Tag: நாகேஸ்வரி அண்ணாமலை

  • இஸ்ரேல் பயணம் – 4

    நாகேஸ்வரி அண்ணாமலை

    அப்போது பாலஸ்தீனம் ஆட்டோமான் பேரரசின் அரசராகிய சுல்தான் ஆளுகையில் இருந்தது.  எப்படியாவது சுல்தானைச் சந்தித்து பாலஸ்தீனத்தில் யூதர்களைக் குடியேற்றுவதற்கு ஒரு ஒப்பந்தத்தை (charter) வாங்கிவிட வேண்டும் என்று ஹெர்ஸல் பல நடுவர்களின் வழி முயன்றார்.  ரஷ்யாவில் நிலைபெற்றிருந்த ரஷ்ய சனாதனக் கிறிஸ்துவ அமைப்பு (Russian Orthodox Church) ஒரு போதும் பாலஸ்தீனம் யூதர்கள் வசம் வருவதை அனுமதிக்கப் போவதில்லை என்பதால் ஹெர்ஸல், ரஷ்ய அதிபர் ஜாரின் (Czar) உதவியை நாடாமல் ஜெர்மன் அதிபர் மூலம் சுல்தானிடம் சம்மதம் பெற முயன்றார்.  அந்த முயற்சியும் வெற்றி பெறாததால் தானே சுல்தானைச் சந்தித்து ஆட்டோமான் பேரரசுக்கு இருந்த கடனைத் தீர்க்க உலகெங்கிலுமுள்ள பணம் படைத்த யூதர்கள் உதவுவார்கள் என்று கூறினார்.  ‘நாடு என்னுடையதல்ல.  அது மக்களுடையது’ என்று கூறி அந்தத் திட்டத்தை சுல்தான் ஏற்க மறுத்துவிட்டார்.  மேலும் யூதர்கள் ஆட்டோமான் பேரரசின் குடிமக்களாகி அதன் இராணுவத்தில் பணிபுரிந்தால் ஹெர்ஸலின் கோரிக்கையைப் பரிசீலிப்பதாகக் கூறினார்.

    இதை ஏற்க மறுத்த ஹெர்ஸல்  பின் பிரிட்டனின் பக்கம் திரும்பினார்.  பிரிட்டிஷ் அரசு ஆப்பிரிக்காவில் உள்ள கென்யாவில் (அப்போது கென்யா பிரிட்டனின் காலனியாக இருந்தது) ஒரு இடத்தை யூதர்களுக்கு ஒதுக்கித் தருவதாகக் கூறியது.  தங்களின் புனித இடமான பாலஸ்தீனத்தில்தான் தங்களுக்குத் தனி நாடு வேண்டும் என்று வற்புறுத்திக்கொண்டிருந்த யூதர்களுக்கு இது பிடிக்கவில்லை.  கடைசியாகப் பாலஸ்தீனத்திற்குப் போவதற்கு இது முதல் படி  என்று ஹெர்ஸல் கூறியதை  மற்ற யூதர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.   ஹெர்ஸல் இத்தாலிய அரசரையும்  போப்பையும் சந்தித்து இது  பற்றிக் கேட்டபோது, யூதர்கள் கிறிஸ்துவ மதத்தைத் தழுவினாலொழிய அவர்கள் பாலஸ்தீனத்திற்குத் திரும்புவதைத் தன்னால் ஆதரிக்க முடியாது என்று போப் கூறிவிட்டார்.  தன் கனவு பலிக்காமலே 1904-இல் ஹெர்ஸல் இறந்துவிட்டார்.  நாற்பத்தைந்து வருடங்களுக்குப் பிறகு (இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்ட பிறகு) அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், வியன்னாவில் அவர் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து அவருடைய உடலை இஸ்ரேலுக்குக் கொண்டுவந்து இஸ்ரேலில் உள்ள ஜெருசலேமிற்கு மேற்குப் பகுதியில் இருந்த குன்றில் புதைத்து அந்தக் குன்றிற்கு ஹெர்ஸல் குன்று என்று பெயரிட்டனர்.  யுத்தத்தில் இறந்த வீரர்களைப் புதைக்கும் இடமாக அது இப்போது விளங்குகிறது.

    பல யூதர்களின் மனதில் கடவுளால் தங்களுக்கு அளிக்கப்பட்ட இடமான பாலஸ்தீனம் தேனும் பாலும் பாயும் இடம் என்ற எண்ணத்தை உண்டுபண்ணியிருந்தது.  ஆனால்  பாலஸ்தீன் கரடு முரடான, மலைகளும் பாலைவனமும் நிறைந்த இடம்.  இது 1517-லிருந்து ஆட்டொமான் பேரரசின் கீழ் இருந்தது.  மத்தியதரைக் கடலின் கிழக்குப் பகுதியில் இருந்த இதில் யூதர்களும் பாலஸ்தீன அரேபியர்களும் அடுத்தடுத்து வாழ்ந்து வந்தனர்.  1897-இல் முதல் யூத மாநாடு நடந்த போது இங்கு 50,000 யூதர்களும் 4,00,000 அரேபியர்களும் இருந்தனர்.  இங்கிருந்த யூதர்களில் பலர் ஐரோப்பாவில் வாழ்ந்து வந்த வசதிபடைத்த யூதர்கள் நன்கொடையாக அளித்த பணத்தால் எப்படியோ வாழ்க்கையை ஒட்டிக்கொண்டிருந்தனர்.  பின்னால் வெளியிலிருந்து பாலஸ்தீனத்திற்கு வந்த யூதர்கள் தங்கள் புண்ணிய பூமியில் தங்கள் இறைவனை வணங்குவதற்காகவும், முடிந்தால் அந்த மண்ணிலேயே இறந்து புதைக்கப்படுவதற்காகவும் பணத்தோடு வந்தனர்.  பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியிலும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் பாலஸ்தீனத்திற்கு வந்தவர்களோ அவர்கள் வாழ்ந்த நாடுகளில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு அஞ்சி ஓடி வந்தவர்கள்.

    ஹெர்ஸல் யூதர்களின் தேசம் நிறுவப்படுவதற்குப் போராடிக்கொண்டிருக்கும்போதே பல நாடுகளிலிருந்தும் யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடியேறிக்கொண்டிருந்தனர்; பல ஸ்தாபனங்களையும் நிறுவிக்கொண்டிருந்தனர்.  பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் ஜெருசலேமில் 10,000 யூதர்கள் வசித்துவந்தனர்.  1870-இல் போலந்து, லித்துவேனியாவிருந்து வந்தவர்கள் சாஃபேட் (Safed), அக்ரே (Acre), ஜாஃபா (Jaffa) ஆகிய இடங்களில் குடியேறினர்.  ஆட்டோமான் அரசின் ஒப்புதலோடு பிரான்ஸிலிருந்து வந்த ஒரு யூதக் கல்வியாளர் மிக்வா இஸ்ரேல் என்னும் இடத்தில் ஒரு விவசாயப் பள்ளியை நிறுவினார்.  ரஷ்யப் படுகொலையிலிருந்து தப்பித்து வந்த யூதர்கள் விவசாயக் குடியிருப்புகளையும் கிராமங்களையும் நிறுவினர்; பின்னால் பல பள்ளிகளை நிறுவினர்.  இப்படியாக, பல இடங்களிலிருந்து வந்த யூதர்கள் தங்களுக்கென்று பல ஸ்தாபனங்களை நிறுவிக்கொண்டனர்.  இந்த ஸ்தாபனங்களுக்குத் தேவைப்பட்ட இடங்களை பாலஸ்தீனத்திலிருந்த அரேபியர்களிடமிருந்தும் துருக்கியர்களிடமிருந்தும் (துருக்கி ஆட்டோமான் பேரரசின் மையப் பகுதி) வாங்கினார்கள்.  ஹீப்ரு மொழிப் பள்ளி ஒன்று தொடங்கப்பட்டது.  யூதர்களின் முதல் மருத்துவமனை அரேபியர்களின் துறைமுகமான ஹைபாவில் ஜெர்மனியிலிருந்து பாலஸ்தீனத்திற்குக் குடிபெயர்ந்த ஒரு மருத்துவரால் 1911-இல் ஆரம்பிக்கப்பட்டது.  1912-இல் அமெரிக்கப் பெண்கள் யூத அமைப்பு (American Jewish Women’s Organization), தன் இரு அங்கத்தினர்களை ஜெருசலேமில் ஒரு கிளினிக் ஆரம்பிக்க அனுப்பியது.  அமெரிக்க யூதர் ஒருவர் ஜெருசலேமில் ஒரு மருத்துவமனையை நிறுவப் பணம் கொடுத்தார்.  (1948-இல் இஸ்ரேல் நாடு உருவாக்கப்படும் வரை அமெரிக்காவில் குடியேறியிருந்த பணக்கார யூதர்கள் பாலஸ்தீன யூதர்களுக்கு நிறையப் பண உதவி செய்துகொண்டிருந்தனர்.  ஆனால் இஸ்ரேல் உருவாகி அரை மணி நேரத்திலேயே அமெரிக்கா அதற்கு அங்கீகாரம் அளித்தது.  அதன் பிறகு அமெரிக்க அரசின் பணமும் – அங்குள்ள யூதர்களின் கட்டாயத்தினால் – இஸ்ரேலுக்குக் கிடைக்கத் தொடங்கியது.  இப்போதும் அமெரிக்காவின் ஆதரவும் பண உதவியும் இருப்பதால்தான் இஸ்ரேல் பலம் பெற்று விளங்குகிறது.) 1913-இல் பெண்களுக்கான விவசாயப் பண்ணை தொடங்கப்பட்டது.  1919-இல் ஹீப்ரு பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.  இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் யூதர்களின் தேசிய நிதி (Jewish National Fund) ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டது.  இந்த நிதியிலிருந்து பல ஸ்தாபனங்களுக்கு நிதியுதவி கொடுக்கப்பட்டது.

    இந்த நிதியிலிருந்து 43 குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்டன.  அப்போது யூதர்கள் விவசாயிகளாகவும்  விவசாயப் பண்ணைகளில் வேலைபார்ப்பவர்களாகவும் இருந்தனர்.  சிலர் தொழில் வல்லுநர்களாகவும் கடைச்  சொந்தக்காரர்களாவும் இருந்தனர்.  இந்தச் சமயத்தில் பாலஸ்தீனத்தில் யூதர்களின் எண்ணிக்கை 90,000-ஆகப் பெருகியிருந்தது.  யூதர்களின் வரவால் அவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும், தங்கள் நலனைக் காத்துக்கொள்ள பாலஸ்தீனத்திலிருந்த அரேபியர்கள் ஆட்டோமான் அரசியலில் பங்கு பெறத் தொடங்கினர்.  ஜெருசலேமைச் சேர்ந்த இரண்டு அரேபியர்கள் கான்ஸ்டாண்டினோபிளில் இருந்த ஆட்டோமான் பார்லிமெண்டிற்குத் தேர்தெடுக்கப்பட்டனர்.  ஆட்டோமான் அரசும் யூதர்கள் பாலஸ்தீனத்திற்குள் வருவதைத் தடுக்கப் பல நடவடிக்கைகள் எடுத்தது.  முதல் உலகப் போர் 1914-இல் ஆரம்பித்ததும், பிரான்ஸ், பிரிட்டனுடன் ரஷ்யாவும் ஆட்டோமான் அரசின் எதிரி ஆயிற்று.  பாலஸ்தீனத்தில் அப்போதிருந்த யூதர்களில் பலர் ரஷ்யாவிலிருந்து வந்தவர்களாகையால், ஆட்டோமான் அரசு அவர்களின் மீது வெறுப்பைக் காட்டி அடக்குமுறையையும் அவிழ்த்துவிட்டது.  இதனால் பல யூதர்கள் பக்கத்து நாடான எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில் தஞ்சம் புகுந்தனர்.

    யூத சமுதாய நிறுவன இயக்கத்தில்  (Zionist Movement) சம்பந்தப்பட்டிருந்தவர்களை ஆட்டோமான் அரசு நாடு கடத்தியது.  இதனால் தாங்கள் பாதிக்கப்படுவோம் என்று பயந்த ஜாஃபாவைச் சேர்ந்த யூதர்கள் தங்களுக்குள் ஒரு படையை நிறுவி நேசநாடுகளோடு (பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா) சேர்ந்து போர்புரியத் தயாராகினர்.  ஆட்டோமான் அரசுக்கு எதிராகப் போரிட்டால் தங்களுடைய கோரிக்கையான பாலஸ்தீன நாட்டைத் தங்களுக்கு நேசநாடுகள் உருவாக்கிக் கொடுப்பார்கள் என்று அவர்கள் நம்பினர்.

    துருக்கியைத் தோற்கடித்து  மத்திய கிழக்கில் தன் அதிகாரத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற பிரிட்டனின் சுயநலமும்  இதற்கு ஒத்துப் போகவே, பாலஸ்தீன யூதர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க பிரிட்டிஷ் வெளிநாட்டு மந்திரி லார்ட் ஆர்த்தர் ஜேம்ஸ் பேல்ஃபர் (Lord Arthur James Balfour), இங்கிலாந்திலுள்ள யூதர்களின் தலைவரான லார்ட் வால்டர் ராத்சைல்ட்க்கு (Lord Walter Rothschild) 1917 நவம்பர் 2-இல் எழுதிய கடிதத்தில் பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கு ஒரு தனி நாடு அமைக்க பிரிட்டன் உதவும் என்று கூறினார்.  அப்படி நாடு அமைக்கும் பட்சத்தில் அங்கேயே இருக்கும் யூதரல்லாத மற்றவர்களின் உரிமைகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ளப்படும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.  இது பேல்ஃபர் அறிக்கை (Balfour declaration) எனப்படும். இருபது ஆண்டுகளுக்கு முன் ஹெர்ஸல் ஆட்டோமான் சுல்தான்களிடமிருந்து இம்மாதிரியான ஒரு ஒப்பந்தத்தைப் பெற முயன்று அதில் தோல்வி கண்டிருந்தார்.  பேல்ஃபர் அறிக்கை, அப்போது பலம் மிகுந்த நாடாக விளங்கிய பிரிட்டனிடமிருந்து வந்ததால் முக்கியம் வாய்ந்ததாக யூதர்களால் கருதப்பட்டது.

    இந்த பேல்ஃபர் அறிக்கையின் முக்கிய காரணகர்த்தா செயிம் வெயிஸ்மேன் (Chaim Weizmann).  (இவர் பின்னால் இஸ்ரேலின் முதல் ஜனாதிபதியானார்.)  முதல் உலக யுத்தத்தின்போது ஆயுதங்கள் தயாரிக்கத் தேவையான அசிடோன் (acetone) என்னும் பொருளை ஜெர்மனி கையகப்படுத்திக்கொண்டதால் பிரிட்டனால் ஆயுதங்கள் தயாரிக்க முடியாமல் இருந்தது.  செயிம் வெயிஸ்மேன் என்பவர் ஒரு விஞ்ஞானி என்பதோடு பிரிட்டனில் வாழ்ந்த யூதர்களின் தலைவரும் கூட.  இவருக்கு ஹெர்பெர்ட் சாமுவேல் என்னும் யூத பார்லிமெண்ட் அங்கத்தினர் ஒருவர் நண்பர்.  வெயிஸ்மேன் அசிடோன் தயாரிக்கும் முறையைக் கண்டுபிடித்தது பிரிட்டனுக்கு மிகவும் உதவியாக இருந்தது.  அதோடு யூதர்களுக்கு ஒரு சொந்த நாட்டை உருவாக்கினால், அமெரிக்காவிலுள்ள யூதர்கள் அமெரிக்காவை முதல் உலக யுத்தத்தில் கலந்துகொள்ளத் தூண்டுவார்கள் என்றும் பிரிட்டன் கணக்குப் போட்டது.  அதோடு, ரஷ்ய யூதர்கள் ரஷ்யாவில் புரட்சி நடத்தி வந்த போல்ஷிவிக் கட்சியோடு அதிகத் தொடர்பு வைத்துக்கொள்ள மாட்டார்கள் என்றும் அதனால் தொடர்ந்து ரஷ்யா பிரான்ஸோடும் பிரிட்டனோடும் சேர்ந்து முதல் உலக யுத்தத்தில் ஈடுபடும் என்றும் நினைத்தனர்.  இதையெல்லாம் விட இன்னொரு முக்கிய காரணம் யூத இனம், பழைய கிரேக்க இனத்திற்குப் பிறகு தோன்றிய சிறந்த இனம் என்றும், அவர்களுக்கென்று சொந்த நாடு அமைத்துக்கொடுக்க வேண்டும் என்றும் அதுவும் பிரிட்டன் அதைச் செய்ய வேண்டும் என்றும் பேல்ஃபரே விரும்பினார் என்பது.

    வெயிஸ்மேன் ரஷ்யாவில் 1874-இல் பிறந்தவர்.  பள்ளிப்படிப்பை முடித்த பிறகு வேதியலில்  மேற்படிப்புப் படிப்பதற்காக ஜெர்மனி சென்றார்.  அங்கிருந்து  இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர்  பல்கலைக்கழகத்தில் வேதியல்  பேரசிரியராக வேலை கிடைத்து, இங்கிலாந்து வந்து அங்கேயே குடியுரிமை பெற்றார்.  இவர் இரண்டு முறை உலக யூதர்களின் அமைப்பிற்குத் தலைவராக (1920-1931, 1935-1946) இருந்திருக்கிறார்.

    பேல்ஃபர் அறிக்கை  வெளிவந்தபோது 90,000 யூதர்களும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட அரேபியர்களும் பாலஸ்தீனத்தில் வாழ்ந்து வந்தனர்.  அதாவது ஜனத்தொகையில் 87 சதவிகிதம் அரேபியர்கள்.  பாலஸ்தீனத்திலும் அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் வாழ்ந்த யூதர்களுக்கு பேல்ஃபர் அறிக்கை பெரிய வெற்றியாகத் தோன்றியது.  ஆனால் பல பாலஸ்தீன அரேபியர்களுக்கு தங்கள் நாட்டை யூதர்களோடு பங்கு போடுவது பிடிக்கவில்லை.  சுற்றியிருந்த அரபு நாடுகளுக்கும் தங்களுக்கிடையில் யூத நாடு உருவாவது பிடிக்கவில்லை.

    1918-இல் பிரிட்டிஷ்  படை ஆட்டோமான் அரசின்  கீழ் இருந்த பாலஸ்தீனத்தை  வென்று ஜெருசலேமிற்குள் புகுந்தது.  பாலஸ்தீனம் முழுவதும் பிரிட்டனின் கைக்கு வந்தது.  இதோடு பாலஸ்தீனத்தில் அது வரை இருந்த ஆட்டோமான் ஆட்சி முடிவிற்கு வந்தது.  பாலஸ்தீனம் பிரிட்டனின் அதிகாரத்தின் கீழே வந்ததும், யூதர்கள் அங்கு சிறுபான்மையினராக இருந்தபோதிலும், ஜெருசலேம் நிர்வாகத்தில் தங்களுக்கு அரேபியர்களோடு சம உரிமை வேண்டுமென்றும், ஒரு யூதர் ஜெருசலேம் மேயராக நியமிக்கப்பட வேண்டும் என்றும் அரசாங்க அலுவல்களில் ஹீப்ருவுக்கும் அரேபிய மொழியோடு சம அந்தஸ்து வேண்டும் என்றும் கோரினர்.  (பாலஸ்தீனத்தில் உள்ள ஒரு பழமையான நகரம் ஜெருசலேம்.  இங்குள்ள யூதக் கோயிலில் இருந்த குருமார்களும் செல்வந்தர்களும் ஏழைகளுக்கு எதிராகச் செய்த கொடுமைகளைத் தட்டிக் கேட்ட இயேசுவை இங்குதான் சிலுவையில் அறைந்தார்கள்.)  இந்த உரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்பட்டாலும், தங்களுக்கு எப்படியும் பிரிட்டன் தனி நாடு அமைத்துக் கொடுக்கும் என்று யூதர்கள் நம்பினர்.  இதற்குப் பிறகு ரஷ்யாவிலிருந்தும் போலந்திலிருந்தும் பல யூதர்கள் பாலஸ்தீனத்திற்கு வந்தனர்.  இப்படி வந்தவர்கள் சாலைகள் அமைப்பது, சதுப்பு நிலங்களைச் சுத்தப்படுத்துவது போன்ற வேலைகளைச் செய்ததோடு தற்காலிகக் கூடாரங்களில் வசித்துக்கொண்டு, தங்கள் வருமானத்தை எல்லாம் ஒரு மத்திய கமிட்டிக்கு அனுப்பினர்.  இந்தச் சமயத்தில்தான் ஹீப்ரு மொழியை வளர்ப்பதிலும் இவர்கள் ஆர்வம் காட்டி, அம்மொழியில் நிறைய கவிதைகள் இயற்றினர்.  மதச் சடங்குகளில் மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டு வந்த ஹீப்ரு மொழி அன்றாட வாழ்க்கையிலும் பயன்படுத்தப்பட்டு வளரத் தொடங்கியது.  அதன் பிறகு அது வாழும் மொழியாக புனர்ஜென்மம் எடுத்தது.  .

    படங்களுக்கு நன்றி:

    http://wis-wander.weizmann.ac.il/chaim-weizmann#.UOVSXqxa6RM

    Share
  • இஸ்ரேல் பயணம் – பகுதி (3 )

    நாகேஸ்வரி அண்ணாமலை

    யூதர்களுக்குத் தனி  நாடு வேண்டும் என்று எண்ணியவர்களில் யெஹுதா ஹை அல்கலை (Yehuda hai Alkalai) என்பவரும் ஒருவர்.  இவர் 1798-இல் போஸ்னியாவில் உள்ள சரஜெவோவில் (Sarajevo) யூத மத போதகர் ஒருவரின் (Rabbi) மகனாகப் பிறந்தார்.  சிறு வயதில் பாலஸ்தீனத்தில் வளர்ந்தபோது (யூத மதக் கல்வியைக் கற்றுக்கொள்ளும் பொருட்டு யூதர்கள் பாலஸ்தீனத்திற்கு வந்துகொண்டிருந்தனர்) யூத மத போதகர்களின் கருத்துக்களின் தாக்கத்திற்கு உள்ளானார்.  1825-இல் செர்பியாவில் யூத மத போதகராக வேலைபார்த்தார்.  1834-இல் இவர் எழுதிய புத்தகத்தில், அதுவரை யூத மதத்தினர் கடவுளின் தூதர் தங்களை வந்து தங்களுடைய புண்ணிய தலத்திற்கு அழைத்துச் செல்வார் என்று எண்ணியிருந்ததற்கு மாறாக இவர் பாலஸ்தீனத்தில் யூதர்களின் குடியிருப்புகளை அமைக்க வேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்தார்.  1840-இல் சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸில் (அப்போது அது ஆட்டொமான் பேரரசில் இருந்தது.  பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை ஆட்சி நடத்திய ஆட்டோமான் பேரரசு இப்போதைய துருக்கி, சிரியா, லெபனான், ஈராக், இஸ்ரேல், பாலஸ்தீனம், எகிப்து, யேமென் ஆகிய நாடுகளை உள்ளடக்கியிருந்தது). குழந்தைகளின் இரத்தத்தை மதச் சடங்குகளுக்கு உபயோகிக்கிறார்கள் என்று யூதர்களின் மீது குற்றம் சுமத்தப்பட்ட போது தங்களுக்கென்று ஒரு சொந்த நாடு வேண்டும், அங்குதான் அவர்களுக்குப் பாதுகாப்பு என்ற முடிவிற்கு வந்து, யூதர்கள் தங்களுடைய மீட்சிப் பணியில் தாங்களே ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்திப் பல சிறிய புத்தகங்களும் அறிக்கைகளும் வெளியிட்டார்.  கடவுளின் தூதர் வருவதற்கு முன்பே யூதர்கள் தங்கள் புனித நாட்டில் வாழ்ந்து அவரை வரவேற்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.  தூதரை அனுப்பிவைப்பது இறைவனின் செயல் என்றாலும், மனிதர்களின் உழைப்பும் விடாமுயற்சியும் தேவை என்று எடுத்துரைத்தார்.  ஹீப்ரூ ஒரு புனித மொழி, அதை மதச் சடங்குகளுக்கு மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும் என்று மதபோதகர்களிடையே நிலவி வந்த எண்ணத்தையும் மாற்றினார்.  பல நாடுகளில் பல மொழிகள் பேசி வந்த யூதர்கள் எல்லோரும் ஒன்றுபட வேண்டுமென்றால் எல்லோரும் ஹீப்ரூ மொழியைக் கற்க வேண்டும் என்றும் அது தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தபட வேண்டும் என்றும் கூறினார்.  யூதர்களின் மீட்சி நிறைவுற வேண்டுமென்றால் எல்லா நாட்டிலுள்ள யூதர்களும் தங்களுக்குள் தலைவர்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, தாங்கள் வாழ்ந்து வரும் நாடுகளை விட்டு வந்து, புனித நாட்டில் குடியேற வேண்டும்; அங்கு இந்தத் தலைவர்கள் மூலம் தங்களைத் தாங்களே ஆண்டுகொள்ள வேண்டும் என்று போதித்தார்.

    பாலஸ்தீனத்தில் யூதர்  தேசிய இனத்தை நிறுவுவதற்கான  இந்த இயக்கம்தான் ஆங்கிலத்தில் ஸயோனிஸம் (Zionism) என்று அழைக்கப்படுகிறது.   இதைத் தமிழில் யூத இனவாதம் எனலாம்.  இந்த இனவாதத்திற்கு ஒரு தனி நாடு வேண்டும் என்பதே கோரிக்கை.

    இவரையடுத்து போலந்து  நாட்டில் மத போதகராக இருந்த ஸ்வி ஹிர்ஷ் கலிச்செர் (Zwi Hirsch Kalischer) பாலஸ்தீனத்தில் யூதர்கள் குடியேற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.  யூதர்களின் மீட்சி திடீரென்று நிகழக் கூடிய தெய்வீக அற்புதம் அல்லவென்றும், கொடைப் பண்பு உடையவர்களின் ஆதரவாலும் உலகின் எல்லா நாடுகளிலுமுள்ள எல்லா யூதர்களும் தங்கள் புனித நாட்டில் சேருவதை ஆதரிப்பதாலும் மட்டுமே நிகழக் கூடியது என்றும் கூறினார்.  யூதர்களின் புனித இடமான பாலஸ்தீனத்தில் யூதர்கள் குடியேறி அங்கு விளைநிலங்களையும் முந்திரித் தோட்டங்களையும் விலைக்கு வாங்கி அவற்றில் பயிரிடுவதின் மூலம் அங்கு ஏற்கனவே வாழ்ந்துவரும், ஏழ்மையில் வாழும் யூதர்களுக்கு உதவ வேண்டும் என்றார்.  யூதர்கள் ஒரு தனி நாட்டில் கூடி வாழ வேண்டும் என்பதும், அந்தத் தனி நாடு யூதர்கள் தங்கள் புனித இடமாகக் கருதும் பாலஸ்தீனமாக இருக்க வேண்டும் என்பதும் இவருடைய அடிப்படைக் கொள்கை.

    இவரை அடுத்து யூதர்களுக்குத் தனி நாடு அமைப்பதில் தீவிரமாக இருந்தவர் லேட்வியாவில் 1865-இல் பிறந்த ஆபிரகாம் ஐஸக் குக் (Abraham Isaac Kook) என்பவர்.  பாலஸ்தீனத்தை விட்டுச் சென்ற யூதர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் யூத மதத்தைக் கடைப்பிடித்து வந்தாலும், தங்கள் புனித இடமான பாலஸ்தீனத்தில் வாழ்ந்தால்தான் யூத மதத்திற்கே உரிய சிறப்புத் தன்மையை இழக்காமல் இருக்க முடியும் என்றும், அதற்குப் பாலஸ்தீனத்தில் அவர்களுக்கென்று ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என்றும் கூறினார்.  இப்படி உருவாக்கப்படும் நாட்டில்தான் யூதர்கள் தங்களுடைய பழைய கலாச்சார, மதக் கோட்பாடுகளை முழுமையாகக் கடைப்பிடிக்க முடியும் என்றும் இவர் அறிவுறுத்தினார்.

    இவர்களுக்குப் பின்னால் வந்த மதச்சார்பற்ற யூதர்களும், யூதர்கள் ஒரு இனம் என்ற அடிப்படையில், யூதர்களுக்கென்று தனி நாடு வேண்டும் என்பதில் குறியாக இருந்தனர்.  எல்லா யூதர்களும் பாலஸ்தீனத்தில் கூடி வாழ முடியவில்லையென்றாலும், யூதர்களுக்கென்று இருக்கும் நாட்டில் அங்கு போக விரும்புபவர்கள் போவதற்கு வசதியாக ஒரு நாடு வேண்டும் என்று நினைத்தனர்.  (இப்போதும் அமெரிக்காவில் குடியேறிருக்கும் யூதர்கள் தங்கள் வாழ்க்கையில் அடிக்கடி அங்கு போய்வர வேண்டும் என்று நினைக்கின்றனர்.  (நான் முன்னால் குறிப்பிட்ட எங்கள் அமெரிக்க யூத நண்பர் ‘வருடத்திற்கு ஒரு முறையாவது நான் அங்கு போக விரும்புகிறேன்.  அப்படிப் போகவில்லையென்றால் ஏதோ ஒரு குற்ற உணர்வு எனக்குள் ஏற்படுகிறது’ என்பார்.  இன்னொரு நண்பர் யூத மதத்தின் வாழ்க்கைச் சட்டங்களைக் (Jewish law) கற்றுக்கொள்ள ஜெருசலேமிற்குப் போய்வந்தார்.)

    மதச்சார்பற்ற யூத  தேசிய இனத்தை நிறுவுவதற்கான  இயக்கத்தை ஆரம்பித்தவர்களுள்  தியோடர் ஹெர்ஸல் (Theodor Herzl) என்பவர் முதன்மையானவர்.  1860-இல் ஹங்கேரியிலுள்ள புடாபெஸ்ட் என்னும் ஊரில் பெரிய செல்வந்தரின் மகனாகப் பிறந்த இவர், புடாபெஸ்ட்டில் பள்ளிப் படிப்பை முடித்துக்கொண்டு வியன்னாவிற்குச் சென்று அங்குள்ள பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.  பின் ஆஸ்ட்ரியாவின் பத்திரிக்கை ஒன்றிற்கு பாரீஸ் செய்தியாளராக வேலைபார்த்தபோது ஆல்ப்ரெட் ட்ரைஃபஸ் (Alfred Dreyfus) என்னும் பிரெஞ்சு நாட்டு யூதருக்கு இழைக்கப்பட்ட ஒரு அநீதி ஹெர்ஸலின் வாழ்க்கையையே முற்றிலும் மாற்றிவிட்டது.  ட்ரைஃபஸ் பிரெஞ்சு ராணுவத்தில் வேலைபார்த்தபோது ஜெர்மனிக்காக உளவுபார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, ராணுவ மரியாதை எல்லாம் பறிக்கப்பட்டு, ஒரு தீவில் சிறைவைக்கப்பட்டார்.  ஏற்கனவே யூத எதிர்ப்பை தன்னுடைய வாழ்க்கையில் அனுபவித்திருந்தாலும், அது ஒரு தனி மனிதனுடைய வாழ்க்கை அனுபவம் என்று நினைத்திருந்த ஹெர்ஸல், இப்போது யூதர் என்பதற்காக ட்ரைஃபஸுக்கு அந்த அநீதி இழைக்கப்பட்டதாக உணர்ந்தார்.  அன்றிலிருந்து யூத எதிர்ப்பு என்பது மத எதிர்ப்பு மட்டுமல்ல, இன எதிர்ப்பும் என்றும் நினைத்தார்.  அதிலும் நவீன, கலாச்சார மேம்பாடுடைய, நாகரீகம் மிகுந்த பிரான்ஸில் அந்தச் சம்பவம் நடந்தது அவரை மிகவும் பாதித்தது.

    ஹெர்ஸலுக்கு முன்பே பல யூதர்கள் தங்களுடைய இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முயன்றிருந்த போதிலும், இவர் அதற்கான காரியங்களில் ஈடுபடத் தொடங்கினார்.  பெல்ஜியத்தில் உள்ள ஒரு பெரிய பணக்கார யூதரை தனக்கு உதவ அணுகினார்.  அவர் நிறையப் பணம் செலவழித்து சில யூதர்களை அர்ஜெண்டைனாவில் குடியேற்றியிருந்தார்.  ‘யூதர்கள் விவசாயத்தில் சிறந்தவர்கள்; அவர்கள் அங்கு அதில் சிறந்து விளங்கினால் ரஷ்யாவிற்குக் கூட அவர்கள் குடிபெயரலாம்; அவர்களை எல்லோரும் விரும்பி ஏற்றுக்கொள்வார்கள; இப்போதே அவர்களை முன்னுக்குத் தள்ளுவது அவ்வளவு சரியல்ல’ என்று அவர் கூறிவிட்டார்.  இன்னும் சில பணக்கார யூதர்களும் இதே மாதிரி ஹெர்ஸலுக்கு உதவ ஆர்வம் காட்டாததால், பல நாடுகளில் வசிக்கும் யூதர்களையெல்லாம் ஒன்றுகூட்ட ஒரு மாநாடு நடத்துவதென்று முடிவுசெய்து, 1897-இல் ஸ்விட்சர்லாந்திலுள்ள பேஸல் (Basle) என்னும் ஊரில் ஒரு மாநாட்டைக் கூட்டினார்.  இதற்கு இருபத்து நான்கு நாடுகளிலிருந்து ஆண்களும் பெண்களுமாக இருநூறுக்கும் மேற்பட்ட யூதர்கள் வந்திருந்தனர்.  யூத நாடு அமைப்பதன் மூலம்தான் யூதர் இனத்தையும் அவர்களின் மதத்தையும் எதிர்காலத்தில் காப்பாற்ற முடியும் என்று அந்த மாநாட்டில் அறிவுறுத்தப்பட்டது.  அதன் பிறகு நடந்த மாநாடுகளில் நிறையப் பேர் அவருடைய இயக்கத்தில் அங்கத்தினர்களாகச் சேர்ந்தனர்.

    Share
  • அமெரிக்காவின் வெட்கக்கேடு

    நாகேஸ்வரி அண்ணாமலை

    டிசம்பர் ஏழாம் தேதி வெள்ளிக்கிழமை  அமெரிக்காவின் கனெக்டிக்கட் மாநிலத்தில் உள்ள நியுடவுன்  என்னும் ஊரில் உள்ள சேண்டி ஹுக் பள்ளிக்கு அன்று சோக  தினமாக விடிந்தது.  அன்று  இருபது வயதுப் பையன் ஒருவன் பள்ளி ஆரம்பித்து, கதவுகள் எல்லாம் மூடப்பட்ட பின் ஜன்னலை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து ஒன்றாம் வகுப்புக் குழந்தைகள் இருபது பேரையும் பள்ளித் தலைமை ஆசிரியையும் பள்ளிச் சிறுவர்களுடைய மனநல ஆலோசகரையும் மற்றும் நான்கு பேரையும் சுட்டுக் கொன்ற சம்பவம் அமெரிக்காவை மட்டுமல்ல உலகையே உலுக்கியிருக்கிறது; சிந்திக்க வைத்திருக்கிறது.


    கடந்த வெள்ளியன்று  நடந்த இந்தச் சம்பவம் பற்றித்தான் இன்னும் பத்திரிக்கைகளும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் வானொலியும் பேசிக்கொண்டிருக்கின்றன.  இந்த நிகழ்ச்சி பற்றிப் பள்ளியில் நிகழ்த்திய இரங்கல் உரையில் ஜனாதிபதி ஒபாமா தன்னுடைய பதவிக் காலத்தில் ஐந்து முறை இம்மாதிரி வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாகவும் இதை இனியும் இப்படியே விடக் கூடாது என்றும் எல்லாத் தரப்பினரும் ஒன்று கூடி இதற்குத் தீர்வு காண வேண்டும் என்றும் கூறினார்.  அமெரிக்காவில் யாரும் துப்பாக்கி வைத்துக்கொள்ளலாம் என்னும் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்பதைப் பூடகமாகக் கூறினார்.  (பல முறை கண்ணில் வழிந்த நீரைத் துடைத்துக்கொண்டார்.)

    மிகச் சக்தி வாய்ந்த (assault weapons)  துப்பாக்கிகளை – ராணுவத்தினர் உபயோகப்படுத்தும் துப்பாக்கிகள் – குடிமக்கள் வைத்திருப்பதற்கு தடைச் சட்டம் ஜனாதிபதி கிளிண்டன் காலத்தில் 1994-இல் கொண்டுவரப்பட்டது.  ஆனால் அதன் ஆயுள் பத்து வருடங்கள்தான்.  (அமெரிக்காவில் இப்படித்தான் பல சட்டங்களுக்கு நிரந்தர ஆயுள் கிடையாது.  சில வருடங்கள் அது அமுலில் இருக்கும்.  அதன் பிறகு மறுபடி அதன் தலைவிதியை நிர்ணயிப்பார்கள்.)  மறுபடி 2004-இல் பரிசீலனைக்கு வர வேண்டியிருந்த தருணத்தில் இதை யாரும் கண்டுகொள்ளவில்லை.  அது அப்படியே கிடப்பில் போடப்பட்டது.  இப்போது இந்தச் சம்பவத்திற்குப் பிறகு கலிபோர்னியாவைச் சேர்ந்த காங்கிரஸ் பிரதிநிதி ஒருவர் இதை மறுபடி சட்டமாக்க முயலப் போவதாகக் கூறியிருக்கிறார்.

    இப்போதைக்கு இந்த வகைத்  துப்பாக்கிகளை வாங்குவதற்கு சில மாநிலங்களில் தவிர யாரும் வாங்க எந்தத் தடையும் இல்லை. சில மாநிலங்களில் மட்டும் வாங்குபவரின் பின்னணியைப் பரிசோதித்தப் பிறகு வாங்குவதற்கு அரசு உரிமம் வழங்கும்.  இந்த வகைத் துப்பாக்கியையும் இன்னும் இரண்டு கைத்துப்பாக்கிகளையும் சுட்டவன் பள்ளிக்கு எடுத்து வந்திருக்கிறான்.  அவை எல்லாம் அவன் தாய் தகுந்த உரிமம் பெற்று வாங்கியிருக்கிறாள்.  தன் கணவனை மூன்று ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து செய்துகொண்ட இந்தப் பெண் (விவாகரத்திற்கு யார் அல்லது எது காரணம் என்று தெரியவில்லை.) பல வகைத் துப்பாக்கிகள் வைத்திருந்திருக்கிறார்.  துப்பாக்கி வைத்துச் சுடும் விளையாட்டைப் பல முறை இவர் விளையாடியிருக்கிறார்.  தன் மகனையும் உடன் அழைத்துச் சென்றிருக்கிறார்.  புத்திசாலி என்று கருதப்பட்டாலும் இந்தப் பையன் சிறு வயதிலிருந்தே மற்றச் சிறுவர்களிடமிருந்து மாறுபட்டவனாக இருந்திருக்கிறான்.  பள்ளியில் பலரோடு பழகுவதில்லையாம்.  வகுப்பு ஆல்பத்தில் இவனுடைய போட்டோ இல்லை.  கேமராவுக்கு முன் நிற்க இவன் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இடையிலேயே பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டான்.  இப்படியெல்லாம் மாறுபட்ட குணங்கள் கொண்ட இவனை இவன் தாய் ஏன் இன்னும் சற்று நன்றாகக் கவனிக்கவில்லை, மனநோய் மருத்துவரிடம் அழைத்துச் செல்லவில்லை என்பது கேள்விக் குறியாக இருக்கிறது.  இந்தப் பையனுக்கு யார் மேல் கோபம், எதனால் சுட்டான் என்ற கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

    பலர் – இதுவரை எல்லோருக்கும் துப்பாக்கி வேண்டும் என்று கூறிக்கொண்டிருந்தவர்கள் உட்பட – இப்போது தங்கள் கொள்கையிலிருந்து மாறி இது பற்றி யோசிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.  ஆயினும் எல்லோரும் துப்பாக்கி வைத்திருக்க வேண்டும் என்று கூறுபவர்களும் அமெரிக்காவில் இன்னும் – இந்தச் சம்பவத்திற்குப் பிறகும் – இருக்கிறார்கள்.  நாலாயிரம் பேர் வசிக்கும் நியுடவுனில் துப்பாக்கிக் குண்டு வெடிக்கும் சத்தம் (துப்பாக்கி சுடும் பயிற்சியை விளையாடுபவர்கள் எழுப்பும் ஒலி) வெடிப்பவர்களைச் சந்தோஷப்படுத்துமாம்!  அமெரிக்கக் கலாச்சாரத்தில் வன்முறை முக்கிய பங்கு வகிக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

    இந்தச் சம்பவத்திற்குப்  பிறகு இப்படிப்பட்ட துப்பாக்கிகள் வைத்துக்கொள்வதற்கு உரிமம் எல்லாக் குடிமக்களுக்கும் கொடுத்துத்தான் ஆக வேண்டுமா என்ற விவாதம் அமெரிக்கா முழுவதும் நடந்துகொண்டிருக்கிறது.  பள்ளித் தலைமை ஆசிரியையிடம் துப்பாக்கி இருந்திருந்தால் சுட்டவனை உடனடியாக நிறுத்தியிருக்கலாம் என்று துப்பாக்கி வேண்டும் என்ற கட்சியைச் சேர்ந்த ஒருவர் கூறியிருக்கிறார்.  பலரைச் சுடப் போகும் ஒருவன் வருவான் என்று தலைமை ஆசிரியை எதிர்பார்த்துக்கொண்டிருக்க முடியாது.  அவர்  தன் துப்பாக்கியை எடுப்பதற்குள் எத்தனையோ பேரை அவன் சுட்டிருக்கலாம்.  மக்கள் கையில் துப்பாக்கியைக் குறைக்க வேண்டும் என்னும் தருணத்தில் அதைக் கூட்ட வேண்டும் என்கிறது இந்த வாதம். இன்னொருவர் அத்தனை பேரையும் கொன்றது துப்பாக்கி அல்ல, அதை வைத்திருந்த, மனம் பேதலித்த ஒருவன் என்கிறார்.  அவன் கையில் துப்பாக்கிக்குப் பதில் வேறு ஏதாவது ஆயுதம் இருந்தால் இத்தனை பேரை இத்தனை குறுகிய காலத்தில் கொன்றிருக்க முடியாது என்று அவர் எண்ணிப்பார்த்ததாகத் தெரியவில்லை.  சீனாவில் இதே போல் இருபது பேரைக் குறிவைத்தவன் கத்தியை உபயோகித்ததால் அனைவரும் காயத்தோடு பிழைத்துக்கொண்டனர், ஆனால் இங்கோ பயன்படுத்திய ஆயுதம் துப்பாக்கி என்பதால் அனைவருமே மாண்டுவிட்டனர் என்கிறார் எல்லோர் கையிலும் துப்பாக்கி இருக்கக் கூடாது என்னும் கட்சியைச் சேர்ந்தவர்.

    அமெரிக்க அரசியல் சாசனத்தை அடுத்து வந்த உரிமைச் சாசனத்தின் இரண்டாவது ஷரத்தில் எல்லோருக்கும் தங்களைக் காத்துக்கொள்ள ஆயுதங்கள் வைத்துக்கொள்ள உரிமை தரப்பட்டிருக்கிறது..  அந்தக் காலத்தில் அமெரிக்கக் கண்டத்தில் வாழ்ந்துவந்த பழங்குடிகளின் நிலங்களைக் குடியேறிகள் பறித்துக்கொண்ட பிறகு அவர்களால் இவர்களுக்கு ஆபத்து இருந்ததென்னவோ உண்மைதான்.  (பழங்குடிகளால் குடியேறிகளுக்கு ஆபத்து இருந்தது என்பது பழங்குடிகளைப் பொறுத்த வரை நியாயமானதே என்றாலும்.)  காலம் இப்போது மாறிவிட்டது.  எப்போதோ ஆபத்து இருக்கலாம் என்று கொண்டுவந்த சட்டத்தை இன்னும் பின்பற்ற வேண்டுமா?

    துப்பாக்கி வைத்துக்கொள்ள  வேண்டும் என்னும் உரிமைகளைக் காப்பதற்கு அமெரிக்காவில்  ஒரு சங்கமே (National Rifle Association) இருக்கிறது.  இந்தத் தேசிய துப்பாக்கிக் கழகத்தில் லட்சக் கணக்கான உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.  இந்தச் சங்கம் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமையைத் தடுக்கும் எந்தச் சட்டமும் வராமல் பார்த்துக்கொள்ளும்.  இதற்காகத் தேர்தலில் நிற்கும் மத்திய, மாநில காங்கிரஸ் வேட்பாளர்கள் தங்கள் பக்கம் இருக்க நிறையப் பணம் செலவழிக்கும்.  இதை எதிர்த்து காங்கிரஸ் சட்டம் இயற்றுமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

    விவாதத்தின் இன்னொரு அம்சம் மனநோய் உள்ளவர்களுக்குத் தகுந்த வைத்தியம் செய்யப்  போதிய மனநல மருத்துவர்கள்  இல்லையென்பது.  அமெரிக்காவில்  எத்தனை நோயாளிகளுக்கு எத்தனை மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்ற புள்ளிவிபரம் என்னிடம் இல்லை.  இருப்பினும் ஐம்பதாயிரம்  பேர்களுக்கு ஒரு மன நோய் மருத்துவர் இருக்கும் இந்தியாவில் இந்தத் துப்பாக்கிக் கொலைகள் நடப்பதாகத் தெரியவில்லை.  அங்கும் மனநோயாளிகள் பிறரைத் தாக்கலாம்.  ஆனால் அவர்கள் கைகளில் துப்பாக்கிகள் இருப்பதில்லை.

    அமெரிக்கா உடனடியாகச் செய்ய  வேண்டியது துப்பாக்கி வைத்துக்கொள்ள  எல்லோருக்கும் உள்ள உரிமையை நீக்க வேண்டும். முப்பத்தொரு கோடிப் பேர் வசிக்கும் அமெரிக்காவில் இப்போது முப்பது கோடித் துப்பாக்கிகள் இருக்கின்றனவாம். அதாவது சராசரியாக ஒருவருக்கு ஒன்று.  இங்கு ஆண்டுக்கு 9960 பேர் துப்பாக்கிக் குண்டுக்கு இரையாகிறார்கள். முப்பத்தொன்பது கோடிப் பேர் வசிக்கும் கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஸ்பெயின், இத்தாலி, நெதர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி என்று ஒன்பது நாடுகளிலும் சேர்ந்து துப்பாக்கியால் இறப்பவர்கள் 906 பேர்.

    அடுத்ததாக சமூகத்தின் தூண்களில்  ஒன்றான குடும்பம் என்ற அமைப்பைப்  பலப்படுத்த வேண்டும்.  எந்தக் குடும்பத்தை எடுத்தாலும்  மாற்றாந்தாய், மாற்றாந்தகப்பன், ஒரே தாயின் மற்றொரு கணவனுக்குப் பிறந்த தூரத்துச் சகோதரி (half- sister), ஒரே தந்தையின் மற்றொரு மனைவிக்குப் பிறந்த தூரத்துச் சகோதரன் (half-brother) என்ற உறவுகளைப் பார்க்காமல் இருக்க முடியாது.  தனிமனித உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப் போய் இப்போது குடும்பம் என்ற அமைப்பே குலைந்துவிட்டது அமெரிக்கா.  இதனால் சிறு குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்.  பெரியவர்கள் ஆனதும் வன்முறையில் ஈடுபடுகிறார்கள்.  குழந்தை வளர்ப்பது எப்படி என்று கற்றுக் கொடுக்க அத்தனை பத்திரிக்கைகள் இருக்கின்றன.  ஆனால், விவாகரத்து செய்து குழந்தைகளின் மனம் பாதிக்கப்பட வைக்காதீர்கள் என்று எந்தப் பத்திரிக்கையும் சொல்வதில்லை.  உலகிலேயே செல்வம் அதிகம் உள்ள அமெரிக்கா தன்னுடைய சமூகத்தைத் திருத்திக்கொள்ளப் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.

    படத்திற்கு நன்றி:

    http://www.telegraph.co.uk/news/worldnews/northamerica/usa/9748932/Connecticut-school-shooting-Heartbreaking-details-emerge-of-how-parents-learned-children-were-dead.html

    Share
  • இஸ்ரேல் பயணம் 2

    நாகேஸ்வரி அண்ணாமலை

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினை இஸ்ரேல் 1948-இல்  உருவாக்கப்பட்டதிலிருந்து இருந்து வருகிறது.  சுமார் 3000 வருட யூதர்களின் சரித்திரத்தைப் புரிந்துகொண்டால்தான் இப்போதைய இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினையின் பின்னணி விளங்கும்.  யூதர்களின் பழைய சரித்திரத்தை இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்.

    மத்தியதரைக் கடலின் கிழக்குப் பகுதியில் யூதர்கள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்திருக்கலாம் என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.  அப்போது அவர்கள் சிறு சிறு பழங்குடிகளாக வாழ்ந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.  இவர்கள்தான் முதன் முதலில் ஒரே கடவுள் (monotheism) என்ற கோட்பாடுடைய மதத்தைப் பின்பற்றினார்கள் என்று சொல்லப்படுகிறது.

    இவர்கள் வாழ்ந்த இடம் கிட்டத்தட்ட பாலைவனம் போன்றிருந்தது.  செழிப்பான நிலம் இல்லையாதலால் பலர் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வளர்த்து வாழ்க்கை நடத்தி வந்தனர்.  தண்ணீருக்குப் பக்கத்தில் இருந்தவர்கள் மீன் பிடிப்பவர்களாக தொழில் நடத்தினர்.  ரோம், எகிப்து, கிரீக் போன்ற நாட்டு மன்னர்கள் இவர்களை வென்றபோது யூதர்கள் அவர்களின் ஆதிக்கத்தில் இருந்திருக்கின்றனர். ஒரு முறை நாட்டில் பஞ்சம் ஏற்பட்டபோது இவர்கள் இங்கிருந்து மற்ற நாடுகளுக்கு இடம் பெயர்ந்தனர்.

    ஒரு காலத்தில் எகிப்தின்  அரசர்களான ஃபேரோக்களின் அடிமைகளாக யூதர்கள் வாழ்ந்தனர் என்றும்   ஃபேரோவின் கொடுமைக்கு இலக்காகி இவர்கள் வாழ்ந்துகொண்டிருந்த போது இவர்களின் தலைவரான மோசஸ் இறைவன் இவருக்குக் கட்டளையிட்டபடி இவர்களை இப்போதைய இஸ்ரேல் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார் என்றும் கதை உண்டு.  Ten Commandments என்னும் ஆங்கிலப் படத்தின் கதை இதுதான்.  இஸ்ரேல் அவர்களுக்குக் கடவுள் அருளிய இடமாகக் கருதப்பட்டது.  அன்றிலிருந்து அதைத் தங்கள் புனித பூமியாக (Holy Land) யூதர்கள் கருதுகின்றனர்.  யூதர்களைப் புனித பூமிக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே மோசஸ் இறந்துவிட்டார்.  நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு கனான் என்று அப்போது அழைக்கப்பட்ட, இப்போது இஸ்ரேல் இருக்கும், இடத்தை யூதர்கள் அடைந்தனர்.  இயேசு பிறப்பதற்குச் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இது நடந்ததாகக் கூறப்பட்டாலும் இதற்குச் சரித்திர ரீதியாக எந்த ஆதாரமும் இல்லை.  எகிப்தின் பிரமிடுகளைக் கட்டியதில் யூதர்களின் உழைப்பு எந்த விதத்திலும் இல்லை என்கிறார்கள் சில சரித்திர ஆசிரியர்கள்.  ஆனால் மேலே கூறிய படத்தில் இவை உண்மை என்று சித்தரிக்கப்படுகிறது.

    யூதர்களின் மூதாதையர்  ஆபிரகாம், ஐசக் மற்றும் ஜேக்கப் என்றும் ஜேக்கப்பின் பன்னிரண்டு மகன்களின் வாரிசுகள்தான் யூதர்கள் என்றும் பழைய ஏற்பாடு பைபிள் (Old Testament) சொல்கிறது.  (இந்த ஆபிரகாம்தான் தங்களுடைய மூதாதையர் என்று கிறிஸ்துவர்களும் முஸ்லீம்களும் கூறுகிறார்கள்.)  ஆபிரகாமின் சந்ததியினர் என்று கருதப்படும் யூதர்கள் இப்போதைய ஜெருசலேமிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் வாழ்ந்தனர்.  இவர்களுடைய மன்னர்களில் டேவிட் அரசரும் அவருடைய மகன் சாலமனும் குறிப்பிடத் தகுந்தவர்கள்.  ரோமானியர்கள், கிரேக்கர்கள், எகிப்தியர்கள் ஆகிய அந்நியர்களின் படையெடுப்பால் பல முறை அவர்களின் ஆட்சியின் கீழ் வாழ்ந்தனர்.

    சாலமன் காலத்தில்  ஜெருசலேமில் கட்டப்பட்ட யூதர்கள் கட்டிய முதல் கோவில் கி.மு. 587-இல் அவர்களுடைய பகைவர்களால்  அழிக்கப்பட்டது.  அதன் பிறகு  கட்டிய இரண்டாவது கோவில் கி.பி. 70-இல் ரோமானியர்களால் அழிக்கப்பட்டது.  அதனுடைய கிழக்குப் பகுதியில் இருந்த ஒரு வெளிச்சுவரின் ஒரு பகுதி மட்டும் இப்போது இருக்கிறது.

    கிறிஸ்துவர்கள் கடவுளின் குமாரர் என்று கருதும்  இயேசு, யூத சமுதாயத்தில் ஒரு யூதராகப் பிறந்தார்.  அவர் ஜெருசலேமில் இருந்த யூதர்களின் இரண்டாவது கோவிலில் மதகுருமார்களும் செல்வந்தர்களும் ஏழைகளையும் எளியவர்களையும் தங்கள் நலத்திற்காகப் பயன்படுத்திக்கொண்டதையும் அவர்களைச் சுரண்டிப் பிழைத்ததையும் கண்டித்தார்.  அவர்களுக்கு இழைத்த கொடுமைகளைக் கண்டித்தார்.  இவர்களை அவர்களிடமிருந்து காப்பாற்றப் பல சமூக சீர்திருத்தங்களைக் கொண்டுவர முயன்றார்.  அப்போதைய யூத சமூகத்தில் இருந்த குறைகளைக் களைந்து அதை நேர் வழியில் திருப்ப முயன்றார்.    இவருடைய சீர்திருத்தங்களினால் தங்கள் நலன்கள் பாதிக்கப்படலாம் என்று எண்ணிய செல்வந்தர்கள் மற்றும் சமூகத்தில் மேல்மட்டத்தில் இருந்தவர்கள் இவரைச் சதிசெய்து ரோமானிய அரசன் பிலாத்துவின் உதவியோடு சிலுவையில் அறைந்தனர்.  அந்தக் காலத்தில் சமூக விரோதிகளைச் சிலுவையில் அறைந்து கொல்வதுதான் பழக்கமாக இருந்தது.  சமூக சீர்திருத்தவாதியான இயேசு ஒரு சமூக விரோதியாகக் கருதப்பட்டார்.  அதனால் அப்போதைய யூத சமூகம் அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றது.  இயேசுவின் போதனைகளை ஏற்றுக்கொண்ட சில யூதர்கள் கிறிஸ்துவ மதத்தை நிறுவினர்.  இயேசு கடவுளின் உண்மையான தூதர் என்றும் இறந்த மூன்றாம் நாள் அவர் உயிர்த்தெழுந்தது உண்மையென்றும் நம்பினர்.  தங்களிடையே கடவுளின் தூதர் ஒருவர் தோன்றித் தங்களில் நல்லவர்கள் எல்லோரையும் ஒரு நாள் இறைவனிடம் அழைத்துச் செல்வார் என்று நம்பிக்கொண்டிருந்த யூதர்கள், அந்தத் தூதர் இயேசு என்பதையோ, இயேசு இறந்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பதையோ  நம்பத் தயாராக இல்லை.  இயேசு ஒருவரை மட்டும் கடவுள் கல்லறையிலிருந்து உயிர்த்தெழவைத்தார் என்று இயேசுவின் ஆதரவாளர்கள் கூறியது அவர்களுக்கு வினோதமாக இருந்தது.  நல்லவர்கள் எல்லோரையும் இறைவன் கல்லறையிலிருந்து உயிர்த்தெழ வைத்திருக்க வேண்டும் என்பது அவர்கள் வாதம்.  ஆனால் இயேசுவைப் பின்பற்றிய யூதர்கள் கடவுளின் தூதர் இயேசுதான் என்றும் அவர் வருவார் என்று வேதங்களில் இருப்பதாகவும் கூறினர்.

    தங்கள் சமூகத்தில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர முயன்ற இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்றுவிட்டபோதிலும், ரோமானியர்களோடு யூதர்களின் உறவு நலிந்துகொண்டே போனது.  தங்கள் சுதந்திரத்திற்காக இவர்கள் ரோமானியப் பேரரசிற்கு எதிராகப் போராடிய போதெல்லாம் நசுக்கப்பட்டனர்.  கடைசியாக கி.பி. 132-இலிருந்து யூதர்கள் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறி ஐரோப்பாவின் பல நாடுகளிலும் குடியேறினர்.   இவர்கள் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேற நேர்ந்த போதும், அவர்களுடைய இரண்டாவது கோவில் ரோமானியர்களால் கி.பி. 70-இல் இடிக்கப்பட்ட போதும் இயேசுவைக் கொன்ற குற்றத்திற்காகக் கடவுள் இவர்களைத் தண்டித்தார் என்று பின்னால் வந்த சில கிறிஸ்துவ போதகர்கள் எழுதினர்.

    கடவுளால் அனுப்பப்பட்ட அவருடைய தூதரைக் கொன்றதன் மூலம் யூதர்கள் மிகுந்த  பாவத்தைச் செய்தவர்கள்  ஆகிறார்கள் என்றும் அவர்களுடைய மதமும் வேதங்களும் உண்மையானவை அல்ல என்றும் அவர்களோடு  கிறிஸ்துவர்கள் எந்த உறவும் வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் கிறிஸ்துவ மத போதகர்கள்  கூற ஆரம்பித்தனர்.  இதைத்தான் யூத எதிர்ப்பு (Anti-Semitism) என்கிறார்கள்.  இது உலக சரித்திரத்தில் அன்றிலிருந்து இன்று வரை இருக்கிறது.  அமெரிக்காவில் கூட இது இன்று வரை இருக்கிறது என்று சொல்லலாம்.

    கிறிஸ்துவிற்குப்  பிறகு கிட்டத்தட்ட முன்னூறு ஆண்டுகளுக்கு கிறிஸ்துவ  மதம் தழைக்கவில்லை.  அது  மட்டுமல்ல கிறிஸ்துவர்கள் மற்றக் குடிமக்களாலும் மன்னர்களாலும்  பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர்.  மூன்றாம் நூற்றாண்டு வரை  கிறிஸ்துவர்கள் பல தொல்லைகளுக்கு  ஆளாயினர்.  ஆனால் ரோமானிய அரசன் கான்ஸ்ட்டாண்டினின் தாய்க்குக் கனவில் ஒரு சிலுவை காட்சி அளித்ததோடு இறைவன் அவளிடம் கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்றும்படியும் அதைப் பரப்பும்படியும் கட்டளையிட்ட பிறகு கிறிஸ்துவ மதத்திற்கு எதிர்ப்பு இல்லாமல் போனதோடு அது வேகமாகவும் பரவியது.

    கான்ஸ்ட்டாண்டின்  தன்னுடைய கடைசிக் காலத்தில்  கிறிஸ்துவனாக மாறினான்.  அவனுக்குப் பின் வந்த முதல்  தியோடிசியஸ் கிறிஸ்துவ  மதத்தை நாட்டின் அதிகாரபூர்வ  மதமாக அறிவித்தது யூதர்களின் சரித்திரத்தில் பெரிய மாற்றமாக அமைந்தது.  கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை கூடியது.  தியோடிசியஸ்  யூதர்களின் குடியுரிமைகளுக்குப்  பங்கம் எதுவும் விளைவிக்கவில்லை  என்றாலும் கிறிஸ்துவ குருமார்கள்  யூதர்களையும் அவர்களுடைய மதத்தையும் தீவிரமாக விமர்சித்தனர்.  இருப்பினும் கிறிஸ்துவிற்குப் பிறகு சுமார் 600 ஆண்டுகளாக  ரோமானியர்களின் பல கடவுள்களைக்  கொண்ட பேகன் மதம்தான் கிறிஸ்தவர்களுக்கும்  யூதர்களுக்கும் பொது எதிரியாக விளங்கியது.  பக்கத்தில் பக்கத்தில் வாழ்ந்த அவர்களுக்கிடையே  சிற்சில சச்சரவுகள் தோன்றினாலும், யூதர்களின் நலன்கள் பாதிக்கப்படாமலேயே இருந்தன.  முதல் கிரிகிரி என்னும் போப் காலத்தில் யூதர்களை வற்புறுத்திக் கிறிஸ்துவ மதத்தில் சேர்ப்பதை அவர் கண்டித்தார்.  ஆயினும் யூதர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த ஆதரவு தொடர்ந்து நீடிக்கவில்லை.

    ஹிரக்லியஸ் என்னும்  ரோமானிய அரசன் பாரசீகர்களோடு நடத்திய யுத்தத்தில் ஜெருசலேமை இழந்த பிறகு அந்த இழப்பிற்கு யூதர்கள் பாரசீகர்களோடு சேர்ந்து செய்த சதிதான் காரணம் என்று நினத்ததால் யூதர்களின் மதப் பழக்க வழக்கங்களை அடியோடு நிறுத்தினான்.  அவர்களின் பல உரிமைகள் பறிக்கப்பட்டன.  அதே சமயம் பிரான்ஸிலும் ஸ்பெயினிலும் யூதர்கள் வலுக்கட்டாயமாக நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.  ஸ்பெயினில் 694-இல் யூதர்களுக்குக் கிறிஸ்துவ மதத்தைத் தழுவ வேண்டும் அல்லது அடிமைகளாக வாழ வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.  பின்னால் பல நாடுகளிலிருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டதற்கு அரசியல் காரணங்கள், அந்நியர் வெறுப்பு, தங்கள் பிரச்சினைகளுக்கு அவர்களைப் பலிகடா ஆக்குவது போன்ற பல காரணங்கள் இருந்தாலும், தங்களுடைய இறைவனின் தூதரான இயேசுவைக் கொன்றவர்கள் என்ற காரணத்தால் கிறிஸ்துவர்கள் யூதர்களை வெறுத்ததுதான் முதன்மைக் காரணம்.

    வரலாற்றின் இடைக்  காலமான 600-1500-இல் யூதர்கள் பல நாடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்; பல கிறிஸ்துவ போப்கள் அவர்கள் மீது பல அவதூறுகளைக் கிளப்பினர்.  பல யூதர்கள் மருத்துவத்தில் சிறந்து விளங்கினர்.  வியாதிகள் மனிதர்கள் செய்த தவறுகளால் வருபவை, மத குருமார்களிடம் சென்றுதான் அதற்குத் தீர்வு காண வேண்டும் என்றும் யூத மருத்துவர்களிடம் வைத்தியம் செய்துகொள்ள வேண்டாம் என்றும் கிறிஸ்தவ போப்புகள் மக்களிடம் கூறினர்.  யூதர்கள் வணிகம், வியாபாரம் ஆகியவற்றிலும் சிறந்து விளங்கினர்.  அதிலிருந்தும் இவர்கள் விலக்கிவைக்கப்பட்டதால் யூதர்கள் வட்டிக்குக் கடன் கொடுக்கும் பழக்கத்தை ஆரம்பித்தனர்.  அதிக வட்டி வசூலிக்கிறார்கள் என்னும் குற்றமும் யூதர்கள் மேல் சுமத்தப்பட்டது.  (அதிக வட்டி வாங்கும் பழக்கம் யூதர்களிடம் இருந்ததால் இயேசு அவர்களைக் கண்டித்திருக்கிறார்.)

    ஏழாம் நூற்றாண்டில் முகம்மது நபி, இஸ்லாம் மதத்தைத் தோற்றுவித்த பிறகு முஸ்லீம் அரசர்கள் பாலஸ்தீனத்தைப் பிடித்துக்கொண்டனர்.  அவர்களை வென்று பாலஸ்தீனத்தை மீட்கச்சென்ற, பல ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்த சிலுவைப் போராளிகள் (crusaders) (கிறிஸ்துவ மதத்தைக் காப்பாற்ற வந்தவர்கள்) வழியில் பல யூதர்களுக்கும் நிறைய தீமைகள் விளைவித்தனர்.  முஸ்லீம் அரசர்களின் ஆதிக்கத்தில் இருந்தபோது ஸ்பெயின் அரசு யூதர்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் அதிக வரி விதித்தது என்றாலும் யூதர்களை பலவந்தமாக மதம் மாறச் சொல்லவில்லை.  ஆனால் மறுபடி கிறிஸ்தவர்கள் ஸ்பெயினில் ஆட்சியைப் பிடித்த பிறகு யூதர்கள் மீது 1265-இல் மத விசாரணையை (Inquisition) ஆரம்பித்தனர்.  கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய யூதர்களின் வாரிசுகளில் பலர் மத போதகர்களாக, துறவிகளாக மாறிய போதிலும் விசாரணை அவர்களையும் விட்டு வைக்கவில்லை; அவர்கள் உண்மையிலேயே மதம் மாறிவிட்டார்களா என்று பரிசோதித்தனர்.  1492-இல் போப் வெளியிட்ட ஆணை, கிறிஸ்தவர்கள் அல்லாத முஸ்லீம்களும் யூதர்களும் அவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினாலொழிய நாட்டை விட்டுக் கடத்தப்பட வேண்டும் என்று அறிவித்தது.  (இதே போப்தான் ஸ்பெயின் அரசியால் அமெரிக்கக் கண்டத்திற்கு அனுப்பபட்ட கொலம்பஸ் செல்லும் இடங்களில் கிறிஸ்துவரல்லாதவர்களைச் சந்தித்தால் அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றும் அவர்களின் சொத்துக்களை அபகரித்துக்கொள்ளலாம் என்றும் அனுமதி கொடுத்தார்.  இப்படி போப்பின் ‘ஆசீர்வாதத்தைப்’ பெற்ற கொலம்பஸும் அவரைப் பின்பற்றிச் சென்றவர்களும் அமெரிக்கக் கண்டங்களில் பல பழங்குடி மக்களைக் கொன்று குவித்தனர்.)

    பதினான்காம், பதினைந்தாம் நூற்றாண்டுகளில் ஜெர்மனியிலும் யூதர்கள் பல கொடுமைகளுக்கு ஆளாயினர்.  இந்தக் கொடுமைகளிலிருந்து தப்பிக்கப் பலர் போலந்து போன்ற நாடுகளுக்குச் சென்றனர்.  போலந்தில் யூதர்களின் வணிகத் திறமையைக் கற்றுக்கொள்வதற்காக பல செல்வந்தர்கள் இவர்களை ஆதரித்தனர்.  யூதர்கள் அங்கு அவர்களுடைய கல்வி நிறுவனங்களை நிறுவினர்.  ஆனால் மறுபடி பதினேழாம் நூற்றாண்டில் கத்தோலிக்கக் கிறிஸ்தவ மதத்தில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்களினால் யூதர்கள் பாதிக்கப்பட்டனர்.

    ரஷ்யப் பேரரசி கேத்தரின்  பத்து லட்சம் யூதர்களை ரஷ்யாவில்  குடியேற அனுமதித்தார்.  அரசி இவர்களுக்கு ஆதரவு  அளித்தாலும் அவர்களை மண்ணில்  பாடுபடும் விவசாயிகளாகவே  அனுமதித்திருந்தார்.  யூதர்களைத் தொழில்களில் அனுமதிக்கவில்லை.  இவருக்குப் பின் வந்த முதலாம்  அலெக்ஸாண்டர், முதலாம் நிக்கலஸ் காலத்தில் யூதப் பையன்கள் பன்னிரெண்டு முதல் இருபத்தைந்து வயது வரை ராணுவத்தில் பணிபுரிய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாயினர்.  யூதர்களுக்குப் பாதுகாப்பில்லாமல் இருந்ததால் பெரிய வெள்ளி போன்ற நாட்களில் (அன்றுதான் இயேசு சிலுவையில் அறையப்பட்டதைக் கிறிஸ்துவர்கள் நினைவுகூருவார்கள்) யூதர்கள் வெளியே வராமல் வீட்டிலேயே அடைந்துகிடந்தனர், சில கிறிஸ்துவர்கள் அவர்களுக்குத் தீங்கு விளைவிக்கலாம் என்பதால்.

    பதினாறாம் நூற்றாண்டில் ஜெர்மனியில் வாழ்ந்த, புராடஸ்டெண்ட் கிறிஸ்துவப் பிரிவைத் தோற்றுவித்த மார்ட்டின் லூத்தர் யூதர்களைப் பற்றிப் படித்திருந்ததால் ‘இயேசு ஒரு யூதராகப் பிறந்தார்’ என்னும் நூலை எழுதி யூதர்களை கிறிஸ்துவ மதத்திற்கு இழுக்கலாம் என்று நினைத்தார்.  ஆனால் அப்படி நடக்காததால் யூதர்களையும் அவர்கள் மதத்தையும் தூற்ற ஆரம்பித்ததோடு வங்கித் தொழில், வர்த்தகம் ஆகியவற்றிலிருந்து யூதர்கள் நீக்கப்பட வேண்டும் என்றும், முடிவாக பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளிலிருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டதைப் போல் ஜெர்மனியிலிருந்தும் வெளியேற்றப்பட வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்தார்.

    பல நாடுகளில் யூதர்கள் தங்கள் திறமையினால் செல்வந்தர்களாகவும் அரசியலில் அதிகாரம் உள்ளவர்களாகவும்  விளங்கினாலும் அவர்களுடைய இந்த வாழ்க்கை வெற்றியே மற்றவர்களுக்கு அவர்கள் மேல் பொறாமையையும் வெறுப்பையும் உண்டாக்கியது.  மேலும் யூதர்கள் தாங்கள்  மற்றவர்களை விட உயர்ந்தவர்கள்  என்ற எண்ணத்தையும் எப்போதும்  கொண்டிருந்தனர்.  பல நாடுகளில்  மற்றவர்களிடமிருந்து தனித்தே  வாழ்ந்திருக்கிறார்கள்.  குடியேறிய எல்லா இடங்களிலும்  அந்தந்தச் சமுதாயங்களோடு  அவர்களால் இணைய முடியவில்லை.  இதனாலோ என்னவோ அந்தச் சமுதாய மக்களும் இவர்களைச் சரியாக நடத்தவில்லை.  தங்கள் யூத மதத்தையும் அதன் கோட்பாடுகளையும் இவர்களுடைய மதத்தலைவர்கள் தவறாமல் கடைப்பிடித்திருக்கிறார்கள்.  குடியேறிய நாடுகளில் பேசப்பட்ட மொழிகளைக் கற்றுக்கொண்டாலும் மதச் சடங்குகளில் தங்கள் மொழியான ஹீப்ருவைத் தொடர்ந்து உபயோகித்திருக்கிறார்கள்.  ஜெர்மனியில்தான் யூதர்களின் எண்ணிக்கை மற்ற எல்லா நாடுகளையும் விட அதிக அளவில் இருந்தது.  இங்கு ஜெர்மன் மொழியிலிருந்து உருவாகிய யிட்டிஷ் (Yiddish) மொழியைப் பேசினர்.

    ரஷ்யா, போலந்து, ஃபிரான்ஸ், ஸ்பெயின் என்று பல நாடுகளிலும் யூதர்கள் பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டாலும் ஜெர்மனியில் கத்தோலிக்க கிறிஸ்துவப் பிரிவைச் சேர்ந்த ஹிட்லர் இவர்களை லட்சக் கணக்கில் கொன்று குவித்தது ஐரோப்பாவில் இருந்த யூத எதிர்ப்பின் உச்சக் கட்டம் எனலாம்.  டிசம்பர் ஆறாம் தேதியிட்ட நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளிவந்த ஒரு கட்டுரையில் கூறியிருப்பது போல் ஹோலகாஸ்ட் (Holocaust) என்று அழைக்கப்படும், ஹிட்லர் நடத்திய, யூதர்களின் படுகொலையைத் தொடர்ந்து தப்பிய யூதர்கள் ஜெர்மனியை விட்டு அகதிகளாக ஓடிவராமல் இருந்திருந்தால் இஸ்ரேல் என்ற நாடே உருவாகியிருக்காது.

    பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்தே தங்களுக்கென்று ஒரு நாடு இருந்தால்தான் தங்களுடைய  நலன்களைக் காத்துக்கொள்ள  முடியும் என்று நினைக்க  ஆரம்பித்த யூதர்கள் தங்களுக்குத் தனி நாடு வேண்டும் என்று அப்போதிலிருந்தே கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

    யூதர்கள் முதலிலிருந்தே – அதாவது பல ஆயிரம் ஆண்டுகளாகவே – தங்கள் எல்லோரையும் தங்களுடைய பழைய சொந்த நாடான பாலஸ்தீனத்தில் ஒன்று சேர்க்கக் கடவுளின் தூதர் ஒருவர் வருவார் என்று காத்திருந்தார்கள்.  இருந்தாலும் ஐரோப்பாவில் நிலவிய யூத எதிர்ப்பு கடவுளின் தூதர் வருவதற்காகக் காத்திருப்பதை விட தாங்களாக முயன்று தங்களுக்கென்று தனி நாடு ஒன்றை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை இவர்களிடம் தோற்றுவித்தது.  மேலும் அந்த நாடு அவர்களின் பழைய புண்ணிய ஸ்தலமான பாலஸ்தீனமாக இருக்க வேண்டும் என்றும் விரும்பினர்.  இவர்கள் அங்கு வாழ்ந்து பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன என்பதையும் அங்கு இப்போது வேறு இன மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கலாம் என்பதையும் துரதிருஷ்டவசமாக (தங்களின் வசதிக்காக) அவர்கள் மறந்துவிட்டிருந்தனர்.  இவர்களின் இந்த ஆசையின் (பேராசை என்று கூடச் சொல்லலாம்) விளைவே இப்போதைய இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினைக்கு வித்திட்டது என்று கூறலாம்.  (இந்தப் பிரச்சினைக்குத் தீர்வே இல்லையென்றும் சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இயேசு பூமிக்கு மறுபடி வந்து உலகம் பூராவையும் தன் ஒரே குடையின் கீழ் பாரபட்ச முறையில் ஆள்வார் என்றும் அப்போது உலகில் நேர்மை, நியாயம் கோலோச்சும் என்றும் பைபிளில் கூறப்பட்டிருக்கிறதாம்.  காஷ்மீர் பிரச்சினை போல் இப்போதைக்குத் தீர்வு காண முடியாத பிரச்சினைகளில் இதுவும் ஒன்று.  இந்த இரண்டு பிரச்சினைகளும் பிரிட்டிஷ் அரசால் ஏற்படுத்தப்படவை என்று கூறினால் அது மிகையாகாது.  இந்தப் பிரச்சினை உருவான கதையைப் பின்னால் பார்ப்போம்.)

    (தொடரும்)

    Share
  • இஸ்ரேல் பயணம்-1

     

    நாகேஸ்வரி அண்ணாமலை

    விட்ட குறை, தொட்ட குறை என்பார்களே அது போல் நான் பல ஆண்டுகளாக இஸ்ரேலுக்குப் போக வேண்டும் என்று ஆசைப்பட்டுக்கொண்டிருந்தேன்.  அந்த ஆசையை நான் வெளிப்படையாகச் சொல்லும் பொழுதெல்லாம் என் மகள், ‘இஸ்ரேலுக்கா, இப்போதைக்கு நாம் அங்கு போக முடியாது’ என்று வீட்டோ செய்துவிடுவாள்.  அவள் சொல்வது சரிதான் என்று எனக்கும் தோன்றும்.  அதனால் இஸ்ரேல் போகும் ஆசையை அப்போதைக்கு விட்டுவிடுவேன்.

    என் கணவரோடு சிகாகோ பல்கலைக் கழகத்தில் வேலை பார்த்த துணைப் பேராசிரியர்  ஒருவர் யூத இனத்தைச் சேர்ந்தவர்.  இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்.  ஆறு வருடங்கள் சிகாகோவில் வேலை பார்த்துவிட்டு ஒராண்டு  ஆய்விற்காக இஸ்ரேலின் நகரங்களுள் ஒன்றான ஜெருசலேம் நகரில் இருக்கும் ஹீப்ரூ பல்கலைக் கழகத்திற்குச் சென்றார்.  அங்கிருக்கும் போது ஒரு முறை அமெரிக்காவின் விஸ்கான்ஸின் பல்கலைக் கழகத்தில் நடந்த ஒரு கருத்தரங்கிற்கு வந்தவர் சிகாகோவிற்கும் வந்திருந்தார்.

    சிகாகோவில் அவரைச் சந்தித்துப் பேசிய போது இஸ்ரேலுக்குப் போக வேண்டும் என்ற என்னுடைய நெடுநாளைய  ஆசையை சும்மா கேஷுவலாகக் கூறினேன்.  அவர், ‘நீங்கள் இஸ்ரேலுக்குப் போவதற்கு இது நல்ல தருணம்’ என்றார்’  ‘ஏன் அப்படிக் கூறுகிறீர்கள்?  இப்போது அங்கு அமைதி நிலவுகிறதா?’ என்றேன்.  ‘நான் இப்போது அங்கு இருக்கிறேன்.  அதனால்தான் இது நல்ல சமயம் என்றேன்’ என்றார்.

    அப்போதே என் கணவரிடம் இஸ்ரேல் போவது பற்றிப்  பேச ஆரம்பித்தேன்.  அவருக்கும் என்னுடைய வெகுநாளைய ஆசையை நிறைவேற்றுவதற்கு இது சரியான சமயமாகத் தெரிந்தது.  அடுத்ததாக எப்போது போவது என்று எண்ண ஆரம்பித்தோம்.  நண்பர் ஜூனில் வந்தால் தனக்கும் சற்று ஓய்வு இருக்கும் என்றும் மேலும் அப்போது பல்கலைக் கழகத்தில் என் கணவருக்கு ஒரு சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்வதற்குத் தகுந்த நேரம் என்றும் கூறினார்.  வருடா வருடம் ஜூனில் இந்தியாவிற்கு வருவோம்.  இந்த முறை அப்படிச் செல்லும்போது வழியில் இஸ்ரேலில் ஒரு வாரம் கழிக்கலாம் என்று முடிவு செய்தோம்.  தற்செயலாக இன்னொரு அமெரிக்க நணபர் ஒருவர் – இவரும் யூதர் – நாங்கள் போவதாகத் திட்டமிட்ட தினங்களில் அங்கு இருப்பதாகக் கூறியதும் இப்படி எல்லாம் கனிந்து வந்ததில் எல்லோருக்கும் ஒரே சந்தோஷம்.  (போன வாரம் நடந்தது போல் காஸாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஏவுகணைத் தாக்குதல் அப்போது நடந்திருந்தால் போயிருப்போமா என்பது சந்தேகமே.  நல்ல வேளையாக அப்போது எதுவும் நடக்கவில்லை.)

    பல நூற்றாண்டுகளுக்கு  முன்பே அமெரிக்காவில் குடியேறி அங்கு செட்டிலாகிவிட்ட  அமெரிக்க யூதர்கள் பலர் இஸ்ரேல் என்ற நாடு 1948-இல் உருவாக்கப்பட்ட பிறகு அந்த நாட்டிற்குச் சென்று அங்கு சில நாட்களாவது தங்கி வர வேண்டும் என்று நினைக்கிறார்கள்.  யூதர்களுக்காக உருவாக்கப்பட்ட நாட்டில் யூதர்களாகிய தாங்கள் பங்குகொள்ள வேண்டும் என்று பிரியப்படுகிறார்கள்.  மேலே கூறிய நண்பரும் இந்த வகையைச் சேர்ந்தவர்.

    இஸ்ரேலில் உதவுவதற்கு இரண்டு நண்பர்கள் இருக்கிறார்கள் என்ற செய்தி  கொடுத்த தெம்பில் மளமளவென்று என் மகள் டிக்கெட் வாங்குவது, ஜெருசலேமில் தங்குவதற்கு ஏற்பாடு செய்வது என்று எல்லாக் காரியங்களையும் செய்ய ஆரம்பித்தாள்.

    அமெரிக்காவும் இஸ்ரேலும்  நண்பர்கள் ஆதலால் இஸ்ரேலுக்குப்  போவதற்கு அமெரிக்கக் குடிமக்களும் குடியுரிமை பெற்றவர்களும்  விசா எதுவும் இல்லாமல் போகலாம்.  இந்தியர்கள் என்றால் விசா வாங்க வேண்டும்.  அன்கு போவதற்கு ஒரு மாதமாவது இருக்கும் போதுதான் விசா கொடுக்கிறார்கள்.  இஸ்ரேலுக்குப் போய் வந்தவர்களை பல அரபு நாடுகள் தங்கள் நாட்டிற்குள் அனுமதிப்பதில்லை ஆதலால் இஸ்ரேல் விசாவை ஒரு தனித் தாளில் பெற்று இஸ்ரேலுக்குப் போய்வந்த பிறகு அதைப் பாஸ்போர்ட்டிலிருந்து பிரித்து எடுத்துவிடலாம் என்று ஒரு நண்பர் யோசனை கூறினார்.  அதனால் விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது இஸ்ரேல் தூதரகத்திடம் அந்த வேண்டுகோளைக் கூறுங்கள் என்றார்கள்.  ஆனால் அதை அவர்கள் கவனித்ததாகத் தெரியவில்லை.  பாஸ்போர்ட்டிலேயே குத்திக் கொடுத்துவிடுகிறார்கள்.

    இஸ்ரேலின் தலைநகரமான டெல் அவிவ் ஒரு மாடர்ன் நகரம்.  அங்கு எங்களைப் போன்றோர்களுக்குப் பார்ப்பதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை.  எங்களுடைய விருப்பம் எல்லாம் பழமை வாய்ந்த ஜெருசலேம் நகரையும் அதைச் சுற்றியிருக்கும் மற்ற பழைய நகரங்களையும் பார்க்க வேண்டும் என்பதுதான். ஜெருசலேமில் விமான நிலையம் இல்லையாதலால் டெல் அவிவிற்குச் சென்று அங்கிருந்து சாலை வழியாக ஜெருசலேம் செல்ல வேண்டும்.  நாங்கள் சிகாகோவிலிருந்து கனடா நாட்டிலுள்ள டொரொண்டோ விமான நிலையத்திற்குச் சென்று அங்கிருந்து டெல் அவிவிற்குச் செல்லத் திட்டமிட்டோம்.

    சிகாகோவிலிருந்து  டோரண்டோ செல்ல ஒன்றரை மணி  நேரம்தான்.  அதற்குப் பிறகு  டெல் அவிவ் செல்லும் விமானம்  கிளம்ப ஐந்து மணி நேரத்திற்கு மேல் இருந்தது.  இத்தனை மணி நேர இடைவெளி இருந்ததால் டெல் அவிவ் செல்லும் விமானம் கிளம்பும் இடத்திற்கு அப்போது எங்களைச் செல்ல அனுமதிக்கவில்லை.  விமான நிலையத்தில் வேலை பார்த்த பல தமிழர்கள் – டோரண்டோவில் இலங்கையிலிருந்து குடியேறிய பல தமிழர்கள் இருக்கிறார்கள் – நாங்கள் தமிழர்கள் என்று தெரிந்துகொண்டு நன்றாக உதவினர்.

    டோரண்டோ-டெல் அவிவ்  விமானப் பயணம் பன்னிரெண்டு  மணி நேரம் எடுத்தது.  வழியில் மூன்று தடவை உணவு கொடுத்தார்கள்.  நாங்கள்  எப்போதும் விமானப் பயணத்தின்  போது சைவ, ஆசிய உணவையே கொடுக்குமாறு விமானக் கம்பெனியிடம் கேட்பதுண்டு.  இங்கும் அம்மாதிரிக் கேட்டிருந்தும் மூன்று முறையில் இரண்டு முறை பாலஸ்தீன உணவைக் கொடுத்தார்கள்.  பாலஸ்தீனத்திற்குப் போகும் முன்பே எங்களுக்குப் பாலஸ்தீன உணவு கிடைத்தாலும் விமான உணவு பாலஸ்தீனத்தில் கிடைத்த உணவு போல் இல்லை.  எல்லா விமான உணவுகளைப் பொறுத்த வரையிலும் இப்படித்தான்.  நம் இந்திய உணவு இந்திய உணவு போல் இருக்காது.

    இஸ்ரேலுக்குப் போவதாக நண்பர்களிடம் கூறியதுமே  அங்கு மிகவும் கெடுபிடியாக  இருக்கும், விமான நிலையத்தில் உங்களிடம் பல கேள்விகள் கேட்பார்கள் என்று பலர் எச்சரித்திருந்தனர்.  அதிலும் அந்த நாட்டை விட்டு வெளியேறும் போது இன்னும் அதிகக் கேள்விகள் கேட்பார்கள் என்று கூறியிருந்தனர்.  ஆனால் அப்படி ஒன்றும் இல்லை.  விமான நிலைய அனுபவத்தைப் பொறுத்த வரை குறிப்பிடத் தகுத்தாற் போல் எதுவும் நடக்கவில்லை.  எங்களில் யாரும் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள் இல்லையென்பதும் மிகக் குறைந்த வயது இளைஞர் இல்லை என்பதும் காரணமாக இருக்கலாம்.  குடிபுகல் பகுதியில் இருந்த ஊழியர்கள் எல்லா நாட்டிலும் போல் முகத்தைக் கடுமையாக வைத்துக்கொண்டிருந்தார்கள்.  குடிபுகல் பகுதியில் வேலை பார்க்கும் எல்லா ஊழியர்களுக்கும் எல்லா நாடுகளிலும் மறந்தும் சிரித்துவிடாதீர்கள் என்று பயிற்சியின் போது அறிவுரை கூறியிருப்பார்கள் போலும் என்று நான் நினைத்துக்கொள்வேன்.

    டெல் அவிவ் விமான  நிலையம் டெல் அவிவ் நகரிலிருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில்  இருக்கிறது.  ஜெருசலேம்  நகரம் டெல் அவிவ் விமான நிலையத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தூரம் இருக்கிறது.  விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் விமான நிலையத்திற்கு வெளியே நின்ற டாக்சி ஒன்றில் ஜெருசலேம் நோக்கிக் கிளம்பினோம்.  டாக்சி டிரைவர் ஏதோ கொஞ்சம் ஆங்கிலம் பேசினார்.  ஜெருசலேமிலும் டாக்சி டிரைவர்கள் ஏமாற்றுவார்கள் என்று நண்பர்கள் எச்சரித்திருந்ததால் விமான நிலையத்திலிருந்து ஜெருசலேமில் நாங்கள் தங்கியிருந்த இடத்திற்குச் செல்ல சுமாராக எவ்வளவு ஆகும் என்று நண்பர்களிடம் கேட்டு வைத்திருந்தோம். மேலும் விமான நிலையத்திற்கு வெளியே சில ஊர்களுக்குச் செல்வதற்குரிய கட்டண அறிவிப்புப் பலகை இருந்தது.  டாக்சி டிரைவர் கேட்ட தொகை அதை அடுத்து இருந்ததால் அதற்கு ஒத்துக்கொண்டு அவர் காரில் ஏறினோம்.

    மைசூரில் ஆட்டோக்காரர்கள்  பக்கத்து இடத்திற்கு வருவதற்குத்  தயங்குவார்கள்; அல்லது குறைந்த கட்டணமான இருபது ரூபாயை விட அதிகம் கேட்பார்கள்.  ஜெருசலேமில் டாக்சி டிரைவர்களைப் பொறுத்தவரை இதே கதைதான்.  ஜெருசலேம் தெருக்கள் மேடும் பள்ளமுமாக இருந்ததாலும் சில இடங்களில் படிகளோடு இருந்ததாலும் என்னால் நடக்க முடியவில்லை.  போனில் டாக்சியைக் கூப்பிட்டு நாங்கள் தங்கியிருந்த இடத்தைக் குறிப்பிட்டு போக வேண்டிய இடத்தையும் குறிப்பிட்டால் வர முடியாது என்று கூறிவிடுவார்கள்.  அதனால் கூடியவரை போகும் இடத்தைக் கூறுவதை முடிந்தால் தவிர்த்துவிடுவோம்.  சில சமயங்களில் எங்களால் முடியாவிட்டால் நாங்கள் தங்கியிருந்த அபார்ட்மெண்ட் சொந்தக்காரரிடம் உதவி கேட்டால் அவர் தவறாமல் டாக்சியை வரவழைத்துவிடுவார்.  அவர்கள் மொழியில் அவர் பேசியது ஓரளவிற்கு உதவியிருக்கும் என்று நினைக்கிறேன்.

    நாங்கள் ஜெருசலேம்  சென்ற அன்று நல்ல வெயில் அடித்தது.  பகலில் அங்கு ஜூனில் நல்ல வெயில் அடிக்கிறது.  பொழுது சாயும் போது வெப்பம் குறைந்து கொஞ்சம் குளிர ஆரம்பித்துவிடுகிறது.  நாங்கள் விருந்திற்குப் போன இரண்டு நண்பர்கள் வீட்டிலும் இரவு உணவைத் தோட்டத்தில் மேஜை, நாற்காலி போட்டுப் பரிமாறினார்கள்.  வெளியில் உணவருந்துவது இஸ்ரேல் நாட்டவர்களுக்குப் பிடித்தமான விஷயம் போல் தெரிகிறது.

    ஜெருசலேமில் ஓட்டல்களிலும்  தங்கலாம்.  நாங்கள் அபார்ட்மெண்ட்டில்  தங்குவது என்று முடிவு செய்தோம்.  வீட்டின் ஒரு பகுதியை சில  வீட்டுச் சொந்தக்காரர்கள்  சுற்றுலாப் பயணிகளுக்காக வாடகைக்கு விடுகிறார்கள்.  இவற்றில் ஓட்டல்களில் இல்லாத சமைக்கும் வசதி உண்டு.  எங்கள் அபார்ட்மெண்ட்டில் நிறையச் சமையல் சாமான்கள் இருந்தன.  ஒரு மின்சார அடுப்பும் இருந்தது.  சிறிய சமையலறை இருந்தது.  ஒரு குளிர்சாதனப் பெட்டியும் இருந்தது.  பால், ரொட்டி, சீஸ், பழங்கள் என்று வாங்கிவைத்துக்கொண்டு காலை உணவை நாங்களே தயாரித்துக்கொண்டோம். ஒட்டலில் இல்லாத இன்னொரு வசதி துணிகளைத் துவைத்துக் காயப் போட அபார்ட்மெண்ட்டிற்கு வெளியே கொடி இருந்தது.  மூன்று நாட்களுக்கு ஒரு முறை அபார்ட்மெண்டைச் சுத்தம் செய்து கொடுப்பதற்கு ஒரு பெண் வந்தார்
     

    நாங்கள் தங்கியிருந்த அபார்ட்மெண்ட் சொந்தக்காரர் எங்கள் அபார்ட்மெண்டிற்கு  மேலே உள்ள பகுதியில் குடியிருந்தார்.  அபார்ட்மெண்ட்டிற்குப் போவதற்கு இருநூறு அடிகள் இருக்கும்போதே படிகள் இருந்ததால் டாக்சியால் அதற்கு மேல் போக முடியவில்லை.  அங்கிருந்து மூட்டை முடிச்சுகளைத் தூக்கிக்கொண்டு அபார்ட்மெண்ட்டிற்கு நடந்தோம்.  அபார்ட்மெண்ட் சொந்தக்காரரைச் சந்தித்துச் சாவியைப் பெற்றுக்கொண்டோம்.  ‘உங்களைப் பார்க்க நண்பர் ஒருவர் ஏற்கனவே வந்திருந்தார்.  இந்தப் பழங்களையும் இனிப்புகளையும் என்னிடம் கொடுத்துவிட்டுச் சென்றார்’ என்று கூறி அவர் கொடுத்துவிட்டுப் போயிருந்த பொருள்களை எங்களிடம் கொடுத்தார்.

    எங்களோடு எங்கள் அபார்ட்மெண்ட்டிற்கு வந்து எப்படி அதைத் திறப்பது என்று காட்டிவிட்டு, என்ன உதவி வேண்டுமானாலும் அவரிடம் கேட்கலாம் என்றும் எப்போதும் அவராவது அல்லது அவருடைய மனைவியாவது வீட்டில் இருப்பதாகவும் கூறிவிட்டுச் சென்றார்.  எங்கள் அபார்ட்மெண்ட் அவர் அபார்ட்மெண்ட்டிற்குக் கீழேதான் என்றாலும் எங்கள் அபார்ட்மெண்ட் வாசல் கிழக்குப் பார்த்தும் அவருடைய பகுதியின் வாசல் மேற்குப் பார்த்தும் இருந்ததாலும் பல வீடுகளைக் கடந்து சுற்றிக்கொண்டுதான் எங்கள் அபார்ட்மெண்ட்டிற்கு வர வேண்டியிருந்தது.  எங்கள் அபார்ட்மெண்ட் ஜெருசலேமின் பழைய நகரத்தில் இருந்தது.  இதை old city என்கிறார்கள்.  இது ஒரு பழைய கோட்டைச் சுவருக்குள் இருக்கிறது.  இதில் பல பகுதிகள் இருக்கின்றன.  இங்குதான் யூதர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய மூன்று மதத்தினரும் தங்கள் இடம்தான் என்று தங்களுக்குள் சண்டை போட்டுக்கொள்ளும் பல இடங்கள் இருக்கின்றன.  அங்குள்ள ஒரு மசூதியின் கூண்டு எங்கள் அபார்ட்மெண்ட்டிலிருந்தே தெரிந்தது.  எங்களை எங்கள் அபார்ட்மெண்ட்டிற்குக் கூட்டி வந்த அபார்ட்மெண்ட் சொந்தக்காரர் ‘இதோ தெரிகிறதே, இதற்குத்தான் மூன்று மதத்தினரும் சண்டை போட்டுக்கொள்கிறார்கள்’ என்று கூறினார்.  இவர் பெயர் யோசி (Yossi).  இவர் யூத மதத்தைச் சேர்ந்தவர்.

    (தொடரும்)

    படத்திற்கு நன்றி :

    http://www.jewishvirtuallibrary.org/jsource/vie/Telaviv.html

     

     

    Share
  • தொடரும் பொய்கள்

     

    நாகேஸ்வரி அண்ணாமலை

    அமெரிக்கத் தேர்தல்கள் முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது.  இரண்டாவது தடவை ஜனாதிபதியாக பதவியேற்றிருக்கும் ஒபாமா நாட்டை எதிர்நோக்கியிருக்கும் fiscal cliff  எனப்படும் பொருளாதார இக்கட்டை எப்படிச் சமாளிக்கலாம் என்பதில் களம் இறங்கியிருக்கிறார்.  இத்தருணத்தில் நாட்டின் நலன்களைக் காப்பதற்காகவும் திசை மாறிப்போன, பொருளாதாரச் சீர்குலைவை அடைந்திருக்கும் அமெரிக்காவை அதிலிருந்து மீட்பதற்காகவும் தேர்தலில் போட்டியிடப் போவதாகச் சூளுரைத்த ராம்னி தன்னுடைய தோல்வியை நினைத்து, புலம்பிக் கொண்டிருக்கிறார். தன்னை எதிர்த்து நின்ற குடியரசுக் கட்சி வேட்பாளர் ராம்னி தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறிய சில நல்ல கருத்துக்களைத் தன்னுடைய திட்டங்களில் சேர்த்துக்கொள்வதாகவும் அதற்காக ராம்னியோடு கலந்தாலோசிக்கப் போவதாகவும் ஜனாதிபதி ஒபாமா கூறிக்கொண்டிருக்கும்போது, ஒபாமா இருகட்சிகள் சார்ந்த அரசியல் நடத்துவதில்லை என்றும் தான் அப்படியில்லாமல் எதிர்க் கட்சியையும் கலந்தாலோசித்தே அரசியல் நடத்தப் போவதாகவும் கூறிய ராம்னி தன்னுடைய தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்.  அது மட்டுமல்ல இங்கும் பொய்களாக அவிழ்த்துவிட்டுக்கொண்டிருக்கிறார்.  அவருக்குத் தேர்தல் நிதி வழங்கியவர்களோடும் நிதி திரட்டுவதில் உதவி புரிந்தவர்களோடும் தொலைபேசியில் கான்பெரன்ஸ் காலில் பேசிய ராம்னி, “நான் ஜெயிப்பேன் என்று நீங்கள் எதிர்பார்த்தீர்கள்.  நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன்.  தேர்தல் முடிவுகள் எங்களை மிகவும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியிருக்கின்றன.  நாங்கள் இதை எதிர்பார்க்கவே இல்லை.  (ராம்னி ஜெயித்துவிடுவோம் என்று மிக நம்பிக்கையோடு இருந்ததால் வெற்றிபெற்ற பிறகு கொடுக்கப் போகும் பேச்சை மட்டும் தயாரித்திருந்தாராம்!  அதனால்தான் தான் தோல்வியுறப் போகிறோம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியான போதும் தோல்வி அடைந்த வேட்பாளர் தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பேச்சைக் கொடுக்கச் சம்மதிக்கவில்லை.  ஜெயிப்பேன் என்று விடாப்பிடியாகக் கூறிக்கொண்டிருந்தார்.  உதவியாளர்கள் எழுதிக் கொடுத்த பிறகு தன் பேச்சை நிறைவேற்றினார்.) மிகச் சிறிய ஓட்டு வித்தியாசத்தில்தான் என்னால் ஜெயிக்க முடியவில்லை.  ஆனால் கொஞ்ச ஓட்டு வித்தியாசம் என்றாலும் அரசியலில் அது தோல்விதான்” என்று அங்கலாய்த்திருக்கிறார்.  இது என்ன அண்டப் புளுகு?  ஒபாமாவுக்குக் கிடைத்த எலெக்டொரல் காலேஜ் ஒட்டுக்கள் 336.  ராம்னிக்குக் கிடைத்தவை 206.  இதுதான் கொஞ்ச ஓட்டு வித்தியாமா?

    புதன்கிழமை (நவம்பர் 14) ஒபாமா பங்கேற்ற பத்திரிக்கையாளர் கூட்டத்தில் “ராம்னியைச் சந்தித்து அவரோடு கலந்தாலோசிக்கும் திட்டத்தை இன்னும் வைத்திருக்கிறீர்களா?” என்று பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்டபோது “ராம்னி மிகச் சிறப்பாக குளிர்கால ஒலிம்பிக்ஸை நடத்தியிருக்கிறார்” என்று கூறியதோடு அரசை எப்படி திறமையாக நடத்த வேண்டும் என்ற ராம்னியின் சில கருத்துக்களையும் மனம் திறந்து பாராட்டியிருக்கிறார்.

    அவருடைய கான்பெரன்ஸ் காலில் “நாம் எல்லோரும் ஒற்றுமையாக, ஒருவருக்கொருவர் தொடர்போடு இருந்து அடுத்த முறை நம் கட்சி வேட்பாளரை எப்படி ஜெயிக்க வைப்பது என்று ஆலோசிக்க வேண்டும்.  அடுத்த வேட்பாளர் நானாக இருக்க மாட்டேன்” என்றும் கூறியிருக்கிறார்.  இவரை யார் மறுபடி தேர்ந்தெடுப்பார்கள்?  அமெரிக்க அரசியலில் தோற்றவரை மறுபடி தேர்ந்தெடுப்பது அதிகம் இல்லை.  2008-இல் மெக்கெயினிடம் முதல்நிலைத் தேர்தலிலேயே தோற்றார்.  ஒபாமாவிடம் பொதுத் தேர்தலில் மிகுந்த ஓட்டு வித்தியாசத்தில் தோற்றிருக்கிறார்.  இனி இவர் பக்கம் யாருடைய பார்வை திரும்பும்?  “நான் ஒரு வியாபாரி.  பெயின் கேப்பிட்டலில் இருக்கும்போது நிறைய வேலைகளை உருவாக்கியிருக்கிறேன். (இதுவும் பொய்) என்னால்தான் நாட்டில் வேலைகளை உருவாக்க முடியும்” என்று தேர்தல் பிரச்சாரத்தில் கூறிக்கொண்டிருந்த இவரை, ஒரு வணிக ஸ்தாபனத்திற்குத் தலைவராக இருப்பதும் ஒரு நாட்டை வழிநடத்துவதும் வேறு வேறான திறமைகள் என்று உணராத இவரை வணிக நிறுவனங்கள்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.  அங்குதான் இவர் கூறும் பொய்கள் நன்றாக எடுபடும்.

    http://www.nytimes.com/2012/11/06/opinion/the-real-loser-truth.html?_r=0

    அமெரிக்காவில் அரசியல்வாதிகள் சொல்லும் பொய்களை அம்பலப்படுத்த  ஆய்வாளர்களைக் கொண்ட சில  நிறுவனங்கள் இருக்கின்றன.  அவற்றில் ஒன்று உண்மைகளை factcheck.org என்ற இணையதளத்தில் வெளியிடும்.  அதன் முகவரி http://factcheck.org/2012/10/false-claims-in-final-debate/

    நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில்  பத்தி எழுதிய ஒரு வரலாற்றுப் பேராசிரியர் தேர்தல் பிரச்சாரம் முடிந்த பின் எழுதிய கட்டுரையில் ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைவது உண்மைகளே என்று எழுதியிருக்கிறார்.  இதில் முக்கிய பங்கு ராம்னிக்கே என்றும் சொல்கிறார்.  இந்தக் கட்டுரையை

    http://www.nytimes.com/2012/11/06/opinion/the-real-loser-truth.html?_r=0  இந்தமுகவரியில் பார்க்கலாம்.

    படங்களுக்கு நன்றி:

    http://thewhiztimes.com/fun-trivia-bio-mitt-romney/

    Share
  • அமெரிக்கத் தேர்தல் வாக்குறுதிகள்

     

    நாகேஸ்வரி அண்ணாமலை

     

    சில வாரங்களுக்கு முன்னால் அமெரிக்காவையும் இந்தியாவையும்  ஒப்பிட்டு ‘அங்கும் இங்கும் என்ற கட்டுரை எழுதினேன்.  அதில் முக்கியமாக தேர்தல் வாக்குறுதிகள் என்பதைக் கட்டாயமாகச் சேர்த்திருக்க வேண்டும்.  அதனால் இப்போது எழுதுகிறேன்.  இது முக்கியமாகச் சேர்க்கப்பட வேண்டிய ஒன்று.  ஏனென்றால் இந்தியத் தேர்தல் வாக்குறுதிகளுக்கும் அமெரிக்கத் தேர்தல் வாக்குறுதிகளுக்கும் அத்தனை வித்தியாசங்கள்.
     

    அமெரிக்க அரசியல்  சாசனத்தில் எல்லோரும் எந்த மதத்தையும் பின்பற்றலாம் என்ற ஷரத்து இருக்கிறது.  என்றாலும் மதத்தில் நம்பிக்கை  இல்லாத ஒருவர் கண்டிப்பாக ஜனாதிபதித் தேர்தலில் ஜெயிக்க  முடியாது.  அது மட்டுமல்ல, கிறிஸ்தவரல்லாத ஒருவரும் ஜனாதிபதி பதவிக்கு வர முடியாது.  ஜான் கென்னடி 1960-இல் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படும் வரை கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாக வருவது கிட்டத்தட்ட இயலாத காரியம் என்று கருதப்பட்டது.  ஆனாலும் முதல் கத்தோலிக்க ஜனாதிபதியாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  கிறிஸ்தவரல்லாதவர் வருவது இதைப் போல் அல்ல.  ஆக மத நம்பிக்கையுள்ள, ஒழுங்காகத் தேவாலயத்திற்குச் செல்லும், கிறிஸ்துவக் கோட்பாடுகளில் தீவிர நம்பிக்கை கொண்ட ஒருவர்தான் ஜனாதிபதியாக வர முடியும்.  அதனால்தான் ஒபாமாவைப் பிடிக்காதவர்கள் அவர் கிறிஸ்தவரே இல்லை என்றும் அவர் ஒரு முஸ்லீம் என்றும் (கென்யா நாட்டைச் சேர்ந்த அவர் தந்தை ஒரு முஸ்லீம்.  ஒபாமா பிறந்து இரண்டு வருடங்களிலேயே அவர் ஒபாமாவின் தாயை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார்.  ஒபாமா அவர் தாய், தாயின் பெற்றோர்கள் ஆகியோரால் கிறிஸ்தவராக வளர்க்கப்பட்டார்.)  கூறி அவருடைய வெற்றி வாய்ப்புக்களைக் குறைக்கப் பார்த்தனர்.  ஆனால் அது ஒன்றும் எடுபடவில்லை.  அவரைப் பற்றிய இப்படிப்பட்ட வதந்திகளைக் கிளப்புபவர்கள் இப்போதும் இருக்கிறார்கள்.

     
    காந்திஜி எல்லா  மதங்களும் சமம் என்றும்  இந்து மதமும் இஸ்லாம் மதமும் பாரதத் தாயின் இரு கண்கள் என்றும் இந்தியாவின் ஒற்றுமைக்காக இந்திய மக்களுக்கு போதித்துவந்தாலும்  தான் ஒரு இந்து என்பதை எப்போதும் மறக்கவில்லை.  அவருடைய அரசியல் வாரிசான  முதல் பிரதம மந்திரி நேருஜி ஒரு போதும் தான் ஒரு இந்து என்று மக்களுக்கு அடையாளம் காட்டிக்கொள்ளவில்லை.  அவரைப் பொறுத்த வரை இந்தியத் தொழிற்சாலைகள்தான் கோவில்கள்.  இந்திய அரசியலில் மதத்தை விட ஜாதிகள்தான் அதிக இடம் வகிக்கின்றன.  ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவரை அந்தத் தொகுதியில் வேட்பாளராக நிறுத்துவது அரசியல் கட்சிகள் கைக்கொள்ளும் வழக்கம்.  ஆனால் பிரதமரோ மாநிலத்தின் முதலமைச்சரோ எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று யாரும் அவ்வளவாக அக்கறைப்படுவதில்லை.  ஜனாதிபதி இந்து சமயத்தைச் சேர்ந்தவர் என்றால் உப-ஜனாதிபதி பதவிக்கு ஒரு முஸ்லீமை நியமிப்பது ஒரு மரபாகிவிட்டிருக்கிறது.  அவ்வளவே.

    கிறிஸ்தவ மதத்தில் அதிலும் கத்தோலிக்கப் பிரிவில் கருத்தடைச் சாதனங்கள் உபயோகிப்பதும் கருச்சிதைவு செய்துகொள்வதும் பெரிய பாவங்களாகக் கருதப்படுகின்றன.  தகாத உறவால், கற்பழிப்பால் ஏற்பட்ட கருப்பம், தாயின் உடல்நிலைக்குக் கேடு ஆகிய இவை மட்டும் கருச்சிதைவு கூடாது என்ற விதிக்கு அப்பாற்பட்டவை.  (இவை கூட இறைவனின் செயலால் விளைந்தவை அதிலும் கருக்கலைப்பு செய்யக் கூடாது என்று கூறும் குடியரசுக் கட்சி அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.)  இவை தவிர மற்ற எந்தக் காரணங்களுக்காகவும் கருத்தடை செய்துகொள்வது இறைவனுக்கு எதிரான செயல்.  கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள் இதை வலியுறுத்தி மக்கள் மத்தியில் ஆதரவு தேட முயற்சிக்கிறார்கள்.  ஒபாமா போன்ற தாராளவாதிகள் இதை வற்புறுத்துவதில்லை.  ஆகையால் கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள் ஒபமாவிற்கு ஓட்டளித்தால் இந்த வகையான கிறிஸ்தவ மதிப்பீடுகள் வலுவிழந்துவிடும் என்று கூறுகிறார்கள்.  தங்களுக்கு ஓட்டளித்தால் அமெரிக்காவில் இந்த மதிப்பீடுகள் மாறாமல் இருக்கும் என்று உறுதி அளிக்கிறார்கள்.  ஒபாமா கொண்டுவந்த, (ஒபாமா மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டால்) 2014-லிலிருந்து அமலுக்கு வரவிருக்கும் மருத்துவ வசதிச் சட்டப்படி (Affordable Health Care law) மருத்துவ இன்சூரன்ஸ் கம்பெனிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகக் கருத்தடைச் சாதனங்களை வழங்க வேண்டும்.  கம்பெனிகள், மருத்துவமனைகள் தங்கள் ஊழியர்களுக்கு இலவசமாகக் கருத்தடைச் சாதனங்கள் கொடுக்கும் மருத்துவ இன்சூரன்ஸ் கம்பெனிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஒபாமா இப்போதே போட்ட நிபந்தனையை அடிப்படை மதவாதிகள் நடத்தும் மருத்துவமனைகள் எதிர்த்தன.

    பெண்கள் கருச் சிதைவு செய்துகொள்வதை யார் எதிர்க்கிறார்கள், யார் எதிர்க்கவில்லை என்பது பெரிதாக விவாதிக்கப்படுகிறது.   உப-ஜனாதிபதி தேர்தல் விவாதத்தில் பைடனையும் ரயானையும் கேட்ட போது பைடன், ‘கருச் சிதைவு செய்துகொள்வதை என் மதம் எதிர்ப்பதால் எனக்கு அதில் ஒப்புதல் இல்லை.  ஆனால் நான் என்னுடைய மதக்கொள்கைகளை இதில் நம்பிக்கை இல்லாதவர்கள் மீதும் மற்ற மதத்தவர்கள் மீதும் திணிக்கும் எண்ணம் எனக்கில்லை.  அதனால் கருச் சிதைவு கூடாது என்று சட்டத்தை நான் ஆதரிக்கவில்லை’ என்றார்.  ஆனால் ரயான் ‘என் மனைவி முதல் முறையாகத் தாயாகத் தயாராக இருந்தபோது எடுத்த ஸ்கேனில் என் குழந்தையின் இதயத் துடிப்பைக் கேட்டேன்.  அப்படி உயிர் பெற்ற கருவை ஏப்படிச் சிதைப்பது.  கருச் சிதைவை நான் எப்போதுமே ஆதரிக்கப் போவதில்லை’ என்றார்.

    அமெரிக்காவில் திட்டமிட்டுப்  பெற்றோராதல் (Planned Parenthood) என்ற ஒரு அமைப்பு இருக்கிறது.  இதற்கு மத்திய அரசிடமிருந்து மானியம் கிடைக்கிறது.  இது பெண்களுக்குக் கருத்தடைச் சாதனங்கள் வழங்குவதோடு பிள்ளை பெற்றுக்கொள்வதிலும் யோசனை கூறுகிறது.  ராம்னி தான் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்த அமைப்புக்குரிய மானியத்தை உடனே நிறுத்துவேன் என்கிறார்.  கிறிஸ்தவ மத அடிப்படைக் கோட்பாடுகளைக் கடைப்பிடிக்காத இப்படிப்பட்ட அமைப்புகளுக்கு அரசு உதவி இல்லையாம்.

    இந்தியாவில் எல்லா  ஊர்களிலும் கருச் சிதைவு க்ளினிக்குகள் இருக்கின்றன.  கருச்சிதைவு செய்துகொள்ள  விரும்பும் பெண்களை யாரும் தடுக்கப் போவதில்லை.  சட்டம் இருக்கிறதோ என்னவோ.  ஆனால்  அரசியல்வாதிகளோ மக்களோ அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை.

    ஓரினச் சேர்க்கையை ஆதரிப்பதா, ஓரினச் சேர்க்கைத் திருமணங்களை சட்டப்படி அனுமதிப்பதா என்பதில் இரு கட்சிகளுக்கும் இடையில் அமெரிக்காவில் பெரிய வித்தியாசம் இருக்கிறது.  மறுபடி குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் பைபிளில் ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்வதுதான் சரி என்று கூறியிருப்பதால் ஓரினச் சேர்க்கைத் திருமணங்கள் இறைவனுக்கு எதிரான செயல் என்றும் அதை எப்போதும் ஆதரிக்கப் போவதில்லை என்றும் கூறிவருகிறார்கள்.. சில மாநிலங்களில் ஓரினச் சேர்க்கைத் திருமணங்கள் சட்டப்படி செல்லும்.  ஆனால் மத்திய அரசு இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்காமல் இருந்தது.  வருடம் முடிந்ததும் ஒவ்வொரு பிரஜையும் மத்திய அரசுக்கு தங்கள் வருமான வரி பற்றித் தாக்கல் செய்ய வேண்டும்.  அப்படிச் செய்யும் போது திருமணம் செய்துகொண்டு ஆணும் பெண்ணுமாக வாழும் தம்பதிகள் சேர்ந்து தாக்கல் செய்யலாம்.  அவர்களுக்குச் சில சலுகைகளும் உண்டு.  ஒரு பெண்ணும் ஒரு பெண்னும் அல்லது ஒரு ஆணும் ஒரு ஆணுமாக சேர்ந்து வாழும் தம்பதிகளுக்கு – இவர்கள் வாழும் மாநிலத்தில் அவர்கள் தம்பதிகளாகக் கருதப்பட்டாலும் – ஈரினச் சேர்க்கைத் தம்பதிகளுக்குரிய எந்த சலுகையும் இல்லை.  இன்னொரு விதமாகச் சொன்னால் மத்திய அரசு இந்த ஓரினச் சேர்க்கைகளை ஆதரிக்கவில்லை.  தேர்தலில் இது ஒரு விஷயமாக விவாதிக்கப்படுவதால் சில மாதங்களுக்கு முன் பைடனிடம் இது பற்றிச் சிலர் கேட்ட போது ‘எனக்கு அதில் எந்த ஆட்சேபணையும் இல்லை’ என்று சொல்லியதைத் தொடர்ந்து ஒபாமாவும் அதை ஆதரிப்பதாகக் கூறினார்.  அதனால் ஒபாமா மீண்டும் பதவிக்கு வந்தால் இது மத்திய அரசாலும் ஒப்புக்கொள்ளப்படும் வாய்ப்பு இருக்கிறது.

    இந்தியாவில் ஓரினச் சேர்க்கைகள் அமெரிக்காவில்  இருக்கும் அளவிற்கு இல்லை  என்று நான் சொல்லுகிறேன்.  இந்திய சமூகத்தில் அமெரிக்க சமூகத்தில் இருப்பது போல் தங்கள் அபிலாஷைகளை வெளியே சொல்வதற்கு சுதந்திரம் இல்லையாதலால் ஓரினச் சேர்க்கையாளர்கள் தங்கள் நிலைமையை வெளியே சொல்வதில்லை  என்று அமெரிக்கர்கள் கூறுகிறார்கள்.  எது எப்படியானாலும் இந்தியாவில்  இது ஒரு தேர்தல் பிரச்சினையாகக் கருதப்படவில்லை.

    அமெரிக்காவில் இப்போது  கல்வி பெறுவது பெரிய  செலவினமாகிவிட்டது.  பல்கலைக்கழகங்கள் முன்னைக்கு இப்போது கல்விக்  கட்டணத்தை மிகவும் அதிகரித்திருக்கின்றன.  நல்ல பல்கலைக்கழகங்களுக்கு வசதி படைத்த மாணவர்கள் மட்டுமே  செல்ல முடிகிறது.  மற்றவர்கள் தங்கள் படிப்பை முடித்துவிட்டு வரும்போது பல ஆயிரக் கணக்கான  டாலர் கடனோடு வெளியில் வருகிறார்கள்.  அதைத் திருப்பிக் கட்ட மிகவும்  சிரமப்படுகிறார்கள்.  மாணவர்களுக்கு  படிப்புச் செலவுக்குரிய கடனை அரசே வழங்கும் என்றும் வட்டி விகிதமும் கணிசமாகக் குறைக்கப்படும் என்றும் ஜனநாயகக் கட்சி கூறுகிறது.   (இப்போதும் மாணவர்கள் படிப்பிற்கு வாங்கிய கடனுக்குக் கொடுத்த வட்டியை வருமான வரி தாக்கல் செய்யும் போது வருமானத்திலிருந்து கழித்துக்கொள்ளலாம்.)  ஆனால் குடியரசுக் கட்சி ராம்னி மாணவர்களிடம், ‘எந்தப் பல்கலைக்கழகத்தில் குறைந்த கட்டணம் இருக்கிறது என்று தேர்வு செய்து அதில் சேருங்கள், உங்கள் பெற்றோரிடம் உதவி பெறுங்கள்’ என்கிறார்.

    இப்போது அமெரிக்காவில்  ஏழரை சதவிகிதம் வேலையில்லாத் திண்டாட்டம் இருக்கிறது.  பல லட்சம் வேலைகளை உருவாக்கி இந்த நிலைமையை மாற்றுவோம், ஜனநாயகக் கட்சியினரால் இது முடியாதது என்பது குடியரசுக் கட்சியினரின் வாதம்.   ஜனநாயகக்கட்சியினரோ குடியரசுக்கட்சியினர் சொல்வது போல் அவ்வளவு வேகமாக வேலைகளை உருவாக்க முடியாது, எப்படியும் பொருளாதாரம் முன்னேறி வருவதால் சீக்கிரமே வேலையில்லாத் திண்டாட்டம் நீங்கிவிடும் என்கின்றனர்.

    அமெரிக்கா குடியேறிகளால் உருவான நாடு என்பார்கள்.  இப்போதும் உலகின் பல கோடிகளிலிருந்து குடியேறிகள் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.  அமெரிக்கா அறிவாளிகள், திறமைசாலிகள் உலகின் எந்த மூலையிலிருந்தாலும் அவர்கள் அமெரிக்காவிற்கு வர விரும்பினால் அவர்களை இரு கரம் நீட்டி வரவேற்கிறது.  அதே சமயத்தில் அனுமதி இல்லாமல் வருபவர்களை திருப்பி அனுப்புவதிலும் தயக்கம் காட்டுவதில்லை.  அமெரிக்காவிற்கும் அமெரிக்காவிற்குத் தெற்கே இருக்கும் மெக்ஸிகோ நாட்டிற்கும் இடையே உள்ள எல்லை நீண்டதாயினும் அந்த எல்லையைத் தாண்டி மெக்ஸிகோ மக்கள் அமெரிக்காவிற்குள் வருவது ஓரளவு எளிதாக இருப்பதால் மெக்ஸிகோவினர் இங்கு சரியான விசா இல்லாமல் வருகிறார்கள்.  இப்படி நூற்றி இருபது லட்சம் பேர் இருப்பதாகக் கூறுகிறார்கள்.  அவர்களை அப்படியே ஈவு இரக்கம் இல்லாமல் வெளியேற்றுவதா அல்லது குற்றம் புரிந்தவர்களைத் தவிர மற்றவர்களுக்குக் குடியுரிமை கொடுப்பதா என்பதில் இரண்டு கட்சிகளுக்கும் மிகுந்த வேற்றுமை இருக்கிறது.

    1971-இல் பங்களா தேஷ்  அப்போதைய பாகிஸ்தானிலிருந்து  பிரிந்த போது நிறையப்  பேர் அங்கிருந்து இந்தியாவிற்கு அகதிகளாக ஓடிவந்து மேற்கு வங்காளத்திலும் அசாமிலும் தங்கினர்.  அவர்களைத் திருப்பி அனுப்புவது பற்றித் தேர்தல் சமயத்தில் மத்திய அரசு எந்தக் கருத்துக் கணிப்பையும் எடுக்கவில்லை.  இது அகில இந்தியப் பிரச்சினையாக இல்லை..

    தேர்தலைச் சாக்காக  வைத்துக்கொண்டு அமெரிக்காவிலும்  பணத்தைத் தண்ணீராகச் செலவழிக்கிறார்கள்.  பெரிய பெரிய பணக்காரகள் தாங்கள் யார் ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கிறார்கள்.  அரசியல் கட்சிகள் அதை தேர்தல் விளம்பரங்களில் செலவிடுகின்றன.  ஆனால் எந்தக் கட்சியும் வாக்காளர்களுக்கு நேரடியாகப் பணம் கொடுத்துத் தங்களுக்கு ஓட்டுப் போடச் சொல்லுவதில்லை.   இந்தியாவில் தேர்தல் சமயத்தில் எப்படிப் பணம் நேரடியாக ஓட்டளிப்பவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது என்பதைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

    அமெரிக்காவில் ஊழல் புரிபவர்களை சட்டம் பார்த்துக்கொள்வதால்  ஊழலை ஒழிப்பதாக எந்தக் கட்சியும்  சவால் விடுவதில்லை.

    ராஜிவ் காந்தி இறந்த  போதே அவர் சம்பந்தப்பட்ட  போபர்ஸ் ஊழல் விசாரணையும்  இறந்துவிட்டது என்று நினைக்கிறேன்.  சோனியா காந்தியின் மருமகன் நில விஷயத்தில் ஊழல் புரிந்ததாகச் செய்தி வந்திருக்கும் இந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சிதான் ஊழலை ஒழிக்கப் பாடுபடுகிறது என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் அவர்.  ஊழல் நிறைந்த காங்கிரஸ் கட்சி என்று காங்கிரஸைக் குறைகூறும் பி.ஜே.பி.யின் அரசியல் தலைவர்கள் ஊழல்புரிவதில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள்.  நம் நீதிமன்றங்கள் செயல்படும் வேகம் ஊழல் புரிந்தவர்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்திருக்கிறது; அவர்கள் இறக்கும் வரை அவர்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

    ஊழலே வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்ட பிறகு  தேர்தல் சமயத்தில் அது  பற்றிப் பேச என்ன இருக்கிறது?

    இந்தியாவில் அரசியல்வாதிகள் எளிமையாக இருக்கிறார்களோ இல்லையோ எளிமையாக இருப்பதாகக்  காட்டிக்கொள்வார்கள்.  அமெரிக்காவில்  அப்படியல்ல.  தேர்தலுக்கு  நிற்பவர்களும் அவர்களுடைய மனைவிமார்களும் அல்லது கணவன்மார்களும் மிக ஆடம்பரமாக உடையணிந்துகொண்டு வருவார்கள்.  அதிலும் பெண்கள் எக்கச்சக்க மேக்கப் போட்டுக்கொண்டு வருவார்கள்.  முடியலங்காரம் செய்துகொள்ளாத யாரும் அமெரிக்காவில் இல்லை என்று சொல்லலாம்.  ஒபாமாவின் மனைவி மிஷல் ஒபாமா நேரத்திற்கு ஒரு உடை அணிந்துகொண்டு வருகிறார்.  நான்கு வருஷங்களுக்கு முன்பிருந்ததை விட – அதாவது ஒபாமா முதலில் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் போதிருந்ததை விட – இப்போது நிறைய உடற் பயிற்சிகள் செய்து உடலை ட்ரிம்மாக வைத்துக்கொண்டிருக்கிறார் மிஷல் ஒபாமா.  எவ்வளவு இளமையாகத் தன்னை காட்டிக்கொள்ள முடியுமோ அவ்வளவு இளமையாகக் காட்டிக்கொள்ள முயல்கிறார்.

    இது இந்தியாவில் இல்லை  என்று சொல்லலாம் அல்லவா?
     
    படத்திற்கு நன்றி:
     
    http://www.bbc.co.uk/news/world-us-canada-20091303
     

    Share
  • தேர்தல்களும் பொய்களும்

     

    நாகேஸ்வரி அண்ணாமலை

    அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் மிகவும் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது.  இரு கட்சி வேட்பாளர்களும் மிகத் தீவிரமாகப் பிரச்சாரம் நடத்தி வருகிறார்கள்.  ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் உதவி ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் இடையே பொது மேடையில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.  அமெரிக்கர்கள் அரசியல் தலைவர்கள் இப்படி விவாதங்கள் நடத்துவது தங்கள் நாட்டிற்கே சிறப்பான செயல் என்று பெருமைப்பட்டுக்கொள்கிறார்கள்.  அவர்கள் அப்படி பெருமைப்பட்டுக்கொள்வதிலும் நியாயம் இருப்பதாகவேப்படுகிறது.  கலைஞரும் அம்மாவும் இப்படி நேருக்குநேர் விவாதத்தில் கலந்துகொள்வதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.  

    சென்ற 3-ஆம் தேதி ராம்னிக்கும் ஒபாமாவுக்கும் இடையே நடந்த  விவாதத்தில் ஒபாமா அடித்துப் பேசவில்லை என்று பரவலாக ஒரு எண்ணம் எல்லோரிடமும் இருந்தது.  ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த சிலர் ஒபாமா ஜெயிக்கும் வாய்ப்புகளையே  அது குறைத்துவிட்டதோ என்று கவலைப்பட்டனர்.  ஏனோ அன்று ஆரம்பத்திலிருந்தே ஒபாமா உற்சாகமாக இல்லாதது போல் தோன்றியது.  ராம்னி அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்று பொய்யாகக் கூறிய போதெல்லாம் அவர் அதை எப்படிச் செய்வார் என்று அழுத்திக் கேட்கவில்லை.  இத்தனைக்கும் விவாதம் நடந்த அக்டோபர் மூன்று பாரக் ஒபாமா-மிஷல் ஒபாமாவின் திருமண நாள்.  அவரே அதை விவாதம் ஆரம்பிக்கும் முன் கூறினார்.  அன்று ஏன் உற்சாகமின்றி இருந்தார் என்று புரியவில்லை.

    முதல் விவாதம் ஆரம்பிப்பதற்கு முன்பே குடியரசுக் கட்சியினர் சிறந்த பேச்சாளரும் விவாதம் செய்வதில் வல்லமை படைத்தவருமான ஒபாமாவை எப்படி ராம்னி சந்திக்கப் போகிறார் என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.  ராம்னியும் அப்படி பயந்துகொண்டிருந்திருக்க வேண்டும்.  ஒபாமா அவ்வளவு துடியாக இல்லை முதலிலேயே கண்டுபிடித்துவிட்ட ராம்னிக்குத் தைரியம் பிறந்திருக்க வேண்டும்.  தான் சொல்வதெல்லாம் சரி என்பது போல் சரமாரியாகப் பொய்களைச் சொன்னதோடு யாராலும் எளிதாகச் சாதிக்க முடியாதவற்றை எல்லாம் தான் சாதித்துவிடுவேன் என்று அள்ளிவிட்டுக்கொண்டிருந்தார்.  ஆனால் ஒபாமா இது எதையும் மறுக்கவில்லை. விவாதத்திற்குப்பின் தொலைக்காட்சிளில் காமெடியன்கள் ஒபாமாவைக் கேலி பண்ணிக்கொண்டிருந்தார்கள். ஒரு காமெடியன், ராம்னி ஒசாமா பின்லாடனைக் கொன்றது தானே என்றார்; ஒபாமா தலையசைத்துக்கொண்டிருந்தார் என்று கிண்டலடித்தார்!

    ஜனாதிபதி வேட்பாளர்களுக்கிடையே விவாதம்  நடந்து முடிந்து ஒன்பது நாட்களில் உதவி ஜனாதிபதிகளுக்கான விவாதம் ஒபாமாவின் உதவி ஜனாதிபதியான ஜோ பைடனுக்கும்  குடியரசுக் கட்சி வேட்பாளரான பால் ரயானுக்கும் இடையே நடந்தது.  பைடன் நாற்பது வருஷங்களாக அமெரிக்க செனட்டில் செனட்டர் பதவி வகித்து நல்ல அனுபவம் பெற்றவர்.  ரயானுக்கு சில வருடங்கள் கீழவை அங்கத்தினராக இருந்த அனுபவம் மட்டுமே உண்டு.  அவரும் அமெரிக்காவின் கடன் சுமையைக் குறைக்கச் சொன்ன சில யோசனைகள் கவைக்கு உதவாதது.  அவர் சில பொய்களை அள்ளிவிடும் போதெல்லாம் பைடன் சும்மா இருக்கவில்லை.  ஏளனமாகச் சிரித்தார்; குறுக்கே பேசிப் பதிலடி கொடுத்தார்.  ஒபாமா செய்யத் தவறியதை பைடன் செய்தார் என்று ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அவரைப் புகழ்ந்துகொண்டும் பைடன் அத்துமீறலாக நடந்துகொண்டார் என்று குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் குறைகூறிக்கொண்டும் இருந்தனர்.

    அக்டோபர் 16-ஆம் தேதி ராம்னிக்கும் ஒபாமாவிற்கும் இடையே இரண்டாவது விவாதம் நடந்தது.  இதில் உசுப்பிவிட்ட சேவல் போல் ஒபாமா சண்டைக்களத்தில் இறங்கினார்.  இது வரை யாருக்கு ஓட்டுப் போடுவது என்று முடிவுசெய்ய முடியாத எழுபது பேர்களை விவாதம் நடக்கும் இடத்திற்கு அழைத்து  அவர்கள் வேட்பாளர்களைக் கேள்விகள் கேட்கும்படி செய்தனர்.  எல்லாம் உருப்படியான கேள்விகள். முதலிலேயே ஒபாமாவின் பதில்களில் வேகம் இருந்தது.  கடைசி வரை அந்த வேகம் குறையாமல் இருந்தது.  இதைக்கண்டு ராம்னி கொஞ்சம் பயந்துவிட்டது போல் நான் உணர்ந்தேன்.  வழக்கம் போல் ஒபாமா செய்யத் தவறியதாகத் தான் நினைத்ததையே சொல்லிக்கொண்டிருந்தார்.  கடந்த நான்கு வருடங்களாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் ஒபாமா ஏன் இது வரை அமெரிக்கப் பொருளாதாரத்தைச் சீர்செய்யவில்லை என்று அவர் அடிக்கடி கூறுவதை இந்தக் கூட்டத்திலும் கூறினார்.  அதற்குப் பதிலடி கொடுத்த ஒபாமா தான் ஆட்சிக்கு வரும்போது ஜனாதிபதி புஷ்ஷின் கொள்கைகளால் எப்படிப் பொருளாதாரம் சீரழிந்திருந்தது என்றும் தன்னுடைய ஆட்சி அதிலிருந்து மீள்வதற்கு எப்படிப் பிரயத்தனப்பட்டுக்கொண்டிருக்கிறது என்றும் எடுத்துச் சொன்னார்.  இது வரை ஒபாமா இப்படி புஷ்ஷை நேரடியாகக் குறை கூறியதில்லை.

    கடைசியாக சமீபத்தில் லிபியாவின் பென்ஹாஸி நகரில் நடந்த ஆர்ப்பாட்டங்களின் விளைவாக லிபியாவின் அமெரிக்க தூதரும் இன்னும் மூன்று அமெரிக்கர்களும் கொல்லப்பட்ட விவகாரத்தைக் கொண்டுவந்து ஒபாமாவால் அமெரிக்காவைப் பாதுகாக்க முடியாது என்று பாய்ந்தார் ராம்னி.  அந்தச் சம்பவம் நடந்து பதினான்கு நாட்களுக்குப் பிறகே ஒபாமா அது பயங்கரவாதிகளின் செயல் என்று அறிவித்ததாகவும் அது வரை மும்முரமாக கலிபோர்னியாவில் தேர்தல் பிரச்சாரம் செய்துவந்ததாகவும் ராம்னி குற்றம் சாட்டினார்.  அது நடந்த மறு நாளே வெள்ளை மாளிகையின் ரோஜாப்பூத் தோட்டத்தில் தான், அது பயங்கரவாதிகளின் செயல் என்று சொன்னதை ஒபாமா எடுத்துக் கூறினார். அதையடுத்து நடுவராக இருந்தவரும் ’ஆம், ஜனாதிபதி ஒபாமா அப்படிச் சொன்னார்’ என்று கூறியதும் ராம்னிக்கு அசடு வழிந்தாலும், .ஒபாமா பலவீனமானவர் என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.

    ஒபாமாவின் இரண்டாவது விவாதத்தைக் கேட்ட பிறகு அவரது ஆதரவாளர்கள் மிகவும் குஷியாக இருக்கிறார்கள்.  அவர் ஜெயிக்க வேண்டும் என்று இரவு பகலாக வேண்டிக்கொண்டிருக்கும் ஒரு பெண் ‘இனி நாம் நிம்மதியாக இருக்கலாம்’ என்றார்.

    தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்த நாளிலிருந்து ராம்னி, ஒபாமா செய்யத் தவறியது, செய்திருக்க வேண்டியது என்று பல விஷயங்களில் பொய் கூறிக்கொண்டிருந்தார்.  ஒரு இந்திய நண்பரிடம் அமெரிக்காவில் அரசியல்வாதிகள் பொய் சொல்கிறார்கள் என்று சொன்னதும் அமெரிக்க அரசியல்வாதிகளும் இந்திய அரசியல்வாதிகளைப் போல் பொய் சொல்லுகிறார்களா என்று கேட்டு மிகவும் மகிழ்ந்து போனார்!  என்னே அரசியல்வாதிகளுக்கிடையே ஒற்றுமை!

    படங்களுக்கு நன்றி :

    http://www.bbc.co.uk/news/world-us-canada-20000409

     

    Share
  • துபாய்ப் பயணம்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    எனக்கு வெகு நாட்களாக அரேபிய தீபகற்பத்திலுள்ள ஏதாவது ஒரு நாட்டைப் பார்க்க வேண்டும் என்று ஆசை. இந்த நாடுகள் 1970 வரை பாலைவனமாக இருந்தவை. எழுபதுகளில் எரிபொருள் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இவை எல்லாம் இப்போது செல்வம் கொழிக்கும் நாடுகளாக மாறியிருக்கின்றன. வெளிநாடுகளிலிருந்து பலரை வரவழைத்துத் தங்கள் நாடுகளை நவீன நாடுகளாக ஆக்கிக்கொண்டிருக்கின்றன. துபாயும் இதில் ஒன்று. லிஸ்பனிற்குப் போனபோது வரும் வழியில் துபாயையும் பார்த்து வரலாம் என்று திட்டமிட்டோம்.

    லிஸ்பனிலிருந்து துபாய்க்கு எட்டு மணி நேரப் பயணம். பயணக் களைப்போடு துபாய் விமான நிலையத்தில் இறங்கிக் குடிபுகல் பகுதிக்குச் சென்றோம். எல்லா விமான நிலையக் குடிபுகல் பகுதிகளில் போல் அலுவலர்கள் கறாராக இருந்தனர். துபாய்க்குள் நுழைவதற்கு வேண்டிய விசாவை மின்னஞ்சல் மூலம் பெறலாம். இருப்பினும், விமானநிலையத்தில் உள்ள குடிபுகல் பகுதியில் அங்கிருக்கும் அலுவலரைப் பார்க்கும் முன்பு நாம் படி எடுத்துக்கொண்டு வந்த மின்விசாவை இன்னொரு அலுவலரிடம் போய் சரிபார்த்துக்கொண்டு வர வேண்டும். குடிபுகல் பகுதியில் உள்ள ஆபீஸர் நம் கண்களைப் படம் எடுத்துக்கொண்டு மற்ற ஆவணங்களைச் சரிபார்த்து விட்டு அனுப்புகிறார். இங்கு வேலை பார்க்கும் அத்தனை பேரும் அவர்களுடைய பாரம்பரிய உடைகளில் இருந்தனர். இதை விட்டால் வேறு எங்கும் இம்மாதிரி பாரம்பரிய உடைகளில் யாரையும் பார்க்கவில்லை. கடைகள், மால்கள், காட்சியகங்கள், ஓட்டல்கள் என்று எங்கு பார்த்தாலும் வெளிநாட்டவர்கள்தான் சீருடை அணிந்து வேலை பார்க்கிறார்கள். துபாய் குடிமக்கள் என்ன செய்கிறார்கள் என்ற வியப்பு எங்களுக்கு ஏற்பட்டது.

    துபாய் விமான நிலையம் மிகப் பெரியது. நிலையத்திற்குள் நிறைய நடக்க வைக்கிறார்கள். இப்போது எமிரேட்ஸ் விமானக் கம்பெனிக்கு இந்த விமான நிலையம்தான் விமானப் போக்குவரத்து மையம். கம்பெனி விமானங்கள் வந்த வண்ணமும் அங்கிருந்து கிளம்பும் வண்ணமுமாக இருக்கின்றன. விமான நிலையத்திற்கு வெளியே வந்தால் வரிசையாக டாக்சிகள் சீருடை போட்டுக்கொண்டு வந்தது போல் ஒரே மாதிரிக் கலரில் நிற்கின்றன. டாக்சிகள் மட்டுமல்ல டாக்சி ஓட்டுநர்களும் சீருடை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதுவும் ஒரு அழகாகத்தான் இருக்கிறது.

    நாங்கள் டாக்சிக்குள் ஏறி உட்கார்ந்ததும் டாக்சி டிரைவரிடம் நாங்கள் போக வேண்டிய ஓட்டல் முகவரியைக் கூறினோம். அதை அவர் காதில் வாங்கினாரா என்று சரியாகத் தெரியவில்லை. அதனால் மறுபடி கூறினோம். இந்த முறை தனக்கு அந்த இடம் என்னவென்று தெரியும் போல் தலையை ஆட்டிக்கொண்டார். வேறு எதுவும் பேசவில்லை. அவர் இந்தியாவிலிருந்து வந்து அங்கு டாக்சி ஓட்டுநர் வேலை பார்க்கிறார். அதிலும் தமிழர் போலத் தெரிந்தது. அவர் வாயைத் திறந்தால் அல்லவா ஓரளவாவது அவர் எந்தப் பகுதியிலிருந்து வந்திருக்கிறார் என்று தெரிந்து கொள்ள முடியும்? மேலும் அவர் எங்கள் பக்கம் திரும்பவே இல்லை. எங்களை ஓட்டலில் எவ்வளவு சீக்கிரம் கொண்டு போய் விட்டு விட்டு எங்கள் பார்வையிலிருந்து மறைய முடியுமோ அவ்வளவு சீக்கிரம் போய் விடுவதிலேயே குறியாக இருந்தார்.

    விமானநிலையம் முழுவதும் ஏர்கண்டிஷன் செய்யப்பட்டு இதமாக இருந்தது. ஆனால் வெளியே வந்ததுமே அந்த விடிகாலை நேரத்திலும் – காலை எட்டு மணிக்கு 35 டிகிரி செல்சியஸ் இருந்தது – வெக்கை தாக்கியது. ஓட்டலை அடைந்து டாக்சியிலிருந்து இறங்கியதும் முதல் முதலாக துபாய் வெப்பத்தை அனுபவித்தோம். மறுபடி ஓட்டலுக்குள் நுழைந்ததும் குளுகுளுவென்றிருந்தது.

    துபாயில் இரண்டே நாட்கள் தான் தங்கினோம். அதனால் துபாயின் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய நேரம் இருக்கவில்லை. பல முறை டாக்சியில் சென்றோம். ஒவ்வொரு முறையும் எங்களை ஏற்றிச் சென்ற டிரைவர் இந்தியாவிலிருந்தோ, பாகிஸ்தானிலிருந்தோ அல்லது பங்களாதேஷிலிருந்தோ வந்தவராக இருந்தார். அதில் தமிழர்களும் இருந்தனர். எங்களை விமான நிலையத்திலிருந்து கூட்டிவந்த ஓட்டுநரைப் போல் அல்லாது இவர்கள் எங்களிடம் சரளமாகப் பேசினர். துபாயில் டாக்சி ஓட்டுநர்கள் எல்லோரும் மேலே குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வந்தவர்கள்தான் என்று பின்னால் தெரிந்தது. பாகிஸ்தானிலிருந்து வந்த ஒருவர் எங்களுக்கு இந்தி புரியும் என்று அவராக நினைத்துக்கொண்டு பிரயாணம் முழுவதும் இந்தியிலேயே பேசினார். இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து வந்தவர்கள் அவர்களுக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் பேசினார்கள். இவர்கள் எல்லோரும் தங்கள் டாக்சிகளில் இந்தி சினிமாப் பாட்டுக்களைப் போட்டுக் கேட்டுக்கொண்டு ரசித்துக்கொண்டிருந்தார்கள். துபாயில் நிறைய டாக்சிகள் இருக்கின்றன. எந்த இடத்திலிருந்து வேண்டுமானாலும் டாக்சிகள் கிடைக்கும். டாக்சி வாடகையும் குறைவு.

    துபாயின் ஜனத்தொகையில் 70 சதவிகிதம் வெளிநாட்டுக்காரர்கள். இவர்கள் அங்கு பல விதமான வேலைகள் செய்கிறார்கள். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்கள் டாக்சி ஓட்டுநர்களாக, காட்சியகங்களில் கண்காணிப்பாளர்களாக, செக்யூரிட்டி ஆட்களாக வேலை பார்க்கிறார்கள். அந்தந்த நாடுகளிலிருந்து தரகர்கள் மூலம் வேலை தேடித் தரும் கம்பெனிகளுக்குப் பணம் கொடுத்து இங்கு வந்திருக்கிறார்கள். இவர்களுக்குத் தொடர்ந்து பன்னிரெண்டு மணி நேர வேலை. இடையில் விடுப்பு எதுவும் கிடையாது. அதன் பிறகு பன்னிரெண்டு மணி நேர ஓய்வு. விடுமுறை நாட்கள் எதுவும் கிடையாது. துபாய்க்கு வந்து தொடர்ந்து இரண்டு வருடங்கள் வேலை பார்த்தால் இரண்டு மாதங்களுக்கு சம்பளத்தோடு விடுமுறை கொடுக்கிறார்கள். ஒரு வருடத்திலேயே போக விரும்பினால் ஒரு மாத சம்பளமும் ஒரு மாத விடுமுறையும் உண்டு. தாய்நாட்டிற்குப் போய்வர டிக்கெட் செலவும் கம்பெனி கொடுக்கிறது.

    துபாய் இன்று செல்வம் கொழிக்கும் நாடாக விளங்குகிறது. மூவாயிரம் வருஷங்களுக்கு முன்பே இப்பகுதியில் மனித இனம் வாழ்ந்ததற்கு அடையாளங்கள் இருப்பதாகக் கருதப்பட்டாலும் 18-ஆம் நூற்றாண்டிலிருந்துதான் இதன் சரித்திரம் கிடைக்கிறது. 1799-இல் அபுதாபியின் கீழ் இது ஒரு பகுதியாக விளங்கியது. 1833-இல் அபுதாபியை ஆண்ட அமீர் பரம்பரையைச் சேர்ந்த ஒருவர் 800 ஆட்களுடன் இப்போது துபாய் இருக்கும் இடத்திற்கு வந்து துபாயை தனி நாடாகப் பிரகடனம் செய்து ஆளத் தொடங்கினார். இன்று வரை இவருடைய பரம்பரைதான் துபாயை ஆண்டு வருகிறது.

    அந்தப் பகுதியில் இருந்த சிறிய நாடுகள் எல்லாம் பிரிட்டிஷ் அரசோடு தங்களைக் கடற்கொள்ளைக்காரர்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொண்டன. 1841-இல் துபாயில் அம்மை நோய் பரவி பல மக்கள் இறந்து போயினர். பின் 1892-இல் பெரிய தீ விபத்து ஏற்பட்டு பல கட்டடங்கள் நாசமாயின. அதே ஆண்டில் துபாய் பிரிட்டிஷ் அரசோடு இன்னொரு ஒப்பந்தம் செய்துகொண்டது. இப்படி பிரிட்டிஷ் அரசின் பாதுகாப்பில் துபாய் இருந்து வந்தாலும் தனி நாடாகவே இருந்து வந்தது. அப்போது துபாய் முத்துக்களுக்கு உலகம் பூராவும் மவுசு இருந்தது. ஆயிரத்தித் தொளாயிரத்தி இருபதுகளில் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவும் ஜப்பான் துரித முறையில் முத்துக்களை உருவாக்கி உலக அரங்கில் இடம் பிடித்ததும் துபாய் முத்துக்களுக்கு மவுசு குறைந்தது. நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த அப்போதைய அமீர் துபாய் வழியாக வர்த்தகம் செய்த எல்லா வர்த்தகக் குழுக்களுக்கும் வரி விதிப்பை நீக்கினார். அது மட்டுமல்ல, துபாய்க்கும் அபுதாபிக்கும் இடையே நடந்த எல்லைப் பிரச்சினையில் பிரிட்டிஷ் அரசு மத்தியஸ்தம் செய்து ஜெபெல் அலி போர்ட் என்னும் அரசின் கட்டுப்பாடுகளற்ற ஒரு பகுதியை ஏற்படுத்திக் கொடுத்தது. இதனால் வெளியிலிருந்து தொழிலாளர்கள் எந்த விதத் தடையுமின்றி இந்நாடுகளுக்குள் வரவும் தேவையான பணத்தை வெளியே எடுத்துச் செல்லவும் வழி ஏற்பட்டது. அதனால் துபாயின் பொருளாதாரம் முன்னேறியது. ஆயிரத்தித் தொளாயிரத்தி ஐம்பதுகளில் முதல் வங்கி, மருத்துவமனை தொடங்கப்பட்டன. எண்ணெய் வளம் கிடைப்பது பற்றி ஆராய்ச்சியைத் தொடங்கப் பல கம்பெனிகளுக்கு துபாய் அனுமதி கொடுத்தது.

    1966-இல் துபாயில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு துபாயின் பொருளாதாரம் வேகமாக முன்னேறியது. வெளிநாடுகளிலிருந்து எல்லா வகையான வேலைகளுக்கும் ஆட்கள் தேவைப்பட்டது. இப்படிக் கீழ்மட்ட வேலைகளுக்கு மட்டுமல்ல பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று மேல் நிலையில் உள்ள வேலைகளுக்கும் துபாய்க்கு ஆட்கள் தேவைப்பட்டனர்.

    1971-இல் பிரிட்டிஷ் அரசு இந்த நாடுகளின் பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டதும் அந்தப் பகுதியில் உள்ள அபு தாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், உம் அல் குவான், ராஸ் அல் கைமா, ஃபுஜைரா ஆகிய ஏழு எமிரேட்டுகள் ஒன்று சேர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்டுகள் என்ற நாட்டை உருவாக்கின. இதன் தலைநகரம் அபுதாபி. ஐக்கிய அரபு எமிரேட்டிற்கு ஒரு ஜனாதிபதியும் துணைஜனாதிபதியும் இருக்கிறார். அதன் அங்கங்களான ஒவ்வொரு நாட்டிற்கும் தனி அமீர் ஒருவர் இருக்கிறார் சட்டம், பொருளாதாரம், ராணுவம் ஆகியவற்றைப் பொறுத்த வரை எல்லா நாடுகளுக்கும் பொதுவான அரசியல் சாசனம் உண்டு. ஆனால் உள்நாட்டு விவகாரங்களைப் பொறுத்தவரை தனித் தனி சட்டங்கள் இயற்றிக்கொள்ளலாம்.

    அமெரிக்காவில் மாநிலங்கள் உருவான பிறகு அவை ஒன்று சேர்ந்து ஒரு கூ.ட்டாட்சி (Federation) அமைப்பை உருவாக்கிக்கொண்டன. ஐரோப்பிய யூனியன் பல தனி நாடுகள் சேர்ந்த கூட்டமைப்பு. தங்கள் பொருளாதாரத்தை வளர்த்துக்கொள்ள பொருளாதார முறையில் கூட்டாகச் செயல்பட்டால் நன்மை ஏற்படும் என்று ஐரோப்பிய நாடுகள் எண்ணி அந்தக் கூட்டமைப்பை ஏற்படுத்திக்கொண்டன. இந்தியா சுதந்திரத்திற்குப் பின் ஒரு நாடாக உருவாகிப் பிறகு மொழி அடிப்படையில் மாநிலங்களைப் பிரித்துக்கொண்டது. இது ஒரு வகைக் கூட்டமைப்பு. ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் சில மிகச் சிறியவை. கூட்டாகச் சேர்ந்து செயல்பட்டால் தங்கள் பாதுகாப்பிற்கும் பொருளாதாரத்திற்கும் நலம் என்று கருதி ஒரு கூட்டமைப்பை உருவாக்கிக்கொண்டன. இந்தக் கூட்டணியில் இருக்கும் நாடுகள் நம் இந்திய மாநிலங்களைப் போன்றவை. ஆனால் ஒரு பெரிய வித்தியாசம். இந்திய மாநிலங்கள் மீது மத்திய அரசுக்கு உள்ள அதிகாரம் ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் தலைமையான அபு தாபிக்கு இல்லை.

    இந்தக் கூட்டமைப்பில் உள்ள நாடுகளில் அபுதாபி நிலப்பரப்பைப் பொறுத்த வரையில் பெரியது. துபாய் மக்கள் தொகையில் பெரியது. துபாயின் அமிர்தான் ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் உதவி ஜனாதிபதி. ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் சுப்ரீம் கவுன்சிலில் நாற்பது அங்கத்தினர்கள். துபாய் எட்டு அங்கத்தினர்களை அந்தக் கவுன்சிலுக்கு அனுப்புகிறது. அபு தாபி, துபாய் ஆகிய இரண்டு நாடுகளைத் தவிர சுப்ரீம் கவுன்சிலில் எடுக்கும் எந்த முடிவையும் எதிர்க்கும் அதிகாரம் மற்ற நாடுகளுக்கு இல்லை.

    துபாய் எண்ணெய் வளத்தால் செழிக்கத் தொடங்கினாலும் இப்போது எண்ணெயிலிருந்து வரும் வருமானம் 6 சதவிகிதம் மட்டுமே. மற்றதெல்லாம் சுற்றுலாப் பயணிகள் வருகை, நிதி சேவை, கேளிக்கை அரங்கங்கள், ஓட்டல்கள், விளையாட்டுக்கள் ஆகியவற்றிலிருந்து வருவது. துபாய் கடலின் கரையில் இருப்பதால் பல நீர் விளையாட்டுக்கள் அங்கு நடக்கின்றன. பாலைவனப் பகுதியில் ஒட்டகப் பந்தயம் போன்ற விளையாட்டுக்களை நடத்துகிறார்கள். போலோ விளையாட்டு துபாயில் பிரசித்தம்.

    துபாயை shopper’s paradise என்கிறார்கள். வருடத்திற்கு இரு முறை பொருள்கள் வாங்கும் திருவிழாவை (shopping festival) நடத்துகிறார்கள். சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து இழுக்க இங்கு அமெரிக்கப் பாணியில் நிறைய மால்கள். எந்தச் சாமானை எடுத்துகொண்டாலும் – எலெக்ட்ரானிக் சாமான்கள், சாக்லேட்டுகள், ஆடை வகைகள், உணவு வகைகள் – அமெரிக்க பிராண்டுகள் கிடைக்கின்றன. உள்ளே நுழைந்தால் அமெரிக்க மால் ஒன்றிற்குள் நுழைந்துவிட்ட மாதிரி தோன்றுகிறது. வண்ண விளக்குகள். எலிவேட்டர்கள், எக்ஸ்கலேட்டர்கள் என்று அமெரிக்க மால்கள் போலவே அமைக்கப்பட்டிருக்கின்றன. வெளியில் அடிக்கும் வெயில் தெரியாதவாறு எல்லா மால்களும் ஏர்கண்டிஷன் செய்யப்பட்டிருக்கின்றன.

    துபாயில் வசதிகள் மிகுந்த ஓட்டல்கள் நிறைய இருக்கின்றன. எல்லா வகையான பயணிகளின் வசதிகளுக்குத் தக்கவாறு அவை அமைந்திருக்கின்றன. நாங்கள் தங்கியிருந்த ஓட்டலில் காலை உணவு –அதற்குரிய கட்டணத்தைப் பெற்றுக்கொண்டுதான் – பரிமாறுகிறார்கள். அதில் தமிழ்நாட்டு உணவு வகைகளான இட்லி, தோசை, சாம்பார், சட்னி போன்ற அயிட்டங்களும் இருந்தன. இரவுக் கேளிக்கைகள் உள்ள பல இடங்கள் துபாயில் உண்டு.

    துபாயை கடல் உள்ளே புகுந்து இரண்டாகப் பிரிக்கிறது. இதை ஆங்கிலத்தில் க்ரீக் (creek) என்கிறார்கள். துபாயின் இரண்டு பகுதிகளையும் பர் துபாய், டெய்ரா துபாய் என்று அழைக்கிறார்கள். இவற்றை இணைக்க 1962-லும் 1972-லும் கட்டிய பாலங்களும் 1975-இல் கட்டிய சுரங்கப்பாதையும் இருக்கின்றன. துபாயில் முதல் முதலாக 1972-ல் தான் பொதுமக்களுக்கான மருத்துவமனை கட்டப்பட்டது.

    துபாயில் போக்குவரத்து வழக்குகளை விசாரிக்க ஒரு நீதிமன்றம், குடும்ப வழக்குகளை விசாரிக்க குடும்ப நீதிமன்றம், மற்ற வழக்குகளை விசாரிக்கப் பொது நீதிமன்றம் என்று மூன்று நீதிமன்றங்கள் இருக்கின்றன. விவாகரத்து போன்ற வழக்குகள் குடும்ப நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும். ஆனால் அங்கு துபாய் குடிமக்களின் வழக்குகள் மட்டும்தான் விசாரிக்கப்படும். துபாயில் குற்றங்கள் குறைவு என்கிறார்கள். துபாய் ஒரு பாதுகாப்பான நகரம் என்ற பெயரையும் பெற்றிருக்கிறது.

    துபாயில் நிறைய காட்சியகங்கள் இருக்கின்றன. இப்போது துபாயில் உள்ள பல நவீன கட்டடங்களைப் பார்த்து பிரமிப்பவர்கள் துபாய் சரித்திரத்தை விளக்கும் துபாய் காட்சியகத்தை பார்த்தால் துபாய் மிகச் சமீப காலம் வரை வளர்ச்சி இல்லாமல் இருந்தது புரியும். முதல் மருத்துவமனை 1943-இல் கட்டப்பட்டது. முதல் வங்கி 1946-இல். ஆயிரத்தித் தொளாயிரத்தி ஐம்பதுகளில் தங்க வியாபாரம் ஆரம்பிக்கப்பட்டது. (இப்போது தங்கம் விற்பனை செய்யும் கடைகள் எக்கச்சக்கமாக இருக்கின்றன. சுவிட்சர்லாந்திலிருந்து நேரடியாகத் தங்கத்தைத் தருவித்து விற்கிறார்கள்.) அறுபதுகளின் கடைசியில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு துபாய் மிகத் துரித கதியில் வளரத் தொடங்கியது.

    துபாயின் அதிகாரபூர்வ மதம் இஸ்லாம். குடிமக்கள் எல்லோரும் இஸ்லாமியர்கள். அரசு இஸ்லாமிய மதக் கொள்கைகளை எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. நாங்கள் துபாய்க்குச் சென்ற சமயம் ரம்ஜான். அப்போது எல்லோரும் விரதம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதால் உணவகங்கள் எல்லாம் மூடியிருந்தன. யாரும் பொது இடங்களில் உணவருந்தக் கூடாது. அவரவர் வீடுகளில் வேண்டுமானால் உணவருந்தலாம். இந்த விதி உல்லாசப் பயணிகளுக்கும் உண்டு. காலையில் ஓட்டலில் உணவருந்திவிட்டு வெளியே போனால் எங்கும் உணவு கிடைக்காது. கையில் உணவை எடுத்துச் சென்றாலும் அதைப் பொது இடங்களில் உண்ண முடியாது. சரவண பவன் போன்ற இந்திய உணவகங்களும் காலை ஆறு மணியிலிருந்து இரவு ஏழு மணி வரை (இந்த நேரம் சூரிய அஸ்தமனத்தைப் பொறுத்து தள்ளிக்கொண்டே போகும்.) மூடியே இருக்க வேண்டும். யாராவது ஓட்டலை போனில் அழைத்து உணவு வேண்டும் என்றால் கேட்டவர் இருப்பிடத்திற்கு அதைக் கொண்டு போய்க் கொடுப்பார்கள். யாருக்கும் ஓட்டலில் பகல் நேரத்தில் உணவு பரிமாறக் கூடாது.

    துபாயின் ஒரு வருட மழை அளவு 122 மில்லிமீட்டர்தான். மேலும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் போன்ற கோடை மாதங்களில் வெயில் மிகக் கடுமையாக அடிக்கிறது. இந்த மாதங்களில் வெப்பநிலை 48 டிகிரி செல்சியஸ் வரை போகுமாம். இருந்தாலும் சாலைகளின் ஓரங்களில் பூச்செடிகள் வளர்க்கிறார்கள். எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேல் என்று அந்தக் கோடைவெயிலிலும் புற்கள் காணப்பட்டன. நிறையப் பணம் செலவழித்து இந்தச் செடிகளுக்கும் புற்களுக்கும் தண்ணீர் பாய்ச்சுகிறார்கள். கடல்நீரை நல்ல தண்ணீராக மாற்றிப் பயன்படுத்துகிறார்கள். துபாய்க்குச் செல்ல விரும்புபவர்கள் நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் சென்றால் சீதோஷ்ணநிலை ரம்மியமாக இருக்கும்.

    துபாயும் சிங்கப்பூரும் கிட்டத்தட்டஒரே காலத்தில் வளர்ச்சி காண ஆரம்பித்தன. பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து 1963-இல் விடுபட்ட சிங்கப்பூர் அறுபதுகளில் தீவிரமாக வளரத் தொடங்கியது. பல நாட்டுக் கப்பல்கள் கூடும் வியாபார கேந்திரமாக விளங்கிய சிங்கப்பூருக்கு அதுவே முன்னேற்றத்திற்கு வழி வகுத்தது. துபாய் எப்போதும் பல இடங்களை இணைக்கும் வியாபார ஸ்தலமாக இருந்திருக்கிறது. இப்போதைய ஈராக்கோடும் ஈரானோடும் தென் ஆப்பிரிக்காவோடும் வியாபாரத் தொடர்பு இருந்திருக்கிறது. அறுபதுகளில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. எண்ணெய் வளம் எப்போதும் இருக்கப் போவதில்லை என்பதை உணர்ந்த அரசு மற்ற வழிகளில் பொருளாதாரத்தை நிலைப்படுத்திக்கொள்ள முயன்று வருகிறது. துபாயில் தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு இலவசமாக நிலம் வழங்குகிறது. வரிச் சலுகை கொடுக்கிறது. உலகிலேயே பணக்கார நாடான அமெரிக்காவோடு நல்ல உறவு வைத்துக்கொண்டிருக்கிறது. உல்லாசப்பயணத் துறையை எப்படி வளர்க்கலாம் என்று ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறது.

    உலகின் பல ஊர்களில் இருப்பது போல் துபாயிலும் hop on, hop off என்ற உல்லாசப் பயணிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட பேருந்துகள் உண்டு. இவை துபாயின் பல பகுதிகளுக்கும் பயணிகளை அழைத்துச் செல்லும். ஊரைச் சுற்றிக்கொண்டே இருக்கும் இவற்றில் பயணம் செய்யும் போது எந்த நிறுத்தத்தில் வேண்டுமானாலும் இறங்கிக்கொள்ளலாம், ஏறிக்கொள்ளலாம். நாம் ஒரு முறை வாங்கிய டிக்கெட் 24 மணி நேரத்துக்குச் செல்லுபடியாகும்.

    நாங்கள் ஒரு காட்சியகத்திலிருந்து வெளியே வந்ததும் அந்தத் துறையைச் சேர்ந்த ஒரு பெண் (இவரும் வெளிநாட்டுக்காரர்தான்) எங்களைப் பேட்டி கண்டார். நாங்கள் துபாயிக்கு ஏன் வந்தோம், எத்தனை நாட்கள் தங்கியிருக்கிறோம், எந்த ஒட்டலில் தங்கியிருக்கிறோம், அங்கு நாங்கள் பார்த்த இடங்கள், எங்களைக் கவர்ந்த இடங்கள், கவர்ந்த விஷயங்கள், துபாயில் நாங்கள் இதற்கு மேல் வேண்டுவது என்ன என்று சரமாரியாகக் கேள்விகள்.

    பணம் சம்பாதிக்கத் துபாய்க்குப் போகிறவர்களைப் போன்று பணத்தைச் செலவழிக்க வழி தேடுபவர்களும் துபாய்க்குப் போகலாம்!

     

    படத்திற்கு நன்றி:

    Share