ஐக்கிய அரபு நாடுகள் அமீரகத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஒப்பந்தம்

0

நாகேஸ்வரி அண்ணாமலை

ஐக்கிய அரபு நாடுகள் அமீரகமும் இஸ்ரேலும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றன.  அதன்படி இரு நாடுகளுக்கிடையேயும் தூதரக உறவுகள் ஆரம்பிக்கப்படும்.  இதற்கு இஸ்ரேல் கொடுத்திருக்கும் ‘சலுகை’ வெஸ்ட் பேங்கில் இருக்கும் யூதக்குடியிருப்புகளை நேத்தன்யாஹு இஸ்ரேலோடு இணைத்துக்கொள்ளப் போவதாக அறிவித்த முடிவை இப்போதைக்கு நிறுத்திவைப்பது. இந்தச் செய்தியை ட்ரம்ப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஆகஸ்ட் 13-ஆம் தேதி அறிவித்தார்.  இது இஸ்ரேல்-அரபு நாடுகளின் உறவைப் பொறுத்தவரை ஒரு பெரிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.  இந்த ஒப்பந்தத்தை இந்தியாவும் ஐரோப்பிய நாடுகளும் வரவேற்றிருக்கின்றன. இஸ்ரேலோடு இல்லாமல் இருந்த தூதரக உறவை ஆரம்பித்த பாரதிய ஜனதா கட்சி ஆளும் இந்தியா இஸ்ரேலின் எதிரிகளைக் குறைக்க வேண்டும் என்று நினைக்கிறதா என்பது மோதிக்கே வெளிச்சம்.

இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு நாடுகள் அமீரகத்திற்கும் சென்ற சில வருஷங்களாகவே இரகசியத் தொடர்பு இருந்துவந்திருக்கிறது.  இப்போது வெளிப்படையாக அந்த இரு நாடுகளும் ஒப்பந்தம் ஒன்றைப் போட்டு தங்கள் உறவைப் பலப்படுத்திக்கொள்ள முன் வந்திருக்கின்றன.  சோழியன் குடுமி சும்மா ஆடுமா?  இந்தப் புது உறவால் இதை ஏற்படுத்திய மூன்று நாடுகளுக்கும் என்ன ஆதாயம் என்று பார்ப்போம். அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு  எதையாவது சாதித்ததாகக் காட்டிக்கொள்ள வேண்டும்.  முதலாவதாக ஈரானோடு அமெரிக்காவின் முந்திய ஜனாதிபதி  போட்ட ஒப்பந்தத்தை ஒன்றுமில்லாமல் ஆக்கினார். ஒபாமா செய்த எல்லா நல்ல காரியங்களையும் கெடுப்பதுதான் ட்ரம்ப்பின் முதல் குறிக்கோள். ஈரானுக்கு எதிராக அரபு நாடுகளைத் திருப்பி முஸ்லீம் நாடுகளைப் பிரிப்பது. இரண்டாவது இஸ்ரேல்-அரபு நாடுகளின் உறவை சுமுகமாக்கி இஸ்ரேலைப் பாதுகாப்பது. மூன்றாவது அமெரிக்க ஆயுதங்களை அரபு நாடுகளுக்கு விற்பனைசெய்து ஆயுதங்கள் தயாரிக்கும் அமெரிக்கக் கம்பெனிகளின் பணஆதரவைப் பெறுவது.

இஸ்ரேலைப் பொறுத்தவரை இஸ்ரேல் 1948-இல் உருவாக்கப்பட்டபோது அதற்கு எதிராகத் திரெண்டெழுந்து போர்புரிந்த அரபு நாடுகளை இஸ்ரேலுக்கு எதிரான பாதையிலிருந்து திருப்புவது.  1978-லேயே 1948-இல் இஸ்ரேல் எகிப்திடமிருந்து கைப்பற்றிய சினாய் தீபகற்பகத்தை எப்படியும் இஸ்ரேலிடமிருந்து பெற்றுவிட வேண்டும் என்று உறுதிபூண்டிருந்த சதாத்தைத் திருப்திப்படுத்த சினாயைத் திருப்பிக்கொடுத்து அதனோடு சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டது.  இதற்காக அமெரிக்கா எகிப்துக்கு பண உதவி செய்தது.  அதோடு எகிப்தின் வாயை அடைத்தாகிவிட்டது.  1994-இல் ஆஸ்லோ ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு ஜோர்டான் அமெரிக்கா கொடுக்க ஒப்புக்கொண்ட பண உதவியை ஏற்றுக்கொண்டு இஸ்ரேலோடு ஒப்பந்தம் செய்துகொண்டது. இப்போது மூன்றாவதாக ஐக்கிய அரபு அமீரகத்தோடு தூதரக உறவுகள் வைத்துக்கொள்கிறது. ஆக, ஒவ்வொன்றாக இஸ்லாமில் சுன்னிப் பிரிவைப் பின்பற்றும் அரபு நாடுகளைத் தன் பக்கம் சேர்த்துக்கொண்டு தான் பயப்படும் ஈரானுக்கு எதிராக நாடுகளைச் சேர்ப்பது இஸ்ரேலின் நோக்கம்.  இதற்கு அமெரிக்காவின் பணபலமும் அதிகார பலமும் ட்ரம்ப் போன்ற கோமாளி ஜனாதிபதிகளும் உடந்தை என்பது வெளிப்படை.

இனி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இதில் என்ன லாபம் என்று பார்ப்போம்.  வசதி படைத்த நாடு என்றாலும் படைபலம் இல்லாத நாடு. தங்கள் படைபலத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும் என்று எல்லா நாடுகளும் விரும்புவது இயற்கை. மேலும் இஸ்ரேலிடமிருந்து அமீரகத்திற்குப் பல நன்மைகள் – தொழிநுட்ப உதவி, ஆயுத உதவி – கிடைக்கும்.  அமெரிக்காவின் தளராத உதவியால் இஸ்ரேல் எல்லா விதங்களிலும் மற்ற பல நாடுகளைவிட மேலோங்கி நிற்கிறது.  அமீரகம் இஸ்ரேலிடமிருந்து பலதுறை முதலீடுகள், சுற்றுலாப் பயணம், நேரடி விமானப் போக்குவரத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள், தொலைதூரத் தொடர்புகள், தொழில்நுட்பம், எரிசக்தி, மருத்துவ உதவி என்று பல உதவிகளைப் பெற முடியும். முன்னால் இஸ்ரேலோடு எந்த உறவும் வைத்துக்கொள்வதில்லை என்ற உறுதிமொழியில் எல்லா அரபு நாடுகளும் கையெழுத்திட்டதையெல்லாம் இப்போது அமீரகம் மறந்துவிட்டது. தன் நலன் என்று வரும்போது பொதுநலம் மறந்து போயிற்று.

அமீரகத்துக்கு மக்கள் புரட்சியில் எழுந்து மன்னராட்சியை ஒழித்துவிடக்கூடாது என்று பயம். எகிப்தில் புரட்சியால் சர்வாதிகாரி முபாரக் கவிழ்ந்தது ஒரு எச்சரிக்கையாக இருக்கிறது, அப்போது ஒபாமாவின் தலைமையில் இருந்த அமெரிக்க அரசு முபாரக்கின் வீழ்ச்சியைத் தடுக்கவில்லை. அமெரிக்காவை நம்ப முடியாது என்று அமீரகம் தன் ராணுவ பலத்தை அதிகப்படுத்திக்கொள்ள விரும்புகிறது.

பாலஸ்தீனர்களுக்குத் தனி நாடு கிடைப்பதில் அவர்களோடு சேர்ந்து பாடுபட வேண்டும் என்பதெல்லாம் இப்போது அமீரகத்திற்கு மறந்துவிட்டது. பாலஸ்தீனர்கள்தான் இப்போது தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். பாலஸ்தீனத்தை அடைந்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அதற்காகப் பாடுபட்ட அராபத் இறந்து 16 ஆண்டுகள் ஆகிவிட்டன; இப்போதிருக்கும் பாலஸ்தீன அதிபர் அப்பாஸுக்கு 80-க்கு மேல் வயதாகிவிட்டது. அடுத்த தலைமுறையினருக்கு இஸ்ரேல் ஸ்தாபகர் பென்குரியன் சொன்னதுபோல் எல்லாம் மறந்துகொண்டிருக்கிறது; மேலும் போராடிப் போராடி அலுத்துவிட்டது. தனி நாடு கூட வேண்டாம், இஸ்ரேல் தங்களுக்கு சம குடியுரிமைகள் கொடுத்தால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள்.  தங்கள் இனத்தைச் சேர்ந்த நாடுகளில் ஒன்றே இஸ்ரேலோடு சேர்ந்துகொண்டால் அவர்கள் தான் என்ன செய்வார்கள்? ‘லபோ லபோ’ என்று அடித்துக்கொள்வதைத் தவிர அவர்களால் என்னதான் செய்ய முடியும்?

இந்தச் செய்தி கொடுத்த அதிர்ச்சி நீங்குமுன் இன்னொரு செய்தி வந்திருக்கிறது.  இஸ்ரேல் எஃப்-16 விமானிகள் ஜெர்மனிக்குப் போய் ஜெர்மனி விமானிகளுக்குப் பயிற்சி கொடுக்கப் போகிறார்களாம்! ஏற்கனவே ஜெர்மனி விமானிகள் இஸ்ரேலுக்கு வந்துவிட்டுப் போயிருக்கிறார்களாம். ஜெர்மனிக்கும் இஸ்ரேலுக்கு ராணுவ ஒத்துழைப்பு இருக்கப் போகிறதாம்.  ஜெர்மனியின் ராணுவம் பலம் இழந்து இருக்கிறதாம்.  நேட்டோ நாடுகள் ஜெர்மனியை தங்கள் ராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளுமாறு வற்புறுத்தி வருகின்றனவாம். ட்ரம்ப் நேட்டோவையே ஒழித்துவிடலாம் என்னும் பயமும் இருக்கிறது. அதற்காகத்தான் இஸ்ரேலிடமிருந்து ராணுவ உதவியைப் பெறப்போகிறார்களாம். ஜெர்மனிக்குப் போகப் போகும் இந்த எஃப்-16 விமானங்களில் பணியாற்றப் போகிற இஸ்ரேல் விமானிகளில் பலர் யூதப்படுகொலையிலிருந்து தப்பித்தவர்களின் வாரிசுகள். ஜெர்மனிக்குச் செல்வது இவர்களுக்கெல்லாம் வேதனை அளிக்கக் கூடும் என்றாலும் இது செய்ய வேண்டிய ஒன்று என்று ஜெர்மன் விமானப் படையின் தலைவர் கூறுகிறார்.

யூதப்படுகொலை நடந்து முடிந்து 75 ஆண்டுகள் ஆகின்றன என்பது உண்மைதான்.  காலம் ஆறாத புண்களை ஆற்றிவிடும் என்பதுபோல் நினைவுகளையும் மறக்கடித்துவிடலாம். இருந்தாலும் ஹிட்லர் யூதர்களுக்கு இழைத்த இத்தனை பெரிய கொடுமையை எப்படி இஸ்ரேலால் இவ்வளவு சீக்கிரம் மறக்க முடிந்தது? எங்கள் யூத நண்பர் ஒருவர் – அவருடைய உறவினர்கள் யாரும் நேரடியாக யூதப்படுகொலையில் உயிர் இழந்தவர்கள் இல்லை என்ராலும் – ஜெர்மனியில் செய்யப்பட்ட கார்களைக்கூட வாங்குவதில்லை.  அந்த அளவுக்கு அவருக்கு ஜெர்மனி மேல் கோபம், வெறுப்பு. ஆனால், இஸ்ரேலுக்கு ஜெர்மனியின் நட்புக் கிடைத்தால் ஐரோப்பிய யூனியனின் நட்புக் கிடைக்கும்.  பாலஸ்தீனத்தைக் கபளீகரம் செய்வதுதான் அதன் நோக்கம். அதற்காக எந்தக் கூட்டிலும் சேரத் தயார்.

மனிதன் தன் சுய லாபத்திற்காக எந்த நிலையிலும் தன்னை மாற்றிக்கொள்ளலாம் போலும்.  வேதனை தரும் உண்மை.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.