Featuredஇலக்கியம்கட்டுரைகள்பத்திகள்

சேக்கிழார் பா நயம் – 18

-திருச்சி புலவர் இரா இராமமூர்த்தி

கைலையில் இறைவன் சுந்தரமூர்த்தி சுவாமிகளை, அவர் மாதர்களுடன் கலந்து வாழும் பொருட்டுத் தென்பாரதத்தை நோக்கிச் செல் என்று ஆணையிட்டார்! அவ்வகையில் சுந்தரர் திருமுனைப்பாடி நாட்டில் அவதரித்தார்!அந்த நாட்டின் சிறப்பை சேக்கிழார் பெருந்தகை பாடுகிறார்! சிவபிரான் தம் முடிமேல் கங்கை, பிறை, பாம்பு, கொன்றை மலர் ஆகியவற்றைத் தாங்கியவர்!

இத்தொடரால் சிவபெருமானின் அருஞ்செயல்கள் கூறப்பெறுகின்றன! வானிலிருந்து விரைந்து ஓடிப்பாய்ந்த கங்கையின் வேகத்தைத் தடுத்துத் தம் சடையின் சிறுபகுதியில் தாங்கி,வழிந்து நாடெங்கும்ஓட விட்டார்! இது குறிப்பாக கைலை மலையிலிருந்து கீழிறங்கித் தமிழ் நாடெங்கும் சென்று திருவருட் பாடல்களஅருளிச் செய்த சுந்தரரின் அருள் வரலாற்றைப் புலப்படுத்து கிறது! அடுத்து இயல்பாகவே முரண்பட்ட மதியையும் பாம்பையும் அருகருகே இருத்திய செயல், குறிப்பாக சுந்தரர் காரணமாகத் தமக்குள் முரண்பட்ட பரவை நாச்சியாரையும், சங்கிலியாரையும் ஊடல் தீர்த்து அவருடன் வாழச் செய்த அருள் வரலாற்றைக் குறிக்கிறது! அடுத்துக் கொன்றை மாலையைத் தலைமேல் சூடிய செயல் குறிப்பாக நிறமும், மணமும் நிறைந்த கொன்றை மலரை யாரும் சூடாமல் ஒதுக்கிய போதும், சிவபிரான் தானே விரும்பித் தலைமேலணிந்து சிறப்புச் செய்தது போல் மையல் மானுடமாய் மயங்கிக் காதல் வயப்பட்ட சுந்தரரை, அவர் பாடலின் பக்திமணம் பாரெங்கும் பரவச் செய்யும் பொருட்டுத் தம் தோழராய் ஏற்றுக்கொண்ட பெருமையைப் புலப்படுத்துகிறது! அதுமட்டுமல்ல, பிரணவ சொரூபம் படைத்த கொன்றை மாலை போன்று, இறைவர் சிறப்பை உணர்த்தும் திருத்தொண்டத்தொகை, தேவாரம் போன்ற பாடல்களை ஏற்று மகிழ்ந்த அழகைக் காட்டுகிறது. இவற்றையே சேக்கிழார்,

‘’கங்கையும் மதியும் பாம்பும் கடுகையும் முடிமேல் வைத்த அங்கணர் ‘’ என்ற தொடரால் குறிப்பிட்டார்! முன்பு கைலையில் சுந்தரரைத் தென்திசையில் மெல்லியலாருடன் காதல் இன்பம் கலந்து அணைவாய் என்று போக்கிய போது,

‘’செய்ய சேவடி நீங்கும் சிறுமையேன்
மையல் மானுட மாய்மயங் கும்வழி
ஐய னேதடுத் தாண்டருள் செய் என
அங்க ணாளன் அதற்கருள் செய்தபின் ‘’

என்ற பாடலில் அங்கணாளன் என்று சிவபிரானை நினைவுடன் குறித்தார்! இத்தகைய சிவபெருமான், திருமுனைப்பாடி நாட்டில், திருவெண்ணை நல்லூரில் சுந்தரரை ஆள்ஓலை காட்டித் தடுத்தாட்கொண்டார்! அந்த ஆண்டவர் எழுந்தருளிய நாடே திருமுனைப்பாடி நாடு! என்று பாடுகிறார்!

அந்தத் திருமுனைப்பாடி நாட்டின் பெண்களைப் பற்றியும் சேக்கிழார் பாடுகிறார்! அம்மங்கையரின் குளிர்ந்த நிலவு போன்ற திருமுகத்தில், செங்கயல்களாகத் திகழும் விழிகள் இருமருங்கிலும் உள்ள செவிகளில் அசையும் குழைகளை நாடிப் பாய்கின்றன! என்பதை.,

‘’அங்கணர் ஓலை காட்டி ஆண்டவர் தமக்கு நாடு
மங்கையர் வதன சீத மதியிரு மருங்கும் நாடிச்
செங்கயல் குழைகள் நாடும் திருமுனைப் பாடிநாடு!’’

என்று பாடுகிறார்! இத்தொடரில் , மங்கையர் கண்களின் சிறப்பைச் சேக்கிழார் பாடுகிறார்! கம்பரும் கோசல நாட்டை வருணிக்கும் போது,

‘’ஆச லம்புரி ஐம்பொறி வாளியும்
காசலம்பு முலையவர் கண்எனும்
பூசல் அம்பும் நெறியின் புறம் செலாக்
கோசலம்!’’

என்று பாடுகிறார்!அந்நாட்டின் பெண்களின் கண்கள் நன்னெறிக்கு மாறான வழியில் செல்லாவாம்! அவ்வாறே இந்தத் திருமுனைப்பாடி நாட்டின் மங்கையர் கண்களும் உள்ளன! உலகினர் கண்ணால் காண்பதை விசாரித்துச் செவியால் கேட்டபின் உறுதிப் படுத்திக்கொள்வார்கள்! அவ்வாறே அவ்வூரினர், சுந்தரர் சிவபெருமானின் அடியார் என்று செவியால் கேட்டதை , மூல ஓலையைக் கண்ணால் கண்டு உறுதிப்படுத்திய வரலாற்றை இது வேறுவகையில் கூறுகிறது! இதற்கு மேலும் விளக்கமாக ,

‘’இப்பகுதியிலே பின்னர்ச் சரித நிகழ்ச்சியிற் பரவையார் ஆரூர் நம்பிகளைப் “பண்டைவிதி கடைகூட்டக்“ கண்களாற் கண்டபின் “எதிர் வந்தவர் யார்?“ என்று சேடியை வினவி, அவள் சொல்லத் தமது காதுகள் மூலம் அறிந்துகொண்டாராகும். காட்சித் துறையிலே கண்ணால் தலைவனைக் கண்ட தலைவி, பின்னர் அவனை இன்னார் என்று காதாற்கேட்டறிந்துய்வள். ஆதலின் கண்கள் காதுகளை நாடிற்று என்ற குறிப்பை இச்சரித நிகழ்ச்சியிற் காண்போம்’’ என்று சிவக்கவிமணி கூறுகிறார்!

இப்பாடலில்தான் சுந்தரர் அவதரித்த நாடாகிய திருமுனைப்பாடி நாடும், குறிப்பாக அந்நாட்டை ஆண்ட அரசராகிய நரசிங்க முனையரையர் திருப்பெயரும் கூறப்பெற்றன! இனி முழுப்பாடலையும் பயில்வோம்!

‘’கங்கையின் மதியும் பாம்பும்
கடுக்கையும் முடிமேல் வைத்த
அங்கணர் ஓலை காட்டி
ஆண்டவர் தமக்கு நாடு
மங்கையர் வதன சீத
மதியிரு மருங்கும் ஓடிச்
செங்கயல் குழைக்கள் நாடும்
திருமுனைப் பாடி நாடு!’’

சிவபிரானின் பெருமை, சுந்தரர் வரலாற்றுச் சிறப்பு, பெண்களின் பெருமை, நாட்டின் அறிமுகம் ஆகிய அனைத்தையும் புலப்படுத்தும் சேக்கிழார் திருப் பாடலின் சிறப்பே சிறப்பு!

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க