திருக்குறளுக்குப் புது விளக்கம் – 18
– புலவர் இரா. இராமமூர்த்தி.
காதல் கண்களில் அரும்பிக் கருத்தில் மலர்ந்து கல்யாணத்தில் கனிகிறது! அக்கனியின் சுவை இல்லறத்தில் எல்லாருக்கும் இனிக்கிறது! திருக்குறள் காமத்துப் பால் அன்பின் ஐந்திணைக்கு உரிய களவு, கற்பு ஆகியவற்றைத் தொல்காப்பியம் காட்டும் தமிழ் மரபிற்கேற்ப அகத்திணை ஒழுக்கத்தை அழகாகக் கூறுகிறது. காட்சி, ஐயம், தெளிதல், குறிப்பறிதல் முதலான களவியல் நிகழ்ச்சிகளைத் திரு வள்ளுவர் மிகவும் சிறப்பாக அமைத்துள்ளார்!
”அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு!”(1081)
என்று தலைமகன் தலைவியைக் கண்டு அவள் தெய்வமகளோ என்று அஞ்சினான்; பின்னர் அவளுடைய சாயலை நோக்கி மயிலோ என ஐயமுற்றான்; பின்னர் தன்னை நோக்கும் கண்களையும் அவள் செவிக்கு அழகுதரும் குழையையும் கண்டு ஒ! இவள் பெண்ணோ? என்று மயங்குகிறான்! இது காட்சி, ஐயம் இரண்டையும் குறித்தது!இதற்குப் புதிய பொருளாக, அவள் சற்றுத் தொலைவில் நின்றபோது, தெய்வ மகளாகவும், அடுத்து சற்றே நெருங்கி வந்தபோது, அவளுடைய சாயல் மயில்போல் இருந்ததாகவும், அடுத்து மேலும் நெருங்கிய போது, அவளது காதணியும், பார்வையும் புலப்பட்டன என்றும் கூறுவர்!
அடுத்த பாடல் அவள் மானிடப் பெண்ணே என்று தெளிவடைந்ததைக் குறிக்கிறது. அடுத்து அமைந்த நான்கு குறட்பாக்களும், அவளது அன்புப் பார்வை தன்னை நிலை குலைய வைத்தமையைத் தலைவன் கூறுவதாக அமைந்தன! அடுத்து அவள் மார்பு, நெற்றி ஆகியவை அவனை மயங்க வைத்த திறத்தைக் கூறுகிறார்! அடுத்த பாடலில் அவளது அணிகலன்களைக் கண்டு தலைவன் மயங்கியதாகக் கூறுகிறார்! அடுத்த பாடலில் அவள் பார்வை காட்டிய காதற் குறிப்பினை வள்ளுவர் கூறுகிறார்! தகையணங்குறுத்தல் என்ற இந்த அதிகாரத்தில் காட்சி, ஐயம், தெளிவு ஆகிய வற்றைக் கூறிய வள்ளுவர் அடுத்த அதிகாரத்தின் முதல் ஐந்து பாடல்களால் தலைவியின் பார்வை யாலும், நாணத்தாலும் அவள் கொண்ட காதலைத் தலைவன் உணர்ந்துகொண்டான் என்பதைத் திரு வள்ளுவர் கூறுகிறார்! அடுத்து தோழி அறிந்து கொண்டதையும், தலைவனே மகிழ்ச்சியடைந்ததையும் கூறுகிறார்! இவற்றிடையே காதலர்களின் கள்ளத்தனத்தை விளக்கும் குறட்பா நம்மை மிகவும் வியப்பில் ஆழ்த்துகிறது! அது,
”யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்!” (1094)
என்பதாகும்! தலைவன் ஒரு குறிப்புடன் தலைவியைப் பார்க்கும் போது, தலைவி நாணத்துடன் தலை குனிந்து நிலத்தை நோக்குகிறாள் என்கிறான்! அதன்பின் அவளை நோக்காதபோது, அத்தலைவனைத் தலைவி நோக்கி மெல்லப் புன்முறுவல் செய்தாளாம்! இதனைத் தலைவன் எவ்வாறு அறிந்து கொண்டான்? தலைவன் நோக்காதபோது தலைவி நோக்கினாள் என்பதை அவள், நாணித் தலை குனிந்து புன்முறுவல் பூத்ததால் தெரிந்து கொண்டான் என்ற பொருளில் ‘தான் நோக்கி மெல்ல நகும்’ என்ற தொடரால் விளக்குகிறார்! இது மிகவும் நுட்பமான காதல் காட்சி! இதுதான் காதலர்களின் கள்ளத்தனம்! இதனை ஒரு திரைப்படப் பாடல் சிறப்பாக விளக்குகிறது!
உன்னைநான் பார்க்கும்போது மண்ணைநீ பார்க்கின்றாயே
விண்ணைநான் பார்க்கும்போது என்னை நீ பார்க்கின்றாயே!
என்ற பாடல் அது! அடுத்து அதே ”குறிப்பறிதல்” அதிகாரத்தின் கடைசிப் பாடல்,
”கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல!” (1100)
இந்தப் பாடலுக்கு அந்தக் காலப் பரிமேலழகர் முதல் இந்தக் கால மு.வரதராசனார் வரை, ”காதலர் இருவரின் கண்ணிணைகள் ஒன்றை யொன்று காதலுடன் நோக்கி இதயம் இணைந்தபின், அவர்கள் தமக்குள்ளே பேசிக்கொள்ளும் தம்மைப் பற்றிய உண்மைகளாகிய மனத் தோடு பொருந்தாத வாய்ச் சொற்களால் பயனேதும் இல்லை” என்றும் ”அவர்கள் கண்களின் வழியே மனமொத்து விட்டபின், காதலைத் தெரிவிக்கும் வாய்ச்சொற்கள் தேவையில்லை” என்றும் பொருள் கூறினர்! ஆனால் இக்காலத்திற்கு ஏற்றவாறு அக்குறட்பாவுக்குப் புதிய பொருள் ஒன்று புலனாகின்றது! அதாவது, காதலர்களின் கண்ணிணையுடன் இதயமும் ஒத்துப் போனபின், அதைக் காணும் உற்றார், உறவினர்கள் இவர்களைப்பற்றி, இவள் என்னகுலம்? இவன் எந்த மதம்? இவள் படிப்பு என்ன? அவன் படிப்பு என்ன? இவர்கள் செல்வ நிலை, குடும்பநிலை என்ன? என்றெல்லாம் பேசும் வேண்டாத வாய்ச்சொற்களால் எந்தப் பயனும் விளையாது! இவர்களிடையே உள்ள நெருங்கிய காதலை அவை மாற்ற மாட்டா! ” என்பது புதுமையான பொருளல்லவா?
இந்தப் பொருளுக்கு மேலும் வலிமையூட்டும் வகையில் கம்பராமாயணப் பாடல்கள் விளக்கம் தருகின்றன! அவை,
”எண்ணரும் நலத்தினாள் இணையள் நின்றுழி,
கண்ணொடு கண்ணினை கவ்வி ஒன்றையொன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்!”
“மருங்கிலா நங்கையும் வசையில் ஐயனும்
ஒருங்கிய இரண்டுடற்கு உயிரொன்று ஆயினார்
கருங்கடற் பள்ளியின் கலவி நீங்கிப்போய்
பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?”
என்பனவாகும்! இவற்றில் ”பிரிந்தவர் கூடினால் (மற்றையோர்) பேசவும் வேண்டுமோ? வேண்டா. என்பது போன்ற பொருளுணர்ச்சி உருவாகும்படி கம்பரும் பாடியமை இங்கே கருதத் தக்கது!