குறளின் கதிர்களாய்…(36)

-செண்பக ஜெகதீசன்

நுனிக்கொம்ப ரேறினா ரஃதிறந் தூக்கி
னுயிர்க்கிறுதி யாகி விடும்.    (திருக்குறள் – 476: வலியறிதல்)

புதுக் கவிதையில்…

வலிமையறிந்து செயல்படு
வாழ்க்கையிலே…
கிளைநுனிவரை சென்றபின்னும்
மேலும் முயற்சித்தால்
ஏறிச்செல்ல,
முடிவாகிவிடும் உயிருக்கே…!

குறும்பாவில்…

வலிமையறியாது கிளைநுனியிலிருந்து
மேலும் ஏறினால்,
முடிவுதான் உயிருக்கே…!

மரபுக் கவிதையில்…

உயர்ந்த மரத்தின் உச்சிவரை
    ஊக்கமாய் ஏறிச் சென்றபினும்,
வியக்கும் திறமை காட்டிடவே
    வலிமை ஏதும் அறியாமல்
உயரே மேலும் சென்றாலது
    உயிரின் முடிவாய் ஆகிவிடும்,
துயரம் இவ்வகை தடுத்திடவே
   தெரிந்து செயல்படு பலமறிந்தே…!

லிமரைக்கூ…

உச்சிக்கு மேலேறினால் ஒடியும் கிளையின் நுனி
உயிருக்குமது முடிவாகும்,
உணர்ந்தே செயல்படு வலிமையை அறிந்து இனி…!

கிராமிய பாணியில்…

ஏறாத ஏறாத
மரத்துமேல ஏறாத,
ஏறுனா நெறத்திக்க
அளவோட நெறத்திக்க…!

உச்சிக்கொப்பு போனபின்னே
போவாத போவாத
அதுக்குமேல போவாத…!

உறுதியில்லா நுனிக்கொப்பு
ஒடஞ்சிபோவும் பாத்துக்க
உயிரும்போவும் தெரிஞ்சிக்க,
ஏறாத ஏறாத
மரத்துமேல ஏறாத…!

வாழ்க்கப்பாடம் இதுதானே,
நடந்துக்க நடந்துக்க
பெலந்தெரிஞ்சி நடந்துக்க…!

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *