இந்திய முஸ்லீம்களின் கதி என்ன?

நாகேஸ்வரி அண்ணாமலை

இன்று அமெரிக்காவிலிருந்து மைசூரில் எங்கள் பக்கத்து வீட்டு நண்பரை தொலைபேசியில் கூப்பிட்டுப் பேசிக்கொண்டிருந்தேன்.  இந்தியாவிலும் அமெரிக்காவிலும் கொரோனோவைரஸின் நிலைமை பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.  அதன் பிறகு என்னுடைய அடுத்த புத்தகம் வியட்நாம் பற்றி என்றும் அங்கு எத்தனை உயிர்கள் – அமெரிக்கர்களும் வியட்நாமியர்களும் – அமெரிக்க ஜனாதிபதிகளின் ‘ஈகோ’வால் பலியாகின என்பதை அறிந்து என் மனம் என்ன பாடுபட்டது என்பது பற்றியும் அவரிடம் கூறினேன். அமெரிக்காவும் தாலிபானும் சமாதானம் பற்றி நடத்தும் பேச்சுவார்த்தை பற்றியும் கூறிவிட்டு ஆஃப்கானிஸ்தானில் என்றாவது அமைதி வருமா என்று கேட்டேன். அவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஆஃப்கானிஸ்தானில் எப்போதும் அமைதி நிலவும் சாத்தியமே இல்லை என்றார். அதற்கு அவர் கூறிய காரணங்கள் எனக்கு ஒப்புதலாக இல்லை. இந்தியத் துணைக்கண்டம் பிரிக்கப்படாமல் இருந்திருந்தால் ஆஃப்கானிஸ்தான் இந்தியாவின் அண்டை நாடாக இருந்திருக்கும், ஆஃப்கானிஸ்தானின் பிரச்சினைகள் இந்தியாவையும் ஓரளவு பாதித்திருக்கும் என்றேன்.  அதற்கு அவர் எதுவும் கூறாமல், ‘இந்தியத் துணைக்கண்டம் இந்தியா, பாகிஸ்தான் என்ற இரு நாடுகளாக பிரிக்கப்பட்டபோது முஸ்லீம்கள் அனைவரையும் பாகிஸ்தானுக்கு அனுப்பியிருக்க வேண்டும், காந்திஜியும் நேருவும் செய்த தவறுகளால் இப்போது நாம் கஷ்டப்படுகிறோம் என்றார்.  எனக்குத் திகீர் என்றது.

அவர் எங்கள் அடுத்த வீட்டு நண்பராக இருபது வருடங்களுக்கு மேல் இருந்துவருகிறார். ராணுவத்தில் பணிபுரிந்திருப்பதால் எல்லாச் சட்டங்களையும் விதிகளையும் தவறாமல் பின்பற்றுவார். ஒரு முறை நான் இஸ்ரேலில் கிடைத்த கத்தரிக் காய்களை அங்கிருந்து நம் சுங்கத் துறைக்குத் தெரியாமல் கொண்டுவந்துவிட்டேன் என்று பெருமையாகக் கூறியபோது, ‘இப்படித்தான் நம் இந்தியர்கள் வெளிநாடுகளில் எல்லா விதிகளையும் பின்பற்றுகிறார்கள், இந்தியாவில் அதே இந்தியர்கள் விதிகளைப் பின்பற்றுவதில்லை’ என்றார். அன்றிலிருந்து இந்தியாவிற்குள் கொண்டுவரக் கூடாத எந்தப் பொருளையும் நான் கொண்டுவருவதில்லை. நாங்கள் மைசூரில் இல்லாதபோது எங்கள் வீட்டில் என்ன பிரச்சினை என்றாலும் உடனேயே கவனிப்பார். ஒரு முறை எங்கள் வீட்டைக் கவனித்துக்கொள்ளும் வாட்ச்மேன் மரத்திலிருந்து விழுந்து காயமுற்றபோது உடனேயே மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றதோடு மருத்துவமனையில் முன் பணம் கட்டச் சொன்னபோது ஆயிரம் ரூபாயைக் கட்டியதோடு அதை எங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளவேயில்லை.

இவருக்கு பி.ஜே.பி.யிடமும் அதன் தலைவர்களிடமும் அபிமானம் உண்டு என்று எனக்கு நன்றாகத் தெரியும்.  அரசியலைப் பொறுத்தவரை அவரும் நானும் இரு துருவங்கள்.  அதனால் அரசியலைப் பற்றி அவரிடம் எதுவும் பேசுவதில்லை. அவர் பி.ஜே.பி. தலைவர்களை வெகுவாக ஆதரித்து காங்கிரஸ் தலைவர்களைக் கடுமையாகச் சாடும்போது என்னால் சும்மா இருக்க முடியாது. ஏதாவது நான் கூறப்போய் அது மனஸ்தாபத்தில் முடிந்துவிடக் கூடாதே என்பதால்தான் இந்த முன்னெச்சரிக்கை.  இன்றும், நேருவும் காந்திஜியும் செய்த தவறால் இந்தியா மதச்சார்பற்ற நாடாக ஆகிவிட்டது, அப்போதே இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்த முஸ்லீம்கள அனைவரையும் பாகிஸ்தானுக்கு அனுப்பியிருக்க வேண்டும், அப்படிச் செய்திருந்தால் இன்று நாம் இவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்காது, இந்தியா ஒரு இந்து நாடாக இருந்திருக்கும் என்றபோது என் உணர்ச்சிகள் எதையும் காட்டிக்கொள்ளமல் பேசாமல் இருந்துவிட்டேன்.

பிரிவினை சமயத்தில் காங்கிரஸ் கட்சி முடிக்காமல் விட்ட வேலையை நாங்கள் இன்று நிறைவேற்றிவைக்கிறோம் என்று மோதியும் அமித் ஷாவும் பேசுவதுபோல் அல்லவா இவரும் பேசுகிறார். நினைக்க, நினைக்க ஆயாசமாக இருக்கிறது. எப்போது இவரைப் போன்றவர்களைக்கூட பி.ஜே.பி.யால் மூளைச்சலவை செய்ய முடிந்தது?  இந்தியாவில் எத்தனை இனங்கள், எத்தனை மதங்கள், எத்தனை மொழிகள் என்று இந்தியாவின் பன்மைத்துவம்தான் இந்தியாவுக்கே பலம் என்று இவர் போன்றவர்களுக்குப் புரியவில்லையா? இந்தியாவில் இத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் இந்தியர்களுக்கே உரிய ஒரு கலாச்சாரம் நம் இந்தியர்கள் அனைவரையும் ஒன்றாக இணைக்கின்றதே.  இதை இவர்கள் உணரவில்லையா?

இந்தியர்களுக்குள் அப்படி ஒரு ஒற்றுமை இல்லை என்றே வைத்துக்கொள்ளுவோம்.  ‘இந்தியாவில் நாம் முதலில் எல்லோரும் இந்துக்களாகத்தன் இருந்தோம்.  பிறகு முஸ்லீம் அரசர்கள் இந்தியா மீது படையெடுத்து நம்மில் ஒரு சிலரை முஸ்லீம்களாக மாற்றிவிட்டார்கள். அதனால் எல்லோரும் இப்போது இந்து மதத்திற்கு வந்துவிடுங்கள்’ என்று பி.ஜே.பி. தலைவர்கள் கூறுவது எந்த நியாயத்தில் சேர்த்தி? எத்தனை பழங்குடி மக்களை இந்து மதத்திற்குள் கொண்டுவந்திருக்கிறோம். இன்றைய முஸ்லீம்கள் அனைவரும் அன்றைய முஸ்லீம் அரசர்களால் மதம் மாற்றப்பட்டார்கள் என்றே வைத்துக்கொள்ளுவோம். பல நூற்றாண்டுகளாக அந்த மதப் பழக்க வழக்கங்களுக்குப் பழக்கப்பட்டவர்களை இன்று மறுபடி மதம் மாறச் சொன்னால் அது அவர்களுக்கு எப்படிச் சாத்தியமாகும்?  பல நூற்றாண்டுகளக இந்திய மண்ணில் பிறந்து இந்திய மண்ணில் வாழ்ந்தவர்களை இடம் பெயரச் சொன்னால் அது அவர்களால் முடியுமா?

தென்னிந்தியாவில் வசிக்கும் முஸ்லீம்களை வட இந்தியாவுக்கு அப்பால் இருக்குக் பாகிஸ்தானில் குடியேறச் சொன்னால் அது அவர்களால் முடியுமா? என்னுடைய கல்லூரித் தோழி ஒருத்தி முஸ்லீம். சில பழக்கங்களைத் தவிர அவளுக்கும் எனக்கும் எந்தப் பெரிய வேற்றுமையும் இருந்ததில்லை. அவளைப் போன்றவர்களைப் பாகிஸ்தானில் குடியேறுங்கள் என்றால் அவள் குடும்பத்தாரால் முடிந்திருக்காது. அவளுடைய மதம் இஸ்லாம் என்பதைத் தவிர அவள் குடும்பம் ஒரு தமிழ்க் குடும்பம். அந்தத் தமிழ்க் குடும்பத்தை எப்படி இடம் பெயரச் சொல்லியிருக்க முடியும்? தென்னிந்தியாவில் வாழும் எல்லா முஸ்லீம்களுக்கும் இரு பொருந்தும்.

கிறிஸ்தவர்களுக்கு நிறைய நாடுகள் இருக்கின்றன, முஸ்லீம்களுக்கு நிறைய நாடுகள் இருக்கின்றன, இந்துக்களுக்குத்தான் இந்தியாவை விட்டால் வேறு நாடு கிடையாது, அதனால் இங்கு இந்துக்களுக்கு மட்டும்தான் உரிமை உண்டு என்கிறார்கள் பி.ஜே.பி. தலைவர்கள். முஸ்லீம்களுக்குப் பல நாடுகள் இருந்தாலும் இந்தியாவில் பிறந்து வளர்ந்த முஸ்லீம்களுக்கு இந்தியா ஒன்றுதான் அவர்களுடைய நாடு.  இதை விட்டு அவர்கள் எல்லோரும் எங்கு செல்வார்கள்?  உண்மையான இறைபக்தி உள்ளவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் மற்ற மதங்களையோ மற்ற மதத்தவர்களையோ நிந்திப்பதல்லை, குறைதுப் பேசுவதில்லை.  அப்படிச் செய்தால் அவர்களுடைய இறைபக்திக்கே அது களங்கம் ஏற்படுத்தும்.  எல்லா மதங்களும் ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்று கற்பிக்கும்போது ‘என் மதம்தான் பெரியது, என் கடவுள்தான் பெரியவர் என்று சொல்வது எப்படிப்பட்ட அறியாமை! சிந்தித்துச் செயல்பட்டால் இந்த அறியாமை என்ற இருள் நம்மை விட்டு விலகிவிடும்.


பின் குறிப்பு:

முன் ஒரு வல்லமை இதழில் ‘இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு’ என்ற கட்டுரையில் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராரிசியராக இருந்து ஓய்வு பெற்று சிகாகோவிலேயே வசிக்கும் எங்கள் முஸ்லீம் நண்பர் ஒருவருக்கு இந்தியத் தூதரகம் விசா கொடுக்க மறுத்ததை எழுதியிருந்தேன். அவருக்கு இப்போது விசா கிடைத்திருக்கிறது.  தூதரகத்தின் இந்த மன மாற்றத்திற்கு ஒரு காரணம் என்னைப்போல் அவருடைய வேறு சில நண்பர்களும் ஊடகங்களில் எழுதியது. மற்றொரு காரணமும் உண்டு. இந்தியாவில் குடிமகனாக இருப்பதற்கு தந்தை பற்றிய ஆவணங்கள் கேட்பதற்கு பலத்த எதிர்ப்பு இருக்கிறது. பல மாநில அரசுகள் இந்தத் தகவலை சேகரிக்க மாட்டோம் என்று சொல்லியிருக்கின்றன. மத்திய அரசும் இந்த ஆவணங்கள் தேவையில்லை என்று பின்வாங்கி இருக்கிறது. இதனால் இந்தியத் தூதரகங்களும் விசா கொடுப்பதற்கு விதிகளைத் தளர்த்தி இருக்கின்றன. எப்படி இருந்தாலும் நண்பருக்கு விசா கிடைத்ததில் மகிழ்ச்சி.  இவரைப் போலவே இந்தியாவிலேயே இருக்கும் முஸ்லீம்களுகு ஆவணங்கள் கேட்காமலேயே குடியுரிமை கொடுப்பார்கள் என்று நம்பலாம் என்று தோன்றுகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *