-மேகலா இராமமூர்த்தி

பொய்ம்மைமிகு புவிவாழ்வு நீங்கி, அலைக்கழிக்கும் பிறவிச்சுழல் நீந்தி, பரிநிர்வாணமெனும் உயர்நிலை அடையக் கண்மூடிக் காத்திருக்கும் புத்தரைக் காண்கின்றோம் படத்தில். இந்த நிழற்படத்துக்குச் சொந்தக்காரர் திருமதி. ராமலக்ஷ்மி. வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து இப்படத்தைத் தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டி 193க்கு அளித்திருப்பவர் திருமதி. சாந்தி மாரியப்பன். பெண்மணிகள் இருவருக்கும் என் நன்றிகள்!

சாதி மத பேதமற்ற அன்புநெறியை அகிலத்துக்கு போதித்த உத்தமர் புத்தரைத் தம் கவிதைகளில் எப்படியெல்லாம் நம் கவிஞர்கள் காட்சிப்படுத்தப் போகின்றார்கள் என்பதை அறிய, வல்லமை வாசகர்களாகிய உங்களைப் போலவே, நானும்  ஆவலாயிருக்கிறேன்.

*****

”புத்தனே! ஆளப்பிறந்திருந்தும் ஆட்சியைத் துறந்து ஞானம் தேடியவன் நீ! இங்கோ இலவசம் தந்து ஆட்சியை வசப்படுத்த ஆலாய்ப் பறக்கும் கூட்டமும், உறவுகளைத் தொலைத்து இணையத்தில் இரைதேடும் நாட்டமுமே காணக்கிடைக்கின்றன; இவர்களை மாற்ற என் செய்வது எனத் தலைசாய்த்து யோசிக்கிறாயோ?” என்று வினவுகின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ். 

புதிய புத்தன்!

அத்தனையும் துறந்தால் முக்தி கிட்டும்
என வாழ்க்கை நெறியை வாழும் முறையை
புத்தனே நீ சொன்னாய்
வள்ளுவன் காலம் முதலே பலர்
பலன் தரும் வழி முறைகளைப் பல சொல்லியும்
கேட்காத கூட்டம் இங்கே
ஆளப்பிறந்தவனாய் இருந்தும் அத்தனையும் துறந்து
ஞானம் தேடி சென்றவன் நீ ……… இங்கே
ஆட்சிக்கு ஆசைப்பட்டு இலவசங்களை அள்ளிக் கொடுத்து
சோம்பல் கூட்டமாய் மாற்றி
ஆட்சியை பிடிக்க முயலும் கூட்டம் இங்கே
செக்கில் சிக்கிய மாடாய்ப் பலர்
யாருக்காகவோ ஓடி ஓடி உழைத்து மனஅழுத்தத்தில் விழுந்து
தங்களைத் தொலைத்துவிட்டு எதையோ தேடுகின்ற கூட்டம் இங்கே
உறக்கம் துறந்து இணையத்தில் இரவெல்லாம் இரைதேடி
அலையும் மிருகம் போல் அலைபாயும் மனதோடு
அலைந்திடும் கூட்டம் இங்கே
சுலபமாய் அத்தனையும் கிடைத்திட
போராட்டம் என்பதே பகல் கனவாய் ஆகிட
விழித்திருந்தும் எழ மறுத்து இறுக்கமாய் மாறிப்போன
இதயங்கள் நிறைந்த கூட்டம் இங்கே
போதி மரத்தடியில் அமர்ந்து ஞானம் பெற்றவனாய்
உன்னை அறிந்த எமக்கு
இவர்களை மாற்றிட என்ன செய்யலாம் என்று
தலை சாய்ந்து யோசிக்கும்
புதிய புத்தனாய் இங்கு நீ வந்தாயோ?!

*****

”அரண்மனை எனும் மாயச்சுவர் கடந்து போதி அடியில் ஞானமடைந்தான்; அன்பெனும் ஆயுதத்தால் மக்களை வசமாக்கினான்; அந்த அன்பின் பேராற்றலே அரண்மனைச் சித்தார்த்தனை அவனிபோற்றும் புத்தனாக்கியது!” என்று ஒரு மனிதன் மகானான அரிய கதையை விளம்புகின்றார் திரு. ஆ. செந்தில் குமார்.

ஒரு மனிதன் மகானான கதை..!!

வறுமைத் துன்பம் எதுவும் இல்லா..
வசதிகள் அனைத்துக்கும் குறைவே இல்லா..
செல்வத்தில் திளைத்த அரச குடும்பத்தில்..
சித்தார்த்தன் பிறந்து வளர்ந்தானே..!!

அரண்மனைச் சுவரெனும் மாயத் திரையை..
அகற்றி எறிந்து அகண்ட உலகைப்..
பார்க்கும் பொருட்டு காவலைத் தாண்டி..
புயலெனப் புறப்பட்டான் சித்தார்த்தன்…!!

மூப்பு பிணி மரணம் அமைதி..
முதன்முறையாகக் காண நேர்ந்தது..
துன்பத்தின் காரணம் அறிய எண்ணி..
துறவறம் பூண்டான் சித்தார்த்தன்..!!

இன்னல்கள் அனைத்துக்கும் ஆசையே காரணம்..
இயற்கை அவனுக்கு உணர்த்தியது..
போதி மரத்தின் அடியில் அமர்ந்து..
பொழுதுகள் மறக்க தவத்திலாழ்ந்தான்..

தவத்தின் பயனாய் கிடைத்தது ஞானம்..
தான் அறிந்த உண்மையை உரைக்க..
உலக மக்களின் துன்பம் போக்க..
உயரிய பாதைகள் வகுத்தளித்தான்..!!

அன்பெனும் ஆயுதத்தைக் கையில் எடுத்தான்..
அனைவரும் அவன் வசம் ஆயினரே..
சக்திகள் பலவும் கொண்ட அன்பால்..
சித்தார்த்தன் ஆனான் புத்தனாக..

*****

”பாரத தேசத்து போதிமர ஞானி ஈழத்தில் நடக்கும் அளவற்ற அவலம் கண்டும் எழாது துயிலுவதேன்?! விழித்தெழுவீர் புத்தரே! மீள்வீர் போதிமரத்துக்கு!” என்று புத்தரை வேண்டுகின்றார் திரு. சி. ஜெயபாரதன்.

புத்தர் தூங்கி விட்டார்!

உத்தமராய் உருவான
பாரத தேசத்தின்
போதி மரத்து ஞானி
புத்தர் ஈழத்தில்
தூங்கிக் கொண்டுள்ளார் !
கால் நூற்றாண்டு
நடந்தது
உள் நாட்டுப் போர் !
ஈழத்தமிழர்
சுதந்திரமாய்த் தம் நாட்டில்
வாழப் போரிட்டு
இருநூறா யிரம் பேர்
உயிர் கொடுத்துத் தோற்ற
உரிமைப் போர் !
கண் இழந்தோர் எத்தனை !
கால், கை, சிரம்
இழந்தோர் எத்தனை !
தந்தை, கணவன், அண்ணன்
தம்பி இழந்தோர் எத்தனை !
மான பங்கமாகி
முலை அறுபட்ட பெண்டிர்
எத்தனை !
விழித்தெழுவீர் புத்தரே !
போதி மரத்துக்கு
மீள்வீர் புத்தரே !

*****

புத்தரின் வாழ்க்கையை, அவர் மீண்டும் உயிர்த்தெழ வேண்டியதன் அவசியத்தை அருமையாய்த் தம் கவிதைகளில் படைத்தளித்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

 இனி இவ்வாரத்தின் சிறந்த கவிதை நம் பார்வைக்கு…        

 உண்மை புத்தன்!

சுத்தோதன் மாயா பெற்றெடுத்த சித்தார்த்தன்
சுபயோக வாழ்வை விட்டொழித்த எதார்த்தன்
சுழல் பிறவிக்கடல் கடந்த சாக்கியன்
சுமையான ஆசையை சுட்டெரித்த கதிரவன்

இதழிடை இணைபிரியாப் புன்னகை
இமைமூடித் திறந்தும் திறவா இறைநிலை
இன்பத்தின் இனிமை கண்ட உயர்நிலை
இன்னலுக்கு விடையளித்த பொதுநிலை

பற்றிப்படர் கொடியில் படுத்துறங்கும்
பற்றற்றான்- இவனைப் பற்றிவிட்டால்
பற்றிய பேராசை பேரும் பாவம் எல்லாம்
பற்றியெரியும் பெரும் தீயில் வீழ்ந்த சருகாய்ப் பட்டுவிடும்

எண்ணம்,கருத்து, பேச்சு, செயல்
எளிய வாழ்க்கை, முயற்சி, சித்தம், தவம் என நேரான
எண்வகைப் பாதை கண்டான் இதில்
எப்பாதை வழி நீ சென்றாலும் நேர்மை வேண்டும் என்றான்

முழுமதி நன்னாளில் மூவுலகும் இன்பமுற
முகிழ்த்த ஞான முதல்வன்- இருள்
மூழ்கிய இன்னல் சூழ் உலகுக்கு
முழுமுதல் அருள் போதித்த அன்பின் தலைவன்

அன்பு விதை தூவிய வித்தகன்
அமைதிப் பயிர் வளர்த்த போதிச் சத்துவன்
ஆசை துறந்த சிந்தனைச் சித்தன்
ஆன்மத்தை வென்ற உண்மை புத்தன்!

”அன்பு விதை தூவிய வித்தகனை, அமைதிப் பயிர் வளர்த்த போதிச் சத்துவனை,
ஆசை துறந்த சிந்தனைச் சித்தனை, ஆன்மத்தை வென்ற புத்தனை, பற்றிப்படர் கொடியில் அறிதுயில்கொண்டிருக்கும் இப்பற்றற்றவனைப் பற்றினால் பேராசையும் பாவமும் நீங்கும்; நற்பண்புகள் ஓங்கும்” என்று புத்தர் குறித்துச் சத்தான கருத்துக்களைத் தன் கவிதையில் பகர்ந்திருக்கும் திரு. யாழ் பாஸ்கரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என்று அறிவித்து மகிழ்கின்றேன்.  

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 193-இன் முடிவுகள்

  1. சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கவிஞருக்கு வாழ்த்துக்கள்.

    ” இமைமூடித் திறந்தும் திறவாத இறைநிலை..”

    ” பற்றிப்படர் கொடியில் படுத்துறங்கும்
    பற்றற்றான்…”
    – கவிதை வரிகள் சிந்தனையின் மேன்மைதனைப் பறைசாற்றுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *