-திருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி

திருத்தொண்டர் புராணத்துக்குத், திருத்தொண்டத்  தொகை   முதல் நூல்; திருத்தொண்டர் திருவந்தாதி   வழிநூல்!  இவ்வாறு சேக்கிழார்    இறைத் தொண்டர்  பலரின் வரலாற்றைக் கூறினாலும் , சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளின்  வரலாற்றின்  வழியிலேயே  ஏனையோர் அருள்   வரலாறுகளையும் கூறுகிறார். அவ்வகையில் இந்நூலின் கதைத்தலைவர்  சுந்தரமூர்த்தியே ஆவார்! கைலையில்  தொடங்கித்  தென்னாட்டில்  தொடர்ந்து மீண்டும் கைலையிலேயே நிறைவுறும்  சுந்தரரின்  அருள்வரலாற்றின் இடையே  அறுபத்துமூவர் அருள்வரலாறும்   அமைந்துள்ளன!

அவ்வரலாறுகளில்  தம்  திருமுறைகளாகிய தோத்திரங்களால்  சமயத்தொண்டு   புரிந்த, தேவார மூவரின்  வாழ்க்கையுடன்  அவர்கள் அருளிய வாக்கினையும் அப்படியே எடுத்துக்கொண்டு  நூலியற்றும் சேக்கிழார் பெருமானின்  சிறப்பு  போற்றுதற்கு உரியது!   சுந்தரமூர்த்தி  சுவாமிகளின் முதல் திருப்பாடலை இந்நூலில்,  அப்பாடலின் யாப்புமுறையை  அப்படியே மேற்கொண்டு தம் புராணத்தில் அமைத்து விடுகிறார்! சுந்தரரை  அற்புதப் பழ ஆவணம் காட்டித்  தடுத்தாட்  கொண்டார்  பெருமான்! அவருடன் திருவெண்ணெய்  நல்லூர் திருக்கோயிலாகிய  திருவருட்டுறைக்குள்  சென்ற சுந்தரரை நோக்கி இறைவனே , ‘’ நம்மைப் பாடுவாய்!’’ என்று அருளினார்!

தம்மை அடிமுடி தேடி அலைந்த  திருமாலும் பிரமனும்  காணா  மலையாக உயர்ந்த இறைவனின்  திருப்பாதங்களில் தம் உள்ளத்தை ஊன்றிச் சிந்தித்து வணங்கினார் சுந்தரர்!   அவரை நமச்சிவாய   என்றும்,  சிவாயநம  என்றும் ஐந்தெழுத்து மந்திரத்தால் அனைவரும் வழிபட்டாலும் அந்த ஐந்தெழுத்தின் பொருளையும் பெருமையையுயும்  அளவிட்டுக் கூறுதல் எத்தகையோருக்கும்   அரிது!  அத்தகைய  பெருமானின்  திருப்பாதங்களைச்    சிந்தித்துத்  தம் கரங்களைக்  கூப்பி  நின்றார் சுந்தரர்!  

நம் நீண்ட வாழ்க்கையின் பயனாக  நாம் அடையும்  ஊதியம் யாது என்பதை யாவரும் அறிந்து கொள்ள வேண்டும். தம்மிடம் உள்ளவற்றை பிறருக்கு  ஈதலால்  இவ்வுலகில் புகழ் உண்டாகும். இவ்வாறு ஈந்து புகழ் பெற்றால் பிறவிப் பயனாகிய திருவடிப்பேறு  கிட்டும். இதனைத்  திருக்குறள்,

‘’ஈதல்  இசைபட வாழ்தல்  அதுவல்ல

ஊதியம்  இல்லை  உயிர்க்கு!’’

என்று கூறுகிறது! இத்தகைய  வாழ்க்கையின் ஊதியத்தை அறியாமல்  மையல் மானுடமாய்  மயங்கினார்  சுந்தரர்! அதனால், இறைவனிடம்  ‘’எளியேன்   முன்னே , ஒரு முதிய   வேதியனாக   எழுந்தருளி, வாழ்க்கைப்   பணியையும், அதன்  ஊதியத்தையும்  எளியேனுக்கு  உணர்த்தினாய்! குற்றமேதும்  அற்ற நற்பண்பே உருவமான தேவா! எளியேனைப் பாடு  என்றாயே,  நின் குணங்களாகிய பெருங்கடலை எவ்வாறு அறிந்துகொள்வது? அதன்  தனிச்   சிறப்புகளை  எவ்வாறு  ஆராய்ந்தறிந்து  கொள்வது?அவற்றை  எவ்வாறு, எதனைச்  சிறப்பித்துப் பாடுவது? ‘’

அதனைக் கேட்டருளிய  பெருமான், ‘’ முன்பு   அந்தணர்கள்  சூழ்ந்த அவையில் என்னைப் ‘’பித்தனோ? ‘’ என்றாயே!  இப்போது  பித்தன் என்றே என்னை  அழைத்துப்  பாடு!’’ என்றார். உடனே  அந்தத்  திருவார்த்தையையே  மந்திரமாகக்  கொண்டு சுந்தரர்  பாடத்  தொடங்கினார்.

கொத்துக்களால் ஆன  மலர்களை அணிந்து  கொண்டு , இறைவனின் இடப் பாகத்தில்  இணைந்து காட்சி தரும் அன்னை பார்வதியுடன் , நமக்குப்  பெற்ற தாயினும் இனியவர்  சிவபிரான்! என்பதை ,

‘’கொத்தார்  மலர்க்  குழலாள்  ஒரு கூறாய் அடியவர்பால்

மெய்த்தாயினும் இனியானை ‘’

என்று சேக்கிழார் பாடுகிறார்! இங்கே சுந்தரருக்குப்  பழைய நினைவு வருகிறது.

முன்பு கைலையில்  மலர்த்தொண்டு  புரிந்தமையும், அப்போது அன்னைக்கு அணுக்கராய்  விளங்கிய  பெண்டிர்  செய்த  தொண்டால், அன்னையின்  கூந்தலில்  மலர்க்கொத்துக்கள் அமைந்தமையும்  சுந்தரர் நினைவுக்கு  வருகின்றன. ஆதலால் அந்தத்  தாயினும் இனியானாகத்  தம்மைத்  தடுத்தாட்  கொண்ட பெருமானை , உலகெல்லாம்  போற்றத்தக்க  நாவலூரராகிய  சுந்தரர்,     ‘’பித்தா’’ என்றழைத்தார்! இச்சொல்  உலகியலில்  பெற்ற  மனம்  பித்து ,‘’பிள்ளை  மனம்  கல்லு ‘’  என்ற பழமொழியை நினைவூட்டுகிறது. அது கருதியே சேக்கிழார் ‘’ மெய்த் தாயினும் இனியானை ‘’ என்று இறைவனின் தாயுள்ளத்தை எண்ணிப் பாடுகிறார்! ‘பித்தா’ என்று தொடக்கிச்  சுந்தரர்  பாடிய திருப் பதிகம்,  மிகவும் பெரும் புகழ் பெற்றது!  

பண்ணிலக்கணம்  பதினொன்றில், மருதத்தின் வகையாகிய  இந்தளத்தில்  முறையான  தாளத்துடன்  ஒத்திசைய, இசையை  உலகிற்களித்த  இறைவன் மகிழும்படி , தமக்கு ஒப்பாரில்லாத  சுந்தரர் , ‘’பித்தா பிறைசூடி’’ எனத் தொடங்கிப்   பாடலுற்றார். இறைவர் பித்தனல்லர், அவர் பிறையின் குறையை நீக்கிச்  சூடியவர்! ஆகவே  சுந்தரரின்  குறையை நீக்கி  நிறைசெய்யும் தாய் போன்றவர் இறைவன் என்கிறார். இதனைச் சேக்கிழார் ,

‘’’கொத்தார் மலர்க் குழலாள் ஒரு கூறாய் அடியவர் பால்

  மெய்த் தாயினும் இனியானை ‘’

என்று பாடுகிறார். மேலும் பத்துப் பாடல்களைக் குறிக்கும்  இப்பதிகம்   பெரியபுராணத்தில் முதன்முதலாக  இடம் பெற்றது! இப்பதிகமுறையைத் தமிழில் முதன்முதலில்   அறிமுகப்  படுத்தியவர் , மூத்த திருப்பதிகம்  பாடிய  காரைக்கால்  அம்மையார் ஆவார்! அவர் பாடிய பண் இந்தளமாகும்; சுந்தரர் பாடிய பண்ணும் இந்தளமாகும்! ஆகவே இப்பதிகம்  சைவ உலகில் பெருமதிப்புப்  பெற்றதாயிற்று!   ஆகவே  இவ்வுலக மெல்லாம் சிவநெறியை உணர்ந்து  உய்வடைந்தது! இதனைச் சேக்கிழார்,

“பித்தா பிறை சூடி எனப் பெரிதாம் திருப் பதிகம்

இத்தாரணி முதலாம் உலகு எல்லாம் உய்ய எடுத்தார்.’’

என்று பாடினார்! இனி முழுப்பாடபாலையும்  பயில்வோம்!

‘’கொத்தார் மலர்க் குழலாள் ஒரு கூறாய் அடியவர் பால்

மெய்த் தாயினும் இனியானை அவ்வியன் நாவலர் பெருமான்

“பித்தா பிறை சூடி எனப் பெரிதாம் திருப் பதிகம்

இத்தாரணி முதலாம் உலகு எல்லாம் உய்ய எடுத்தார்.’’

இப்பாடலில்  இறைவனின் தாயினும் இனிய தன்மை, சுந்தரர் இயல் நாவலர் பெருமான் என்று போற்றப்பெற்ற  நிலை, உலகத்தார்  எல்லாருக்கும் இறை வழிபாட்டுக்கு உரிய சாதனத்தை அறிமுகப்படுத்திய அழகு ஆகியவை  நமக்குப்  புலப்படுகின்றன! இன்னும் இப்பாடலின் சிறப்பைச் சான்றோர்கள்  மேலும் விரிவாக உரைப்பர்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *