63 நாயன்மார்கள் வரலாறு – 27. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் (3)

திருஞானசம்பந்தர் திருப்புகலூர், வர்த்தமானிச்சுரம் ஆகிய தலங்களை வணங்கச் சென்றார். முருக நாயனார் எனும் அடியவர் வர்த்தமானச்சுரத்துப் பெருமானை நாளும் பூவும், பட்டும் கொண்டு அலங்கரித்து, அகில் கொண்டு புகைத்து ஐயன் அழகில் அவர்தம் அடி பரவும் அத்திருத்தொண்டர் வழிபடும் திருக்கோயில் வர்த்தமானிச்சுரம் எனப் போற்றிப் பாடியருளினார். முருக நாயனார் எதிர் கொண்டழைக்கத் திருப்புகலூர் சென்ற ஞானப்பிள்ளையார் ஆலயம் சென்று பெருமானை வணங்கி திருப்பதிகம் பாடிப் போற்றி முருக நாயனார் திருமடத்தில் தங்கியிருந்தார். ஞானப்பிள்ளையார் திருப்புகலூரில் உள்ளார் என்ற செய்தியறிந்த அப்பரடிகள் ஆரூர்ப் பெருமானின் ஆதிரைப் பெருவிழாவினைக் கண்டு களித்து திருப்புகலூர் வந்து சேர்ந்தார்.

அப்பர் பெருமான் வருகையை அறிந்த ஞானசம்பந்தர் ஆராத அன்புடன் அவரை எதிர்கொண்டழைத்து அளவளாவி மகிழ்ந்தார். திருவாரூரில் நிகழ்ந்த திருவாதிரைத் திருநாளின் சிறப்பை விரித்துரைக்கக் கேட்ட ஞானசம்பந்தர் அப்பரைத் திருப்புகலூரில் இருக்கச் செய்து விற்குடி வீரட்டத்தைப் பணிந்து விழா கண்ட ஆரூரைத் தொழுது வருவதாகக் கூறி திருவாரூருக்கு எழுந்தருளினார். ஞானசம்பந்தரின் வருகையை அறிந்த நகர மக்கள் எதிர்கொண்டு போற்றினர். ஞான சம்பந்தர் திருவாரூர்ப் பூங்கோயிலை அடைந்து `சித்தம் தெளிவீர் காள்` என்பது முதலிய பல திருப்பதிகங்களை அருளிப் பரவி வழிபட்டார். அரனெறியைத் தரிசித்தார். பின்னர் வலிவலம் கோளிலி முதலான தலங்களை அடைந்து வழிபட்டு மீண்டும் திருவாரூரை அடைந்து தங்கியிருந்து வழிபட்டு, வழியிடையே பனையூரைத் தொழுதுப் பின்னர் திருப்புகலூருக்கு வந்து சேர்ந்தார். ஊர் எல்லையில் முருக நாயனார் முதலிய அடியவர்கள் வரவேற்கத் திருப்புகலூரை அடைந்து இறைவனை வழிபட்டு முருகநாயனார் திருமடத்தில் திருநாவுக்கரசர், நீலநக்கர், சிறுத்தொண்டர் முதலிய அடியவர்களோடு உரையாடிக் கலந்து மகிழ்ந்திருந்தார்.

 

ஞானசம்பந்தரும் அப்பரடிகளும் நீலநக்கர் சிறுத்தொண்டர் முதலானோர்க்கு விடையளித்து இறைவன் வீற்றிருக்கும் பல திருத்தலங்களையும் வழிபட விரும்பிப் புறப்பட்டனர். ஞானசம்பந்தர் அப்பர் உடன் வருவதால், முத்துச்சிவிகை பின்வர, தானும் அவருடன் நடந்து செல்லலானார். அதைக்கண்ட அப்பர் பெருமான் இறைவன் அளித்த சிவிகையில் வராமல் நடந்து வரும் வகையில் அதைப் புறக்கணிப்பது தகாது என்றும், தன்னுடனேயே பல்லக்கில் பவனி வரவேண்டும் என்று கேட்டுக் கொள்ள எண்பதாண்டு முதியவரான அப்பர் பெருமானை நடக்க வைத்துத் தாம் மட்டும் சிவிகையில் செல்வது சரியாகாது என்று எண்ணிய  ஞானசம்பந்தர் அப்பரை முன்னே விடுத்து அவர் செல்லும் திருத்தலங்களைத் தொடர்ந்து சென்று வழிபட்டார்.

 

இருவரும் அம்பர் மாகாளத்தை வணங்கித் திருக்கடவூர் சென்றனர். அங்கு குங்குலியக்கலய நாயனார் அவர்களை வரவேற்க இருவரும் கடவூர் வீரட்டத்தைத் தொழுது போற்றி அந்நாயனார் திருமனையில் அமுது கொண்டு திருக்கடவூர் மயானம் ஆக்கூர் மீயச்சூர் பாம்புரம் முதலிய தலங்களை வணங்கிக்கொண்டு திருவீழிமிழலை எனும் திருத்தலத்தை வந்தடைந்தனர். அப்பரடிகளும் ஞானசம்பந்தரும் திருவீழிமிழலையில் வீழிமிழலைப் பெருமானை வணங்கி அங்கு தங்கியிருந்தார்கள். ஞானசம்பந்தர் வீழியில் இருந்தபோது காழிமக்கள் அவர் பிரிவாற்றாது, காழிப்பதியை விட்டு வந்து வெகுநாட்கள் ஆகிறது, தங்களோடு சீர்காழிக்கு வந்து சில நாட்கள் தங்கியருள வேண்டுமென விண்ணப்பித்தனர். ஞானசம்பந்தர் வீழிநாதனின் அருள் பெற்று இன்று கழித்து நாளை செல்வோம் எனக் கூறி, அவர்களைத் திருமடத்தில் தங்க வைத்துத் தாமும் துயில் கொண்டார்.

 

பெருமான் அவர் தம் கனவில் தோன்றி, தம்மைத் திருமால் வணங்க, இந்திரனால் இங்கு வரவழைக்கப்பட்ட விண்விழி விமானத்தே தாம் தோணியிலமர்ந்த வண்ணத்தை நாளை வீழிமிழலையிலேயே காட்சியளிப்பதாகக் கூறக் கேட்டு பெருமான் கருணை வெள்ளத்தை நினைந்து மகிழ்ந்து அதிகாலை விழித்தெழுந்து நீராடி ஆலயம் சென்றபோது இறைவன் காழிக்காட்சியை அவ்வாலயத்திலேயே காட்டக் கண்டு `மைம் மருபூங் குழல்` எனத் தொடங்கும் திருப்பாசுரம் பாடி வியந்தார். காழி மக்கட்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டு வீழிமிழலையிலேயே தங்கியிருந்தார்.

ஞானசம்பந்தரும் அப்பரும் திருவீழிமிழலையில் தங்கியிருந்த சமயம் அங்கு மழையின்றி, நீர்வரத்தும் குன்றி, நதிநீர் குறைந்து, வளம் இன்றி நாடு வறட்சியுற்றதால் பஞ்சம் ஏற்பட்டது. உணவு உற்பத்தி குறைந்து வறுமையுற்றதால் உயிர்களெல்லாம் பசியால் வாடின. மக்களோடு அடியார்களும் துயருற்றனர். அதனை அறிந்த பிள்ளையார் `கண்ணுதலான் திருநீற்றுச் சார்வினோர்க்கும் கவலை வருமோ? என்று கருதியவராய் பெருமானை எண்ணியவாறு இருவரும் கண்ணயர்ந்தனர்.

 

உறங்கிய பெருமக்களின் கனவில் பெருமான் தோன்றி நாட்டின் பஞ்சம் நீங்கும் காலம் வரை ஆலயத்தின் கிழக்குப் பலிபீடத்திலும் மேற்குப் பலிபீடத்திலும் இருவருக்கும் பொற்காசு அளிப்பதாகக் கூறி மறைந்தார். விழித்தெழுந்த ஞானசம்பந்தர் அப்பரடிகளுடன் ஆலயம் சென்றார். கனவில் கண்டதுபோல் கிழக்குப் பலிபீடத்தில் ஞானசம்பந்தர் காசு பெற்றார். மேற்குப் பலிபீடத்தில் அப்பர் பெருமான் காசு பெற்றார். இருவரும் அக்காசுகளைப் பெற்றுத் தத்தம் திருமடங்களில் அடியவர்களுக்கு அமுதளிப்பதாக பறை அறிவித்துச் செய்தியளித்தனர். அடியவர்கள் அனைவரும் உணவு உண்டு மகிழ்ந்திருந்த நேரத்தில், நாவுக்கரசர் திருமடத்தில் உரிய காலத்திலும், ஞானசம்பந்தர் திருமடத்தில் சிறிது காலம் தாழ்ந்தும் உணவளிக்கப் பெறுவதை அறிந்த ஞானசம்பந்தர், பணியாளர்களை அழைத்துத் தாமதத்திற்குரிய காரணம் வினவினார். இறைவன் தனக்கு அளிக்கும் காசுகள் வாசியுள்ளதாக இருத்தலையும், நாவுக்கரசர் அளிக்கும் காசு நல்ல காசு என்பதையும் அறிந்தார். அக்காசினை மாற்றிப் பொருள்கள் பெற்று வருதலினால் காலத்தாமதம் ஏற்படுதலையும் அறிந்தார் ஞானசம்பந்தர். அப்பர் கைத்தொண்டும் செய்தலால் அவருக்கு வாசியில்லாத காசு வழங்குதலை அறிந்து மறுநாள் ஆலயம் சென்று `வாசிதீரவே காசு நல்குவீர்` எனத் திருப்பதிகம் பாடி நல்ல காசினைப் பெற்று உரிய காலத்தில் தமது திருமடத்திலும் அடியவர்களுக்கு அமுதளிக்கச் செய்து மகிழ்ந்திருந்தார்.

 

வாசி தீரவே, காசு நல்குவீர்

மாசின் மிழலையீர், ஏச லில்லையே.

 

இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர்

கறைகொள் காசினை, முறைமை நல்குமே.

 

செய்ய மேனியீர், மெய்கொள் மிழலையீர்

பைகொள் அரவினீர், உய்ய நல்குமே.

 

நீறு பூசினீர், ஏற தேறினீர்

கூறு மிழலையீர், பேறும் அருளுமே.

 

காமன் வேவவோர், தூமக் கண்ணினீர்

நாமம் மிழலையீர், சேமம் நல்குமே.

 

பிணிகொள் சடையினீர், மணிகொள் மிடறினீர்

அணிகொள் மிழலையீர், பணிகொண் டருளுமே.

 

மங்கை பங்கினீர், துங்க மிழலையீர்

கங்கை முடியினீர், சங்கை தவிர்மினே.

 

அரக்கன் நெரிதர, இரக்க மெய்தினீர்

பரக்கு மிழலையீர், கரக்கை தவிர்மினே.

 

அயனும் மாலுமாய், முயலும் முடியினீர்

இயலும் மிழலையீர், பயனும் அருளுமே.

 

பறிகொள் தலையினார், அறிவ தறிகிலார்

வெறிகொள் மிழலையீர், பிறிவ தரியதே.

 

காழி மாநகர், வாழி சம்பந்தன்

வீழி மிழலைமேல், தாழும் மொழிகளே.

 

சில திங்களில் மழைபெய்து நாடு செழித்தது. பஞ்சம் நீங்கி மக்கள் இனிது வாழத் தொடங்கினர்.

 

ஞானசம்பந்தரும் அப்பரும் அடியவர்களுடன் திருவீழிமிழலையிலிருந்து புறப்பட்டுத் திருவாஞ்சியம் முதலிய தலங்களை வழிபட்டுக்கொண்டு அடியவர் எதிர்கொண்டு வரவேற்க, தற்போது வேதாரண்யம் என்று வழங்கப்படுகிற திருமறைக்காடு சென்று அடைந்தனர். ஆலயத்தை வலம் வந்து வாயிலை அணுகியபோது வேதங்களால் பூசிக்கப்பெற்றுத் திருக்காப்பிடப்பெற்ற அத்திருக்கதவுகள் திறக்கப்படாமல் இருந்ததையும் மக்கள் மற்றொரு புறத்தில் வாயில் அமைத்துச் சென்று வழிபட்டு வருவதையும் கண்ட ஞானசம்பந்தர் வேதவனப் பெருமானை உரிய வாயில் வழியே சென்று வழிபட வேண்டும் என்று எண்ணி அப்பரடிகளிடம், அத்திருக்கதவுகள் திறக்க வேண்டி திருப்பதிகம் பாடியருள வேண்டுமென வேண்டினார். அப்பர் பெருமானும் `பண்ணினேர் மொழியாள்` எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடியருளினார். அப்பதிகப் பொருட் சுவையில் ஈர்க்கப்பட்ட இறைவன் பதிகத்தின் நிறைவில் திருக்கதவுகள் திறக்குமாறு செய்தருளினார். இருவரும் மகிழ்வுடன் ஆலயத்தினுள் சென்று மறைக்காட்டுறையும் இறைவனைப் போற்றிப் பரவித் திரும்பினர். அப்பர் இக்கதவுகள் இனி திறக்கவும் அடைக்கவும் உரியனவாக இருத்தல் வேண்டுமென எண்ணி ஞான சம்பந்தரை நோக்கி இப்போது தாங்கள் திருக்கதவுகள் அடைக்கப் பாட வேண்டுமெனவும் வேண்டினார்.
ஞானசம்பந்தர் `சதுரம் மறை` எனத் தொடங்கும் திருப்பதிகம் பாட, அந்த முதற்பாடலிலேயே கதவு அடைத்துக் கொள்ள ஏனைய பாடல்களையும் பாடிப் போற்றினார் ஞானசம்பந்தர். பின்னர் இருவரும் மகிழ்ச்சியுடன் திருமடம் சேர்ந்தனர்.

 

அப்பர் திருமடத்தைச் சார்ந்து தான் 10 பாடல்கள் பாடி அரிதில் திறக்கவும், முதல் பாடல் சம்பந்தர் பாடிய உடனே மூடியதையும் நினைத்துப் பார்த்து இறைவன் திருவருள் குறிப்பை உணராது திருக்கதவந் திறக்கப் புகுந்தது தவறெனக் கருதி அம்மடத்தின் ஒரு பால் துயில் கொண்டார். அவர்தம் மனக்கருத்தை அறிந்த சிவபெருமான் அவர் எதிரே சைவ வேடத்துடன் தோன்றி, `நாம் வாய்மூரில் இருப்போம். நம்மைப்பின் தொடர்ந்து வருக` எனப் பணித்தார். அப்பர் பெருமான் கை, தலை குவித்து பின் தொடர்ந்து சென்றார். அப்பெரியவர் அண்மையில் இருப்பது போலக் காட்டி மறைந்தார். சண்பை வேந்தர் எழுந்து அப்பரடிகள் பற்றி வினவ, அடியார்கள் அப்பர் வாய்மூர் சென்றமையைத் தெரிவித்தனர். அப்பரடிகளை அவர் சென்ற வழி கேட்டறிந்து அவரைத் தேடித் திருவாய்மூர் வந்தடைந்தார்.

 

ஞானசம்பந்தரின் வருகையை அறிந்த அப்பரடிகள் அகமகிழ்ந்து தாம் திருக்கதவம் திறக்கப் பாடிய திருப்பதிகத்தினினும் சிறப்புடைய செந்தமிழ் பாடித் திருக்கதவம் அடைப்பித்த ஞானசம்பந்தர் வருகையைக் கூறி அவருக்காக திருக்காட்சி நல்க வேண்டினார். வாய்மூர் பெருமான் ஞானசம்பந்தருக்கு மட்டும் தமது ஆடல் காட்சியைக் காட்டியருள ஞானப்பிள்ளையார் `தளிரிள வளரென` எனத் திருப்பதிகம் பாடிப் போற்றி அக்காட்சியை அப்பருக்கும் காட்டியருளினார். அவ்வருட் காட்சியைக் கண்ட அப்பரடிகளும் பதிகம் பாடிப் போற்றினார். இருவரும் திருவாய்மூரில் சில நாட்கள் தங்கியிருந்து மகிழ்ந்தவர்கள் மீண்டும் திருமறைக்காடு சென்று சேர்ந்தனர்.

 

பாண்டிநாடு சமண சமய இருளில் மூழ்கியிருந்த காலம் அது. பல்லாயிரம் சமணத் துறவிகளைத் தோற்றுவித்து  ஆனைமலை முதலிய மலைகளைத் தம் இருப்பிடங்களாகக் கொண்டு தங்கள் சமயத்தைப் பரப்புவதுடன் சைவ சமயத்தை இகழ்ந்தும் பழித்தும் வந்தனர். சைவத் திருக்கோயில்கள் அனைத்தும் சமணப் பாழிகளாக மாற்றமடைந்தன. அக்காலத்தில் அரசு புரிந்த கூன்பாண்டிய மன்னனையும் சமண சமயத்தில் சேர்த்தனர். மக்களும் அச்சமயம் சார்ந்து ஒழுகத் தலைப்பட்டனர். பாண்டிய மாதேவியான மங்கையர்க்கரசியாரும், அமைச்சர் குலச்சிறையாரும் உறுதியாய்ச் சிவநெறி கடைபிடித்து காத்து வந்தனர். இந்நிலையில் ஞானசம்பந்தரின் பெருமைகளைக் கேள்வியுற்ற அரசியாரும் அமைச்சரும் இறையருள் பெற்ற அவர் திருமறைக்காட்டுக்கு எழுந்தருளியிருப்பதை அறிந்து பரிசனங்களை அனுப்பி வணங்கித் தம் நாட்டு நிலையைத் தெரிவித்து வருமாறு செய்தனர். உடன் இருந்த அடியவர்கள் ஞானசம்பந்தரிடம் பாண்டி நாட்டுக்கு எழுந்தருள வேண்டுமென வேண்டிக் கொண்டனர். ஞானசம்பந்தரும் அப்பரடிகளும் மறைக்காட்டீசர் திருக்கோயில் சென்று வணங்கினர். ஞானசம்பந்தர் மதுரைக்குச் செல்லும் தம் விருப்பத்தை அப்பரிடம் தெரிவிக்க, அப்பர் ஞானசம்பந்தரை நோக்கிப் `பிள்ளாய் அமணர் செய்யும் வஞ்சனைக்கோர் அளவில்லை. அதை நானே அனுபவித்திருக்கிறேன். ஆயினும் இன்று நாளும் கோளும் நன்றாக இல்லை. இதுபோது பாண்டிநாடு செல்வது கூடாது` எனத் தடுத்தருளினார். ஞானசம்பந்தர் அப்பரை நோக்கி `நாம் பரவுவது நம் பெருமான் கழல் ஆதலால் நம்பால் எத்தகைய தீங்கும் வாராது` எனக் கூறியதோடு, நாள் கோள்களின் குற்றங்கள் நீங்க `வேயுறு தோளிபங்கன்` என்னும் திருப்பதிகம் பாடி, மதுரைப் பயணத்தை மேற்கொண்டார். பாடல் கேட்டு வந்த அப்பரடிகள் தானும் உடன் வருவதாகக் கூறிப் புறப்பட்டார். சம்பந்தர் அவரது வயது கருதி அவரை சோழ நாட்டுத் திருத்தலங்களை வழிபட்டு இருந்தருள வேண்டினார். அப்பரடிகளும் அதற்கு இசைந்தார்கள்.

 

திருஞானசம்பந்தர் திருமறைக்காட்டிலிருந்து அடியவர் புடைசூழச் சிவிகையில் அமர்ந்து அகத்தியான்பள்ளி, கோடிக்குழல் முதலிய தலங்களை வணங்கிச் சோழ நாட்டிலிருந்து தென் மேற்றிசை நோக்கிச் சென்று திருக் கொடுங்குன்றத்து இறைவனைப் பணிந்து மதுரை மூதூர் மருங்கணைந்தார். மங்கையர்க்கரசியார் ஞானசம்பந்தர் வருகையை அறிந்து குலச்சிறையாரை ஊர் எல்லையில் அவரை வரவேற்குமாறு பணித்திருந்தார். மதுரை எல்லையை அடைந்த ஞானசம்பந்தரைக் குலச்சிறையார் வணங்கி வரவேற்றார். பிள்ளையார் சிவிகையிலிருந்து இறங்கி, மங்கையர்கரசியாருக்கும் அமைச்சருக்கும் திருவருளால் நன்மைகள் விளைய வேண்டும் என வாழ்த்தினார். குலச்சிறையாரும், சம்பந்தப் பெருமான் எழுந்தருளப் பெற்ற பேற்றினால் என்றைக்கும் திருவருள் உடையவராவோம் என்றார். தங்கள் நாட்டில் இனி திருநீற்றொளி விளங்குவது உறுதி எனவும் முகமனுரை கூறியவர் மங்கையர்க்கரசியார் ஞானசம்பந்தரை வரவேற்கத் தன்னை அனுப்பியுள்ளதையும் தெரிவித்தவர், மதுரை மிக அண்மையிலுள்ளது என்றும் கூறினார். ஞானசம்பந்தர் மதுரையை நெருங்கிய நிலையில் `மதுரை இன்னும் எவ்வளவு தூரம் உள்ளது` எனக் கேட்க அடியவர்கள் கோபுரத்துடன் திருக்கோயிலைச் சுட்டிக்காட்டி `அதுவே திருவாலவாய்` எனக் கூறக்கேட்டு `மங்கையர்க்கரசியார் குலச்சிறையார் ஆகியோரின் பக்தி நலத்தைப் புகழ்ந்து திருப்பதிகம் அருளிச் செய்து கொண்டே ஆலவாய்த் திருக்கோயிலை அடைந்து குலச்சிறையாருடன் வலங்கொண்டு பணிந்து `நீலமாமிடற்று` எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடியருளினார்.

மங்கையர்க்கரசியார் ஆலவாய் இறைவர் திருக்கோயிலில் வழிபாடு முடித்தவர், கோயில் முன்றிலில் திருஞானசம்பந்தரைக் கண்டு அவர்தம் திருவடித் தாமரைகளில் வீழ்ந்து பணிந்தார். பிள்ளையார் தம் மலர்க்கரங்களால் அவரை எடுத்தபோது தாங்கள் செய்த தவப்பயனால் சம்பந்தப் பிள்ளையாரைத் தரிசிக்கும் பேறு பெற்றதாகக் கூறினார். ஞானசம்பந்தரும் புறச்சமயச் சூழலிலும் சிவனடித் தொண்டினை மறவாது போற்றும் அவர்களைக் காணும் பொருட்டே அங்கு வந்ததாகக் கூறி அவருக்கு விடைகொடுத்து அனுப்பியவர், திருக்கோயில் புறத்தில் சென்று குலச்சிறையார் காட்டிய திருமடம் ஒன்றில் அடியவர்களோடு எழுந்தருளியிருந்தவர்களுக்கு அரச மாதேவியாரின் கட்டளைப்படி குலச்சிறையார் நல்விருந்தளித்து உபசரித்தார்.

பகற்பொழுது கழிந்து இரவு வந்த நேரத்தில் ஞானசம்பந்தரோடு உடன் வந்த அடியவர்கள், அந்தணர்களின் வருகையை அறிந்த சமணர்கள் கண்டு முட்டு ஆயினர். மன்னனிடம் சென்று முறையிட்டவர்கள், தாங்கள் அறிந்த மந்திரத்தால் ஞானசம்பந்தர் தூங்குகின்ற மடத்திற்குத் தீவைக்கவும் அனுமதி பெற்றனர்.

ஆனால் சமணர் அனலை ஏவிய மந்திரம் ஞானசம்பந்தரின் அடியவர் ஓதும் ஐந்தெழுத்துக்கு முன்னால் பலிதம் ஆகவில்லை என்பதை அறிந்த சமணர்கள் ஞானசம்பந்தர் திருமடத்திற்குத் தீ வைத்தனர். அந்த மடத்தின் ஒரு பகுதி தீப்பற்றி எரிந்தது. அடியவர்கள் சமணர்களின் வஞ்சனையை அறிந்து ஞானசம்பந்தரிடம் முறையிட்டனர். `இத்தீ அரசன் முறை செய்யாமையால் நேர்ந்தது என்பதால் இத்தீ அவனைச் சென்று பற்றுதலே முறை என்றாலும் மங்கையர்க்கரசியாரின் மங்கல நாணுக்கு ஊறு நேராதவாறு பையச் சென்று பாண்டியனைப் பற்றுவதாகட்டும் என்று கூறி `செய்யனே திரு` என்று பதிகம் ஓதி தீயை ஏவினார்.
பொழுது விடிந்து, ஞானசம்பந்தர் தங்கியிருந்த திருமடத்தில் சமணர்கள் தீவைத்த செய்தி மதுரை மாநகர் முழுதும் பரவியதைக் கேள்வியுற்ற மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையாரும் பேரச்சம் கொண்டனர். இத்தகைய கொடியவர்கள் வாழும் நாட்டில் ஞானசம்பந்தப் பெருமானை வரவழைத்த குற்றத்துக்குத் தாங்கள் இறப்பதே சரியான தண்டனையாக இருக்கும் என்று எண்ணினர். ஆனாலும் திருமடத்தில் இடப்பட்ட தீயால் எவருக்கும் எந்தத் தீங்கும் ஏற்படாததால் மன ஆறுதல் உற்றனர். இந்நிலையில் பாண்டி மன்னனை வெப்பு நோய் பற்றி வருத்தியதை அறிந்து அச்சமுற்று அரசனைக் காணச் சென்றனர். எவ்வளவு முயன்றும் மருத்துவர்களாலும் சமண முனிவர்களாலும் அந்த வெப்பு நோயைக் குணப்படுத்த இயலவில்லை.
அப்போது அமைச்சர் குலச்சிறையார் அரசனை அணுகி, ஞானசம்பந்தர் தங்கியிருந்த திருமடத்துக்குச் சமணர்கள் இட்ட தீயே நோயாகி வந்துள்ளதால் அவர் வந்தால் இந்நோய் தீரலாம்` என்றார். பாண்டிய மன்னனும் ஞானசம்பந்தர் என்ற திருநாமத்தைக் கேட்ட உடனேயே அவருடைய அயர்வு நீங்கியதை உணர்கிறார். அதனால் அவரை அழைக்கும்படியும் கூறினார். ஆனால் சமணர்கள் அரசனிடம் சென்று அவருடைய இந்த நோய் ஞானசம்பந்தரால் தீர்க்கப் பெற்றாலும் சமணர்களாகிய தங்களாலேயே தணிந்தது எனப் பொய்யுரைக்க வேண்டினர். மன்னன் அதற்கு ஒப்புக் கொள்ளாமல் நடுநிலை பிறழ முடியாது என்று மறுத்தான்.

 

குலச்சிறையாரும் அரசியாரும் ஞானசம்பந்தரை தரிசித்துத் திருமடத்திற்குத் தீயிடப்பட்ட செயலுக்கு மிகவும் வருந்தியதோடு, வெப்பு நோயால் வாடும் மன்னன் பற்றி எடுத்துரைத்து சம்பந்தப்பெருமான் எழுந்தருளி மன்னனின் நோயைக் குணப்படுத்த வேண்டும் என்று  விண்ணப்பித்துக் கொண்டனர். ஞானசம்பந்தர் சமணர்களோடு செய்யும் வாதில் வென்று `தென்னர் கோனுக்குத் திருநீறு அணிவிப்போம்` எனக் கூறிப் புறப்பட்டுத் திருக்கோயிலை அடைந்து `காட்டு மாவது உரித்து` என்ற திருப்பதிகத்தால் பாடிப்பரவினார்.  சமணர் மேற்கொள்ளும் வாதங்களிலும் வெற்றி நல்க `வேத வேள்வியை` என்ற திருப்பதிகம் பாடி இறைவனிடம் விடை பெற்று வெளிவந்து சிவிகையில் ஏறி மன்னனின் மாளிகையை அடைந்தார்.

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.