவள் மாறிக் கொண்டேயிருந்தாள். நான் மனம் முழுக்க அவளை நிரப்பத் தொடங்கினேன். ஹைகூவின் அடுத்த நிலை என்றே நம்பத் தொடங்கினேன். அலை அடித்து மூச்சுத் திண றிக் கொண்டிருந்த மனதுக்குள் பசுமையை சோலையைக் கொண்ட தீவு மடியென இருந்தது. அந்த அமைதியான சோதி முகம் வீணையடி நீ எனக்கு என்று பாரதி மீட்டிய தந்தியை நானும் மிதித்து, சிறு பிள்ளையாய் நொண்டி விளையாடினேன். கடைசியில் என்னைப் போலவே முதல் படுத்திருந்த நிலைக்கு வந்து விட்டிருந்தாள். அவளின் இடது தலைக்கு கை கொடுத்து முகம் என்னைப் பார்ப்பது போல வைத்திருத்தாள். அந்த ரயில் முழுக்க நாங்கள் இருவர் மட்டுமே என்பது போல ஒரு சிறுவனின் சிக்கு புக்கு ரயிலை நானே ஓட்டினேன்.

    மனதுக்குள் தடக் தடக்… நரம்புகளில் கரக் முறுக் …

    ட்ராக் மாறும் சத்தத்தில் தாமாக விழித்துக் கொள்ளும் கண்களின் தொடர்ச்சி அவளின் முகத்தை விரித்துக் கொண்டே போனது. மலர் வனக் காட்டுக்குள் ஒற்றைப் பூவென இம்முறை அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை, சட்டென்று விழித்தாள். ஆனால், நான் சட்டென்று மூடிக் கொள்ளவில்லை. மைக்ரோ நொடி இடைவெளியில் எங்கள் கண்கள் நன்றாக சந்தித்துக் கொண்ட பிறகுதான் நான் கண்களை மூடினேன். இளையராஜாவின் அசரீரி இசையோடு, “முகிலினங்கள் அலைகின்றதே, முகவரிகள் தொலைந்தனவோ? முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ”

    எங்கள் கம்பார்ட்மெண்டில் ஏதோ ஒரு காதல்காரன் “மெல்லினமே மெல்லினமே மெல்லிய காதல் பூக்கும்” பாடலை மிக மெதுவாகக் கேட்டுக் கொண்டிருக்கிறானோ என்று சத்தமாக என் கற்பனை பூரித்தது. கொலை செய்த தேவதைகளைக் கடந்த மன நிம்மதிக்குள் தூங்கும் தேவதை நிறங்கள் விதைத்தாள். புதுப் பொருள் தரும் சாந்தம் மீண்டும் விழித்தாள். மீண்டும் மூடினேன். மீண்டும் விழித்தாள். மீண்டும் மூடினேன். பார்வைகளின் சந்திப்புகளின் மைக்ரோ நொடி சற்றே நீண்டது, சற்றே பெரிய சிறுகதை போல. அப்படி பார்க்கும் நொடியெல்லாம் அர்த்தம் சொல்லும், அல்லது அர்த்தம் வெல்லும் பார்வையின் சப்தத்தை நான் உரிந்து கொண்டே இருந்தேன். ஒரு பசி எடுத்த காதல்காரனாய் என்னால் எழுத முடியாத கவிதையெல்லாம் அவளே வைத்திருக்கிறாளோ என்று கூட மனம் தடுமாறியது, தடுமாறினால்தான் அது மனம் என்பது போல.

    மீண்டும் ஒரு முறை ரயில் ட்ராக் மாற, சற்று வேகத்துடன் தட தடக்க நான் சட்டென்று விழித்தேன். அவளும் அதே நொடியில் அதே வேகத்தில் விழித்தாள். இம்முறை இருவருமே கண்களை மூடிக் கொள்ளவில்லை. நேருக்கு நேராய் கண்கள் நான்கும் கண நேரத்துக்கும் அதிகமாக பார்த்துக் கொண்டே பின் சட்டென மெல்ல புன்னகைத்து விட்டோம். நான் நன்றாகவே சத்தம் வராமல் வாய் திறந்து சிரித்து விட்டேன். அவள் புன்னகையோடு கண்களை சற்று பெரிதாக்கினாள். எனக்கு அதன் பிறகு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தேய்ந்து கொண்டே போகும் சூரியனைப் போல சுட்டதும், பட்டு சுருங்கியது மனது. வெப்பச் சலனம் வியர்வைக்குள் ஒற்றை உருண்டையை முதுகின் நடு கோட்டில் இறக்கியது. அவள் திரும்பி படுத்து உடலை ஆங்காங்கே சரி செய்தபடியே மீண்டும் எனை நோக்கியே படுத்தாள். எதை நோக்கியோ நகர்ந்தது. எங்களின் ரயில் கடந்த பயணம் ரயில் இப்போது திருப்பூர் தாண்டி இருந்தது.

    “அய்யோ இன்னும் ஒரு மணி நேரத்தில் கோவை வந்து விடுமே என்ன பண்ண?” என்று மூளை பர பரத்தபடியே மெல்ல இதழ் சேர்த்து. சப்தம் எழாமல் “உன் பேர் என்ன?” என்று கேட்டேன். இப்போது மெல்ல தலையை சரித்து கீழே யாராவது, குறிப்பாக அவளின் அப்பா பார்க்கிறாரா? என்று பார்த்தேன் யாரும் பார்க்கவில்லை. குறிப்பாக அவளின் அப்பா பார்க்கவே இல்லை. அவள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். உதடு சரித்து ஏதோ முணு முணுத்தாள்.

    ஒன்றும் புரியவில்லை மீண்டும் சொல்லுமாறு ஜாடை செய்தேன். மெல்ல, செல்ல கோபத்தோடு கொண்ட முறைத்தல் போல ஒரு புன்னகை கலந்து மீண்டும் உதடு சரித்தாள். வீ… என்பது போல பெயர் நீண்டதுஇப்போதும் புரியவில்லை. நான் காசு தொலைத்த சிறுவனாய் விழித்தேன். ஐயோ இத்தனை அழகா இருக்கா. குண்டு குண்டுன்னு மொழு மொழுன்னு பாக்கவே ஜப்பான் பொம்மை மாதிரிதான் இருக்கா. “பேசாம என் கூட வந்துரு”- என்று காமத்தின் திறவு கோலென, காதல் கன்னா பின்னாவென வலை வீசியது. கண்களின் குளத்தில் சிக்கிக் கொண்ட மனதுக்குள், ஆயிரம் மீன்கள் கவிதை ஆயிரம் காரணத்தோடு இல்லாமல் எழுதி தவித்தது.

    என் பெயர் கேட்டாள். நான் “விஜி.. விஜி…” என்றேன் அதே மெல்லிய வாய் மூடித் திறத்தலின் மொழியாக.

    அவளும் “வீ… என்ன வீ?”- என்றே கலவரப் பட்டாள். இருவருமே முகம் அறியா நிழலை விரட்டிக் கொண்டிருந்தோம். என் காயங்களுக்கு எல்லாம் அந்த ஒற்றை பார்வையும் அருகாமை ஜாடையுமே மருந்தாகி விட்ட மாயங்களில் நான் தூங்கும் தேவதையையே நினைக்கத் தொடங்கினேன். மற்றவை மறந்தே போனது. ரயில் கூட மறந்த கணங்களில் தான் வடகோவை வந்தே விட்டது. நண்பனும், தம்பியும் எழுந்து தங்களை தயார் செய்ய ஒவ்வொருவராக எழுந்து இறங்குவதற்கு தயார் ஆகிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் ஒரு விழி அவள் மீதும் மறு விழி மற்றவர் மீதும் இருக்க, நானும் காலணிகளை அணிந்து, தலை சீவி,பேக் எடுத்துக் கொண்டு தவித்து நிற்க, அவளின் முழு விழியை அப்பாவின் மீதும் அதில் ஒரு துளி விழியை என் மீதும் வைத்துக் கொண்டே தயார் ஆகிக் கொண்டிருந்தாள் அவள். என் தோளுக்கு நிற்கும் அளவான உயரம் சற்று கணத்த உடம்பு. காந்த உதடுகளின் வாயிலாக, அளவான கண்களின் மொழியாக, முகம் தைத்து பார்வையை மாற்றிக் கொண்டேயிருந்தாள். சட்டென காலியான கனவாய் நான் மீண்டும் தவித்து தடுமாறி தேவதைத் தூக்கத்துக்கு சாமரம் வீசிக் கொண்டே ரயிலை விட்டு இறங்கி நடை பாதையில் நடக்கத் துவங்க, எனைக் கடந்து முன்னேறிய அவளின் கை என் கைக்குள் வேகமாக எதையோ திணித்து. மறு கணத்தில் பிரிந்து போனது. நான் குனிந்து கையை விலக்காமலே பார்த்து விட்டு சுயயோசனை வந்து நிமிர, அவள் கூட்டத்தில் கரைந்து காணாமல் போயிருந்தாள். மெல்ல கையை தளர்த்தி விரித்தேன். ஒரு பஸ் டிக்கெட்டில் 8148476 அலைபேசி எண்அவளைப் போலவே குண்டு குண்டாய் உருண்டிருந்தது.

    இரவுதான் பேச வேண்டும்.

    எல்லா தேவதைகளும் ஏமாற்றுவதில்லை. உடல் வலியோடு திரும்பி படுக்கிறேன். எதிரே அவள் படுத்திருப்பது போலவே ஒரு வெற்றிட வெளி நிரம்புகிறது என் அறையெங்கும். அது தேவதைகளின் அன்பை மட்டுமே வடிகட்டி விடும் நம்பிக்கையின் பிடிமானம்.

    Share
  • கிருஷ்ணா முகுந்தா முராரி …

    கவிஞர் காவிரிமைந்தன்.

    கிருஷ்ணா முகுந்தா முராரி …

    திரைத்துறையில் நடிப்புலகில் பிரபலமாய் இருந்தவர்கள் அன்றைய காலகட்டத்தில் பாடல் பாடத் தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும் என்கிற எழுதப்படாத விதி இருந்தது. அப்படிப்பட்டவர்கள் கர்நாடக இசையில் விற்பன்னர்களாகவும் இருந்தது தவிர்க்க இயலாத தகுதியாகவும் இருந்தது.

    கிருஷ்ணா முகுந்தா முராரேகுறைந்தது பாடலாசிரியர் எனப்படுபவர் மெத்த இசையறிவு உடையவராக இருந்தார்கள். அவ்வரிசையில் 1944ல் வெளியான ஹரிதாஸ் திரைப்படத்தின் இப்பாடலை இயற்றிய பாபநாசம் சிவன் அவர்களும், இப்பாடலுக்கு நம் நாட்டின் தொன்மை மாறாத இசையமைப்பு தந்த மேதை ஜி.ராமனாதன் அவர்களும், இணைந்து பாடலைப் பாடியவர் எம்.கே. தியாகராஜ பாகவதர் அவர்களும் இருந்தார்கள்.

    மணக்கும் இசையில் முகிழ்த்த மலர்போல் இந்தப்பாடல் எத்தனைத் தலைமுறைகளைத் தாண்டி தமிழ்மண்ணில் கேட்கப்படுகிறது என்று பார்த்தால் அது பிரம்மாண்ட வெற்றியின் அடையாளமாய் காட்சியளிக்கிறது!

    தூய்மையான தமிழ் மொழியில் பாடல்கள் அருகியிருந்த காலம், ஆதலால் வடமொழிச் சொற்களின் கலப்பில் புனையப்பட்ட பாடலாய் இருந்தபோதும், இசையின் கவர்ச்சியாலும், குரலின் ஈர்ப்பினாலும், திரையில் தோன்றிய நாயகன் தங்கள் உள்ளத்தைக் கவர்ந்தவன் என்பதாலும் இப்பாடல் பரிபூரண வெற்றியடைந்தது!

    கிருஷ்ணா முகுந்தா முராரி …
    திரைப்படம்: ஹரிதாஸ்
    இயற்றியவர்: பாபநாசம் சிவன்
    இசை: ஜி. ராமநாதன்
    பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
    ___________________________________________

    கிருஷ்ணா! … முகுந்தா! … முராரி! …
    கிருஷ்ணா முகுந்தா முராரி – ஜெய
    கிருஷ்ணா முகுந்தா முராரி – ஜெய
    கிருஷ்ணா முகுந்தா முராரி – ஜெய
    கிருஷ்ணா முகுந்தா முராரி
    கருணா சாகர கமலா நாயக
    கருணா சாகர கமலா நாயக
    கனகாம்பர தாரி கோபாலா
    கனகாம்பர தாரி கோபாலா
    கிருஷ்ணா முகுந்தா முராரி

    காளிய மர்த்தன கம்சனி தூஷன
    காளிய மர்த்தன கம்சனி தூஷன
    கமலாயத நயனா கோபாலா
    கமலாயத நயனா கோபாலா
    கிருஷ்ணா முகுந்தா முராரி

    குடில குண்டலம் குவலய தளநீலம்
    மதுரமுரளீ ரவலோலம்
    கோடி மதன லாவண்யம்
    கோபி புண்யம் பஜா கோபாலம்
    கோபி ஜன மன மோகன வியாபக
    கோபி ஜன மன மோகன வியாபக
    கோபி ஜன மன மோகன வியாபக
    குவலய தள நீலா கோபாலா
    குவலய தள நீலா கோபாலா
    குவலய தள நீலா கோபாலா
    கிருஷ்ணா முகுந்தா முராரி – ஜெய
    கிருஷ்ணா முகுந்தா முராரி முராரி!

    காணொளி: https://www.youtube.com/watch?v=1LZGwwdGvAA

    Share
  • கடைசி கடிதம்..

    With Vesa0

    இன்று காலை கண் விழித்தவுடன் வழக்கம் போல் கைபேசியை எடுத்து, ஜிமெயில் பெட்டியை திறந்து பார்த்தேன். மின்னஞ்சல் பட்டியலில் அகநாழிகை பொன்.வாசுதேவன் அவர்களிடமிருந்து வந்திருந்த கடிதம் தான் முதலில் கண்ணில்  பட்டது. ‘அன்புள்ள மாதவன், ஒரு துயரச் செய்தி. விமர்சகரும், எழுத்தாளருமான வெங்கட்..’ என்ற வரியைக் கண்டவுடன் ‘அந்தச் செய்தியாக’ நிச்சயம் இருக்கக்கூடாது என்கிற பரபரப்புடன் அதைத் தட்டினேன். அதே செய்தி தான்! ‘..வெங்கட் சாமிநாதன் இன்று அதிகாலை இயற்கை எய்தினார்’.

    இன்று சரஸ்வதி பூஜை என்பதால் என் மனைவி அதிகாலை நாலரை மணிக்கே எழுந்து, அப்போதுதான் பூஜையை ஆரம்பித்திருந்தாள். அவளுக்கு செய்தியை சொல்லக் கூட தோன்றவில்லை. அங்கே அடுக்கி வைக்கப்படிருந்த புத்தகங்களில் ‘அம்மாவின் தேன்குழல்’  புத்தகம் மட்டும்  கண்ணில் பட்டு, மீண்டும் படுக்கையறைக்குச் சென்று மெத்தையின் மீது அமைதியாக அமர்ந்து விட்டேன்.
    ‘அம்மாவின் தேன்குழல்’ – என்னையும் வெ.சா அவர்களையும் இணைத்து வைத்த சிறுகதை.

    பெல்ஜியத்திற்கு வந்த பிறகு உண்டான வெறுமையை நிரப்புவதற்கு எழுத ஆரம்பித்து, எழுதியதை என் நண்பர்களிடம் மட்டும் பகிர்ந்து வந்தேன். ‘அம்மாவின் தேன்குழல்’ சிறுகதையை வாசித்த என்னுடையநண்பர் ஒருவர் வல்லமை மின்னிதழில் நடந்து வரும் சிறுகதைப் போட்டி பற்றி தெரிவித்து, வல்லமைக்கு சிறுகதையை அனுப்புமாறு தெரிவித்தார். வல்லமை தளத்தில் சிறுகதைப் போட்டியின் நடுவர் வெங்கட் சாமிநாதன் என்று அறிவித்திருப்பதை பார்த்தவுடன், ‘விமர்சகர் வெ.சா நடுவரா? எவ்வளவு பெரிய ஆளுமை? ஆளை விடுங்கள்.’ என்று கூறிவிட்டேன். பிறகு, நண்பரின் வற்புறுத்தலின் பேரிலேயே என்னுடைய சிறுகதையை அனுப்பி வைத்தேன். அனுப்பி வைத்தேனே தவிர எந்தவித  எதிர்பார்ப்பும் என்னிடம் இருக்கவில்லை. வெ.சா என் படைப்பை வாசிக்கப் போகிறார் என்பதே எனக்குப்  போதுமானதாக இருந்தது. நான் சற்றும்  எதிர்பார்க்காத வண்ணம் என்னுடைய சிறுகதையை அந்த மாதத்தின் சிறந்த சிறுகதையாக தேர்ந்தெடுத்து விமர்சித்திருந்தார் வெ.சா.

    “மாதவன் இளங்கோ எனக்கும் ஒரு வேளை வல்லமைக்கும் கூட புதியவர். எங்கோ இருப்பவர். ப்ரஸ்ஸல்ஸும் மயிலாப்பூரும் இணையாதவை. இணைக்க முடியும். ஆனால் இணையாதவர்கள் இரண்டு முனைகளில். நன்றாகத் தான் ஒரு நல்ல விஷயத்தைத் தான் எழுதியிருக்கிறார்.”

    அவருடைய இந்த வரிகள் என்னளவில் எனக்கு ஒரு பெரிய விருது. இந்தக் கதையின் மூலம் இணைந்தது ப்ரசல்சும் மயிலாப்பூரும் மட்டுமல்ல; நானும் அவரும் கூட. அதன் பிறகு மாதமாதம் என்னுடைய சிறுகதைகளை அனுப்பி  வைத்தேன். அடுத்தடுத்த மாதங்களில் என்னுடைய வேறுசில சிறுகதைகளையும் தேர்வு செய்து விமர்சித்திருந்தார்.  ஒரு முறை “வருத்தம் என்னவென்றால், போனமாதம் வந்த சிறுகதைகளின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், நல்ல கதைகள் எண்ணிக்கை குறையவில்லை. இம்முறை அதற்கும் கேடுகாலம்.” என்று தலையில் குட்டவும் செய்தார்.  இருந்தாலும் போட்டியில் பங்குபெற்ற நாங்கள் விடாமல் படைப்புகளை அனுப்பிக் கொண்டிருந்தது அவருக்கு நிச்சயம் ஆச்சர்யம் அளித்திருக்கக் கூடும்.

    “ஏதும் critical ஆகச் சொன்னால் தமிழ் எழுத்தாளர்கள் தாங்கிக் கொள்வதில்லை என்பது என் 50 வருட அனுபவம். அதற்கு முன்னர் எவ்வளவு பாராட்டுக்கள் பெற்றிருந்தாலும் ஒரு critical comment-ஐ அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது.  நியாயம் தான். அவர்கள் எல்லாம் கற்புக்கரசிகள் அல்லவா?. ஒரு தவற்றைக் கூட தாங்கிக்கொள்ள மாட்டார்கள். ஒரு தடவையானால் என்ன, புனிதம் கெட்டது கெட்டது தானே என்ற ஜ்வாலையில் வாழ்பவர்கள். நல்ல வேளையாக இங்கு அந்த மாதிரி எனக்கு ஏதும் உத்பாதங்கள் இது வரை எனக்கு நேரவில்லை.” என்றுவேறொரு தருணத்தில் குறிப்பிட்டிருந்தார்.

    அதன் பிறகு திண்ணை, சொல்வனம் போன்ற இதழ்களில் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களைப் பற்றி அவர் எழுதிய கட்டுரைகளில் என்னைப் பற்றியும்  குறிப்பிட்டிருந்தார். நான் கடைஞன். இதை எல்லாம் அவர் செய்ய வேண்டிய தேவையே அவருக்கு இல்லை. ஆனால்அவரைப் போன்ற ஜாம்பவான்களின் நியூரான்களில் இடம் பிடிக்கும் அளவிற்காவது  என் படைப்புகள் இருப்பது மகிழ்ச்சியையும், மன நிறைவையும் அளித்தது. அதன் பிறகு நான் எதை எழுதினாலும் அவருக்கு அனுப்பி வைத்தேன். அதையெல்லாம் வாசிப்பதற்கு அவருக்கு அதீத பொறுமை இருந்திருக்க வேண்டும். அவ்வப்போது தொலைபேசி மூலமாகவும் தொடர்பிலிருந்தேன்.

    கடந்த டிசம்பர் மாதம் விடுமுறைக்கு இந்தியா வந்து திரும்பியவுடன் முகநூலில் இவ்வாறு எழுதியிருந்தேன்:

    “கடந்த ஒரு மாத காலமாக பேய்த்தனமாக ஓடிக்கொண்டிருந்தேன். வீட்டில் இருந்ததைக் காட்டிலும் காருக்குள் இருந்த நேரம் அதிகம். எத்தனை நண்பர்கள்.. அதில் எத்தனை புதியவர்கள்.. எத்தனை சந்திப்புகள்.. புத்தக கண்காட்சி உட்பட எத்தனை விழாக்கள்.. எத்தனை உணவகங்கள்.. எத்தனை கடைகள்.. அத்தனையும் வெறும் கனவோ என்று தோன்றுகிறது. கனவு கலைந்தெழுந்து அமர்ந்துகொண்டிருக்கிறேன். வெறுமை என்னை சூழ்ந்துகொண்டிருக்கிறது.”

    இப்படிச் சூழ்ந்திருந்த வெறுமையை கொன்றழித்து நிரப்பும் விதமாய் வந்தது அவருடைய கடிதம்.

    ‘My dear Madhavan Elango,’ என்று ஆரம்பித்து, ‘எங்கிருக்கிறாய், பெல்ஜியத்திற்குத் திரும்பிவிட்டாயா?’ என்று வினவிவிட்டு,’Kanayazhi of Feb carries an article on your short story collection…………’ என்று எழுதியிருந்தார்.

    கடித்தத்தைப் பார்த்தவுடனேயே மேக்ஸ்டருக்குச் சென்று கணையாழி பிப்ரவரி இதழை தேடிக் கண்டுபிடித்தேன். அவரது இந்த வரிகளைப் பார்த்தபோது, வேறொருவர் என் கதைகளைப் பற்றி எழுதியிருக்கும் கட்டுரையைப் பற்றி எனக்குத் தெரிவிக்கிறார் என்றே நினைத்தேன். ஆனால், கட்டுரையின் தலைப்பையும், அதற்குக் கீழ் அவருடைய பெயரையும் பார்த்தவுடன் எனக்கு ‘இனிய அதிர்ச்சி’! சிறிது நேரம் கழித்தே வாசிக்க ஆரம்பித்தேன். “இப்போது பெல்ஜியத்திலிருந்து… ஒரு மாதவன் இளங்கோ” என்கிற தலைப்பில் ‘அம்மாவின் தேன்குழல்’ நூலை அறிமுகப்படுத்தி ஐந்து பக்கக் கட்டுரை ஒன்றை வரைந்திருந்தார். தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள் மற்றும் புத்தக முன்னுரையில் நான் எழுதியிருந்த என் அனுபவக் குறிப்பு ஒன்றைப் பற்றிய விரிவான விமர்சனத்தை எழுதியிருந்தார்.

    With Vesa12

    கடந்த டிசம்பர் மாதம் சென்னையில், ஒரு மழை நாளில் மாலைப்போழ்தில் அவரைச் சந்தித்த தருணம் மறக்கவியலாது. எழுத்தாளர் திலீப்குமாரும் அப்போது உடனிருந்தார். நானும் என் மனைவியும் சென்ற பத்து நிமிடங்களில்,  வெ.சா அங்கு வந்து சேர்ந்தார். மிகவும் சிரமப்பட்டுத்தான் நடந்து வந்தார். அவர் மெதுவாக நடந்து வருவதை பார்க்கும்போதுஅவருக்கு இருந்த மூட்டுவலியை உணர முடிந்தது. அதே சமயம், அதைக் கொஞ்சமும்  காட்டிக்கொள்ளாத புன்னகை சூடிய முகத்தின் மூலம், அவருடைய மனோவலிமையையும் உணர முடிந்தது. ‘தமிழ் இலக்கிய உலகின் எதிர்க்குரல்’, ‘கலை இலக்கிய விமர்சகர்’, ‘எழுத்தாளர்’ என்று தான் ஏந்தியிருக்கும் அத்தனையத்தனை அடையாளங்களையும் உதறிவிட்டு, எனக்கும், என் மனையாளுக்கும் ஒரு நண்பனாகவும், ஒரு தாத்தாவாகவும் மட்டுமே தன்னைக் காட்டிக்கொண்டார். அத்தனை எளிமை. அத்தனை கனிவு. அவரிடம் என்னென்னவோ ‘இலக்கியத்தனமான விஷயங்கள்??!!’ எல்லாம் பேசலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், எதுவுமே பேசத் தோன்றவில்லை. அதுவும் கூட எனக்குப் பிடித்திருந்தது. வாசகனாக எழுத்தாளனை சந்திக்கச் சென்றவன், மாணவனாக ஆசிரியரை சந்திக்கச் சென்றவன், வெறும் பேரனாகவே திரும்பினேன்.

    என் மனைவியோடு அவரைப் பார்க்கச் சென்றிருந்தது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி. ‘குழந்தையை ஏன் அழைத்து வரவில்லை?’ என்று கேட்டார்.  என் மனைவி கூட, “இலக்கியவாதிகளைச் சந்தித்து விட்டு வந்தது போலவே தெரியவில்லை. நெருங்கிய உறவினர்களுடன், தந்தையுடன், தாத்தாவுடன் சிறிது நேரம் மகிழ்ச்சியோடு பேசிவிட்டு வந்தது போலிருக்கிறது” என்று கூறினாள். நானும் அவ்வாறே உணர்ந்தேன். உண்மையில் அவரை முதன்முறை சந்திப்பது போலவே தெரியவில்லை. அது ஒன்றும் விந்தையில்லை. ஏனெனில் அவரை வாசிக்கும்போது அவருடன் வாழ்ந்துகொண்டே, அந்த இடங்களுக்கெல்லாம் பயணித்தது போன்று, அந்த மனிதர்களைச் சந்திப்பது போன்று உணர்ந்திருக்கிறேன். குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால் – ‘சி.சு.செல்லப்பா ஒரு வாமன அவதாரம்’ கட்டுரைத் தொகுப்பு. ‘அவர் செல்லப்பா அவர்களின் வீட்டு வாயிலில் நுழையும் போது, செல்லப்பா அவர்கள் ஊருக்குச் செல்வதற்கு மூட்டைக் கட்டிக்கொண்டிருந்ததாக’ ஒரு இடம் வரும். உண்மையில் அந்தக் காட்சி என்னுள் உறைந்து போயிருக்கிறது. அவர்கள் இருவரோடும் மூன்றாவது ஆளாக, ஒரு சாட்சியாக நான் அங்கு நின்று கொண்டிருப்பது போன்று உணர்ந்திருக்கிறேன். அவரை நேரில் சந்தித்ததற்கு முந்தைய நாள் வரை, அவரைப் பற்றி நினைக்கும் போதெல்லாம், அவருடைய கருப்பு வெள்ளை உருவம்தான் எனக்கு நினைவுக்கு வரும். இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்தத் தருணம் அப்படியில்லை. என் தாத்தாவே நினைவுக்கு வருகிறார். ‘கணையாழியின் கடைசிப் பக்கங்கள்’ புத்தகத்தை வாங்கி வந்து வாசித்துக் கொண்டிருந்த ஒரு வாசகனுக்கு அதன் நடுப்பக்கத்தில் கட்டுரை வரைந்து ஊக்கப்படுத்தியவர் அவர்.

    “…எப்படி இருப்பினும், என்னுடைய ‘அம்மாவின் தேன்குழல்’ சிறுகதையை திரு.வெங்கட் சாமிநாதன் அவர்கள் தேர்ந்தெடுத்து எழுதியிராவிட்டால், அதன் பிறகு நான் எழுதியிருப்பேனா என்பது சந்தேகமே…” என்று புத்தக முன்னுரையிலேயே அவர் அம்மாவின் தேன்குழலையும், அமைதியின் சத்தத்தையும் சிறந்த சிறுகதைகளாகத் தேர்ந்தெடுத்தது குறித்து எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது.

    இதையெல்லாம் அவர் செய்தது, அவர் என் மீது கொண்ட அன்பினாலும், நான் தொடர்ந்து எழுதுவதற்காக, எனக்கு உத்வேகம் அளிக்கும் பொருட்டே என்பதை நான் அறிவேன்.

    பேரன்களுக்கும் தாத்தாக்களுக்கும் இடையான உறவு இருக்கிறதே, அது ஒரு அற்புதமான உறவு.  தம் பிள்ளைகளை  கண்டிப்பாக வளர்த்தவர்கள் கூட, தங்கள் பேரன் பேத்திகள் மீது மறந்தும் கூட கடிந்து கொள்ள விழைவதில்லை. காலம் அவர்கள் மென்மையானவர்களாக்கி விடுகிறதோ என்று  தோன்றுகிறது. பேரன் பேத்திகளும் கூட தங்கள் பெற்றோர்களை விட, தாத்தாக்களிடம் அதிகம் உரிமை எடுத்துக்கொள்வார்கள். ஆனால் பாருங்கள், அந்த உறவு நீண்டகாலம் நீடிப்பதில்லை. நானும் அவரிடம் அத்தகைய பேரனாகவே பழகி இருக்கிறேன். தொலைபேசியில் அழைத்தால் கூட அவரைப் பேசவிட்டதில்லை. ‘ப்ளெமிஷ், டச்சு எல்லாம் ஒன்றே தான். வெவ்வேறு மொழிகளில்லை.’ என்றெல்லாம் சொல்லிவிட்டு, ‘அத்தனை பெரிய படிப்பாளி. அவருக்கு அது தெரியாதா? எதற்கு எனக்கு இந்த அதிகப் பிரசங்கித்தனம்!’ என்று நொந்துகொண்ட தருணங்கள் உண்டு.

    என் தந்தைவழி, தாய்வழி தாத்தாக்களைப் பறிகொடுத்த பின்னர், எனக்குக் கிடைத்த அன்பான தாத்தா இவர். இன்று அவரையும் பறிகொடுத்து நிற்கிறேன்.

    கடந்த ஜூன் மாதம் அவர் பிறந்த நாளன்று காலை அவருடைய கைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். உடனே ‘Thank you dear! ‘ என்று பதில் அனுப்பி இருந்தார். அன்று மாலை, மீண்டும் என் மகன் வடிவமைத்த வாழ்த்து அட்டையை, அவனுடைய புகைப்படத்துடன் அனுப்பி வைத்திருந்தேன். ஆனால் அதை பார்க்கவே இல்லை போலிருக்கிறது. மூன்று வாரங்களுக்கு முன்பு காந்தி ஜெயந்தி அன்று அவரிடமிருந்து ஒரு நீண்ட கடிதம். வழக்கம் போல் ஆங்கிலத்தில் தான்  எழுதியிருந்தார். “காந்தி ஜெயந்தி அன்று எனக்கு வாழ்த்து அனுப்பியதற்கு மிக்க நன்றி. குழந்தையுடைய புகைப்படத்துடனான வாழ்த்து அட்டை அருமை.” என்று கூறியவர், அவருடைய மூட்டுவலியைப் பற்றியும், அவர் நடப்பதற்கு சிரமப்படுவதைப் பற்றியும் குறிப்பிட்டு விட்டு, உடனே நான் அதை நினைத்து வருந்தக்கூடாது என்று, ‘சரி அதை விடு ஆர்த்ரிடிஸ் பத்து வருடமாக என்னுடைய நண்பன்’ என்று எழுதியிருந்தார்.

    DSC_0253

    கடந்த பத்து மாதங்களாக ஒரு வரி கூட எழுதவில்லை. அது எனக்கு பெரியதாகவும் தெரியவில்லை. ஆனால் அவருடைய இந்தக் கடிதத்துக்கு, ‘நான் டிசம்பர் மாதம் இந்தியா வருவேன். நிச்சயம் சந்திக்கலாம். Take Care.’ என்று எழுதிய வரியை அனுப்பாமலே  விட்டிருக்கிறேன். அதுதான் இப்போது என்னை அழுத்திக் கொண்டிருக்கிறது.

    ஒருமுறை அவருக்கு இவ்வாறு கடிதம் எழுதியிருந்தேன்:

    “இந்தக் கடிதத்தை ஒரு சடங்காக நிச்சயம் நான் எழுதவில்லை. உண்மையில் இதற்கு மேல் நான் எழுதும் நல்ல படைப்புகள் மூலமாகவே நான் உங்களுக்கு நன்றி செலுத்த விரும்புகிறேன். என்னுடைய சமீபத்திய ஆக்கமான ‘முடி’, சொல்வனம் பெண்கள் சிறப்பிதழில் வெளிவந்துள்ளது. ‘முடி’ – உங்களுக்கு நான் செலுத்தும் ஒரு நன்றிச்செண்டு!”. 

    தமிழ் இலக்கிய உலகின் எதிர்க்குரல், மூத்த கலை இல க்கிய  விமர்சகர், மூத்த எழுத்தாளர்  என்பதெல்லாம் மற்றவர்களுக்கே. எனக்கு அவர் தாத்தா மட்டுமே. முடி மட்டுமல்ல, இதற்கு மேல் நான் எழுதும் எல்லா வரிகளுமே நான் அவருக்குச் செலுத்தும் நன்றிச்செண்டு!

    மேற்கண்ட வரிகளோடு முடித்துவிட்டு, மீண்டும் ஒருமுறை அவரது கடைசிக் கடிதத்தை வாசித்தேன். அதில் திடீரென ஒரு வரி வேறுவிதமான அர்த்தத்தைக் காட்டி, சுருக்கென்று என் மனதைத்  தைக்கிறது.  

    “Wish we were in accessible proximity, but that is not to be.” 

    With Vesa11 

    Share
  • பயன்மிகு இணையவழிச் சேவைகள் கட்டுரைப் போட்டி முடிவு

    அன்பினிய நண்பர்களே,

    Audacity-image-600x337

    சென்ற மாத (செப்டம்பர், 2015)  பயன்மிகு இணையவழிச் சேவைகள் கட்டுரைப் போட்டியில் திரு சிவானந்தம் கனகராஜ் அவர்களின் இணையவழி குரல் பதிவு மற்றும் ஒலிக் கோப்புகள் உருவாக்கத்திற்கான தளங்கள்  குறித்த கட்டுரை பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக நடுவர் திரு ஐயப்பன்  அறிவித்திருக்கிறார். வாழ்த்துகள் நண்பரே.

    தொடர்ந்து போட்டிக்கான ஆக்கப்பூர்வமான கட்டுரைகளை வரவேற்கிறோம். நன்றி.

    Share