உலகம் பின்னோக்கிச் செல்கிறதா?

நாகேஸ்வரி அண்ணாமலை

நாங்கள் 1966 செப்டம்பரில் அமெரிக்கா வந்தபோது கருப்பர்களில் பலர் பெரிய பதவிகளில் இல்லை. பலர் கட்டடத் துப்புரவுத் தொழிலாளிகளாகவும் வசதியான வீடுகளில் வீட்டுவேலை செய்பவர்களாகவும் இருந்தனர். பல்கலைக்கழகங்களில் பேராசியர்களாக/மாணவர்களாக இருந்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.  அரசியலிலும் அப்படியே.  அமெரிக்காவை விட்டுச் சென்று 23 வருடங்களுக்குப் பிறகு திரும்பவும் அமெரிக்கா வந்தபோது கருப்பர்களின் நிலைமை மிகவும் மாறிப்போயிருந்தது. விமானநிலையத்திலேயே பலர் நல்ல பதவியில் இருந்ததைப் பார்க்க முடிந்தது. கல்விக்கூடங்களிலும் பலர் வேலைபார்த்தனர். இந்தியாவில்போல் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அமெரிக்காவில் பிரத்தியேக சலுகை எதுவும் கிடையாது. பல்கலைக்கழகங்களில் மட்டும் ஏதோ பெயருக்கு சில சலுகைகள் இருக்கின்றன. அப்படியிருந்தும் அவர்கள் முன்னேறியிருக்கிறார்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சியாக இருந்தது.

ஆனால் அப்போதிருந்ததைவிட இனத்துவேஷம் இப்போது மிகவும் அதிகமாகியிருக்கிறது. அதிலும் ட்ரம்ப் ஜனாதிபதி ஆன பிறகு வெள்ளை இனவாதிகள் அமெரிக்கா என்ற நாடு தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று எண்ண ஆரம்பித்திருக்கிறார்கள்.  மேலும் வெளியிலிருந்து குடியேறிகளை அமெரிக்காவிற்குள் அனுமதிக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள். இப்படிக் குடியேறிகள் அமெரிக்காவுக்கு வந்து வெள்ளை அமெரிக்கர்களுடைய வேலைகளை எடுத்துக்கொண்டு வெள்ளை அமெரிக்கர்களுக்கு அந்த வேலைகள் கிடைக்காமல் செய்கிறார்கள் என்று நினைக்கிறார்கள்.  இந்த ரீதியில் அவர்கள் நினைப்பதற்கு ட்ரம்ப் ஜனாதிபதியானது ஒரு முக்கிய காரணம். உலகில் அமெரிக்காவின் பிம்பத்தை உயர்த்தப் பாடுபட்ட ஒபாமாவின் கொள்கைகளையெல்லாம் தலைகீழாக மாற்றிக்கொண்டிருக்கிறார் இந்த ட்ரம்ப். உலகம் அமெரிக்காவைப் பற்றி என்ன நினைக்கிறது என்று ட்ரம்ப் கவலைப்படுவதே இல்லை.  அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒன்பது பேரில் உருவரான ரூத் கின்ஸ்பர்க் நேற்று இறந்துபோனவுடன் அவருக்குச் சரியாகத் துக்கம்கூட அனுசரிக்காமல் அவருடைய இடத்தில் ஒரு பழமைவாத நீதிபதியை உடனடியாக நியமித்து உச்சநீதிமன்றத்தை பழமைவாதிகளின் கூடாரமாக ஆக்கப் பார்க்கிறார்.

ட்ரம்ப் இது மட்டுமா செய்துகொண்டிருக்கிறார்? உலகிலேயே சிறந்த ஜனநாயக நாடு என்று பெயர் வாங்கியிருந்த அமெரிக்காவை ஒரு சர்வாதிகார நாடாக ஆக்கிவிடுவாரோ என்று பலர் பயப்படும் அளவுக்குக் காரியங்கள் செய்து வருகிறார். வரும் நவம்பர் மாதத் தேர்தலில் என்னென்னவோ தகிடுதத்தங்கள் பண்ணி தேர்தல் முடிவை மாற்றிவிடுவாரோ என்று ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள் பயப்படுகிறார்கள். அமெரிக்கா ஆப்பிரிக்காவிலிருந்து ஆப்பிரிக்க அப்பாவி மக்களை அடிமைகளாகக் கொண்டுவந்து மிருகங்களைப்போல் நடத்தியதாகக் கூறப்படுவதெல்லாம் சரியில்லை என்றும், அதனால் அமெரிக்க சரித்திரத்தையே மாற்றி எழுத வேண்டும் என்று கூற ஆரம்பிதிருக்கிறர்.  இவ்வளவு தூரம் கருப்பர்களை வெறுக்கும் இந்த இன வெறியருக்கு இன்னும் 40 சதவிகித அமெரிக்க மக்களிடம் ஆதரவு இருக்கிறதாம். இதை என்னவென்று சொல்வது? உலகில் இனவெறி, மதவெறி எல்லாம் ஒழிந்து உலக மக்கள் எல்லோருக்கும் சமமான, நியாயமான உரிமைகள் கிடைத்து உலகம் முன்னேற்றப் பாதையில் செல்வதற்குப் பதிலாக இது என்ன பின்னேற்றம்?

அமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் ஜனநாயகம் தோன்றி எல்லா மக்களுக்கும் ஜனநாயக உரிமைகள் கிடைக்கும் என்று நம்பியதற்கு மாறாக உலகில் பல நாடுகளில் சர்வாதிகாரிகள் தோன்றிக்கொண்டிருக்கிறார்கள். மார்க்ஸின் போதனைகள் கம்யூனிஸ நாடுகளில் வலுவடைவதற்குப் பதிலாக அங்கு சர்வாதிகாரிகள் தோன்றிக்கொண்டிருக்கிறார்கள்.  முடியாட்சியை ஒழித்துப் பாட்டாளி மக்களாட்சியை லெனின் ஆரம்பித்த நாட்டில் இப்போது புதின் தன் வாழ்நாளுக்கும் பதவியில் இருப்பதற்கு ஏதுவாக சட்டத்தையே மாற்றியிருக்கிறார்.  மாசேதுங் சீனாவில் வளர்த்த கம்யூனிஸம் உருமாறி சீனா இப்போது ஷியின் சர்வாதிகார நாடாக மாறியிருக்கிறது. என்றென்றும் தன்னை ஆட்சியில் தக்கவைத்துக்கொள்வதற்குத் தருணம் பார்த்துக்கொண்டிருக்கிறார் இந்தியப் பிரதமர் மோதி. இந்தியா சுதந்திரம் அடைந்ததும் ‘இனி எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்’ என்று ஆனந்தத்தோடு பாடினோம். அரசு தவறு செய்தால் எந்தக் குடிமகனாலும் அரசைத் தட்டிக்கேட்க முடியும் என்ற நிலை மாறி மோதியைக் குறைகூறுபவர்கள் எல்லோரும் தேசத்துரோகிகள் என்று கருதப்பட்டு சிறைக்கு அனுப்பப்படும் அளவுக்கு இந்தியாவில் ஜனநாயகம் மறைந்துகொண்டிருக்கிறது.

இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பிறகு உலகில் அமைதி நிலவவும் உலக மக்கள் அனைவரும் சுபிட்சம் பெறவும் ஐ.நா. சபை, யுனெஸ்கோ, உலக சுகாதார நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் தோன்றின. உலக நிதி நிறுவனம், உலக வங்கி ஆகிய பொருளாதார நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டன.  உலகிலேயே பணக்கார நாடான அமெரிக்கா இந்த நிறுவனங்களுக்கு நிதி உதவிசெய்து வந்தது.  இப்போது ட்ரம்ப் அந்த நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்வதை நிறுத்தப் போகிறார்.

ஹிட்லர் யூதர்களுக்கு இழைத்த அநீதிக்குப் பரிகாரம் தேடுவதுபோல் ஜெர்மனியின் தலைவர் ஏஞ்சலோ மெர்கல் பல அகதிகளை ஜெர்மனிக்குள் அனுமதித்து அவர்களுக்கு புதுவாழ்வு கொடுக்க முயற்சிக்கிறார்.  அங்கும் இப்போது நாஜிக்களைப் பின்பற்றும் ஒரு கூட்டம் இருக்கிறது என்பதோடு அவர்கள் ஜெர்மனியின் ராணுவத்திலும் காவல்துறையிலும் இப்போது ஊடுருவி இருக்கிறார்களாம்.  எப்படிப்பட்ட துயரச் செய்தி இது.

குறைகள் உள்ளன என்றாலும் இருக்கிறவற்றில் சிறந்த அரசியலமைப்பு என்று ஜனநாயகம் கருதப்பட்டது. அடுத்த கட்டமாக ஜனநாயகத்திலுள்ள குறைகள் களையப்பட்டு இதைவிட ஒரு சிறந்த அரசியலமைப்பு உண்டாகும் என்று நம்பியதற்கு மாறாக ஜனநயகமே அல்லவா உலகிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டிருக்கிறது. மனிதனுடைய சின்னத்தனங்கள் ஒவ்வொன்றாக மெதுவாக மாறி மனிதன் இறைத்தன்மைகளைப் பெறுவான் என்று நினைத்ததெல்லாம் பொய்யாகிப் போய்விடுமா?

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க