திருக்குறளுக்குப் புது விளக்கம் – 20
– புலவர் இரா. இராமமூர்த்தி.
காதலின் பெருமையை சற்றும் தாழ்த்தாமல், மிகவும் உயர்வாகக் கூறிக் கற்பவர் உள்ளத்தில் பெருமிதத்தை உருவாக்கியவர் திருவள்ளுவரே! அவர் இயற்றிய காமத்துப் பால் என்ற பகுதி முழுவதும் இனிமையும், மென்மையும் கலந்து நம் உள்ளத்தை மேலுயர்த்துகின்றது! காமம் என்ற சொல்லின் சிறப்பை அவரே ஒரு திருக்குறளில் வெளிப்படுத்துகிறார்!
“மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார்!” (1269)
என்பதே அக்குறட்பா! ”காதல் அடைதல் உயிரியற்கை” என்பது பாவேந்தரின் கவிதை வரி! எந்த உயிரும் காதல் வசப்படும்! மனிதன் மட்டும் காதலின் சிறப்பை அறியாமல் காமவெறி கொண்டு குற்றம் புரிகிறான்! பொருளாசை, உடலாசை என்பன மனித குலத்தின் தாழ்வுக்கே வழி வகுக்கின்றன! அவற்றைக் ”காம காஞ்சனம்” என்று அடையாளப் படுத்தி அவற்றை நீக்க வேண்டும் என்று குருதேவர் ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்சர் உபதேசிக்கிறார்!
மக்களின் காதல், அறநெறியை விட்டு விலகும்போதுதான் பெண்ணாசையாகிக் காமம் கொள்ள வைக்கிறது! இந்தக் காமம் பற்றிய திருவள்ளுவரின் குறட்பாக்கள் தமிழின் பழைய இலக்கண நூலான தொல்காப்பியத்தின் அகப்பொருள் கருத்துக்களின் விளக்கமாகவே அமைந்ததை இதற்கு முன் எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறேன்! காட்சி, ஐயம், தெளிவு, குறிப்பறிதல் என்ற களவியல் நிகழ்ச்சிகளின் வரிசையை ”அணங்குகொல்” எனத் தொடங்கும் குறட்பாவில் நாம் கண்டறியலாம் என்றே குறிப்பிட்டுள்ளேன்! [https://www.vallamai.com/?p=62666]
காதலியும் காதலனும் தற்செயலாகச் சந்தித்துக் கொண்டபின், அவர்களின் அன்பு மேலும் வளர்ந்து மீண்டும் மீண்டும் சந்திக்க வைக்கிறது! இந்தச் சந்திப்பு, இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற்கூட்டம், என்று மேலும் வளர்கிறது. தலைவன் தன் தோழனிடமும், தலைவி தன் தோழியிடமும் மட்டுமே காதலைப் பற்றிக் கூறுவர்! மற்றவர் அறியாமல் வளரும் காதலே களவியல் எனப்படும்! இங்கே தலைவன் தோழனிடம் தன் காதலியைப் பற்றிச் சொல்லி, அவளை அடிக்கடி சந்திக்க உரிய உதவிகளைச் செய்யுமாறு தோழனை வேண்டுகிறான்! தோழனிடம் தலைவன், உதவி வேண்டுவதை மகாகவி பாரதியார்,
”பொன்னவிர் மேனி சுபத்திரை மாதினைப்
புறங்கொண்டு போவதற்கே
என்ன உபாயம் எனக்கேட்டால் அதை
இருகணத்தே உரைப்பான்!”
என்ற பாடலில் விளக்குகிறார்! கடவுளே தோழனாக விளங்கிக் காதலை நிறைவேற்றிய சிறப்பை நம் சமயம், கண்ணன்- அருச்சுனன் ; சிவபெருமான்- சுந்தரர் வரலாறுகளில் குறிப்பிடுவதைக் காணலாம்!
பண்டைத் தமிழர்களின் காதல் வாழ்க்கையின் சிறந்த பகுதிகளைக் காட்டும் திருவள்ளுவரின் ‘காமத்துப்பால்’படிப்போர் உள்ளத்தில் ஆனந்தக் கனவுகளை உருவாக்குகின்றது! நம்மை அந்தக் காலத்துக்கே அழைத்துச் செல்கின்றது! அவ்வகையில் இங்கே ஒரு திருக்குறள் புதிய விளக்கத்தை அளிக்கிறது! தலைவியின் அழகைத் தோழனிடம் வருணித்த தலைவன் அவளுடைய கண்களின் அழகைப் பாராட்டுகிறான்! அப்போது, ”இவள் கண்ணழகை கண்ட குவளைமலர் இவளது கண்ணழகு போல் தன்னழகு இல்லையே என்று நாணித் தலை குனிந்து நிலத்தை நோக்கும்” என்று கூறுகிறான்! இதனைக் கூற வந்த வள்ளுவர், ‘காணின்’ என்ற சொல்லை முதலில் கூறுகிறார்! இந்தக் குவளை மலருக்குக் காணும் ஆற்றல் அமைந்து, அது இவள் கண்ணைக் காணின், என்பது இதன் பொருள்! இது நமக்கு ஒரு புதிய அணுகுமுறையைக் காட்டுகிறது! அதனால்தான் குறுந்தொகைப் பாட்டில் நீயறிந்த பூக்களில் ஏதேனும், இவள் கூந்தலுக்கு நிகரான நறுமணம் பெற்றுள்ளதோ ?” என்று வண்டினைக் கேட்பதாக இறையனாரின் பாடல் உள்ளது!
அஃறிணைப் பொருள்களுக்கும், உயர்திணைக்குரிய காணும் திறனும், கேட்கும் திறனும், பேசும் திறனும் இருப்பதாக இலக்கியங்களின் அகத்திணைப் பாடல்கள் கூறுகின்றன! அவ்வகையில் இங்கே குவளை மலர் காணும் திறன் பெற்றிருப்பதாக வள்ளுவர் கூறுகிறார்! இப்பாடலில்,” மாணிழை கண்ணுக்கு நாம் ஒப்பாக மாட்டோம் என்று குவளைமலர்கள் கருதி, நாணம் கொண்டு தலை குனிந்து நிலம் நோக்கும் ” என்ற பொருளில் , ”மாணிழை கண் ஒவ்வேம் என்று குவளை கவிழ்ந்து நிலன் நோக்கும் ” என்று பாடுகிறார்! குவளை கவிழ்ந்து நிலன் நோக்குவது, இது வரை மேல்நோக்கி மலர்ந்த நீலப்பூ , இவள் கண்ணைக் கண்டு வெட்கித் தலைகுனிவதை மட்டுமே குறிக்கின்றது என்றுதான் கருதினேன்! ஆனால் கவிழ்ந்து தலைகுனியும் என்று கூறாமல், ”நிலன் நோக்கும்” என்று வள்ளுவர் கூறியதில் ஒரு புதிய பார்வை இருப்பதாக எனக்குத் தோன்றியது!
அதாவது, குவளைமலர், நீரில் தோன்றிய பூ! இந்தப் பெண்ணோ, நிலத்தில் தோன்றியவள்! இந்தப் பெண்ணின் கண்கள் என்னை விட வண்ணத்திலும், வடிவிலும், மென்மையிலும், உயிர்ப்பிலும் மிகச்சிறந்து விளங்குவதற்கு, இவள் தோன்றிய பூமியின் தனிச் சிறப்புதான் காரணமோ? என்று, அக்குவளைமலர் சற்றே கவிழ்ந்து, இவள் தோன்றிய தரையை நோக்கிப் பெருமூச்சு விடுகிறதோ? என்று கருதினார் போலும்! இதனைக் குறிக்கவே ”கவிழ்ந்து நிலன் நோக்கும்!” என்று எழுதினார். என்பது இந்தத் திருக் குறளுக்கேற்ற பதிய விளக்கமாக நாம் கொள்ளலாமல்லவா? இப்போது அந்தக் குறளைப் படிப்போம்.
“காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று!”(1014)
“தெள்ளுத மிழ்நடை சின்னஞ் சிறிய இரண்டடிகள்
அள்ளுதொ றுஞ்சுவை உள்ளுந்தொறும்உணர் வாகும்வண்ணம்
கொள்ளும் அறம்பொருள் இன்பம்அ னைத்தும் கொடுத்ததிரு
வள்ளுவ னைப்பெற்ற தால்பெற்ற தேபுகழ் வையகமே!”
என்று பாவேந்தர் பாடியதன் உண்மையை இங்கே நாமும் உணர்ந்து இன்புறுகின்றோம்!