-மீனாட்சி பாலகணேஷ் 

‘ஓடிவருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடீ
ஆடித் திரிதல் கண்டால் உன்னைப்போய் ஆவி தழுவுதடீ,’ என்றார் பாரதியார்.

சின்னஞ்சிறு குழந்தை நடக்கக் கற்றுக்கொள்வதனைக் காண்பது, அதனை ஊக்குவித்து உற்சாகப்படுத்தி, உவகைகொள்வது என்பது ஒரு தெய்வீக அனுபவம். சிவந்த தாமரைமலர் போலும் சின்னஞ்சிறு பாதங்கள் தத்தித்தத்தி நடந்துவரும் அழகை, தான் கீழே விழுந்து விடுவோமே எனும் அச்சமேயின்றி ஓடிவரும் இனிய செயலைக் காண ஆயிரம் கண்களும் போதாதுதான்!

வரிசைக்கிரமமாக அமைந்த பிள்ளைத்தமிழின் ஆறாவது பருவம் வருகை அல்லது வாரானைப் பருவம் எனப்படும். குழந்தையின் பன்னிரண்டாவது மாதத்தில் இது நிகழ்வதாகக் கொள்ளப்படும்.

நம் மனதுக்கினியவர்களின் நடையும், அதன் அழகும், அதுவே குழந்தையானால் அதன் கால் சதங்கை, சிலம்பு, இவற்றின் ஒலியும் மானிடர் அனைவருக்குமே மிகுந்த உற்சாகத்தைத் தருவதாகும்.

தத்தித்தத்தித் தளர்நடை பயிலும் குழந்தையை அருகில் நின்று பார்க்கும் தாயின் உள்ளம் பாசத்தில் விம்முகின்றது. அந்தக்கால்களால் அவன் என்ன செயலெல்லாம் செய்யப்போகிறான், எங்கெல்லாம் செல்லப்போகிறான், அதை எவ்வாறெல்லாம் அழகுபடுத்திப் பார்க்கலாம் என்றெல்லாம் அவள் எண்ணங்கள் சிறகடிக்கின்றன. தன் குட்டனை, குழந்தையை, அழகுநடை பயிலும் மயிலாக, அசைந்து நடந்து வரும் அழகு யானைக்குட்டியாக, துள்ளிவரும் மானாக, எனவெல்லாம் பார்க்கிறாள்.

‘சின்னஞ்சிறு பதங்கள் சிலம்பொலித்திடுமே அதை
செவிமடுத்து எந்தன் மனம் களித்திடுமே,’

எனும் ஊத்துக்காடு வேங்கட சுப்பைய்யரின் பாடல் வரிகள், கண்ணனின் காற்சதங்கை ஒலியை மனதில் நிரப்பி மகிழ்விக்கின்றன.
‘நன்னுபாலிம்ப நடசி வச்சிதிவோ?’ என, (என்னைக் காக்கவேண்டி நீ நடந்து வந்தனையோ?) தியாகராஜரும் தமது கீர்த்தனை ஒன்றில் ஸ்ரீராமனைக் கேட்டு உருகுகிறார். ‘உயர்வான பரம்பொருளாகிய நீ ஏழை அடியேனுக்காக, தேரிலன்றி, குதிரை மீதிலன்றி, வெறும் கால்களால் நடந்து வந்தனையோ?’ எனும்போது உள்ளம் ஆனந்தத்திலும், பச்சாதாபத்திலும் விம்முகிறது அவருக்கு.

இதனைப் பெரியாழ்வாரும் தமது பாசுரங்களில் பாடி மகிழ்ந்துள்ளதனைக் காணலாம். கண்ணன் நடப்பது சிறிய யானை மெல்ல அசைந்து நடப்பது போலிருக்குமாம். யானை தனது மதங்களைப் பெருக விட்டுக்கொண்டும், தனது காலில் இடப்பட்டுள்ள சங்கிலி ‘சலார்பிலார்’ என ஒலி எழுப்பும்படியும் தன் உடலின் இருபுறங்களிலும் தொங்கும் மணிகள் ஒலிக்குமாறும் நடப்பதுபோலக் கண்ணன் நடக்க வேண்டும் எனும் தாயின் ஏக்கத்தைப் பாடுகிறார்.

‘தொடர்சங் கிலிகை சலார்பிலார் என்னத்
தூங்கு பொன்மணி ஒலிப்ப
படுமும் மதப்புனல் சோர வாரணம்
பைய நின்று ஊர்வது போல்…’

திருவடிச் சதங்கைகள் ஓசை எழுப்ப, அரைச்சதங்கையின் மணிகள் ஒலிக்க, என் சார்ங்கபாணி தளர்நடை நடவானோ! என ஆவலாக வேண்டுகிறார்.

அன்னையின் ஆவலை, ஏக்கத்தை, எதிர்பார்ப்பை அழகுறச் சித்தரிக்கும் இப்பாசுரம், அவளுடைய பெருகியோடும் எல்லையற்ற அன்பின் உயர்வை எடுத்துக் காட்டுகிறது.

ஆயினும் இவ்வாறெல்லாம் தான் போற்றிப் பெருமிதம் கொள்ளும் சிறுகுழந்தை, தான் வழிபடும் திருமாலே சிறு கிருஷ்ணனாக வந்த வடிவம் என அவருக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்துள்ளது. ஆகவே அடுத்த பாடலில் அந்தக் குழந்தையான இறைவடிவே வந்து தன் வீடெங்கும், வீதியெங்கும் தன் பிஞ்சுப்பாதங்களின் முத்திரையைப் பதிக்க வேண்டுவது மற்றொரு சிலிர்க்க வைக்கும் அழகு.

‘ஒருகாலில் சங்கு ஒருகாலில் சக்கரம்
உள்ளடி பொறித்து அமைந்த
இருகாலும் கொண்டு, அங்கங்கு எழுதினாற்போல்
இலச்சினை படநடந்து….’

எனப் பெரியாழ்வாரின் தாயுள்ளம் விழைகின்றது.

பிள்ளைத்தமிழ் நூல்களின் பாடல்கள் அனைத்துமே தாய், செவிலித்தாய் மற்றும் உறவினர்கள் ஆகியோரின் கூற்றாக அமைவது அதன் தனிச்சிறப்பாகும். அடியார்கள் தம்மை இத்தகைய நிலைகளில் இருத்திக்கொண்டு தாம் விரும்பும் இறைவடிவங்களைப் பாடிப்பரவுகின்றனர்.

கிருஷ்ணனுடைய பாதங்களின் சிறப்பில் ஆழ்ந்துவிட்ட லீலாசுகர் எனுமடியார்ஆனந்த பரவசமாகி அவற்றை வர்ணிப்பது படிக்கின்ற நமக்கும் களிப்பைத் தருகின்றது:

‘வேறு புகல் இல்லாதவர்களுக்கு இத்திருவடிகள் ஒன்றே புகலிடமாக (அசரண-சரணாப்யாம்) உள்ளன. குழலூதியபடி கிருஷ்ணன் இத்திருவடிகளால் நடந்து வருகிறான் (ஆயாதி),’ என நெகிழ்கிறார் அடியார்.

கிருஷ்ணனின் கல்யாண குணங்களில் ஆழ்ந்துவிட்ட நாராயண பட்டத்ரி, நாராயணீயத்தின் ஈற்றயல் ஸ்லோகத்தில் கிருஷ்ணனின் திருவடிகளை வழுத்தி, ஆத்மார்ப்பண லயிப்பில் உருகிக் கரைந்து தன்னையே இழந்து விடுகிறார்.

‘உனது சரீரத்திலேயே யோகிகளால் மிகவும் விரும்பப்படுவன உனது திருவடிகளே! ஆதரவற்றவர்களுக்கு அவையே புகலிடம். அடியார்களுக்கு அவை வேண்டியன அனைத்தையும் தரும் கற்பகத்தரு. கிருஷ்ணா! குருவாயூரில் உறைபவனே! (பவனபுரபதே) கருணைக்கடலே! இந்த உனது திருவடிகள் எனது இதயத்தில் எப்போதும் பதிந்து நின்று, எனது துயரங்களை விடுவித்து என்னை மிக உயர்வான பேரின்பச் செல்வத்தில் ஆழ்த்தட்டும்.’

‘வேண்டிக்கொள்ள வேண்டிய’வற்றின் உச்சநிலை வேண்டுதல் இது!  பி. லீலா எனவொரு பாடகி இருந்தார். அவருடைய இனிய குரலில், உள்ளத்தை உருக்கும் இந்த ஸ்லோகத்தினைக் கேட்கும்போது பட்டத்ரியின் தேடுதலை, ஆனந்த லயிப்பை ஒருவாறு புரிந்துகொள்ள இயலும். ‘ஒருவாறு’ என்றதன் காரணம், நாமே அந்த நிலைக்குச் சென்றால் தான் துல்லியமாக உணர இயலும். நாமெங்கே, பட்டத்ரி எங்கே?

‘யோகீந்த்ராணாம் த்வதங்கேஷ்வதிக ஸுமதுரம் முக்திபாஜாம் நிவாஸோ,’ என்பன ஸ்லோக வரிகள்.

பிள்ளைத்தமிழுக்குத் திரும்பலாம்!!

முருகப்பெருமானை, கதிர்காமத்திலுறையும் கந்தவேளை, தளர்நடை பயிலும் குழந்தையாக்கி, தாமே அன்னையாகி, தம்மிடம் நடந்து வருமாறு கைகளை நீட்டி வேண்டுகிறார் இதனை இயற்றிய சிவங். கருணாலயப் பாண்டியப் புலவர்.  தெய்வத்தன்மையினால் முருகனுக்குப் பட்டால் செய்த சிறு ஆடை இயல்பாகவே அமைந்ததாம்; அது நூலால் நூற்கப்படாமலும், ஊசியால் தைக்கப்படாமலும் விளங்குவது. அது நோன்பிருந்து நின்னையே நினைந்துருகும் அடியாரின் உள்ளம்போல அசைந்தாடுகிறது என்றார் புலவர்.

‘நூலாத நூலாடை ஊசியொடு குயிலாத
நொய்யசின் மெய்யுறையது
நோன்பிற்ற ழும்பிநின் னுள்ளுமுள மெனவாட…’

மிகவும் உயர்வானவையே தன் தெய்வக்குழந்தைக்குப் பொருந்தும் என எண்ணும் தாயுள்ளத்தின் அன்பு இதில் புலப்படுகின்றது. இன்னும் கூறுவார்: அழகான பூச்செண்டு முடிக்கப்பட்ட கொண்டை ஆடுகிறது; (அவனருளால்) பூமியில் அறம் வழுவாமல் நடமாடுகிறது; உணவே அருந்தாது தவம் செய்வோர் உள்ளம் இறை எண்ணத்தில் அசைந்தாடுகின்றது; தளர்நடை நடக்கும் குழந்தையின் உடலும் தள்ளாடுகிறதாம். எட்டுக்கரங்களையும், நான்கு முகங்களையும் கொண்ட பிரமனின் பெருமிதம் சிதைந்தோட, தேவர்கள் சிறைநீங்கி ஓட, அசுரர்கள் படை தோற்று ஓடிடுமாறு செய்து, நாய்போன்ற எமது அவலம் தெறித்தோடுமாறும், உன்மீது அன்புகொண்டு நாங்கள் மெழுகுபோல உள்ளம் கசிந்து என்புருகிக் கண்களில் மழைநீர் போலக் கண்ணீர் பெருகி ஓடுமாறும் நீ எம்முன்பு நடைபயின்று வரவேண்டும்,’ எனும் வேண்டுதல்.

தளர்நடை நடக்கும் குழந்தை ஆடி அசைந்து வருவதும் ஒரு தனியழகு.
அதைக்கண்டு உள்ளம் மகிழ்வது அன்னையின் இயல்பு;
கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகப் பாடுவது அடியார் மரபு!
‘மாலாகி யாம் அழல் மெழுகின் நெக்கென்புருகி
மழையோடவே வருகவே.’

பிள்ளைத்தமிழ்ப் பாடல்களின் சிறப்பு தெய்வத்தின் பெருமையை குழந்தைப்பருவங்களுக்கான செயல்களில் வைத்துப் போற்றுவது. குழந்தையின் தெய்வத்தன்மையை உணராத அடியார் இல்லை! ஆகவே தாம் போற்றும் குழந்தையை, தெய்வத்தின் சிறப்புகளைக்கூறித் தம்முன் வருமாறு வேண்டுதல் இன்னொரு அழகு. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் தடாதகைப்பிராட்டியாகிய சிறு பெண்மகவை, குமரகுருபரனார் ‘வருக’வென அழைக்கும் பாடல்கள் நமது உள்ளத்தைக் கசிய வைப்பனவாகும்.
‘தேன்சிந்தும் மலர்கள் பொருந்திய நறுமணம் மிகுந்த கூந்தலை உடைய பெண்யானையே! வருக! முழுமையான ஞானவெள்ளமே வருக! பிறைசூடிய பெருமானின் மூன்று கண்களுக்கும் விருந்தாக அமைந்தவளே வருக!  ‘பிரம்மா, திருமால், சிவன் ஆகிய மூவருக்கும் மூலமாக விளங்கும் சத்தியே வருக! விதை இல்லாமலே விளைகின்ற பரமானந்தம் எனும் தெய்வீக விளைவே வருக!
‘பழமையான மறைகள் எனும் வேதங்களின் இளந்தளிரே வருக! அருள் பழுத்துக் கனிந்துள்ள கொம்பாயுள்ளவளே வருக! நின் அழகான கடைக்கண்ணின் கோடியில் பெருகிய அருள்வெள்ளத்தில் மூழ்கியுள்ள அடியார்களின் பிறவியாகிய நோய்க்கு மருந்தாக விளங்குபவளே வருக! இனிய பசிய குதலைமொழி பேசும் கிளியே வருக! மலயத்துவசன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே!’

‘பெருந்தேன் இறைக்கும் நறைகூந்தற்
பிடியே வருக முழுஞானப்
பெருக்கே வருக பிறைமௌலிப்
பெம்மன் முக்கண் சுடர்க்கிடுநல்
விருந்தே வருக…..’ என்பது பாடல்.

தான் வழிபடும் அன்னை தெய்வத்தை ஒரு சிறு பெண்மகவாக்கி, தாமே தாயாகி, அவளுடைய அருமைபெருமைகளையெல்லாம் பாடி, அவளை ‘வருக’வென அழைத்துச் சீராட்டும் அடியாரின் உள்ளம் எப்படிப்பட்ட பேரானந்தத்தில் மூழ்கித் திளைக்கின்றதென்பதனைப் பிறிதொரு பாடலிலும் காணலாம்.

‘தொடுக்கும் கடவுள் பழம்பாடல்
தொடையின் பயனே நறைபழுத்த
துறைத்தீந் தமிழின் ஒழுகுநறும்
சுவையே அகந்தைக் கிழங்கைஅகழ்ந்து
எடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்கு
ஏற்றும் விளக்கே வளர்சிமய
இமயப் பொருப்பில் விளையாடும்
இளமென் பிடியே எறிதரங்கம்
உடுக்கும் புவனம் கடந்துநின்ற
ஒருவன் திருவுள்ளத்தில் அழ
கொழுக எழுதிப் பார்த்திருக்கும்
உயிரோ வியமே மதுகரம்வாய்
மடுக்கும் குழற்கா டேந்தும் இள
வஞ்சிக் கொடியே வருகவே..’

என்றார். இதில் ‘அகந்தையெனும் ஆழ்ந்த வேரோடிய ஆணவக் கிழங்கை, அகழ்ந்து எடுத்து எறிந்து விடும் ஞானிகளின் உள்ளத்தில் ஏற்றிவைக்கப்படும் ஒளிவிளக்காக இருப்பவளே,’ என அன்னையின் பெருமையை உணர்த்தியது எண்ணவொண்ணாததொரு நயம் ஆகும். மேலும், ‘சிவபெருமான் தன் உள்ளத்தில் அழகாக எழுதிவைத்துக் கண்டு களிகொள்ளும் உயிரோவியமானவளே மீனாட்சியன்னை,’ என்றும் உரைக்கிறார். இப்பாடலுக்கு இன்னொரு சிறப்புமுண்டு. இளம் வயதிலேயே பெரும் ஞானியான குமரகுருபரனார் அன்னை மீனாட்சி மீது இப்பிள்ளைத்தமிழ் நூலை யாத்தனர். அன்னை மீனாட்சியம்மை மன்னர் திருமலை நாயக்கர் கனவில் தோன்றித் தன் திருமுன்பு அதனை அரங்கேற்றப் பணித்தாள். அவ்வாறே அரங்கேற்றமும் அம்மையின் திருக்கோயிலில் அவள் சந்நிதியில் நிகழ்ந்தது. மேற்காணும் இப்பாடலுக்குக் குமரகுருபரனார் பொருளுரைக்கும் போது அன்னையே அருச்சகரின் ஐந்தாறு வயது மகள் போலத் தோன்றி அரசர் திருமலை நாயக்கரின் மடியிலமர்ந்து இப்பாடலைக் கேட்டு ரசித்தாள். பாடல் முடிந்ததும் அரசர் கழுத்திலிருந்த முத்துவடத்தைக் கழற்றிக் குமரகுருபரர் கழுத்திலிட்டு மறைந்தனள். ஆகவே, அன்னையின் ஆமோதிப்பைப் பெற்றதொரு பிள்ளைத்தமிழ் நூலும் இதுவே எனப் பெருமை கொள்ளலாம். அன்னை தெய்வம் மீதான பிள்ளைத்தமிழ் நூல்களை இயற்றிய அடியார் பலரும் சக்தி உபாசகர்களாகவும் இருந்துள்ளனர். தஞ்சை சரசுவதி மகால் நூல்நிலையத்தினர் சிவயோக நாயகி பிள்ளைத்தமிழ் எனவொரு நூலை வெளியிட்டுள்ளனர். இயற்றியவர் பெயர் தெரியவில்லை. இவர் ஐயத்திற்கிடமின்றி சக்தி உபாசகர். ஏனெனில், வாரானைப் பருவத்துப் பாடலொன்றில் ஸ்ரீசக்கரத்தில் உறையும் அம்பிகையான அவளைப் போற்றுகிறார். அம்பிகையின் ஸ்ரீ சக்கர வருணனை விரிவாகத் தரப் பட்டுள்ளது.

‘முச்சதுர மூவட்டம் ஈரெட்டும் ஓரெட்டு
முளரியிதழ் சூழ்ந்ததற்குள்
முகனையிற் பதினான்கு பத்துடன் பத்தெட்டு
முக்கோண நடுவிந்துவாய்…..’ என ஸ்ரீ சக்கரத்தின் அமைப்பை விவரித்து,

‘சச்சபுட முதலான தாளங்கள் தாள்பொரச்
சதகோடி திருமாதரார்
சந்ததம் நடம்புரியும் நாற்பத்து முக்கோண
சக்கர நாயகி வருகவே’ எனப்போற்றுகிறது.

இவையனைத்தும் சக்தி உபாசகர்களின் துதிகள் தாமே? இது கிடக்க, வேறொரு இனியகாட்சியைக் காணச் செல்லலாமா?
பிடிவாதம் செய்யும் ஒரு சிறு பெண்குழந்தை. அதனிடம் பொய்யாகச் சினம்கொண்டுபேசும் தாய்! இனிமையான காட்சி!
“வா கண்ணே! முகம்கழுவி, உன்னைச் சிங்காரிக்கிறேன்,” என ஆசையாகத் தாய் அழைக்கிறாள். குழந்தைக்கோ விளையாட்டு மும்முரம். சிறு செப்புகளில் மண்சோறு சமைக்கிறாள். இலைகளைப் பறித்துப் பொரியல்செய்கிறாள். “அம்மா வா, நான் சமைத்த சோற்றைச்சாப்பிடு,” என்று மழலையில் அன்னைக்கும் கொஞ்சம் தருகிறாள்.

கையில் பட்டுப்பாவாடை, கழுத்திற்கான அணிகலன்கள், மை, திலகம் முதலானவற்றை ஏந்தியபடி தாயின் அருகில் பணிப்பெண் நிற்கிறாள். குழந்தையின் புழுதிபடிந்த உடைகளையும் கைகால்களையும் கண்ட தாய் சலித்துக்கொள்கிறாள்.
“நான் அழைக்கஅழைக்க நீ வராமலே இருந்தால், நான் இங்கிருந்து போய்விடுவேன். உனக்கு முகம், கைகால் கழுவி, உனது அழகான வேல்போலும் விழிகளுக்கு மைதீட்டமாட்டேன். பிறைமதிபோன்ற நெற்றியில் அழகிய திலகத்தையும் எழுதமாட்டேன். அழகான மணிகளால் செய்யப்பட்ட இந்த ஆபரணத்தை உனக்கு அணிவிக்கமாட்டேன்.”

குழந்தைக்கு அலங்காரம் செய்துகொள்ள ஆசை; பெண்குழந்தையல்லவா? அலங்காரப்பிரியை அவள்! தனது விளையாட்டை விட்டுவிட்டுவர மனமில்லாமல் தாயை ஏக்கத்தோடு பார்க்கிறாள். இதுதான் வாய்ப்பெனத் தாய் தனது அச்சுறுத்தல்களைத் தொடர்கிறாள்.  “உன்னிடம் அன்பாகப் பேசவும் மாட்டேன் குழந்தாய்! புழுதிபடிந்த உன் முகத்தையும் ஏறெடுத்துப் பார்க்கமாட்டேன் போ! அலங்காரம் செய்தபின் எனது முலைப்பாலையும் ஊட்டமாட்டேன். ஆசையாக எனது இடுப்பில் உன்னைத் தூக்கிவைத்துக்கொண்டு தேரோடும் வீதியில் சென்று நித்தமும் வேடிக்கை காட்டுவேனல்லவா? அதையும் செய்யமாட்டேனடி பெண்ணே!” குழந்தைக்குத் தாளவில்லை! இவையனைத்தும் அன்னையிடம் அவளுக்குண்டான தினசரி சலுகைகள். எப்படி அவற்றை இழக்கமுடியும்? குழப்பத்துடன் அன்னையைப் பார்க்கிறாள். அன்னையோ விடுவதாயில்லை! விரலால் எச்சரித்தபடி, “உனது சிவந்த கனிவாயில் முத்தமிட்டு உன்னைக் கொஞ்சமாட்டேனடி பார்த்துக்கொள்! அழகான மணிகள் குலுங்கும் தொட்டிலில் படுக்கவைத்து, உன்னை உறங்கவைக்கப் பாராட்டிச் சீராட்டித் தாலாட்டும் பாடமாட்டேன் தெரியுமா?” என்கிறாள். இதற்குமேல் குழந்தைக்குத் தாங்கவில்லை. தனது சிறுசோற்றுச் செப்புக்களை வீசியெறிந்து விட்டு உதடுகள்நெளிய அழுகைபொங்கிவர ஓடோடிவந்து தாயின் சேலையில் முகம் புதைத்துக்கொண்டு அவளை அணைத்துக்கொள்கிறாள். தாயும் தனது பொய்க்கோபத்தினை விட்டொழித்து, குழந்தையை இறுக அணைத்துக்கொள்கிறாள். பார்க்கும் நம் முகங்களில் புன்னகை அரும்புகிறது இல்லையா?
இவள் இமவானின் அகன்றமார்பில் (விசாலமான இமயமலையில்) தவழும் குழந்தையல்லவோ? இவளையா கோபிப்பது?
‘வருக வருக என் குழந்தையே! சாலிப்பதி எனப்படும் நெல்லையில் வாழ்கின்ற காந்திமதித்தாயே, விரைந்து வருகவே!’ என நாமும் பாடியவாறே குழந்தையை எண்ணத்தில் அணைத்துக் கொள்கிறோம்.

‘வாரா திருந்தா லினிநானுன் வடிவேல்
விழிக்கு மையெழுதேன்
மதிவாள் நுதற்குத் திலகமிடேன் மணியால்
இழைத்த பணிபுனையேன்
…………………………………………….
தேரார் வீதி வளங்காட்டேன் செய்ய
கனிவாய் முத்தமிடேன்
திகழு மணித்தொட் டிலிலேற்றித் திருக்கண்
வளரச் சீராட்டேன்…..’

பேராதரம்- மிகுந்த அன்பு; ஒக்கலை- இடை.
(நெல்லை காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்- வருகைப்பருவம்
வித்துவான் அழகிய சொக்கநாதப்பிள்ளை)

அன்னைத் தெய்வத்தைக் குழந்தையாக்கி இவ்வாறு வருந்தியும், வேண்டியும், உரிமையுடன் கோபித்தும், பின் கொஞ்சியும் அழைத்தால் அவள் வந்து அருள்செய்யாமல் இருப்பாளா?
திருச்செந்தூர் பிள்ளைத்தமிழில் பகழிக்கூத்தரும் இதுபோன்றே தாய் குழந்தை முருகனிடம் பொய்யாகச் சினம் கொள்வதாகப் பாடியுள்ளார். ‘உன் அரைஞாண் இறுக்கமாக உள்ளது. அதனை வாகாக தளர்த்திப் பூட்ட மாட்டேன். இலங்கும் மகர குண்டலத்தை எடுத்துக் குழைமீது அணிவிக்க மாட்டேன்; நெற்றியில் திலகம் தீட்ட மாட்டேன்,’ எனவெல்லாம் தாயின் பலவிதமான பொய்யானஅச்சுறுத்தல்கள்! இது போன்றே பழனி முருகனின் தாய்மாரும் பலவிதமாகக் கூறிக் கொஞ்சி அவனை வருமாறு அழைக்கின்றனர். சீர்காழி கோவிந்தராஜனின் இனிய தெய்வீகக் குரலில் இப்பாடலைக்கேட்டு ரசிக்காதவர்கள் இருக்க முடியாது.

‘பொன்னே வருக பொன்னரைஞாண் பூட்ட வருக சிறுசதங்கை
புனைய வருக மணிப்பதக்கம் பூண வருக
………………………………………………..
முத்த மிடற்கு வருகஎதிர் மொழிகள் மழலை சொலவருக
தன்னே ரில்லா நுதல்திலகம் தரிக்க வருக விழியினில்மை
சாத்த வருக ……………………………….
வளஞ்சேர் பழனிச் சிவகிரிவாழ் வடிவேல் முருகா வருகவே!’
(பழனிப்பிள்ளைத்தமிழ்- வருகைப்பருவம்- சின்னப்ப நாயக்கர்)

இங்கு புலவர் முருகனின் தெய்வத்தன்மையைப் பாடுகிறார்; ஆயினும் அவனுடைய குழந்தை வடிவிற்கு அலங்காரம் செய்து, பொன்னும் மணியும் புனைவித்து, முகத்தோடணைத்துச் சீராட்டி மகிழ விரும்பும் தாயினது பேராவலையும் பதிவு செய்துள்ளார். ஒவ்வொரு அணிகலனாகத் தன் குழந்தைக்கு அணிவித்து அழகுபார்க்க விழையும் தாயுள்ளத்தின் பேராவலையும் அன்பையும் இப்பாடல்கள் பதிவு செய்துள்ளன. இங்கு மெய்யடியார்களின் ஒரு அருமையான சிந்தனைத்துளியை எண்ணிப்பார்க்கலாம். தன் பிரியத்துக்குரிய தெய்வக்குழந்தை காலில் தண்டையும் சதங்கையும் கொஞ்ச அருகே வந்தால் எவ்வாறிருக்கும் எனும் எண்ணமே அவர்களைத் தாயன்பில் இன்புறுத்துகிறது. பக்தியில் நெகிழவைத்தும் அன்பில் மகிழ வைத்தும் சிலிர்ப்பூட்டுகின்றது.

‘தண்டையணி வெண்டையம் கிண்கிணிச தங்கையும்
தண்கழல்சி லம்புடன் கொஞ்சவே…’

எனும் அருணகிரிநாதரின் திருப்புகழின் சந்தநயத்தில் மகிழாதவர்கள் இல்லை.  ‘அந்தகன் வரும் தினம்’ எனும் மற்றொரு திருப்புகழில் அருணகிரிநாதர், முருகனை அழைப்பதும் மிகவழகான சந்தநயமும் கருத்துச் செறிவும் கொண்ட பாடல். தாயான உமையவளின் உள்ளம் மகிழுமாறு கால்களில் சின்னஞ்சிறு சதங்கைகள் கொஞ்சிட குழந்தை முருகன் ஓடோடி வருகிறான். அன்னையின் அன்புள்ளம், அவன் தன்னிடம் வந்து அளிக்கப்போகும் ஆசை முத்தத்திற்காக- ‘சங்கரி மனம் குழைந்துருக முத்தம்தர வரும் சரவணனுக்காக’- ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டுள்ளது என்பதனைக் கூறும் வரிகள் சிறப்பானவை.

‘தந்தன தனந்தனந் தனவெனச்
செஞ்சிறு சதங்கைகொஞ் சிடமணித்
தண்டைகள் கலின்கலின் கலின்எனத் திருவான
சங்கரி மனங்குழைந் துருகமுத்
தம்தர வரும்செழுந் தளர்நடைச்
சந்ததி சகந்தொழும் சரவணப் பெருமாளே,’

என்பன பாடலின் ஈற்றடிகள்.
இதே போன்று முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழிலும் குழந்தை முருகனை, ‘பொன்னால் செய்தபெரிய கழல்கள் பாதச்சிலம்புகளோடு சேர்ந்து கலின் கலின் எனும் ஒலியினை எழுப்பவும், திருவரையில் உடைமணி கிணின் கிணின் என ஒலிக்கவும், மற்றும் பலவாபரணங்கள் பொலியவும் எம்மிடம் வருவாயாக!’ எனத்தாய் வேண்டும் பாடல் காணப்படுகிறது.

‘செம்பொற் கருங்குழல் அரிக்குரல் கிண்கிணி
சிலம்பொடு கலின்கலினெனத்
திருவரையில் அரைமணி கிணின்கிணின் எனப்பொலந்
திண்டோளின் வளைகலிப்ப…’

கேட்டவரம் தர ஒடிவரும் குழந்தை தெய்வம், கிண்கிணி சதங்கையொலிக்க ஆடியசைந்து வரும் குழந்தை எனக் கொஞ்சி, சிறுகுழந்தைத் தெய்வங்களை வாரியணைத்து உச்சிமுகர்ந்து கொண்டாட அன்னைமார் போன்று அடியார்களுக்கும் ஆவல் மிகுகிறது. தமது பக்திப்பெருக்கினையும் கவிதைச் சிறப்பினையும் சொற்களில் குழைத்தெடுத்துப் பாடல்களைப் புனைந்து வைத்துள்ளனர்.
(இந்தத்தொடர் முனைவர், பேராசிரியர் திரு. கோ. ந. முத்துக்குமாரசுவாமி ஐயா (மேனாள் முதல்வர், தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி, பேரூர், கோயம்புத்தூர்) அவர்கள் தமிழ் ஹிந்து இணையதளத்தில் எழுதி வந்ததன் தொடர்ச்சியாகும். பேராசிரியர் ஐயா முதல் ஐந்து பகுதிகளுடன் நிறுத்திக்கொண்டு இதனைத் தொடர்ந்து எழுதுமாறு என்னைப் பணித்துள்ளார். அன்னார் துவங்கிவைத்த அற்புதமான இத்தொடரை, பேராசிரியர் ஐயாவின் ஆசிகளுடன் எழுதுகிறேன்).

(பிள்ளைத்தமிழ் பெருகி வளரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.