அமெரிக்காவின் வெட்கக்கேடு

நாகேஸ்வரி அண்ணாமலை

டிசம்பர் ஏழாம் தேதி வெள்ளிக்கிழமை  அமெரிக்காவின் கனெக்டிக்கட் மாநிலத்தில் உள்ள நியுடவுன்  என்னும் ஊரில் உள்ள சேண்டி ஹுக் பள்ளிக்கு அன்று சோக  தினமாக விடிந்தது.  அன்று  இருபது வயதுப் பையன் ஒருவன் பள்ளி ஆரம்பித்து, கதவுகள் எல்லாம் மூடப்பட்ட பின் ஜன்னலை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து ஒன்றாம் வகுப்புக் குழந்தைகள் இருபது பேரையும் பள்ளித் தலைமை ஆசிரியையும் பள்ளிச் சிறுவர்களுடைய மனநல ஆலோசகரையும் மற்றும் நான்கு பேரையும் சுட்டுக் கொன்ற சம்பவம் அமெரிக்காவை மட்டுமல்ல உலகையே உலுக்கியிருக்கிறது; சிந்திக்க வைத்திருக்கிறது.


கடந்த வெள்ளியன்று  நடந்த இந்தச் சம்பவம் பற்றித்தான் இன்னும் பத்திரிக்கைகளும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் வானொலியும் பேசிக்கொண்டிருக்கின்றன.  இந்த நிகழ்ச்சி பற்றிப் பள்ளியில் நிகழ்த்திய இரங்கல் உரையில் ஜனாதிபதி ஒபாமா தன்னுடைய பதவிக் காலத்தில் ஐந்து முறை இம்மாதிரி வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாகவும் இதை இனியும் இப்படியே விடக் கூடாது என்றும் எல்லாத் தரப்பினரும் ஒன்று கூடி இதற்குத் தீர்வு காண வேண்டும் என்றும் கூறினார்.  அமெரிக்காவில் யாரும் துப்பாக்கி வைத்துக்கொள்ளலாம் என்னும் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்பதைப் பூடகமாகக் கூறினார்.  (பல முறை கண்ணில் வழிந்த நீரைத் துடைத்துக்கொண்டார்.)

மிகச் சக்தி வாய்ந்த (assault weapons)  துப்பாக்கிகளை – ராணுவத்தினர் உபயோகப்படுத்தும் துப்பாக்கிகள் – குடிமக்கள் வைத்திருப்பதற்கு தடைச் சட்டம் ஜனாதிபதி கிளிண்டன் காலத்தில் 1994-இல் கொண்டுவரப்பட்டது.  ஆனால் அதன் ஆயுள் பத்து வருடங்கள்தான்.  (அமெரிக்காவில் இப்படித்தான் பல சட்டங்களுக்கு நிரந்தர ஆயுள் கிடையாது.  சில வருடங்கள் அது அமுலில் இருக்கும்.  அதன் பிறகு மறுபடி அதன் தலைவிதியை நிர்ணயிப்பார்கள்.)  மறுபடி 2004-இல் பரிசீலனைக்கு வர வேண்டியிருந்த தருணத்தில் இதை யாரும் கண்டுகொள்ளவில்லை.  அது அப்படியே கிடப்பில் போடப்பட்டது.  இப்போது இந்தச் சம்பவத்திற்குப் பிறகு கலிபோர்னியாவைச் சேர்ந்த காங்கிரஸ் பிரதிநிதி ஒருவர் இதை மறுபடி சட்டமாக்க முயலப் போவதாகக் கூறியிருக்கிறார்.

இப்போதைக்கு இந்த வகைத்  துப்பாக்கிகளை வாங்குவதற்கு சில மாநிலங்களில் தவிர யாரும் வாங்க எந்தத் தடையும் இல்லை. சில மாநிலங்களில் மட்டும் வாங்குபவரின் பின்னணியைப் பரிசோதித்தப் பிறகு வாங்குவதற்கு அரசு உரிமம் வழங்கும்.  இந்த வகைத் துப்பாக்கியையும் இன்னும் இரண்டு கைத்துப்பாக்கிகளையும் சுட்டவன் பள்ளிக்கு எடுத்து வந்திருக்கிறான்.  அவை எல்லாம் அவன் தாய் தகுந்த உரிமம் பெற்று வாங்கியிருக்கிறாள்.  தன் கணவனை மூன்று ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து செய்துகொண்ட இந்தப் பெண் (விவாகரத்திற்கு யார் அல்லது எது காரணம் என்று தெரியவில்லை.) பல வகைத் துப்பாக்கிகள் வைத்திருந்திருக்கிறார்.  துப்பாக்கி வைத்துச் சுடும் விளையாட்டைப் பல முறை இவர் விளையாடியிருக்கிறார்.  தன் மகனையும் உடன் அழைத்துச் சென்றிருக்கிறார்.  புத்திசாலி என்று கருதப்பட்டாலும் இந்தப் பையன் சிறு வயதிலிருந்தே மற்றச் சிறுவர்களிடமிருந்து மாறுபட்டவனாக இருந்திருக்கிறான்.  பள்ளியில் பலரோடு பழகுவதில்லையாம்.  வகுப்பு ஆல்பத்தில் இவனுடைய போட்டோ இல்லை.  கேமராவுக்கு முன் நிற்க இவன் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இடையிலேயே பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டான்.  இப்படியெல்லாம் மாறுபட்ட குணங்கள் கொண்ட இவனை இவன் தாய் ஏன் இன்னும் சற்று நன்றாகக் கவனிக்கவில்லை, மனநோய் மருத்துவரிடம் அழைத்துச் செல்லவில்லை என்பது கேள்விக் குறியாக இருக்கிறது.  இந்தப் பையனுக்கு யார் மேல் கோபம், எதனால் சுட்டான் என்ற கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

பலர் – இதுவரை எல்லோருக்கும் துப்பாக்கி வேண்டும் என்று கூறிக்கொண்டிருந்தவர்கள் உட்பட – இப்போது தங்கள் கொள்கையிலிருந்து மாறி இது பற்றி யோசிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.  ஆயினும் எல்லோரும் துப்பாக்கி வைத்திருக்க வேண்டும் என்று கூறுபவர்களும் அமெரிக்காவில் இன்னும் – இந்தச் சம்பவத்திற்குப் பிறகும் – இருக்கிறார்கள்.  நாலாயிரம் பேர் வசிக்கும் நியுடவுனில் துப்பாக்கிக் குண்டு வெடிக்கும் சத்தம் (துப்பாக்கி சுடும் பயிற்சியை விளையாடுபவர்கள் எழுப்பும் ஒலி) வெடிப்பவர்களைச் சந்தோஷப்படுத்துமாம்!  அமெரிக்கக் கலாச்சாரத்தில் வன்முறை முக்கிய பங்கு வகிக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

இந்தச் சம்பவத்திற்குப்  பிறகு இப்படிப்பட்ட துப்பாக்கிகள் வைத்துக்கொள்வதற்கு உரிமம் எல்லாக் குடிமக்களுக்கும் கொடுத்துத்தான் ஆக வேண்டுமா என்ற விவாதம் அமெரிக்கா முழுவதும் நடந்துகொண்டிருக்கிறது.  பள்ளித் தலைமை ஆசிரியையிடம் துப்பாக்கி இருந்திருந்தால் சுட்டவனை உடனடியாக நிறுத்தியிருக்கலாம் என்று துப்பாக்கி வேண்டும் என்ற கட்சியைச் சேர்ந்த ஒருவர் கூறியிருக்கிறார்.  பலரைச் சுடப் போகும் ஒருவன் வருவான் என்று தலைமை ஆசிரியை எதிர்பார்த்துக்கொண்டிருக்க முடியாது.  அவர்  தன் துப்பாக்கியை எடுப்பதற்குள் எத்தனையோ பேரை அவன் சுட்டிருக்கலாம்.  மக்கள் கையில் துப்பாக்கியைக் குறைக்க வேண்டும் என்னும் தருணத்தில் அதைக் கூட்ட வேண்டும் என்கிறது இந்த வாதம். இன்னொருவர் அத்தனை பேரையும் கொன்றது துப்பாக்கி அல்ல, அதை வைத்திருந்த, மனம் பேதலித்த ஒருவன் என்கிறார்.  அவன் கையில் துப்பாக்கிக்குப் பதில் வேறு ஏதாவது ஆயுதம் இருந்தால் இத்தனை பேரை இத்தனை குறுகிய காலத்தில் கொன்றிருக்க முடியாது என்று அவர் எண்ணிப்பார்த்ததாகத் தெரியவில்லை.  சீனாவில் இதே போல் இருபது பேரைக் குறிவைத்தவன் கத்தியை உபயோகித்ததால் அனைவரும் காயத்தோடு பிழைத்துக்கொண்டனர், ஆனால் இங்கோ பயன்படுத்திய ஆயுதம் துப்பாக்கி என்பதால் அனைவருமே மாண்டுவிட்டனர் என்கிறார் எல்லோர் கையிலும் துப்பாக்கி இருக்கக் கூடாது என்னும் கட்சியைச் சேர்ந்தவர்.

அமெரிக்க அரசியல் சாசனத்தை அடுத்து வந்த உரிமைச் சாசனத்தின் இரண்டாவது ஷரத்தில் எல்லோருக்கும் தங்களைக் காத்துக்கொள்ள ஆயுதங்கள் வைத்துக்கொள்ள உரிமை தரப்பட்டிருக்கிறது..  அந்தக் காலத்தில் அமெரிக்கக் கண்டத்தில் வாழ்ந்துவந்த பழங்குடிகளின் நிலங்களைக் குடியேறிகள் பறித்துக்கொண்ட பிறகு அவர்களால் இவர்களுக்கு ஆபத்து இருந்ததென்னவோ உண்மைதான்.  (பழங்குடிகளால் குடியேறிகளுக்கு ஆபத்து இருந்தது என்பது பழங்குடிகளைப் பொறுத்த வரை நியாயமானதே என்றாலும்.)  காலம் இப்போது மாறிவிட்டது.  எப்போதோ ஆபத்து இருக்கலாம் என்று கொண்டுவந்த சட்டத்தை இன்னும் பின்பற்ற வேண்டுமா?

துப்பாக்கி வைத்துக்கொள்ள  வேண்டும் என்னும் உரிமைகளைக் காப்பதற்கு அமெரிக்காவில்  ஒரு சங்கமே (National Rifle Association) இருக்கிறது.  இந்தத் தேசிய துப்பாக்கிக் கழகத்தில் லட்சக் கணக்கான உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.  இந்தச் சங்கம் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமையைத் தடுக்கும் எந்தச் சட்டமும் வராமல் பார்த்துக்கொள்ளும்.  இதற்காகத் தேர்தலில் நிற்கும் மத்திய, மாநில காங்கிரஸ் வேட்பாளர்கள் தங்கள் பக்கம் இருக்க நிறையப் பணம் செலவழிக்கும்.  இதை எதிர்த்து காங்கிரஸ் சட்டம் இயற்றுமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

விவாதத்தின் இன்னொரு அம்சம் மனநோய் உள்ளவர்களுக்குத் தகுந்த வைத்தியம் செய்யப்  போதிய மனநல மருத்துவர்கள்  இல்லையென்பது.  அமெரிக்காவில்  எத்தனை நோயாளிகளுக்கு எத்தனை மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்ற புள்ளிவிபரம் என்னிடம் இல்லை.  இருப்பினும் ஐம்பதாயிரம்  பேர்களுக்கு ஒரு மன நோய் மருத்துவர் இருக்கும் இந்தியாவில் இந்தத் துப்பாக்கிக் கொலைகள் நடப்பதாகத் தெரியவில்லை.  அங்கும் மனநோயாளிகள் பிறரைத் தாக்கலாம்.  ஆனால் அவர்கள் கைகளில் துப்பாக்கிகள் இருப்பதில்லை.

அமெரிக்கா உடனடியாகச் செய்ய  வேண்டியது துப்பாக்கி வைத்துக்கொள்ள  எல்லோருக்கும் உள்ள உரிமையை நீக்க வேண்டும். முப்பத்தொரு கோடிப் பேர் வசிக்கும் அமெரிக்காவில் இப்போது முப்பது கோடித் துப்பாக்கிகள் இருக்கின்றனவாம். அதாவது சராசரியாக ஒருவருக்கு ஒன்று.  இங்கு ஆண்டுக்கு 9960 பேர் துப்பாக்கிக் குண்டுக்கு இரையாகிறார்கள். முப்பத்தொன்பது கோடிப் பேர் வசிக்கும் கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஸ்பெயின், இத்தாலி, நெதர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி என்று ஒன்பது நாடுகளிலும் சேர்ந்து துப்பாக்கியால் இறப்பவர்கள் 906 பேர்.

அடுத்ததாக சமூகத்தின் தூண்களில்  ஒன்றான குடும்பம் என்ற அமைப்பைப்  பலப்படுத்த வேண்டும்.  எந்தக் குடும்பத்தை எடுத்தாலும்  மாற்றாந்தாய், மாற்றாந்தகப்பன், ஒரே தாயின் மற்றொரு கணவனுக்குப் பிறந்த தூரத்துச் சகோதரி (half- sister), ஒரே தந்தையின் மற்றொரு மனைவிக்குப் பிறந்த தூரத்துச் சகோதரன் (half-brother) என்ற உறவுகளைப் பார்க்காமல் இருக்க முடியாது.  தனிமனித உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப் போய் இப்போது குடும்பம் என்ற அமைப்பே குலைந்துவிட்டது அமெரிக்கா.  இதனால் சிறு குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்.  பெரியவர்கள் ஆனதும் வன்முறையில் ஈடுபடுகிறார்கள்.  குழந்தை வளர்ப்பது எப்படி என்று கற்றுக் கொடுக்க அத்தனை பத்திரிக்கைகள் இருக்கின்றன.  ஆனால், விவாகரத்து செய்து குழந்தைகளின் மனம் பாதிக்கப்பட வைக்காதீர்கள் என்று எந்தப் பத்திரிக்கையும் சொல்வதில்லை.  உலகிலேயே செல்வம் அதிகம் உள்ள அமெரிக்கா தன்னுடைய சமூகத்தைத் திருத்திக்கொள்ளப் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.

படத்திற்கு நன்றி:

http://www.telegraph.co.uk/news/worldnews/northamerica/usa/9748932/Connecticut-school-shooting-Heartbreaking-details-emerge-of-how-parents-learned-children-were-dead.html

About நாகேஸ்வரி அண்ணாமலை

முனைவர்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க