63 நாயன்மார்கள் வரலாறு – 27. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் (4)

சண்பை வேந்தர் முன்பு சென்று பணிந்த மங்கையர்கரசியாரையும், குலச்சிறையாரையும் தம் மலர்க்கரங்களால் எடுத்தருளியவர், அவர்களுக்கு அஞ்சத் தேவையில்லை என்றும் உணர்விலா சமணர்களை அவர்கள் கண்டு மகிழும்படி வென்று விதிப்படி பாண்டிய வேந்தனை வெண்ணீறு அணிவிப்பான் எனக் கூறியருளினார். அதன்படி ஞானசம்பந்தர் எம்பெருமான் திருவருள் பெற்று பாண்டிமாதேவியின் அழைப்பினை ஏற்று அரண்மனை சென்றடைந்தார். ஞானப்பிள்ளையாரின் திருவடியைத் தொழுது வரவேற்றவர்கள் மன்னன் படுத்துக்கொண்டிருந்த அறைக்கு அழைத்துச் சென்று அவர் அருகில் இடப்பெற்ற பொற்றவிசில் எழுந்தருளச் செய்தனர். மன்னன் ஞானசம்பந்தரைத் தரிசித்த அளவில் நோய் சிறிது தணியப் பெற்றவனாய் மகிழ்ச்சியுடன் அவரோடு உரையாடும் முறையில் அவர்தம் ஊர் குறித்துக் கேட்டவரிடம் `பிரமனூர்` என்ற திருப்பதிகத்தால் விடையளித்தார்.

 

சமணர்கள் அச்சமுற்றாலும் அதனை வெளிக்காட்டாமல் மறைத்துக் கொண்டு சம்பந்தரை நோக்கி `உங்கள் உறுதிப் பொருளைக் கூறி வாது செய்து வென்றவர்கள் மதத்தை ஏற்போம்` எனக்கூறினர். `மன்னனும், வாது செய்வதெல்லாம் வேண்டாம் என்றும் தமது உடற்பிணியை யார் இறையருளால் நீக்குகிறார்களோ அவர்கள் பக்கமே தாம் சாரப்போவதாகவும், நோய் தணிந்த பிறகு வாது செய்யலாம் என்றும் கூறினார். ஞானசம்பந்தர் அரசமா தேவியாரைப் பார்த்து `அஞ்சற்க; என்னைப் பாலகன் எனக் கருத வேண்டா; ஆலவாயரன் துணை நிற்க வாதில் வெல்வோம்` என்றார். அது கேட்ட சமணர்கள் மன்னன் உடலில் இடப்பாகம் பற்றிய நோயை தாங்கள் குணப்படுத்துகிறோம் என்றும் வலது பக்கம் அவர் தீர்க்கட்டும் என்று கூறி குண்டிகை நீரைத் தெளித்து பீலி கொண்டு உடலைத் தடவிய அளவில் அது தீயில் பட்ட நீராகக் கொதிக்க நோய் மேலும் கூடியது. ஆனால் ஞானசம்பந்தர் `மந்திரமாவது நீறு` என்ற திருப்பதிகம் பாடி, தம் திருக்கரத்தால் வலப்பாகத்தில் திருநீற்றைத் தடவிய அளவில் நோய் தணிந்து இடப்பாகத்தே மூண்டெழக் கண்ட மன்னன் அப்பாகத்தையும் தாங்களே தீர்த்தருள வேண்டுமென வேண்டினான். ஞானசம்பந்தர் இடப்பாகத்திலும் திருநீறு பூசிய அளவில் நோய் தணிந்தது.

 

மந்திர மாவது நீறு

  வானவர் மேலது நீறு

சுந்தர மாவது நீறு

  துதிக்கப் படுவது நீறு

தந்திர மாவது நீறு

  சமயத்தி லுள்ளது நீறு

செந்துவர் வாயுமை பங்கன்

  திருஆல வாயான் திருநீறே.

 

ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவா யான்திரு நீற்றைப் போற்றிப்

புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்

தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்

சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே!!!

பாண்டிய மன்னன் முற்றாகக் குணமுற்றுத் தெளிந்து எழுந்து ஞானசம்பந்தரைப் பணிந்து அவர்தம் திருவடிகளில் விழுந்து வணங்கிப் போற்றினான்.

 

பாண்டியனது வெப்பு நோயைப் போக்க இயலாத சமணர்கள் தருக்க வாதம் புரிவதை விடுத்துத் தீயிலும் நீரிலும் அவரை வெல்லலாம் என்று மனக்கணக்குப் போட்டனர். திருஞானசம்பந்தர் `இனி உங்கள் வாய்மையே பேசுமின்` எனப் பணித்தார். சமணர்கள் `இருதிறத்தாரும் தாங்கள் கண்ட பேருண்மையை ஏட்டில் எழுதி நெருப்பில் இட்டால் வேகாத ஏடு எவருடையதோ அவர்கள் சமயமே மெய்ச்சமயம் எனக் கொள்வோம்` என்றனர். ஞானசம்பந்தரும் அதற்கிசைந்தார். பாண்டிய மன்னனும் தீக்குண்டம் அமைக்கக் கட்டளையிட்டான்.
அத் தீ கொழுந்து விட்டு எரிந்தது. சிவபெருமானே மெய்ப்பொருள் என உணர்ந்த ஞானசம்பந்தர் தாம் அதுவரை  அருளிய திருப்பதிகச் சுவடியைக் கொணரச் செய்து வழிபட்டு அதனை விரித்தருளினார். `போகமார்த்த பூண்முலையாள்` என்ற திருநள்ளாற்றுத் திருப்பதிகம் உதயமாயிற்று. ஞானசம்பந்தர் திருநள்ளாற்று இறைவனைப் போற்றி அவ்வேட்டினை எடுத்து மெய்ப்பொருளாகும் இவ்வுலக மாந்தருக்கு அறிவுறுத்தும் வகை இவ்வேடு அனலிடை வேகாதிருக்க வேண்டி `தளிரிள வளரொளி` எனத்தொடங்கும் திருப்பதிகம் அருளி எடுத்த ஏட்டினைத் தீயில் இட்டார். அவ்வேடு கொழுந்து விட்டு எரியும் தீயில் வேகாது பசுமையாய்க் காட்சியளித்தது. சமணர்கள் தங்கள் நூற் பொருள் எழுதப் பெற்றதொரு ஏட்டினைத் தீயில் இட்டனர். அது எரிந்து கரிந்து சாம்பலாயிற்று. ஞானசம்பந்தர் குறித்த நேரம் வரை காத்திருந்து தான் இட்ட ஏட்டை யாவரும் காண எடுத்தருளினார். அது தீயில் இட்டும் முன்னையினும் பசுமையாக இருந்த காரணத்தால் பச்சைத் திருப்பதிகம் எனப் போற்றப் பெறுவதாயிற்று.

 

சமணர்கள் தங்கள் ஏடு எரிந்து சாம்பலானதைக் கண்டு நகைத்த மன்னனை நோக்கி `ஓர் வாதினை மும்முறை செய்து உண்மை காணுதலே முறையாகும். ஆதலால் இரு தரப்பினரும் தத்தம் சமய உண்மைகள் எழுதிய ஏட்டினை ஆற்றில் விட்டால் எவருடைய ஏடு நீரில் அடித்துச் செல்லாமல் எதிர்த்து வருகிறதோ அவர்கள் சமயமே மெய்ச்சமயம் எனக் கொள்ளலாம்` என்றனர். அப்பொழுது அமைச்சர் குலச்சிறையார் இதிலும் தோற்றவர்களுக்கு ஏற்படும் இழப்பு என்ன என்பதையும் உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டார். அது கேட்ட சமணர்கள் இவ்வாதில் தோல்வியுற்றோமானால் எங்களை இவ் வேந்தன் கழுவில் ஏற்றட்டும் என்றனர். மன்னனும் அவர்கள் ஆத்திரத்தில் அறிவிழந்துப் பேசிவிட்டதாகக் கூறி அதற்கு உடன் பட்டான்.

ஞானசம்பந்தரும் சமண முனிவர்களும் வைகையாற்றின் கரையை அடைந்தனர் முதலில் சமணர்கள் தங்கள் சமய உண்மையாகக் கூறும் `அதி நாதி` என வடமொழி மந்திரத்தை எழுதி ஆற்றில் இட்டனர். அவ்வேடு ஆற்று நீரோட்டத்தை எதிர்க்கும் ஆற்றலின்றி நீர் ஓடும் நெறியிலேயே கடலை நோக்கி விரைந்தோடிற்று. அதனைக் கண்ட சமணர்கள் நீவிரும் உமது சமய உண்மையை எழுதி நீரில் இடுக எனக்கூறினர். ஞான சம்பந்தர், தம் திருக்கரத்தால்,

வாழ்க அந்தணர்

  வானவர் ஆனினம்

வீழ்க தண்புனல்

  வேந்தனும் ஓங்குக

ஆழ்க தீயதெல்

  லாம்அரன் நாமமே

சூழ்க வையக

  முந்துயர் தீர்கவே

 

என்னும் திருப்பதிகத்தை எழுதி அதனை வைகையாற்றில் இட்டனர். வைகை ஆற்று வெள்ளத்தைக் கிழித்துக் கொண்டு எதிர் ஏறிச் சென்றது. குலச்சிறையாரும் அந்த ஏட்டினையொட்டி குதிரை மீது ஏறிச் சென்றார். இத்திருப்பாட்டில் `வேந்தனும் ஓங்குக` என ஞானசம்பந்தர் அருளிச் செய்ததால் பாண்டியன் கூன் நிமிர்ந்து நின்றசீர் நெடுமாறன் ஆக மாறினான். ஏடு எதிரேறிச் செல்வதைக் கண்ட பிள்ளையார் `வண்ணியும் மத்தடும் மதிபொதி சடையினன்` என்ற திருப்பதிகத்தை அருளிச் செய்தார். அவ்வேடு வைகையின் வடகரையில் அமைந்த ஒரு கோயிலுக்கு அருகே சென்று சேர்ந்தது. அதனை குலச்சிறையார் வணங்கி எடுத்து வந்தவர், நின்றசீர் நெடுமாறனிடமும், மங்கையர்கரசியாரிடமும் காட்டினார். மக்களும் இறைவன் திருவருளை எண்ணி வியந்துப் போற்றினர்.  ஏடு நின்ற இத்திருக்கோயில் இன்றும் திருவேடகம் என்று வழங்கப்படுகிறது.
வாதிலே தோற்ற சமணர்கள் தாங்கள் செய்த சபதத்தின்படிக் கழுவேறினர். பாண்டிய மன்னன் கட்டளைப்படி குலச்சிறையாரும் அதை நிறைவேற்றினார். ஞானசம்பந்தர் பாண்டிய மன்னனுடன் ஆலவாய் இறைவர் திருக் கோயில் சென்று `வீடலால வாயிலாய்` என்ற திருப்பதிகம் பாடி வழிபட்டுத் தம் திருமடத்துக்கு எழுந்தருளினார்.

ஆளுடைய பிள்ளையார் மதுரையில் சில நாள் தங்கியிருந்து ஆலவாய் அப்பனைப் பரவினார். பின்னர் பாண்டிய மன்னன், மங்கையர்க்கரசியார், குலச்சிறையார் ஆகியோரோடு திருப்பரங்குன்றம், திருவாப்பனூர், திருப்புத்தூர், திருக்கானப்பேர், திருச்சுழியல், குற்றாலம், திருநெல்வேலி முதலிய தலங்களை வழிபட்டு திருஇராமேச்சுரம் சென்றடைந்தார். திருமால் இராமாவதாரத்தில் சிவ வழிபாடு செய்த இராமேசுவரத்தை அடைந்து அங்கு இராமநாதரைத் தரிசித்து அங்கிருந்தபடியே ஈழத்தலங்களாகிய திருக்கேதீச்சரம், திருக்கோணமலை ஆகிய தலங்களை நினைந்து போற்றினார். இராமேச்சுரத்திலிருந்து ஆடானை, புனல்வாயில், மணமேற்குடி ஆகியவற்றை வழிபட்டுப் பாண்டிய மன்னன் அரசியார் அமைச்சர் முதலானோர்க்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டுச் சோழநாடு புகுந்து பாதாளீச்சரம், திருக்களர் முதலான தலங்களை வழிபட்டுக் கொண்டு திருக்கொள்ளம்பூதூர் வந்தடைந்தார்.

 

பாண்டிய நாட்டிலிருந்து புறப்பட்டுச் சோழ நாட்டையடைந்த பிள்ளையார் திருக்களர், திருப்பாதாளீச்சுரம் முதலிய தலங்களையும் வழிபட்டு முள்ளிவாய்க்கரை என்னும் ஊரைச் சேர்ந்தார். அங்கு முள்ளியாறு எனும் ஆறு உள்ளது. ஆற்றின் மறுகரையில் கொள்ளம்பூதூர் என்னும் திருத்தலம் உள்ளது. அங்கு சென்று பரமனைப் பாடும் அவாவினால் சம்பந்தர் தம் அடியார் குழாத்துடன் முள்ளியாற்றின் கரையை அடைந்தார். முள்ளியாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. மறுகரைக்கு ஏற்றிச் செல்லும் ஓடக்காரர்கள் வெள்ளமிகுதி கண்டு ஓடத்தைக் கரையில் கட்டி விட்டுப் போயிருந்தனர். ஞானசம்பந்தர் ஓர் ஓடத்தை அவிழ்க்கச் செய்து அடியவர்களுடன் தானும் ஏறிக்கொண்டு கொள்ளம்பூதூர் இறைவனைப் போற்றி, `கொட்டமே கமழும்` என்ற திருப்பதிகத்தை இசைத்துத் தன் நாவன்மையே கோலாகக் கொண்டு ஓடத்தைச் செலுத்தினார். ஆறாவது பாடல் பாடும்போது ஓடம் கரையை அடைந்தது. ஞானசம்பந்தர் கொள்ளம்பூதூர் ஆலயத்தை அடைந்து எடுத்த திருப்பதிகத்தின் எஞ்சிய பாடல்களால் இறைவனைப் பரவினார். திருநள்ளாறு அடைந்து மதுரை மாநகருக்கு வந்து அனல் வாதத்தில் வெற்றியருளிய திருநள்ளாற்று இறைவன் மீது `பாடகமெல்லடி` என்ற பதிகத்தால் போற்றித் தன் பயணத்தைத் தொடர்ந்தார். பின்னர்த் திருக்கடவூர் சென்று வழிபட்டு அப்பர் எங்குள்ளார் எனக் கேட்டு அவர் திருப்பூந்துருத்தியில் இருக்கும் செய்தி அறிந்து அவரைக் காணத் திருப்பூந்துருத்தி வந்து அடைந்தார்.

ஞானசம்பந்தர் வருகையை அறிந்த அப்பர், திருப்பூந்துருத்தி எல்லைக்குமுன் சென்று அடியவர் கூட்டத்தினரோடு அவர் ஏறி வரும் சிவிகையைத் தானும் ஒருவராய்ச் சுமந்து வருவாராயினார்.
திருஞானசம்பந்தர் திருப்பூந்துருத்தி எல்லையை அடைந்தபோது அப்பர் வரவைக் காணாது `அப்பர் எங்குற்றார்?` என அடியவர்களை வினவினார். அவ்வுரை கேட்ட அப்பர் `உம் அடியேன் உம் அடிகள் தாங்கி வரும் பெருவாழ்வு வந்து எய்தப் பெற்று இங்குற்றேன்` என்றார். ஞானசம்பந்தர் விரைந்து சிவிகையிலிருந்து இறங்கி `இவ்வாறு செய்தருள்வது தகுமா?` எனக் கூறி அப்பரை வணங்கினார். அப்பரும் உடன் வணங்கினார். பின்னர் இருவரும் ஆலயம் சென்று இறைவனை வணங்கினர். ஞானசம்பந்தர் அப்பர் திருமடத்தில் அவரோடு உடன் உறைந்து பாண்டி நாட்டில் நடந்தவைகளை விவரித்தார். அப்பர் `திருநெறித் தொண்டெனும் வான்பயிர் தழைக்கச் சூழும் பெருவேலி ஆயினீர்` எனப் போற்றினார். பாண்டி நாட்டில் சைவம் தழைக்கத் தொடங்கியதை அறிந்த அப்பர் அந்நாடு செல்லும் விருப்புடையவரானார். அப்பர் தொண்டை நாட்டின் சிறப்பைக் கூறக் கேட்ட ஞானசம்பந்தர் தொண்டை நாடு செல்ல விரும்பினார். இருவரும் ஒருவரையொருவர் பிரிந்து பயணம் மேற்கொண்டனர். ஞானசம்பந்தர் காவிரி வடகரையை அடைந்து நெய்த்தானம் ஐயாறு பழனம் முதலிய தலங்களை வணங்கி, சீர்காழிப் பதியை அடைந்து தோணிபுரப் பெருமானைப் போற்றித் தம் திருமாளிகையை அடைந்தார்.

தொண்டைநாட்டில் உலா

தொண்டை நாட்டில் திருப்பயணம் மேற்கொண்ட ஞானசம்பந்தர் கச்சித்திருஏகம்பப் பெருமானை வழிபடும் விருப்பத்துடன் சீர்காழியிலிருந்து புறப்பட்டுத் தில்லை சென்று ஆனந்தக் கூத்தனைப் பணிந்து திருத்திணைநகர், திருமாணிக்குழி, திருப்பாதிரிப்புலியூர், திருவடுகூர், திருவக்கரை, திருஇரும்பை, மாகாளம் முதலிய தலங்களை வழிபட்டு அப்பரடிகட்கு அருள் செய்த, தற்போது பண்ருட்டி என வழங்கும் ஊரிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள அழகிய ஆலயமான திருவதிகை வீரட்டானத்தைச் சென்றடைந்தார். அங்கு வீரட்டானத்து இறையைத் தொழுது போற்றியவர், பின்னர் கோவலூர் அறையணி நல்லூர் ஆகிய தலங்களை வணங்கி அண்ணாமலை சென்றடைந்தார். ‘உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய நடுவன்’ எனும் திருப்பதிக இசை பாடி திருவோத்தூர் எனும் திருத்தலத்தை அடைந்து இறைவனைப் போற்றினார். திருவோத்தூர் தற்போது செய்யாறு திருவத்தூர் என வழங்கப்படுகிறது.

 

திருவோத்தூரில் சிவனடியார் ஒருவர் இருந்தார். அவர் ஆலயத்தருகில் அன்பர்கள் வேனிற்காலத்தே பருகுவதற்காகப் பனை மரங்கள் நட்டு நீர் வார்த்து வளர்த்து வந்தார். அடியவர்க்கெனத் தான் வளர்த்த, வானுற ஓங்கி வளர்ந்த அப்பனை மரங்கள் அனைத்தும் ஆண்பனைகளாக இருந்தன. இதனைக் கண்ணுற்ற சமணர்கள் அவ்வடியாரைக் கேலி செய்து உன் சிவனருளால் ஆண் பனையெல்லாம் பெண் பனையாக மாறி காய்க்க வைக்க முடியுமா? என ஏளனமாகக் கேட்டதையும் ஞானசம்பந்தரிடம் கூற அவர் ஆலயம் சென்று வணங்கி, `பூத்தேர்ந்தாயன` என்னும் பதிகம் பாடிய அளவில்,

 

குரும்பை யாண்பனை யீன்குலை யோத்தூர்    

    அரும்பு கொன்றை யடிகளைப்    

    பெரும்பு கலியுள் ஞானசம் பந்தன்சொல்    

    விரும்பு வார்வினை வீடே.    

என முடிக்கும்போது ஆண்பனைகளனைத்தும் பெண் பனைகளாய்க் குலையீன்றதைக் கண்ட அடியவர் அதிசயித்தனர். சமணர்கள் பிழை பொறுக்க வேண்டியதோடு சைவ சமயத்தின் சிறப்பினை அறிந்து சைவ சமயத்திற்கு மதம் மாறி ஞானசம்பந்தரைப் போற்றினர்.

 

திருவோத்தூரிலிருந்து புறப்பட்டு ஞானசம்பந்தர் திருமாகறல் குரங்கணில் முட்டம் ஆகிய தலங்களை வணங்கிக் காஞ்சிபுரம் சென்றடைந்தார். கச்சி ஏகம்பம், காமகோட்டம் ஆகிய ஆலயங்களை வணங்கிக் கொண்டு அத்தலத்தின் அருகில் விளங்கும், ஆலயங்களைப் போற்றி, காரைக்காலம்மையார் முத்திப் பேறு பெற்றருளிய திருவாலங்காட்டை வணங்கிப் போற்ற எண்ணினார். அம்மையார் தலையால் நடந்து வந்த அத்தலத்தை மிதித்தற்கு அஞ்சி அத்தலத்தின் அருகில் உள்ளதொரு ஊரில் அன்றிரவு துயில் கொண்டார். ஆலங்காட்டு இறைவர் அவர் கனவில் தோன்றி நம்மைப் பாடுதற்கு மறந்தனையோ என்ன உடனெழுந்து `துஞ்சவருவாரும்` எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடிப் போற்றினார். பின்னர் அவ்வூரை விட்டகன்று பாசூர் வெண்பாக்கம் காரிகரை ஆகிய தலங்களை வணங்கிக் கொண்டு காளத்தியை அடைந்தார். கண்ணப்பரின் பக்தித் திறம் போற்றி திருக்காளத்தி இறைவரைப் பணிந்து அங்குள்ள திருமடம் ஒன்றில் பலநாள் தங்கிப் பரவினார். அங்கிருந்தே வடதிசையிலுள்ள திருக்கயிலாயம், கேதாரம், திருப்பருப்பதம் முதலிய தலங்களைப் போற்றிப் பதிகங்கள் அருளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருவேற்காடு பணிந்து திருவொற்றியூரை வந்தடைந்தார்.

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.