வானவில் ரவியின் உன்னோடு நான் காட்டும் உள்ளக்கிடக்கை
முனைவர் கி. ராம்கணேஷ்
உதவிப்பேராசிரியர் – தமிழ்த்துறை,
பி. எஸ். ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர் – 641 014
முன்னுரை
உலகில் வாழும் உயிரினங்களின் வாழ்க்கை ஏதேனும் ஒரு தேடலை மையமாகக் கொண்டே செல்கிறது. தேடலுக்கான ஒவ்வொரு முயற்சியும் ஆழ்மனதின் அடியில் சிறு விதையாக விழுந்து பின்னர் விருட்சமாகி விழுதாகி நிலைபெறுகிறது. பாரதியின் வாழ்க்கையும் விடியலுக்குப் பகலவனாய் பல்வேறு கருத்துக்களை கருவாகச் சுமந்து பிரசவித்திருக்கிறது. கவிஞர் ரவியின் படைப்பும் பாரதியின் தீட்சண்யமான பார்வையோடு நம்மைப் பயணிக்க வைக்கிறது. கவிதையின் ஒவ்வொரு வார்த்தையும் அணுவைத்துளைத்து கடலைப் புகுத்துவதாய், மிகச்சிறந்த சொல்லாடல்களால் எட்டாத தொலைவில் இருக்கும் பலவற்றை நம்மிடையே ஈர்த்து வந்து பேசவைக்கிறது. இயற்றமிழும் நாடகத்தமிழும் எண்ணிலா அனுபவத்தைக் கொண்டு விளங்குகிறது. அவ்வகையில் கவிஞர் வானவில் ரவியின் ‘உன்னோடு நான்’ படைப்பை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
சொர்க்கத்தைக் காட்டுகிறேன்
“அறம், பொருள், இன்பம், வீடடைதல் நூற்பயன்” என்பது தமிழ்ச்சமூகம் கண்ட மெய்ந்நெறியாகும். வீடடைதல் சொர்க்கத்தை அடைதல் எனச் சொல்லப்படுகிறது. நான்காவது நிலையாகிய வீட்டின்பத்தை அடைதலே மாந்தருக்குரிய இறுதி நிலையாகக் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட வீடுபேற்றினை அடைவதற்கு கவிஞர் ரவி தன்னுடைய கவிதையின் வாயிலாக நல்லதொரு வழியைக் காட்டிச் செல்கிறார். சிற்றின்ப நிலையினின்று நீங்கி பேரின்ப நிலையை அடைவதற்கான் வழிமுறைகள் கவிதையில் வெளிப்படுகின்றது. கவிதை எழுதினால் மட்டும் போதாது. அதை ரசிக்க ரசிகனோ, ரசிகையோ கட்டாயம் இருக்க வேண்டும். அப்படியில்லையென்றால் கவிதை முமுமைபெறாது என்பதை ரசிகனிடம் பகிரங்கமாக வெளிப்படுத்துகிறார் கவிஞரிடம் ரசிகன் அனுபவச்சூழலில் பங்கேற்க அனுமதி கேட்கிறான். அதற்குக் கவிஞர், “அனுமதியா? உனக்கா? நீ இல்லாமல் எந்தக் கவிதையும் முழுமை பெறாது ரசிகா! என் கவிதைகளை முழுமை செய்ய வந்த முழுநிலவே என்று வரவேற்கிறேன்” என்கிறார். அனுபவத்தை ரசிகன் அடைய தன்னுடைய சொற்களோடு பயணிக்கும்படி வேண்டுகோள் விடுக்கிறார் கவிஞர்.
“என்
சொற்களுக்குள் ஏறிக்கொள்
சொர்க்கத்தைக் காட்டுகிறேன் – என்
கற்பனைப் புரவியை உன்
கண்களில் பூட்டுகிறேன்”
என்ற வார்த்தைகளில் தன்னோடு பயணிக்க வேண்டுமென்றால் சொற்களுக்குள் ஏறிக்கொள்ள வேண்டும் என்கிறார் கவிஞர். சொற்கள் புரிந்தால்தான் அதனுடைய பொருள்கள் புலப்படும். கவிஞர் தான் பெற்ற அனுபவத்தை ரசிகனுக்கு புலப்படுத்த முடியும். கவிதையும் ரசிகனும் துலாக்கோலின் இரண்டு தட்டுகள் போன்று என்பதை உணர்ந்ததன் வெளிப்பாடாகவே மேற்கண்ட கவிதையின் பொருளை உய்த்துணர முடிகின்றது.
உலகில் படைப்பது மட்டுமே இயற்கை, கவிஞரின் வேலை. அதனை அனுபவிப்பதும் பயனடைவதும் ரசிகரின் வேலை. கற்பனை என்ற ஒற்றைச்சொல் உண்மையை மேலும் பட்டைதீட்டும் மகத்தானதொரு பணியை செவ்வனே செய்கிறது. கண்ணில் கண்டதையும் காணாததையும் ஒப்பனை செய்து முன்னிறுத்துகிறது. சொற்களுக்குள் மூழ்கி அதனோடு பயணித்தால் ரசிகனால் பரவசநிலையினை அடைய முடியும். “ நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்” என்ற சுவாமி விவேகானந்தரின் கருத்துக்கு ரசிகனின் மனநிலையைச் சான்றாகக் காட்டலாம்.
மனிதர்கள் எல்லாமும் உடனே கிடைக்க வேண்டும் என்ற மனநிலையை உடையவர்களாக இருக்கின்றனர். பெரும்பாலானவர்களுக்கு இஃது சாத்தியமில்லை. பல துன்பங்களைக் கடந்த பின்னரே இன்பஊற்றை அறிய முடியும். இதைப் புரிந்து உணர்ந்தவர்கள் வெகுசிலரே. கவிஞர் இக்கருத்தை பின்வரும் வரிகளில்,
“அதோ! அந்தக்
கானல் நீரைக் கடந்து சென்றால்
கற்பகச்சோலை வரும்”
என இயல்பாக எடுத்துரைத்துள்ளார்.
கவிஞனின் மனைவி
கவிஞன் இறந்தாலும் அவனது கவிதை சாகாவரம் பெற்ற சிறப்பினை உடையது. காலங்கள் பல கடந்தாலும் உணர்வோடு ஒன்றி இருப்பது. கவிஞனது உடலுக்கு அழிவுண்டு. அவனது ஆன்மா கவிதையின் ஒவ்வொரு எழுத்திலும் சுவாசித்துக் கொண்டிருக்கிறது. கவிதை உலகில் அழிவென்ற பேச்சுக்கே இடமில்லை. தன்னால் நேரில் பார்க்க முடியாத, உணரமுடியாத ஒன்றை கவிதையின் மூலமாக உயிர்ப்படையச் செய்யும் ஆற்றல் தலைசிறந்த கவிஞனுக்கு உண்டு. இக்கருத்தை கவியரசர் கண்ணதாசனின் கவிதை வழியாக கவிஞர் ரவியால் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
“நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை”
– கவியரசர் கண்ணதாசன்.
கவிஞன் இறந்துவிட்டான். அவனது உற்றார், உறவினர் அனைவரும் கதறித்துடிக்கின்றனர். அவனது பிணத்திற்குச் சடங்குகள் செய்யவும், அவனது உடலை எடுத்துச் செல்லவும் தேவையான ஏற்பாடுகள் அனைத்தும் நடந்து கொண்டிருக்கின்றன. இழவு வீட்டிற்கு தொடர்பில்லாதவள் போல் பெண்ணொருத்தி அமர்ந்திருக்கிறாள். அவளிடமிருந்து ஒருதுளிக்கண்ணீர் கூட புலப்படவில்லை. இத்தனைக்கும் அவள் வேறு யாருமில்லை. கவிஞனின் மனைவி. அவள் கவிஞனின் கவிதைகளில் அவனை உயிர்ப்புடையவனாகப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். சலனமில்லாமல் கவிதைகளோடு வாழ்ந்துகொண்டிருக்கிறாள். அங்கிருப்பவர்கள் பிணத்தை அப்புறப்படுத்த வழி கேட்கின்றனர்.
“புதைப்பதா எரிப்பதா
அழுகிப் போகும் சடலத்தைத்தான்
அப்புறப் படுத்த வழிகேட்கின்றார்
அவள் மட்டும் அழவே இல்லை
காரணம் அவளந்தக் கவிஞனின் மனைவியாம்”
கவிஞனின் மனைவி அவன் இறந்ததாகக் கருதவில்லை என்பதைக் கவிதை பறைசாற்றியுள்ளது.
சமுதாய உணர்வு
கவிதைகள் வெறும் ரசனைக்கானது மட்டுமல்ல; வாழ்க்கைக்கானது, சமுதாயத்துக்கானது என்பதை நன்முறையில் கவிஞர். ரவி எடுத்துரைக்கிறார். “ சமுதாய உணர்வில்லாத கவிதைகள் உயிரற்றவை” என்ற பொதுவுடைமைத் தோழர் ஒருவர் சொன்ன கருத்தை மனதில் வைத்துக் கவிதையைப் புனைந்துள்ளார்.
“சோத்துப் பஞ்சம் தனியுடைமை
சாதி என்னும் பழங்கொடுமை
பாத்துப் பாத்துப் புளிச்சுப் போச்சு
பாடங்கேட்டுச் சலிச்சுப் போச்சு”
பிறப்பில் உயர்வு தாழ்வு கருதுதல் தவறு. பிறப்பில் உயர்வு தாழ்வு கருதுதல் நமது நாட்டிற்கே சிறப்பாக உண்டு என்பதைச் சான்றோர்கள் பல இடங்களில் காட்டியுள்ளனர். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற உலகப் பொதுமறையை சிந்தித்துப் பார்ப்பவர்கள் குறைந்து விட்டனர். பஞ்சம், சாதி போன்ற பெருங்கொடுமைகள் சமுதாய வேர்களைச் செல்லரித்துப் போகச்செய்யும் சாபக்கேடுகள் இத்தகைய கொடுமைகளை கவிஞர் தம் கவிதை வழி சாடியுள்ளார். “சாத்திரங்கள் பல பேசும் சழக்கர்காள் கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்” என்ற திருநாவுக்கரசர் கருத்திற்கு ஒப்பானதாகக் கவிஞரின் கவிதை அமைந்துள்ளது. “எல்லோரும் ஓர் குலம்; எல்லோரும் ஓர் இனம்” என்ற பாரதியின் கருத்தில் ஆழங்கால் பட்டவரான கவிஞரின் மனதில் ஏற்பட்ட துயரநிலையைக் கவிதை புலப்படுத்துகிறது.
“சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்”
என்ற வள்ளுவரின் கருத்தை மெய்ப்பிப்பது போல சாதியை ஒழிக்கிறேன்; பஞ்சத்தை போக்குகிறேன் என்ற சொற்கள் வலம் வருகின்றன. சொல்லியபடி நடப்பதில்லை. அந்த சலிப்புணர்வை கவிஞரின் வரிகள் வலிகளாய் உணர்த்துகின்றன.
கவிதை என்னும் கலங்கரைவிளக்கம்
கவிதை என்னும் நீருற்று, அருவியாய் கொட்டி ஆர்ப்பரிக்கும் தன்மை கொண்டது. மண்ணிலிருந்த வண்ணமே எட்டாத உயரத்தைத் தொடும் வல்லமை வாய்ந்தது. மனித மனத்தின் மகிழ்;ச்சியையும் ரணங்களையும் வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. எப்படிப்பட்ட கருப்பொருளையும் கண்ணிவைத்துப் பிடிக்கும் ஆற்றல் கொண்டது. கண்கள் உறங்கிய போதும் உறங்காத தன்மை கொண்டது. மிகப் பெரிய சுதந்திரப்போராட்டத்தில் பாரதியின் மனதில் அக்கினிக்குஞ்சாய் விழுந்து நாடெல்லாம் பரவியது. அப்படிப்பட்ட கவிதையின் சிறப்பை கவிஞர் நன்முறையில் புனைந்துள்ளார்.
“மனிதனை தெய்வமாக்கும் மகத்துவம்! நெஞ்சில்
புனிதமே உயிர்க்க வைக்கும் புண்ணியம் கவிதை! உள்ளத்
தனிமையைத் தகர்த்து வாசல் அமைப்பதும் கவிதையன்றோ
இனியுமேன் தயங்கு கின்றாய் எழுந்துவா கவிதை சொல்வோம்”
பூமிக்குள் இருக்கும் விதை போன்றது கவிதை. “விதைத்தவன் உறங்கலாம்; விதை உறங்காது” என்பதைப் போல உறங்காத தன்மை கொண்டது. கவிஞன் உறங்கவேண்டும் என்று நினைத்தாலும் கவிதை உறங்காது என்பதைக் கவிஞர் தெளிவுபட எடுத்துரைக்கிறார். உள்ளத்தில் இருக்கும் தனிமையை விரட்டி வாசல் வைப்பது போன்றது என்ற வரி மகத்துவம் கொண்டது. காலமென்னும் கடலில் தத்தளிக்கும் மனமான படகுகளுக்கு கலங்கரை விளக்கமாய் கவிதை இலங்குகிறது.
“உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்
வாக்கினிலே ஒளி உண்டாகும்”
என்பார் பாரதி. உள்ளத்தின் உண்மை கவிதை வாயிலாக உலகை நல்வழிப்படுத்தும் தன்மை கொண்டது. வோர்ட்ஸ்வொர்த் கூறுவது போன்று “ஆற்றல் நிரம்பிய சொற்கள் தாமாகப் பொங்கி வழிவதுதான் கவிதை” என்பதற்கிணங்க கவிஞர் ரவியின் கவிதை அவரது உள்ளக்கிடக்கையை வெளிக்காட்டுகிறது. “பணியுமாம் பெருமை” என்ற வள்ளுவத்தின் மெய்ம்மையை கவிஞர் ரவி நூலின் வரவேற்புரையில், “ தன்னைத் தானே ரசித்துக் கொள்வதற்காக என்னைக் கருவியாக்கி அன்னை பெய்த அமரவரிகளின் அணிவகுப்பை ‘என் கவிதைகள்’ என்று அழைக்கவும் கூசுகிறேன்” எனக் கூறுவதிலிருந்து உணர்ந்து கொள்ள முடிகிறது.
சமுதாய அவலம்
காலங்கள் பல கடந்தும் விஞ்ஞான வளர்ச்சியடைந்தும் இன்னும் மனித மனங்கள் பல மூடப்பழக்கவழக்கங்களைக் கைக்கொண்டிருக்கின்றன. பெண்ணடிமை, ஜாதகம் போன்ற செயல்பாடுகளால் பெண்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். செவ்வாய் தோஷம், கைம்பெண் போன்ற கொடுமைகள் சமூகத்தில் தலைவிரித்தாடுகின்றன.
“பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி
பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக்குள்ளே சில மூடர் – நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார்”
எனப் பாடியுள்ளார் நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலாவான பாரதியார். மூடர்கள் பெண்ணுக்கான அறிவை மட்டும் கெடுக்கவில்லை, வாழ்க்கையையும் கெடுத்துள்ளனர் என்பதை பாரதியின் மனத்தின் அடிநாதம் போல கவிஞர் ரவி தம் கவிதையில் குறிப்பிட்டுக் காட்டிள்ளார். உமா என்ற பெண்ணின் வாழ்க்கையில் நடந்த கொடுமையை,
“நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும்
நேர்மை முகப்பொலிவும்
செவ்வாய் தோஷம் அவளுக்குத் தந்த
சீர்வரிசை யன்றோ”
என்ற வரிகளின் வாயிலாக எள்ளி நகையாடுகிறார்.
“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்”
என்ற பாரதியின் பெண்ணாளுமை நிலையை சமூகம் உணர்ந்து கொள்ளவில்லை என்பதை செவ்வாய்தோஷம் என்ற ஒற்றை வார்த்தையின் வாயிலாக கவிஞர் உணர்த்தியுள்ளார். கடைசியாக பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதியை “ ஆண்மையற்ற சமுதாயத்தின் அவலப்பெருமூச்சு” எனக் குறிப்பிடுகிறார்.
“எண்ணெய்க்கு பதில் அமிலம் ஊற்றி
தீபம் ஏற்றுவதா”
என்ற கவிதைவரிகளில் சிறப்பானதொரு உவமையைக் கையாண்டு ரணமான மனநிலையை மனக்கண் முன்னே நிலைபெறச்செய்கிறார்.
பாரதிக்காக அழக்கூடாதா!
மனித வாழ்க்கையில் துன்பத்தை வெளிப்படுத்தி, ஆறுதல் தேட அழுகை சிறந்த கருவியாகப் பயன்படுகிறது. மனிதனின் முதல் மொழி அழுகை எனக் கூறினாலும் சாலப் பொருந்தும். தாய் கற்றுக் கொடுக்கும் தாய்மொழிக்கும் முன்னதாக, பிறந்த குழந்தை தன் உணர்வை வெளிப்படுத்த மூலமாக அழுகை விளங்குகிறது. அன்பின் வெளிப்பாடாகவும் அழுகை வெளிப்படுகிறது. பாரதி என்னும் வைரம் மண்ணுக்குள் புதைந்த தருணம் கவிஞர் ரவியின் மனதில் நிழலாடுகிறது.
“அவனுக்காகக் கொஞ்சம் அழக்கூடாதா
புதைமண லில்சில விதைகள் தூவப்
புறப்பட் டானே
போகும் வழியி லெல்லாம் நெஞ்சு
மிதிபட் டானே…”
இந்தியா சுதந்திரம் பெறவும், மக்களின் வாழ்க்கை நல்ல முறையில் அமையவும் பல இன்னல்களை அனுபவித்த பாரதியின் இறப்புக்காக கவிஞரின் மனம் பதைக்கிறது.
விரக்தியெனும் வேதனை
வாழ்க்கை என்பது மகிழ்ச்சி, துன்பம் என்ற இரண்டு முனைகளைக் கொண்ட படகு போன்றது. பகலும் இரவும் போல மாறி வரும் இயல்பு கொண்டது. பருவ வயதில் பல்வேறு சிந்தனைகள் ஆட்டிப்படைக்கின்றன. பொருளாதாரம் என்ற நிலையைக் கடந்து இளமைப்பருவத்துக்கேயுரிய பல்வேறு உணர்வுகள் மனதை பல வழிகளில் செலுத்தி விடுகின்றது. இளமையில் காதல் என்னும் பட்டாம்பூச்சி சிறகடிக்கும் நேரத்தில் பல்வேறு எண்ணங்கள் உள்ளத்தில் ஏற்படுகின்றன என்பதை கவிஞர் ரவி தனக்கேயுரிய இரசனையோடு கவிதையில் கொடுத்திருக்கிறார்.
“உள்ளக் கதவை மெல்லத் திறந்துநான்
உற்றுப் பார்க்கிறேன்
உருத்தெரி யாமல் நான்தான் அங்கே
உதிர்ந்து கிடக்கிறேன்”
மனதைத் திறந்து பார்த்தால் மட்டுமே நம்முடைய உரு உதிர்ந்து கிடப்பதை உணர முடியும். காதல் வரும் போது ஒவ்வொருவருக்குள்ளும் ஏற்படும் உணர்வு அலாதியானது. காதலாகிய காற்று வரும் போது சிலநேரங்களில் படபடக்கும், சிலநேரங்களில் மனம் சிலிர்க்கும். காதல் விலகும் போது மரணமாகிய பெருவலி மூச்சைப் பிடிக்கும். வாழ்க்கையே வெறுத்து விடும். “ வாழ்வாவது மாயமிது ; மண்ணாவது திண்ணம்” என்ற சுந்தரமூர்த்தி நாயனாரின் மனநிலைக்கு உள்ளம் வந்து விடுகிறது.
“வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை”
என்ற கவிஞர் கண்ணதாசன் வரிகளை காதல் உள்ளம் ஏற்பதில்லை. விரக்தியும் நம்பி;க்கையும் மாறி மாறி வந்து நிற்கும். இத்துடன் வாழ்க்கை முடிந்து விட்டது என்ற மனநிலை ஏற்பட்டு விடும். அதைக் கவிஞர் ரவி,
“தூள்தூ ளான பாறைத் துகள்களாய்த்
துடி துடிக்கிறேன்
நாள்ஒவ் வொன்றும் நானே பலவாய்ப்
பிரிந்து தேய்கிறேன்”
என்ற வரிகளில் குறிப்பிடுகிறார். வாழ்வே மாயம் என்ற நிலையை காதல் வலி உணர்த்துகிறது.
ஞாபகத்தை சுமக்க வேண்டுமா?
ஞாபகம் என்பது மிகச்சிறந்த சக்தியாகவே பெரும்பாலானவர்களால் சொல்லப்படுகிறது. ஆனால், ஞாபகமானது துன்பத்தை நினைவிற்குக் கொண்டு வருவதில் முதலிடம் வகிக்கிறது. மறதி என்பது சாபம் அல்ல; வரம் என்பதை காதலித்துத் தோற்றவர்களிடம் கேட்டுப் பார்த்தால் புலனாகும். வாழ்வின் பல்வேறு சூழல்களில் துன்பமான ஞாபகங்கள் எதிர்காலச் சிந்தனைச் சிறகுகளை வெட்டி வீசிவிடுகின்றன.
“காதல் என்ற கானகத்தில்
கால்க டுக்க ஓடினேன்
வார்த்தை நூறு கோத்து வைர
மாலை என்று சூடினேன்”
என்ற வரிகளின் வாயிலாக காதலால் ஏற்பட்ட வலியினை கவிஞர் ரவி புலனுணர்வின் வழி வெளிப்படுத்துகிறது. காதல் வெற்றியென்றால், அதைப் போன்ற சொர்க்கம் இல்லை ; தோல்வியென்றால் அதைப் போன்ற பாழ் நரகம் இல்லை எனக் கூறிவிடலாம்.
மகாகவி பாரதியாரும் காதலினால் ஏற்பட்ட வலியை,
“காதல் காதல் காதல்
காதல் போயின்
சாதல் சாதல் சாதல்”
இவ்விதம் குறிப்பிட்டுச் சென்றிருக்கிறார்.
காதலைப் பற்றி வேறொரிடத்தில்,
“விழிகளாலே பாலமிட்டு நம்
உணர்வுக ளைப் பரி மாறிக் கொள்வோம்
சொற்க ளாலே முத்த மிட்டுச்
சொப்ப னத்தேர் ஏறிச் செல்வோம்”
என்ற வரிகளில் காதல் உணர்வைப் போன்றது; உயிரைப் போன்றது எனத் தெளிவுபடுத்துகிறார்.
எதிர்காலத்தை நோக்கி
இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற மூன்று காலங்கள் சொல்லப்பட்டாலும் ஒரு கவிஞனின் பார்வை எதிர்காலத்தை நோக்கியதாக இருக்கும். ஏதிர்காலத்தைப் படைக்கும் படைப்பாளனாக கவிஞன் விளங்குகிறான். மகாகவி பாரதியாரின் கவிதைகளில் இதனைக் காணலாம்.
“ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று”
என்ற உன்னத வரிகள் சுதந்திரம் பெறுவதற்கு முன்பே பாடப்பட்ட கவிஞரின் சிந்தனை. பாரதி மறைந்து விட்டாலும் அவரது சிந்தனை நிலைத்துவிட்டது; நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து விட்டது. பாரதியின் மேற்கண்ட பாடல் இந்தியா முழுவதும் ஒலித்தது. கவிஞன் எதிர்காலத்தைக் கணிக்கும் காலக்கணிதன் என்பதை உய்த்துணர முடிகிறது.
கவிஞர் ரவியின் சிந்தனையிலும் எதிர்காலச் சிந்தனையை அறியமுடிகிறது. கவிஞர் ரசிகனிடத்தில் பேசுமிடத்தில் , “ இன்றைய புவிக்காலத்திலிருந்து பல ஆண்டுகள் முன்னேறி எதிர்காலத்துக்கு வந்து விட்டோம்” எனக் கூறுவதிலிருந்து அறிய முடிகிறது. எதிர்காலம் என்பது நம் தேவையை, எதிர்பார்ப்பை நிறைவேற்றச் செய்கின்ற ஓரிடமாக அமைகிறது. கற்பனையும் சில நேரங்களில் எதிர்காலத்தை உருவாக்குகிறது.
“ நெருங்கி விட்டான் நிமிர்கிறேன் – அட
எத்தனை முறையிவனைச் சந்தித் துள்ளேன்
எத்தனை முறையிவன்
என்னைத் தேடி வந்துள்ளான்
என்னைக் கூட்டிச் சென்றுள்ளான்
ஒருமுறை கூடப் பேசிய தில்லை
ஊர்பேர் எதையும் கூறியதில்லை”
என்ற வரிகளில் கவிஞர் ரவியுடன் முகம் தெரியாத ஒரு மனிதர் பயணிப்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. கவிஞருக்கென ஓருலகம் உண்டு. அங்கு கவிஞரே முடிசூடா மன்னர் என்பதை கவிதைகளில் காண முடிகிறது.
முடிவுரை
கவிஞன் என்பவன் சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவன். எதிர்காலத்தை படைக்கும் வல்லமை கொண்டவன் என்பதைக் கவிஞர் ரவியின் வரிகளின் வாயிலாக உய்த்துணர முடிகிறது. கவிதையின் நோக்கம் இரசிப்புத் தன்மையை மட்டும் எதிர்நோக்கியதல்ல. அஃது தேவையை ஒட்டியது என்பதைக் கவிஞர் பலவிடங்களில் பறை சாற்றியுள்ளார்.
குறிப்புதவி நூல்கள்
- திருக்குறள்
- பாரதியார் கவிதைகள்
- தேவாரம்
-
கண்ணதாசன் கவிதைகள்
