Month: January 2019

  • புத்தாண்டு வாழ்த்துக்கள்

    – சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்

    புத்தாண்டு வருகின்றது .
    புத்துணர்வு வருகின்றது.
    புது வாழ்வு மலருமென்று
    புது நம்பிக்கை தருகின்றது .

    இவ்வாண்டு கவலைகள்
    இத்தோடு முடியட்டும்
    வருமாண்டு நம்வாழ்க்கை
    வளமாக இருக்கட்டும் .

    விழுகின்ற மழைநீரால்
    விவசாயம் செழிக்கட்டும் .
    அழுகின்ற நிலைமாறி
    ஆனந்தம் கொழிக்கட்டும்..

    அரசியல்வாதிகள் இனி
    அறவழிக்குத் திரும்பட்டும்.
    அவர்களைத் தேர்ந்தெடுப்போர்
    அறிவோடு நடக்கட்டும் .

    தூய சக்திகள் நம்மைத்
    துடிப்போடு ஆளட்டும்
    தீய சக்திகள் இனிமேல்
    தீயில் பொசுங்கட்டும் .

    மக்களிடையே பிரிவினைகள்
    மண்ணோடு போகட்டும்
    ஒற்றுமை மனநிலை
    ஓங்கி வளரட்டும் .

    பாமரர் நிலைமாறி
    படிப்பறிவில் சிறக்கட்டும்
    பாரதம் வல்லரசாய்
    பார்போற்ற வளரட்டும் ..

     

    Share
  • வல்லதொரு ஆண்டாக மலர்ந்துவிடு புத்தாண்டே!

    -மகாதேவஐயர் ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா

    புத்தாண்டே நீ வருக
    புத்துணர்வை நீ தருக
    நித்தமும் நாம் மகிழ்ந்திருக்க
    நிம்மதியை நீ தருக
    சொந்தம் எலாம் சேர்ந்திருக்க
    சுப ஆண்டாய் நீவருக
    எம்தமிழர் வாழ்வில் என்றும்
    இன்பம் பொங்க நீவருக

    வாருங்கள் என அழைத்து
    வரும் மக்கள் வரவேற்கும்
    சீர் நிறைந்த நாட்டிலிப்போ
    சீர் அழிந்து நிற்கிறது
    யார் வருவார் சீர்திருத்த
    எனும் நிலையே இருக்கிறது
    நீ வந்து புத்தாண்டே
    நிலை திருத்தி வைத்துவிடு

    ஆட்சி பீடம் ஏறுகின்றார்
    அறம் வெறுத்து ஒதுக்குகிறார்
    ஆட்சி பீடம் அமரச்செய்தார்
    அல்லல் பட்டே உழலுகிறார்
    அறம் வெறுத்து நிற்பவர்கள்
    அறம் பற்றி உணர்வதற்கு
    திறல் உடைய மருந்துடனே
    நீ வருவாய் புத்தாண்டே

    மதம் என்னும் பெயராலும்
    இனம் என்னும் பெயராலும்
    மனித உயிர் மாய்க்கின்ற
    மாண்பற்ற செயல் ஆற்றும்
    ஈனத் தனம் மிக்கோர்க்கு
    இரக்கம் பற்றி உணர்த்துதற்கு
    இரண்டு ஆயிரத்து பத்தொன்பதே
    எழுந்து வா எழுச்சியுடன்

    நல்ல வல்ல தலைவர்கள்
    நமை விட்டுச் சென்றுவிட்டார்
    நல்ல பல செய்திவந்தும்
    நம்மில் பலர் திருந்தவில்லை
    சொல்ல வல்ல வாழ்க்கையினை
    எல்லோரும் வாழ்ந்து நிற்க
    வல்லதொரு ஆண்டாக
    மலர்ந்து விடு புத்தாண்டே

    Share
  • துணைவியின் இறுதிப் பயணம் – 6

    -சி. ஜெயபாரதன், கனடா

    என் இழப்பை நினை; ஆனால் போகவிடு எனை
    [Miss me, But let me go]
    ++++++++++++++

    என்னருமை மனைவி தசரதி ஜெயபாரதன்
    தோற்றம் : அக்டோபர் 24, 1934.
    மறைவு : நவம்பர் 18, 2018
    ++++++++++++++++++

    [25]

    [ஆயுள் சான்றிதழ்]
    [Life Certificate]

    ஓய்வு ஊதியம் பெறுவதற்கு
    ஓவ்வோர் ஆண்டும்
    ஆயுள் நீடிப்புச் சான்றிதழ்
    அவசியம்.
    இந்திய அரசாங்க ஆணையர்
    நவம்பர் மாதம்
    முதல் வாரம் அளிப்பார்
    முத்திரை குத்தி !
    தம்பதிகள் புறப்பட்டோம்.
    இறுதிப் பயணம்.
    பாதி வழியில்
    இருளும் மாலை நேரத்தில்,
    திடீரெனத் துணைவி
    இரத்தக் குழல் குமிழி கிழிந்து
    நேரும் பெரு வெடிப்பு !
    உடம்பில் பூகம்பம் !
    நாள் காட்டியில்
    காலன் என்றோ குறித்து வைத்த
    நவம்பர் ஒன்பதாம் நாள் !
    அடுத்தோர் 9/11
    அபாய மரண நிகழ்ச்சி
    நேரும்
    ஓருயிருக்கு !
    முடிவில் நடந்தது என்ன ?
    எனக்குக் கிடைத்தது
    அரசாங்கத்தின்
    ஆயுள் சான்றிதழ்.
    என்னருமைத் துணைவிக்கு
    எமனின்
    மரணச் சான்றிதழ் !

    ++++++++++++

    பிரார்த்தனை தொடர்கிறது.

     

    Share
  • புத்தாண்டே வருக! வருக…! புதுவாழ்வு தருக! தருக…!

    -ஆ. செந்தில் குமார்.

    நல்லதோர் அரசு அமைய… புத்தாண்டே வருக! வருக..!
    நல்லோர் நட்பு நிலைக்க… புத்தாண்டே வருக! வருக..!
    பொல்லாதோர் விலகி ஓட… புத்தாண்டே வருக! வருக..!
    இல்லாத நிலை மாற… புத்தாண்டே வருக! வருக..!

    தொட்ட தெல்லாம் துலங்க… புத்தாண்டே வருக! வருக..!
    நட்ட தெல்லாம் தழைக்க… புத்தாண்டே வருக! வருக..!
    பட்ட தெல்லாம் மறக்க… புத்தாண்டே வருக! வருக..!
    கெட்ட தெல்லாம் விலக… புத்தாண்டே வருக! வருக..!

    பருவமழை பொய்க்காது பொழிய… புத்தாண்டே வருக! வருக..!
    துருவப்பனி உருகாது இருக்க… புத்தாண்டே வருக! வருக..!
    இருப்பதைக் கொண்டு மகிழ… புத்தாண்டே வருக! வருக..!
    தரணியெங்கும் அமைதி நிலவ… புத்தாண்டே வருக! வருக..!

    முத்தான வாழ்வு கிடைக்க… புத்தாண்டே வருக! வருக..!
    எத்திசையும் தமிழ் ஒலிக்க… புத்தாண்டே வருக! வருக..!
    புத்துணர்ச்சி பெற்று விழிக்க… புத்தாண்டே வருக! வருக..!
    புத்தாண்டே வருக! வருக…! புதுவாழ்வு தருக! தருக…!

    Share
  • குறளின் கதிர்களாய்…(238)

    -செண்பக ஜெகதீசன்…

    இற்பிறந்தார் கண்ணேயு மின்மை யிளிவந்த
    சொற்பிறக்குஞ் சோர்வு தரும்.

                                                 -திருக்குறள் -1044(நல்குரவு)

    புதுக் கவிதையில்…

    புகழ்ந்து சொல்லத் தகுதிமிக்க
    உயர்குடிப் பிறந்தோரிடத்தும்,
    இழிசொல் பிறப்பதற்கு
    ஏதுவாகிய சோர்வினை
    உண்டாக்கிவிடும்
    வாழ்வில் வறுமை என்பது…!

    குறும்பாவில்…

    புகழ்ச்சிக்குரிய உயர்குடிப் பிறந்தோரையும்
    இழிசொல் பேசவைக்கும் சோர்வினை
    வரவைத்துவிடும் வறுமை…!

    மரபுக் கவிதையில்…

    வாழ்வில் யாரும் விரும்பாத
    வறுமை யென்பது வந்துவிட்டால்,
    வாழ்த்திச் சொல்லத் தகுதியுள்ள
    வளமிகு உயர்குடிப் பிறந்தோரையும்,
    தாழ்ந்தே நிலையில் கீழிறங்கித்
    தரமிலா இழிசொல் பேசவைக்கும்
    சூழ்நிலை கொணரும் சோர்வினையே
    சேர வைத்திடும் வறுமையதே…!

    லிமரைக்கூ..

    வந்துவிட்டால் வாழ்வில் வறுமை,
    வந்துவிடும் வளமிகு உயர்குடிப் பிறந்தோர்க்கும்
    வெந்திட இழிசொல்பேசும் சிறுமை…!

    கிராமிய பாணியில்…

    பொல்லாதது பொல்லாதது
    வறும பொல்லாதது,
    வாழ்க்கயில வறும பொல்லாதது..

    வாழ்த்திப் பேசத் தகுதியுள்ள
    ஒசந்த குடும்பத்தில உள்ளவனயும்,
    வறுமவந்து சோர்வத் தந்து
    வகைக்கு ஒதவாத தரங்கொறஞ்ச
    கெட்டவார்த்த பேசுற
    கீழ்நெலக்கிக் கொண்டுவந்திடுமே..

    அதால
    பொல்லாதது பொல்லாதது
    வறும பொல்லாதது,
    வாழ்க்கயில வறும பொல்லாதது…!

     

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்- 6.1 (வருகைப்பருவம்)

    -மீனாட்சி பாலகணேஷ் 

    ‘ஓடிவருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடீ
    ஆடித் திரிதல் கண்டால் உன்னைப்போய் ஆவி தழுவுதடீ,’ என்றார் பாரதியார்.

    சின்னஞ்சிறு குழந்தை நடக்கக் கற்றுக்கொள்வதனைக் காண்பது, அதனை ஊக்குவித்து உற்சாகப்படுத்தி, உவகைகொள்வது என்பது ஒரு தெய்வீக அனுபவம். சிவந்த தாமரைமலர் போலும் சின்னஞ்சிறு பாதங்கள் தத்தித்தத்தி நடந்துவரும் அழகை, தான் கீழே விழுந்து விடுவோமே எனும் அச்சமேயின்றி ஓடிவரும் இனிய செயலைக் காண ஆயிரம் கண்களும் போதாதுதான்!

    வரிசைக்கிரமமாக அமைந்த பிள்ளைத்தமிழின் ஆறாவது பருவம் வருகை அல்லது வாரானைப் பருவம் எனப்படும். குழந்தையின் பன்னிரண்டாவது மாதத்தில் இது நிகழ்வதாகக் கொள்ளப்படும்.

    நம் மனதுக்கினியவர்களின் நடையும், அதன் அழகும், அதுவே குழந்தையானால் அதன் கால் சதங்கை, சிலம்பு, இவற்றின் ஒலியும் மானிடர் அனைவருக்குமே மிகுந்த உற்சாகத்தைத் தருவதாகும்.

    தத்தித்தத்தித் தளர்நடை பயிலும் குழந்தையை அருகில் நின்று பார்க்கும் தாயின் உள்ளம் பாசத்தில் விம்முகின்றது. அந்தக்கால்களால் அவன் என்ன செயலெல்லாம் செய்யப்போகிறான், எங்கெல்லாம் செல்லப்போகிறான், அதை எவ்வாறெல்லாம் அழகுபடுத்திப் பார்க்கலாம் என்றெல்லாம் அவள் எண்ணங்கள் சிறகடிக்கின்றன. தன் குட்டனை, குழந்தையை, அழகுநடை பயிலும் மயிலாக, அசைந்து நடந்து வரும் அழகு யானைக்குட்டியாக, துள்ளிவரும் மானாக, எனவெல்லாம் பார்க்கிறாள்.

    ‘சின்னஞ்சிறு பதங்கள் சிலம்பொலித்திடுமே அதை
    செவிமடுத்து எந்தன் மனம் களித்திடுமே,’

    எனும் ஊத்துக்காடு வேங்கட சுப்பைய்யரின் பாடல் வரிகள், கண்ணனின் காற்சதங்கை ஒலியை மனதில் நிரப்பி மகிழ்விக்கின்றன.
    ‘நன்னுபாலிம்ப நடசி வச்சிதிவோ?’ என, (என்னைக் காக்கவேண்டி நீ நடந்து வந்தனையோ?) தியாகராஜரும் தமது கீர்த்தனை ஒன்றில் ஸ்ரீராமனைக் கேட்டு உருகுகிறார். ‘உயர்வான பரம்பொருளாகிய நீ ஏழை அடியேனுக்காக, தேரிலன்றி, குதிரை மீதிலன்றி, வெறும் கால்களால் நடந்து வந்தனையோ?’ எனும்போது உள்ளம் ஆனந்தத்திலும், பச்சாதாபத்திலும் விம்முகிறது அவருக்கு.

    இதனைப் பெரியாழ்வாரும் தமது பாசுரங்களில் பாடி மகிழ்ந்துள்ளதனைக் காணலாம். கண்ணன் நடப்பது சிறிய யானை மெல்ல அசைந்து நடப்பது போலிருக்குமாம். யானை தனது மதங்களைப் பெருக விட்டுக்கொண்டும், தனது காலில் இடப்பட்டுள்ள சங்கிலி ‘சலார்பிலார்’ என ஒலி எழுப்பும்படியும் தன் உடலின் இருபுறங்களிலும் தொங்கும் மணிகள் ஒலிக்குமாறும் நடப்பதுபோலக் கண்ணன் நடக்க வேண்டும் எனும் தாயின் ஏக்கத்தைப் பாடுகிறார்.

    ‘தொடர்சங் கிலிகை சலார்பிலார் என்னத்
    தூங்கு பொன்மணி ஒலிப்ப
    படுமும் மதப்புனல் சோர வாரணம்
    பைய நின்று ஊர்வது போல்…’

    திருவடிச் சதங்கைகள் ஓசை எழுப்ப, அரைச்சதங்கையின் மணிகள் ஒலிக்க, என் சார்ங்கபாணி தளர்நடை நடவானோ! என ஆவலாக வேண்டுகிறார்.

    அன்னையின் ஆவலை, ஏக்கத்தை, எதிர்பார்ப்பை அழகுறச் சித்தரிக்கும் இப்பாசுரம், அவளுடைய பெருகியோடும் எல்லையற்ற அன்பின் உயர்வை எடுத்துக் காட்டுகிறது.

    ஆயினும் இவ்வாறெல்லாம் தான் போற்றிப் பெருமிதம் கொள்ளும் சிறுகுழந்தை, தான் வழிபடும் திருமாலே சிறு கிருஷ்ணனாக வந்த வடிவம் என அவருக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்துள்ளது. ஆகவே அடுத்த பாடலில் அந்தக் குழந்தையான இறைவடிவே வந்து தன் வீடெங்கும், வீதியெங்கும் தன் பிஞ்சுப்பாதங்களின் முத்திரையைப் பதிக்க வேண்டுவது மற்றொரு சிலிர்க்க வைக்கும் அழகு.

    ‘ஒருகாலில் சங்கு ஒருகாலில் சக்கரம்
    உள்ளடி பொறித்து அமைந்த
    இருகாலும் கொண்டு, அங்கங்கு எழுதினாற்போல்
    இலச்சினை படநடந்து….’

    எனப் பெரியாழ்வாரின் தாயுள்ளம் விழைகின்றது.

    பிள்ளைத்தமிழ் நூல்களின் பாடல்கள் அனைத்துமே தாய், செவிலித்தாய் மற்றும் உறவினர்கள் ஆகியோரின் கூற்றாக அமைவது அதன் தனிச்சிறப்பாகும். அடியார்கள் தம்மை இத்தகைய நிலைகளில் இருத்திக்கொண்டு தாம் விரும்பும் இறைவடிவங்களைப் பாடிப்பரவுகின்றனர்.

    கிருஷ்ணனுடைய பாதங்களின் சிறப்பில் ஆழ்ந்துவிட்ட லீலாசுகர் எனுமடியார்ஆனந்த பரவசமாகி அவற்றை வர்ணிப்பது படிக்கின்ற நமக்கும் களிப்பைத் தருகின்றது:

    ‘வேறு புகல் இல்லாதவர்களுக்கு இத்திருவடிகள் ஒன்றே புகலிடமாக (அசரண-சரணாப்யாம்) உள்ளன. குழலூதியபடி கிருஷ்ணன் இத்திருவடிகளால் நடந்து வருகிறான் (ஆயாதி),’ என நெகிழ்கிறார் அடியார்.

    கிருஷ்ணனின் கல்யாண குணங்களில் ஆழ்ந்துவிட்ட நாராயண பட்டத்ரி, நாராயணீயத்தின் ஈற்றயல் ஸ்லோகத்தில் கிருஷ்ணனின் திருவடிகளை வழுத்தி, ஆத்மார்ப்பண லயிப்பில் உருகிக் கரைந்து தன்னையே இழந்து விடுகிறார்.

    ‘உனது சரீரத்திலேயே யோகிகளால் மிகவும் விரும்பப்படுவன உனது திருவடிகளே! ஆதரவற்றவர்களுக்கு அவையே புகலிடம். அடியார்களுக்கு அவை வேண்டியன அனைத்தையும் தரும் கற்பகத்தரு. கிருஷ்ணா! குருவாயூரில் உறைபவனே! (பவனபுரபதே) கருணைக்கடலே! இந்த உனது திருவடிகள் எனது இதயத்தில் எப்போதும் பதிந்து நின்று, எனது துயரங்களை விடுவித்து என்னை மிக உயர்வான பேரின்பச் செல்வத்தில் ஆழ்த்தட்டும்.’

    ‘வேண்டிக்கொள்ள வேண்டிய’வற்றின் உச்சநிலை வேண்டுதல் இது!  பி. லீலா எனவொரு பாடகி இருந்தார். அவருடைய இனிய குரலில், உள்ளத்தை உருக்கும் இந்த ஸ்லோகத்தினைக் கேட்கும்போது பட்டத்ரியின் தேடுதலை, ஆனந்த லயிப்பை ஒருவாறு புரிந்துகொள்ள இயலும். ‘ஒருவாறு’ என்றதன் காரணம், நாமே அந்த நிலைக்குச் சென்றால் தான் துல்லியமாக உணர இயலும். நாமெங்கே, பட்டத்ரி எங்கே?

    ‘யோகீந்த்ராணாம் த்வதங்கேஷ்வதிக ஸுமதுரம் முக்திபாஜாம் நிவாஸோ,’ என்பன ஸ்லோக வரிகள்.

    பிள்ளைத்தமிழுக்குத் திரும்பலாம்!!

    முருகப்பெருமானை, கதிர்காமத்திலுறையும் கந்தவேளை, தளர்நடை பயிலும் குழந்தையாக்கி, தாமே அன்னையாகி, தம்மிடம் நடந்து வருமாறு கைகளை நீட்டி வேண்டுகிறார் இதனை இயற்றிய சிவங். கருணாலயப் பாண்டியப் புலவர்.  தெய்வத்தன்மையினால் முருகனுக்குப் பட்டால் செய்த சிறு ஆடை இயல்பாகவே அமைந்ததாம்; அது நூலால் நூற்கப்படாமலும், ஊசியால் தைக்கப்படாமலும் விளங்குவது. அது நோன்பிருந்து நின்னையே நினைந்துருகும் அடியாரின் உள்ளம்போல அசைந்தாடுகிறது என்றார் புலவர்.

    ‘நூலாத நூலாடை ஊசியொடு குயிலாத
    நொய்யசின் மெய்யுறையது
    நோன்பிற்ற ழும்பிநின் னுள்ளுமுள மெனவாட…’

    மிகவும் உயர்வானவையே தன் தெய்வக்குழந்தைக்குப் பொருந்தும் என எண்ணும் தாயுள்ளத்தின் அன்பு இதில் புலப்படுகின்றது. இன்னும் கூறுவார்: அழகான பூச்செண்டு முடிக்கப்பட்ட கொண்டை ஆடுகிறது; (அவனருளால்) பூமியில் அறம் வழுவாமல் நடமாடுகிறது; உணவே அருந்தாது தவம் செய்வோர் உள்ளம் இறை எண்ணத்தில் அசைந்தாடுகின்றது; தளர்நடை நடக்கும் குழந்தையின் உடலும் தள்ளாடுகிறதாம். எட்டுக்கரங்களையும், நான்கு முகங்களையும் கொண்ட பிரமனின் பெருமிதம் சிதைந்தோட, தேவர்கள் சிறைநீங்கி ஓட, அசுரர்கள் படை தோற்று ஓடிடுமாறு செய்து, நாய்போன்ற எமது அவலம் தெறித்தோடுமாறும், உன்மீது அன்புகொண்டு நாங்கள் மெழுகுபோல உள்ளம் கசிந்து என்புருகிக் கண்களில் மழைநீர் போலக் கண்ணீர் பெருகி ஓடுமாறும் நீ எம்முன்பு நடைபயின்று வரவேண்டும்,’ எனும் வேண்டுதல்.

    தளர்நடை நடக்கும் குழந்தை ஆடி அசைந்து வருவதும் ஒரு தனியழகு.
    அதைக்கண்டு உள்ளம் மகிழ்வது அன்னையின் இயல்பு;
    கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகப் பாடுவது அடியார் மரபு!
    ‘மாலாகி யாம் அழல் மெழுகின் நெக்கென்புருகி
    மழையோடவே வருகவே.’

    பிள்ளைத்தமிழ்ப் பாடல்களின் சிறப்பு தெய்வத்தின் பெருமையை குழந்தைப்பருவங்களுக்கான செயல்களில் வைத்துப் போற்றுவது. குழந்தையின் தெய்வத்தன்மையை உணராத அடியார் இல்லை! ஆகவே தாம் போற்றும் குழந்தையை, தெய்வத்தின் சிறப்புகளைக்கூறித் தம்முன் வருமாறு வேண்டுதல் இன்னொரு அழகு. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் தடாதகைப்பிராட்டியாகிய சிறு பெண்மகவை, குமரகுருபரனார் ‘வருக’வென அழைக்கும் பாடல்கள் நமது உள்ளத்தைக் கசிய வைப்பனவாகும்.
    ‘தேன்சிந்தும் மலர்கள் பொருந்திய நறுமணம் மிகுந்த கூந்தலை உடைய பெண்யானையே! வருக! முழுமையான ஞானவெள்ளமே வருக! பிறைசூடிய பெருமானின் மூன்று கண்களுக்கும் விருந்தாக அமைந்தவளே வருக!  ‘பிரம்மா, திருமால், சிவன் ஆகிய மூவருக்கும் மூலமாக விளங்கும் சத்தியே வருக! விதை இல்லாமலே விளைகின்ற பரமானந்தம் எனும் தெய்வீக விளைவே வருக!
    ‘பழமையான மறைகள் எனும் வேதங்களின் இளந்தளிரே வருக! அருள் பழுத்துக் கனிந்துள்ள கொம்பாயுள்ளவளே வருக! நின் அழகான கடைக்கண்ணின் கோடியில் பெருகிய அருள்வெள்ளத்தில் மூழ்கியுள்ள அடியார்களின் பிறவியாகிய நோய்க்கு மருந்தாக விளங்குபவளே வருக! இனிய பசிய குதலைமொழி பேசும் கிளியே வருக! மலயத்துவசன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே!’

    ‘பெருந்தேன் இறைக்கும் நறைகூந்தற்
    பிடியே வருக முழுஞானப்
    பெருக்கே வருக பிறைமௌலிப்
    பெம்மன் முக்கண் சுடர்க்கிடுநல்
    விருந்தே வருக…..’ என்பது பாடல்.

    தான் வழிபடும் அன்னை தெய்வத்தை ஒரு சிறு பெண்மகவாக்கி, தாமே தாயாகி, அவளுடைய அருமைபெருமைகளையெல்லாம் பாடி, அவளை ‘வருக’வென அழைத்துச் சீராட்டும் அடியாரின் உள்ளம் எப்படிப்பட்ட பேரானந்தத்தில் மூழ்கித் திளைக்கின்றதென்பதனைப் பிறிதொரு பாடலிலும் காணலாம்.

    ‘தொடுக்கும் கடவுள் பழம்பாடல்
    தொடையின் பயனே நறைபழுத்த
    துறைத்தீந் தமிழின் ஒழுகுநறும்
    சுவையே அகந்தைக் கிழங்கைஅகழ்ந்து
    எடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்கு
    ஏற்றும் விளக்கே வளர்சிமய
    இமயப் பொருப்பில் விளையாடும்
    இளமென் பிடியே எறிதரங்கம்
    உடுக்கும் புவனம் கடந்துநின்ற
    ஒருவன் திருவுள்ளத்தில் அழ
    கொழுக எழுதிப் பார்த்திருக்கும்
    உயிரோ வியமே மதுகரம்வாய்
    மடுக்கும் குழற்கா டேந்தும் இள
    வஞ்சிக் கொடியே வருகவே..’

    என்றார். இதில் ‘அகந்தையெனும் ஆழ்ந்த வேரோடிய ஆணவக் கிழங்கை, அகழ்ந்து எடுத்து எறிந்து விடும் ஞானிகளின் உள்ளத்தில் ஏற்றிவைக்கப்படும் ஒளிவிளக்காக இருப்பவளே,’ என அன்னையின் பெருமையை உணர்த்தியது எண்ணவொண்ணாததொரு நயம் ஆகும். மேலும், ‘சிவபெருமான் தன் உள்ளத்தில் அழகாக எழுதிவைத்துக் கண்டு களிகொள்ளும் உயிரோவியமானவளே மீனாட்சியன்னை,’ என்றும் உரைக்கிறார். இப்பாடலுக்கு இன்னொரு சிறப்புமுண்டு. இளம் வயதிலேயே பெரும் ஞானியான குமரகுருபரனார் அன்னை மீனாட்சி மீது இப்பிள்ளைத்தமிழ் நூலை யாத்தனர். அன்னை மீனாட்சியம்மை மன்னர் திருமலை நாயக்கர் கனவில் தோன்றித் தன் திருமுன்பு அதனை அரங்கேற்றப் பணித்தாள். அவ்வாறே அரங்கேற்றமும் அம்மையின் திருக்கோயிலில் அவள் சந்நிதியில் நிகழ்ந்தது. மேற்காணும் இப்பாடலுக்குக் குமரகுருபரனார் பொருளுரைக்கும் போது அன்னையே அருச்சகரின் ஐந்தாறு வயது மகள் போலத் தோன்றி அரசர் திருமலை நாயக்கரின் மடியிலமர்ந்து இப்பாடலைக் கேட்டு ரசித்தாள். பாடல் முடிந்ததும் அரசர் கழுத்திலிருந்த முத்துவடத்தைக் கழற்றிக் குமரகுருபரர் கழுத்திலிட்டு மறைந்தனள். ஆகவே, அன்னையின் ஆமோதிப்பைப் பெற்றதொரு பிள்ளைத்தமிழ் நூலும் இதுவே எனப் பெருமை கொள்ளலாம். அன்னை தெய்வம் மீதான பிள்ளைத்தமிழ் நூல்களை இயற்றிய அடியார் பலரும் சக்தி உபாசகர்களாகவும் இருந்துள்ளனர். தஞ்சை சரசுவதி மகால் நூல்நிலையத்தினர் சிவயோக நாயகி பிள்ளைத்தமிழ் எனவொரு நூலை வெளியிட்டுள்ளனர். இயற்றியவர் பெயர் தெரியவில்லை. இவர் ஐயத்திற்கிடமின்றி சக்தி உபாசகர். ஏனெனில், வாரானைப் பருவத்துப் பாடலொன்றில் ஸ்ரீசக்கரத்தில் உறையும் அம்பிகையான அவளைப் போற்றுகிறார். அம்பிகையின் ஸ்ரீ சக்கர வருணனை விரிவாகத் தரப் பட்டுள்ளது.

    ‘முச்சதுர மூவட்டம் ஈரெட்டும் ஓரெட்டு
    முளரியிதழ் சூழ்ந்ததற்குள்
    முகனையிற் பதினான்கு பத்துடன் பத்தெட்டு
    முக்கோண நடுவிந்துவாய்…..’ என ஸ்ரீ சக்கரத்தின் அமைப்பை விவரித்து,

    ‘சச்சபுட முதலான தாளங்கள் தாள்பொரச்
    சதகோடி திருமாதரார்
    சந்ததம் நடம்புரியும் நாற்பத்து முக்கோண
    சக்கர நாயகி வருகவே’ எனப்போற்றுகிறது.

    இவையனைத்தும் சக்தி உபாசகர்களின் துதிகள் தாமே? இது கிடக்க, வேறொரு இனியகாட்சியைக் காணச் செல்லலாமா?
    பிடிவாதம் செய்யும் ஒரு சிறு பெண்குழந்தை. அதனிடம் பொய்யாகச் சினம்கொண்டுபேசும் தாய்! இனிமையான காட்சி!
    “வா கண்ணே! முகம்கழுவி, உன்னைச் சிங்காரிக்கிறேன்,” என ஆசையாகத் தாய் அழைக்கிறாள். குழந்தைக்கோ விளையாட்டு மும்முரம். சிறு செப்புகளில் மண்சோறு சமைக்கிறாள். இலைகளைப் பறித்துப் பொரியல்செய்கிறாள். “அம்மா வா, நான் சமைத்த சோற்றைச்சாப்பிடு,” என்று மழலையில் அன்னைக்கும் கொஞ்சம் தருகிறாள்.

    கையில் பட்டுப்பாவாடை, கழுத்திற்கான அணிகலன்கள், மை, திலகம் முதலானவற்றை ஏந்தியபடி தாயின் அருகில் பணிப்பெண் நிற்கிறாள். குழந்தையின் புழுதிபடிந்த உடைகளையும் கைகால்களையும் கண்ட தாய் சலித்துக்கொள்கிறாள்.
    “நான் அழைக்கஅழைக்க நீ வராமலே இருந்தால், நான் இங்கிருந்து போய்விடுவேன். உனக்கு முகம், கைகால் கழுவி, உனது அழகான வேல்போலும் விழிகளுக்கு மைதீட்டமாட்டேன். பிறைமதிபோன்ற நெற்றியில் அழகிய திலகத்தையும் எழுதமாட்டேன். அழகான மணிகளால் செய்யப்பட்ட இந்த ஆபரணத்தை உனக்கு அணிவிக்கமாட்டேன்.”

    குழந்தைக்கு அலங்காரம் செய்துகொள்ள ஆசை; பெண்குழந்தையல்லவா? அலங்காரப்பிரியை அவள்! தனது விளையாட்டை விட்டுவிட்டுவர மனமில்லாமல் தாயை ஏக்கத்தோடு பார்க்கிறாள். இதுதான் வாய்ப்பெனத் தாய் தனது அச்சுறுத்தல்களைத் தொடர்கிறாள்.  “உன்னிடம் அன்பாகப் பேசவும் மாட்டேன் குழந்தாய்! புழுதிபடிந்த உன் முகத்தையும் ஏறெடுத்துப் பார்க்கமாட்டேன் போ! அலங்காரம் செய்தபின் எனது முலைப்பாலையும் ஊட்டமாட்டேன். ஆசையாக எனது இடுப்பில் உன்னைத் தூக்கிவைத்துக்கொண்டு தேரோடும் வீதியில் சென்று நித்தமும் வேடிக்கை காட்டுவேனல்லவா? அதையும் செய்யமாட்டேனடி பெண்ணே!” குழந்தைக்குத் தாளவில்லை! இவையனைத்தும் அன்னையிடம் அவளுக்குண்டான தினசரி சலுகைகள். எப்படி அவற்றை இழக்கமுடியும்? குழப்பத்துடன் அன்னையைப் பார்க்கிறாள். அன்னையோ விடுவதாயில்லை! விரலால் எச்சரித்தபடி, “உனது சிவந்த கனிவாயில் முத்தமிட்டு உன்னைக் கொஞ்சமாட்டேனடி பார்த்துக்கொள்! அழகான மணிகள் குலுங்கும் தொட்டிலில் படுக்கவைத்து, உன்னை உறங்கவைக்கப் பாராட்டிச் சீராட்டித் தாலாட்டும் பாடமாட்டேன் தெரியுமா?” என்கிறாள். இதற்குமேல் குழந்தைக்குத் தாங்கவில்லை. தனது சிறுசோற்றுச் செப்புக்களை வீசியெறிந்து விட்டு உதடுகள்நெளிய அழுகைபொங்கிவர ஓடோடிவந்து தாயின் சேலையில் முகம் புதைத்துக்கொண்டு அவளை அணைத்துக்கொள்கிறாள். தாயும் தனது பொய்க்கோபத்தினை விட்டொழித்து, குழந்தையை இறுக அணைத்துக்கொள்கிறாள். பார்க்கும் நம் முகங்களில் புன்னகை அரும்புகிறது இல்லையா?
    இவள் இமவானின் அகன்றமார்பில் (விசாலமான இமயமலையில்) தவழும் குழந்தையல்லவோ? இவளையா கோபிப்பது?
    ‘வருக வருக என் குழந்தையே! சாலிப்பதி எனப்படும் நெல்லையில் வாழ்கின்ற காந்திமதித்தாயே, விரைந்து வருகவே!’ என நாமும் பாடியவாறே குழந்தையை எண்ணத்தில் அணைத்துக் கொள்கிறோம்.

    ‘வாரா திருந்தா லினிநானுன் வடிவேல்
    விழிக்கு மையெழுதேன்
    மதிவாள் நுதற்குத் திலகமிடேன் மணியால்
    இழைத்த பணிபுனையேன்
    …………………………………………….
    தேரார் வீதி வளங்காட்டேன் செய்ய
    கனிவாய் முத்தமிடேன்
    திகழு மணித்தொட் டிலிலேற்றித் திருக்கண்
    வளரச் சீராட்டேன்…..’

    பேராதரம்- மிகுந்த அன்பு; ஒக்கலை- இடை.
    (நெல்லை காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்- வருகைப்பருவம்
    வித்துவான் அழகிய சொக்கநாதப்பிள்ளை)

    அன்னைத் தெய்வத்தைக் குழந்தையாக்கி இவ்வாறு வருந்தியும், வேண்டியும், உரிமையுடன் கோபித்தும், பின் கொஞ்சியும் அழைத்தால் அவள் வந்து அருள்செய்யாமல் இருப்பாளா?
    திருச்செந்தூர் பிள்ளைத்தமிழில் பகழிக்கூத்தரும் இதுபோன்றே தாய் குழந்தை முருகனிடம் பொய்யாகச் சினம் கொள்வதாகப் பாடியுள்ளார். ‘உன் அரைஞாண் இறுக்கமாக உள்ளது. அதனை வாகாக தளர்த்திப் பூட்ட மாட்டேன். இலங்கும் மகர குண்டலத்தை எடுத்துக் குழைமீது அணிவிக்க மாட்டேன்; நெற்றியில் திலகம் தீட்ட மாட்டேன்,’ எனவெல்லாம் தாயின் பலவிதமான பொய்யானஅச்சுறுத்தல்கள்! இது போன்றே பழனி முருகனின் தாய்மாரும் பலவிதமாகக் கூறிக் கொஞ்சி அவனை வருமாறு அழைக்கின்றனர். சீர்காழி கோவிந்தராஜனின் இனிய தெய்வீகக் குரலில் இப்பாடலைக்கேட்டு ரசிக்காதவர்கள் இருக்க முடியாது.

    ‘பொன்னே வருக பொன்னரைஞாண் பூட்ட வருக சிறுசதங்கை
    புனைய வருக மணிப்பதக்கம் பூண வருக
    ………………………………………………..
    முத்த மிடற்கு வருகஎதிர் மொழிகள் மழலை சொலவருக
    தன்னே ரில்லா நுதல்திலகம் தரிக்க வருக விழியினில்மை
    சாத்த வருக ……………………………….
    வளஞ்சேர் பழனிச் சிவகிரிவாழ் வடிவேல் முருகா வருகவே!’
    (பழனிப்பிள்ளைத்தமிழ்- வருகைப்பருவம்- சின்னப்ப நாயக்கர்)

    இங்கு புலவர் முருகனின் தெய்வத்தன்மையைப் பாடுகிறார்; ஆயினும் அவனுடைய குழந்தை வடிவிற்கு அலங்காரம் செய்து, பொன்னும் மணியும் புனைவித்து, முகத்தோடணைத்துச் சீராட்டி மகிழ விரும்பும் தாயினது பேராவலையும் பதிவு செய்துள்ளார். ஒவ்வொரு அணிகலனாகத் தன் குழந்தைக்கு அணிவித்து அழகுபார்க்க விழையும் தாயுள்ளத்தின் பேராவலையும் அன்பையும் இப்பாடல்கள் பதிவு செய்துள்ளன. இங்கு மெய்யடியார்களின் ஒரு அருமையான சிந்தனைத்துளியை எண்ணிப்பார்க்கலாம். தன் பிரியத்துக்குரிய தெய்வக்குழந்தை காலில் தண்டையும் சதங்கையும் கொஞ்ச அருகே வந்தால் எவ்வாறிருக்கும் எனும் எண்ணமே அவர்களைத் தாயன்பில் இன்புறுத்துகிறது. பக்தியில் நெகிழவைத்தும் அன்பில் மகிழ வைத்தும் சிலிர்ப்பூட்டுகின்றது.

    ‘தண்டையணி வெண்டையம் கிண்கிணிச தங்கையும்
    தண்கழல்சி லம்புடன் கொஞ்சவே…’

    எனும் அருணகிரிநாதரின் திருப்புகழின் சந்தநயத்தில் மகிழாதவர்கள் இல்லை.  ‘அந்தகன் வரும் தினம்’ எனும் மற்றொரு திருப்புகழில் அருணகிரிநாதர், முருகனை அழைப்பதும் மிகவழகான சந்தநயமும் கருத்துச் செறிவும் கொண்ட பாடல். தாயான உமையவளின் உள்ளம் மகிழுமாறு கால்களில் சின்னஞ்சிறு சதங்கைகள் கொஞ்சிட குழந்தை முருகன் ஓடோடி வருகிறான். அன்னையின் அன்புள்ளம், அவன் தன்னிடம் வந்து அளிக்கப்போகும் ஆசை முத்தத்திற்காக- ‘சங்கரி மனம் குழைந்துருக முத்தம்தர வரும் சரவணனுக்காக’- ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டுள்ளது என்பதனைக் கூறும் வரிகள் சிறப்பானவை.

    ‘தந்தன தனந்தனந் தனவெனச்
    செஞ்சிறு சதங்கைகொஞ் சிடமணித்
    தண்டைகள் கலின்கலின் கலின்எனத் திருவான
    சங்கரி மனங்குழைந் துருகமுத்
    தம்தர வரும்செழுந் தளர்நடைச்
    சந்ததி சகந்தொழும் சரவணப் பெருமாளே,’

    என்பன பாடலின் ஈற்றடிகள்.
    இதே போன்று முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழிலும் குழந்தை முருகனை, ‘பொன்னால் செய்தபெரிய கழல்கள் பாதச்சிலம்புகளோடு சேர்ந்து கலின் கலின் எனும் ஒலியினை எழுப்பவும், திருவரையில் உடைமணி கிணின் கிணின் என ஒலிக்கவும், மற்றும் பலவாபரணங்கள் பொலியவும் எம்மிடம் வருவாயாக!’ எனத்தாய் வேண்டும் பாடல் காணப்படுகிறது.

    ‘செம்பொற் கருங்குழல் அரிக்குரல் கிண்கிணி
    சிலம்பொடு கலின்கலினெனத்
    திருவரையில் அரைமணி கிணின்கிணின் எனப்பொலந்
    திண்டோளின் வளைகலிப்ப…’

    கேட்டவரம் தர ஒடிவரும் குழந்தை தெய்வம், கிண்கிணி சதங்கையொலிக்க ஆடியசைந்து வரும் குழந்தை எனக் கொஞ்சி, சிறுகுழந்தைத் தெய்வங்களை வாரியணைத்து உச்சிமுகர்ந்து கொண்டாட அன்னைமார் போன்று அடியார்களுக்கும் ஆவல் மிகுகிறது. தமது பக்திப்பெருக்கினையும் கவிதைச் சிறப்பினையும் சொற்களில் குழைத்தெடுத்துப் பாடல்களைப் புனைந்து வைத்துள்ளனர்.
    (இந்தத்தொடர் முனைவர், பேராசிரியர் திரு. கோ. ந. முத்துக்குமாரசுவாமி ஐயா (மேனாள் முதல்வர், தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி, பேரூர், கோயம்புத்தூர்) அவர்கள் தமிழ் ஹிந்து இணையதளத்தில் எழுதி வந்ததன் தொடர்ச்சியாகும். பேராசிரியர் ஐயா முதல் ஐந்து பகுதிகளுடன் நிறுத்திக்கொண்டு இதனைத் தொடர்ந்து எழுதுமாறு என்னைப் பணித்துள்ளார். அன்னார் துவங்கிவைத்த அற்புதமான இத்தொடரை, பேராசிரியர் ஐயாவின் ஆசிகளுடன் எழுதுகிறேன்).

    (பிள்ளைத்தமிழ் பெருகி வளரும்)

    Share
  • சேக்கிழார் பா நயம் – 18

    -திருச்சி புலவர் இரா இராமமூர்த்தி

    கைலையில் இறைவன் சுந்தரமூர்த்தி சுவாமிகளை, அவர் மாதர்களுடன் கலந்து வாழும் பொருட்டுத் தென்பாரதத்தை நோக்கிச் செல் என்று ஆணையிட்டார்! அவ்வகையில் சுந்தரர் திருமுனைப்பாடி நாட்டில் அவதரித்தார்!அந்த நாட்டின் சிறப்பை சேக்கிழார் பெருந்தகை பாடுகிறார்! சிவபிரான் தம் முடிமேல் கங்கை, பிறை, பாம்பு, கொன்றை மலர் ஆகியவற்றைத் தாங்கியவர்!

    இத்தொடரால் சிவபெருமானின் அருஞ்செயல்கள் கூறப்பெறுகின்றன! வானிலிருந்து விரைந்து ஓடிப்பாய்ந்த கங்கையின் வேகத்தைத் தடுத்துத் தம் சடையின் சிறுபகுதியில் தாங்கி,வழிந்து நாடெங்கும்ஓட விட்டார்! இது குறிப்பாக கைலை மலையிலிருந்து கீழிறங்கித் தமிழ் நாடெங்கும் சென்று திருவருட் பாடல்களஅருளிச் செய்த சுந்தரரின் அருள் வரலாற்றைப் புலப்படுத்து கிறது! அடுத்து இயல்பாகவே முரண்பட்ட மதியையும் பாம்பையும் அருகருகே இருத்திய செயல், குறிப்பாக சுந்தரர் காரணமாகத் தமக்குள் முரண்பட்ட பரவை நாச்சியாரையும், சங்கிலியாரையும் ஊடல் தீர்த்து அவருடன் வாழச் செய்த அருள் வரலாற்றைக் குறிக்கிறது! அடுத்துக் கொன்றை மாலையைத் தலைமேல் சூடிய செயல் குறிப்பாக நிறமும், மணமும் நிறைந்த கொன்றை மலரை யாரும் சூடாமல் ஒதுக்கிய போதும், சிவபிரான் தானே விரும்பித் தலைமேலணிந்து சிறப்புச் செய்தது போல் மையல் மானுடமாய் மயங்கிக் காதல் வயப்பட்ட சுந்தரரை, அவர் பாடலின் பக்திமணம் பாரெங்கும் பரவச் செய்யும் பொருட்டுத் தம் தோழராய் ஏற்றுக்கொண்ட பெருமையைப் புலப்படுத்துகிறது! அதுமட்டுமல்ல, பிரணவ சொரூபம் படைத்த கொன்றை மாலை போன்று, இறைவர் சிறப்பை உணர்த்தும் திருத்தொண்டத்தொகை, தேவாரம் போன்ற பாடல்களை ஏற்று மகிழ்ந்த அழகைக் காட்டுகிறது. இவற்றையே சேக்கிழார்,

    ‘’கங்கையும் மதியும் பாம்பும் கடுகையும் முடிமேல் வைத்த அங்கணர் ‘’ என்ற தொடரால் குறிப்பிட்டார்! முன்பு கைலையில் சுந்தரரைத் தென்திசையில் மெல்லியலாருடன் காதல் இன்பம் கலந்து அணைவாய் என்று போக்கிய போது,

    ‘’செய்ய சேவடி நீங்கும் சிறுமையேன்
    மையல் மானுட மாய்மயங் கும்வழி
    ஐய னேதடுத் தாண்டருள் செய் என
    அங்க ணாளன் அதற்கருள் செய்தபின் ‘’

    என்ற பாடலில் அங்கணாளன் என்று சிவபிரானை நினைவுடன் குறித்தார்! இத்தகைய சிவபெருமான், திருமுனைப்பாடி நாட்டில், திருவெண்ணை நல்லூரில் சுந்தரரை ஆள்ஓலை காட்டித் தடுத்தாட்கொண்டார்! அந்த ஆண்டவர் எழுந்தருளிய நாடே திருமுனைப்பாடி நாடு! என்று பாடுகிறார்!

    அந்தத் திருமுனைப்பாடி நாட்டின் பெண்களைப் பற்றியும் சேக்கிழார் பாடுகிறார்! அம்மங்கையரின் குளிர்ந்த நிலவு போன்ற திருமுகத்தில், செங்கயல்களாகத் திகழும் விழிகள் இருமருங்கிலும் உள்ள செவிகளில் அசையும் குழைகளை நாடிப் பாய்கின்றன! என்பதை.,

    ‘’அங்கணர் ஓலை காட்டி ஆண்டவர் தமக்கு நாடு
    மங்கையர் வதன சீத மதியிரு மருங்கும் நாடிச்
    செங்கயல் குழைகள் நாடும் திருமுனைப் பாடிநாடு!’’

    என்று பாடுகிறார்! இத்தொடரில் , மங்கையர் கண்களின் சிறப்பைச் சேக்கிழார் பாடுகிறார்! கம்பரும் கோசல நாட்டை வருணிக்கும் போது,

    ‘’ஆச லம்புரி ஐம்பொறி வாளியும்
    காசலம்பு முலையவர் கண்எனும்
    பூசல் அம்பும் நெறியின் புறம் செலாக்
    கோசலம்!’’

    என்று பாடுகிறார்!அந்நாட்டின் பெண்களின் கண்கள் நன்னெறிக்கு மாறான வழியில் செல்லாவாம்! அவ்வாறே இந்தத் திருமுனைப்பாடி நாட்டின் மங்கையர் கண்களும் உள்ளன! உலகினர் கண்ணால் காண்பதை விசாரித்துச் செவியால் கேட்டபின் உறுதிப் படுத்திக்கொள்வார்கள்! அவ்வாறே அவ்வூரினர், சுந்தரர் சிவபெருமானின் அடியார் என்று செவியால் கேட்டதை , மூல ஓலையைக் கண்ணால் கண்டு உறுதிப்படுத்திய வரலாற்றை இது வேறுவகையில் கூறுகிறது! இதற்கு மேலும் விளக்கமாக ,

    ‘’இப்பகுதியிலே பின்னர்ச் சரித நிகழ்ச்சியிற் பரவையார் ஆரூர் நம்பிகளைப் “பண்டைவிதி கடைகூட்டக்“ கண்களாற் கண்டபின் “எதிர் வந்தவர் யார்?“ என்று சேடியை வினவி, அவள் சொல்லத் தமது காதுகள் மூலம் அறிந்துகொண்டாராகும். காட்சித் துறையிலே கண்ணால் தலைவனைக் கண்ட தலைவி, பின்னர் அவனை இன்னார் என்று காதாற்கேட்டறிந்துய்வள். ஆதலின் கண்கள் காதுகளை நாடிற்று என்ற குறிப்பை இச்சரித நிகழ்ச்சியிற் காண்போம்’’ என்று சிவக்கவிமணி கூறுகிறார்!

    இப்பாடலில்தான் சுந்தரர் அவதரித்த நாடாகிய திருமுனைப்பாடி நாடும், குறிப்பாக அந்நாட்டை ஆண்ட அரசராகிய நரசிங்க முனையரையர் திருப்பெயரும் கூறப்பெற்றன! இனி முழுப்பாடலையும் பயில்வோம்!

    ‘’கங்கையின் மதியும் பாம்பும்
    கடுக்கையும் முடிமேல் வைத்த
    அங்கணர் ஓலை காட்டி
    ஆண்டவர் தமக்கு நாடு
    மங்கையர் வதன சீத
    மதியிரு மருங்கும் ஓடிச்
    செங்கயல் குழைக்கள் நாடும்
    திருமுனைப் பாடி நாடு!’’

    சிவபிரானின் பெருமை, சுந்தரர் வரலாற்றுச் சிறப்பு, பெண்களின் பெருமை, நாட்டின் அறிமுகம் ஆகிய அனைத்தையும் புலப்படுத்தும் சேக்கிழார் திருப் பாடலின் சிறப்பே சிறப்பு!

    Share
  • படக்கவிதைப் போட்டி – 194

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    வெங்கட் சிவா எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (05.01.2019) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 193-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    பொய்ம்மைமிகு புவிவாழ்வு நீங்கி, அலைக்கழிக்கும் பிறவிச்சுழல் நீந்தி, பரிநிர்வாணமெனும் உயர்நிலை அடையக் கண்மூடிக் காத்திருக்கும் புத்தரைக் காண்கின்றோம் படத்தில். இந்த நிழற்படத்துக்குச் சொந்தக்காரர் திருமதி. ராமலக்ஷ்மி. வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து இப்படத்தைத் தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டி 193க்கு அளித்திருப்பவர் திருமதி. சாந்தி மாரியப்பன். பெண்மணிகள் இருவருக்கும் என் நன்றிகள்!

    சாதி மத பேதமற்ற அன்புநெறியை அகிலத்துக்கு போதித்த உத்தமர் புத்தரைத் தம் கவிதைகளில் எப்படியெல்லாம் நம் கவிஞர்கள் காட்சிப்படுத்தப் போகின்றார்கள் என்பதை அறிய, வல்லமை வாசகர்களாகிய உங்களைப் போலவே, நானும்  ஆவலாயிருக்கிறேன்.

    *****

    ”புத்தனே! ஆளப்பிறந்திருந்தும் ஆட்சியைத் துறந்து ஞானம் தேடியவன் நீ! இங்கோ இலவசம் தந்து ஆட்சியை வசப்படுத்த ஆலாய்ப் பறக்கும் கூட்டமும், உறவுகளைத் தொலைத்து இணையத்தில் இரைதேடும் நாட்டமுமே காணக்கிடைக்கின்றன; இவர்களை மாற்ற என் செய்வது எனத் தலைசாய்த்து யோசிக்கிறாயோ?” என்று வினவுகின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ். 

    புதிய புத்தன்!

    அத்தனையும் துறந்தால் முக்தி கிட்டும்
    என வாழ்க்கை நெறியை வாழும் முறையை
    புத்தனே நீ சொன்னாய்
    வள்ளுவன் காலம் முதலே பலர்
    பலன் தரும் வழி முறைகளைப் பல சொல்லியும்
    கேட்காத கூட்டம் இங்கே
    ஆளப்பிறந்தவனாய் இருந்தும் அத்தனையும் துறந்து
    ஞானம் தேடி சென்றவன் நீ ……… இங்கே
    ஆட்சிக்கு ஆசைப்பட்டு இலவசங்களை அள்ளிக் கொடுத்து
    சோம்பல் கூட்டமாய் மாற்றி
    ஆட்சியை பிடிக்க முயலும் கூட்டம் இங்கே
    செக்கில் சிக்கிய மாடாய்ப் பலர்
    யாருக்காகவோ ஓடி ஓடி உழைத்து மனஅழுத்தத்தில் விழுந்து
    தங்களைத் தொலைத்துவிட்டு எதையோ தேடுகின்ற கூட்டம் இங்கே
    உறக்கம் துறந்து இணையத்தில் இரவெல்லாம் இரைதேடி
    அலையும் மிருகம் போல் அலைபாயும் மனதோடு
    அலைந்திடும் கூட்டம் இங்கே
    சுலபமாய் அத்தனையும் கிடைத்திட
    போராட்டம் என்பதே பகல் கனவாய் ஆகிட
    விழித்திருந்தும் எழ மறுத்து இறுக்கமாய் மாறிப்போன
    இதயங்கள் நிறைந்த கூட்டம் இங்கே
    போதி மரத்தடியில் அமர்ந்து ஞானம் பெற்றவனாய்
    உன்னை அறிந்த எமக்கு
    இவர்களை மாற்றிட என்ன செய்யலாம் என்று
    தலை சாய்ந்து யோசிக்கும்
    புதிய புத்தனாய் இங்கு நீ வந்தாயோ?!

    *****

    ”அரண்மனை எனும் மாயச்சுவர் கடந்து போதி அடியில் ஞானமடைந்தான்; அன்பெனும் ஆயுதத்தால் மக்களை வசமாக்கினான்; அந்த அன்பின் பேராற்றலே அரண்மனைச் சித்தார்த்தனை அவனிபோற்றும் புத்தனாக்கியது!” என்று ஒரு மனிதன் மகானான அரிய கதையை விளம்புகின்றார் திரு. ஆ. செந்தில் குமார்.

    ஒரு மனிதன் மகானான கதை..!!

    வறுமைத் துன்பம் எதுவும் இல்லா..
    வசதிகள் அனைத்துக்கும் குறைவே இல்லா..
    செல்வத்தில் திளைத்த அரச குடும்பத்தில்..
    சித்தார்த்தன் பிறந்து வளர்ந்தானே..!!

    அரண்மனைச் சுவரெனும் மாயத் திரையை..
    அகற்றி எறிந்து அகண்ட உலகைப்..
    பார்க்கும் பொருட்டு காவலைத் தாண்டி..
    புயலெனப் புறப்பட்டான் சித்தார்த்தன்…!!

    மூப்பு பிணி மரணம் அமைதி..
    முதன்முறையாகக் காண நேர்ந்தது..
    துன்பத்தின் காரணம் அறிய எண்ணி..
    துறவறம் பூண்டான் சித்தார்த்தன்..!!

    இன்னல்கள் அனைத்துக்கும் ஆசையே காரணம்..
    இயற்கை அவனுக்கு உணர்த்தியது..
    போதி மரத்தின் அடியில் அமர்ந்து..
    பொழுதுகள் மறக்க தவத்திலாழ்ந்தான்..

    தவத்தின் பயனாய் கிடைத்தது ஞானம்..
    தான் அறிந்த உண்மையை உரைக்க..
    உலக மக்களின் துன்பம் போக்க..
    உயரிய பாதைகள் வகுத்தளித்தான்..!!

    அன்பெனும் ஆயுதத்தைக் கையில் எடுத்தான்..
    அனைவரும் அவன் வசம் ஆயினரே..
    சக்திகள் பலவும் கொண்ட அன்பால்..
    சித்தார்த்தன் ஆனான் புத்தனாக..

    *****

    ”பாரத தேசத்து போதிமர ஞானி ஈழத்தில் நடக்கும் அளவற்ற அவலம் கண்டும் எழாது துயிலுவதேன்?! விழித்தெழுவீர் புத்தரே! மீள்வீர் போதிமரத்துக்கு!” என்று புத்தரை வேண்டுகின்றார் திரு. சி. ஜெயபாரதன்.

    புத்தர் தூங்கி விட்டார்!

    உத்தமராய் உருவான
    பாரத தேசத்தின்
    போதி மரத்து ஞானி
    புத்தர் ஈழத்தில்
    தூங்கிக் கொண்டுள்ளார் !
    கால் நூற்றாண்டு
    நடந்தது
    உள் நாட்டுப் போர் !
    ஈழத்தமிழர்
    சுதந்திரமாய்த் தம் நாட்டில்
    வாழப் போரிட்டு
    இருநூறா யிரம் பேர்
    உயிர் கொடுத்துத் தோற்ற
    உரிமைப் போர் !
    கண் இழந்தோர் எத்தனை !
    கால், கை, சிரம்
    இழந்தோர் எத்தனை !
    தந்தை, கணவன், அண்ணன்
    தம்பி இழந்தோர் எத்தனை !
    மான பங்கமாகி
    முலை அறுபட்ட பெண்டிர்
    எத்தனை !
    விழித்தெழுவீர் புத்தரே !
    போதி மரத்துக்கு
    மீள்வீர் புத்தரே !

    *****

    புத்தரின் வாழ்க்கையை, அவர் மீண்டும் உயிர்த்தெழ வேண்டியதன் அவசியத்தை அருமையாய்த் தம் கவிதைகளில் படைத்தளித்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

     இனி இவ்வாரத்தின் சிறந்த கவிதை நம் பார்வைக்கு…        

     உண்மை புத்தன்!

    சுத்தோதன் மாயா பெற்றெடுத்த சித்தார்த்தன்
    சுபயோக வாழ்வை விட்டொழித்த எதார்த்தன்
    சுழல் பிறவிக்கடல் கடந்த சாக்கியன்
    சுமையான ஆசையை சுட்டெரித்த கதிரவன்

    இதழிடை இணைபிரியாப் புன்னகை
    இமைமூடித் திறந்தும் திறவா இறைநிலை
    இன்பத்தின் இனிமை கண்ட உயர்நிலை
    இன்னலுக்கு விடையளித்த பொதுநிலை

    பற்றிப்படர் கொடியில் படுத்துறங்கும்
    பற்றற்றான்- இவனைப் பற்றிவிட்டால்
    பற்றிய பேராசை பேரும் பாவம் எல்லாம்
    பற்றியெரியும் பெரும் தீயில் வீழ்ந்த சருகாய்ப் பட்டுவிடும்

    எண்ணம்,கருத்து, பேச்சு, செயல்
    எளிய வாழ்க்கை, முயற்சி, சித்தம், தவம் என நேரான
    எண்வகைப் பாதை கண்டான் இதில்
    எப்பாதை வழி நீ சென்றாலும் நேர்மை வேண்டும் என்றான்

    முழுமதி நன்னாளில் மூவுலகும் இன்பமுற
    முகிழ்த்த ஞான முதல்வன்- இருள்
    மூழ்கிய இன்னல் சூழ் உலகுக்கு
    முழுமுதல் அருள் போதித்த அன்பின் தலைவன்

    அன்பு விதை தூவிய வித்தகன்
    அமைதிப் பயிர் வளர்த்த போதிச் சத்துவன்
    ஆசை துறந்த சிந்தனைச் சித்தன்
    ஆன்மத்தை வென்ற உண்மை புத்தன்!

    ”அன்பு விதை தூவிய வித்தகனை, அமைதிப் பயிர் வளர்த்த போதிச் சத்துவனை,
    ஆசை துறந்த சிந்தனைச் சித்தனை, ஆன்மத்தை வென்ற புத்தனை, பற்றிப்படர் கொடியில் அறிதுயில்கொண்டிருக்கும் இப்பற்றற்றவனைப் பற்றினால் பேராசையும் பாவமும் நீங்கும்; நற்பண்புகள் ஓங்கும்” என்று புத்தர் குறித்துச் சத்தான கருத்துக்களைத் தன் கவிதையில் பகர்ந்திருக்கும் திரு. யாழ் பாஸ்கரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என்று அறிவித்து மகிழ்கின்றேன்.  

     

     

    Share
  • வருக 2019

    வாழ்வுக்கு அர்த்தம் சேர்க்க
    மனத்துக்கு இனிமை சேர்க்க
    சூழ்வானில் குளிர்ச்சி ஏற
    துள்ளாட்ட மகிழ்ச்சி ஊற
    தாழ்யாவும் விலக, மேவும்
    தடையாவும் உடைய, பாடும்
    ஏழ்வண்ணக் கிளியே, இந்தக்
    கீழ்வானைக் கிழித்து வாராய்!

    வல்லமை அன்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ஓவியம்: நித்திலா

    Share