அமெரிக்க இதழியல் புரட்சியாளர்!
-மேகலா இராமமூர்த்தி
மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியிலுள்ள மேக்கோவில் (Makó, Hungary) ஏப்ரல் 10, 1847ஆம் ஆண்டு பூலாப் புலிட்சர், எலிஸ் பெர்கர் (Fülöp Pulitzer, Elize Berger) எனும் யூத இணையருக்கு மகனாய்ப் பிறந்தவர் ஜோசப் புலிட்சர் (Joseph Pulitzer). அவருக்கு 4 உடன்பிறப்புகளும் இருந்ததாகத் தெரிகின்றது; ஜோசப்பின் தந்தையார் கூலவாணிகம் செய்து ஓரளவு வளமையுடன் இருந்தமையால் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை அளித்துவந்தார். ஆனால் ஜோசப் சிறுவனாக இருந்தபோதே அவர் மறைந்தமையால் குடும்பத்தின் பொருளாதாரம் நொடித்துப் போனது.
வாய்ப்புகளின் தேயமாக விளங்கிய அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தால் தம் வாழ்க்கை வளம்பெறும் என்று கருதிய புலிட்சர் அமெரிக்காவுக்குச் செல்லவிரும்பினார்.
ஆனால் எப்படிச் செல்வது? பயணச் செலவுக்கான பணத்தை எப்படிப் பெறுவது?
அக்காலக்கட்டத்தில் (1864) அமெரிக்காவில் நடைபெற்றுக்கொண்டிருந்த உள்நாட்டுப் போரில் (Civil War) ஈடுபடுவதற்கு ஐரோப்பாவின் பல நாடுகளிலும் வீரர்களைத் தெரிவுசெய்துகொண்டிருந்தது அமெரிக்க இராணுவம். அதனைப் பயன்படுத்தித் தம்மையும் படைவீரராகப் பதிவுசெய்துகொண்டார் புலிட்சர். எனவே அவரது அமெரிக்கப் பயணத்திற்கான செலவை அமெரிக்க இராணுவமே பார்த்துக்கொண்டது.
தம்முடைய 17ஆவது அகவையில் அமெரிக்கா வந்த அவர் ஒன்றியப் படையில் (Union Army) இணைந்தார். ஆபிரகாம் இலிங்கனின் குதிரைப் படையில் (Cavalry) ஓராண்டுக்காலம் பணியாற்றினார். 1865இல் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்தது. அதன்பின்னர் பல்வேறு இடங்களில் சிறுசிறு பணிகள் செய்துவந்த அவர் பின்னர் மிசௌரி மாகாணத்திலுள்ள செயின்ட் லூயிஸுக்கு (St. Louis, Missouri) வந்துசேர்ந்தார். அங்கிருந்த அச்சகங்களில் வேலைசெய்து இதழியலைக் கற்று, செயின்ட் லூயிஸிலிருந்து வெளிவந்த ஜெர்மன்மொழிச் செய்தித்தாளான வெஸ்ட்லிக்கே போஸ்ட்டில் (Westliche Post) அச்சுக்கோப்பவரானார்; பின்னர் இதழாளராகவும் பயிற்சிபெற்றார். இதழியல்சார் பணிகள் அனைத்தையும் தம்மோடு பணியாற்றிய சக ஊழியர்களைப் பார்த்தே கற்றுக்கொண்டார் புலிட்சர்!
1872இல், ‘செயின்ட் லூயிஸ் போஸ்ட்-டிஸ்பாட்ச்’ (St. Louis Post-Dispatch) எனும் நாளிதழின் இணை உரிமையாளரானார் புலிட்சர்; 1878-ஆம் ஆண்டிற்குள் அந்த நாளிதழ் அவரின் முழுக்கட்டுப்பாட்டிற்குள் வந்தது. புலனாய்வு இதழியல், ஊழல் எதிர்ப்புச் செய்திகள், தொழிலாளர்கள், குடியேறிகளுக்கான ஆதரவு ஆகியவற்றைக் கொண்ட புரட்சிகரமான நாளிதழாக அது திகழ்ந்தது. அமெரிக்காவில் புலனாய்வு இதழியல் (investigative journalism) எனும் துறையைப் பிரபலப்படுத்திய பெருமை ஜோசப் புலிட்சரையே சாரும்.
அக்காலத்தில் ’நியூயார்க் வேர்ல்ட்’ (New York World) எனும் நாளிதழைச் சிரமப்பட்டு நடத்திக்கொண்டிருந்த அதன் உரிமையாளர் பிராங்க் மன்சியிடமிருந்து (Frank Munsey) அவ்விதழை 1883இல் வாங்கிய புலிட்சர், வெகுமக்களைக் கவரும் வகையில் அந்நாளிதழில் தொடர்கதைகள், கேலிச்சித்திரங்கள், புலனாய்வுச் செய்திகள், விளக்கப்படங்கள் எனப் பலவற்றை அறிமுகப்படுத்தினார். நியூயார்க் வேர்ல்ட் நாளிதழைப் புதிதாக வாங்கி நடத்தியபோதும் செயின்ட் லூயிஸ் போஸ்ட்-டிஸ்பாட்ச் நாளிதழின் உரிமையாளராகவும் மேலாளராகவும் தொடர்ந்து செயற்பட்டுவந்தார் அவர்.
நியூயார்க் வேர்ல்ட் நாளிதழில் 1886இல் பணிக்குச் சேர்ந்த நெல்லி பிளை (Nellie Bly) எனும் பெண் இதழாளர் துணிச்சலாகச் செயற்பட்டு நியூயார்க்கின் பிளாக்வெல் தீவிலிருந்த மனநலக் காப்பகத்தில் (Blackwell’s Island Insane Asylum, New York City) நடந்த முறைகேடுகளை, தாமே மனநோயாளிபோல் அங்கே தங்கி, அறிந்துவந்து அம்பலப்படுத்திப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
காலவோட்டத்தில் ’நியூயார்க் வேர்ல்ட்’ நாளிதழுக்குக் கடும்போட்டியாக விளங்கத் தொடங்கியது வில்லியம் ராண்டால்ப் ஹர்ஸ்ட் (William Randolph Hearst) என்பவர் நடத்திவந்த ’நியூயார்க் ஜர்னல்’ எனும் மற்றொரு நாளிதழ். தொழில்போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்று கருதிய புலிட்சர் பெரிய மனிதர்கள், திரைத்துறையினர் உள்ளிட்டோரின் அந்தரங்க வாழ்க்கை குறித்த கிசுகிசுக்களையும் நியூயார்க் வேர்ல்டில் வெளியிட்டு மக்களின் மலின விருப்பங்களுக்குத் தீனிபோட்டார். இதனால் மஞ்சள் பத்திரிகை (yellow journalism) எனும் விமர்சனத்தை எதிர்கொண்டது அந்நாளிதழ். தொழில்போட்டியில் வெல்லவேண்டும் எனும் எண்ணமானது உயர்ந்த சிந்தனை கொண்ட மனிதர்களையும் தரந்தாழ்ந்த செயல்களைச் செய்ய வைக்கும் என்பதற்கு இஃதோர் சான்று!
எனினும் சமூகநலன்சார் கருத்துக்கள், அரசியல்வாதிகளின் ஊழலை அம்பலப்படுத்துதல் போன்றவற்றையும் தொடர்ந்து வெளியிட்டு நாளிதழின் முதன்மை நோக்கத்தைக் கைவிடாது காத்துவந்தார் புலிட்சர். சிறிது காலத்திற்குப்பின் போட்டி வேகம் தணிந்து, சமூக முன்னேற்றம், அறக்கேட்டிற்கு எதிரான கருத்துக்கள், மறைக்கப்பட்ட உண்மைகளைப் புலனாய்வின் வாயிலாய் வெளிக்கொணர்தல் போன்றவற்றுக்கே முதன்மை தந்தார் புலிட்சர் என்றறிகின்றோம்.
இதழியல், இலக்கியம், நாடகம், கல்வி போன்ற துறைகளில் சிறந்து விளங்குவோருக்குப் பரிசளிக்கும் நோக்கிலும் – நியூயார்க்கிலுள்ள கொலம்பியாப் பல்கலைக்கழகத்தில் இதழியல் பள்ளியை நிறுவும் நோக்கிலும், 1904ஆம் ஆண்டு, தம் சொத்தின் ஒரு பகுதியை ஒதுக்கி உயில் எழுதிவைத்தார் ஜோசப் புலிட்சர்.
இதற்கிடையே பார்வையிழப்பு, நரம்புச் சிதைவு போன்ற பல கடுமையான உடல்நலக் கேடுகளால் அவதியுற்றுவந்த புலிட்சர், 1911ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் நாள் தம்முடைய 64ஆவது அகவையில் உயிர்நீத்தார். 1917ஆம் ஆண்டு புலிட்சர் பரிசுகள் (Pulitzer Prizes) நிறுவப்பட்டுத் தகுதியானோர்க்கு ஒவ்வோராண்டும் வழங்கப்பட்டு வருகின்றன. [1943ஆம் ஆண்டுமுதல் இசைத்துறைச் சாதனையாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்படுகின்றது.] 1912ஆம் ஆண்டுமுதல் இதழியல் பள்ளி கொலம்பியாப் பல்கலைக்கழகத்தில் (Columbia University Graduate School of Journalism) செயல்படத் தொடங்கிற்று.
ஹங்கேரியில் பிறந்த ஜோசப் புலிட்சர், கண்டம்விட்டுக் கண்டம்வந்து தம் விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் இதழியல் துறையில் சாதனை படைத்ததோடல்லாமல் அத்துறையிலும் பிற படைப்பாக்கத் துறைகளிலும் சாதனை புரிவோரைப் பாராட்டும் வகையில் பரிசுகளையும் நிறுவியது பெரும் பாராட்டுக்குரியதன்றோ?

புலிட்சர் பரிசின் முன்பக்கம்/பின்பக்கம்
அமெரிக்காவின் மிக உயர்ந்த இலக்கியப் பரிசாகக் கருதப்பெறும் புலிட்சர் பரிசினைப் பெறுவதற்கு நாம் அமெரிக்கராக இருக்கவேண்டும் என்பதில்லை; அமெரிக்காவில் வாழும் பிறநாட்டினரும் இப்பரிசுக்குத் தகுதியானவரே; ஆனால் பரிசுக்காக அனுப்பப்படும் படைப்புகள் அமெரிக்காவில் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்; ஆங்கிலத்தில் இருக்கவேண்டும்; பிறமொழி நூல்களாக இருப்பினும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தே அனுப்பவேண்டும்.
புலிட்சர் பரிசினை வெல்வோருக்கு 15,000 அமெரிக்க வெள்ளியும் வெண்கலப் பதக்கமும் சான்றிதழும் ($15,000 USD, a certificate and a bronze medallion) வழங்கப்பெறும்!
*****
கட்டுரைக்குத் துணைசெய்தவை:
- https://www.britannica.com/biography/Joseph-Pulitzer
- https://americanaristocracy.com/people/joseph-pulitzer
- https://en.wikipedia.org/wiki/Joseph_Pulitzer
