கலைமகள்- அலைமகள்- எம் குமரனைக் காக்க!

-மீனாட்சி பாலகணேஷ்

asi


abal
முருகப்பெருமான் உறையும் திருப்போரூர் எனும் ஊர் நெய்தல் நிலங்கள் நிறைந்து விளங்குவது. அழகான இயற்கை ஆனந்த நடனம் புரியும் இடம். ஒருபுறம் தாழைக்காடு; மற்றொருபுறம் புன்னைமரங்கள் அடர்ந்த காடு; இவற்றுடன் நெய்தலுக்கே உரித்தான காடும் செறிந்து விளங்குகின்றது. இவற்றில் மலர்ந்த நறுமலர்கள் வாசம் வீசுகின்றன. வாசமலர்கள் மகரந்தப் பொடிகளை வாரி இறைத்துள்ளன. இதனால் அவ்வூர்த்தெருக்கள் அனைத்தும் திருமணம் நிகழும் பெரிய தெருவைப் போன்று விளங்குகின்றன. இது எவ்வாறு எனப்பார்ப்போமா?

திருமணம் நிகழும் தெருவில், தெருவை அடைத்துப் பெரிய பந்தல் போடப்பட்டு, பந்தலை வாசமும் வண்ணமும் மிகுந்த நறுமலர்களால் அலங்காரம் செய்வித்திருப்பார்கள். இந்த மலர்கள் அனைத்தும் இனிய நறுமணத்தினைத் தெருவெங்கும் கமழச்செய்யும். மேலும், இடைவிடாது விருந்து பரிமாறப்படுவதனால், அத்தெருவில் போவோர் வருவோர் அனைவரும் பசியாறிக் களைப்பை நீக்கிக்கொள்வார்கள்.

அதுபோலவே, இங்கும் தாழம்பூக்கள் மலர்ந்து கொழிக்கின்ற தாழைக்காடானது தனது இனிய நறுமணத்தினால் கயல்மீன்களால் உண்டான நெய்தல் நிலத்துப் புலால் நாற்றத்தினைப் போக்குகின்றது. நெய்தல் நிலத்தில் ஓடியாடும் நண்டுகள் மகரந்தப்பொடிகளை வயிறுநிறைய உண்டு பசியாறுகின்றன. ஆகவே திருப்போரூரின் நெய்தல் நிலம் திருமணத்தெரு போன்ற இத்தகைய சிறப்புகளைக் கொண்டதாகத் திகழ்கின்றது.

கண்களின் முன்பு இக்காட்சி அழகாக விரியவில்லையா? எத்துணை அழகிய உவமைகள்? உயர்வுநவிற்சியணியின் துணைகொண்டு இயற்கையின் சிறப்பை, நாட்டுநடப்புடன் கூட்டி விவரித்த நயத்தை ரசிப்பதா? வியப்பதா?

இத்தகைய அழகிய திருப்போரூரில் முருகன் எனும் இளங்குமரன் எழுந்தருளியுள்ளான். அவன் சிறுவன்; குழந்தை; அவனைக் காக்க வேண்டி எல்லாத் தெய்வங்களையும் அன்னையர் அழைத்து வேண்டிக் கொள்கின்றனர். திருமால், விநாயகர், சிவபிரான், உமையம்மை, அலைமகள், கலைமகள், இந்திரன், சத்தமாதர், முதலியோரை அழைத்து வேண்டிக் கொள்வது பிள்ளைத்தமிழ்க் கவிமரபாகும்.

குமரன் உறையும் திருப்போரூரை வருணித்த புலவர் பிரானாகிய சிதம்பர அடிகள் (திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழை இயற்றியவர்) அன்னையர் கலைமகளை அழைப்பதைப் பாடலின் அடுத்த வரிகளில் அதே இயற்கை அழகின் துணைகொண்டு இனிமை பொங்க விளக்கியருளுகிறார்.

நெய்தல் நிலத்தில் பல வண்ணமலர்கள் பூத்துக் ‘கொல்’லெனச் சிரிக்கின்றன. அவற்றைப் பார்க்கும் அன்னைக்கு அது தன் குழந்தை முருகனைக் காக்க, தான் வணங்கி அழைக்கும் கலைமகளைப் போலக் காட்சி அளிக்கின்றனவாம். அது எங்ஙனம்? அவள் காண்பதென்னவோ, வெண்தாமரையின் மேல் அழகுற வீற்றிருக்கும் ஒரு அன்னப்பேடைத்தான்! அன்னவாகினி தானே கலைமகள்?

asarasகூட்டமாக மலர்ந்த வெள்ளிய நெய்தல் மலர்கள் அன்னத்தின் (கலைமகளின்) திருமேனிபோல விளங்குகின்றன. கருங்குவளை மலர்கள் அவள் கண்களென விளங்க, அக்கண்கள் போர்செய்யும் இருசெவிகளென வள்ளைக்கொடி துலங்குகின்றது. குமிழமலர் கலைமகளின் அழகான நாசியாக விளங்குகின்றது. கொடிகளில் சிரிக்கும் முல்லையரும்புகள் அவளுடைய வெண்ணிற அரும்புப்பற்களைப்போல் காட்சியளிக்கின்றன. தேன்நிறைந்த அல்லிமலர் (குமுதம்) அவளுடைய மறையோதும் வாயினைப் போலுள்ளது. காந்தள்மலர்கள் (தோன்றிமலர்) வளைக்கரம் போலக் காட்சியளிக்கின்றன. கார்முகை எனப்படும் கோங்கமலரின் அரும்புகள் போன்ற கொங்கைகள் அவளுடையவை. எய்துவதற்கரிய சிலம்பணிந்த திருவடிகளாகத் தாமரை மலர்கள் இலங்குகின்றன. இவ்வாறெல்லாம் தெய்வத்தன்மை பொருந்திய ஒரு அன்னப்பறவை வெண்தாமரை மலர் மீது வீற்றிருப்பது, கலைமகளே வெண்தாமரை மீதமர்ந்து மறைநூல்களை ஓதியிருந்தது போலக் காணப்படுகின்றது.

‘இத்தகைய கலைமகள் எமது இளங்குமரனைக் காக்க,’ எனத் தாயர் வேண்டுகின்றனர்.

இயற்கையில் இறைவனைக் காண்பது எத்துணை இன்பமாக இருக்கின்றது?

நெய்தலங் காடுமிரு காவிபொரு வள்ளையும்

நிகழ்குமிழும் முகைமுல்லையும்

நிறைநறைக் குமுதமுந் தொடியுடைத் தோன்றியொடு

நேர்கன்னி கார்முகையும்

எய்தரிய நூபுரம் கமலமுஞ் செறிகடவுள்

எகினம்வெள் ளைக்கமலமீ

தேர்பெற்ற மறைமுதல கலைசொற் றிருந்தென

இருந்தவளை அஞ்சலிப்பாம்

கைதையங் கானமும் புன்னையங் கானமும்

கானல்நெய் தற்கானமும்

கடிமணத் தொடுநறவும் மகரமும் தந்திலகு

கல்யாண மாமறுகென

மைதவழ் பொழிற்புளினம் மலிகயற் புலவையும்

வலைஅலவநுறு பசியையும்

வாரா தகற்றொயொளிர் நெய்தலஞ் சமரபுரி

வருகுகனை அருள்புரியவே.

(திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ்

கலைமகள் காப்பு- சிதம்பர அடிகள்)

இனி அடுத்து என்ன கூறுகின்றார் புலவர் பெருமகனார்?

பெருமை பொருந்திய திருப்பரங்குன்றம், திருவாவினன்குடி, அழகிய சோலைகள் சூழ்ந்த திருவேரகம் (சுவாமிமலை), திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்), சிறந்து விளங்கும் பழமுதிர்சோலை எனக்கூறப்படும் மறைபுகழும் பதிகள்தோறும் எழுந்தருளியுள்ள முருகப்பெருமான், திருப்போரூரையும் தனக்கு ஒரு படைவீடாகக் கொண்டு எழுந்தருளியுள்ளான்.

திருப்போரூர் இயற்கைவளம் கொழிக்கும் ஊர். திரும்பிய இடமெல்லாம், பூத்துக்குலுங்கும் சோலைகளும், வாவிகளும் அவற்றில் மலர்ந்து மணம்பரப்பும் மலர்களும் பார்ப்பவர் மனத்தே பற்பல கற்பனைகளைப் பெருக்கெடுக்கச் செய்கின்றன. தடாகங்களில் தாமரை மலர்கள் விரிந்து தலையசைக்கின்றன. அவை முருகனின் செவ்விய திருவடிகள்போல அழகுறக் காணப்படுகின்றன. மேலும் சில தாமரைமலர்கள் மொட்டுக்களாக உள்ளதால் விரியாது கூம்பிநிற்கின்றன. இவை தேவர்கள் முருகனின் திருவடிகளைக் கைகூப்பித்தொழுவது போலக் காணப்படுகின்றன. இல்லை இல்லை.. தேவர்கள் ‘எம் கந்தனைக் காக்க,’ என யாரையோ வேண்டிநிற்கின்றனர்.

யாரை?

பெரிய மேகக்கூட்டம் ஒன்று தனது ஆயிரம் (பத்துநூறு) முடிகள்தோறும் ஆயிரம் கதிரவர்களை முடிகளாகக்கொண்டு விளங்குகின்றது. சந்திரன் நிலவாகிய வெள்ளத்தைப் பொழிய, அதன்மீது அழகிய தாமரைக்காடு ஒன்று மிதந்து அந்தக் கருமுகிலை உரிமையுடன் தனதாக்கிக் கொள்கின்றது. அந்த முகிலினிடை நால்வகை மலர்களும் அரும்பியுள்ளன (கோட்டுப்பூ- சண்பகம் முதலியன: கொடிப்பூ- முல்லை முதலியன; நிலப்பூ- எட்பூ, திருத்துழாய் முதலியன; நீர்ப்பூ- தாமரை முதலியன). இவற்றின் நடுவே அழகிய மின்னல் ஒன்று இருந்து ஒளிர்கின்றது. இது இயற்கை காட்டும் எழில்.

கவிதை புனையும் புலவர் கண்களுக்கு இக்காட்சி என்ன தெரிவிக்கிறது?

asri

ஆதிசேடனின் ஒளிவீசும் ஆயிரம் தலைகள் கொண்ட பாம்பணையின் மீது , வெள்ளிய பாற்கடலில் ‘அறிதுயில்’ கிடக்கும் கருமுகில் வண்ணனை உரிமை கொண்டவள் அலைமகளான திருமகள். நால்வகை மலர்களாலும் புனையப் பெற்ற மாலைகள் அணிந்த அவனுடைய மார்பில் அவள் ‘மின்னலெ’ன இருந்து ஒளிர்கின்றாள். அந்தத் திருமகளை நோக்கி, ‘எம் குமரனைக் காக்க,’ என வேண்டித் தேவர்கள் கைகளாகிய தாமரை மொட்டுக்களைக் குவித்து வணங்கி வேண்டி நிற்பதாகப் புலவர் கற்பனை செய்துள்ளார்.

பொற்குவடு பத்துநூறு இலகுமுடி தொறும்இரவி

பூணெனக் கொண்டுமதியம்

பொழிநிலவு வெள்ளத்தின் மிசைமிதந்து அழகுசெறி

புண்டரிகம் மண்டுபுயலை

அற்புதத் தொடுகொண்டு மிளிரஅப் புயல்நடு

அரும்புநால் வகைமலரொடும்

அஞ்சொதி மினலொன்று இருந்தென இருந்தொளிர்

அணங்கினை நினைந்துதொழுவாம்

எற்செறி திருப்பரங்குன்றாவி னன்குடி

இரும்பொழில் திருவேரகம்

ஈறில்சீ ரலைவாய் விளங்குபழ முதிர்சோலை

என்னுமறை புகழ்பதிதொறும்

கற்குவடு தொறுமினிய நற்சமர புரியும்உறை

கடவுளைக் கடவுளரெலாம்

கைம்மலர் குவிக்கஇரு கால்மலர் படைத்தவொரு

கந்தனை அளிக்கவென்றே.

(புயல்- மேகம்; மினல்- மின்னல்; அளிக்க- காக்க)

(திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ்

திருமகள் காப்பு- சிதம்பர அடிகள்)

இயற்கையோடிணைந்து, காணும் அழகிய காட்சிகளெல்லாம், அவ்விறைவனின் தொடர்பான காட்சிகளே எனக் கற்பனை செய்யும் உள்ளம் இறையருள் பெற்ற நல்லிசைப் புலவோருக்கே வாய்க்கும்.

‘வானாகி மண்ணாகி,’ என்னும் மாணிக்கவாசகரின் பாடல் இதன் தொடர்பாகச் சிந்தித்துப் பார்க்கத் தக்கது.

********************************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *