ஒரு ஜனாதிபதியின் சாக்கடை மனம்
நாகேஸ்வரி அண்ணாமலை
1947-இல் இந்திய உபகண்டத்திற்குச் சுதந்திரம் கொடுத்தபோது பிரிட்டன் அதை இந்தியா, பாகிஸ்தான் என்ற இரண்டு நாடுகளாக – ஜின்னா போன்ற முஸ்லீம் தலைவர்களின் பிடிவாதத்தால் – பிரித்தது. பாகிஸ்தான் இரண்டு பிரிவுகளாக நிலத் தொடர்பில்லாமல் இருந்தது. அதிகமாக முஸ்லீம்கள் வாழும் பகுதி என்ற ஒரே காரணத்திற்காக கிழக்கு பாகிஸ்தான் என்னும் பகுதி பாகிஸ்தானோடு இணைக்கப்பட்டது. மேற்கு பாகிஸ்தான் கிழக்கு பாகிஸ்தானுக்கு மொழி உட்பட எல்லா வகையிலும் சம உரிமைகள் கொடுக்காததால் கிழக்கு பாகிஸ்தான் தலைவர்கள் தங்கள் உரிமைகளுக்காகக் குரல் எழுப்பினர். இதனால் மேற்கு பாகிஸ்தான் மத்திய அரசு கிழக்கு பாகிஸ்தான் மக்களை அடக்குவதற்காக அங்கு ராணுவத்தை அனுப்பி நிறைய கொடுமைகள் புரிந்தது. பாகிஸ்தான் ராணுவத்தின் கொடுமைக்கு அஞ்சி லட்சக் கணக்கில் பலர் இந்தியாவுக்குள் அகதிகளாக வந்தனர். இதைத் தடுக்க வேண்டியும் கிழக்கு பாகிஸ்தான் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டியும் இந்தியா கிழக்கு பாகிஸ்தானுக்குள் புகுந்து பாகிஸ்தான் ராணுவத்தோடு போர்புரிந்து அதைப் பணியவைத்தது. கிழக்கு பாகிஸ்தானும் தனி நாடாக ஆகி பங்களாதேஷ் ஆனது.
1949-இல் மாசேதுங் சீனாவில் ஆட்சியைப் பிடித்து கம்யூனிஸ ஆட்சியை அங்கு நிறுவிய பிறகு 22 வருடங்களாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் எந்த உறவும் இல்லாமல் இருந்தது. அதை அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸன் மாற்ற விரும்பினார். அப்போது பாகிஸ்தான் சீனாவோடு நல்ல உறவில் இருந்தது. பாகிஸ்தான் அதிபர் யாஹியா கானின் உதவியோடு சீனாவோடு உறவை வளர்த்துக்கொள்ள நிக்ஸன் விரும்பினார். கிழக்கு பாகிஸ்தானில் மனித உரிமைகள் சிதைக்கப்பட்டபோது அதைத் தட்டிக் கேட்குமாறு இந்தியா அமெரிக்காவிடம் கேட்பதற்காக இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அமெரிக்காவுக்கு வந்தபோது நிக்ஸன் அவரிடம் பாகிஸ்தானின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று கூறினார். அமெரிக்காவின் யோசனைக்குச் செவிமடுக்காத இந்திரா காந்தி கிழக்கு பாகிஸ்தானுக்குள் இந்திய ராணுவத்தை அனுப்பி கிழக்கு பாகிஸ்தானை மேற்கு பாகிஸ்தானிலிருந்து விடுவித்தார்.
ஒரு பெண் – அப்போது உலக அரங்கில் வெகு சில பெண்களே தலைமைப் பதவியில் இருந்தனர்; அதிலும் இந்திரா காந்தி அமெரிக்காவில் எடுத்த கருத்துக் கணிப்பின்படி 1971-இன் தலைசிறந்த, வலிமையான பெண் என்று பெயர் எடுத்திருந்தார் – தான் கொடுத்த யோசனையை ஏற்றுக்கொள்ளவில்லை என்று நிக்ஸனுக்கு மிகவும் கோபம். கிஸிஞ்சரிடம் பேசும்போது, ‘இவள் ஒரு தேவ . . ..ள் என்றாராம். மேலும் அந்தச் சின்ன புத்தி படைத்த அமெரிக்க ஜனாதிபதி, ஆசியர்களையும் மிகவும் கீழ்த்தரமாக நினைத்தார். இந்தியர்களை ஒட்டுமொத்தமாக தேவ . . . . மகன்கள் என்றாராம். (என்றானாம் என்று சொல்லத் தோன்றுகிறது) அவருடைய ஆணாதிக்கமும் இனவெறியும் அவர் இந்தியர்களைப் பற்றி இழிவாகப் பேசியதிலிருந்து தெரிகிறது. 1971 ஜூன் மாதம் அவரும் அவருடைய வெளியுறவு மந்திரி கிஸிஞ்சரும் வெள்ளை மாளிகை பிரதான அதிகாரியும் கலந்துகொண்ட உரையாடல்கள் இப்போது வெளிவந்திருக்கின்றன. நிக்ஸன் வெள்ளை மாளிகையில் தன்னோடு பிறர் பேசுவதையெல்லாம் ஒலிநாடாவில் பதிவுசெய்யும் முறையைப் புகுத்தியிருந்தார்.
அப்படிப் பதிவுசெய்யப்பட்ட பேச்சில், ‘சந்தேகமில்லாமல், எந்தவிதக் கவர்ச்சியும் இல்லாதவர்கள் இந்த இந்தியப் பெண்கள்’ என்ற நிக்ஸன் தொடருகிறார்; ‘கருப்பு ஆப்பிரிக்கப் பெண்களிடம் கவர்ச்சியே இல்லை என்று சிலர் சொல்வார்கள்; ஆனால் அவர்களிடம்கூட மிருகங்களிடம் இருப்பது போன்ற ஏதோ ஒரு கவர்ச்சி இருக்கிறது என்று சொல்லலாம்; ஆனால் இந்த இந்தியப் பெண்கள் …. நினைத்தாலே குமட்டுகிறது’. மேலும் அவர் கிஸிஞ்சரிடம் எந்த ஆண்களுக்கு இவர்களைப் பார்த்தால் இனக்கவர்ச்சி ஏற்படும்? இந்த இந்தியர்கள் எப்படி இனப்பெருக்கம் செய்கிறார்கள்?’ என்று கேட்கிறார்.
இந்தியாவின் அமெரிக்கத் தூதர், பாகிஸ்தான் தன் நாட்டு மக்களையே கொன்றுகொண்டிருக்கிறது என்று நிக்ஸனிடமும் கிஸிஞ்சரிடமும் கூறியபோது நிக்ஸனுக்கு அவர்மேல் அப்படி ஒரு கோபம் வந்தது. ‘இந்த 70 வயது கிழவருக்கு அந்தப் பெண்களிடம் என்ன கவர்ச்சி தோன்றியது?’ என்று கேட்டார். கிஸிஞ்சர் நிக்ஸனிடம், ‘600 வருஷங்கள் இந்த இந்தியர்கள் பிரிட்டிஷ்காரர்களின் கால்களை வருடி வருடியே காலத்தைக் கடத்தினார்கள். இவர்கள் முகஸ்துதி செய்வதில் வல்லவர்கள்’ என்றார்.
இந்திரா காந்தி தன் அறிவுரையைக் கேட்கவில்லை என்ற கோபம் எப்படியெல்லம் நிக்ஸனைப் பேசத் தூண்டியிருக்கிறது! அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் இப்படிப்பட்ட இனத்துவேஷமும் இந்தியப் பெண்கள் பற்றிய மிக கீழ்த்தரமான எண்ணமும் கொண்டிருந்தார் என்பதை அறியும்போது மிகுந்த கோபம் ஏற்படுகிறது. இவ்வளவு கீழ்த்தரமாக நடந்துகொள்ளும் ஒரு அமெரிக்க ஜனாதிபதியை அமெரிக்க மக்கள் ஒரு முறை அல்ல இரண்டு முறை தேர்தெடுத்திருக்கிறார்கள் என்பதை அறியும்போது அமெரிக்க மக்களின் தரத்தை உணர முடிகிறது.
நன்று