அரவிந்தன் பற்றிய ஜெயமோகன் கருத்துகள் – எனது பார்வை
அண்ணாகண்ணன்
அரவிந்தன், அஞ்சலி, சர்ச்சை என்ற தலைப்பில் ஜெயமோகன் எழுதிய பதிவைப் படித்தேன்.
‘கீழ்மையே கீழ்களின் ஆசாரம்’ என்றார் ஜெயகாந்தன் என ஜெயமோகன் எழுதியிருக்கிறார். அச்சமே கீழ்களது ஆசாரம் என்று எழுதியவர், திருவள்ளுவர். ஜெயகாந்தன் இவ்வாறு ஏதும் எழுதியிருக்கிறாரா என்று தெரியவில்லை.
/அரவிந்தனுக்கு தன் அடிப்படைச் சூழலில் இருந்து உருவான ஓர் இயல்பு இருந்தது என இன்று நினைக்கிறேன். அது ‘அன்றன்றைய முதலாளிகளுக்கு விசுவாசமாக நயந்து இருத்தல்’ என வரையறுக்கத்தக்கது./
இவ்வாறு நயந்து இருக்க வேண்டிய தேவை, இன்று பெரும்பாலோரிடம் இருக்கிறது. இது, படிநிலை அமைப்பினைக் கொண்டது. படிநிலையில் கீழே உள்ளோர், மேலே உள்ளோரிடம் அப்படித்தான் இருந்தாக வேண்டும். இல்லையென்றால் அவர்களால் அங்கே பணியாற்ற முடியாது, வாழவும் முடியாது.
காவல் துறையில், அரசு அலுவலகங்களில், கட்சி அதிகார அடுக்குகளில். கல்வி நிலையங்களில், ஆன்மீக நிறுவனங்களில், ஊடகத் துறையில், குடும்பங்களில் இப்படி எல்லா இடங்களிலும் இதை நேரடியாகக் காணலாம். இது தனி நபர்களின் கீழ்மை இல்லை. இந்தச் சமுதாயத்தின் அவல நிலை. எங்கெங்கும் கிளைபரப்பி, வேர் ஊன்றி இருக்கும் அதிகாரத்தின் கோர முகம்.
தங்களுக்கென உச்சமான, தனித்த செல்வாக்கு, புகழ், ஆற்றல் கொண்டோர் மட்டுமே சற்றே சக நிலையில் உரையாடலாம். ஜெயமோகன், தான் பணியாற்றிய திரைப்படங்களில் இயக்குநர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களிடம் நயந்து இருக்கவில்லையா? வைரமுத்துக்கு வாழ்த்துக் கூறும் கமல் ஹாசனை வாழும் தமிழ் நிகழ்வின் தூதுவராக அறிவிக்கவில்லையா?
/அவர் இந்தியா டுடேயில் அன்றைய நண்பர் மகாதேவன் வழியாக ஆசிரியராகச் சேர்ந்தார்/ என முந்தைய அஞ்சலிக் குறிப்பில் எழுதியிருந்தார்.
இரண்டாவது குறிப்பில் /அவருக்கு இந்தியா டுடே இதழில் வேலை கிடைப்பதற்காக அவரை அழைத்துச்சென்று, ஆர்.எஸ்.எஸ். மேலிடத்தில் இருந்தவர்களை சந்தித்து அவர் தகுதியை விளக்கி வாய்ப்பு வாங்கி கொடுத்தவனும் நான்தான். ஏனென்றால் அன்று நான் முக்கியமானவனாக இருந்தேன்/ என எழுதியுள்ளார்.
/அரவிந்தனுக்கு வருகிறேன். என் இயல்பால் என்னால் உண்மையாக மட்டுமே வெளிப்பட முடியும். நான் ஒன்றை எழுதிய பின்னரும்கூட அதில் உண்மையாக வெளிப்பட்டுள்ளேனா என பலமுறை யோசிப்பேன். மிகை என்று கொஞ்ச ஐயம் வந்தால்கூட சமநிலைக்கு முயல்வேன். அரவிந்தன் பற்றிய என் அஞ்சலிக்குறிப்பு கூட அவ்வாறான உண்மையான உணர்வின் வெளிப்பாடே./
இந்த ஒரே பத்தியில், மும்முறை உண்மையாக என எழுதுகிறார். ஆனால், அரவிந்தன், இந்தியா டுடே இதழில் சேர்ந்ததில் ஏன் முன்னுக்குப் பின் முரண்பாடு? இவற்றில் எது உண்மை?
/உண்மையில் அன்பின் பொருட்டு சொல்லப்பட்ட தகுதிகள் அவை, அன்று அரவிந்தன் எதையும் எழுதி நிரூபித்தவர் அல்ல. மிக இளைஞர். அவருக்கு நான் உதவியது அவர் அந்த உடற்குறையுடன் எடைமிக்க மூட்டையுடன் பேருந்தில் ஏறுவதைக் கண்டு அடைந்த மனவருத்தம் காரணமாகவே. அன்று அவருடன் சென்று அந்த காகித மூட்டைகளை நான் பேருந்தில் ஏற்ற உதவியிருக்கிறேன்./
ஜெயமோகன் எழுதியதில் மனம் வருத்தும் பகுதி இது. அவருக்குத் தகுதி என்று ஏதும் இல்லை. பரிவு, இரக்கம், பச்சாத்தாபம் ஆகியவற்றின் அடிப்படையில் தான் பரிந்துரைத்தேன். வாய்ப்பு வாங்கிக் கொடுத்தேன் என்கிறார். /இதைக் கடந்து அவரை அந்த இளைஞராக மட்டுமே நினைவில் நிறுத்திக்கொள்வேன்/ என எழுதுகிறார். எழுதி எதையும் நிறுவாத 19 வயது இளைஞரை நினைவில் ஏன் வைக்க வேண்டும்? அன்று அரவிந்தன், ஜெயமோகனை மதித்து அவரை வந்து சந்தித்தார். அப்போது அவர் கடுமையான உடலுழைப்பினை முன்வைத்தார். அவரைப் பார்த்து ஜெயமோகன் பரிதாபப்பட்டார். அதன்பின் அரவிந்தன் எழுதத் தொடங்கிய பிறகு, பேசத் தொடங்கிய பிறகு, இருவருக்குமான விலகல் ஏற்பட்டது.
அடிப்படையில் ஜெயமோகன், இலக்கியத்தில் தன்னை வியந்து பார்ப்பவர்களையே, ரசிப்பவர்களையே, கொண்டாடுபவர்களையே விரும்புகிறார். விமர்சகர்களைத் தூற்றுகிறார். அவர்கள் சொல்வதில் உண்மை இருக்கிறதா என்று ஆழ்ந்து பார்ப்பதில்லை. என்னை அவர்கள் எங்கே வைத்திருக்கிறார்கள், நான் தாக்கப்பட்ட போது அவர்கள் என்ன செய்தார்கள், நான் நடத்திய நிகழ்ச்சி குறித்து அவர்கள் என்ன பேசினார்கள்… இவை அனைத்தின் பின்னணியில் இருப்பது என்ன? நான் என்பதே ஜெயமோகன் மனத்தில் ஓங்கி நிற்கிறது. தன்னை மையப்படுத்தியே அவர் எல்லாவற்றையும் பார்க்கிறார்.
/இந்தியா டுடேயில் இருந்து வெளிவந்தபின் அரவிந்தன் காலச்சுவடின் விசுவாசியானார். காலச்சுவடு எனக்கு எதிராக திரும்பியபோது காலச்சுவடு முதலாளிகளை மகிழ்விப்பதற்காக என்னை வசைபாடி, நையாண்டி செய்து, அவதூறு செய்து கட்டுரைகள் எழுதினார். தன்பெயரில் பிறபெயரில். ஒன்று இரண்டல்ல, நான் பார்த்தவை மட்டும் ஏறத்தாழ முப்பது கட்டுரைகள். மிகப்பெரும்பாலானவை அப்பட்டமான அவதூறுகள்./
இந்தக் கட்டுரைகள் எவற்றையும் நான் படிக்கவில்லை. அரவிந்தன் பிற பெயரில் எழுதியதற்கு என்ன ஆதாரம்? அவற்றை அரவிந்தன் தான் எழுதினார் என ஜெயமோகன் எதை வைத்துச் சொல்கிறார்?
/உதவவேண்டும், ஆனால் உதவியதும் விலகிவிடவும் வேண்டும் என்பதே இன்று பெரிய உதவிகளைச் செய்யும் எல்லா நண்பர்களிடமும் நான் சொல்வது. இன்று உக்கிரமான வசைகளை பொழிபவர்கள் பெற்ற உதவிகள் அவர்களுக்குத் தெரியும்/
தான் உதவியதிலிருந்து ஜெயமோகன் இன்னும் விலகி வரவில்லை. நண்பர் என்று இல்லை, சக மனிதர் ஒருவருக்குத் தன்னால் இயலக்கூடிய ஒன்றைச் செய்வதை உதவி என்றுகூடச் சொல்லக் கூடாது. அது ஒரு வகையில் நம் கடமை. அறம் என வாய்க்கு வாய் கூறும் ஜெயமோகன், தத்துவங்கள் பற்றி வகுப்பு எடுக்கும் ஜெயமோகன், இந்த நான் என்ற மனோபாவத்திலிருந்து வெளிவரவே இல்லை. நம்மிடம் உதவி பெற்றவர்கள் நம்மிடம் நன்றிக் கடன்பட்டு இருக்க வேண்டும் என்ற மனநிலைதான் அவரிடம் உள்ளது. அவர்களுக்கு உதவுகின்ற வாய்ப்பினை நமக்கு அவர்கள் அளித்தார்கள், நம் உதவியை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என நினைப்பதில்லை. இந்த நிலப்பிரபுத்துவ மனநிலையிலிருந்து நவீன சிந்தனை எப்படி வௌிப்படும்?
/தன்பெயரில் பிறபெயரில். ஒன்று இரண்டல்ல, நான் பார்த்தவை மட்டும் ஏறத்தாழ முப்பது கட்டுரைகள். மிகப்பெரும்பாலானவை அப்பட்டமான அவதூறுகள்./
/அரவிந்தன் எழுதிய ஒரு கட்டுரைக்குக் கூட நான் எதிர்வினையாற்றியதில்லை. அவதூறுகளை புறக்கணிப்பதே என் வழக்கம்./
அவதூறுகளை புறக்கணிப்பவர், அகத் தீவிரம் கொண்டவர்… ஆனால், தன்னைப் பற்றிய அத்தனைக் கட்டுரைகளையும் எதிர்வினைகளையும் தேடித் தேடிப் படித்திருக்கிறார். யார், எத்தனைக் கட்டுரைகள் எழுதினார்கள், எந்தப் பெயர்களில் எழுதினார்கள் என அனைத்தும் தெரிகிறது. அவர்கள் எந்த முகாமைச் சேர்ந்தவர்கள், எந்தக் கண்ணோட்டம் கொண்டவர்கள் எல்லாவற்றையும் கண்டறிகிறார். இது, படைப்பு மனோநிலை இல்லை, அரசியல் மனோநிலை.
/integrity என்பதற்கு ஒரு திமிர் தேவை, அது அவரிடம் இல்லை. உண்மையில் நம் நடுத்தரக்குடும்பத்தினரிடமுள்ள அந்த பணிவு அவர்கள் தங்களை தாங்களெ சிறுமை செய்துகொள்ள வழிவகுக்கிறது. எந்த இளைஞரும் எச்சரிக்கைகொள்ளவேண்டிய ஓர் படுகுழி இது. /
/ அவரே என்னிடம் அவருடைய இரு நாவல்களை அளித்து கருத்து கேட்டார். இதை அவரிடம் நேரிலும் சொல்லியிருக்கிறேன். “கொஞ்சமாவது திமிர் இருக்கணும்” இதுதான் அவரிடம் நான் சொன்ன ஆலோசனை. /
ஜெயமோகன் விழுந்திருக்கிற படுகுழியே இந்தத் திமிர் தான். இது, தான் சொல்வதே சரி என்று தன்னையே நம்ப வைக்கும். நானே இங்கு முதன்மையானவன் என்று எண்ண வைக்கும். மற்ற யாருடைய தகுதியும் கண்ணுக்குத் தெரியாது. நான் என்ற இறுமாப்பும் இந்தத் திமிரும் ஒன்றோடு ஒன்று கலந்தவை. அவர் யாரைப் பற்றி எழுதினாலும் அதில் சரிபாதிக்கு மேல், தன்னைப் பற்றியே இருக்கும். தனக்குக் கீழேயே அனைவரையும் வைத்திருக்கும்.
/அவர் மறைந்த இத்தருணத்தில் ‘ஆகா மகத்தான படைப்பாளி’ என்பார்கள் பலர். அது தமிழ்ச்சூழலின் சம்பிரதாயப் பாவனை. ஆனால் அவர் எழுதிய எவையும் எந்த வாசகனையும் எவ்வகையிலும் தொட்டதில்லை./
நடுநிலையான ஒருவர், இந்தக் கருத்தை முன்வைக்க முடியுமா? இதை ஆபாசம், அபாண்டம், அநீதி என எந்தப் பெட்டியில் போடலாம் என நீங்களே முடிவு செய்யுங்கள். அரவிந்தனின் புதிய பார்வையும் ஆழமான கருத்துகளும் கச்சிதமான நடையும், என்னைக் கவர்ந்துள்ளன. என்னைப் போல் யாரும் சொன்னால், நீங்கள் வாசகரே இல்லை என்று ஜெயமோகன் கூறுவார்.
அரவிந்தன் எழுதிய அனைத்தும் சரியானவை, சிறப்பானவை என்று நான் சொல்லவில்லை. சமரசங்கள் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கலாம். இது, ஜெயமோகன் உள்ளிட்ட படைப்பாளர்கள் அனைவருக்கும் பொருந்தும். குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் என்ற குறளை நாம் நினைத்துக்கொள்ள வேண்டும்.
/உண்மையில் அன்பின் பொருட்டு சொல்லப்பட்ட தகுதிகள் அவை/
அன்பு மிகுந்திருந்த போது, அவருடைய தகுதிகளைத் தேடி எடுத்துரைத்தார். அன்பு வற்றிய பிறகு, குறைகளைத் தேடிச் சொல்கிறார். சிக்கல், அரவிந்தனிடம் மட்டும் இல்லை. அன்பு குறைந்துபோனதிலும் தான் இருக்கிறது.
