நாங்குநேரி வாசஶ்ரீ

நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 28 – கூடா ஒழுக்கம் 

குறள் 271:

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்

ஒழுக்கமானவன் போல ஊர ஏமாத்துத வஞ்சமனசுக்காரங்கள பாத்து அவங்க ஒடம்புல கலந்து இருக்க நிலம், நீர், காத்து, தீ,ஆகாயம் ங்குத அஞ்சு பூதங்களும் தங்களுக்குள்ள சிரிச்சிக்கிடும்.

குறள் 272:

வானுயர் தோற்றம் எவன்செய்யுந் தன்நெஞ்சத்
தானறி குற்றப் படின்

தன் மனசறிஞ்சு குற்றம் செய்யுதவனுக்கு அவனோட தவக்கோலம் என்ன பிரயோசனத்த கொடுக்க முடியும்?..

குறள் 273:

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று

மனச அடக்க முடியாதவன் போடுத துறவி வேசம், பசு புலியோட தோலப் போத்திக்கிட்டு பயிர மேயுததுக்கு சமானம்.

குறள் 274:

தவமறைந் தல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று

தவக்கோலத்துல இருக்கவங்க கெட்ட செயல செய்யுதது புதருக்கு பின்னால மறஞ்சு நின்னு பறவைய வலைவீசி பிடிக்குத வேட்டக்காரனுக்கு சமானம்.

குறள் 275:

பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்
றேதம் பலவுந் தரும்

எல்லாத்தையும் துறந்துட்டதா பொய் சொல்லி ஏமாத்துதவங்களுக்கு ஏன் அப்டி செஞ்சோம் ஏன் அப்டி செஞ்சோம் னு வருத்தப்படுத  மட்டுக்கு நெறய துன்பம் வந்து சேந்துக்கிடும்.

குறள் 276:

நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணா ரில்

மனசுக்குள்ள இருக்க ஆசய வெறுக்காம, வெறுத்தது போல நடிக்குத வஞ்சக மனுசங்கள மாதிரி இரக்கமில்லாதவங்க யாருமில்ல.

குறள் 277:

புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கிற் கரியா ருடைத்து

வெளில பாக்குததுக்கு குந்து மணி போல செவப்பா இருந்தாலும் அதோட மொனைல இருக்க கறுப்புபோல மனசுக்காரங்களும் ஒலகத்துல உண்டு

குறள் 278:

மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்

தண்ணிக்குள்ள முங்கினவங்க தன்னய மறச்சிக்கிடது போல மனசுக்குள்ள அழுக்க மறச்சிகிட்டு தவத்தால ஒசந்தது போல நடிக்கவங்க பலபேரு இந்த ஒலகத்துல இருக்காங்க.

குறள் 279:

கணைகொடியது யாழ்கோடு செவ்விதாங் கனை
வினைபடு பாலாற் கொளல்

நேரா இருக்க அம்பு கொல செய்ய ஒதவும்.  வளஞ்ச யாழ்கொம்பு நல்ல இசைய கொடுக்கும். அதுபோல மக்களையும் அவங்க உருவத்த பாக்காம செய்யுத செயல வச்சி எட போடணும்.

குறள் 280:

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின்

ஒலகம் பொல்லாப்புன்னு சொல்லுத கெட்ட செயல துறவி மனசார உட்டுட்டாம்னா மொட்டையடிக்குதது, சடா முடிவளக்குதது எல்லாம் செய்ய தேவையில்ல.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *