குறளின் கதிர்களாய்…(45)

-செண்பக ஜெகதீசன்

அடுத்தது காட்டும் பளிங்குபோ னெஞ்சங்
கடுத்தது காட்டும் முகம். (திருக்குறள் -706: குறிப்பறிதல்)

புதுக் கவிதையில்…

அருகில் செல்வோர் உருவத்தை
அப்படியே காட்டிவிடும்
கண்ணாடி…

அகத்திலுள்ள உணர்வுகளை
அப்படியே காட்டிவிடும்
முகம்…!

குறும்பாவில்…

அருகிலுள்ளதைக் காட்டும் கண்ணாடி,
அதுபோல் காட்டும்
அகத்திலுள்ளதை முகம்…!

மரபுக் கவிதையில்…

மருங்கி லுள்ள பொருளையெல்லாம்
மாற்றம் ஏது மில்லாமல்
உருவி லதுவாய் உள்ளபடி
உள்ளதைக் காட்டும் கண்ணாடியாய்,
இருப்பது வெளியே தெரியாதென
எதனை மனதில் மறைத்தாலும்,
இருப்பை எடுத்துக் காட்டிவிடும்
எதையும் மறைக்கா முகமதுவே…!

லிமரைக்கூ…

கண்ணாடி காட்டிவிடும் அப்படியே முகத்தை,
எப்படித்தான் மறைத்தாலும்
எப்படியும் முகம்காட்டும் முழுதாய் அகத்தை…!

கிராமிய பாணியில்…

கண்ணாடி கண்ணாடி
மொகம்பாக்குங் கண்ணாடி,
முன்னவுள்ள எல்லாத்தயும்
முழுசாக்காட்டுங் கண்ணாடி…

இதப்போல,
மொகமும் ஒரு கண்ணாடி
முழுசாக்காட்டுங் கண்ணாடி,
மனசிலுள்ள எல்லாத்தயும்
தெளிவாக்காட்டுங் கண்ணாடி..

கண்ணாடி கண்ணாடி
மொகம்பாக்குங் கண்ணாடி…!

 

Share

Comments

2 responses to “குறளின் கதிர்களாய்…(45)”

  1. அமீர்

    இந்த வாரம் மரபுக்கவிதை  மிக அழகாய் சிறக்கிறது.

  2. Shenbaga Jagatheesan

    கருத்துரை வழங்கிச் சிறப்பித்த
    நண்பர் அமீர் அவர்களுக்கு,
    மிக்க நன்றி…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *