திருவள்ளுவர் யார்? – 2

புதுக்கோட்டை பத்மநாபன்
திருவள்ளுவர் ஸநாதன வைதிக மதத்திற்கு எதிரானவர் என்று ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. அது முற்றிலும் தவறான கருத்து.
“ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்
காவலன் காவான் எனின்”
“அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.”
“அரசன் ஒழுங்காக அரசாட்சி செய்யாவிட்டால், ஆறு தொழில்களைச் செய்யும் அந்தணர்கள் தங்களது வேதத்தை மறந்து விடுவார்கள். பசுமாட்டில் பால் குறைந்துவிடும். அந்தணர்களின் வேதமும் அவர்களின் வேத தர்மமும் அரசனின் செங்கோலைப் பற்றியே நிற்கின்றன” என்பது தான் இந்த இரண்டு குறட்பாக்களின் பொருள். வேதம் ஓதுதல், பிறர்க்கு அந்த வேதத்தைக் கற்பித்தல், வேள்வி செய்தல், பிறருக்கு வேள்வி செய்வித்தல், தானம் கொடுத்தல், தானம் வாங்குதல் என்பவையே அந்தணர்களுக்குரிய ஆறு தொழில்கள். இதுவே வடமொழியில் அத்யயனம், அத்யாபனம், யஜனம், யாஜனம், தானம், பரிக்ரஹம் என்று சொல்லப்படுகிறது.
இந்த ஆறு தொழிலுக்கும் வேதமே அடிப்படை. அரசன் ஒழுங்காக ஆட்சி செய்யாவிட்டால் அந்தணர்கள் வேதத்தை மறந்துவிடுவார்கள் என்றும் அதனால் பசுமாடுகளில் பால் குறைந்துவிடும் என்றும் கூறுகிறார் திருவள்ளுவர். பசுமாட்டிற்கும் அந்தணர்க்கும் ஒரு ஸம்பந்தம் உள்ளது. அதாவது, அந்தணர்கள் செய்யும் வேள்வியில் பசுமாட்டிலிருந்து கிடைக்கும் பால், தயிர், நெய் இவையே முக்கியமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இங்கே சுழற்சி முறையிலான செய்தி ஒன்று சொல்லப்படுகிறது. வேள்விமுறைகள் நினைவில் இருக்க வேண்டுமானால், வேதம் நினைவிலிருக்க வேண்டும். வேதம் மறந்துபோய்விட்டால் வேள்வி செய்ய முடியாது. வேள்வி இல்லையென்றால் மழை பொழியாது. மழை இல்லையென்றால் புல் தழைக்காது. புல் இல்லை என்றால் பசுமாட்டிற்கு உணவு இல்லாமல் போய்விடும். உணவில்லாத பசு, பால் கொடுக்காது. பால் இல்லை என்றால் தயிர், நெய் இவை கிடைக்காது. பால்,தயிர்,நெய் இவை இல்லாமல் வேள்வி செய்யமுடியாது. இதனால்தான் பசுவையும் அந்தணரையும் தொடர்புபடுத்திப் பேசுகிறார் திருவள்ளுவர்.
பசு பால் கொடுக்காது என்று சொல்வதன் மூலம் அந்தணர்கள் வேதத்தை மறந்துவிட்டால் நாட்டில் வளம் குன்றிவிடும் என்பதையும் நாட்டின் வளமையும் செழிப்பும் அந்தணர்களின் தொழிலாலும் அறத்தாலுமே நிலைநிற்கின்றன என்பதையும் நிலைநாட்டுகிறார். அந்த அந்தணர்களின் அறமும் தொழிலும் ஒழுங்காக நடக்க வேண்டுமென்றால் நாட்டில் நல்லாட்சி நடக்கவேண்டும். இந்தக் குறட்பாக்கள் மூலம் அந்தணர்களின் வேதம் மற்றும் அவர்களது அறமான வைதிக தர்மம், பசுக்கள் இவற்றையெல்லாம் பாதுகாக்க வேண்டியது ஒரு மன்னனின் கடமை என்பதையும் இவற்றுக்குப் பாதுகாப்புக் கொடுக்காத மன்னன் அரசாளும் நாட்டில் வளம் குன்றிவிடும் என்பதையும் மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார் திருவள்ளுவர்.
अन्नाद्भवन्ति भूतानि पर्जन्यादन्नसम्भवः।
यज्ञाद्भवति पर्जन्यो यज्ञःकर्मसमुद्भवः॥
அந்நாத் பவந்தி பூதாநி பர்ஜந்யாத் அந்ந ஸம்பவ:|
யஜ்ஞாத் பவதி பர்ஜந்யோ யஜ்ஞ: கர்ம ஸமுத்பவ:||
என்ற பகவத்கீதை ஶ்லோகத்தின் கருத்தை இந்தக் குறட்பாக்கள் பிரதிபலிப்பது கவனிக்கத்தக்கது. அதனால் இந்த இரண்டு குறட்பாக்களின் கருத்தைக் கொண்டு பார்க்கின்றபோது, திருவள்ளுவர் ஸநாதன வைதிக மதத்தை முழுக்க முழுக்க ஆதரிப்பவர் என்பது தெளிவாகிறது. ஆகவே திருவள்ளுவர் ஸநாதன வைதிக மதத்திற்கு எதிரானவர் என்று கூறுவது ஆதாரமற்ற பிதற்றல்தான்.
திருவள்ளுவர், வைதிக வேள்விகளுக்கு எதிரானவரா?
“வைதிக வேள்விகளில் உயிர்பலி கொடுக்கப்படுகிறது. ஆனால் திருவள்ளுவர் கொல்லாமயை வலியுறுத்தியவர்.
“அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று”
என்ற குறட்பாவில் அவர் அஹிம்ஸையை ஆதரிக்கிறாரேயொழிய வேள்வியை ஆதரிக்கவில்லை. அதனால் அவர், வைதிக வேள்விகளுக்கு எதிரானவர்தான்” என்று சிலர் கூறுகிறார்கள்.
இதுவும் தவறான கருத்துத்தான். இவர்கள் எடுத்துக் காட்டும் குறளில் உள்ள அவி என்பது யாகங்களில் உபயோகப்படும் நெய், அன்னம் இவற்றைக் குறிக்கும். “நெய்யையும் அன்னத்தையும் கொட்டி ஆயிரம் வேள்விகள் செய்வதை விட ஒரு உயிரைக் கொன்று அதன் உடலை உண்ணாமல் இருப்பது நல்லது” என்பதே இந்தக் குறட்பாவின் கருத்து. இதனால் திருவள்ளுவர், வேள்விக்கு எதிரானவர் என்பது எப்படித் தேறும்?
இந்தக் குறட்பாவின் மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார் என்றால், வேள்வியை விட அஹிம்ஸை சிறந்தது என்று சொல்கிறார். வேள்வியைவிட அஹிம்ஸை சிறந்தது என்று சொன்னால் வேள்வியை அவர் புறக்கணித்துவிட்டார் என்று அர்த்தமில்லை. மாறாக வேள்வியை அவர் ஆதரித்திருக்கிறார் என்பது தான் அதற்குப் பொருள். மாம்பழத்தைவிட பலாப்பழம் இனிமையானது என்று ஒருவன் சொன்னால், மாம்பழத்தை அவன் இனிமையற்றது என்று சொல்லிவிட்டான் என்று எடுத்துக்கொள்ள முடியுமா? அதைப்போல இந்தக் குறட்பாவில் வேள்வியின் சிறப்பையும் அஹிம்ஸையின் சிறப்பையும் ஒப்பீட்டு அடிப்படையில் கூறுகிறார் திருவள்ளுவர்.
ஒரு விஷயத்தை வலியுறுத்திக் கூற வேண்டுமானால் அவ்விஷயத்தை வேறொரு விஷயத்தோடு ஒப்பிட்டுக் கூறுவது மரபு. அந்த வகையில் இந்தக் குறட்பாவில் திருவள்ளுவர் வலியுறுத்த விரும்பும் விஷயம் கொல்லாமை. கொல்லாமையின் சிறப்பை வேள்வியின் சிறப்போடு ஒப்பிடுகிறார். வேள்வியால் ஒருவன் அடையும் நன்மையையைவிட ஒரு உயிரைக் கொன்று அதன் உடலைத் தின்னாமல் இருப்பதால் அடையும் நன்மை உயர்ந்தது என்பதே அந்தக் குறளின் உட்பொருள். அவர் வேள்விக்கு எதிரானவராக இருந்திருந்தால் ‘ஆபயன் குன்றும்’ என்ற குறளையும் ‘அந்தணர் நூற்கும்’ என்ற குறளையும் அவர் எழுதியிருக்கவே முடியாது. ‘ஆபயன் குன்றும்’, ‘அந்தணர் நூற்கும்’ என்ற குறட்பாக்களின் மூலம் திருவள்ளுவர், வைதிக வேள்வியைச் சிறப்பாக ஆதரித்தே பேசுகிறார்.
“செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து”
என்ற குறட்பாவில் தேவர்களுக்கு உரிய உணவு அவி உணவுதான் என்கிறார். வேள்வியை ஆதரிக்காதவராக அவர் இருந்திருந்தால் தேவர்களின் உணவு அவி உணவுதான் என்று அவரால் எழுதியிருக்க முடியாது. ஆகவே திருவள்ளுவர் நெய், அன்னம் இவற்றால் அக்னியில் செய்யப்படும் வைதிக வேள்விகளை ஆதரித்தவர் தான் என்பதே இக்குறட்பாக்கள் நமக்குக் கூறும் செய்தி.
வைதிக வேள்விகள் சிலவற்றில் உயிர்ப்பலி சொல்லப்படுகிறது. அஹிம்ஸையைப் பெரிதும் வலியுறுத்தும் திருவள்ளுவர் உயிர்பலியுள்ள வைதிக வேள்வியை எப்படி ஆதரித்தார் என்ற கேள்வி எழுவது இயற்கை. இக்கேள்விக்கு பதில் திருக்குறளிலேயே இருக்கிறது. அதாவது விதி என்ற ஒன்று இருந்தால் விதிவிலக்கு என்று ஒன்று இருந்தே தீரும். விதிவிலக்கில்லாத விதி என்றுமே இருந்தது கிடையாது. ஒரு உயிரைக் கொன்று அதன் உடலைத் தின்னக் கூடாது என்பது பொதுவிதி. இந்தப் பொதுவிதியை வலியுறுத்திக் கூறும் திருவள்ளுவர், வைதிக வேள்வியை ஆதரிப்பதன் மூலம் வேள்விகளில் செய்யப்படும் உயிர்ப்பலியை விதிவிலக்காக அவர் ஏற்கிறார் என்பது தெளிவாகிறது.
“உயிர் செகுத்து உண்ணாமை நன்று” என்ற இடத்தில் அவர் சொல்லவருவது என்னவென்றால் உணவுக்காக ஓர் உயிரைக் கொன்று அதன் உடலைத் தின்பது தவறு என்பதே. வேள்விகளில் உணவுக்காக உயிர்ப்பலி செய்யப்படுவதில்லை. தேவர்களுக்கு ஹவிர்பாகம் அளிக்கப்பட்ட பிறகு மிகுந்ததை வேள்வி செய்யும் கர்த்தாவும் வேள்வி செய்துவைக்கும் ரித்விக்குகளும் பிரஸாதமாக உண்பது மரபு. கொல்லாமையைப் பெரிதும் வலியுறுத்தும் திருவள்ளுவர் போரில் மனிதர்கள் கொல்லப்படுவதையும் குற்றவாளிக்கு அரசன் மரண தண்டனை கொடுப்பதையும் எப்படி விதிவிலக்காக ஆதரித்துள்ளாரோ அதே அடிப்படையில்தான் யாகங்களில் செய்யப்படும் உயிர்ப்பலியை விதிவிலக்காக ஆதரித்துள்ளார் என்பதே இங்கு நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம். அதனால் திருவள்ளுவர் வைதிக வேள்விகளை ஆதரித்தவர் என்பதே அவரது நூலான திருக்குறள் நமக்குக் கூறும் செய்தி.
‘அவிசொரிந்து’
‘அவிசொரிந்து’ என்ற குறட்பாவில் புலால் உண்ணாமையின் சிறப்பு வலியுறுத்தப்படுகிறதேயொழிய வேள்வி செய்வது தவறு என்று கூறப்படவில்லை. இதே கருத்து வைதிக ஶாஸ்த்ரங்களான மனுஸ்ம்ருதியிலும், மஹாபாரதத்திலும் கூடச் சொல்லப்படுகிறது.
वर्षे वर्षेश्वमेधेन यो यजेत शतम् समाः।
माम्सानि च नखादेद्यस्तयोःपुण्यफलम् समम्॥
வர்ஷே வர்ஷேஶ்வமேதேந யோயஜேத ஶதம்ஸமா:|
மாம்ஸாநிச நகாதேத்யஸ் தயோ: புண்யபலம் ஸமம்||
என்று மனுஸ்ம்ருதியில் சொல்லப்படுகிறது. “எவன் நூறு வருடம் வரை வருடம் தோறும் அஶ்வமேதயாகம் செய்கிறானோ அவனுக்கும் எவன் தன் உயிருள்ளவரை கொல்லாமையைப் பின்பற்றி மாம்ஸத்தை உண்ணாமலிருக்கிறனோ அவனுக்கும் புண்ய பலன் ஒன்றுதான்” என்பது இந்த ஶ்லோகத்தின் பொருள். இதைப் போலவே மஹாபாரதத்தில்,
इष्टम् दत्तमधीतम्च क्रतवश्च सदक्षिणाः।
अमाम्स भक्षणस्यैव कलाम् नार्हन्ति षोडशीम्॥
இஷ்டம் தத்த மதீதஞ்ச க்ருதவஶ்ச ஸதக்ஷிணா:|
அமாம்ஸ பக்ஷணஸ்யைவ கலாம் நார்ஹந்தி ஷோடஶீம்||
என்று சொல்லப்படுகிறது. அதாவது, ”பெருமளவில் தக்ஷிணைகள் கொடுத்துச் செய்யப்படும் யாகம், அக்னிஹோத்ரம், தானம் வேதாத்யயனம் இவையெல்லாம் புலால் உண்ணாமல் இருப்பதன் பதினாறில் ஒரு பங்குக்குக் கூட ஈடாகாது” என்பது இதன் கருத்து. உணவுக்காக ஓர் உயிரைக்கொன்று அதன் உடலைப் புசிப்பவன் யாகம் செய்வது என்பது வீணான வேலை என்று மனுஸ்ம்ருதியும் மஹாபாரதமும் கூறுகின்றன. இதிலிருந்து இன்னொரு அர்த்தமும் கிடைக்கிறது. அதாவது புலால் உணவு உண்ணாமல் இருப்பவன் யாகம் செய்தால், புலால் உண்ணாமல் இருப்பதால் ஏற்படும் புண்ணியத்தையும் யாகம் செய்வதால் உண்டாகும் புண்ணியத்தையும் அடைந்து இரட்டித்த புண்ய பலனை அடைகிறான் என்பதையும் அறிய முடிகிறது. மனுஸ்ம்ருதியும் மஹாபாரதமும் சொன்ன கருத்தையே ‘அவிசொரிந்து’ என்ற குறட்பா பிரதிபலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தணரைத் தவிர மற்ற மூன்று வர்ணத்தாரைக் குறித்துச் சொல்லப்பட்ட செய்திதான், இக்குறட்பாவில் சொல்லப்பட்ட விஷயம். அந்தணரைத் தவிர மற்ற மூன்று வர்ணத்தவர்களும் உணவுக்காக உயிர்களைக் கொல்கின்றனர். அந்த மூவருள் அரசர், வணிகர் என்ற இரண்டு வர்ணத்தவருக்கு மட்டுமே வேள்வி செய்ய அதிகாரம் உண்டு. நான்காம் வர்ணத்தவருக்கு வேள்வி விதிக்கப்படவில்லை. அரசர், வணிகர் இருவரும் உணவுக்காக உயிர்களைக் கொன்று சாப்பிடுகிறார்கள். அதே நேரத்தில் அவர்கள் யாகமும் செய்கிறார்கள். அந்த இரண்டு வர்ணத்தாரையும் நோக்கித்தான், “நீங்கள் வேள்விகள் செய்வதைவிட உயிர்க்கொலை செய்து புலால் உண்ணாமல் இருப்பதே சிறந்தது” என்று திருவள்ளுவர் இந்தக் குறட்பா மூலம் கூறுகிறார். அதேபோல, வேள்வி செய்யத் தகுதியில்லாத நான்காம் வர்ணத்தவரை நோக்கி, “நீ வேள்வி செய்ய முடியவில்லையே என்று கவலைகொள்ளத் தேவையில்லை. நீ வாழ்நாள் முழுவதும் புலால் உண்ணாமல் இருந்தாலே உனக்கு வேள்வியின் பலன் கிடைத்துவிடும்” என்றும் திருவள்ளுவர் இக்குறட்பா மூலம் கூறுகிறார். அதாவது நான்காம் வருணத்தவர் உட்பட யாராக இருந்தாலும் மாமிசம் உண்ணக் கூடாது என்பதுதான் இந்தக் குறட்பாவின் திரண்ட கருத்து.
அந்த வகையில் வேள்வி செய்ய இயலாதவரும் உய்வடைவதற்கு வழிகாட்டியுள்ளார் திருவள்ளுவர். அதனால் மாமிச உணவுப் பழக்கம் உள்ளவர்கள், திருவள்ளுவரையும் திருக்குறளையும் சொந்தம் கொண்டாட இயலாது. அவர்களுக்குச் சொந்தம் கொண்டாட உரிமையும் இல்லை. ஆகவே இக்குறட்பா, அந்தணர் தவிர்த்த மற்ற மூன்று வர்ணத்தாருக்காக எழுதப்பட்டது. இக்குறட்பாவில் உணவுக்காக எவ்வுயிரையும் கொல்லாமல் இருப்பது வேள்வியைவிடச் சிறந்தது என்று சொல்லப் படுவதால் புலால் உணவுப் பழக்கம் உள்ளவர்கள், வேள்வி செய்வதால் பயனில்லை என்பதும் புலால் உணவுப் பழக்கம் இல்லாதவர்கள் வேள்வி செய்வதால் அவர்களுக்கு இரட்டித்த புண்ய பலன் கிடைக்கும் என்பதும்தான் இக்குறட்பாவின் திரண்ட பொருள்.
மஹாபாரதத்தில் பீஷ்மர், தர்மராஜருக்கு தர்மோபதேஶம் செய்யும் சமயத்தில் புலால் உணவில் உள்ள தோஷங்களை எடுத்துக் கூறி ‘க்ஷத்ரியர்களும் புலால் உணவைத் தவிர்ப்பது தான் உத்தமம்’ என்று கூறுகிறார். யாகங்களில் உயிப்பலி சரியா, தவறா என்பது குறித்த சர்ச்சை ரிஷிகளுக்கு மத்தியில் எழுந்ததாகவும் உயிர்பலி இல்லாமலும் யாகங்கள் செய்யலாம் என்ற முடிவுக்கு ரிஷிகள் வந்ததாகவும் மஹாபாரதத்தில் சொல்லப்படுகிறது. மேலும் அஶ்வமேதம் முதலிய உயிர்ப்பலி உள்ள பெரிய வேள்விகள் கலியுகத்தில் செய்யக் கூடாது என்றும் ஶாஸ்த்ரங்கள் கூறுகின்றன. இவ்விஷயங்களையெல்லாம் நன்றாக உள்வாங்கிக்கொண்டவரே திருவள்ளுவர்.
“அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.”
என்று அந்தணருக்கான இலக்கணத்தைச் சொல்கிறார் திருவள்ளுவர். அதாவது எந்த உயிரிடத்தும் கருணையோடு இருப்பதால் அந்தணர் அறவோர் எனப்படுகின்றனர் என்று கூறுகிறார். அதே நேரத்தில் அந்தணரின் ஆறு தொழில்களில் ஒன்றான வேள்வியையும் ‘ஆபயன் குன்றும்’ முதலிய குறட்பாக்களால் ஆதரித்துப் பேசுகிறார். வைதிக வேள்வியில் உயிர்க்கொலை அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்பது அவருக்குத் தெரியாத விஷயமன்று. இதிலிருந்து வேள்வியில் செய்யப்படும் உயிர்க்கொலையை அவர் எதிர்க்கவில்லை என்பதே தெரிகிறது.
ஆகவே, எல்லாவுயிர்களிடத்தும் செந்தண்மை கொண்டவர்களாக இருப்பதால் அந்தணர்கள் அறவோர் எனப்படுகின்றனர் என்று அந்தணருக்கு ஓர் இலக்கணத்தை வரையறை செய்த திருவள்ளுவர், ‘ஆபயன் குன்றும்’ முதலிய குறட்பாக்கள் மூலம் அந்தணர்களின் ஆறு தொழில்களில் ஒன்றான உயிர்ப்பலியுள்ள வேள்வியை ஆதரித்துப் பேசுவதால், எப்படிப் போர்களில் மனிதர்கள் கொல்லப்படுவதையும் அரசன் குற்றவாளிக்குக் கொடுக்கும் மரண தண்டனையையும் விதிவிலக்காக ஆதரித்தாரோ அதைப் போலவே வேள்விகளில் செய்யப்படும் மந்த்ர ஸம்ஸ்காரத்துடன் கூடிய உயிர்ப்பலியையும் வேள்வியோடு தொடர்புடையவர்கள் செய்யும் மாம்ஸ பக்ஷணத்தையும் விதிவிலக்காக அவர் ஆதரிக்கிறார் என்பதே இங்கு தெளிவாகின்ற விஷயம். ஆகவே இந்தக் குறட்பா, கொல்லாமை, புலால் உண்ணாமை இவற்றின் சிறப்பை உணர்த்துவதற்காக எழுதப்பட்டதேயொழிய வேள்வியை மறுப்பதற்காக எழுதப்பட்டதன்று. அதனால் திருவள்ளுவர் வைதிக வேள்விகளுக்கு எதிரானவர் என்ற கருத்து மிகவும் தவறானது.
—தொடரும்