Tag: நாகேஸ்வரி அண்ணாமலை

  • நினைவஞ்சலி – நாகேஸ்வரி அண்ணாமலை

    நினைவஞ்சலி – நாகேஸ்வரி அண்ணாமலை

    அண்ணாகண்ணன்

    எழுத்தாளர், முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை (85 வயது), 2025 ஆகஸ்டு 1 அன்று மறைந்தார் என்ற கொடும் செய்தி, இன்று வந்து சேர்ந்தது. இது குறித்து அவர் கணவர், பேராசிரியர் இ.அண்ணாமலை விடுத்துள்ள உருக்கமான மடல் இங்கே:

    Nageswari, my wife of nearly sixty years of companionship and comfort, left me, and us, at 5.00 p.m. on August 01 in hospital. She passed away peacefully. She was 85. Her lungs got weaker in the last few months as her body got progressively more fatigued from poor appetite and reduced intake that started with some health problems in the last year. I feel that a part of me slipped away and another part says that she is still around me, supporting and critiquing. Yet, emptiness weighs me down.

    My Soliloquy

    ‘சாதலும் புதுவது அன்றே’
    புரிகிறது புறம்

    உண்மை உறவு மரிப்பதில்லை.
    தெரிகிறது அதுவும்.
    இருந்தும்,

    தோளோடு தோள் நின்ற தோழமையைத்
    தோளிலிருந்து இறக்க முடியவில்லை.
    இறப்பை, இழப்பை மறக்க முடியவில்லை.

    என் செய்வேன்?

    பேராசிரியரின் கைகளைப் பற்றிக்கொள்கிறோம். உங்கள் துயரில் பங்கு கொள்கிறோம். நாகேஸ்வரி அம்மா, மறையவில்லை. நம்முடனே, நம் சிந்தையில் வாழ்கிறார். தமது ஈர எழுத்துகளில், அறம் சார்ந்த ஆக்கங்களில் வாழ்கிறார்.

    சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்ற நாகேஸ்வரி அவர்கள், 1966 முதல், அமெரிக்காவில் வசித்தவர். கணவருடன் கருத்தொருமித்து வாழ்ந்தவர். அமெரிக்காவின் எந்த ஆடம்பரமும் இவர்கள் மீது ஒட்டவே இல்லை.

    வல்லமைக்கு நாகேஸ்வரி அவர்களின் படைப்புகள், பெரும் வலுச் சேர்த்தன. அதன் பெருமையை உயர்த்தின. அமெரிக்காவின் புதிய தரிசனங்களை, அதன் துல்லியமான சித்திரங்களை வல்லமையில் தொடர்ந்து எழுதினார். சொந்த அனுபவத்துடன் கூடவே, சமூகவியல் காரணங்களுடன், அரசியல் விமர்சனங்களுடன் தனது பார்வைகளை முன்வைத்தவர்.

    வல்லமை மின்னிதழில் மிகச் சிறப்பான கட்டுரைகள் பலவற்றை அவர் எழுதினார். பத்தி எழுத்தாளராக, அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் எழுதி வந்தார். இவை உண்மையான, நேர்மையான, ஆழமான கட்டுரைகள். அதே நேரம், எளிமையானவை. கடினமான சொற்களோ, கரடு முரடான வரிகளோ இல்லை. நீரோட்டம் போன்ற நடையில், நறுக்கென மனத்தில் தைக்கும் விதமாக எழுதினார். நாகேஸ்வரியின் கட்டுரைகளை வியந்து கொண்டாடி, தொலைபேசியில் அழைத்துப் பாராட்டியோர் பலர்.

    நாகேஸ்வரி அண்ணாமலை கட்டுரைகள்

    நாகேஸ்வரி அவர்கள், துணிவும் பரிவும் ஒருங்கே கொண்டவர். தமிழ்நாட்டில் பேருந்தின் படிகள் உயரமாக இருக்கின்றன, அதில் ஏற எனக்குச் சிரமமாக இருக்கிறது என எழுதினார். கல்வித் துறையில் முனைவர் பட்டங்களும் துணைவேந்தர் பதவிகளும் காசுக்கு விற்கப்படுவதைக் கண்டித்து எழுதினார். ஊழல் அரசியல்வாதிகளைச் சாடினார். அதிபர், பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் என யாராக இருந்தாலும் அவரது விமர்சனங்களுக்குத் தப்பவில்லை.

    அமெரிக்காவைப் பற்றி மட்டுமல்லாது, பாலஸ்தீனம், இஸ்ரேல், கியூபா, வியட்னாம் எனப் பல நாடுகள் குறித்தும் எழுதினார். இவற்றுள் பயண இலக்கியமும் உண்டு. வல்லமையில் இவர் எழுதிய கட்டுரைகள், பின்னர் நூல் வடிவம் பெற்றன. இணையத்தில் வேறு இதழ்களிலும் எழுதத் தொடங்கினார். தனி நூல்களும் படைத்தார். *அமெரிக்காவின் மறுபக்கம்*, *அமெரிக்க அனுபவங்கள்*, *பலஸ்தீன–இஸ்ரேல் போர்*, *கியூபாவின் விடுதலை வெற்றி*, *வியட்நாமில் அமெரிக்கப் போர்*, *ஐந்து தலைமுறை நாடார் பெண்களின் கதை* ஆகிய நூல்கள், அவரது அழுத்தமான பங்களிப்புகள்.

    எளிய கிராமத்துப் பெண்ணாகத் தம் வாழ்வைத் தொடங்கிய நாகேஸ்வரி, பழுத்த அனுபவத்துடன், பரந்த உலகை வலம் வந்தவர். வளமான, வசதியான வாழ்க்கை அமைந்த பிறகும் எளியவர்கள், ஒடுக்கப்பட்டோர், வஞ்சிக்கப்பட்டோர் பக்கமே அவர் எப்போதும் நின்றார். அவர்களின் நியாயங்களுக்காகக் குரல் கொடுத்தார்.

    வல்லமைக்குப் பெரும் தூணாக, தமிழ்கூறு நல்லுலகின் சுடர்மிகு எழுத்தாளராகத் திகழ்ந்த முனைவர் நாகேஸ்வரி அவர்களின் மறைவுக்கு வல்லமை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

    நாகேஸ்வரி அம்மா, என்றென்றும் நம் நினைவுகளில் வாழ்வார்.

    Share
  • அஞ்சலி – முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை

    மு. சாதிக், அடையாளம்

    ஆகஸ்ட் 1, மாலை 5 மணிக்கு, 85 வயதில், நாகேஸ்வரி அண்ணாமலை மருத்துவமனையில் காலமானார். அறுபது ஆண்டுகள் துணைவனுடன் பகிர்ந்து கொண்ட நெருக்கமும் நிம்மதியும் கொண்ட வாழ்க்கைப் பயணம் இங்கே நிறைவுற்றது. கடந்த சில மாதங்களாக உடல் சோர்வு, உணவு விருப்பக் குறைவு மற்றும் சுவாசக் கோளாறு அதிகரித்த நிலையில் அவர் அமைதியாக இறுதியை எய்தினார்.

    நாகேஸ்வரி, புகழ்பெற்ற மொழியியலாளர் இ. அண்ணமலையின் துணைவி. அவர் சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்றிருந்தார். ஆழமான ஆராய்ச்சிக்கான நேரத்தை உருவாக்கி, தமிழ் வாசகர்களுக்குப் பல அரசியல் நூல்களை வழங்கினார்.

    தமிழில் அரசியல் நூல்களை விரிவாக எழுதிய *முதல் பெண்* என்ற வரலாற்றுப் பெருமை பெற்றவர். உலக அரசியல், விடுதலைப் போராட்டங்கள், சமூக வரலாறு போன்ற துறைகளில் தானே கள ஆய்வுகள் மேற்கொண்டு பல ஆழமான நூல்களை அளித்தார். *அமெரிக்காவின் மறுபக்கம்*, *அமெரிக்க அனுபவங்கள்*, *பலஸ்தீன–இஸ்ரேல் போர்*, *கியூபாவின் விடுதலை வெற்றி*, *வியட்நாமில் அமெரிக்கப் போர்*, *ஐந்து தலைமுறை நாடார் பெண்களின் கதை* ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

    அவருடைய எழுத்தின் பலம்: *எளிய தமிழில், விரிவான வரலாற்றுச் சான்றுகளுடன்* சிக்கலான அரசியல், சமூகக் கதைகளை வாசகர்களுக்குக் கொண்டுவரும் திறன். எந்தப் புத்தகத்தை எடுத்தாலும் அதில் முழுமை இருக்கும்; தகவல், பகுப்பாய்வு, களஆய்வு அனைத்தும் ஒன்றிணைந்து கிடைக்கும். வாசகர்கள் சிரமமின்றிப் படித்துச் சிந்திக்க வைக்கும் பாணியால் அவர் எழுத்துகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

    அவருடைய படைப்புகளில் *ஐந்து தலைமுறை நாடார் பெண்களின் கதை* தனித்துவம் வாய்ந்தது. ஐந்து தலைமுறைகளாக வாழ்ந்த நாடார் பெண்களின் அனுபவங்கள், சாதி முறைகளின் பிடியிலும், சமூக மாற்றங்களின் அலைகளிலும் அவர்கள் எதிர்கொண்ட போராட்டங்களாகக் காட்சிப்படுத்தப்படுகின்றன. எளிய நடையில் எழுதப்பட்ட இந்த நூல், ’எழுத்தாளர் வாசகர்களுடன் நேரடியாகப் பேசுகிறார்’ என்ற உணர்வைத் தருகிறது.

    இவ்வளவு ஆழமான பங்களிப்புகளுக்கு மத்தியில், அரசுசார் விருதுகளோ அங்கீகாரங்களோ எதுவும் இவரை எட்டவில்லை. இது தமிழின் அரசியல் இலக்கிய வரலாற்றில் ஒரு கேள்விக்குறியாய் நின்றாலும், நாகேஸ்வரி அம்மாவின் பங்களிப்பு போற்றப்பட வேண்டிய ஒன்று என்பதில் சந்தேகமில்லை.

    இன்று அவர் நம்மோடு இல்லை. ஆனால் நாகேஸ்வரி அம்மாவின் எழுத்துகளும் சிந்தனைகளும் தமிழ்ச் சமூக நினைவகத்தில் என்றும் நிலைத்திருக்கப் போகின்றன. ஒரு பெண் எழுத்தாளராக மட்டுமல்லாது, அரசியல் சிந்தனையின் வரலாற்றை ஆவணப்படுத்தியவராகவும் அவர் தமிழின் நினைவுப் பக்கங்களில் நிலையான இடம்
    பெற்றிருப்பார்.

    Share
  • உலகம் பின்னோக்கிச் செல்கிறதா?

    உலகம் பின்னோக்கிச் செல்கிறதா?

    நாகேஸ்வரி அண்ணாமலை

    நாங்கள் 1966 செப்டம்பரில் அமெரிக்கா வந்தபோது கருப்பர்களில் பலர் பெரிய பதவிகளில் இல்லை. பலர் கட்டடத் துப்புரவுத் தொழிலாளிகளாகவும் வசதியான வீடுகளில் வீட்டுவேலை செய்பவர்களாகவும் இருந்தனர். பல்கலைக்கழகங்களில் பேராசியர்களாக/மாணவர்களாக இருந்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.  அரசியலிலும் அப்படியே.  அமெரிக்காவை விட்டுச் சென்று 23 வருடங்களுக்குப் பிறகு திரும்பவும் அமெரிக்கா வந்தபோது கருப்பர்களின் நிலைமை மிகவும் மாறிப்போயிருந்தது. விமானநிலையத்திலேயே பலர் நல்ல பதவியில் இருந்ததைப் பார்க்க முடிந்தது. கல்விக்கூடங்களிலும் பலர் வேலைபார்த்தனர். இந்தியாவில்போல் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அமெரிக்காவில் பிரத்தியேக சலுகை எதுவும் கிடையாது. பல்கலைக்கழகங்களில் மட்டும் ஏதோ பெயருக்கு சில சலுகைகள் இருக்கின்றன. அப்படியிருந்தும் அவர்கள் முன்னேறியிருக்கிறார்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சியாக இருந்தது.

    ஆனால் அப்போதிருந்ததைவிட இனத்துவேஷம் இப்போது மிகவும் அதிகமாகியிருக்கிறது. அதிலும் ட்ரம்ப் ஜனாதிபதி ஆன பிறகு வெள்ளை இனவாதிகள் அமெரிக்கா என்ற நாடு தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று எண்ண ஆரம்பித்திருக்கிறார்கள்.  மேலும் வெளியிலிருந்து குடியேறிகளை அமெரிக்காவிற்குள் அனுமதிக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள். இப்படிக் குடியேறிகள் அமெரிக்காவுக்கு வந்து வெள்ளை அமெரிக்கர்களுடைய வேலைகளை எடுத்துக்கொண்டு வெள்ளை அமெரிக்கர்களுக்கு அந்த வேலைகள் கிடைக்காமல் செய்கிறார்கள் என்று நினைக்கிறார்கள்.  இந்த ரீதியில் அவர்கள் நினைப்பதற்கு ட்ரம்ப் ஜனாதிபதியானது ஒரு முக்கிய காரணம். உலகில் அமெரிக்காவின் பிம்பத்தை உயர்த்தப் பாடுபட்ட ஒபாமாவின் கொள்கைகளையெல்லாம் தலைகீழாக மாற்றிக்கொண்டிருக்கிறார் இந்த ட்ரம்ப். உலகம் அமெரிக்காவைப் பற்றி என்ன நினைக்கிறது என்று ட்ரம்ப் கவலைப்படுவதே இல்லை.  அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒன்பது பேரில் உருவரான ரூத் கின்ஸ்பர்க் நேற்று இறந்துபோனவுடன் அவருக்குச் சரியாகத் துக்கம்கூட அனுசரிக்காமல் அவருடைய இடத்தில் ஒரு பழமைவாத நீதிபதியை உடனடியாக நியமித்து உச்சநீதிமன்றத்தை பழமைவாதிகளின் கூடாரமாக ஆக்கப் பார்க்கிறார்.

    ட்ரம்ப் இது மட்டுமா செய்துகொண்டிருக்கிறார்? உலகிலேயே சிறந்த ஜனநாயக நாடு என்று பெயர் வாங்கியிருந்த அமெரிக்காவை ஒரு சர்வாதிகார நாடாக ஆக்கிவிடுவாரோ என்று பலர் பயப்படும் அளவுக்குக் காரியங்கள் செய்து வருகிறார். வரும் நவம்பர் மாதத் தேர்தலில் என்னென்னவோ தகிடுதத்தங்கள் பண்ணி தேர்தல் முடிவை மாற்றிவிடுவாரோ என்று ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள் பயப்படுகிறார்கள். அமெரிக்கா ஆப்பிரிக்காவிலிருந்து ஆப்பிரிக்க அப்பாவி மக்களை அடிமைகளாகக் கொண்டுவந்து மிருகங்களைப்போல் நடத்தியதாகக் கூறப்படுவதெல்லாம் சரியில்லை என்றும், அதனால் அமெரிக்க சரித்திரத்தையே மாற்றி எழுத வேண்டும் என்று கூற ஆரம்பிதிருக்கிறர்.  இவ்வளவு தூரம் கருப்பர்களை வெறுக்கும் இந்த இன வெறியருக்கு இன்னும் 40 சதவிகித அமெரிக்க மக்களிடம் ஆதரவு இருக்கிறதாம். இதை என்னவென்று சொல்வது? உலகில் இனவெறி, மதவெறி எல்லாம் ஒழிந்து உலக மக்கள் எல்லோருக்கும் சமமான, நியாயமான உரிமைகள் கிடைத்து உலகம் முன்னேற்றப் பாதையில் செல்வதற்குப் பதிலாக இது என்ன பின்னேற்றம்?

    அமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் ஜனநாயகம் தோன்றி எல்லா மக்களுக்கும் ஜனநாயக உரிமைகள் கிடைக்கும் என்று நம்பியதற்கு மாறாக உலகில் பல நாடுகளில் சர்வாதிகாரிகள் தோன்றிக்கொண்டிருக்கிறார்கள். மார்க்ஸின் போதனைகள் கம்யூனிஸ நாடுகளில் வலுவடைவதற்குப் பதிலாக அங்கு சர்வாதிகாரிகள் தோன்றிக்கொண்டிருக்கிறார்கள்.  முடியாட்சியை ஒழித்துப் பாட்டாளி மக்களாட்சியை லெனின் ஆரம்பித்த நாட்டில் இப்போது புதின் தன் வாழ்நாளுக்கும் பதவியில் இருப்பதற்கு ஏதுவாக சட்டத்தையே மாற்றியிருக்கிறார்.  மாசேதுங் சீனாவில் வளர்த்த கம்யூனிஸம் உருமாறி சீனா இப்போது ஷியின் சர்வாதிகார நாடாக மாறியிருக்கிறது. என்றென்றும் தன்னை ஆட்சியில் தக்கவைத்துக்கொள்வதற்குத் தருணம் பார்த்துக்கொண்டிருக்கிறார் இந்தியப் பிரதமர் மோதி. இந்தியா சுதந்திரம் அடைந்ததும் ‘இனி எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்’ என்று ஆனந்தத்தோடு பாடினோம். அரசு தவறு செய்தால் எந்தக் குடிமகனாலும் அரசைத் தட்டிக்கேட்க முடியும் என்ற நிலை மாறி மோதியைக் குறைகூறுபவர்கள் எல்லோரும் தேசத்துரோகிகள் என்று கருதப்பட்டு சிறைக்கு அனுப்பப்படும் அளவுக்கு இந்தியாவில் ஜனநாயகம் மறைந்துகொண்டிருக்கிறது.

    இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பிறகு உலகில் அமைதி நிலவவும் உலக மக்கள் அனைவரும் சுபிட்சம் பெறவும் ஐ.நா. சபை, யுனெஸ்கோ, உலக சுகாதார நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் தோன்றின. உலக நிதி நிறுவனம், உலக வங்கி ஆகிய பொருளாதார நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டன.  உலகிலேயே பணக்கார நாடான அமெரிக்கா இந்த நிறுவனங்களுக்கு நிதி உதவிசெய்து வந்தது.  இப்போது ட்ரம்ப் அந்த நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்வதை நிறுத்தப் போகிறார்.

    ஹிட்லர் யூதர்களுக்கு இழைத்த அநீதிக்குப் பரிகாரம் தேடுவதுபோல் ஜெர்மனியின் தலைவர் ஏஞ்சலோ மெர்கல் பல அகதிகளை ஜெர்மனிக்குள் அனுமதித்து அவர்களுக்கு புதுவாழ்வு கொடுக்க முயற்சிக்கிறார்.  அங்கும் இப்போது நாஜிக்களைப் பின்பற்றும் ஒரு கூட்டம் இருக்கிறது என்பதோடு அவர்கள் ஜெர்மனியின் ராணுவத்திலும் காவல்துறையிலும் இப்போது ஊடுருவி இருக்கிறார்களாம்.  எப்படிப்பட்ட துயரச் செய்தி இது.

    குறைகள் உள்ளன என்றாலும் இருக்கிறவற்றில் சிறந்த அரசியலமைப்பு என்று ஜனநாயகம் கருதப்பட்டது. அடுத்த கட்டமாக ஜனநாயகத்திலுள்ள குறைகள் களையப்பட்டு இதைவிட ஒரு சிறந்த அரசியலமைப்பு உண்டாகும் என்று நம்பியதற்கு மாறாக ஜனநயகமே அல்லவா உலகிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டிருக்கிறது. மனிதனுடைய சின்னத்தனங்கள் ஒவ்வொன்றாக மெதுவாக மாறி மனிதன் இறைத்தன்மைகளைப் பெறுவான் என்று நினைத்ததெல்லாம் பொய்யாகிப் போய்விடுமா?

    Share
  • ஒரு ஜனாதிபதியின் சாக்கடை மனம்

    ஒரு ஜனாதிபதியின் சாக்கடை மனம்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    1947-இல் இந்திய உபகண்டத்திற்குச் சுதந்திரம் கொடுத்தபோது பிரிட்டன் அதை இந்தியா, பாகிஸ்தான் என்ற இரண்டு நாடுகளாக – ஜின்னா போன்ற முஸ்லீம் தலைவர்களின் பிடிவாதத்தால் – பிரித்தது.  பாகிஸ்தான் இரண்டு பிரிவுகளாக நிலத் தொடர்பில்லாமல் இருந்தது.  அதிகமாக முஸ்லீம்கள் வாழும் பகுதி என்ற ஒரே காரணத்திற்காக கிழக்கு பாகிஸ்தான் என்னும் பகுதி பாகிஸ்தானோடு இணைக்கப்பட்டது.  மேற்கு பாகிஸ்தான் கிழக்கு பாகிஸ்தானுக்கு மொழி உட்பட எல்லா வகையிலும் சம உரிமைகள் கொடுக்காததால் கிழக்கு பாகிஸ்தான் தலைவர்கள் தங்கள் உரிமைகளுக்காகக் குரல் எழுப்பினர்.  இதனால் மேற்கு பாகிஸ்தான் மத்திய அரசு கிழக்கு பாகிஸ்தான் மக்களை அடக்குவதற்காக அங்கு ராணுவத்தை அனுப்பி நிறைய கொடுமைகள் புரிந்தது. பாகிஸ்தான் ராணுவத்தின் கொடுமைக்கு அஞ்சி லட்சக் கணக்கில் பலர் இந்தியாவுக்குள் அகதிகளாக வந்தனர். இதைத் தடுக்க வேண்டியும் கிழக்கு பாகிஸ்தான் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டியும் இந்தியா கிழக்கு பாகிஸ்தானுக்குள் புகுந்து பாகிஸ்தான் ராணுவத்தோடு போர்புரிந்து அதைப் பணியவைத்தது. கிழக்கு பாகிஸ்தானும் தனி நாடாக ஆகி பங்களாதேஷ் ஆனது.

    1949-இல் மாசேதுங் சீனாவில் ஆட்சியைப் பிடித்து கம்யூனிஸ ஆட்சியை அங்கு நிறுவிய பிறகு 22 வருடங்களாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் எந்த உறவும் இல்லாமல் இருந்தது. அதை அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸன் மாற்ற விரும்பினார். அப்போது பாகிஸ்தான் சீனாவோடு நல்ல உறவில் இருந்தது. பாகிஸ்தான் அதிபர் யாஹியா கானின் உதவியோடு சீனாவோடு உறவை வளர்த்துக்கொள்ள நிக்ஸன் விரும்பினார். கிழக்கு பாகிஸ்தானில் மனித உரிமைகள் சிதைக்கப்பட்டபோது அதைத் தட்டிக் கேட்குமாறு இந்தியா அமெரிக்காவிடம் கேட்பதற்காக இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அமெரிக்காவுக்கு வந்தபோது நிக்ஸன் அவரிடம் பாகிஸ்தானின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று கூறினார்.  அமெரிக்காவின் யோசனைக்குச் செவிமடுக்காத இந்திரா காந்தி கிழக்கு பாகிஸ்தானுக்குள் இந்திய ராணுவத்தை அனுப்பி கிழக்கு பாகிஸ்தானை மேற்கு பாகிஸ்தானிலிருந்து விடுவித்தார்.

    ஒரு பெண் – அப்போது உலக அரங்கில் வெகு சில பெண்களே தலைமைப் பதவியில் இருந்தனர்; அதிலும் இந்திரா காந்தி அமெரிக்காவில் எடுத்த கருத்துக் கணிப்பின்படி 1971-இன் தலைசிறந்த, வலிமையான பெண் என்று பெயர் எடுத்திருந்தார் – தான் கொடுத்த யோசனையை ஏற்றுக்கொள்ளவில்லை என்று நிக்ஸனுக்கு மிகவும் கோபம். கிஸிஞ்சரிடம் பேசும்போது, ‘இவள் ஒரு தேவ .  .  ..ள் என்றாராம். மேலும் அந்தச் சின்ன புத்தி படைத்த அமெரிக்க ஜனாதிபதி, ஆசியர்களையும் மிகவும் கீழ்த்தரமாக நினைத்தார்.  இந்தியர்களை ஒட்டுமொத்தமாக தேவ .  .   .  . மகன்கள் என்றாராம். (என்றானாம் என்று சொல்லத் தோன்றுகிறது) அவருடைய ஆணாதிக்கமும் இனவெறியும் அவர் இந்தியர்களைப் பற்றி இழிவாகப் பேசியதிலிருந்து தெரிகிறது. 1971 ஜூன் மாதம் அவரும் அவருடைய வெளியுறவு மந்திரி கிஸிஞ்சரும் வெள்ளை மாளிகை பிரதான அதிகாரியும் கலந்துகொண்ட உரையாடல்கள் இப்போது வெளிவந்திருக்கின்றன. நிக்ஸன் வெள்ளை மாளிகையில் தன்னோடு பிறர் பேசுவதையெல்லாம் ஒலிநாடாவில் பதிவுசெய்யும் முறையைப் புகுத்தியிருந்தார்.

    அப்படிப் பதிவுசெய்யப்பட்ட பேச்சில், ‘சந்தேகமில்லாமல், எந்தவிதக் கவர்ச்சியும் இல்லாதவர்கள் இந்த இந்தியப் பெண்கள்’ என்ற நிக்ஸன் தொடருகிறார்; ‘கருப்பு ஆப்பிரிக்கப் பெண்களிடம் கவர்ச்சியே இல்லை என்று சிலர் சொல்வார்கள்; ஆனால் அவர்களிடம்கூட மிருகங்களிடம் இருப்பது போன்ற ஏதோ ஒரு கவர்ச்சி இருக்கிறது என்று சொல்லலாம்; ஆனால் இந்த இந்தியப் பெண்கள் …. நினைத்தாலே குமட்டுகிறது’.  மேலும் அவர் கிஸிஞ்சரிடம் எந்த ஆண்களுக்கு இவர்களைப் பார்த்தால் இனக்கவர்ச்சி ஏற்படும்? இந்த இந்தியர்கள் எப்படி இனப்பெருக்கம் செய்கிறார்கள்?’ என்று கேட்கிறார்.

    இந்தியாவின் அமெரிக்கத் தூதர், பாகிஸ்தான் தன் நாட்டு மக்களையே கொன்றுகொண்டிருக்கிறது என்று நிக்ஸனிடமும் கிஸிஞ்சரிடமும் கூறியபோது நிக்ஸனுக்கு அவர்மேல் அப்படி ஒரு கோபம் வந்தது. ‘இந்த 70 வயது கிழவருக்கு அந்தப் பெண்களிடம் என்ன கவர்ச்சி தோன்றியது?’ என்று கேட்டார். கிஸிஞ்சர் நிக்ஸனிடம், ‘600 வருஷங்கள் இந்த இந்தியர்கள் பிரிட்டிஷ்காரர்களின் கால்களை வருடி வருடியே காலத்தைக் கடத்தினார்கள். இவர்கள் முகஸ்துதி செய்வதில் வல்லவர்கள்’ என்றார்.

    இந்திரா காந்தி தன் அறிவுரையைக் கேட்கவில்லை என்ற கோபம் எப்படியெல்லம் நிக்ஸனைப் பேசத் தூண்டியிருக்கிறது! அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் இப்படிப்பட்ட இனத்துவேஷமும் இந்தியப் பெண்கள் பற்றிய மிக கீழ்த்தரமான எண்ணமும் கொண்டிருந்தார் என்பதை அறியும்போது மிகுந்த கோபம் ஏற்படுகிறது. இவ்வளவு கீழ்த்தரமாக நடந்துகொள்ளும் ஒரு அமெரிக்க ஜனாதிபதியை அமெரிக்க மக்கள் ஒரு முறை அல்ல இரண்டு முறை தேர்தெடுத்திருக்கிறார்கள் என்பதை அறியும்போது அமெரிக்க மக்களின் தரத்தை உணர முடிகிறது.

    Share
  • ஐக்கிய அரபு நாடுகள் அமீரகத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஒப்பந்தம்

    ஐக்கிய அரபு நாடுகள் அமீரகத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஒப்பந்தம்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    ஐக்கிய அரபு நாடுகள் அமீரகமும் இஸ்ரேலும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றன.  அதன்படி இரு நாடுகளுக்கிடையேயும் தூதரக உறவுகள் ஆரம்பிக்கப்படும்.  இதற்கு இஸ்ரேல் கொடுத்திருக்கும் ‘சலுகை’ வெஸ்ட் பேங்கில் இருக்கும் யூதக்குடியிருப்புகளை நேத்தன்யாஹு இஸ்ரேலோடு இணைத்துக்கொள்ளப் போவதாக அறிவித்த முடிவை இப்போதைக்கு நிறுத்திவைப்பது. இந்தச் செய்தியை ட்ரம்ப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஆகஸ்ட் 13-ஆம் தேதி அறிவித்தார்.  இது இஸ்ரேல்-அரபு நாடுகளின் உறவைப் பொறுத்தவரை ஒரு பெரிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.  இந்த ஒப்பந்தத்தை இந்தியாவும் ஐரோப்பிய நாடுகளும் வரவேற்றிருக்கின்றன. இஸ்ரேலோடு இல்லாமல் இருந்த தூதரக உறவை ஆரம்பித்த பாரதிய ஜனதா கட்சி ஆளும் இந்தியா இஸ்ரேலின் எதிரிகளைக் குறைக்க வேண்டும் என்று நினைக்கிறதா என்பது மோதிக்கே வெளிச்சம்.

    இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு நாடுகள் அமீரகத்திற்கும் சென்ற சில வருஷங்களாகவே இரகசியத் தொடர்பு இருந்துவந்திருக்கிறது.  இப்போது வெளிப்படையாக அந்த இரு நாடுகளும் ஒப்பந்தம் ஒன்றைப் போட்டு தங்கள் உறவைப் பலப்படுத்திக்கொள்ள முன் வந்திருக்கின்றன.  சோழியன் குடுமி சும்மா ஆடுமா?  இந்தப் புது உறவால் இதை ஏற்படுத்திய மூன்று நாடுகளுக்கும் என்ன ஆதாயம் என்று பார்ப்போம். அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு  எதையாவது சாதித்ததாகக் காட்டிக்கொள்ள வேண்டும்.  முதலாவதாக ஈரானோடு அமெரிக்காவின் முந்திய ஜனாதிபதி  போட்ட ஒப்பந்தத்தை ஒன்றுமில்லாமல் ஆக்கினார். ஒபாமா செய்த எல்லா நல்ல காரியங்களையும் கெடுப்பதுதான் ட்ரம்ப்பின் முதல் குறிக்கோள். ஈரானுக்கு எதிராக அரபு நாடுகளைத் திருப்பி முஸ்லீம் நாடுகளைப் பிரிப்பது. இரண்டாவது இஸ்ரேல்-அரபு நாடுகளின் உறவை சுமுகமாக்கி இஸ்ரேலைப் பாதுகாப்பது. மூன்றாவது அமெரிக்க ஆயுதங்களை அரபு நாடுகளுக்கு விற்பனைசெய்து ஆயுதங்கள் தயாரிக்கும் அமெரிக்கக் கம்பெனிகளின் பணஆதரவைப் பெறுவது.

    இஸ்ரேலைப் பொறுத்தவரை இஸ்ரேல் 1948-இல் உருவாக்கப்பட்டபோது அதற்கு எதிராகத் திரெண்டெழுந்து போர்புரிந்த அரபு நாடுகளை இஸ்ரேலுக்கு எதிரான பாதையிலிருந்து திருப்புவது.  1978-லேயே 1948-இல் இஸ்ரேல் எகிப்திடமிருந்து கைப்பற்றிய சினாய் தீபகற்பகத்தை எப்படியும் இஸ்ரேலிடமிருந்து பெற்றுவிட வேண்டும் என்று உறுதிபூண்டிருந்த சதாத்தைத் திருப்திப்படுத்த சினாயைத் திருப்பிக்கொடுத்து அதனோடு சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டது.  இதற்காக அமெரிக்கா எகிப்துக்கு பண உதவி செய்தது.  அதோடு எகிப்தின் வாயை அடைத்தாகிவிட்டது.  1994-இல் ஆஸ்லோ ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு ஜோர்டான் அமெரிக்கா கொடுக்க ஒப்புக்கொண்ட பண உதவியை ஏற்றுக்கொண்டு இஸ்ரேலோடு ஒப்பந்தம் செய்துகொண்டது. இப்போது மூன்றாவதாக ஐக்கிய அரபு அமீரகத்தோடு தூதரக உறவுகள் வைத்துக்கொள்கிறது. ஆக, ஒவ்வொன்றாக இஸ்லாமில் சுன்னிப் பிரிவைப் பின்பற்றும் அரபு நாடுகளைத் தன் பக்கம் சேர்த்துக்கொண்டு தான் பயப்படும் ஈரானுக்கு எதிராக நாடுகளைச் சேர்ப்பது இஸ்ரேலின் நோக்கம்.  இதற்கு அமெரிக்காவின் பணபலமும் அதிகார பலமும் ட்ரம்ப் போன்ற கோமாளி ஜனாதிபதிகளும் உடந்தை என்பது வெளிப்படை.

    இனி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இதில் என்ன லாபம் என்று பார்ப்போம்.  வசதி படைத்த நாடு என்றாலும் படைபலம் இல்லாத நாடு. தங்கள் படைபலத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும் என்று எல்லா நாடுகளும் விரும்புவது இயற்கை. மேலும் இஸ்ரேலிடமிருந்து அமீரகத்திற்குப் பல நன்மைகள் – தொழிநுட்ப உதவி, ஆயுத உதவி – கிடைக்கும்.  அமெரிக்காவின் தளராத உதவியால் இஸ்ரேல் எல்லா விதங்களிலும் மற்ற பல நாடுகளைவிட மேலோங்கி நிற்கிறது.  அமீரகம் இஸ்ரேலிடமிருந்து பலதுறை முதலீடுகள், சுற்றுலாப் பயணம், நேரடி விமானப் போக்குவரத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள், தொலைதூரத் தொடர்புகள், தொழில்நுட்பம், எரிசக்தி, மருத்துவ உதவி என்று பல உதவிகளைப் பெற முடியும். முன்னால் இஸ்ரேலோடு எந்த உறவும் வைத்துக்கொள்வதில்லை என்ற உறுதிமொழியில் எல்லா அரபு நாடுகளும் கையெழுத்திட்டதையெல்லாம் இப்போது அமீரகம் மறந்துவிட்டது. தன் நலன் என்று வரும்போது பொதுநலம் மறந்து போயிற்று.

    அமீரகத்துக்கு மக்கள் புரட்சியில் எழுந்து மன்னராட்சியை ஒழித்துவிடக்கூடாது என்று பயம். எகிப்தில் புரட்சியால் சர்வாதிகாரி முபாரக் கவிழ்ந்தது ஒரு எச்சரிக்கையாக இருக்கிறது, அப்போது ஒபாமாவின் தலைமையில் இருந்த அமெரிக்க அரசு முபாரக்கின் வீழ்ச்சியைத் தடுக்கவில்லை. அமெரிக்காவை நம்ப முடியாது என்று அமீரகம் தன் ராணுவ பலத்தை அதிகப்படுத்திக்கொள்ள விரும்புகிறது.

    பாலஸ்தீனர்களுக்குத் தனி நாடு கிடைப்பதில் அவர்களோடு சேர்ந்து பாடுபட வேண்டும் என்பதெல்லாம் இப்போது அமீரகத்திற்கு மறந்துவிட்டது. பாலஸ்தீனர்கள்தான் இப்போது தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். பாலஸ்தீனத்தை அடைந்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அதற்காகப் பாடுபட்ட அராபத் இறந்து 16 ஆண்டுகள் ஆகிவிட்டன; இப்போதிருக்கும் பாலஸ்தீன அதிபர் அப்பாஸுக்கு 80-க்கு மேல் வயதாகிவிட்டது. அடுத்த தலைமுறையினருக்கு இஸ்ரேல் ஸ்தாபகர் பென்குரியன் சொன்னதுபோல் எல்லாம் மறந்துகொண்டிருக்கிறது; மேலும் போராடிப் போராடி அலுத்துவிட்டது. தனி நாடு கூட வேண்டாம், இஸ்ரேல் தங்களுக்கு சம குடியுரிமைகள் கொடுத்தால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள்.  தங்கள் இனத்தைச் சேர்ந்த நாடுகளில் ஒன்றே இஸ்ரேலோடு சேர்ந்துகொண்டால் அவர்கள் தான் என்ன செய்வார்கள்? ‘லபோ லபோ’ என்று அடித்துக்கொள்வதைத் தவிர அவர்களால் என்னதான் செய்ய முடியும்?

    இந்தச் செய்தி கொடுத்த அதிர்ச்சி நீங்குமுன் இன்னொரு செய்தி வந்திருக்கிறது.  இஸ்ரேல் எஃப்-16 விமானிகள் ஜெர்மனிக்குப் போய் ஜெர்மனி விமானிகளுக்குப் பயிற்சி கொடுக்கப் போகிறார்களாம்! ஏற்கனவே ஜெர்மனி விமானிகள் இஸ்ரேலுக்கு வந்துவிட்டுப் போயிருக்கிறார்களாம். ஜெர்மனிக்கும் இஸ்ரேலுக்கு ராணுவ ஒத்துழைப்பு இருக்கப் போகிறதாம்.  ஜெர்மனியின் ராணுவம் பலம் இழந்து இருக்கிறதாம்.  நேட்டோ நாடுகள் ஜெர்மனியை தங்கள் ராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளுமாறு வற்புறுத்தி வருகின்றனவாம். ட்ரம்ப் நேட்டோவையே ஒழித்துவிடலாம் என்னும் பயமும் இருக்கிறது. அதற்காகத்தான் இஸ்ரேலிடமிருந்து ராணுவ உதவியைப் பெறப்போகிறார்களாம். ஜெர்மனிக்குப் போகப் போகும் இந்த எஃப்-16 விமானங்களில் பணியாற்றப் போகிற இஸ்ரேல் விமானிகளில் பலர் யூதப்படுகொலையிலிருந்து தப்பித்தவர்களின் வாரிசுகள். ஜெர்மனிக்குச் செல்வது இவர்களுக்கெல்லாம் வேதனை அளிக்கக் கூடும் என்றாலும் இது செய்ய வேண்டிய ஒன்று என்று ஜெர்மன் விமானப் படையின் தலைவர் கூறுகிறார்.

    யூதப்படுகொலை நடந்து முடிந்து 75 ஆண்டுகள் ஆகின்றன என்பது உண்மைதான்.  காலம் ஆறாத புண்களை ஆற்றிவிடும் என்பதுபோல் நினைவுகளையும் மறக்கடித்துவிடலாம். இருந்தாலும் ஹிட்லர் யூதர்களுக்கு இழைத்த இத்தனை பெரிய கொடுமையை எப்படி இஸ்ரேலால் இவ்வளவு சீக்கிரம் மறக்க முடிந்தது? எங்கள் யூத நண்பர் ஒருவர் – அவருடைய உறவினர்கள் யாரும் நேரடியாக யூதப்படுகொலையில் உயிர் இழந்தவர்கள் இல்லை என்ராலும் – ஜெர்மனியில் செய்யப்பட்ட கார்களைக்கூட வாங்குவதில்லை.  அந்த அளவுக்கு அவருக்கு ஜெர்மனி மேல் கோபம், வெறுப்பு. ஆனால், இஸ்ரேலுக்கு ஜெர்மனியின் நட்புக் கிடைத்தால் ஐரோப்பிய யூனியனின் நட்புக் கிடைக்கும்.  பாலஸ்தீனத்தைக் கபளீகரம் செய்வதுதான் அதன் நோக்கம். அதற்காக எந்தக் கூட்டிலும் சேரத் தயார்.

    மனிதன் தன் சுய லாபத்திற்காக எந்த நிலையிலும் தன்னை மாற்றிக்கொள்ளலாம் போலும்.  வேதனை தரும் உண்மை.

    Share
  • அமெரிக்க மனைவியின் துக்கம் அனுசரிக்கும் அழகு

    அமெரிக்க மனைவியின் துக்கம் அனுசரிக்கும் அழகு

    நாகேஸ்வரி அண்ணாமலை

    சில நாட்களுக்கு முன்னால் எங்கள் நண்பர் ஒருவர் இறந்துவிட்டார். எங்கள் திருமணத்திற்கு முன்பே அவர் என் கணவருக்குப் பரிச்சயமானவர். அமெரிக்கரான அவர் பீஸ்கோர் (peace corps) திட்டத்தில் இந்தியாவுக்கு வந்தபோது என் கணவரோடு பரிச்சயம் ஏற்பட்டது. பின் அவர் அமெரிக்கா திரும்பிய பிறகும் அவர்கள் நட்பு தொடர்ந்தது.  அதன் பிறகு நாங்கள் அமெரிக்காவில் வசிக்க ஆரம்பித்தோம்.  என் கணவர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்குச் சேர்ந்தபோது அவரும் அங்கேயே முனைவர் பட்டதிற்குச் சேர்ந்தார்.  நாங்கள் இந்தியா திரும்பிய பிறகும் தொடர்ந்து அவர்கள் நட்பு நீடித்தது.  நாங்கள் இரண்டாவது முறையாக அமெரிக்காவில் செட்டில் ஆனதும் அவரும் பக்கத்திலேயே வசிக்க ஆரம்பித்தார்.  இதற்குள் இவருக்கும் இவருடைய முதல் மனைவிக்கும் இடையே விவாகரத்து ஏற்பட்டு இரண்டாவது முறையாக மணம் செய்து கொண்டிருந்தார். முதல் மனைவியை அவர் விவாகரத்து செய்திருந்தாலும் அடிக்கடி அவரைப் பற்றிப் பேசுவார். அந்த விவாகரத்திற்குக் காரணம் அவருடைய முதல் மனைவிதான். இவர் மனைவியோடு ஒத்துப்போகத் தயாராக இருந்தாலும் அவருடைய முதல் மனைவி என்ன காரணத்தாலோ இவரை விட்டுப் பிரியவே விரும்பினார்; அப்படியே பிரிந்தும்விட்டார்.

    அப்படிப் பிரிந்துபோன மனைவியை இவர் கடைசிவரை தன் மனதில் வைத்திருந்தார் என்று நான் சொல்வேன். முதல் மனைவி திரும்பித் தன்னிடம் வர மாட்டார் என்று உறுதியானதும் இவரும் இன்னொரு துணையைத் தேடிக்கொண்டார். அப்படி இரண்டாவது திருமணம் செய்துகொண்டாலும் இருவருக்கும் இடையே ஒரு பந்தம் ஏற்படவில்லையென்று நான் சொல்வேன்.  வசதிக்காக இருவரும் சேர்ந்து வாழ்ந்தார்கள்.

    இரண்டாவது திருமணம் முடிந்து ஏழெட்டு வருடங்களிலேயே அவருக்கு ஒரு வகையான ரத்தப் புற்றுநோய் வந்தது.  அமெரிக்காவில்தான் யாரையும் எளிதில் இறக்கவிட மாட்டார்களே!  இருபது வருடங்கள் அந்த வியாதியோடு வாழ்க்கையை ஓட்டிவந்தார்.  கடைசியாக சென்ற வாரம் அவர் உயிர் பிரிந்தது.  நாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து அவர்கள் வசிக்கும் இடம் நாற்பது மைல் தூரம் என்றாலும் (அமெரிக்காவில் நாற்பது மைல் தூரத்தை எளிதாக நாற்பது நிமிடங்களில் கடந்துவிடலாம்.  அதனால் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடம் எவ்வளவு தூரம் இருக்கும் என்பதை எத்தனை நேரத்தில் அந்த இடத்தை அடையலாம் என்று குறிப்பிடுவார்கள். உதாரணமாக ஒரு மணி நேர தூரம் என்றால் 60 மைல் தூரம் என்று அர்த்தம்.) முதல் சில வருடங்களில் அடிக்கடி வந்து எங்களைப் பார்ப்பார்.  அவருக்கு இந்திய உணவு மிகவும் பிடிக்கும். நானும் அவர் வரும்போதெல்லாம் அவருக்குப் பிடித்த இந்திய உணவுகளாகச் சமைப்பேன். வருடத்திற்கு ஒரு முறையாவது அவர் மனைவியும் உடன் வருவார்.  அதன் பிறகு வியாதியின் தாக்கம் அதிகமாகியதால் எங்கள் வீட்டிற்கு வருவதைக் குறைத்துக்கொண்டே போனார். வியாதியின் கொடூரத்தால் எங்களோடு தொலைபேசியில் தொடர்புகொள்வது, மின்னஞ்சல் அனுப்புவது போன்றவற்றைக்கூட அவரால் செய்ய முடியவில்லை.  இருவருக்கும் பொதுவான லேண்ட் லைனில்தான் நங்கள் அவரைத் தொடர்பு கொள்வோம், செய்திகளை விடுவோம்.  இவரால் எங்களுக்குப் பதில் அளிக்க முடியவில்லையென்றால் மனைவியாவது எங்களைத் தொடர்புகொள்ளக் கூடாதா என்று நான் நினைப்பேன்.  தனக்கும் தன் கணவருக்கும் தொடர்பு எதுவும் இல்லையென்பதுபோல் மனைவி நடந்துகொண்டார்.

    ஒரு முறை அவருடைய மகள் (முதல் திருமணத்தில் பிறந்தவர்) இவரைப் பார்க்க வந்திருந்தபோது எங்கள் இருவரின் பெயர்களைச் சொல்லியிருக்கிறார்.  இவர் யாரைப் பற்றிப் பேசுகிறார் என்று தெரிந்துகொண்டு இவருடைய மகள் எங்களை மின்னஞ்சலில் தொடர்பு கொண்டார். எங்கள் வீட்டிற்கு அவளுடைய தந்தை வர விரும்புவதாகத் தெரிவித்தார்.  நாங்கள் அப்போது இந்தியாவில் இருந்ததால் அமெரிக்கா திரும்பியதும் அவர் மகளை எங்கள் வீட்டிற்கு அவரை அழைத்துவரும்படிக் கூறினோம். 2019 நவம்பர் மாதம் மகளும் தந்தையும் வந்தனர். வழக்கம்போல் நான் இந்திய உணவு சமைத்திருந்தேன். ரசித்துச் சாப்பிட்டார்.  அதன் பிறகு மறுபடி அவரைப் பார்க்கவே முடியவில்லை.  ஒரு முறை zoom-இல் அவரையும் மனைவியையும் பார்த்துப் பேசினோம். மகள் சிகாகோவுக்கு வரும்போது மறுபடி எங்கள் வீட்டிற்கு அழைத்து வருவதாக ஏற்பாடு.  ஆனால் அதற்குச் சந்தர்ப்பம் வாய்க்கவே இல்லை.

    தன் கணவரின் விருப்பத்தைப் பூர்த்திசெய்ய ஒரு முறைகூட எங்கள் வீட்டிற்குக் கணவனை அழைத்துவர வேண்டும் என்று அவர் மனைவி நினைக்கவில்லை; ‘அவருடைய நண்பர் வீடுகளுக்கெல்லாம் என்னால் அவரைக் கூட்டிக்கொண்டு போக முடியாது’ என்று அவர் மகளிடம் சொல்லியிருக்கிறார்.  எங்கள் வீட்டிற்குக் கணவரைக் கூட்டிவருவது அப்படியொன்றும் கடினமான காரியம் இல்லை அவருக்கு.  எங்களோடு உரையாடுவதையும் எப்போதும் ரசிப்பார்.  அப்புறம் ஏன் கூட்டிவரவில்லை என்பது அவருக்கே வெளிச்சம். எங்கள் வீட்டிற்கு அவரை மகள் கூட்டிவரவில்லையென்றால் எங்களால் அவரைப் பார்த்திருக்க முடியாது. இரண்டு வருஷங்களுக்கு முன்னால் அவர் எங்கள் வீட்டிற்கு வந்ததோடு சரி.  அதன் பிறகு அவரால் தானாக வர முடியவில்லை.  இந்த அளவுகூட கணவனின் விருப்பத்தை நிறைவேற்றிவைக்கப் பிரியப்படாத பெண்கள் இந்த அமெரிக்க மனைவிமார்கள்.

    அவர் இறந்த செய்தியைக்கூட அவர் எங்களுக்குச் சொல்லவில்லை. இன்னொருவர் மூலம்தான் எங்களுக்குத் தெரிந்தது. உடனே என் கணவர் தனக்கும் தன் நண்பருக்கும் பொதுவான நண்பர்கள், உடன் வேலைபார்த்தவர்கள் ஆகியோருக்குச் செய்தி அனுப்பினார்.  அப்படிச் செய்தி கிடைத்த எல்லோரும் என் கணவருக்கு தங்கள் இரங்கலைத் தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பினார்கள். அவற்றையெல்லாம் தொகுத்து என் கணவர் அவர் மனைவிக்கு அனுப்பினார். அதைப் பார்த்துத் தான் மிகவும் மனம் நெகிழ்ந்ததாகவும் ஆழ்மனதிலிருந்து நன்றி தெரிவிப்பதாகவும் மின்னஞ்சல் அனுப்பினார். கணவர் நண்பர் வீட்டிற்குப் போகப் பிரியப்பட்டபோது அவர் மனைவி அதை நிறைவேற்றிவைக்கவில்லை.  இப்போது அவர் நண்பர்கள் எழுதிய இரங்கல் செய்திகள் அவர் மனதை நெகிழவைத்ததாம். எனக்கு ஒன்றுமே புரியவில்லை!

    Share
  • அமெரிக்காவின் முதல் அணுகுண்டுப் பரிசோதனை

    அமெரிக்காவின் முதல் அணுகுண்டுப் பரிசோதனை

    நாகேஸ்வரி அண்ணாமலை

    ஜூலை 16, 2020 அன்று அமெரிக்கா முதல் அணுகுண்டை வெடித்துச் சோதித்துப் பார்த்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டன.  அன்று அதிகாலை ஒரு மணிக்கு அணுகுண்டுப் பரிசோதனையின் (இதை டிரினிட்டி (Trinity) என்று அழைத்தார்கள்) தலைவர் விஞ்ஞானி  ராபர்ட் ஓப்பென்ஹைமெர், ராணுவ அதிகாரி லெஃப்டினென்ட் ஜெனரல் லெஸ்லி க்ரோவெஸ்ஸை அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாநிலத்திலுள்ள ஒரு பாலைவனத்தில்  – அணுகுண்டை வெடித்துப் பரிசோதிக்கப் போகும் இடத்தில் – சந்தித்து எல்லா ஏற்பாடுகளும் சரியாக இருக்கின்றனவா என்று பார்த்தார்.

    அவர்கள் இருவர் மட்டுமல்ல, நிறையப் பொறியர்களும் (engineers) பௌதிகவியலாளர்களும் (physicists) அங்கு கூடியிருந்தனர்.  யாருக்கும் 13 டன் ப்ளூடோனியமும் யுரேனியமும் நிரப்பப்பட்ட ஒரு சாதனத்தை வெடிக்கப் போவதன்  பின்விளைவுகளைப் பற்றிச் சரியாகத் தெரியவில்லை; சில விஞ்ஞானிகள் அப்படிச் செய்வதால் உலகமே வெடித்துச் சிதறிவிடுமோ என்று பயந்தனர்; இன்னும் சிலரோ இது வெடிக்காமலே போய்விடலாம் என்று பயந்தனர்.

    சரியாக 5:29 மணிக்கு அந்தச் சாதனம் வெடித்தது; 21,000 டன் எடையுள்ள டி.என்.டி.-க்குச் சமமான (TNT) சக்தியோடும் செவ்வாய் கிரகத்திலிருந்தே பார்க்கக்கூடிய அளவுக்கு வெளிச்சத்தோடும் அது வெடித்தது.  மனித வரலாற்றிலேயே முதல் முதலாக வெடித்த அணுகுண்டு அது.

    அமெரிக்கா முதலில் இந்த அணுகுண்டை வெடித்துப் பார்த்த பிறகு,  அமெரிக்காவும் மற்ற எட்டு நாடுகளும் 2000 தடவைக்குமேல் (அமெரிக்கா மட்டும் 1000 தடவை) இந்த அணுகுண்டை வெடித்துப் பரிசோதனை நடத்தியிருக்கின்றன. இந்தக் குண்டு வெடித்த சமயத்தில் அதன் பின்விளைவுகள் பாதிக்கக்கூடிய தூரத்தில் –சுமார் 50 மைல் சுற்று வட்டாரத்திற்குள் – மனிதர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருந்தார்கள்.  பின்விளைவுகளைப் பற்றிச் சரியாகத் தெரியாதாலோ அல்லது அவர்களைப் பற்றிக் கவலைப்படாதாலோ இதை வெடிக்கும் முன் இந்த டிரினிட்டி திட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அந்த மக்களை எச்சரிக்கவில்லை, வேறு இடங்களுக்கு இடம்பெயர்க்கவில்லை. அதன் பிறகு பல தலைமுறைகள் அங்கு வாழ்ந்தவர்களிடையே குழந்தைகள் இறந்துபோனதோடு பலர் புற்றுநோயாலும் பாதிக்கப்பட்டனர். குண்டு வெடித்த அன்று எல்லா திசைகளிலும் – சுமார் 1000 சதுரமைல் அளவுக்கு – அதன் பாதிப்பு இருந்தது; வடமேற்கு திசையில் குண்டின் சாம்பல் 15 மைல் தூரத்திற்குச் சென்று அங்கிருந்த கால்நடைகளைப் பாதித்தது; வட கிழக்கில் 20 மைல் தூரத்திற்குச் சென்று பல குடும்பங்களின் வீடுகளின் கூரைகளையும் தண்ணீர்த் தொட்டிகளையும் நச்சுப்படுத்தியது; தென்கிழக்கில் 35 மைல் தூரம் கதிரியக்க சாம்பல் அங்கு கொடிகளில் காயப்போட்டிருந்த துணிகளைக் கருப்பாக்கியது.  மனிதனுக்குக் கேடுவிளைவிக்காத கதிர்வீச்சின் அளவைவிட 10,000 மடங்கு அதிமான சக்தியோடு அன்றைய கதிர்வீச்சு இருந்தது.

    1939-1945 வரை இரண்டாவது உலகப்போர் நடந்தது. குண்டு வெடித்த சமயம் ஜெர்மனி சரணடைந்துவிட்டாலும் ஜப்பான் சரணடைவதாக இல்லை.  ஜப்பானைச் சரணடையவைக்க ஒரு அழிவுசாதனத்தை உருவாக்கி அதை ஜப்பானின் மீது பிரயோகிக்க வேண்டும் என்று அமெரிக்கா நினைத்தது. அந்த சாதனத்தை உருவாக்க அரசு விஞ்ஞானிகளையும் பௌதிகவியலாளர்களையும் பணித்தது. முதலில் அந்தத் திட்டத்திற்கு ஒதுக்கிய தொகை 6000 டாலர்கள்; பின்னால் அதுவே இரண்டு பில்லியன் டாலர்களாக உயர்ந்தது; இன்றைய மதிப்பில் அது 28 பில்லியன்களுக்குச் சமம்.  (இன்றைய இந்திய ருபாயில் 209 கோடி)  இந்தக் குண்டைப் போட்டு ஜப்பானைப் பணியவைக்க வேண்டும் என்று அமெரிக்க அரசு முடிவுசெய்தது. போர் நீண்டுகொண்டே போனாலும், கடைசியில் அமெரிக்கா எப்படியும் ஜப்பானை வென்றுவிடும் என்று கணிக்கப்பட்டாலும் அது பல அமெரிக்க வீரர்களின் உயிரைப் பலிகொண்ட பிறகுதான் சாத்தியம் என்று முடிவுசெய்யப்பட்டு அணுகுண்டை ஜப்பான் மீது வீச அமெரிக்கா முடிவுசெய்தது. இதனால் பல ஜப்பானிய குடிமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிந்தாலும், ஜப்பான் குடிமக்களின் உயிர்களைவிட அமெரிக்க வீரர்களின் உயிர்கள் மேலானவை என்று கருதியது அமெரிக்க அரசு. முதலில் குண்டை வெடிக்கும் பரிசோதனையின்போது அது ஏற்படுத்திய அழிவைக் கண்ட 70 விஞ்ஞானிகள் குழு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமனுக்கு ஒரு விண்ணப்பம் அனுப்பியது.  அதில் கூறப்பட்டிருந்ததாவது: கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அழிவை உண்டாக்கக் கூடிய இந்தச் சாதனத்தை முதல் முதலாக உபயோகித்த அவப்பெயர் அமெரிக்காவுக்கு வருமாதலால்,  இதை ஜப்பான் மீது பிரயோகிப்பது பற்றி நன்றாக யோசனை செய்யவும்.  இந்த விண்ணப்பத்திற்கு முன்னாலும் டிரினிட்டியில் பங்குகொண்ட ஒரு ஹங்கேரி விஞ்ஞானியும் ஜெர்மனியிலிருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்த ஒரு ஜெர்மன் விஞ்ஞானியும் ட்ரூமனுக்கு ‘எங்களிடம் இப்படிப்பட்ட அழிவை ஏற்படுத்தும் ஒரு சாதனம் இருக்கிறது என்று ஜப்பானிடம் ஒரு முறை சொல்லி எச்சரித்துப் பார்த்த பிறகு குண்டு போடுவது பற்றி யோசிக்கலாம்’ என்று செய்தி அனுப்பினர்.  இரண்டு செய்திகளையும் ட்ரூமன் பார்த்த மாதிரியே தெரியவில்லை.  எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் ஜப்பான் சரணடைய வேண்டும் என்று விரும்பியதோடு எவ்வளவு சீகிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஜப்பனைச் சரண்டையவைக்க வேண்டும் என்பதிலும் ட்ரூமன் குறியாக இருந்தார். ஆகஸ்ட் 6-ஆம் தேதி ஹிரோஷிமா மேல் அமெரிக்கா ‘சின்னப் பையன்’ (little boy) என்று ‘செல்லப்’ பெயரிடப்பட்ட அணுகுண்டை வீசிய பிறகு ஜப்பான் சரணடையும் வாய்ப்பு இருந்ததால்,  மறுபடி நாகசாகிமீது ‘தடித்த மனிதன்’ (fat man) என்று பெயர் சூட்டப்பட்ட இன்னொரு குண்டைப் போடுவதை அமெரிக்கா தவிர்த்திருக்கலாம்.  ஆனால். செய்யவில்லை.

    தன்னுடைய ராணுவ பலத்தைக் காட்டுவதற்காக அமெரிக்கா செய்த மிகப் பெரிய கொடுமை இது.  இரண்டு குண்டு வீச்சுகளிலும் இறந்த ஜப்பானிய மக்களின் எண்ணிக்கை இரண்டு லட்சம்; இதற்குமேல் காயம்பட்டவர்கள், அதன் பிறகு பல காலம் உடல்நலம், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், அங்கஹீனமுற்றவர்கள், குறையோடு பிறந்த குழந்தைகள் ஆகியோரின் எண்ணிக்கை பல மடங்கு.   நாங்கள் 1996-இல் ஜப்பானுக்குச் சென்றிருந்தபோது ஹிரோஷிமாவில் குண்டால் பாதிக்கப்பட்ட இடங்களையும் அதையடுத்து உள்ள மியூசியத்தையும் பார்த்தோம். அப்போது எடுக்கப்பட்ட படங்கள் நெஞ்சில் நெருப்பைக் கொட்டுபவையாக இருந்தன. இரண்டாவது குண்டையாவது அமெரிக்கா தவிர்த்திருக்கலாம் என்ற நினைப்பு அமெரிக்காவின்மீது மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது.

    டிரினிட்டி திட்டத்திற்குத் தலைவராகயிருந்த ஓப்பன்ஹைமெர் ஜனாதிபதி ட்ரூமனிடம் ‘என் கைகள் ரத்தக்கறை படிந்த கைகள்’ என்று கூறினாராம்; இறக்கும்வரை குண்டினால் ஏற்பட்ட விளைவுகள் அடிக்கடி அவர் மனதில் தோன்றி அவரைத் துன்புறுத்திக்கொண்டிருந்தனவாம்.

    வியட்நாமில் அணுகுண்டைப் போடும்படி ஜனாதிபதி ஜான்ஸனுக்கு யோசனை கூறப்பட்டும், நல்ல வேளையாக அவர் அப்படிச் செய்யவில்லை; அணுகுண்டின் அழிவைப் பார்த்த பிறகு வியட்நாமிலும் பிரயோகிக்கும்படி யோசனை கூற யாருக்கு மனம் வந்ததோ தெரியவில்லை.

    நெஞ்சில் ஈரம் இல்லாதவர்கள், பிறர் துயரத்தை உணராதவர்கள் எல்லாக் காலங்களிலும் இருப்பார்கள் போலும். அமெரிக்கா ஜப்பானில் அத்தனை சேதம் விளைவித்தாலும் சொந்த நாட்டிலேயே 1000 முறை அணுசோதனை செய்ததன் மூலம் தன் சொந்த நாட்டிலும் எத்தனையோ கெடுதல்கள் புரிந்திருக்கிறது. 1963-க்குப் பிறகு தரைக்கு மேல் அனுகுண்டு சோதனை செய்வதில்லை என்று அமெரிக்க அரசு முடிவுசெய்தது; பூமிக்குக் கீழே மட்டுமே அப்போதிலிருந்து சோதனைகள் நடந்துகொண்டிருக்கின்றன.  ஆனால் இப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பதவிக்கு வந்தவுடனேயே தேவையென்றால்  அணு ஆயுதப் பரிசோதனைகளை விரிவுபடுத்தப் போவதாகவும் பூமிக்கு மேலேயும் சோதனைகளை நடத்தப் போவதாகவும் கூறியிருக்கிறார்.  இந்த வக்கிரம் பிடித்த மனிதனை சீக்கிரமே பதவியிலிருந்து இறக்க வேண்டும். அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, உலகிற்கே அப்போதுதான் நல்ல காலம் பிறக்கும்.

    கண்ணுக்குத் தெரியாத ஒரு வைரஸால் இத்தனை மனித உயிர்களைக் கொல்ல முடிகிறது; அதைத் தடுத்து நிறுத்த மனிதனால் முடியவில்லை. அணுகுண்டு போன்ற ஆயுதங்களைக் கொண்டு மனித உயிர்களைக் கொல்லாமல், துன்புறுத்தாமல்  இருக்கவாவது செய்யலாம்.

    Share
  • நோய்த்தொற்றைத் தடுக்க இதுவும் ஒரு வழியா?

    நோய்த்தொற்றைத் தடுக்க இதுவும் ஒரு வழியா?

    நாகேஸ்வரி அண்ணாமலை

    கோவிட்-19 பரவிக்கொண்டிருந்ததால் அமெரிக்காவில் கடைகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன.  எல்லாவற்றையும் விட திருமணங்கள் ஒத்திவைக்கப்பட்டன; சில திருமணங்களில் விருந்தினர் எண்ணிக்கை மிகவும் குறைக்கப்பட்டது; சில திருமணங்கள் ஆன்லைனில் நடத்தப்பட்டன. ஆனால் 1918-இல் ஸ்பேனிஷ் ஃப்ளூ என்னும் வைரஸால் பரப்பப்படும் வியாதி உலகம் முழுவதும் பரவியபோது ஒரு திருமணம் நடத்திவைக்கப்பட்டது. அந்தச் சம்பவத்தில் அங்கு இறந்தவர்களும் உயிரோடு இருந்தவர்களும் கலந்துகொண்டார்கள். எப்படித் தெரியுமா? அந்தத் திருமணம் ஒரு கல்லறைத் தோட்டத்தில் நடத்திவைக்கப்பட்டது. கொடிய வைரஸ் தொற்று பரவிக்கொண்டிருந்தபோது அங்கு எப்படி ஒரு திருமணம் நடத்தப்பட்டது என்று அறிந்தால் ஆச்சரியமாக இருக்கும்.

    1918 நவம்பர் மாதம் 4-ஆம் தேதி The Evening World என்ற பத்திரிக்கையில் வந்த செய்தி: நியூயார்க்கிலுள்ள மவுன்ட் ஹெப்ரான் கல்லறைத் தோட்டத்தில் இலக்கம் 369, பத்தாவது கிழகுத் தெருவில் வசிக்கும் மிஸ் ரோஸ் ஸ்வார்ட்ஸ் என்பவருக்கும் இலக்கம் 638, பதினோராவது கிழக்குத் தெருவில் வசிக்கும் ஆபிரஹாம் லேச்டெர்மன் என்பவருக்கும் நேற்று மதியம் யூதமதத் தலைவர் உங்கர் முன்னிலையில் திருமணம் நடந்தது. மேலும் அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்தது: கொடிய வைரஸ் தொற்று நோய் பரவுவதைத் தடுத்து நிறுத்த ஒரு கல்லறைத் தோட்டத்தில் ஒரு திருமணத்தை நடத்த வேண்டும் என்ற மிகப் பழைய யூத வழக்கப்படி இந்தத் திருமணம் நடத்திவைக்கப்பட்டது.  கொடிய நோய்த் தொற்றுப் பரவலைத் தடுத்து நிறுத்த முன்வந்த இந்தத் தம்பதியை வாழ்த்துவதற்கு 2000 பேர் வந்திருந்தனர்.

    இந்தத் திருமணம் ‘கருப்புக் கல்யாணம்’ என்று அழைக்கப்பட்டது. நியூயார்க்கின் குயின் பகுதியில் நடத்திவைக்கப்பட்ட இந்தத் திருமணம் கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த யூதர்களின் வழக்கப்படி நடத்தப்பட்டது. அப்போது நியூயார்க்கில் மட்டும் இருபதாயிரம் பேர் இந்த வியாதிக்குப் பலியாகியிருந்தனர்; உலகளவில் லட்சக் கணக்கான பேர் உயிர் இழந்திருந்தனர்.  பிலடெல்பியா, வின்னிபெக், மானிடோபா என்ற ஊர்களிலும் கல்லறைத் தோட்டங்களில் இம்மாதிரித் திருமணங்கள் நடத்திவைக்கப்பட்டன; மானிடோபாவில் சில யூதர்கள் கல்லறைத் தோட்டத்தின் மறு பகுதியில் ஒரு இறுதிச் சடங்கும் நடத்தினர்.  ‘இறந்தவர்களின் முன்னிலையில் ஒரு சமூகத்தின் எளிய ஒரு ஆணும் பெண்ணும் திருமணத்தால் ஒன்று சேர்ந்தால் கடவுளின் கவனம் அப்படித் திருமணம் செய்துகொண்டவர்களுடைய சகாக்களின் கஷ்டத்தை நோக்கித் திரும்பும்’ என்று பிலடெல்பியா லெட்ஜரில் குறிப்பிட்டிருந்ததாம்.

    சமீபத்தில் ‘Tablet’ என்னும் ஒரு யூத மத ஆன்லைன் இதழில் ஒரு கட்டுரையில் காலரா போன்ற பெரிய வியாதிகள் பரவுவதைத் தடுக்க இம்மாதிரி சம்பவங்கள் நடந்திருக்கலாம் என்றும் ‘எளிய’ என்று குறிப்பிடும்போது சமூகத்தின் விளிம்பில் இருந்த அனாதைகள், பிச்சைக்காரர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரில் இருவரைத் திருமணத்திற்குத் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.  மேலே குறிப்பிட்ட நியூயார்க் நகரில் நடந்த திருமணத் தம்பதிகள் இந்த ரகத்தைச் சேர்ந்தவர்களா என்று உறுதியாகத் தெரியவில்லை.  மேலும் அந்தத் திருமணம் பின்னால் நிலைத்திருந்ததா, அவர்களுக்குக் குழந்தைகள் இருந்தனவா, அவர்கள் கடைசிவரை சந்தோஷமாகக் குடும்பம் நடத்தினார்களா என்ற விபரம் எதுவும் தெரியவில்லை.  ரோஸ் என்ற ஒரு அனாதைப் பெண் இருந்ததாக அந்த ஊரின் 1910 மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் குறிப்பிட்டிருக்கிறது; முப்பது வருஷங்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி வேலைபார்க்க முடியாத லேச்டெர்மன் என்று ஒருவர் இருந்ததாகத் தெரிகிறது.  ஆனால் இவர்கள் இருவரும்தான் ஹெப்ரானில் திருமணம் செய்துகொண்டவர்களா என்று ஊகிக்க முடியவில்லை.  அப்படி ஒரு திருமணம் நடந்தது என்பது மட்டும் அந்த நகரின் அதிகாரியின் கோப்புகளிலிருந்து உறுதியாகத் தெரிகிறது. இருவரின் பெயரில் கொஞ்சம் வித்தியாசமும் இருந்தது.

    சென்ற மார்ச் மாதம் இஸ்ரேலில் ஒரு கல்லறைத் தோட்டத்தில் அம்மாதிரி ஒரு திருமணம் நடந்திருக்கிறது.  இது நவீன காலமாதலால் சமூக விலகல் போன்ற விதிகள் கடைப்பிடிக்கப்பட்டு நவீன முறைப்படி நடந்த திருமணம். இந்தியப் பிரதமர் குடிமக்கள் எல்லோரையும் விளக்கை அணைத்துவிட்டு கையைத் தட்டும்படி கூறியது அப்படியொன்றும் சிரிப்புக்கிடமான காரியம் இல்லையோ?

    நியூயார்க் நகரில் நடந்த திருமணத்தைப் பொறுத்தவரை கொடிய நோய்தொற்றுப் பரவலை அந்தக் கருப்புக் கல்யாணம் தடுத்து நிறுத்தியதா என்று தெரியவில்லை.  அதே பத்திரிக்கையில் கருப்புக் கல்யாணம் பற்றிய செய்தியின் இடது பக்கத்தில் கொட்டை எழுத்துத் தலைப்பில் ‘இன்ஃப்ளுயென்ஸா முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது’ என்ற செய்தி வெளிவந்திருக்கிறது!

    கொடிய வியாதி அதன் பிறகு 24 மணி நேரத்தில் முடிந்துவிடும் என்றும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் பிறகு வியாதி நகரை விட்டுப் போனதற்கான ஆவணங்களும் கிடைத்திருக்கின்றன. அந்தக் கால மருத்துவர்களும் அந்த நோய் பற்றி ஆராய்ச்சி செய்தவர்களும் நோய்த்தொற்று பரவல் முடிந்ததற்கான பெருமையை திருமணத்தை நடத்திவைத்த அந்த யூத மதத்தலைவருக்கும் அந்த மணமக்களுக்கும் கொடுத்திருக்க மாட்டார்கள்; சமூக விலகல், ஆரோக்கிய பராமரிப்பு, வியாதி உள்ளவர்கள் தனித்திருத்தல் ஆகியவற்றுக்குத்தான் அந்தப் பெருமையைக் கொடுத்திருப்பார்கள்.

    Share
  • தர்மசங்கடம்: டிரம்ப் ஆட்சியில் அமெரிக்கா

    தர்மசங்கடம்: டிரம்ப் ஆட்சியில் அமெரிக்கா

    நாகேஸ்வரி அண்ணாமலை

    ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் நாங்கள் அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்தபோது அமெரிக்கா ஜனநாயகத்திற்கு ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தது. அமெரிக்க அரசியல் ஊழல் இல்லாதது, அமெரிக்க அரசியல்வாதிகள் சுயமாகச் சிந்தித்துச் செயல்படுபவர்கள் என்ற எண்ணம் இருந்தது.  இப்போது அந்தக் காலம் மலையேறிவிட்டதுபோல் தெரிகிறது.

    நான் அடிக்கடி சொல்வதுபோல் அமெரிக்க ஜனாதிபதியாவதற்குச் சில தகுதிகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். அவர் விவாகரத்து செய்துகொண்டவராக இருக்கக் கூடாது; உலக சரித்திரம் நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும்; நல்ல புத்தி கூர்மையுள்ளவராக இருக்க வேண்டும்; ஆலோசகர்கள் இருந்தாலும் அவர்கள் கூறுவதைப் புரிந்துகொண்டு செயலாற்ற வேண்டும்; நாட்டை நல்ல முறையில் வழிநடத்தத் தெரிந்திருக்க வேண்டும். இப்போது ஜனாதிபதியாக இருக்கும் டிரம்ப்பிடம் இதில் எந்தக் குணங்களும் இல்லையென்பதோடு இவற்றுக்கு நேர்மாறான குணங்கள் நிறைய இருக்கின்றன. இவருக்கு உண்மை பேசத் தெரியாது என்பதோடு பொய் பேசுவதில் வல்லவர். பதவியேற்றதிலிருந்து எத்தனை பொய்கள் சொல்லியிருக்கிறார் என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை பட்டியலிட்டுக் கூறியிருந்தது. அது ஆயிரக் கணக்கில் இருக்கிறது.

    அமெரிக்க ஜனாதிபதி விவாகரத்து செய்துகொண்டவராக இருக்கக் கூடாது என்பது எழுதப்படாத விதி. டிரம்ப் மூன்று முறை திருமணம் செய்துகொண்டவர் என்பதோடு பல பெண்களோடு வேண்டத்தகாத உறவில் ஈடுபட்டிருந்திருக்கிறார். இவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, ‘நீங்கள் என்னென்ன புத்தகங்கள் படித்திருக்கிறீர்கள்?’ என்று ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு ‘பைபிள்’ என்று பதில் சொன்னாராம். அவர் படித்ததாகச் சொன்ன ஒரே புத்தகமான பைபிளிலிருந்துகூட எதையும் சொல்லத் தெரியவில்லை.

    மே 26, 2020 அன்று ஜனாதிபதிப் பதவிக்கு வேட்பாளராக ஜனநாயகக் கட்சி தேர்ந்தெடுக்கப் போகும் பைடன் வாய் குழறி, டிரம்ப்பை ஒரு முட்டாள் என்று கூறிவிட்டார்.  அது எதில் போய் முடியப் போகிறதோ என்பது ஒரு புறம் இருக்கட்டும்.  அவர் சொன்னது முற்றிலும் சரி.  டிரம்ப் ஒரு முட்டாள்தான்.  நினைத்த நேரம் நினைத்ததைப் பேசும் ஒரு கோமாளி. ஒரு நாட்டின் தலைவர், அதிலும் உலகிலேயே வலிமை வாய்ந்த, பணக்கார நாடான அமெரிக்காவின் தலைவர் இப்படிப் பேசும்போது தர்மசங்கடமாக இருக்கிறது.

    டிரம்ப்பின் மனைவி மெலானியா டிரம்ப்புக்குத் தகுந்த மனைவி என்றாலும் ஒரு ‘முதல் பெண்’ணிற்கு (First Lady) உரிய தகுதி இருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை.  இவர் கடந்துவந்த பாதை அப்படிப்பட்டது. மாடலாக இருந்தவர்; தன் உடலைப் பலவகையில் காட்டித் தொழில் நடத்தியவர். இவர் ‘முதல் பெண்’ என்றால் மனது ஒப்புக்கொள்ள மறுக்கிறது. இப்படிப்பட்ட மனைவி உடைய ஒருவரை அமெரிக்க மக்கள் எப்படித் தேர்ந்தெடுத்தார்கள் என்று புரியவில்லை. 

    இன்னும் 40% மக்களிடம் டிரம்ப்புக்கு ஆதரவு இருக்கிறது என்கிறார்கள். அது எப்படி என்று தெரியவில்லை. கொரோனா வைரஸ் அமெரிக்காவில் பரவ ஆரம்பித்தபோது, ‘அது ஒன்றுமே இல்லை.  தானாக மறைந்துவிடும்’ என்று சொன்னார்.  இத்தனை பேர் இறந்திருக்கிறார்கள் என்பது உண்மைச் செய்தி இல்லை என்கிறார். மலேரியாக் காய்ச்சலுக்குக் கொடுக்கப்படும் மருந்தை கொரோனா வைரஸால் தாக்கப்பட்டவர்களும் உட்கொள்ளலாம் என்றார். பின் தானே அதைச் சாப்பிடுவதாகவும் கூறினார்.

    இவரை விட்டுவிடுவோம். இவ்வளவு கீழ்த்தரமாக நடந்துகொள்ளும் இவருக்கு இன்னும் மக்களிடையே ஆதரவு இருக்கிறதாம். அடுத்த முறையும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகக் கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன.  இது என்ன கொடுமை என்று தெரியவில்லை. அமெரிக்க மக்கள் மட்டுமல்ல, அமெரிக்க குடியரசுக் கட்சி செனட்டர்களும் இவர் சொல்வதற்கு எல்லாம் தலையாட்டிக்கொண்டு இவர் பின்னால் செல்லத் தயாராக இருக்கிறார்களாம். இந்தியாவில்தான் எல்லாக் கட்சி உறுப்பினர்களும் அரசியல்வாதிகளும் கட்சித் தலைவரின் கட்டளையை அப்படியே பின்பற்றுவார்கள். அப்படிச் செய்யாவிட்டால் அந்தக் கட்சியில் அவர்களால் இருக்கவே முடியாது. அ.தி.மு.க. உறுப்பினர்களும் அமைச்சர்களும் சந்தனப் பேழை அம்மையார் காலில் அல்லவா விழுந்தார்கள். இவர்கள் யாரும் சுயமாகச் சிந்திப்பதில்லை.

    அமெரிக்காவிலும் இரண்டு கட்சிகளுக்கும் தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சொல்படிதான் உறுப்பினர்கள் நடந்துகொள்ள வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. குடியரசுக் கட்சி இடதுசாரிக் கட்சி என்று பெயர் வாங்கியிருக்கிறது. இக்கட்சி உறுப்பினர்கள் பொதுவாக இடதுசாரிக் கொள்கைகளை உடையவர்களாக இருப்பார்கள். ஆனாலும் முழுக்க முழுக்க இடதுசாரிக் கொள்கைகளைத்தான் பின்பற்றுகிறார்கள் என்று சொல்ல முடியாது. சில விஷயங்களில் அவர்கள் நடுநிலைமை வகிப்பவர்களாகவும் இருப்பார்கள்; அல்லது வலதுசாரிக் கொள்கையுடையவர்களாகவும் இருப்பார்கள். இதே மாதிரித்தான். குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் வலதுசாரிக் கொள்கைகளைத்தான் பின்பற்ற வேண்டும் என்ற கட்டாயமில்லை.

    இப்போது டிரம்ப் பதவிக்கு வந்த பிறகு குடியரசுக் கட்சி அரசியல்வாதிகள் ட்ரம்ப்பின் பின்னால் போகிறார்கள்.  அவர் சொல்வது சரியென்று நினைக்கிறார்கள்.  ட்ரம்ப்பிற்கு மக்களிடம் இன்னும் ஆதரவு இருக்கிறது, அவருக்கு ‘ஆமாம் சாமி’ போடாவிட்டால் மக்களிடம் தங்களுக்கு ஆதரவு கிடைக்காது, அதனால் தேர்தலிலும் ஜெயிக்க முடியாது என்று நினைப்பதுபோல் தெரிகிறது. அமெரிக்க அரசியல்வாதிகள் தாங்களாகச் சிந்தித்துச் செயல்படுபவர்கள் என்று நினைத்ததெல்லாம் இப்போது பொய்யாகிவிட்டதுபோல் இருக்கிறது.  சில சமயங்களில் தங்கள் நலன்களை மட்டுமே பார்த்துக்கொள்வதில் நம் இந்திய அரசியல்வாதிகளை மிஞ்சிவிடுவார்கள் போல் தெரிகிறது.

    டிரம்ப்பின் காலில் விழும் அளவுக்குப் போகாவிட்டாலும் அவர் சொல்வது எதையும் எதிர்த்துப் பேசும் அளவுக்கு அவர்களுக்குத் துணிச்சல் இல்லை; அவரைப் பதவியிறக்கம் செய்ய ஜனாதிபதிக் கட்சி கீழவை உறுப்பினர்கள் முயன்றபோது குடியரசுக் கட்சி செனட்டர்கள் யாரும் ஓட்டளிக்கவில்லை. அடுத்த தேர்தலில் தங்களுக்கு ஜெயிக்கும் வாய்ப்பு இல்லாமல் போகும் என்பதால்தான் இப்படிச் செய்தார்கள் என்கிறார்கள். தங்களுக்காவே வாழும் இந்த அரசியல்வாதிகளைப் பார்த்து அயர்ச்சி ஏற்படும் அதே சமயம், நாட்டிற்காக, நாட்டு மக்களுக்காக மட்டுமே வாழ்ந்த நம் அண்ணல் காந்தி மகான் பிறந்த மண்ணில் பிறப்பதற்கு என்ன தவம் செய்திருக்கிறோம் என்ற எண்ணம் பிறந்து மனத்தில் சொல்லவொணாத ஆறுதல் பிறக்கிறது.

    Share
  • அமெரிக்காவில் போர்வீரர்களின் நினைவு நாள்

    அமெரிக்காவில் போர்வீரர்களின் நினைவு நாள்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    மே 25, அமெரிக்காவில் போர்வீரர்களின் நினைவுநாள்.  இதை ஆங்கிலத்தில் Memorial Day என்று அழைப்பார்கள்.  ஒவ்வோர் ஆண்டும் வரும் ஐந்து தேசிய விடுமுறைகளில் இதுவும் ஒன்று.  மே மாதத்தின் கடைசித் திங்கள் கிழமையை இந்த நினைவுநாளாகக் குறித்திருக்கிறார்கள்.

    அமெரிக்கா புரிந்த போர்களில் கலந்துகொண்டவர்களை நினைவுகூரும் நாள். அமெரிக்கா புரிந்த பல போர்கள் தேவையில்லாதவை. அமெரிக்கா தன்னுடைய பண வலிமையையும் ராணுவ பலத்தையும் காட்டுவதற்காகப் புரிந்த போர்கள் அவை. அதிலும் வியட்நாமில் புரிந்த போர் அமெரிக்க ஜனாதிபதிகள் தங்கள் பெயரைக் காப்பாற்றிக்கொள்வதற்காகப் புரிந்த போர். வியட்நாம் போர் தீவிரமாக நடந்துகொண்டிருந்தபோது பதவியில் இருந்த இரண்டு ஜனாதிபதிகளும் தங்கள் பதவிக் காலத்தில் அமெரிக்கா தோற்ற போர் என்ற பெயர் தங்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே வீம்புக்காக நடத்திய போர். இந்தப் போரையும் சேர்த்து அமெரிக்கா புரிந்த போர்களில் கலந்துகொண்ட அமெரிக்கர்களை நினைவுகூரும் இந்தச் சமயத்தில் இந்தப் போர்களினால் எத்தனை நாடுகளில் எத்தனை சேதம் ஏற்பட்டது, எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பதைப் பற்றியெல்லாம் அமெரிக்கர்கள் கவலைப்படுவதில்லை. அதுவும் வியட்நாமில் நடந்த போரில்  இலட்சக்கணக்கான   வியநாம் வீரர்களும் குடிமக்களும் இறந்தார்கள் என்பதை யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. கம்யூனிஸ்டுகள் தங்கள் குடிமக்களை நன்றாக மூளைச்சலவை செய்துவிடுகிறார்கள் என்று அமெரிக்கா போன்ற நாடுகள் பழி கூறுகின்றன. அமெரிக்காவில் மட்டும் என்ன வாழ்கிறது!  இந்தப் போர்கள் எல்லாம் அமெரிக்க நலனுக்காகப் புரிந்த போர்கள் என்று எளிதாக மக்களை நம்பவைத்துவிடுகிறார்கள். வியட்நாம் போர் நடந்துகொண்டிருந்தபோது ஆசியாவில் கம்யூனிஸம் பரவுவதைத் தடுப்பதற்காக நடந்துவரும் போர் என்று அமெரிக்க அரசு சொன்னதை எத்தனை இளைஞர்கள் நம்பினார்கள் தெரியுமா? வட வியட்நாமில் கம்யூனிஸ்டுகள் ஜெயித்துவிட்டால் ஆசியா முழுவதும் கம்யூனிஸம் பரவிவிடும் என்றும் பின்னர்  தங்கள் நாட்டிற்கே அது வந்துவிடும் என்றும் பயந்து, மக்களையும் நம்பவைத்து ஜனாதிபதி ட்ரூமன் வெறித்தனமாக வியட்நாம் கம்யூனிஸ்டுகளை எதிர்க்கப்  பிரான்ஸுக்கு ஆயுத உதவி செய்தார். அதுதான் வியட்நாம் போரின் ஆரம்பம். கம்யூனிஸம் உலகில் பரவுவதைத் தடுப்பது அமெரிக்காவின் கடமை என்று ட்ரூமனும் ஐஸன்ஹோவரும் சொன்னதை அப்படியே நம்பிவிட்ட அமெரிக்க இளைஞர்கள் பலர். ஒரு சின்ன உதாரணம். மோகி க்ராக்கர் என்னும் பதினேழே வயதான இளைஞனுக்கு பன்னிரெண்டு வயதிலிருந்தே போர் பற்றிய புத்தகங்களைப் படித்ததால் போர் என்றால் மிகவும் பிடிக்குமாம். சிறு வயதிலேயே அவனுக்கு ஏன் அப்படிப்பட்ட புத்தகங்களாக அவனுடைய பெற்றோர் படிக்கக் கொடுத்தார்கள் என்று புரியவில்லை. அவனுக்குச் சண்டையும் பிடிக்கும், அதிலும் நாட்டிற்காகப் போர் புரிவதென்றால் இன்னும் பிடிக்கும். பதினெட்டு வயது நிறைவவடைந்த பிறகுதான் ராணுவத்தில் சேர முடியும். அதற்கு முன்னரே பெற்றோர் சம்மதம் கொடுத்தால் ராணுவத்தில் சேரலாம். பெற்றோரிடம் சம்மதம் கொடுக்குமாறு வேண்டினான். பெற்றோர் சம்மதம் கொடுக்காததால் வீட்டை விட்டே வெளியேறினான். கடைசியாகச்  சம்மதம் பெற்று ராணுவத்தில் சேர்ந்து, சேர்ந்த சில மாதங்களிலேயே இறந்தும்விட்டான். அவனே வியட்நாமில் பிறந்திருந்தால் வியட்நாமியர்களின் சுதந்திர தாகத்தைப் புரிந்துகொண்டு அவர்களோடு சேர்ந்து போர்புரிந்திருப்பான் என்றும் அமெரிக்காவில் பிறந்துவிட்டதால் கம்யூனிஸம் பரவுவதைத் தடுக்க அமெரிக்கா போர் புரிய வேண்டும் என்று அமெரிக்க அரசியல் தலைவர்கள் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டு வியட்நாமில் போர் புரியச் சென்றான் என்றும் அவனுடைய  சகோதரி கூறியிருக்கிறார்.  இது என்ன பேதமை. கம்யூனிஸம் பரவுவதைத் தடுப்பது அமெரிக்காவின் கடமை என்று தலைவர்கள் சொல்லிவிட்டால் அதை அப்படியே ஏற்றுக்கொள்வதா? இதுதான் தேசப்பற்றா?

    இந்தத்  தினத்தை அமெரிக்கர்கள் எப்படிக் கொண்டாடுகிறார்கள் தெரியுமா? நாம் இந்தியாவில் காந்திஜி பிறந்த தினத்தைக் கொண்டாடுவது போலத்தான். (காந்திஜியை மறந்துகொண்டிருந்த இந்தியர்கள் அவரை இன்னும் முழுமையாக மறக்கட்டும் என்று பி.ஜே.பி. அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டிருந்த அந்த நாளை வேலை நாளாக மாற்றிவிட்டது என்பது இன்னொரு விஷயம்.) அமெரிக்காவில் தீநுண்மி கோவிட்-19 பரவுதல் இன்னும் முடியாமல் இருக்கும்போது பீச்சுகளைத் திறந்துவிட வேண்டும் என்று அடம்பிடித்து பீச்சுகளுக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள். இதுதான் அவர்கள் நாட்டிற்காகத் தியாகம் புரிந்த வீரர்களை நினைவுகூரும் விதம். அதுவும் விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் பொது இடங்களை மக்களின் உபயோகத்துக்காகத் திறந்துவிடுவதற்கு இன்னும் கொஞ்சக்  காலம் காத்திருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது ‘எங்கள் சுதந்திரத்தை நீங்கள் பறிக்க வேண்டாம்’ என்று கோஷம் போடுகிறார்கள். நாட்டுக்காகப் போரிட்டவர்களையும் உயிர் துறந்தவர்களையும் நினைத்து ‘நாமும் நாட்டுக்காக என்ன செய்யலாம்’ என்று நினைப்பதற்குப் பதில் பீச்சுக்கு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். கோவிட்-19-ஐப் பற்றிக்கூட கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. வசந்த காலம் முடிந்து சீக்கிரமே கோடை காலமும் வரப் போகிறதாம், இந்த நாட்களை வீட்டிற்கு வெளியில் சென்று கொண்டாடியே ஆக வேண்டுமாம்.  இவர்களுக்கு வாய்த்திருக்கும் ஜனாதிபதி வேறு ‘வெளியே வாருங்கள்’ என்று இவர்களை உசுப்பேற்றிவிட்டுக்கொண்டிருக்கிறார்.  நல்ல நாடு, நல்ல மக்கள், நல்ல தலைவர்.

    Share
  • அமெரிக்காவில் ஏழைகள் படும் பாடு

    அமெரிக்காவில் ஏழைகள் படும் பாடு

    நாகேஸ்வரி அண்ணாமலை

    கோவிட்-19 உலகில் பரவ ஆரம்பித்ததிலிருந்து எல்லா நாடுகளையும் – ஏழை நாடுகள், பணக்கார நாடுகள், கம்யூனிஸ்ட் நாடுகள், ஜனநாயக நாடுகள் – பல விதங்களில் பாதித்திருக்கிறது. கொரோனா வைரஸ்தான் உண்மையான நடுநிலையாளர்; எவரையும் விட்டுவைக்கவில்லை. தன் பண பலத்தாலும் படை பலத்தாலும் எந்த நாட்டையும் பணியவைத்துவிடலாம் என்று மமதை கொண்டு நடக்கும் நாடான அமெரிக்காவைத்தான் இந்த வைரஸ் அதிகமாகப் பாதித்திருக்கிறது. நான்தான் எல்லாவற்றிலும் முதல் என்று மார்தட்டிக்கொள்ளும் அமெரிக்கா இதிலும் முதல் இடம் வகிக்கிறது.

    ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு இதைப் பற்றி எந்தவிதக் கவலையும் இருப்பதாகத் தெரியவில்லை. சரமாரியாகப் பொய் சொல்லுகிறார். தான் முதலிலேயே கோவிட்-19 பல இறப்புகளை விளைவிக்கும் என்று சொன்னதாகக் கூறுகிறார். கோவிட்டின் விளைவுகள் தோன்றத் தொடங்கிய காலத்தில், ‘எதற்கும் பயப்படத் தேவையில்லை. மாயமாக அது மறைந்துவிடும்’ என்று சொன்னவர் இவர். இவர் தேர்ந்தெடுக்கப்பட்ட நாளிலிருந்து அமெரிக்காவுக்கு சனி பிடித்துவிட்டது. பதவியை விட்டுப் போகும் முன் இன்னும் என்னென்ன கேடு விளைவிக்கப் போகிறாரோ. அமெரிக்காவில் எல்லாம் சட்டப்படி நடக்கும் என்று நினைத்ததெல்லாம் இப்போது முடிந்த கதையாகியிருக்கிறது.

    ஒரு அமெரிக்கக் குடிமகனுக்கு அமெரிக்க ஜனாதிபதியாவதற்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டுமோ அவை எதுவும் இல்லாதது மட்டுமல்ல, என்னென்ன இருக்கக் கூடாதோ அவை எல்லாம் இருந்தன. இவர் எப்படி ஜெயிப்பார் என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்க, இவருக்கு எதிராகப் போட்டியிட்ட ஹிலரி கிளின்டன் தான் எப்படியும் ஜெயித்துவிடுவோம் என்று முழு நம்பிக்கையுடன் இருக்க, ட்ரம்ப் ஜெயித்துவிட்டார் என்ற செய்தி எல்லோரையும் உலுக்கிவிட்டது. சரி, ஜெயித்த பிறகு ஓரளவுக்கு மாறிவிடுவார் என்று என்னைப் போன்றவர்கள் நம்பிக்கொண்டிருக்க, அந்த நம்பிக்கையிலும் மண்ணைப் போட்டுவிட்டார். இப்போது கோவிட்-19 அமெரிக்காவைத் தாக்கிய நாளிலிருந்து இவர் பேச்சும் நடவடிக்கைகளும் சகிக்க முடியாதவாறு போய்க்கொண்டிருக்கின்றன.

    வைரஸ்ஸினால் லட்சக் கணக்கான தொழிலாளிகள் வேலை இழந்திருக்கிறார்கள்; பொருளாதாரம் வேகமாகச் சரிந்துகொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் கொடுப்பவர்களால் அது சரியும் அளவுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இதன் விளைவுகள் சரியாவதற்குப் பல ஆண்டுகள் ஆகலாம் என்கிறார்கள். அமெரிக்காவில் யாரும் வேலையில்லாமல் இருந்தால் அவர்களுக்கு மத்திய அரசு வேலை இழப்பு ஊதியம் (unemployment benefits) என்று ஒரு தொகையை குறிப்பிட்ட சில மாதங்களுக்குக் கொடுக்கும். அந்தத் தொகையைப் பெற்றுத் தொழிலாளர்கள் வீட்டு வாடகை, உணவு போன்ற அன்றாடத் தேவைகளைக் கவனித்துக்கொள்வார்கள். அடுத்த ஆண்டு வருமான வரியைக் கணக்கிடும்போது அதை இந்த வருட வருமானத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதாவது, அதற்கும் வருமான வரி உண்டு. ட்ரம்ப் ஏழை எளியவர்கள் வயிற்றில் அடிப்பதற்கு ஓரளவும் தயங்க மாட்டார். அவரை ஆதரிக்கும் குடியரசுக் கட்சி செனட்டர்கள் அவரோடு முழுமையாக இதில் ஒத்துழைக்கிறார்கள். லிண்ட்ஸி கிரஹாம் என்னும் செனட்டர் வேலையில்லதவர்களுக்குக் கொடுக்கும் தொகையை கூட்டுவது என்பது ‘எங்கள் உயிர் போன பிறகுதான் நடக்கும்’ என்றார். அதற்குப் பத்திரிக்கையில் பத்தி எழுதும் ஒருவர், ‘ஆம், தொழிலாளிகள் உயிர் போன பிறகுதான்’ என்று நக்கலாகச் சொல்கிறார்.

    அமெரிக்காவில் மருத்துவக் காப்பீடு இல்லாதவர்களின் பாடு மிகவும் பரிதாபத்திற்குரியது. வேலைபார்ப்பவர்களுக்கு அவர்கள் வேலைபார்க்கும் நிறுவனங்கள் மருத்துவக் காப்பீடு கொடுக்க வேண்டும் என்று ஒரு சட்டம் இருக்கிறது. இதனால் பலர் எப்போதும் ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்துவிடுவார்கள். இப்போது லட்சக் கணக்கானவர்களுக்கு வேலை போயிருப்பதால் வேலை கிடைப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. வேலை இல்லாததால் மருத்துவக் காப்பீடும் இல்லை. வேலை போய்விட்டால் மருத்துவக் காப்பீடும் இல்லாமல் போய்விடுமாதலால் ஒபாமா அவர்களுடைய கஷ்டத்தை ஓரளவாவது நிவர்த்தி செய்வதற்கு எல்லோராலும் எடுத்துக்கொள்ளக் கூடிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஒன்றைக் கொண்டுவந்தார். ஒபாமா செய்த எந்த நல்ல காரியத்தையும் ஒபாமா செய்தார் என்பதற்காகவே அதைக் கெடுத்துவிடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் ட்ரம்ப் இந்தத் திட்டத்தையும் குலைப்பதற்கு நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறார். அதுவரை, நல்ல வேளை, சிலருக்காவது ஒபாமா திட்டத்தால் மருத்துவக் காப்பீடு கிடைத்துக்கொண்டிருக்கிறது. ஒபாமா திட்டத்தை எடுத்துவிட்டால் ஒருவர் இன்சூரன்ஸ் எடுத்துக்கொள்வதற்கு முன்பிருந்த வியாதிகளின் விளைவுகளுக்கு இன்சூரன்ஸ் கம்பெனி பொறுப்பேற்காது; இப்போது கோவிட்-19-னால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அந்த நிலை ஏற்படலாம்.

    உலகிலேயே பணக்கார நாடான அமெரிக்காவிலேயே இப்போது பலர் பட்டினியால் வாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஏழைகளில் வேலை இழந்தவர்களுக்கு இலவச உணவு வழங்கும் இடங்கள் கூட்டத்தைச் சமாளிக்க முடியாத நிலைக்குப் போயிருக்கின்றன. அங்கு தங்கள் கார்களில் காத்து நிற்கும் மக்களின் வரிசை ஒரு மைலுக்கும் மேல் இருக்கிறது. இந்தச் சிக்கலான கட்டத்தில் ஏழைகளுக்கு உணவு வழங்கும் திட்டத்தை மேலும் கொஞ்சம் விரிவுபடுத்த குடியரசுக் கட்சிக்காரர்கள் – ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் – மறுக்கிறார்கள். கோவிட் பரவ ஆரம்பித்ததிலிருந்தே வேண்டிய ஏற்பாடுகள் செய்திருந்தால் அது இத்தனை தூரம் அமெரிக்காவில் பரவியிருக்காது என்பது பலரின் வாதம். அதைப் பரவவிட்டுவிட்டு அதனால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு உதவுவதற்கு இவர்களுக்கு மனம் வரவில்லை.

    ஏழைகளுக்கான உதவியை அதிகரித்தால் பட்ஜெட் பற்றாக்குறை வந்துவிடும் என்று இவர்கள் கூறுகிறார்கள். பட்ஜெட் பற்றாக்குறையைப் பற்றி இந்தக் குடியரசுக் கட்சிக்காரர்கள் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. 2017-இல் அதாவது ட்ரம்ப் ஜனாதிபதியாக ஆன பிறகு, கம்பெனிகளுக்கு வரியைக் குறைத்தார்கள்; அதனால் வந்த பட்ஜெட் பற்றாக்குறையைப் பற்றி எதுவும் பேசவில்லை. இப்போது சிறிய கம்பெனிகளுக்கு அரசு கொடுக்கத் திட்டமிட்ட கடன் வசதியை இந்தப் பெரிய கம்பெனிகளே பறித்துக்கொண்டிருக்கின்றன. ஏழைகளுக்கு உணவு உதவி செய்வதால் பற்றாகுறை வந்துவிடும் என்று சொல்லும் குடியரசுக் கட்சிக்காரர்கள் இன்னொரு அபத்தமான வாதத்தையும் வைக்கிறார்கள். ஏழைகளுக்கு இப்படி உதவினால் அவர்களுக்கு உழைத்துச் சம்பாதிக்க வேண்டும் என்ற உந்துதல் போய்விடுமாம்.

    அமெரிக்காவில் இப்போது அமலில் இருக்கும் சமூக விலகலைக் கடைப்பிடிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, அதனால் பலர் உயிர் இழக்க நேரிட்டாலும் பரவாயில்லை வணிக நிறுவங்கள் எல்லாம் உடனேயே செயல்பட ஆரம்பிக்க வேண்டும் என்று ட்ரம்ப்பும் அவருடைய ஆதரவாளர்களும் கூக்குரலிடுகிறார்கள். சிலர் இறப்பதை தவிர்க்க முடியாது என்றும் சீக்கிரமே வணிக நிறுவனங்கள் செயல்பட ஆரம்பிக்க வேண்டும் என்று ட்ரம்ப் கூறிவருகிறார். எப்பேர்ப்பட்ட தலைவர் பாருங்கள்! மக்களின் நன்மைகளுக்காகப் பாடுபட வேண்டிய ஒரு தலைவர் மக்களில் ஒரு பகுதியினர் இறந்தாலும் பரவாயில்லை; அமெரிக்காவின் பொருளாதார ஆதிக்கம் குறையக் கூடாது என்கிறார். அமெரிக்காவின் பொருளாதாரம் சரிந்தால் தன்னால் இரண்டாவது முறையாகத் தேர்தலில் ஜெயிக்க முடியாது என்று பயப்படுகிறார். மக்களுக்கு என்ன ஆனாலும் ஆகட்டும், தன் நலன்கள்தான் முக்கியம் என்று நினைக்கும் இவரைத் தலைவராகப் பெற்றதற்கு அமெரிக்கா என்ன தவம் செய்ததோ! இது காலத்தின் கோலம் போலும்!

    Share
  • அமெரிக்காவும் கோவிட்-19 வைரஸும்

    அமெரிக்காவும் கோவிட்-19 வைரஸும்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    கோவிட்-19 வைரஸ் மனித இனத்தை முற்றுகையிட வந்தாலும் வந்தது உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் மக்களின் தினசரி வாழ்க்கை தலைகீழாக மாறியிருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத இந்த ஜீவராசி அணுவிலும் பாதிதான் என்கிறார்கள் விஞ்ஞானிகள்; இருந்தாலும் மனிதனை எத்தனை கஷ்டத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது.

    சீனாவின் வூஹான் என்னும் இடத்தில் முதலில் தோன்றிய இதை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வூஹான் வைரஸ் என்று அழைக்கிறார்; சீனா வைரஸ் என்றும் கூறுகிறார். சீனாதான் இதை அமெரிக்காவுக்கும் மற்ற நாடுகளுக்கும் கொடுத்திருக்கிறது என்கிறார்.  சீன அதிபதி ஷியோ இது சீனாவுக்கு வந்த அமெரிக்க விளையாட்டு வீரர்கள் இதைச் சீனாவுக்குள் கொண்டு வந்துவிட்டார்கள் என்கிறார்.  இந்தச் சண்டை ஒரு புறம் இருக்க இது உலகம் முழுவதும் கோவிட்-19 என்று அழைக்கப்படுகிறது. தோன்றிய சில மாதங்களிலேயே இது உலகம் முழுவதும் இருபது லட்சம் மக்களைப் பாதித்திருக்கிறது; ஒரு லட்சத்துப் பதினேழாயிரம் பேர்களின் உயிரைப் பலிவாங்கியிருக்கிறது. உலகிலேயே பணக்கார நாடான அமெரிக்காவில்தான் இதனால் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் இறப்புகள் அதிகம் என்று தோன்றுகிறது. உலக ஜனத்தொகையில் ஐந்தே சதவிகிதம் மக்கள் வாழும் அமெரிக்காவில் உலக இறப்புக்களில் பத்து சதவிகிதம் நேர்ந்திருக்கிறது. இது ஏன் என்று விளக்காமலும், இந்த நிலையை சீர்திருத்துவதில் கவனம் செலுத்தாமலும் எப்போதும்போல் ட்ரம்ப் யாரையாவது குறை சொல்வதில் குறியாக இருக்கிறார்; எப்போதும்போல் தினம் தினம் பொய்களாகக் கூறிவருகிறார்.

    நோய்த் தடுப்பு மையத்தின் தலைவர் அமெரிக்க மக்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இல்லாமல் இருக்க வேண்டும், அத்தியாவசியமான தேவைகளுக்குத் தவிர வெளியே எங்கும் போகக் கூடாது என்று கூறிய யோசனைகளையெல்லாம் முதலில் காதில் போட்டுக்கொள்ளாமல் இருந்த ட்ரம்ப் தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதற்குள் நிலைமை மிஞ்சிவிட்டது. இறப்புகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. வைரஸ் பற்றித் தான் முதலிலேயே எச்சரித்ததாகப் பொய் சொல்கிறார். பொய்யைத் தவிர வேறு எதுவும் பேசாத ட்ரம்ப்புக்கு உலக மகா புளுகன் என்ற பட்டம் கொடுக்கலாம்.

    அமெரிக்கப் பொருளாதாரம் மிகவும் கீழே போய்விட்டதாம். அதைத் தூக்கி நிறுத்துவதற்கு இப்போது மூடப்பட்டிருக்கும் வணிக நிறுவனங்களைத் திறக்க வேண்டும் என்கிறார். வைரஸின் தாக்கத்தை நிறுத்துவதற்குத் தவறிவிட்ட ட்ரம்ப் இப்போதாவது அதன் தீவிரத்தைக் கட்டுப்படுத்தும் முறைகளைக் கடைப்பிடிக்கலாம். அதற்குப் பதில் சீக்கிரமே கடைகளையெல்லாம் திறக்க வேண்டும் என்கிறார். அமெரிக்காவில் மாநிலங்களுக்கென்று சில உரிமைகள் உண்டு. அவற்றைப் பயன்படுத்திச் சில மாநிலங்கள் பொது இடங்களை மக்களின் உபயோகத்திற்கு இப்போதைக்கு விடப் போவதில்லை என்று முடிவு செய்திருக்கின்றன. அந்த மாநிலங்களிலுள்ள இவருடைய ஆதரவாளர்களை கடைகளைத் திறக்கும்படி கிளர்ச்சி செய்யும்படி தூண்டிவிடுகிறார். மக்களின் வாழ்க்கை பழைய நிலைக்குத் திரும்பினால் வைரஸின் பாதிப்பு இன்னும் கூடலாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் சொல்வதையெல்லாம் ட்ரம்ப் கேட்பதில்லை. இவரை சமூகத்துக்கு எதிரான பபூன் (Sociopath and buffoon) என்கிறார் அரசியல் விமர்சகரும் மொழியியல் ஆளுமையுமான சாம்ஸ்கி. எல்லோரும் கோவிட்-19 என்று குறிப்பிடும் இந்த வைரஸை ட்ரம்ப் சீன வைரஸ் என்று குறிப்பிடுவதால் சீனர்களுக்கு எதிரான வன்மம் அமெரிக்காவில் கூடியிருக்கிறது என்கிறார்கள். இப்படிப்பட்ட ட்ரம்ப்பை அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுத்ததற்கு இன்னும் என்னென்ன பலன்கள் அனுபவிக்கப் போகிறார்களோ அமெரிக்க மக்கள்.

    நேற்று உணவுப் பொருள்கள் வாங்கக் கடைக்குச் சென்றிருந்தோம். எங்களைப் போன்ற வயதானவர்கள் எங்கும் வெளியில் போகக் கூடாது, உணவுப் பொருள்களைக்கூட கடைக்காரர்களைக் கொண்டுவந்து கொடுக்கச் சொல்லலாம் என்று பலர் கூறுகிறார்கள். இரண்டு தடவை அப்படிச் செய்தபோது பொருள்களுக்கு அதிக விலை வாங்கியதோடு நாங்கள் கேட்காத சாமான்களைக் கேட்ட சாமான்களுக்குப் பதிலாகக் கொண்டுவந்து கொடுத்தார்கள். அதனால் நாங்களே நேரில் போவதென்று முடிவுசெய்தோம்.  இது நாங்கள் வழக்கமாகப் போகும் கடைதான். இது மற்ற கடைகளைப்போல் பெரிய சூப்பர் மார்க்கெட் அல்ல.  காய்கறிகள், பழங்கள், பால், சீஸ், ரொட்டி வகைகள்தான் இங்கு அதிகமாகக் கிடைக்கும்.  இந்தக் கடை திறப்பது காலை 8 மணிக்கு. நாங்கள் 8:10-க்குச் சென்றபோது ஏற்கனவே பத்துப் பேர் கடைக்கு வெளியில் 6 அடி இடைவெளி விட்டு வரிசையில் காத்திருந்தார்கள்.  கடைச் சிப்பந்தி ஒருவர் வாயிலின் அருகில் நின்றுகொண்டு உள்ளே செல்வோர்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார். ஒருவர் சாமான்களை வாங்கி முடித்து வெளியில் வரவும் இன்னொருவரை உள்ளே அனுப்பினார். இப்படிச் செய்ததால் கடைக்குள் நாலைந்து பேர்களே இருந்தனர். பில் போடுபவர்களும் இரண்டு பேர்தான் இருந்தனர். இதனால் ஒருவரிடமிருந்து இன்னொருவர் 6 அடி தூரம் நிற்க முடிந்தது. உணவுப் பொருள்கள் விற்கும் கடைகளில் வரிசை என்பது அமெரிக்கா இதுவரைக் கண்டிராத ஒன்று. வைரஸ் இதைச் சாதித்துவிட்டது.

    வைரஸ் இரண்டாவது முறையாக 2020 அக்டோபர், நவம்பர் மாதங்களில் இன்னும் அதிகத் தீவிரத்தோடு வரலாம் என்கிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள்.  யாரையும், எந்த நாட்டையும் தண்டிக்கலாம், அடிக்கலாம் என்று நினைக்கும் அமெரிக்காவின் பாச்சா இந்த கோவிட்-19 வைரஸிடம் பலிக்கவில்லை.  இது அமெரிக்காவை ஒரு உலுக்கு உலுக்கிவிடும்போல் தெரிகிறது. உலகையே பஸ்மமாக்கிவிடக் கூடிய அணு ஆயுதங்கள் அமெரிக்காவிடம் எக்கச்சக்கமாக இருக்கின்றன.  ஆனால் கண்ணுக்கே தெரியாத இந்த வைரஸை ஒன்றும் செய்ய முடியவில்லையே.

    Share
  • இல்லாமையின் கொடிய முகம்

    இல்லாமையின் கொடிய முகம்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    கொரொனா வைரஸால் உலகமே ஸ்தம்பித்துப்போயிருக்கிறது. எல்லா நாடுகளிலுமிருந்து கொரொனா ஏற்படுத்தும் அபாயங்கள் தினமும் வந்துகொண்டிருக்கின்றன. உலகிலேயே பணக்கார நாடான அமெரிக்காவில் நாங்கள் இப்போது இருக்கிறோம். இப்போது மற்ற எல்லா நாடுகளையும்விட அமெரிக்காவில்தான் அதிகப் பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்; அதிகப் பேர் உயிர் இழந்திருக்கிறார்கள். இதற்கு ட்ரம்ப் சரியாக முன்னேற்பாடுகள் செய்யவில்லை என்பதுதான் காரணம் என்று பலர் சொல்கிறார்கள். முதலில் அமெரிக்காவுக்கு எந்த ஆபத்தும் இல்லை, பதட்டப்படாமல் இருங்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் இப்போது தான் முதலிலேயே ஆபத்து வருகிறது என்று சொன்னதாகக் கதையையே மாற்றுகிறார். இவரை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்த அமெரிக்க மக்களுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும். இப்போதும் அவரை ஆதரிப்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லையாம்; சொல்லப் போனால் கூடிக்கொண்டு போகிறது என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.  யாரைக் குறைகூறுவது என்று தெரியவில்லை. ஒரு லட்சத்திலிருந்து இரண்டு லட்சம்வரை இறப்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    இந்தச் செய்திகளால் ஏற்படும் அச்சம் ஒரு புறம் இருக்க எல்லா நாடுகளிலும் சமூகத்தின் அடிமட்டத்தில் இருக்கும் மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை நினைக்கும்போது நெஞ்சமெல்லாம் வேதனை நிறைகிறது.  நான் வளர்ந்து வரும்போது மாறியிருந்த என் தந்தையின் பொருளாதார நிலை நான் பிறக்கும்போது இல்லையென்றாலும் எனக்கு விபரம் தெரிந்து எங்கள் குடும்பத்தில் உணவுப் பற்றாக்குறை ஒருபோதும் இருந்ததில்லை. நான் சிறுபிள்ளையாக இருக்கும்போதே வீட்டில் எப்போதும் வேண்டிய அளவு அரிசி, பருப்பு வகைகள், எண்ணெய் என்று எப்போது எதை வேண்டுமானாலும் சமைப்பதற்கு வசதிகள் இருந்தன.  எங்கள் குடும்பம் கூட்டுக் குடும்பம். யாருக்கு எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சமைத்துக்கொள்ள வசதி இருந்தது.

    எங்கள் வீட்டின் முகப்பில் இருந்த கடையில் ஒருவர் பலசரக்குக் கடை வைத்திருந்தார்.  பலசரக்குக் கடை என்றால் மிகவும் சிறிய கடை. மாதம் முழுவதும் நூறு ரூபாய்க்குச் சாமான்கள் விற்றால் அதிகம் என்று சொல்லலாம்.  அப்போது விலைவாசியும் இப்படி இல்லை.  பல ஏழைக் குடும்பங்கள் பத்து ரூபாய் சம்பளத்தில் மாதம் முழுவதையும் ஓட்டிவிடுவார்கள் என்று சொல்லலாம்.  அப்போது எங்கள் வீட்டில் ஒவ்வொரு முறையும் ஒரு படி எண்ணெய் வாங்குவோம்.  (அப்போது திரவங்களை கால்படி, அரைப்படி என்றும் திடப்பொருள்களை வீசைக் கணக்கிலும் அளப்போம்.  கிலோ, லிட்டர் எல்லாம் பின்னால் வந்தவை.) ஏழை மக்களோ தினமும் அன்றைய சமையலுக்கு வேண்டிய அளவுதான் எண்ணெய் வாங்குவார்கள். சிறு பாட்டில்களில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் வாங்கிச் செல்வார்கள். தாளிக்க உபயோகிக்கும் கடுகு உளுந்தம்பருப்பைக்கூட அன்றன்றுதான் வாங்குவார்கள்.  இவர்கள் எல்லாம் அன்றாடம் சம்பளம் பெறுபவர்களாக இருக்க வேண்டும்.  சம்பாத்தியம் பண்ணுபவருக்கு உடல்நலமில்லையென்றால் அன்று வீட்டில் சமைப்பது மிகவும் கஷ்டம்.  கையில் பணமே இருக்காது.  சேமிப்பு என்ற ஒன்றும் இருக்காது.

    இப்போது கொரொனா வைரஸால் எங்களால் எங்கும் போக முடியவில்லை. நினைத்த நேரம் நினைத்த சாமான்களை வாங்க முடியவில்லை. இல்லினாய் மாநிலமும் சிகாகோ நகரமும் ‘எங்கும் வெளியில் போகாதீர்கள்’ என்று அறிவுரை கூறியிருந்தாலும் நாங்கள் போனால் எங்களை ஒன்றும் செய்ய மாட்டார்கள். இந்தியாவில்போல் காவலர்கள் வீதி முழுவதும் நின்றுகொண்டு மக்களைக் கண்காணிப்பதில்லை. இப்படி நாங்களாகப் போட்டுக்கொண்ட வரைமுறைகள் என்றாலும் எங்களுக்கு நிறையச் சிரமங்கள் ஏற்படுகின்றன. எப்போதாவது கடைக்குப் போய் இரண்டு, மூன்று வாரங்களுக்கு வேண்டிய சாமான்களை வாங்கி வந்துவிடுகிறோம். அப்படியும் ஏதாவது ஒரு சாமான் இல்லையென்றால் ஏதோ கை ஒடிந்ததுபோல் இருக்கிறது. தக்காளிப் பழங்கள் இவ்வளவுதானே இருக்கின்றன, இன்னும் பத்து நாட்களுக்கு வருமா என்ற கவலை வந்துவிடுகிறது. காலிபிளவர் சாப்பிட வேண்டும்போல் இருக்கிறதே, இன்னும் பல நாட்கள் காத்திருக்க வேண்டுமே என்ற ஏக்கம் வந்துவிடுகிறது. இத்தனைக்கும் வீட்டில் உள்ள சாமான்களை வைத்துக்கொண்டே எவ்வளவோ சமைக்கலாம்; அந்தத் தருணத்தில் மனம் விரும்புவதை சமைக்க முடியவில்லை என்பதைத் தவிர நாங்கள் இப்போது பட்டினியால் வாடவில்லை.  நினைத்த இடங்களுக்குப் போக முடியவில்லையென்றாலும் பொழுதைக் கழிக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன. வேண்டிய அளவு படிப்பதற்கு நிறையப் புத்தகங்கள் இருக்கின்றன; புத்தகங்களை ரசித்துப் படிப்பதற்கு ஆர்வமும் இருக்கிறது; அதற்குமேல் தொலைக்காட்சி இருக்கவே இருக்கிறது.  எத்தனை நிகழ்ச்சிகள் வேண்டுமானாலும் பார்க்கலாம்.  இந்தியாவில் ஏழை மக்களுக்கு இந்த மாதிரி எந்த வசதிகளும் இல்லை. இப்போது பெரும்பாலானவர்கள் வீடுகளில் – குடிசை வாழ் மக்கள் வீடுகளில் கூட – தொலைக்காட்சிப் பெட்டி இருக்கிறது என்றாலும் பல புத்தகங்களைப் படித்துப் பயன்பெறும் பக்குவம் அவர்களுக்கு இல்லை.

    அமெரிக்காவில் வியட்நாம் போரில் பணிபுரிந்த ஒருவனை அவனுடைய பெற்றோர் விமானநிலையத்திலிருந்து கூட்டிவருகிறார்கள். அவர்கள் வீடு வந்து சேர்ந்ததும் தாய், ‘வீட்டில் சாப்பிடுவதற்குப் பெரிதாக ஒன்றும் இல்லை’ என்கிறார்.  உடனே பையனுக்கு அப்படி ஒரு கோபம் வருகிறது. சமையலறையிலுள்ள அத்தனை அலமாரிகளையும் திறந்து அதிலுள்ள எல்லாப் பொருள்களையும் வெளியில் வீசி எறிந்து, ‘இத்தனை சாமான்கள் இருக்கும்போது சாப்பிடுவதற்கு ஒன்றும் இல்லை என்கிறீர்களே’ என்று கோபத்தோடு கூறுகிறான். அமெரிக்கா வியட்நாமில் சண்டை புரிந்தபோது மக்கள் மிகவும் கஷ்டப்பட்டார்கள்.  நெல் விளையும் நிலங்களையெல்லாம் அமெரிக்கா ‘ஆரஞ்ச் ஏஜென்ட்’ என்னும் ரசாயன நஞ்சை வைத்து அழித்துவிட்டது.  மேலும் தினம் தினம் சண்டை நடந்துவந்ததால் வேறு எதிலும் மக்களால் கவனம் செலுத்த முடியவில்லை. வியட்நாம் மக்களின் வாழ்க்கையைப் பார்த்ததால்தான் அந்த அமெரிக்கனுக்கு அப்படி ஒரு கோபம் வந்தது. வேண்டும்போது வேண்டியதை சாப்பிட முடியவில்லையே என்று நான் குறைப்பட்டுக்கொண்டால் என் மகன் இப்படித்தான் என் மீது கோபப்படுவானா?  இந்த மாதிரி, சாப்பிட இல்லாத ஏழைகளைப் பார்த்து நம் மேலேயே நமக்குக் கோபம் வருகிறதா?

    தற்காலிகமாக ஏற்பட்டிருக்கும் இந்த இடைஞ்சல்களைக்கூட நம்மால் பொறுத்துக்கொள்ள முடியவில்லையே.  அடுத்த வேளை உணவு எங்கிருந்து கிடைக்கும் என்பது தெரியாமல் இருக்கும் இந்த ஏழை மக்கள் வாழ்க்கை முழுவதும் இப்படிக் கஷ்டப்படுகிறார்களே.  இவர்களின் நிலையை என்னவென்று சொல்வது? எல்லோருக்கும் வயிறார உணவு கிடைக்கும்படிச் செய் என்று இறைவனிடம் வேண்டிக்கொள்வதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லையே.

    பார்வைக்கு: For India’s Laborers, Coronavirus Lockdown Is an Order to Starve

    Share
  • இந்திய முஸ்லீம்களின் கதி என்ன?

    இந்திய முஸ்லீம்களின் கதி என்ன?

    நாகேஸ்வரி அண்ணாமலை

    இன்று அமெரிக்காவிலிருந்து மைசூரில் எங்கள் பக்கத்து வீட்டு நண்பரை தொலைபேசியில் கூப்பிட்டுப் பேசிக்கொண்டிருந்தேன்.  இந்தியாவிலும் அமெரிக்காவிலும் கொரோனோவைரஸின் நிலைமை பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.  அதன் பிறகு என்னுடைய அடுத்த புத்தகம் வியட்நாம் பற்றி என்றும் அங்கு எத்தனை உயிர்கள் – அமெரிக்கர்களும் வியட்நாமியர்களும் – அமெரிக்க ஜனாதிபதிகளின் ‘ஈகோ’வால் பலியாகின என்பதை அறிந்து என் மனம் என்ன பாடுபட்டது என்பது பற்றியும் அவரிடம் கூறினேன். அமெரிக்காவும் தாலிபானும் சமாதானம் பற்றி நடத்தும் பேச்சுவார்த்தை பற்றியும் கூறிவிட்டு ஆஃப்கானிஸ்தானில் என்றாவது அமைதி வருமா என்று கேட்டேன். அவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஆஃப்கானிஸ்தானில் எப்போதும் அமைதி நிலவும் சாத்தியமே இல்லை என்றார். அதற்கு அவர் கூறிய காரணங்கள் எனக்கு ஒப்புதலாக இல்லை. இந்தியத் துணைக்கண்டம் பிரிக்கப்படாமல் இருந்திருந்தால் ஆஃப்கானிஸ்தான் இந்தியாவின் அண்டை நாடாக இருந்திருக்கும், ஆஃப்கானிஸ்தானின் பிரச்சினைகள் இந்தியாவையும் ஓரளவு பாதித்திருக்கும் என்றேன்.  அதற்கு அவர் எதுவும் கூறாமல், ‘இந்தியத் துணைக்கண்டம் இந்தியா, பாகிஸ்தான் என்ற இரு நாடுகளாக பிரிக்கப்பட்டபோது முஸ்லீம்கள் அனைவரையும் பாகிஸ்தானுக்கு அனுப்பியிருக்க வேண்டும், காந்திஜியும் நேருவும் செய்த தவறுகளால் இப்போது நாம் கஷ்டப்படுகிறோம் என்றார்.  எனக்குத் திகீர் என்றது.

    அவர் எங்கள் அடுத்த வீட்டு நண்பராக இருபது வருடங்களுக்கு மேல் இருந்துவருகிறார். ராணுவத்தில் பணிபுரிந்திருப்பதால் எல்லாச் சட்டங்களையும் விதிகளையும் தவறாமல் பின்பற்றுவார். ஒரு முறை நான் இஸ்ரேலில் கிடைத்த கத்தரிக் காய்களை அங்கிருந்து நம் சுங்கத் துறைக்குத் தெரியாமல் கொண்டுவந்துவிட்டேன் என்று பெருமையாகக் கூறியபோது, ‘இப்படித்தான் நம் இந்தியர்கள் வெளிநாடுகளில் எல்லா விதிகளையும் பின்பற்றுகிறார்கள், இந்தியாவில் அதே இந்தியர்கள் விதிகளைப் பின்பற்றுவதில்லை’ என்றார். அன்றிலிருந்து இந்தியாவிற்குள் கொண்டுவரக் கூடாத எந்தப் பொருளையும் நான் கொண்டுவருவதில்லை. நாங்கள் மைசூரில் இல்லாதபோது எங்கள் வீட்டில் என்ன பிரச்சினை என்றாலும் உடனேயே கவனிப்பார். ஒரு முறை எங்கள் வீட்டைக் கவனித்துக்கொள்ளும் வாட்ச்மேன் மரத்திலிருந்து விழுந்து காயமுற்றபோது உடனேயே மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றதோடு மருத்துவமனையில் முன் பணம் கட்டச் சொன்னபோது ஆயிரம் ரூபாயைக் கட்டியதோடு அதை எங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளவேயில்லை.

    இவருக்கு பி.ஜே.பி.யிடமும் அதன் தலைவர்களிடமும் அபிமானம் உண்டு என்று எனக்கு நன்றாகத் தெரியும்.  அரசியலைப் பொறுத்தவரை அவரும் நானும் இரு துருவங்கள்.  அதனால் அரசியலைப் பற்றி அவரிடம் எதுவும் பேசுவதில்லை. அவர் பி.ஜே.பி. தலைவர்களை வெகுவாக ஆதரித்து காங்கிரஸ் தலைவர்களைக் கடுமையாகச் சாடும்போது என்னால் சும்மா இருக்க முடியாது. ஏதாவது நான் கூறப்போய் அது மனஸ்தாபத்தில் முடிந்துவிடக் கூடாதே என்பதால்தான் இந்த முன்னெச்சரிக்கை.  இன்றும், நேருவும் காந்திஜியும் செய்த தவறால் இந்தியா மதச்சார்பற்ற நாடாக ஆகிவிட்டது, அப்போதே இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்த முஸ்லீம்கள அனைவரையும் பாகிஸ்தானுக்கு அனுப்பியிருக்க வேண்டும், அப்படிச் செய்திருந்தால் இன்று நாம் இவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்காது, இந்தியா ஒரு இந்து நாடாக இருந்திருக்கும் என்றபோது என் உணர்ச்சிகள் எதையும் காட்டிக்கொள்ளமல் பேசாமல் இருந்துவிட்டேன்.

    பிரிவினை சமயத்தில் காங்கிரஸ் கட்சி முடிக்காமல் விட்ட வேலையை நாங்கள் இன்று நிறைவேற்றிவைக்கிறோம் என்று மோதியும் அமித் ஷாவும் பேசுவதுபோல் அல்லவா இவரும் பேசுகிறார். நினைக்க, நினைக்க ஆயாசமாக இருக்கிறது. எப்போது இவரைப் போன்றவர்களைக்கூட பி.ஜே.பி.யால் மூளைச்சலவை செய்ய முடிந்தது?  இந்தியாவில் எத்தனை இனங்கள், எத்தனை மதங்கள், எத்தனை மொழிகள் என்று இந்தியாவின் பன்மைத்துவம்தான் இந்தியாவுக்கே பலம் என்று இவர் போன்றவர்களுக்குப் புரியவில்லையா? இந்தியாவில் இத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் இந்தியர்களுக்கே உரிய ஒரு கலாச்சாரம் நம் இந்தியர்கள் அனைவரையும் ஒன்றாக இணைக்கின்றதே.  இதை இவர்கள் உணரவில்லையா?

    இந்தியர்களுக்குள் அப்படி ஒரு ஒற்றுமை இல்லை என்றே வைத்துக்கொள்ளுவோம்.  ‘இந்தியாவில் நாம் முதலில் எல்லோரும் இந்துக்களாகத்தன் இருந்தோம்.  பிறகு முஸ்லீம் அரசர்கள் இந்தியா மீது படையெடுத்து நம்மில் ஒரு சிலரை முஸ்லீம்களாக மாற்றிவிட்டார்கள். அதனால் எல்லோரும் இப்போது இந்து மதத்திற்கு வந்துவிடுங்கள்’ என்று பி.ஜே.பி. தலைவர்கள் கூறுவது எந்த நியாயத்தில் சேர்த்தி? எத்தனை பழங்குடி மக்களை இந்து மதத்திற்குள் கொண்டுவந்திருக்கிறோம். இன்றைய முஸ்லீம்கள் அனைவரும் அன்றைய முஸ்லீம் அரசர்களால் மதம் மாற்றப்பட்டார்கள் என்றே வைத்துக்கொள்ளுவோம். பல நூற்றாண்டுகளாக அந்த மதப் பழக்க வழக்கங்களுக்குப் பழக்கப்பட்டவர்களை இன்று மறுபடி மதம் மாறச் சொன்னால் அது அவர்களுக்கு எப்படிச் சாத்தியமாகும்?  பல நூற்றாண்டுகளக இந்திய மண்ணில் பிறந்து இந்திய மண்ணில் வாழ்ந்தவர்களை இடம் பெயரச் சொன்னால் அது அவர்களால் முடியுமா?

    தென்னிந்தியாவில் வசிக்கும் முஸ்லீம்களை வட இந்தியாவுக்கு அப்பால் இருக்குக் பாகிஸ்தானில் குடியேறச் சொன்னால் அது அவர்களால் முடியுமா? என்னுடைய கல்லூரித் தோழி ஒருத்தி முஸ்லீம். சில பழக்கங்களைத் தவிர அவளுக்கும் எனக்கும் எந்தப் பெரிய வேற்றுமையும் இருந்ததில்லை. அவளைப் போன்றவர்களைப் பாகிஸ்தானில் குடியேறுங்கள் என்றால் அவள் குடும்பத்தாரால் முடிந்திருக்காது. அவளுடைய மதம் இஸ்லாம் என்பதைத் தவிர அவள் குடும்பம் ஒரு தமிழ்க் குடும்பம். அந்தத் தமிழ்க் குடும்பத்தை எப்படி இடம் பெயரச் சொல்லியிருக்க முடியும்? தென்னிந்தியாவில் வாழும் எல்லா முஸ்லீம்களுக்கும் இரு பொருந்தும்.

    கிறிஸ்தவர்களுக்கு நிறைய நாடுகள் இருக்கின்றன, முஸ்லீம்களுக்கு நிறைய நாடுகள் இருக்கின்றன, இந்துக்களுக்குத்தான் இந்தியாவை விட்டால் வேறு நாடு கிடையாது, அதனால் இங்கு இந்துக்களுக்கு மட்டும்தான் உரிமை உண்டு என்கிறார்கள் பி.ஜே.பி. தலைவர்கள். முஸ்லீம்களுக்குப் பல நாடுகள் இருந்தாலும் இந்தியாவில் பிறந்து வளர்ந்த முஸ்லீம்களுக்கு இந்தியா ஒன்றுதான் அவர்களுடைய நாடு.  இதை விட்டு அவர்கள் எல்லோரும் எங்கு செல்வார்கள்?  உண்மையான இறைபக்தி உள்ளவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் மற்ற மதங்களையோ மற்ற மதத்தவர்களையோ நிந்திப்பதல்லை, குறைதுப் பேசுவதில்லை.  அப்படிச் செய்தால் அவர்களுடைய இறைபக்திக்கே அது களங்கம் ஏற்படுத்தும்.  எல்லா மதங்களும் ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்று கற்பிக்கும்போது ‘என் மதம்தான் பெரியது, என் கடவுள்தான் பெரியவர் என்று சொல்வது எப்படிப்பட்ட அறியாமை! சிந்தித்துச் செயல்பட்டால் இந்த அறியாமை என்ற இருள் நம்மை விட்டு விலகிவிடும்.


    பின் குறிப்பு:

    முன் ஒரு வல்லமை இதழில் ‘இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு’ என்ற கட்டுரையில் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராரிசியராக இருந்து ஓய்வு பெற்று சிகாகோவிலேயே வசிக்கும் எங்கள் முஸ்லீம் நண்பர் ஒருவருக்கு இந்தியத் தூதரகம் விசா கொடுக்க மறுத்ததை எழுதியிருந்தேன். அவருக்கு இப்போது விசா கிடைத்திருக்கிறது.  தூதரகத்தின் இந்த மன மாற்றத்திற்கு ஒரு காரணம் என்னைப்போல் அவருடைய வேறு சில நண்பர்களும் ஊடகங்களில் எழுதியது. மற்றொரு காரணமும் உண்டு. இந்தியாவில் குடிமகனாக இருப்பதற்கு தந்தை பற்றிய ஆவணங்கள் கேட்பதற்கு பலத்த எதிர்ப்பு இருக்கிறது. பல மாநில அரசுகள் இந்தத் தகவலை சேகரிக்க மாட்டோம் என்று சொல்லியிருக்கின்றன. மத்திய அரசும் இந்த ஆவணங்கள் தேவையில்லை என்று பின்வாங்கி இருக்கிறது. இதனால் இந்தியத் தூதரகங்களும் விசா கொடுப்பதற்கு விதிகளைத் தளர்த்தி இருக்கின்றன. எப்படி இருந்தாலும் நண்பருக்கு விசா கிடைத்ததில் மகிழ்ச்சி.  இவரைப் போலவே இந்தியாவிலேயே இருக்கும் முஸ்லீம்களுகு ஆவணங்கள் கேட்காமலேயே குடியுரிமை கொடுப்பார்கள் என்று நம்பலாம் என்று தோன்றுகிறது.

    Share
  • அமெரிக்க ஜனநாயகம் செத்துவிட்டது

    அமெரிக்க ஜனநாயகம் செத்துவிட்டது

    நாகேஸ்வரி அண்ணாமலை

    மனிதன் முடியாட்சியிலிருந்து முன்னேறி குடியாட்சிக்கு வந்துவிட்டான் என்று மகிழ்ந்திருந்த சமயம் உலகின் நாடுகளுள் முன்னணியில் இருக்கும், ஜனநாயகத்திற்கு ஒரு உதாரணமாக விளங்கிய அமெரிக்கா இப்போது ஜனநாயக்தை இப்படிச் சாகடித்துவிட்டதே என்பதை ஏற்றுக்கொள்வதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது.  சென்ற சில மாதங்களாக அமெரிக்காவில் நடந்துவந்த நிகழ்ச்சிகள் மனதில் கவலையைத் தோற்றுவித்தாலும் ‘என்ன இருந்தாலும் இது அமெரிக்கா, ஜனநாயகம் எளிதில் இங்கு தோற்றுவிடாது என்று நம்பிக்கொண்டிருந்தேன்.  அந்த நம்பிக்கை பொய்த்துவிட்ட பிறகு இது கனவா, நனவா என்ற எண்ணத்தில் மனது உழல்கிறது.

    இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு வந்திருக்கும் எனக்கு, இந்தியாவில் அரசியல்வாதிகள், பெரிய பதவிகளில் இருப்பவர்கள், பணம் படைத்தவர்கள் ஆகியோர் செய்யும் ஊழல்கள், திருட்டுத்தனங்கள் ஆகியவை பற்றி அறிந்திருந்த எனக்கு, அமெரிக்காவில் தினசரி வாழ்க்கையில் ஊழல்கள் இல்லாதது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கும்.  இந்தியாவில் என் தந்தை இறந்த பிறகு என் பெற்றோர்களின் வீட்டை நான் சுவிகரித்துக்கொண்டபோது எங்கள் ஊர் நகராட்சியிடமிருந்து தண்ணீர் வசதி கொடுப்பதற்கான ரசீதை என் பெயருக்கு மாற்றுவதற்கு நகராட்சி அலுவலகத்திற்கு அத்தனை முறை நடந்தேன்.  அந்த அலுவலகம் எங்கள் வீட்டிலிருந்து பத்து வீடுகள் தள்ளி இருந்ததால் 50 முறை சளைக்காமல் நடந்தேன். லஞ்சம் கொடுப்பதில்லை என்று கடைசிவரை உறுதியாக இருந்தேன். மேலும் நகராட்சி கமிஷனர் நேர்மையானவராக இருந்ததால் என்னால் லஞ்சம் கொடுக்காமல் ரசீதை என் பெயருக்கு மாற்ற முடிந்தது. ஆனால் சமீபத்தில் எங்கள் பெற்றோர் வாழ்ந்த வீட்டை எங்கள் பகுதி மக்களுக்கு நல்ல காரியங்கள் செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு பெரிய தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு மிகக் குறைந்த வாடகைக்குக் கொடுத்தேன். ஆனால் அவர்களோ அவர்களின் கீழ் வேலைபார்த்த நிறுவனத்தோடு பகைமை கொண்டு அவர்களையும் எங்களையும் தண்டிக்க வேண்டி எங்கள் வீட்டையே பூட்டி சாவியை வருமான மாவட்ட அதிகாரியின் (RDO) அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டனர்.  நாங்கள் அமெரிக்காவில் இருந்ததால் வீட்டைத் திருமபப் பெற முடியவில்லை என்று நான் நினைத்தேன்.  ஆனால் அது சரியல்ல.  நாங்கள் இந்தியாவுக்குத் திரும்பிப் போன பிறகும் வீடு எங்களுக்குக் கிடைக்கும் சாத்தியம் இல்லாமல் இருந்தது.  பல மாதங்களாகப் பூட்டியிருந்த வீட்டின் நிலை பற்றி நான் வெகுவாக வருந்தி, கடைசியாக லஞ்சம் கொடுத்தால்தான் வீட்டைத் திரும்பப் பெற முடியும் என்பதை உணர்ந்து, ஒரு கணிசமான தொகையை லஞ்சமாகக் கொடுத்து  வீட்டைத் திரும்பப் பெற்றேன்.  இன்னும் எத்தனையோ சம்பவங்கள்.  சொல்லிக்கொண்டே போகலாம்.

    இப்படி எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்ற இடத்திலிருந்து வந்து அமெரிக்காவில் வாழ ஆரம்பித்தபோது தினசரி வாழ்க்கையில் ஊழலே இல்லாமல் இருந்தபோது மிகவும் நன்றாக இருந்தது. வீடு வாங்கினால், விற்றால் எல்லாம் வெளிப்படை. எல்லாவற்றுக்கும் கணினி உபயோகிப்பதால் எதையும் மறைக்க முடியாது. எல்லா அரசு அலுவலகங்களிலும் இதமாக நடந்துகொள்வார்கள். எந்த இடத்திலும் எவ்வளவு கூட்டம் என்றாலும் வரிசை இருக்கும்; நாம் முன்னாலும் போக முடியாது; நம் இடத்தையும் யாரும் பிடித்துக்கொள்ள மாட்டார்கள்.

    கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் தகுதிக்கேற்பத்தான் சேர்க்கை இருக்கும். அப்பா பணக்காரர் என்பதாலோ அல்லது பெரிய பதவி வகிப்பவர் என்பதாலோ ஒரு மாணவனுக்கு சலுகை கிடையாது. அதேபோல் துணைவேந்தர் நியமனம், ஆசிரியர்கள் நியமனம், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகிய எல்லாவற்றிலும் தகுதி இருந்தால்தான் முடியும்.

    அமெரிக்காவில் இம்மாதிரி விஷயங்களில் ஊழல் இல்லையென்றாலும் அரசியலில் வேறு மாதிரி ஊழல் இருப்பதாகச் சொல்வார்கள். பெரிய கம்பெனிகள் தங்களுக்கு ஏதுவாகச் சட்டம் இயற்றிக்கொள்வதற்கு அரசியல்வாதிகளுக்குத் தேர்தல் சமயத்தில் பணம் கொடுப்பார்கள். ஆனாலும் அந்தப் பணம் அவர்களுடைய பாக்கெட்டுகளுக்குப் போவதில்லை. தேர்தல் செலவுக்குத்தான் அதை உபயோகிக்க முடியும். பணம் வாங்கிக்கொண்டு தேர்தலில் ஜெயித்து பின் பணம் கொடுத்தவர்களுக்குச் சாதகமாகச் சட்டம் இயற்றினால் அதுவும் ஊழல்தான் என்று சொல்வோரும் உண்டு.

    அமெரிக்காவில் முன்பெல்லாம் விவாகரத்து செய்துகொண்டு இன்னொரு முறை திருமணம் செய்துகொண்டவர்களுக்கு ஜனாதிபதித் தேர்தலில் ஜெயிக்கும் வாய்ப்பு இல்லையென்பார்கள். ட்ரம்ப் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படும் வரை ரீகனைத் தவிர வேறு எந்த ஜனாதிபதியும் ஒரு முறைக்கு மேல் திருமணம் செய்துகொண்டதில்லை.  ஆனால் ட்ரம்ப் மூன்று முறை திருமணம் செய்துகொண்டும், பணம் இருப்பதால் எந்தப் பெண்ணையும் தன்னால் எதுவும் செய்ய முடியும் என்று பெருமை பேசிக்கொண்டும், பல பெண்களோடு தகாத உறவு வைத்துக்கொண்டும் இருந்தாலும் அமெரிக்க மக்கள் அவரை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தார்கள்.

    ஜனாதிபதி ஆன பிறகும் அவர் செய்கைகளும் பேச்சுக்களும் ஒரு ஜனாதிபதி பேசுவதுபோல் இல்லை. தான் ஒரு சர்வாதிகாரிபோல் பேசிக்கொண்டும் நடந்துகொண்டும் இருக்கிறார். அப்படியும் அவருடைய ஆதரவாளர்களின் எண்ணிக்கை குறையவில்லையாம்.  இன்னும் 40% பேர் அவருக்கு ஆதரவு கொடுக்கிறார்களாம். அந்தத் தைரியத்தில்தான் ட்விட்டரில் தினமும் ஏதாவது எழுதிக்கொண்டிருக்கிறார்.

    2016 ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்ய அரசு தலையிட்டு ட்ரம்ப் வெற்றிபெற உதவியது என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. அது பற்றிய விசாரணை ஆரம்பிக்கும் முன்னால் எஃப்.பி.ஐ. இயக்குனர் ஜேம்ஸ் கோமி என்பவரைத் தனக்குச் சாதகமாக சாட்சி சொல்லச் சொன்னார். அவர் மறுத்ததால் அவரைப் பதவியிலிருந்து நீக்கினார். அமைச்சரவையில் உள்ளவர்களை இஷ்டத்திற்கு நீக்குவது என்ற கொள்கையைக் கடைப்பிடித்தார்.

    2020 தேர்தலில் தனக்கு எதிராக, ஒபாமாவுக்கு துணைஜனாதிபதியாக இருந்த பைடன் போட்டியிடலாம் என்றும் தன்னை வென்றும்விடலாம் என்று பயந்த ட்ரம்ப் அவர்மீது எப்படியாவது ஏதாவது குற்றத்தைச் சுமத்திவிடலாம் என்று நினைத்து உக்ரைன் நாட்டின் ஜனாதிபதி செலென்ஸ்கியைத் தொலைபேசியில் கூப்பிட்டு உக்ரைன் நாட்டின் ஒரு கம்பெனியில் உயர் பதவியில் இருக்கும் பைடனின் மகனைப் பற்றி விசாரிக்கச் சொன்னார். அப்படி விசாரித்துத் தகவல் கொடுத்தால்தான் உக்ரைனுக்குக் கொடுப்பதாக வாக்களித்திருந்த 391 மில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ உதவியைக் கொடுப்பதாகக் கூறினார். ஏற்கனவே அமெரிக்கப் பாராளுமன்றம் இந்த ராணுவ உதவியை உக்ரைனுக்குக் கொடுக்க அனுமதி கொடுத்துள்ளது. இப்படிப் பாராளுமன்றம் அனுமதி கொடுத்த பிறகு ஜனாதிபதி அதை நிறுத்திவைப்பது சட்டப்படி குற்றம். ட்ரம்ப் செலென்ஸ்கியைக் கூப்பிட்டது உள்தகவலாளி (whistle blower) ஒருவர் மூலம் வெளியே தெரிந்துவிட்டது. உடனேயே ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் ட்ரம்ப்பின் மேல் விசாரணையை ஆரம்பித்தனர். முதலில் தான் உக்ரை ஜனாதிபதியோடு தொலைபேசியில் பேசவேயில்லை என்று பொய் சொன்னவர் பின்னால் பேசியதாக ஒப்புக்கொண்டாலும் அது தவறே இல்லை என்று வாதாடியதோடு இந்த விசாரணையே தேவையில்லாதது என்று ட்விட்டரில் எழுதிக்கொண்டிருந்தார்.

    கீழவை ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் பதவி இறக்க விசாரனையை ஆரம்பித்து ட்ரம்ப் செலென்ஸ்கியோடு தொலைபேசியில் பேசியதை ஆதாரபூர்வமாக நிரூபித்து மேலவை உறுப்பினர்களின் சம்மதித்திற்காக செனட்டிற்கு அனுப்பினர். ஆனால் குடியரசுக் கட்சி செனட்டர்கள் ஒருவர்கூட ட்ரம்ப்பிற்கு எதிராக ஓட்டுப் போட விரும்பவில்லை. ட்ரம்ப்பின் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்ச்சில் தான் வெளியிடவிருக்கும் புத்தகத்தில் ட்ரம்ப் உக்ரைன் ஜனாதிபதியோடு பேசியதை ஆதாரத்தோடு விளக்கியிருந்தார். புத்தகம் வெளிவருமுன்பே இந்தத் தகவல் ஒரு பத்திரிக்கைக்குக் கிடைத்துவிட்டது.  இவ்வளவு தூரம் வந்த பிறகு குடியரசுக் கட்சி உறுப்பினர்களால் ட்ரம்ப் செலென்ஸ்கியோடு பேசியதை மறுக்க முடியவில்லை. ஆனாலும் ட்ரம்ப்பைப் பதவியிலிருந்து இறக்க யாரும் முன்வரவில்லை. ட்ரம்ப் செய்தது குற்றம்தான் என்றாலும் பதவியை விட்டு இறக்கும் அளவுக்குப் பெரிய குற்றம் இல்லை என்று வாதாடுகிறார்கள். 1999-இல் கிளிண்டனைப் பதவியிலிருந்து இறக்கியே தீருவது என்று அவருக்கு எதிராக வாதாடிய கென்னத் ஸ்டார் என்னும் வழக்கறிஞர் இப்போது ட்ரம்ப் சார்பில் வாதாடினார். ட்ரம்ப் செய்தது தவறான செய்கைதானாம், ஆனாலும் பதவியிலிருந்து இறக்கப்படுவதற்குரிய குற்றம் இல்லை என்கிறார்கள் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

    தேர்தலில் தான் வெற்றிபெறுவதற்கு ட்ரம்ப் இன்னொரு நாட்டின் அதிபரின் உதவியைக் கோரியிருக்கிறார். அப்படி உதவி செய்தால்தான் ராணுவ உதவி செய்வதாகவும் அச்சுறுத்தியிருக்கிறார். இவையெல்லாம் குற்றங்கள் இல்லையென்றால் வேறு எவை குற்றம் என்று கருதப்படும்?

    அமெரிக்காவில் கட்சித் தலைவருக்கோ ஜனாதிபதிக்கோ பாராளுமன்ற உறுப்பினர்கள் பயப்படுவதில்லை. எதிர்க் கட்சி எடுக்கும் முடிவுகள் சரியென்று தோன்றினால் தங்கள் கட்சிக்கு எதிராக ஓட்டுப் போடவும் செய்வார்கள்.  இப்போது அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு என்ன வந்தது என்று தெரியவில்லை. ஒட்டுமொத்தமாக குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் அத்தனை பேரும் ட்ரம்ப்பைப் பதவியிலிருந்து இறக்க ஓட்டுப் போடப் போவதில்லை. ட்ரம்ப்புக்கு எதிராக ஓட்டுப் போட்டால் வரும் நவம்பர் மாதத் தேர்தலில் மக்கள் ஆதரவு இவர்களுக்குக் கிடைக்காதாம், தேர்தலில் வெற்றிபெற மாட்டார்களாம்.

    இதுவரை உலகில் ஜனநாயகத்திற்கே ஒரு மாடலாகத் திகழ்ந்த அமெரிக்காவிலேயே ட்ரம்ப் செய்யும் அநியாயங்களை மக்களின் பிரதிநிதிகள் தட்டிக் கேட்கவில்லையென்றால் அமெரிக்காவில் ஜனநாயகம் செத்துவிட்டதாகத்தான் கூற வேண்டும்.  சாதாரணமாக அமெரிக்கா வெளிநாட்டு விஷயங்களில் தர்மத்தைக் கடைப்பிடிக்காமல் அநியாயமாக நடந்துகொண்டாலும் உள்நாட்டு விவகாரங்களில் ஜனநாயக முறைப்படி நடந்துகொள்ளும் என்று பெயர்பெற்றிருந்தது.  ட்ரம்ப் விஷயத்தில் அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர்கள் நடந்துகொண்டதைப் பார்த்தால் அமெரிக்க ஒரு ஜனநாயக நாடு என்று இனி சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.

    Share