நோய்த்தொற்றைத் தடுக்க இதுவும் ஒரு வழியா?

நாகேஸ்வரி அண்ணாமலை

கோவிட்-19 பரவிக்கொண்டிருந்ததால் அமெரிக்காவில் கடைகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன.  எல்லாவற்றையும் விட திருமணங்கள் ஒத்திவைக்கப்பட்டன; சில திருமணங்களில் விருந்தினர் எண்ணிக்கை மிகவும் குறைக்கப்பட்டது; சில திருமணங்கள் ஆன்லைனில் நடத்தப்பட்டன. ஆனால் 1918-இல் ஸ்பேனிஷ் ஃப்ளூ என்னும் வைரஸால் பரப்பப்படும் வியாதி உலகம் முழுவதும் பரவியபோது ஒரு திருமணம் நடத்திவைக்கப்பட்டது. அந்தச் சம்பவத்தில் அங்கு இறந்தவர்களும் உயிரோடு இருந்தவர்களும் கலந்துகொண்டார்கள். எப்படித் தெரியுமா? அந்தத் திருமணம் ஒரு கல்லறைத் தோட்டத்தில் நடத்திவைக்கப்பட்டது. கொடிய வைரஸ் தொற்று பரவிக்கொண்டிருந்தபோது அங்கு எப்படி ஒரு திருமணம் நடத்தப்பட்டது என்று அறிந்தால் ஆச்சரியமாக இருக்கும்.

1918 நவம்பர் மாதம் 4-ஆம் தேதி The Evening World என்ற பத்திரிக்கையில் வந்த செய்தி: நியூயார்க்கிலுள்ள மவுன்ட் ஹெப்ரான் கல்லறைத் தோட்டத்தில் இலக்கம் 369, பத்தாவது கிழகுத் தெருவில் வசிக்கும் மிஸ் ரோஸ் ஸ்வார்ட்ஸ் என்பவருக்கும் இலக்கம் 638, பதினோராவது கிழக்குத் தெருவில் வசிக்கும் ஆபிரஹாம் லேச்டெர்மன் என்பவருக்கும் நேற்று மதியம் யூதமதத் தலைவர் உங்கர் முன்னிலையில் திருமணம் நடந்தது. மேலும் அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்தது: கொடிய வைரஸ் தொற்று நோய் பரவுவதைத் தடுத்து நிறுத்த ஒரு கல்லறைத் தோட்டத்தில் ஒரு திருமணத்தை நடத்த வேண்டும் என்ற மிகப் பழைய யூத வழக்கப்படி இந்தத் திருமணம் நடத்திவைக்கப்பட்டது.  கொடிய நோய்த் தொற்றுப் பரவலைத் தடுத்து நிறுத்த முன்வந்த இந்தத் தம்பதியை வாழ்த்துவதற்கு 2000 பேர் வந்திருந்தனர்.

இந்தத் திருமணம் ‘கருப்புக் கல்யாணம்’ என்று அழைக்கப்பட்டது. நியூயார்க்கின் குயின் பகுதியில் நடத்திவைக்கப்பட்ட இந்தத் திருமணம் கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த யூதர்களின் வழக்கப்படி நடத்தப்பட்டது. அப்போது நியூயார்க்கில் மட்டும் இருபதாயிரம் பேர் இந்த வியாதிக்குப் பலியாகியிருந்தனர்; உலகளவில் லட்சக் கணக்கான பேர் உயிர் இழந்திருந்தனர்.  பிலடெல்பியா, வின்னிபெக், மானிடோபா என்ற ஊர்களிலும் கல்லறைத் தோட்டங்களில் இம்மாதிரித் திருமணங்கள் நடத்திவைக்கப்பட்டன; மானிடோபாவில் சில யூதர்கள் கல்லறைத் தோட்டத்தின் மறு பகுதியில் ஒரு இறுதிச் சடங்கும் நடத்தினர்.  ‘இறந்தவர்களின் முன்னிலையில் ஒரு சமூகத்தின் எளிய ஒரு ஆணும் பெண்ணும் திருமணத்தால் ஒன்று சேர்ந்தால் கடவுளின் கவனம் அப்படித் திருமணம் செய்துகொண்டவர்களுடைய சகாக்களின் கஷ்டத்தை நோக்கித் திரும்பும்’ என்று பிலடெல்பியா லெட்ஜரில் குறிப்பிட்டிருந்ததாம்.

சமீபத்தில் ‘Tablet’ என்னும் ஒரு யூத மத ஆன்லைன் இதழில் ஒரு கட்டுரையில் காலரா போன்ற பெரிய வியாதிகள் பரவுவதைத் தடுக்க இம்மாதிரி சம்பவங்கள் நடந்திருக்கலாம் என்றும் ‘எளிய’ என்று குறிப்பிடும்போது சமூகத்தின் விளிம்பில் இருந்த அனாதைகள், பிச்சைக்காரர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரில் இருவரைத் திருமணத்திற்குத் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.  மேலே குறிப்பிட்ட நியூயார்க் நகரில் நடந்த திருமணத் தம்பதிகள் இந்த ரகத்தைச் சேர்ந்தவர்களா என்று உறுதியாகத் தெரியவில்லை.  மேலும் அந்தத் திருமணம் பின்னால் நிலைத்திருந்ததா, அவர்களுக்குக் குழந்தைகள் இருந்தனவா, அவர்கள் கடைசிவரை சந்தோஷமாகக் குடும்பம் நடத்தினார்களா என்ற விபரம் எதுவும் தெரியவில்லை.  ரோஸ் என்ற ஒரு அனாதைப் பெண் இருந்ததாக அந்த ஊரின் 1910 மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் குறிப்பிட்டிருக்கிறது; முப்பது வருஷங்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி வேலைபார்க்க முடியாத லேச்டெர்மன் என்று ஒருவர் இருந்ததாகத் தெரிகிறது.  ஆனால் இவர்கள் இருவரும்தான் ஹெப்ரானில் திருமணம் செய்துகொண்டவர்களா என்று ஊகிக்க முடியவில்லை.  அப்படி ஒரு திருமணம் நடந்தது என்பது மட்டும் அந்த நகரின் அதிகாரியின் கோப்புகளிலிருந்து உறுதியாகத் தெரிகிறது. இருவரின் பெயரில் கொஞ்சம் வித்தியாசமும் இருந்தது.

சென்ற மார்ச் மாதம் இஸ்ரேலில் ஒரு கல்லறைத் தோட்டத்தில் அம்மாதிரி ஒரு திருமணம் நடந்திருக்கிறது.  இது நவீன காலமாதலால் சமூக விலகல் போன்ற விதிகள் கடைப்பிடிக்கப்பட்டு நவீன முறைப்படி நடந்த திருமணம். இந்தியப் பிரதமர் குடிமக்கள் எல்லோரையும் விளக்கை அணைத்துவிட்டு கையைத் தட்டும்படி கூறியது அப்படியொன்றும் சிரிப்புக்கிடமான காரியம் இல்லையோ?

நியூயார்க் நகரில் நடந்த திருமணத்தைப் பொறுத்தவரை கொடிய நோய்தொற்றுப் பரவலை அந்தக் கருப்புக் கல்யாணம் தடுத்து நிறுத்தியதா என்று தெரியவில்லை.  அதே பத்திரிக்கையில் கருப்புக் கல்யாணம் பற்றிய செய்தியின் இடது பக்கத்தில் கொட்டை எழுத்துத் தலைப்பில் ‘இன்ஃப்ளுயென்ஸா முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது’ என்ற செய்தி வெளிவந்திருக்கிறது!

கொடிய வியாதி அதன் பிறகு 24 மணி நேரத்தில் முடிந்துவிடும் என்றும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் பிறகு வியாதி நகரை விட்டுப் போனதற்கான ஆவணங்களும் கிடைத்திருக்கின்றன. அந்தக் கால மருத்துவர்களும் அந்த நோய் பற்றி ஆராய்ச்சி செய்தவர்களும் நோய்த்தொற்று பரவல் முடிந்ததற்கான பெருமையை திருமணத்தை நடத்திவைத்த அந்த யூத மதத்தலைவருக்கும் அந்த மணமக்களுக்கும் கொடுத்திருக்க மாட்டார்கள்; சமூக விலகல், ஆரோக்கிய பராமரிப்பு, வியாதி உள்ளவர்கள் தனித்திருத்தல் ஆகியவற்றுக்குத்தான் அந்தப் பெருமையைக் கொடுத்திருப்பார்கள்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *