சு. கோதண்டராமன்

19 நியாயசபை

vallavan-kanavu1

அங்கண் முழுமதியஞ் செக்கர் அகல்வானத்

தெங்கும் இனிதெழுந்தால் ஒவ்வாதேசெங்கண்

திருமாலைப் பங்குடையான் செஞ்சடைமேல் வைத்த

சிரமாலை தோன்றுவதோர் சீர்.

-அம்மையார்

  வைணவர்களும் தீக்ஷிதர்களும் தங்கள் தங்கள் கொள்கையில் விடாப்பிடியாக நின்றனர். விண்ணகர வளாகத்திலும் தெருவிலும் தோப்புகளிலும் அடிக்கடி கலவரங்கள் நடைபெற்றன. ஒரு கட்டத்தில் இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆகவேண்டும் என்ற நிலை ஏற்பட்டபோது இரு திறத்தாரும் அரசரிடம் முறையிட்டனர்.

அரசர் செங்கணான் ஆலோசித்தார். இப்பொழுதுதான் சமணம் அழிந்து நம் பழம் தமிழ்ச்சமயத்துக்குப் புத்துயிர் வந்துகொண்டிருக்கிறது. இப்பொழுது நம் சமயத்திற்குள்ளேயே பூசல் ஏற்பட்டுவிட்டதே என்று கலங்கினார். அவருடைய முழுப்பெயர் செங்கண் திருமாலைப் பங்குடையான். இது இறைவனுக்கு அம்மையார் சூட்டும் பெயர்களில் ஒன்று. பெயருக்கேற்றபடி திருமாலும் சிவனும் ஒரே உருவின் இரு கூறுகள் என்ற உண்மையை உணர்ந்தவர் அவர். மாலும் அரனும் ஒன்றே என்பதை மக்களுக்கு எப்படிப் புரிய வைப்பது என்று யோசித்தார். தன் தம்பி உத்தம சோழனை அழைத்தார். “நீ நமது முதல் அமைச்சரையும் ஆஸ்தான வேத பண்டிதரையும் அழைத்துக் கொண்டு தில்லை சென்று இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வா. அங்கு நிலைமை மிகக் கொந்தளிப்பாக இருப்பதாகத் தெரிகிறது. எனவே உங்கள் பாதுகாப்புக்கு நூறு வீரர்களையும் அழைத்துச் செல். தில்லை ஊர்த்தலைவரையும் பொது மக்கள் பிரதிநிதி ஒருவரையும் சேர்த்துக் கொள். ஐந்து பேர் கொண்ட இந்தப் பஞ்சாயத்து இரு பக்கத்து நியாயத்தையும் நன்றாகப் பரிசீலித்து எல்லோரும் ஒப்புக் கொள்ளக் கூடிய ஒரு தீர்ப்பை வழங்கட்டும்” என்று உத்திரவிட்டார்.

இளவரசரும் மற்றவர்களும் குதிரைகளில் ஏறித் தில்லையை அடைந்தனர். தில்லையிலும் அக்கம் பக்கத்து ஊர்களிலும் பறையறைந்து நியாயசபை கூடும் விவரம் தெரிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட நாளில் சித்திர கூட வளாகத்தில் பெருங்கூட்டமாக மக்கள் கூடியிருந்தனர். ஒரு மேடை போடப்பட்டிருந்தது. அதில் நடுநாயகமாக இளவரசர் அமர்ந்திருந்தார். முதல் அமைச்சர், வேத பண்டிதர், ஊர்த்தலைவர், பொதுமக்கள் பிரதிநிதி ஆகிய மற்றவர்கள் பக்கத்தில் அமர்ந்திருந்தனர்.

கூட்டம் துவங்கியது. இளவரசர் எழுந்து நின்று “இன்று ஒரு முக்கியமான விஷயத்தில் தீர்ப்பு வழங்குவதற்காக இந்த நியாய சபை கூடி இருக்கிறது. இதில் வாதியாக இருப்பவர் வைணவர்களின் பிரதிநிதியான வாசுதேவ பட்டர். பிரதிவாதி சபாபதி தீக்ஷிதர். இருவரும் நியாய சபையின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் கட்டுப்படுவதாகப் பிரமாணம் செய்கிறீர்களா?” என்று கேட்டார். வாதி, பிரதிவாதி இருவரும் எழுந்து தங்கள் தலை மேல் கை வைத்துப் பிரமாணம் செய்தனர்.

பட்டரைப் பார்த்து, “உங்கள் தரப்பு வாதத்தைக் கூறலாம்” என்றார் இளவரசர்.

வாசுதேவ பட்டர் மேடை மீது ஏறினார். பொதுமக்களைப் பார்த்து, “தமிழ்நாட்டில் பரம்பரையான தெய்வங்கள் மாயோன், சேயோன், வருணன், இந்திரன், கொற்றவைதான். மாயோனின் மறு பெயர்தான் இங்கு உள்ள கோவிந்தராசர். இப்பொழுது காழியில் உருவாகிச் சிலை வடிவில் வணங்கப்படுவது நமது பாரம்பரியத்துக்குப் புறம்பானது. அது இந்த வளாகத்திற்குள் வரக்கூடாது என்பது எங்கள் கட்சி” என்றார்.

ஊர்த்தலைவர் கேட்டார், “பாரம்பரியம் என்று எந்த ஆதாரத்தில் சொல்கிறீர்கள்?”

“தமிழின் பழமையான நூலான தொல்காப்பியத்தை வைத்துத்தான்.”

“தெய்வத்தைப் பற்றிக் கூறும் நூல்களில் பழமையானது தொல்காப்பியம் தானா?”

“இல்லை. வேதம்தான்.”

“வேதம் நமது தமிழ்ப் பாரம்பரியத்துக்கு ஏற்புடையதா, இல்லையா?”

“ஏற்புடையதுதான். தொல்காப்பியத்தில் வேதத்தைப் பற்றி உயர்வாகச் சொல்லப்பட்டிருக்கிறது.”

“அப்பொழுது பாரம்பரியத்தைப் பார்க்க, வேதத்தைத் தானே பிரமாணமாகக் கொள்ள வேண்டும்?”

“ஆம். வேதத்திலும் விஷ்ணு சொல்லப்பட்டிருக்கிறார், அவர்தான் தமிழில் மாயோன் எனக் கூறப்படுகிறார்.”

“விஷ்ணுதான் மாயோன் என்பதற்கு என்ன பிரமாணம்?”

“விஷ்ணு பல அவதாரங்கள் எடுத்தார். அதில் கிருஷ்ணாவதாரம் ஒன்று. அவர் பல அரக்கர்களை மாயங்கள் செய்து அழித்தார். அதனால் அவர் மாயோன் என அழைக்கப்படுகிறார். சிறு வயதில் அவர் ஆயர் பாடியில் வளர்ந்து மாடு மேய்த்தார்.  அதனால் பசுக்களைக் காப்பவர் என்ற பொருளில் கோவிந்தன் என்றும் அழைக்கப்படுகிறார்.  எனவே விஷ்ணுதான் மாயோன், கோவிந்தராசர்.”

மக்கள் பிரதிநிதி கேட்டார், “விஷ்ணு கிருஷ்ணராக அவதரித்தார் என்று வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறதா?”

“இல்லை. புராணங்களில்தான் சொல்லப்பட்டிருக்கிறது.”

“வேதத்துக்கும் புராணத்துக்கும் உள்ள உறவு என்ன?”

“வேதம் தெய்வத்தின் வாய்ச்சொல். புராணம் மனிதர் இயற்றியது.”

இளவரசர் சபாபதி தீக்ஷிதரைப் பார்த்தார். அவர் பேசத் தொடங்கினார். “காலப்போக்கில் பல புதுப் புது தெய்வங்களை உருவாக்கிக் கொள்வதற்கு வேதம் சுதந்திரம் கொடுத்திருக்கிறது.  நாம் எல்லோரும் இது நாள் வரை கோவிந்தராஜரை வணங்கி வருகிறோம். வேதத்தோடு கூடப் புராணங்களையும் பிரமாணமாக ஏற்பதால்தான் அவரை வேத விஷ்ணுவின் ஒரு வடிவமாகக் கொண்டு வேத மந்திரங்களால் பூசை செய்கிறோம். அதே போல, வேதத்தில் கூறப்பட்ட ருத்ரனின் ஒரு வடிவம்தான் ஆடற்பெருமான். வேதத்தில் ஆதிரை நட்சத்திரத்தை ருத்ரனுக்கு உரியதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆடற்பெருமானை ஆதிரையான் என்று குறிப்பிடுகிறார் அம்மையார். மேலும், அவரை வேதியன், வேதப் பொருளான், வேதத்திற்கு ஆதியன் என்று கூறுகிறார். எனவே அம்மையார் பாடலின் அடிப்படையில் ஆடற்பெருமானை ருத்ரனாக ஏற்பது தவறல்ல.” என்றார்.

“புராணமும் ஒரு பேய் மகள் கூறிய வார்த்தையும் ஒன்றாக முடியுமா?”

“அறியாதவர்கள்தாம் அவரைப் பேய் என இகழ்ந்தார்கள். அவரது பாடலை ஒரு முறையேனும் படித்தவர் அவ்வாறு சொல்ல மாட்டார். திருமால் அடியார்களில் பேயாழ்வார் என்று ஒருவர் சென்ற தலைமுறையில் வாழ்ந்தார். அவர் உண்மையில் பேயா? இறைவனிடம் கொண்ட ஈடுபாட்டின் மிகுதியால் அவர் சராசரி மானிடரிலிருந்து வேறுபட்டதால் பேய் எனப்பட்டார். அது போலத்தான் அம்மையாரும். பேயாழ்வாரின் பாடல்களை நாம் வழிபாட்டுக்குப் பயன்படுத்துகிறோம். திராவிட வேதம் என்று பெயர் கொடுத்து அதை வேதத்துக்குச் சமானமாகக் கருதுகிறோம். அம்மையாரின் பாடல்களும் அந்தப் புகழுக்குத் தகுதியானவை.”

    இளவரசர் திருப்தியுடன் தலையசைத்தார். மறுபடியும் வாசுதேவ பட்டரை நோக்கி, “மேற்கொண்டு சொல்லுங்கள்” என்றார்.

“இது புனிதமான இடம். இங்கு மயானத்தாடியைக் கொண்டுவரக்கூடாது. வேண்டுமானால் மயானத்தில் வைத்துக் கொள்ளட்டும்” என்றார்.

சபாபதி தீக்ஷிதர் எழுந்தார். “மயானத்தாடி ஊருக்குள் வரக்கூடாது என்கிறார் பட்டர். புனிதமான காசி நகரத்திற்கே மகா ச்மசானம் என்று பெயர். அவன் ஆடும் இடமெல்லாம் மயானம்தான். இறைவன் இல்லாத இடம் எது?  மயானம் என்பது இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் குறிக்கும்.”

“ஆடும் நிலையில் ஒரு தெய்வத்தை வணங்கினால் நம் வாழ்க்கையே ஆடிப் போய்விடும்.” என்றார் பட்டர்.

    “உங்கள் நம்பிக்கை அதுவானால் நீங்கள் வணங்க வேண்டாம். மற்றவர்கள் வணங்குவதை நீங்கள் தடுக்க முடியாது” என்றார் தீக்ஷிதர்.

“ஊரின் நடுவில் அந்த ஆடும் சிலையை வைத்தால் ஊருக்கே கெடுதல், ஊரே ஆடிப் போய்விடும்.” இது வாசுதேவரின் அடுத்த வாதம்.

    “உட்கார்ந்த ஐயனாரைத் தொழுதால் வாழ்க்கை உட்கார்ந்து விடும், இங்கே படுத்த நிலையில் இருக்கும் கோவிந்தராஜரைப் பூசித்தால் தொழில் படுத்து விடும் என்று யாராவது சொல்கிறார்களா? ஆடும் தெய்வத்தை வணங்கினால் வாழ்க்கை ஆடிப் போய்விடும் என்பது போன்ற நொண்டிச் சாக்குகளை எல்லாம் கருத்தில் கொள்ள வேண்டாம் என்று இந்த நியாய சபையைக் கேட்டுக் கொள்கிறேன்.”

சபையோர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

வாசுதேவர், “உங்களுக்கு உங்கள் தெய்வத்தில் பற்று இருந்தால் அரசரிடம் கேட்டு வேறு இடம் பெற்று அங்கு வைத்துக்கொள்ளுங்கள். இங்கு ஏன் வரவேண்டும்?”

“இந்த இடம் தில்லை அந்தணர்கள் முழுமைக்கும் உரிய சொத்து. இதில் எங்கள் விருப்பப்படி ஒரு தெய்வத்தைப் பிரதிஷ்டை செய்ய எங்களுக்கும் உரிமை உண்டு.”

இளவரசர் மற்றப் பஞ்சாயத்தார்களுடன் கலந்து ஆலோசித்தார். முடிவு என்னவாகுமோ என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் ஆவலுடன் காத்து நின்றனர்.

இளவரசர் எழுந்து பேசலானார்.

“நமது பழம் தமிழ்ச் சமயம் இன்று இரண்டாகப் பிளந்து நியாயசபை வரை வந்திருப்பது துரதிருஷ்டமான விஷயம். நமது முன்னோர்கள் முருகனையும் மாயோனையும், இந்திரனையும், வருணனையும், கொற்றவையையும் வேற்றுமை இல்லாமல் வணங்கினர். இன்று வேதத்தைப் பிரமாணமாகக் காட்டும் பிராமணர்கள் அதைப் பொருள் புரிந்து கொள்வதில் வேறுபட்டு அடிதடி வரை இறங்கி இருப்பது நாட்டுக்கு நல்லதல்ல.

“ஆடற்பெருமான் வேத தெய்வமா என்பது முதல் கேள்வி. நானும் வேதம் பயின்றிருக்கிறேன். வேத வல்லுநர் அருகில் இருக்கிறார். அவரையும் கலந்துகொண்டுதான் பேசுகிறேன். வேதம் பல தெய்வங்களைப் பேசுகிறது. அவற்றில் ஒன்று கூட இன்று வழிபடப்படுவதில்லை. புதிய தெய்வங்கள் எல்லாவற்றையும் நம் சமூகம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஏனெனில் சத்தியமானது ஒன்று, அதை அறிஞர்கள் பலவாறாகப் பேசுகிறார்கள் என்று வேதம் சொல்கிறது. நான் சொல்வதுதான் சத்தியம், மாறுபடுபவர்கள் முட்டாள்கள் என்று கூறவில்லை. மாற்றுக் கருத்து உள்ளவர்களையும் அறிஞர் என்றே போற்றுகிறது. எனவே எந்த உருவில் வழிபட்டாலும் சத்தியம் ஒன்றுதான். அதனால்தான் இங்கு சமணர்கள் ஏற்படுத்திய யக்ஷிணியையும் நாம் வணங்குகிறோம். எல்லா வழிபாடுகளும் அந்த ஒரு சத்தியத்திற்கே போய்ச் சேருகின்றன. எனவே ஆடற்பெருமான் உருவத்தை இங்கு கொண்டுவருவதில் உள்ள முதல் தடை நீக்கப்படுகிறது.

“அம்மையார் ஆடற்பெருமானைத் திருமாலைப் பங்குடையான் என்று குறிப்பிடுகிறார். எனவே திருமால் வேறு, ஆடற்பெருமான் வேறு அல்ல. இருவரும் ஒரே சத்தியத்தின் இரு வேறு தோற்றங்கள்.  பேயாழ்வாரைப் பற்றிக் குறிப்பிட்டார். அவர் சிவனும் திருமாலும் ஒன்றே என்கிறார்.

தாழ்சடையும் நீள்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழ்அரவும் பொன்னாணும் தோன்றுமால் – சூழும்
திரண்டுஅருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டு உருவும்ஒன்றாய் இசைந்து

என்று கூறுகிறார். “காலத்துக்கு ஏற்ற மாற்றங்கள் செய்துகொள்வதை வேதம் தடுக்கவில்லை. நானும் மற்றவர்களும் நீறு அணிந்திருக்கிறோம். இங்கு வழிபடப்படும் கோவிந்தராசர் திருநெற்றியையும் நீறு அலங்கரிக்கிறது.* இது எங்கிருந்து வந்தது? என் கொள்ளுப் பாட்டனார் காலத்தில் வடமர்கள் வந்தார்கள். அவர்கள் அக்னிஹோத்ரம் செய்த நீற்றை அணிந்திருந்தனர். அம்மையார் இறைவன் உடல் முழுவதும் நீறு அணிந்திருப்பதாகக் கூறுகிறார். எனவே நாம் அதை ஏற்றுக்கொண்டோம். இதோ வாதி, பிரதிவாதி இருவர் நெற்றியிலும் திருநீறு துலங்குகிறது. காலத்துக்கேற்ப, வழிபடுமுறைகளிலோ, வழிபடும் தெய்வங்களிலோ புதுமைகள் புகுவது தவறில்லை. நம் பழம் தமிழ் இலக்கியங்களும் பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல என்று ஒப்புக் கொண்டிருக்கின்றன.

”மயானத்தாடி என்பதற்கு தீக்ஷிதர் அளித்துள்ள விடை ஏற்புடையது. எனவே இரண்டாவது தடையும் நீக்கப்படுகிறது.

“மூன்றாவதாக, இந்த இடத்தின் உரிமை பற்றியது. அரசு ஆவணங்களின்படி இந்தச் சித்திரகூட வளாகம் முழுவதும் அரசுக்குச் சொந்தமானது. பல தலைமுறைகளாக தில்லை அந்தணர்களின் பொது அனுபோகத்தில் இருந்து வருகிறது. இறைவழிபாட்டிற்கெனவே ஒதுக்கப்பட்ட இந்த இடம் இறைவழிபாடு செய்யும் அனைத்து அந்தணர்களின் பொதுச் சொத்து. இதில் வைணவர்களுக்கும் சைவர்களுக்கும் சமமான உரிமை உண்டு. இன்று அவர்களிடையே மீண்டும் ஒன்று சேர முடியாத அளவுக்குப் பிளவு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வளாகத்தை இரண்டாகப் பிரித்து தென்பகுதி வைணவர்களுக்கும் வடபகுதி சைவர்களுக்கும் கொடுக்கப்படவேண்டும் என இச்சபை கருதுகிறது. “

கூடியிருந்த பொதுமக்கள் ஓம் நமச்சிவாய என்றும், ஆடல் வல்லான் போற்றி என்றும், தில்லைக் கூத்தன் வாழ்க என்றும் அம்பலத்தரசன் வெல்க என்றும் கோஷம் எழுப்பித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

அரசர் செங்கணானுக்குச் செய்தி போயிற்று. பிரச்சினை சுமுகமாக முடிந்தது பற்றி அவர் மகிழ்ந்தார். புதிதாகக் கட்டப்பட்ட தில்லையம்பலத்தில் ஆனந்தக் கூத்தனைத் தரிசிக்க விரும்பிச் சென்றார். தில்லை மக்களும் தீட்சிதர்களும் அவரை மிக மரியாதையுடன் வரவேற்றார்கள். தரிசனம் முடிந்தபின் தீட்சிதர்கள் தங்கள் நன்றியைத் தெரிவிக்கும் வகையில் ஆடற்பெருமானின் பாதம் பதித்த ஒரு மணிமுடியை அவருக்கு அணிவித்தனர். இந்த நிகழ்ச்சியின் நினைவாக அவர் மணிமுடிச் சோழர் எனப் போற்றப்பட்டார்.

————————- —————————————————— —————————————-

* திருமாலும் மாலடியார்களும் நெற்றியில் திருநீறு அணியும் வழக்கம் இருந்ததை நாலாயிர திவ்வியப் பிரபந்தம் பாடல்கள் 3270, 3280 இரண்டிலிருந்து அறியலாம்.

தொடரும்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க