இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (171)

0

–சக்தி சக்திதாசன்.

அன்பினியவர்களே !

இனிய வணக்கங்கள்.

மானிட வாழ்க்கை என்பது மனிதருக்கு வாய்ப்பது அவர்கள் அறிந்த வகையில் ஒரேயொரு முறைதான். விந்தாக அன்னையின் கருவறையில் விதைக்கப்பட்டு மானிட உருவமாக இம்மண்ணின் மடியில் விழுகிறோம். குழந்தை, வாலிபம், வயோதிகம் எனும் மனித பருவத்தின் காலங்களைக் கடக்கும் நமக்கு ஒவ்வொரு பருவத்திலும் சமூகத்தினால் எதிர்பார்க்கப்படும் கடமைகள் எம்மீது திணிக்கப்படுகிறது. விரும்பியோ, விரும்பாமலோ இக்கடமைகளை நிறைவேற்றும் கட்டாயத்திற்குள்ளாக்கப்படும் நம்மில் சிலர் இதனை முற்றாக நிராகரித்து நடக்க முற்படும்போது அவர்களின் மீது சமுதாயம் ஒரு முத்திரை குத்துகிறது. வாழ்வில் எதிர்பார்க்கப்பட்ட கடமைகளை முடிந்தளவு திருப்திகரமாக நிறைவேற்றி விட்டு வயோதிகம் எனும் பருவத்தினுள் காலடி எடுத்து வைக்கிறோம்.

அறையின் மூலையில் இருக்கும் பழைய புத்தகங்களை அடுக்கி வைக்கும் பீரோவைப் பார்த்திருப்பீர்கள். அதனுள் இருக்கும் பல புத்தகங்கள் தமது உபயோகம் முடிந்த காரணத்தினால் கவனிப்பாரற்று தூசு படிந்து இருக்கும். ஓய்வு பெற்ற வயோதிகர் எனும் முத்திரை குத்தப்பட்ட பலரும் இன்றைய சூழலில் அப்படியாக ஒதுக்கி வைக்கப்படுகிறார்களோ எனும் ஒரு கேள்வி எழுகிறது. குறிப்பாக எமது புலம்பெயர்ந்தோர் சமூகத்தில் இத்தகைய ஒரு நிலை காணப்படுவது போலத் தென்படுகிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது.

வாழ்வின் அனுபவங்களைத் தம்முள் சுமந்தபடி அதனைப் பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் எதுவும் கிடைக்காமல், வெறும் தூசு படிந்த அருமையான புத்தகங்களைப் போல அவர்களும் விரயமாகிப் போகிறார்களோ எனும் எண்ணம் மிகவும் சத்தமாக உள்ளத்தில் எழுகிறது. இந்நிலை குறிப்பாக ஈழத்துப் புலம்பெயர் சமூகத்தினிடையே காணப்படுவது போல் ஒரு கருத்து உள்ளத்தில் சதிராடுகிறது. இதற்கான காரணங்கள் பலவிருக்கலாம். ஈழத்தில் பலகாலமாக தமிழரிடையே இருந்து வந்த பாதுகாப்பற்ற சூழலினால் இடம்பெயர்ந்தோர் ஏராளம். இவர்களில் ஓய்வு பெற்ற வயோதிகர் பலரடங்குவார்.

ஈழத்திலே வாழ்ந்திருந்தபோது இயல்பாக தம்முடைய பணிகளைத் தாமே பார்த்து வந்தபோது அவர்கள் தமது இருப்பை நியாயப்படுத்தி வந்தார்கள். ஆனால், திடீரென முற்றாக அந்நியமான ஒரு சமூகச்சூழலில் சிக்கிக் கொள்ளும்போது, எதை மிக இலகுவாக தாமே செய்து வந்தார்களோ அதற்காக மற்றவர்களுடன் தங்கி இருக்க வேண்டிய சூழல் உருவாகிறது. அவர்கள் தமக்குள் தாமே தம்மைத் தாழ்வாக மதிப்பிட்டுக் கொள்ளும் ஒரு நிலை உருவாகிறது. இவர்களில் பலர் தமது உறவினர்களோடு தங்கியிருக்க வேண்டிய நிலையில் தமது வாழ்வின் அத்தியாவசிய தேவைகளுக்காய் காத்திருக்க வேண்டியுள்ளது.

இது யாருடைய தவறும் அல்ல. வாழ்க்கை வீசும் எதிர்பாரா சவால்களினால் பாதிக்கப்பட்டு தமது இயற்கையான சூழலை விட்டு அந்நியநாடுகளுக்குப் புலம்பெயரும் தமது உறவினர்களைத் தம்மோடு வைத்துக் கொள்வோர்கள் தாம் தமது வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதற்காகப் பணிகள் புரியும் ஒரு கட்டாயமேற்படுகிறது. இதனால் அவர்களுடன் தங்கியிருக்கும் உறவினர்களும் தமது சிக்கல்களைத் தீர்ப்பதற்கான வழியைத் தேடி அவஸ்தைக்குள்ளாகிறார்கள்.

சுமார் இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னே எனது அன்னை, தந்தை என்னோடு தமது எஞ்சிய காலத்தைக் கழிப்பதற்காக வந்தபோது இதை முற்றாக உணர்ந்தவன் நான். பாசத்தில் எந்தவித குறை வைக்காவிட்டாலும் நானும், எனது மனைவியும் பணிபுரிய வேண்டிய கட்டாயத்தினால் நாங்கள் எம்மால் விரும்புமளவிற்கு எமது பெற்றோருடன் எமது நேரத்தைச் செலவு செய்ய முடியாத இக்கட்டான சூழல். இங்கே மனவருத்தத்திற்குரிய விடயம் என்னவென்றால் எமது சமூகத்தின் வயதானவர்களின் அனுபவங்களின் மூலம் அவர்கள் எத்தனையோ பங்களிப்புகளைச் செய்யக்கூடிய திறமையிருந்தும் அவர்களால் பங்குபெற முடியாத நிலையே!

இதற்கான நிவர்த்தி என்ன என்பதை நாம் வாழும் இந்தப் புலம்பெயர்ந்த சமூகத்தில் சமுதாய அங்கமான மற்றைய இனத்தவர் தமது வயோதிகர்களை எவ்வாறு தம்முடன் இணைத்துக் கொள்கிறார்கள் என்பதன் மூலம் நாமும் அதற்கான மாற்றங்களைச் செய்வதிலே தான் தங்கியுள்ளது. அனைவருமே அந்த நிலையில் தான் இருக்கிறார்கள் என்று சொல்லி விட முடியாது. எனது தந்தையின் நண்பர் ஒருவர், அவரும் ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்தவர் தன்னுடைய அனுபவத்தை, அறிவை எவ்வாறு பகிர்ந்து கொண்டார் என்பது மிகவும் சுவாரஸ்யமானது.

senior citizensஈழத்தில் கல்வித் திணைக்களத்தில் உயர் கல்வி அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் அவர். நல்ல ஆங்கிலப்புலமை கொண்டவர். ஈழத்தில் இருந்து அப்போது இடம்பெயர்ந்தவர்களுக்கு வரும் உத்தியோகபூர்வமான கடிதங்களை மொழிபெயர்த்து அவர்களுக்கு விளக்கி அதற்கான பதிலையும் எழுதிக் கொடுப்பார். அது மட்டுமின்றி அத்தகையோரின் பிள்ளைகளின் பள்ளிகளில் மொழிப்பிரச்சனையால் அல்லலுறுவோருக்கு தனது வீட்டில் இலவசமாகப் பிரத்தியேக பாடங்கள் சொல்லிக் கொடுத்து உதவுவர். அது மட்டுமின்றி தாம் வாழ்ந்த கட்டிடத் தொகுதியில் இருக்கும் குடியிருப்போர் சங்கத்தில் காரியதரிசியாக செயலாற்றி அவர்களுக்கான குறைகளை நிவர்த்தி செய்ய முயற்சிப்பார். இத்தகைய செய்கைகளின் மூலம் தான் தனது ஓய்வு நேரத்தை மிகவும் உபயோகமான வழியில் கழித்ததோடு தனது வாழ்வியல் அனுபவங்களை முறையாக மற்றையோருக்காக உபயோகித்தார். சில வருடங்களுக்கு முன்னால் தனது தொண்ணூறாவது வயதுகளில் காலதேவன் அவரைத் தன்னுடன் அழைத்துக் கொண்டான்.

எமது சமூக முதியோர்களை ஒன்றிணைத்து அவர்களின் அனுபவ அறிவை வளரும் எமது தலைமுறைகள் உள்வாங்கிக் கொள்வதற்கான எத்தகைய நடவடிக்கைகளில் நாம் ஈடுபட்டிருக்கிறோம் என்று எம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய வேளை இது. ஆங்காங்கே வயோதிகர்களுக்கான சுற்றுலாக்களை சில இங்கிலாந்தின் சில பகுதிகளில் செயல்படுத்துகிறார்கள்.

ஆனால் இவற்றில் எத்தனைபேர் பங்கெடுக்கிறார்கள் என்பதுவும், ஒன்றிணைந்து சுற்றுலா செல்வது மட்டுமின்றி தாம் வாழும் சமுதாயத்தில் தாம் பங்களிக்கிறோம் எனும் திருப்தி ஏற்படும் வகையிலான செயற்பாடுகளில் இவர்களை ஈடுபடுத்துவதற்கான முன்னெடுப்புகள் நடைபெறுகின்றனவா ? என்பதுவே கேள்வி.

மூப்பு என்பது நோயல்ல அது வாழ்வின் ஒரு கட்டம்.

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.