என்னை நான் தேடித் தேடி.. (சிறுகதை)

0

Adventure People Mountain Trek Travel Rock Woman

திவாகர்

ஓ.. கொரோனா வந்ததே உங்களுக்குத் தெரியாது என்பதை மறந்துவிட்டு நான் அதையே பேசிண்டிருக்கேன். ஆறு மாசம் ஓடிப்போயிடுச்சு. சரி, விடுங்க..”உங்களை ஆறு மாசம் முன்னாடி ஜாகேஷ்வர்ல பார்த்தப்போ என்னவோ தோணிச்சு, மறுபடியும் இங்கே எங்கேயோ உங்களைப் பார்ப்பேன்னு.. உங்களுக்கும் அப்படிப் பட்டுதா?”

நான் அவளைப் பார்த்துச் சிரித்தேன்.. கொஞ்சும் மழலைத் தமிழில் இவள் பேசுவது எத்தனை அழகாகக் கேட்கிறது. “இல்லைம்மா! அப்ப நீ பார்க்கறச்சே நான் இருந்த மனநிலை வேற. இப்போ உன்னை அடையாளம் கண்டுபிடிச்சுப் பேசறதே எனக்குப் பெரிசு. ஆனா அடுத்த முறை இங்கே எங்கேயாச்சும் பார்த்தேன்னு வைச்சுக்கோ.. உடனே ஞாபகம் வந்துடும்.”

அவளும் சிரித்தாள். கள்ளமில்லா சிரிப்பு.. ஆறு மாதம் முன்பு ஜாகேஷ்வரில் அவளைப் பார்த்துப் பேசியதெல்லாம் நினைவுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக வந்தது. பெரிய பணக்காரவீட்டுப் பெண். அம்மா இல்லை இவளுக்கு.. சின்ன வயதில் இருந்து ஹாஸ்டல் வாசம்.. ம்ம்.. இன்னும் என்னென்னவோ சொன்னாளே.. ஓ மறந்துவிட்டேனே.. இந்த சிறிய வயதில் அதுவும் வாழ்க்கையின் அனுபவ வாசலில் நுழையப்போகும் தருணத்தில் அடிக்கடி ஜாகேஷ்வர் வந்துவிடுவாளாம். மாதக் கணக்கில் இருப்பதாகச் சொல்வாள். இந்த மலைப்பக்கம் சுற்றுவட்டாரம் எல்லாம் தெரியும் என்று கூடச் சொன்னாள். இன்னும் ஏதேதோ சொல்லி இருக்கிறாள். நினைவில்லை. அப்போது நான் இருந்த மனநிலையில் இவள் பற்றிய இத்தனை நினைப்புகளும் இன்னமும் என் ஞாபகத்தில் இருப்பதே ஆச்சரியம்தான்.

’என்ன ஆண்ட்டி! எதுவும் பேசவே இல்லை.. ஆமாம்.. உங்களை ஆண்ட்டி என்று கூப்பிடலாமா இல்லை அக்கா என்று கூப்பிடட்டுமா?”

’வேண்டாம்மா.. என்னை மங்களா என்று எங்கப்பா வெச்ச பேரைச் சொல்லியே கூப்பிடு.. இந்த உறவு முறைல்லாம் எதுக்கப்பா.. உறவுகளை ஒதுக்கிவிட்டுதான் வந்தாச்சே..”

”இது நல்லா இருக்கே மங்களா.. மங்களகரமான முகத்துக்கு மங்களம்னுதான் பேர் வெக்கணும். உங்கப்பா செஞ்சது சரி.. எங்கப்பாவுக்கு இதெல்லாம் தெரியாது.. மேடைல வக்கணையா பேசுவார்.. கீழே இறங்கிவந்தா என்ன பேசினார்னு உடனேயே மறந்துடற நல்ல மனசு அவருக்கு. வர்ஷினி’ன்னு பேர் யார் வெச்சுருக்கார்’னு அவருக்கே ஞாபகம் இல்லே.. மங்களா! நீங்க எனக்கு அன்னிக்கு பேசினதெல்லாம் இன்னமும் ஞாபகமிருக்கு. உங்க குடும்பம் ரொம்பப் பெரிசு. ரொம்ப பிளான்லாம் பண்ணிதான் இங்க வந்தீங்கன்னு சொன்னீங்க.. சரிதானே?  பாருங்க.. இந்த மலை இங்கேதான் கொஞ்சம் சமானநிலம். கொஞ்சதூரம் இப்படியே போயிட்டே இருந்தா அப்புறம் பெரிய பள்ளம். அதுக்கு முன்னாடி ஒரு சில குடும்பங்கள் கூட்டமா இருக்கும். சுட்ட கிழங்கு அப்படியே சுடச்சுட கொடுப்பாங்க. நான் போன வருஷம் பார்த்தேன். இப்ப அங்கேயே இருக்காங்களோ இல்லையோ… பார்க்கத்தானே போறோம்..”

”ஓ.. வர்ஷினி நான் கொஞ்சதூரம்தான் உன்னோட வருவேன் போல இருக்கே. இந்த மலையிலேர்ந்து கிழக்கே கீழே இறங்கிடுவேன். அங்கயும் ஒரு சின்ன கிராமம் இருக்கு. அங்கதான் எங்க குரு இருக்கார். அவரைப் பார்க்க வரச் சொல்லியிருக்கார். அதனாலதான் இந்தப் பயணம்.”

”பரவாயில்லை மங்களா.. நானும் உங்களோட வர்ரேனே.. எனக்கு எந்த ஒரு வேலையும் கிடையாது. இப்படி நடந்துண்டே போவேன். எங்காவது இடம் கிடைச்சா தங்குவேன். போய்க்கொண்டே இருப்பேன். புகலிடம் எங்கேன்னு தெரியலே.. இன்னிக்கு உங்க கூட வரதுல உங்களுக்கு ஏதாச்சும் கஷ்டமா?.”

சட்டென அவளை நிறுத்தினேன். ”வர்ஷினி.. தாராளமா என்னோட வாம்மா.. எனக்கு எந்த வித கஷ்டமும் இல்லே. உனக்குப் பிடிச்சுதுன்னா எங்க கூடவே தங்கலாம்”

அவள் குதூகலித்தாள். அந்த குதூகலம் அவள் துள்ளல் நடையில் தெரிந்தது.

’மங்களா இந்த ஆறு மாசத்துல  உங்க குடும்ப ஞாபகமே இல்லாம இருக்கீங்களா.. நல்ல வைராக்கியசாலிதான்.. எனக்கு அதெல்லாம் போறாது.. கொஞ்ச நாள் இங்கே வருவேன்.. தைரியமா நடப்பேன்.. எங்கேயாவது வாகான இடம் கிடைச்சால் சாதனா செய்வேன். திடீர்னு ஊர் ஞாபகம் வந்துடுச்சுனா போச்சு.. திரும்பி ஏதாவது ஷார்ட்கட்லே போயி எப்படியாவது ஊருக்குப் போயிடுவேன்.. உங்களை மாதிரி வைராக்கியம் வரணும்னு தேவிகிட்டே இன்னிக்கு சாயந்திரம் வேண்டிக்கிறேன்’.

“அதென்ன சாயந்திரம்?”

“அது அப்படித்தான்.. சாயங்காலம்தான் எனக்கே தோணும். வேண்டிக்குவேன்.. உடனே அவளும் நான் கேட்பதையெல்லாம் தந்துடுவாள், ஒரே ஒரு விஷயம் தவிர”

சிரித்தாள் அவள். உள்ளம் போலவே பளிச்சிட்டன. அந்த ஒரே ஒரு விஷயம் என்ன என்று கேட்கவில்லை. நான் கூட இவளை மாதிரிதானே.. என்னவோ பழைய நினைவுகள் ஒவ்வொன்றாக மனதுள் வலம் வந்தன. அதற்கேற்றாற்போலவே இவளும் கேட்கிறாள். குடும்ப ஞாபகம் வந்ததா என்று இவளுக்கு சொல்லலாமா.. சொல்லலாம்.. கடந்த காலத்தை நினைவுப்படுத்திக் கொள்வதில் தவறில்லை.

”வர்ஷினி.. உன் பெயர் நல்ல பெயர்தான்.. நன்மையே பொழிபவள் என தேவிக்கு வர்ஷினி, வர்ஷா என்பார்கள். எனக்கு என் குடும்ப ஞாபகம் எல்லாம் எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கும். பலவந்தமாக மறக்க முயன்றாலும் அதெல்லாம் முடியாதுதான். குடும்ப பந்தம் என்பது சாமான்யமான விஷயம் இல்லைம்மா.. சட்டென அத்தனையும், அத்தனை பந்தங்களையும் உதறிவிட்டு ஓடி வர முடியுமா.. அதுவும் நல்லதொரு குடும்பத்தைக் கட்டிக் காத்து வரும் பெண்ணால் முடியுமா.. அப்படிப்பட்ட கட்டுக்கோப்பான குடும்பப் பெண், அதுவும் பொறுப்புள்ள குடும்பப்பெண் திடீரென காணாமல் போனாள் என்று எல்லோரும் தேடுவார்களே என்ற கவலையும் பயமுமாய் இருப்பவள் இப்படி எல்லாவற்றையும் உதறி வரமுடியும் என் நினைக்கிறாயா.. இல்லையம்மா.. நான் வணங்கும்தேவி அவளருள் குருவின் அருளாய் கட்டளையாக வந்ததாய் எனக்குத் தோன்றியது.. வந்துவிட்டேன். அவ்வளவுதான்.!”

நிதானமாகத்தான் அவளுக்குச் சொன்னேன். அவளுடன் மெல்ல நடந்துகொண்டே இருக்கும்போதே என் மனம் ஆறு மாதங்களுக்கு முன்னால் நடந்ததையெல்லாம் அசை போட ஆரம்பித்துவிட்டதுதான். மனம் தூண்டப்பட்டாலும் கூட மனத்தை அடக்கும் சக்தியை என்றாவது ஒருநாள் தேவி அருளத்தான் செய்வாள். அதுவரை மனம் தன் இஷ்டப்படி எதை வேண்டுமானாலும் நினைக்கட்டுமே..

உண்மைதானே.. என்னால் எப்படி அத்தனை உறவுகளையும் ஒரே நாளில் சட்டென உதறி வரமுடியும்? அந்த நாளுக்காகவே ஒரு வருடமாக நான் காத்திருந்தேனே.. என்ன குறையை எனக்கு என் வாழ்வில் வைத்தாள் என் தேவி. எதுவும் இல்லையே.. ஆரோக்கியமான கணவன், இரண்டு பிள்ளைகள், ஒரு பெண் எல்லோருமே என்னுடன் அன்று வரை பிரியமாகத்தானே இருந்தார்கள். கணவர் அவருக்கு உலகத்தின் உண்மை சொரூபம் தெரியாதோ இல்லை தெரிந்தாலும் அலட்சியப்படுத்தும் மனநிலையோ.. கொஞ்சம் படாடோபக்காரர்தானே.. தான் எப்போதும் செல்வச் செழிப்போடு, வளமான ஆரோக்கியமாக இருக்கவேண்டும், மற்றவர்களின் விஷயத்தில் தலையிடுவது என்பதை எப்போதும் விரும்பமாட்டார். தான் உண்டு தன் ஷட்டில்காக் விளையாட்டு உண்டு,  படிக்கிறாரோ இல்லையோ ஆனால் கையில் எப்போதும் ஆங்கில புதினங்கள் உண்டு, தன் பணக்கார நண்பர்களோடு அரசியல் பேசிக்கொண்டும், ஹாஹாவென பெரிதாகக் கத்திச் சிரித்துக்கொண்டும் கொண்டாடிக்கொண்டும், மற்றவர் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என எவ்விதக் கவலையுமில்லாமல் வாழ்ந்து வருபவர். அப்படிப்பட்டவர் திடீரென நான் கோயிலுக்கு அந்தக் கடைசி நாள் போகும்போது கூடவே தானும் வருவதாக பிடிவாதமாக காரில் ஏற்றிக்கொண்டு போனாரே…

நான் காரில் கோயில் செல்வது இல்லை. வீட்டில் இருந்து சரியாக ஐந்து கிலோமீட்டர் தூரம் உள்ள என் தேவியின் கோயிலுக்கு நடந்தே தினம் செல்வேன். சரியாக ஒன்றேகால் மணிநேரம் ஆகும். அதைப் போல அங்கே பொது தரிசனம்தான் செய்வேன். அங்கேயே ஏறத்தாழ ஒருமணி நேரம் ஆகும். ஒரு சில நாட்கள் இன்னும் தாமதமானாலும் கூட பொறுமையாக இருந்து அவளைத் தரிசனம் செய்வேன். தட்டில் போடும் அந்த பத்து ரூபாய்தான் மொத்த செலவு. மறுபடி திரும்பி வரும்போது நடைதான். ஒன்றேகால் மணி நேரம்.. இது என் நித்திய வேலை வீட்டிலே கூட எல்லோருக்கும் தெரியும்தான். அவர்களுக்கும் பழகிவிட்டது. ஆனால் இவரென்ன காரில் போகவேண்டுமென்று சொல்கிறார். சரி, இன்று கடைசி நாள். தேவியின் திருவுள்ளம் கணவரோடு ஒருநாள் சேர்ந்து வர வேண்டுமென்றிருக்கிறது போலும். வாழ்நாளில் இவரோடு ஒருநாள் கூட சேர்ந்து கோயிலுக்குச் சென்றதே இல்லையே..

அவரே காரை ஓட்டினார். பத்தே நிமிஷத்தில் கோயில் வந்தோம். பெரிய மாலையை வாங்கிக்கொண்டார். தலையை நிமிர்த்தி ஒரு தனவந்தருக்கான தோரணையோடு கையில் மாலையோடு சென்றவரை அங்குள்ளோர் வியப்பாக பார்த்திருக்கலாம். சிறப்பு டிக்கெட் எடுத்துக் கொண்டார். முன்னூறு ரூபாய் கொடுத்தால் தேவியின் அருகாமைக்குக் கொண்டு சென்று காண்பிப்பார்கள்தான். ஆனால் நான் அப்படிப் பழகவில்லை. சாதாரண பக்தையாகத்தானே இத்தனை நாள் சென்றவள். ஏனோ தேவியை அருகே பார்ப்பதை விட வழக்கப்படி  சற்று தூரத்தில் இருந்து பார்த்தால் என்ன என்று மனதுக்குள் தோன்றியது. ஆனால் இவரோ கையைக் கூப்பியபடி தேவியைக் கும்பிட்டார். வீட்டில் பூஜை அறைப் பக்கம் தலை வைத்துப் படுக்காதவர். எனக்கு அதிசயமாகத்தான் இருந்தது. ஏதும் பேசவில்லை. தேவியையே பார்த்துக்கொண்டிருந்தேன். அர்ச்சகர் வந்ததும் எங்களை தடபுலடாகக் கவனித்தார். பெரிய மாலையை வாங்கிக்கொண்டார். கோத்திரம் கேட்டார்.. இவருக்கு அதெல்லாம் சொல்லத் தெரியாது. நானே சொன்னேன். உள்ளே சென்று மாலை சார்த்தி அட்டகாசமாக ஸ்தோத்திரம் சொல்லி பூஜை செய்தவர் அம்பாளின் மேல் சார்த்தியிருந்த அந்தப் பெரிய மாலையைக் கஷ்டப்பட்டு எடுத்தார். கொஞ்சம் மல்லிகைச் சரத்தையும் எடுத்துக் கொண்டு எங்களிடம் வந்தார். பெரிய குரலில் ஆசீர்வசனம் சொல்லி அந்தப் பெரிய மாலையை என் கணவர் கழுத்தில் போட்டார். எனக்கு மல்லிகைச் சரத்தைக் கொடுத்தார். இவர் தன் பர்ஸிலிருந்து இரண்டு புது ஐந்நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து அர்ச்சகர் தட்டில் வைத்தார். அர்ச்சகர் கண்கள் பெரிதாகின. சௌஜன்யமாக எங்களைப் பற்றி விசாரித்தார். அடிக்கடி கோயிலுக்கு வரவேண்டும் என்று என்னிடம் ஆதரவாகப் பேசினார். எனக்குச் சிரிப்புதான் உள்ளுக்குள் வந்தது. நிதம் வருகிறேன். சாதாரணமான  பக்தர்களுடன் வருகிறேன். பத்து ரூபாய் போடுகிறேன். ஆனால் நான் போடுவதைப் பல சமயங்களில் அவர் பார்ப்பது கூட கிடையாது. குங்குமம். மட்டும் அவர் கையிலிருந்து எங்கள் கைகளில் போட்டுக்கொண்டே வருவார். ’சீக்கிரம் நகருங்கோ, தரிசனம் ஆயிடுத்து இல்லையா.. பின்னாடி நிறைய பேர் இருக்காங்களே.’. என்று சொல்லிக் கொண்டே இருப்பார். அப்படிப்பட்டவர் இன்று எங்களுக்கு ஆசீர்வசனம் மாலை போட்டு மரியாதை தருவதோடு என்னையும் நித்யம் வருமாறு அழைக்கிறார். இவர் கவனமே இப்போதுதான் என் மீது விழுந்தது. இருக்கட்டும்.

கோயிலைச் சுற்றி வந்த என் கணவர் அங்கே பக்தர்கள் அதிகம் கூடாத ஒரு இடம் பார்த்து சப்பணம் போட்டு உட்கார்ந்துகொண்டார். என்னை அங்கே உட்காரச் சொல்லி சைகை செய்தார்.

”மங்களா, ஏதோ சின்ன வயசுல கோயிலுக்கு வந்திருக்கேன். கல்யாணம் ஆனதிலேர்ந்து உன் கூட கோயிலுக்குன்னு வந்தது இல்லேதான். ஆனாலும் இன்னிக்கு ஏன் வந்தேன்னா ஒரு காரணம் இருக்கு. அந்தக் காரணமே நீதான்”.

என்ன இவருக்கு எல்லாம் தெரிந்து விட்டதா.. நான் நாளைக் காலை வண்டிக்கு டில்லிக்கு ஒரு குழுவோடு பிரயாணம் செய்வது தெரிந்து விட்டதோ.. அங்கிருந்து ஜாகேஷ்வர் செல்கிறோம். அந்த யாத்திரை விஷயத்தை நான் யாரிடமும் சொல்லவில்லை. குழுவுடன் ஜாகேஷ்வர் வரைதான் என் பயணம். அதற்கடுத்த பயணம் எனக்கே தெரியாதே. தேவியை நம்பித்தானே செல்கிறேன். சென்றவருடம் சென்றபோதுதான் அந்தக் கட்டளை  எனக்கே வந்தது என்ற உண்மையை இவரிடம் சொல்லிவிடலாமா?

சென்ற வருடம் எனக்கு ஏற்பட்ட ஒரு அபூர்வ அனுபவம்தான் இந்த அபூர்வ நிகழ்ச்சிக்கும் வித்திட்டது, ஜாகேஷ்வரில் நான் இருந்த அந்த ஒரு வாரத்தின் கடைசி நாளில்தான் அவர் தரிசனம் கிடைத்தது. என்னை விட வயதில் இளையவர்தான் எனினும் என்னைப் பார்த்ததும் தனிக் கனிவோடு பேசினார். அவர் முகத்தில் இருந்த காந்த ஒளியை என்னால் வர்ணிக்கவே முடியாது. அவர் பேச்சு உடனடியாக என்னை ஈர்த்தது. குருவானவர் எப்படி எந்த உருவில் வேண்டுமானாலும் வருவார் என்று சூசகமாகச் சொன்னவர் என்னை நானே தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார். ’இங்கேயே இருந்து விடுவாயா’ என்று கேட்டார்’. மனதுக்குள் ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சி. ’உடனே ஒப்புக்கொள்’ என்றது மனம். ஆனால் வாய் மட்டும் கொஞ்சம் கால அவகாசம் கேட்டது. ’சரி ஒரு வருடம் உன்னைத் தயார் படுத்திக்கொண்டு வந்து விடு. நீ வரவேண்டிய நேரம்கூட சரியாக அமையும்தான்’ என்று ஆசிர்வதித்துப் போனவர் திரும்பி வந்து ’நான் உன்னைக் கண்காணித்துக் கொண்டே இருப்பேன். கவலையே பட வேண்டாம். தேவியின் அருள் உனக்கு உண்டு’ என்றார். இந்த ஒருவருடம் என்னை நானே ஒவ்வொரு கணமும் தயார்படுத்திக்கொண்டேன். அனுதினமும் இரவில் சாதனா செய்தேன். அவ்வப்போது நான் ஏதாவது மனதுக்குள் கேள்வி கேட்டுக்கொண்டும் சந்தேகம் எழுப்பிக்கொண்டும் இருக்கும்போது கூட அதற்கேற்றாற்போல சமாதானமும் அதே மனதுள் கிடைக்கும். சென்ற வருட நிகழ்வை நான் யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்ல. இவரிடமும் கூட.

நாளைய பயணத்தையும் இவரிடமும் சொல்லவில்லை. தேவையில்லை என்று மனம் உறுதியாகக் கூறியதால் நான் வீட்டில் கூட யாரிடமும் எதையும் பகிர்ந்து கொள்ளவில்லை. தேவி அவள் பார்த்துக் கொள்வாள். என் மனதில் இருந்து ஆட்டுவிக்கும் குரு பார்த்துக் கொள்வார்.

இத்தனைக்கும் சென்றவருடம் இந்த ஊர் கோஷ்டியோடு நான் ஜாகேஷ்வரம் செல்லும்போது எல்லோருக்கும்  சொல்லிவிட்டுத்தானே சென்றேன். காரில் சென்ட்ரல் ரயில் நிலையம் வரை இவர் வந்து வழி அனுப்பி வைத்தாரே. நான் திரும்பி வரும்போது கூட காத்திருந்து அழைத்து வந்தாரே.. ஒருவேளை நான் எப்போது திரும்புவேன் என்று இப்போது இவர் கேட்டால் என்ன சொல்வது?

ஆனால் கணவர் என் சிந்தனைகளை சீண்டவில்லை. “நான் உன்னிடம் வீட்டில் சரியாகப் பேசக்கூட முடிவதில்லை. உனக்குதான் தெரியுமே.. என் வேலையே தனி.. நான் உண்டு, என் வேலையுண்டு என்றுதானே இருப்பேன். இரண்டு நாள் முன்புதான் சேதி தெரிந்தது.. நேத்திக்கே உன்னிடம் பேசணும்னு நினைச்சேன். ஆனால் நேத்துக் காலைலேயே எழுந்து வழக்கம்போல கோயில் கிளம்பிப் போயிட்டே.. நீ வரும்போது நான் இல்லே. நேத்துப் பார்த்து ஒரே நண்பர்கள் தகராறு. அதுலேயே டைம் பாஸ் பண்ணிட்டேன். ராத்திரி படுக்கவரச்சே லேட்டாயிடுச்சு. சரி, கார்த்தாலே கோயிலுக்கு நானும்தான் உன்னோடு போகலாமேன்னு ஒருநாள் ஷட்டில்காக் விளையாட்டை விட்டுட்டு இதோ உன்கூட உட்கார்ந்திருக்கேன்.. சரி சொல்லு.. ஏன் இப்படி செய்தே.. பொண்ணு அழுதுண்டே உருகிப்போய் சொல்லறச்சே என் மனசு கூட கஷ்டமா இருக்கு.!’”

ஓ.. இவ்வளவுதானா.. அதாவது என்னிடம் இருந்த நாற்பது லட்சம் ரூபாய் வைப்பு நிதியை அவளுக்கு எழுதிக் கொடுத்துவிட்டேன். அவள் புருஷன் ஏதோ பிஸினெஸ் பண்ண ஆசைப்பட்டான் என்றாலும் இது அதிகம் என்று எனக்குத் தெரியும். ஆனால் அந்தப் பணத்தையெல்லாம் நான் இனி என்ன செய்யப் போகிறேன். சந்தர்ப்பம் சரியாக அமைந்தது. தேவையும் சரியெனப் பட்டது. இருந்த பணத்தையெல்லாம் கொடுத்துவிட்டேன். அவ்வளவுதான். இதை எப்படி சொல்வது.. இவரிடம். மகளே சொல்லியிருப்பாளே..

அவரும் அதைத்தான் சொன்னார். ”மங்களா.. அவங்க பிஸினஸுக்குத் தேவை என்றால் ஒரு பத்து லட்சம் கொடுத்திருக்கலாம். இல்லை நான் இருக்கிறேனே. என்னிடம் கேட்டால் ஏதாவது செய்வேனே.. எனக்கு அறுபத்தெட்டு வயசாகிறது. உனக்கும் அறுபத்து நாலு வரப் போகுது. எட்டு வருடம் முன்பு உன் எதிர்கால வாழ்வில் ஒரு வேளை நான் முன்னாடி போய்ச் சேர்ந்துவிட்டால் உனக்கென்று பணம் இருக்கணும், அது உன்னை வைத்துக் காப்பாத்தும் என்கிற நம்பிக்கையினால்தான் அந்த நாற்பது லட்சம் டிபாசிட் செய்தேன். இன்று அதன் மதிப்பு எண்பது லட்சமாக்கும், அப்படியே உன் பொண்ணுக்கு மாற்றிக் கொடுத்துவிட்டாயே.. சரி போகட்டும் நாளை உன் பேரில் இருபது லட்சம் டிபாசிட் செய்கிறேன். அது உன்னுடைய தனிப்பட்ட எதிர்காலத்துக்காகத்தான். நான் இருக்கும் வரை உனக்கு எந்தக் கவலையுமில்லை. இதோ பார்.. ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள். பணம் மட்டுமே உன்னைக் காப்பாத்தும். இந்த மகன் மகள் உறவு எல்லாம் உன் கடைசி காலத்தில் உதவமாட்டார்கள். என்ன.. சொல்லறது புரிஞ்சுதா?”

நான் சிரித்தேன். ”எனக்காக எதையும் செய்யவேண்டாம்.. செஞ்சதெல்லாம் மனநிறைவோடு நீங்கள் செய்தீர்கள். நானும் அதே மனநிறைவோடுதான் கொடுத்தேன்..”

திடீரென என் கழுத்தைப் பார்த்தார், சற்று அதிர்ச்சியானார். “உன் தாலிச் செயின் எங்கே.. செக்யூரிட்டின்னு உள்ளே கழட்டி வைத்துவிட்டாயா? ஐய்யோ இந்த மஞ்சள் கயிறு எல்லா நல்லாவே இல்லே.. தாலிச்செயின் பத்து சவரனாக்கும். .அது வேணாம்னா  ரெண்டு சவரன்லயாவது சின்ன சங்கிலி போட்டிருக்கலாம்.. உன் மோதிரம் வளையல்லாம் எங்கே?.. உடம்புல பொட்டு தங்கம் இல்லாம உன்னை இப்படிப் பாக்கறது என்னால தாங்க முடியலே.. யாராவது தெரிஞ்சவங்க உன்னையும் என்னையும் சேர்த்துப் பார்த்தா அவ்வளவுதான்.. என் மானமே போயிடும்.. ஏன் இப்படி பண்றே?”

”இப்போ எதுக்குங்க அதெல்லாம் கேட்கறீங்க? எல்லாம் ஜாக்கிரதையாதான் இருக்கு.!” நான் மருமகளிடம் கொடுத்து அவள் பீரோவில் ஜாக்கிரதையாக என் நகைகளை வைக்கும்படி சொன்னதைச் சொல்லவில்லை.

அவர் கொஞ்சம் ஆசுவாசப்பட்டார். ‘எங்கே அதையும் உன் மகளுக்குக் கொடுத்திட்டியோன்னு நினைச்சேன். வெளிலே நடந்து போகறச்சே நகை போட்டா பாதுகாப்பில்லேதான். ஆனாலும் கொஞ்சம் கொஞ்சம் நகையைப் போட்டுக்கறது பெண்பிள்ளைகளுக்கு நல்லதுதான். ஏதோ சொல்லிட்டேன்.. நாளைலேர்ந்து கழுத்துல காதுல நகையைப் போட்டுண்டு என் காரை எடுத்துண்டு கோயிலுக்கு வா.. இப்போ நமக்குக் கிடைத்த மரியாதையை பார்த்தியா.. நீ பொதுபக்தர்களோட வரதுன்னாலே அவருக்கு அடையாளம் தெரியலே.. நாம் கொஞ்சம் பகட்டா காண்பிச்சாதான் இந்த உலகத்துல மதிப்பு. பத்துரூபாயெல்லாம் போடாதே.. குறைஞ்சது நூறு ரூபாயாவது போடு. சிறப்பு டிக்கெட் எடுத்துக்கோ.. இதெல்லாம் இனிமே என் பணத்துலேயே செலவு செஞ்சுக்கோ.. தெரியறதா.. சொல்லிட்டேன்.”

சொன்னவர் ஏதோ கணக்குப் போட்டார். ”என்ன செலவாயிடப்போகுது? மிஞ்சிப் போனா தினம் ஐந்நூறு ரூபாய் ஆகும்.. மாசத்துக்கு பதினஞ்சாயிரம் ஆகும்.. ஆகட்டுமே!” குரலில் சுரத்து அவ்வளவாக இல்லைதான்.

சிரித்தேன் அவரைப் பார்த்து. “ஒரு வருஷமா தினம் கோயிலுக்கு நாள் தவறாம வர்ரேன். நீங்க சொல்லறபடி கார்ல வந்து சிறப்பு டிக்கெட் வாங்கி கிட்டக்கப் போய் தர்சனம் பண்ணி, தட்டுலயும் நூறு ரூபாய் போட்டேன்னா இப்ப வரைக்குமே என்னாலே கிட்டதட்ட ரெண்டு லட்சம் ரூபாய் செலவு ஆகியிருக்குமே.. கவலை வேண்டாமே.. நான் வழக்கப்படிப் போய்க்கறேன்”

ஒரு முறை ஏளனமாக என்னை ஒரு ஓரப்பார்வை பார்த்தார். ஆனால் அவர் குரலில் ஒரு நிம்மதி இப்போது தெரிந்தது. “சரி மங்களா.. ஏதோ உன் நல்லதுக்கு சொன்னேன், உன் இஷ்டம். நான் என்னிக்காவது உன் வேலையிலே தலையிட்டிருக்கிறேனோ.. நீயும் அப்படித்தான்.. எனக்குத் தெரியும். இருந்தாலும் புருஷன் தன் கடமையை ஒழுங்காகச் செய்யணும். அதுவும் பண விஷயத்தில் சரியாச் செய்யணும். நாளைக்கு பணம் ஒண்ணே காப்பாத்தும்.. ஞாபகம் வெச்சுக்கோ”.

எழுந்துகொண்டார். அப்போதுதான் ஒன்று கவனித்தேன். நான் நிதமும் இந்தக் கோயில் வரும்போது தலைவாசலில் இருந்து என் வாய் அவள் நாமத்தையே முணுமுணுத்துகொண்டே இருக்கும். திரும்பும்போதும் அதே தலைவாசலில் அந்த நாமத்தினை முடித்துவிட்டு அவளுக்கு ஒரு நமஸ்காரமும் செய்துவிட்டு மனம் நிம்மதியோடு வெளியே வந்து நடை போட ஆரம்பிப்பேன். ஆனால் இன்று பார்த்து இப்போது வரை ஒரு முறை கூட என் வாயில் அவள் பெயரே வரவில்லை. எத்தனை அருகிலிருந்து அவளைத் தரிசித்தேன். ஊம்ஹூம்.. இல்லை. அவளை நான் கூப்பிடவே இல்லை. தேவி அப்படி என்னைக் கூப்பிட வைக்கவில்லை.. தாயே இது என்ன கொடுமை.. உடனடியாக நாவில் அவள் நாமம் சொல்லிக்கொண்டே தலைவாசல் வரை சென்று அவளுக்கு நமஸ்கரித்துவிட்டு வெளியே அவருடன் வந்தேன். காரில் வீடு சென்றோம். ஏதோ அவரின் தலையாய கடமை ஒன்று முடித்து விட்ட திருப்தியில் அவர் வேலைகளைப் பார்க்க சென்றுவிட்டார்.

அடுத்த நாள் காலைப் பயணம். ஒரு பூஜைப் பையில் என்னுடைய ஜீன்ஸ் பேண்ட் ஒன்றும் ஒரு முழுக்கை காக்கிச் சட்டையும் வைத்துக்கொண்டேன். இந்த டிரஸ் மூன்றாம் வருடம் லண்டனில் இருக்கும் மகனைப் பார்க்கப்போன போது விமானப் பயணத்துக்கு சுலபமானது என்று வாங்கித் தந்தான்.. இங்கிருந்து ஆட்டோவுக்கு முந்நூறு ரூபாய் தேவைப்படும். ஐந்நூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துக் கொண்டேன். என் பீரோவில் மீதி இருந்த ரொக்கத்தையெல்லாம் மருமகளிடம் கொடுத்து வழக்கப்படி அவள் பீரோவில் வைக்கச் சொன்னேன். ஆச்சரியமாகப் பார்த்தாள்.. ஆனாலும் சொன்னபடி செய்தாள். சாப்பிட்டேன். இரவு தேவியை நினைத்து வழக்கப்படி செய்யும் சாதனாவை செய்துவிட்டுத் தூங்கினேன். காலை குளித்துவிட்டு வழக்கம்போல் அந்த பூஜைப் பையை கையில் எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.

பேரன் எதிரே வந்தான். ‘என்ன பாட்டி! ஜாலியா கையை வீசிண்டே கோயிலுக்கு தினம் வாக்கிங் போவே.. இன்னிக்கு என்ன புதுசா கையிலே பை?. தேங்காய்ப் பழமா?’ என்று கேட்டான். அத்தோடு இல்லாமல் புதிதாக கையில் ஒரு சாக்லேட் கொடுத்தான். ’ரோடுல போகறச்சே சாப்பிடு. திடீர்னு சுகர் ஏறினா குறையும்’னு சொல்லி சிரித்தான். வாங்கிக்கொண்டேன். இந்தக் காலத்தில் சின்னப்பசங்களுக்கெல்லாம் அறிவு ஜாஸ்திதான்.

”எனக்கு சாக்லேட் கொடுத்தே இல்லே.. பதிலுக்கு இந்த என்னோட மொபைல் போன் எடுத்து வெச்சுக்கோ.”

”ஐய்யோ பாட்டி! வேணவே வேணாம்’. என்று மறுத்துக்கொண்டே அவன் நீட்டிய கையில் அந்த கைபேசியை கெட்டியாக அழுத்திக் கொடுத்தேன்.

”பாட்டி, எனக்கே எனக்கா?” சந்தேகத்தோடு கேட்டான். சிரித்தேன் நான். ”ஆமாம்.. நீயே வெச்சுக்கோ!” அவனுக்குப் பரம சந்தோஷம். எனக்கும்தான். என் கடைசித் தொடர்பையும் துண்டித்தாயிற்று. “ஆஹா.. ஒரே ஒரு சாக்லெட்டுக்கு ஆப்பிள் போன் கொடுத்திருக்கே.. நீ ரொம்ப கிரேட் பாட்டி..”

”ஆனா இது மூணு வருஷம் முந்தைய ஆப்பிள் மாடல்!”

”பாட்டி.. மரத்துல ஆப்பிள் எப்போ காய்ச்சினா என்ன?.. நம்ம கையிலே வரச்சே அது பளபளன்னு அழகா பழமா ருசியா இருந்தா போதும்.. ரொம்ப தேங்க்ஸ்.” சொல்லிவிட்டு அதை நோண்ட ஆரம்பித்துவிட்டான். பத்து வயசுப் பையன் சர்வ சாதாரணமாக ஒரு யதார்த்தத்தை அழகாகச் சொல்லியவன் எனக்கு கையைக் காட்டி வழி அனுப்பினான். ”கோயிலுக்கு போயிட்டு வந்தவுடன் திருப்பிக் கேட்கமாட்டே இல்லே?”

”இது உனக்கே உனக்குதான்”. நிதானமாக சொல்லிவிட்டு நடையைக் கட்டினேன். சாலையில் சென்ற ஆட்டோவைப் பிடித்து சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து அங்கிருந்த ஜாகேஷ்வர் பக்திக் கும்பலோடு சேர்ந்துகொண்டேன். ஏற்கனவே ரயில் பயணம் மற்ற ஏற்பாடுகளுக்கெல்லாம் பணம் கட்டிவிட்டதால் நன்றாகவே கவனித்துக் கொண்டார்கள்.

ஜாகேஷ்வர் வந்தவுடன் சூசகமாக என்னுடன் வந்த தெரிந்த இருவரிடம் நான் திரும்ப அவர்களுடன் வரப் போவதில்லை என்பதையும் அவர்கள் ஊர் திரும்பியதும் என் வீட்டாரிடம் சொல்லிவிடலாம் என்றும் சொன்னேன். அவர்கள் ஆச்சரியமாக என்னைப் பார்த்தார்கள். ஏதேனும் குடும்பப் பிரச்னையா என்று ஒருவர் மெல்லக் கேட்டார். ’அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. ஜாகேஷ்வரில் ஒரு சில மாதம் இருப்பேன். அதன் பிறகு எதுவும் சொல்வதற்கில்லை’ என்று மட்டும் சொன்னேன். ஆனால் அவர் அவசரக்குடுக்கை போலும். தன் கைபேசியின் மூலம் உடனடியாக என் வீட்டுக்குப் பேசிவிட்டார். அவர்களும் பதட்டப்பட்டார்கள் என்பது அவர் பேசிய முகபாவத்திலிருந்தே தெரிந்தது. ’உங்களிடம் ஒருமுறை பேசவேண்டும் நீங்கள் வீடு திரும்பவில்லை என்றதும் எங்கெங்கோ தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார்கள்.. நீங்கள் ஜாகேஷ்வர் பயணத்தையே சொல்லவில்லையா’ என்று கேட்டார். கொஞ்சம் உங்கள் மகனிடம் பேசுங்கள்’ என்றார். நான் பேச மறுத்து விட்டேன். மேலும் யாரும் இங்கே என்னைத் தேடி வரத் தேவையில்லை என்றும் ஜாகேஷ்வரில் கூட நான் தங்கப்போவதில்லை என்பதையும் சொல்லிவிட்டேன். ஆச்சரியமாக அவருக்குப் பதில் செய்தி கிடைத்தது. அம்மாவின் மனது புரிகின்றது, அம்மாவின் நலம்தான் முக்கியம் என்றும் அம்மாவை சில நாட்களோ அல்லது ஒரு மாதமோ தங்கவைப்பதில் ஆட்சேபணை இல்லை என்றும் அம்மா திரும்பி வரும்போது ஒரு தகவல் மட்டும் சொன்னால் போதும், தாங்களே அங்கே வந்து அழைத்துச் செல்வதாகவும் சொல்லிவிட்டார்கள். அவர்கள் என்னைப் பற்றி நன்கு அறிந்தவர்கள். அம்மாவின் ஆன்மீக ஆசைக்குக் குறுக்கே நிற்கவும் மாட்டார்கள். அதே சமயம் என்னைப் பிரியவும் சம்மதிக்கமாட்டார்கள். ஆனால் இவர்கள், இந்தக் குழுவினர் இனி இதைப் பற்றிப் பேசமாட்டார்கள்.

இங்கேதான் அமைதியான இந்த அழகிய பெண் வர்ஷினியைப் பார்த்தேன். இவளுடன் எப்படி பரிச்சயம் ஆரம்பம் என்பது நினைவில்லை என்ற அளவுக்கு பூர்வஜன்ம பழக்கம் போல எங்கள் பரிச்சயம் அமைந்தது. அங்கு இருந்தவரை என்னுடன் ஒட்டிக்கொண்டு என்னோடு ஏதாவது பேசிக்கொண்டே இருப்பாள். ஏனைய நேரம் என்னைப் போலவே சாதனா செய்ய ஆரம்பித்துவிடுவாள். அதிசயமான பெண். ஒருவாரம் இருந்து அவர்களிடம் பிரிந்து எங்கே போவது என்று முழித்தது வாஸ்தவம்தான். ஆனால் சரியாக எல்லோரும் போன இரண்டாம் நாளே என் வழிகாட்டியை என் தேவி அனுப்பி வைத்துவிட்டாள். அவருக்கும் பரம சந்தோஷம். ‘பழம் ஒன்று பழுத்து தானே அதைப் பரமானந்தமாய் ருசிக்க வந்துவிட்டது’ என்றார். அன்று முதல் அவரோடும் அவர் இல்லாமலும் இந்த மலைப் பகுதியில் நானே என் தேடல் முடிந்த திருப்தியோடு இங்கு திரிந்துகொண்டிருக்கிறேன். ஆனால் இந்த நிம்மதிக்கு ஒரு அளவே இல்லை.

”என்ன வர்ஷினி.. போதுமா என் பூர்வ கதை.. இன்னும் என் கல்யாணத்திலிருந்து ஆரம்பிக்கட்டுமா?”

அவள் தீர்க்காலோசனையில் ஆழ்ந்துவிட்டாள் போலும். திடீரென விழித்துக்கொண்டவள் கண்களில் கண்ணீர் வந்தது.

நான் பதறிவிட்டேன். ”ஏனம்மா.. ஏன் அழுகிறாய்? என் கதை அழுகைக் கதையா என்ன.. ஜாலியாக கேட்க வேண்டிய கதை.. என்னால் யாருக்கும் கஷ்டமோ நஷ்டமோ இல்லை பார்த்தாயா.. இன்னொன்றும் தோணுகிறது. என் வீட்டவர்கள் ஏன் என்னைத் தேடி வரவில்லை என்றால் நீ சொன்ன கரோனாவும் காரணம் இருக்கலாம் இல்லையா. நான் எங்கோ ஜாலியாக இந்தப் பயமே இல்லாமல் இருப்பது நல்லது என்று அவர்கள் நினைத்திருக்க வாய்ப்புண்டு”.

வர்ஷா கண்களைத் துடைத்துக்கொண்டே சொன்னாள். ‘மங்களா.. உங்க தேடல் இங்கே முடிஞ்சா மாதிரி என் தேடலும் இங்கேதான் முடியணும் நு எனக்கு ஆசி கொடுங்க..”

’அதுக்கு என்னம்மா.. என்னோட பரிபூரண ஆசி எப்போதும் உனக்கு இருக்கும். அதுக்கு எதுக்கும்மா அழுகை..?”

அவள் சற்று நிதானித்தாள். நடை கொஞ்சம் தளர்ந்தது போல பட்டது. ”உன் தேடலுக்கு என் உதவி தேவைன்னா என்னால என்ன முடியுமோ அதைச் செய்யறேன் வர்ஷினி.. உன்னை நான் எப்பவுமே சிரிச்ச முகத்தோடதான் பார்க்கணும். உன் தேடல்னா அது என்ன வகையானது சொல்லேன்’

அவள் என்னோடு கை கோர்த்துக் கொண்டாள். அந்தப் பிடிப்பில் ஏதோ ஆறுதல் தேடுவது போல எனக்குப் பட்டது. நிதானமாகப் பேசினாள்.

”நான் எனக்கு அம்மா இல்லேன்னு சொன்னேன் இல்லையா.. ஆனா அம்மா உயிரோட எங்கேயோ இருக்காங்க.. என் முகம் அவங்க பார்க்கலே.. அவங்க முகம் நான் பார்க்கலே.. எங்கப்பாவோட கொடுமை தாங்கமுடியாம நான் பிறந்தவுடனே அப்படியே கட்டில்ல என்னைத் தனியே விட்டுட்டு அவங்க போயிட்டாங்க.. நான் பெரிசா வளர்ந்து படிக்கறச்சேதான் எனக்கு விஷயம் எல்லாம் தெரிய வந்தது.”

மறுபடியும் அவள் கண்களில் வழிய ஆரம்பித்துவிட்டது. துடைத்துக்கொண்டே பேசினாள்.. ”எங்கப்பா ரொம்பக் கொடியவர். அந்தக் காலத்துலேயே ஏரியா ரவுடியா பேர் வாங்கின அரசியல்வாதி.. எங்கம்மாவை பெண் கேட்டிருக்கார். அவங்கம்மா அப்பா பயந்துபோய் வேற யாருக்கோ பேசி கல்யாணம் வரைக்கும் வரச்சே கல்யாண மேடையிலே கத்தியால அந்த மாப்பிள்ளையை வெட்டிப் போட்டுட்டு எங்கம்மாவை இவர் தாலி கட்டியிருக்கார். அம்மாவோட வாழ்வே இவரோட ஒரு வருடம்தான்.. ரொம்ப கொடுமை பண்ணுவார்னு நான் நிறைய கேள்விப்பட்டுருக்கேன். என்னை வயத்துல சுமந்துகொண்டே குடிகாரரான இவர்  கொடுக்கற அடிகளையும் உதைகளையும் எப்படித்தான் அம்மா தாங்கினாளோ? ஐய்யோ.. நினைச்சுப் பார்த்துப் பார்த்து அழுவேன்.. அத்தோட மட்டுமா விட்டுருக்கார்? அது எலெக்‌ஷன் டைம். பரிதாப அலை தன் மேல அதிகம் விழணும்னு நான் பிறந்தவுடனே எங்கம்மாவை கொலை செய்ய பிளான் பண்ணிருக்கார். பொண்டாட்டி பிரசவத்துல போயிட்டாள்னா பரிதாபத்துல ஓட்டு வந்து விழுமாம். விஷம் கொடுக்கவேண்டிய அந்த நர்ஸம்மா மனசு வராம விஷயத்தை எங்கம்மாகிட்டே சொல்லி எங்கேயாச்சும் ஓடிப்போயிடுன்னு தப்பிக்க வெச்சுருக்காங்க. இவ்வளோ கொடுமையையும் எங்கம்மா எங்கப்பாகிட்ட அனுபவிச்சுருக்காங்கன்னா அவங்க தப்பிச்சது நல்லதுக்குதானே.. எங்கேயோ போயிட்டாங்க.. ஆனா எங்கன்னு எங்கம்மாவைத் தேடுவேன்.. தெரிந்த இடத்துல அவங்க உறவுக்காரங்ககிட்டே எல்லா இடத்துலயும் தேடியாச்சு. வேஸ்ட். எங்கப்பாகிட்டே அடிக்கடி கேட்பேன்.. அவர் கட்சிக்காரங்ககிட்டே சொல்றாமாதிரியே எங்கிட்டயும் சொல்வார். ‘உங்கம்மா வருவாம்மா.. எங்க போயிருப்பா.. நானும் எல்லா இடத்துலயும் ஆட்கள்கிட்ட சொல்லி வெச்சுருக்கேன்.. பார்ப்போம்” இப்படி சொல்லிச் சொல்லியே இந்த இருபத்து நாலு வருஷமா என்னை வளர்த்துண்டு வர்ரார். நடுவுல ஒருநாள் என்னை விட பத்து வயசு ஜாஸ்தியான பெண்ணைக் கூப்பிட்டுண்டு வந்தார். ’இவதான் உன் சித்தி’ அப்படின்னார். ஆனா அந்த சித்தி என் கூட இருந்து என்னை வளர்க்க விரும்பலே. அவளுக்குன்னு தனியா அவ ஊர்லயே பெரிய பங்களா கட்டிக்கொடுத்தார். இவர்தான் அடிக்கடி அங்க போயி தங்குவார். நடுவுல ஒரே ஒரு தடவை என்னையும் அழைச்சுண்டு போய்க் காண்பிச்சார். ஏதோ விருந்தாளி மாதிரி இருந்தாலும் என்னால அங்க தங்கமுடியலே. ‘அப்பா.. எங்கம்மா விஷயம் ஏதாவது முயற்சி பண்றீங்களான்னு கேட்டேன். முயற்சி பண்ணிண்டே இருக்கேன்மா.. அப்படின்னு வழக்கப்படி சொல்லிவிட்டு திரும்ப அழைத்துக்கொண்டு வந்துவிட்டார்.”

’வர்ஷினி” என்று ஆதரவாக அணைத்துக்கொள்ளத்தான் முடிந்தது என்னால்.

”கொஞ்சம் மாசம் முன்னாடி எங்கப்பா எனக்கு இன்னொரு கொடுமையை செய்ய முன்வந்தார். அவர் கல்யாணம் பண்ணிண்ட பொண்ணுக்கு ஒரு தம்பி இருக்கானாம். அந்த தம்பிக்கு என்னைக் கல்யாணம் பண்ணப்போறாராம். சொத்தெல்லாம் ஒரே இடத்துல இருக்கும்னு அந்த பொண்ணு ஏதோ திட்டம் போட இவர் என்னைக் கேட்டுருக்கார். நான் முடியாதுப்பா’ன்னு சொன்னேன். ’சரிம்மா.. படிப்பு முதல்ல முடியட்டும், கல்யாணத்தை அப்புறம் வெச்சுப்போம்’னு சமாதானம் சொல்லி இருக்கார்,”.

தேவி.. இது என்ன சோதனை.. எனக்கு இனிமையான வாழ்வைக் கொடுத்த நீ ஏன் இந்தக் குழந்தை வாழ்வை இப்படிச் செய்கிறாய். ஓ.. சினிமாக் கதை போல இருக்கு. ஆனா சினிமாக் கதை எல்லாம் ஹீரோ தான் ஜெயிப்பார். வில்லன் தோத்துப்போவான். இங்கே வில்லனுக்கு வெற்றி மேல் வெற்றி.. அவளிடம் ஆதுரமாகக் கேட்டேன், ”ஏன்மா.. உங்கம்மாவோட தம்பி தங்கைகள்னு யாருமே உனக்கு உதவலியா?”

வெறுப்புடன் சிரித்தாள். ”அவர்களுக்கு என் மீது நல்ல அன்பு உண்டு. ஆனால் அப்பாவிடம் பயம். அவரை மீறிக்கொண்டு அவர்களால் ஏதும் செய்யமுடியவில்லை. மேலும் எங்கப்பாவோட பொஸிஷன் ஏற ஏற அவங்க ரொம்ப பயந்துட்டாங்க. அவர்களுக்கு அம்மா இருக்குமிடம் தெரியும் என்கிற சந்தேகம் எப்போதும் என்னிடம் உண்டு. ஆனால் அவள் திரும்பிவந்தால் இவர்களுக்கும் கஷ்டம் என்று நினைக்கிறார்களோ என்னவோ. அதனால் அம்மாவின் விஷயத்தில் அவர்கள் கூட கண்டுகொள்ளாமல் எதுவும் பேசுவதில்லை.  விட்டுவிட்டார்கள். இவர்களும் சப்போர்ட் செய்யமுடியாத நிலையில் எங்கே என் அம்மா போயிருப்பாள்? தற்கொலை செய்திருப்பாளோ என்று கூட நினைத்துக் கொள்வேன். பிறகுதான் எனக்கு அந்தச் செய்தி கிடைத்தது. ஒரு ஐந்து ஆண்டுகளாக ஜாகேஷ்வரம் பகுதியில்தான் எங்கோ இருக்கிறாள் என்ற நம்பத் தகுந்த செய்தியை என் பெரிய மாமா, என் அம்மாவுக்கு மூத்த அண்ணன், மிக ரகசியமாக ஆனால் இன்னொருவர் மூலமாகச் சொன்னார். அதனால்தான் ஐந்து ஆண்டுகளாகவே ஒரு முகம் தெரியாத அம்மாவைத் தேடி அடிக்கடி இங்கு வருகிறேன்!”,.

’ஆனால் மங்களா.. இப்போது தேவி என் விஷயத்தில் கருணை காட்டத் தொடங்கிவிட்டாள் என்றுதான் நினைக்கிறேன். படிப்பு முடிந்தவுடன் கல்யாணம் என்று சொன்னார் அல்லவா.. கரோனா வந்து உதவி செய்தது. இப்போதைக்குப் பரிட்சை இல்லை. இந்த கரோனா இன்னொரு உதவியும் செய்திருக்கிறது. இந்த உதவி மட்டும் முழுமையடைந்தால் எனக்கு இந்தக் கொடுமைகளிலிருந்து பூரண விடுதலை கிடைக்கும். என்ன பார்க்கிறீர்கள். கொரோனாவினால் உதவியா என்றா கேட்க வருகிறீர்களா மங்களா? ஆமாம். ஒரே வீட்டில் இருந்ததால் அப்பாவுக்கு, அவர் இரண்டாம் மனைவிக்கு அந்த மனைவியின் தம்பிக்கு, அவர்கள் வீட்டு சமையல்காரனுக்கு, டிரைவருக்கு என எல்லோருக்கும் கரோனா வந்து இப்போது அத்தனை பேரும் ஆஸ்பத்திரிவாசம். அங்கே என் அப்பா தப்பிப்பாரா என்பது சந்தேகம்தான் அந்த தம்பியும்தான்.. அப்படித்தான் சொல்லறாங்க. கோடி கோடியாக கள்ளத்தனமா சொத்து சேர்த்தவங்க இலவசமா ஆயிரத்தெட்டு நோய் கூட வாங்கி வைத்திருக்கிறார்கள். குடிகாரக் கும்பல்கள்..”

சோகமா வந்ததா இல்லை சந்தோஷமாகச் சொன்னாளா என்று தெரியவில்லை. இருந்தாலும் இந்த கரோனாவைப் பற்றிப் பேசும்போது நல்லவர்கள் கெட்டவர்கள் என்ற பேதம் இந்த தொத்து வியாதிக்குக் கிடையாது என்று முதலிலேயே சொன்னவள்தான்..

”’எவ்வளவு கெட்டவர்களாக இருந்தாலும் நம்மைப் பொறுத்தவரை அவர்களை மன்னிக்கவேண்டும் வர்ஷினி. உன்னை இத்தனை வருடம் வளர்த்திருக்கிறார் இல்லையா?’ அன்போடுதான் சொன்னேன்.

”இல்லை மங்களா! அவர் என்னை வளர்த்த காரணம் எல்லாம் பணம் சொத்து மேல் உள்ள பிடிப்புதான். என் பெயரில் உள்ள சொத்துகள் ஏராளம். எல்லாம் அவருடையதுதான். என் மேல் உள்ள அன்புக்கு அதுதான் காரணம். மகள் பாசம் எல்லாம் வெளிவேஷம். அவர் ஒரு கொடியவர் என்று நான் சொன்னதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளவேண்டாம். கொண்ட பெண்டாட்டியைக் கொலை செய்யத் தயங்காதவர் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளவும். இவர் அரசியல் கொடுமையைக் கேட்டு இன்னமும் ஜனங்கள் நடுங்குவார்கள்.  நான் அவரைப் பற்றியெல்லாம் சிந்தித்து என் மன அமைதியைக் கெடுத்துக் கொள்வதில்லை. ஏன் எப்போது அம்மா இவரிடம் அனுபவித்த கொடுமை விவரங்கள் எல்லாம் எனக்குத் தெரிய வந்ததோ அன்றிலிருந்தே அவர் எனக்கு உறவில்லாதவர், யாரோ வேறு ஒரு கொடியவர்.. அவர் வெறுக்கத்தக்கவர் என்ற முடிவுக்கு நான் வந்தாயிற்று. அவர் உயிரோடு வந்தாலும், வராவிட்டாலும் எனக்கு அந்த குடும்பத்தைப் பற்றியோ அவரைப் பற்றியோ எவ்விதக் கவலையுமில்லை. அவரால் எனக்கு எந்தவித கஷ்டமும் தரமுடியாது என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. நான் தேவியை வேண்டிக்கொள்கிறேன். அவள் உதவுவாள். அம்மா விஷயத்திலும் என்றாவது ஒருநாள் உதவாமலா போய்விடுவாள்?”.

”வர்ஷினி! என் அனுபவக் கதைக்கு முற்றிலும் மாறுபட்ட மிகக் கொடிய வாழ்வை இந்த சின்ன வயதில் அனுபவித்திருக்கிறாய். எனக்கு இந்த ஆறு மாத காலத்தில் நிறைய சாதுக்கள் பரிச்சயம் ஆனார்கள். பல சாதுக்கள் எதிர்காலத்தையும் போன பிறவிகளையும் அறிந்த பெரியவர்கள். ஆனால் நாம் கேட்காமல் அவர்களே சொல்லவேண்டும். கேட்டால் அதைப் பற்றிப் பேசமாட்டார்கள். விசித்திரமானவர்கள். ஒருமாதம் முன்பு ஒரு சாது என்னைப் பார்த்து தான் எங்கேயோ பார்த்தவளாய் தெரிகிறாய்’ என்றார். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. அவரை இதுவரைப் பார்த்ததில்லை என்று அழுத்திச் சொன்னேன். அதற்கு அவர் ‘அதற்கென்னம்மா.. இந்த ஜென்மத்தில் என்னைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்றாலும் போன ஜென்மத்தில் பார்த்திருக்கிறாய்.. ஜென்ம ஜென்மப் பலன் மட்டுமே உன்னை இங்கே இழுக்கும்” என்றார். நான் கொஞ்சம் அதிசயப்பட்டேன். ஆனால் அதுதான் உண்மை என்பதையும் உணர்ந்தேன். தேவியின் மகிமையே வேறு. அவள் உனக்கு நிச்சயம் அருள்புரிவாள். என்னை நம்பு.. இன்றோடு உன் கஷ்டமெல்லாம் விலகட்டும்.’ என்று அவள் தலையில் கை வைத்துச் சொன்னேன். ஏனோ அப்படிச் சொல்லத் தோன்றியது.

மலை இறக்கத்தில் கிழக்குப் பக்கமாக கீழே இறங்கமுற்பட்டோம். வர்ஷினி என் வார்த்தையில் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கவேண்டும். தான் ஒவ்வொருமுறை எப்படி அப்பாவை ஏமாற்றி ஜாகேஷ்வரம் ஓடி வருவதையெல்லாம் சிரித்துக் கொண்டே சொன்னாள். இவள் பெயரில் ஏராளமாக கள்ளப்பணங்கள் சேர்த்துப் போட்டிருப்பதையும் அவர் ஆடிட்டர் மூலம் தனக்கு ஒரு வங்கி அட்டை இருப்பதையும் சொன்னாள். ஆனால் தான் தேவைப்பட்டாலொழிய அந்த அட்டையை பயன்படுத்துவதில்லை என்றும் சொன்னாள்.

”வெளிநாடு சென்று படிக்க விருப்பம். அதற்கு வேண்டுமானால் இனி அதைச் செலவு செய்யலாம் என்றிருக்கிறேன். இந்தமுறை ஏதோ பிடிவாதம்.. என் தேடலுக்கு ஒரு முடிவு தெரியாமல் திரும்பக்கூடாது என்று எனக்குள் சொல்லிக்கொண்டுதான் புறப்பட்டேன். இல்லாவிட்டால் இங்கேயே மலைமேலாக ஏறிக்கொண்டே இருக்கவேண்டும். கீழே இறங்காமல் தேவியை எங்கேயோ மேலே உயரத்தில் இருப்பதாக நினைத்துக்கொண்டு ஏணிப்படியில் ஏறுவது போல அவளை நினைத்துக்கொண்டே ஏறிக்கொண்டே இருக்கவேண்டும். எல்லாவற்றிற்கும் முதலில் அம்மா கிடைக்கவேண்டும். அதன் பிறகுதான் இந்த எதிர்கால திட்டங்கள் எல்லாம்.”

”அதுவரை பணத்துக்கு என்ன செய்வாய்?

‘நீங்கள் என்ன செய்வீர்களோ அதையேதான் நானும் செய்வேன் மங்களா.. எனக்குத் தெரியும் இங்கே பணத்துக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லை என்பது.. என்னிடம் பாருங்கள்.. ஒரு பைசா இல்லை.. நகை இல்லை.. மொபைல் இல்லை.  எல்லாமே உங்களைப் போலத்தான். கிடைத்தால் சாப்பிடுவது.. இல்லையேல் பட்டினி கிடப்பது.. ஆனாலும் இங்கே என் வாழ்க்கை இனிமையாகத்தானே போகிறது.. நீங்கள் அருள் புரியுங்கள் ஆசீர்வாதம் செய்யுங்கள்.. ஒன்று அம்மா கிடைக்கவேண்டும், இல்லையேல் பரிபூர்ணமாக என் மனது இங்கேயே குடியேற விரும்பவேண்டும் என்று ஆசி கூறுங்கள்.’ என்று சட்டென குனிந்து என் காலைத் தொட்டாள்.

நான் ஏதும் சொல்லாமல் மனதில் தேவியை நினைத்துக்கொண்டு அவளைத் தொட்டு ஆசிர்வதித்தேன்.. எனக்கென்ன தெரியும்? என் குருநாதருக்குத் தெரியும்.. அவரிடமே கேட்கலாமோ.. வேண்டாம் நான் அவரிடம் என்னைப் பற்றி ஏதும் கேட்காமலே அல்லவா அழைத்துக் கொண்டார்?

மாலை மங்கும் சமயத்தில்தான் அந்த கிராமத்துள் நுழைந்தோம்.. இருட்ட ஆரம்பித்துவிட்டது.. மலையின் கிழக்குப் பக்கங்கள் சீக்கிரம் இருட்டிவிடும். மலையின் மேற்குப் பகுதியில் இந்நேரம் பளிச்சென்று இருக்கும். இயற்கையின் அழகை ரசிக்கவேண்டும். எங்கள் இருவரைக் கண்டதும் யாரோ ஒரு ஆதிவாசி சிரித்துக்கொண்டே நாங்கள் போகவேண்டிய இடத்தைச் சுட்டிக் காட்டினார். அவருக்கு எப்படித் தெரியும் நாங்கள் வருவது என்பது போல வர்ஷினி என்னைப் பார்த்தாள். இங்கு எதுவுமே அதிசயமில்லை என்பதாக நான் அவளைப் பார்த்தேன்.

தூரத்தில் சங்கு ஊதும் சப்தம் கேட்து. இரண்டு நிமிஷம் மேலாக அந்த சங்கு ஊதிக்கொண்டே இருந்ததைக் கேட்டோம். அந்த சங்கூதல் வர்ஷினியை சமாதானப்படுத்தியதோ என்னவோ.. மிகவும் சந்தோஷப்பட்டாள்.

’மங்களா.. அந்த சங்கூதலைக் கேட்டீங்களா.. சாதாரணமா ஒரு நிமிஷம் தொடர்ச்சியா ஊதினாலே மூச்சிரைக்கும். நானும் முயற்சி பண்ணியிருக்கேன். ஒரு நிமிஷம் மேலே முடியலே.. யாரோ சாது இன்னும் ஊதிண்டே இருக்கார் பார்த்தீங்களா.. நல்ல சாதனா போல…. தினம் நான் ரெண்டு மணி நேரம் பண்றேன்.. இன்னும் நிறைய நேரம் பண்ணினா நானும் ஒருநாள் ரெண்டு மூணு நிமிஷத்துக்கு இந்த சங்கை ஊதுவேன்..”

”ஆமாம்மா! என் குருநாதர்தான் சங்கு ஊதுவார். நீ சொல்லறது சரி.. நான் இதுவரை அதெல்லாம் பண்ணியதில்லே. ஆனா சாதனா மாத்திரம் தினம் முடிஞ்ச அளவுக்குப் பண்ணனும்… இன்னிக்கு அந்த கிராமத்துல என்னோடு தங்குவே இல்லையா, நானும் நீயும் சேர்ந்து பண்ணலாம்”.

நான் வர்ஷினியைப் பக்கத்தில் வைத்து அணைத்துக்கொண்டேன். சங்கு ஊதல் நின்றது. இன்னும் நடந்து கொஞ்ச தூரம் சென்றதும் அங்கே சிலர் கூடி உட்கார்ந்து நெருப்பு வைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தோம். தூரத்திலேயே நின்றோம். குருநாதர் கூப்பிடுவார்.. அப்போது போகலாம் என்று வர்ஷினியிடம் சொன்னேன்.

வர்ஷினியின் கூரிய கண்களுக்கு அங்கே மூன்று சாதுக்கள் தென்பட்டதைத் தெரிவித்தாள். அதில் ஒருவர் பெண் சாது,  மற்ற இருவரும் ஆண் சாதுக்கள்’ என்றாள்.. ஆண் என்றும் பெண் என்றும் ஆன்மீகத்தில் அதுவும் இங்குள்ள சாதுக்களில் வேற்றுமை ஏது என்று பதிலுக்கு நான் சொன்னேன். என் காதில் வந்து மெல்ல வர்ஷினி ஓதினாள்.

“அந்த இருவரில் யார் உங்கள் குருநாதர்?”

நானும் மெல்லச் சொன்னேன். ’அவர்கள் இருவருமில்லை. மாதாஜிதான் என் குருநாதர், எனக்கு மட்டுமல்ல, மற்ற இருவருக்கும் கூட குரு”

”ஓ.. அப்போ சங்கு ஊதியது மாதாஜியா.. அவங்ககிட்ட இந்தப் பயிற்சியைக் கத்துக்கணுமே..” .

இருளும் வெளிச்சமும் போட்டி போட்டுக்கொண்டு ஒன்றை ஒன்று வெல்லும் அந்தத் தருணத்தில் இருளே வென்றாலும் மெதுவாக ஏற்றப்பட்ட நெருப்பு கொஞ்சம் வளர்ந்து எங்கள் நால்வரையும் மங்கலாகத்தான் முகம் பார்க்க வைத்தது. மாதாஜி எங்களை அருகில் அழைத்தார். முதலில் சென்றவள் மாதாஜிக்கும் மற்ற இருவருக்கும் நமஸ்காரம் செய்தேன். வர்ஷினியும் அந்த மூவரையும் என்னையும் சேர்த்து வணங்கிவிட்டு எழுந்தாள்.

நான் அவர்களிடம் வர்ஷினியை அறிமுகம் செய்தேன். அன்னையைத் தேடிய அபலை இவளுக்கு அந்த மூவரின் ஆசிகளையும் அள்ளித் தரவேண்டுமென பணிவாக மெதுவான குரலில் கேட்டுக்கொண்டேன். சாதுக்கள் ஏதும் பேசவில்லை. அவளையும் சேர்ந்து அவர்களுடன் உட்காரச்சொன்னார்கள்.

மாதாஜி சற்றே முறுவலித்தது எனக்குத் தெரிந்தது. அவர் வர்ஷினியைத் தன் பக்கத்தில் அழைத்துக்கொண்டார். வர்ஷினி ஆவலுடன் அவரிடம் ஒட்டிக்கொண்டாள். எனக்கு எப்படியாவது மாதாஜி வர்ஷினியின் மனவருத்தத்தைப், போக்க வழி செய்யவேண்டும் என்று மனதுள் என் தேவியை வேண்டிக்கொண்டேன். நான் தேடாமலே என்னைத் தேடி வந்து என் குருவாக அமைந்து என்னை ஆட்கொண்டவர்.. என்னையே நான் யார் என எனக்கு அறிமுகம் செய்தவர்.. என் தேடலுக்கும் முடிவு கட்டியவர் ஆயிற்றே.. இந்தச் சின்னப் பெண்ணின் தேடலுக்கும் ஒரு தீர்வு சொல்லவேண்டும். இதையெல்லாம் என் மனதுக்குள்தான் வேண்டிக்கொண்டேன். என் மனதில் இருப்பவர் இல்லையா.. அவருக்குத் தெரியும்..

மாதாஜியின் கண்கள் அந்தப் பெண்ணிடமே நிலைகொண்டன. என்னை எப்படி முதல்முறை பார்த்தாரோ அதே காந்தப் பார்வை இப்போதும் அவரிடம் இருந்தது.

என்னவோ தெரியவில்லை. நான் பிறந்தது முதல் எந்தக் கஷ்டமும் படாமல் வளர்ந்து எவ்வித பெரிய துன்பமும் இல்லாமல் திருமண வாழ்க்கையில் புகுந்து அதே போல எவ்வித துன்பமும் இல்லாமல் இதோ இங்கே வந்தாயிற்று. ஒருவேளை விதி தடம் மாறி  இந்த வர்ஷினி போன்ற நிலையில் நான் இருந்தாலும் சரி, அல்லது அவள் தாய் இருந்த நிலையில் நான் தள்ளப்பட்டிருந்தாலும் சரி, நான் எப்போதோ தற்கொலை செய்து உயிர் விட்டிருப்பேன் என்பது மட்டும் நிச்சயம் என மனதில் பட்டது. வர்ஷினியும் சரி, வர்ஷினியின் தாயும் சரி… எத்தனை உறுதி படைத்தவர்கள்.. தனக்கு தேவி அப்பேர்ப்பட்ட தண்டனையை வழங்கவில்லை.. ஆனால் இனியும் வர்ஷினிக்கு எந்தக் குறையும் வரவிடக்கூடாது. அதற்கு மாதாஜியின் அருள் அவளுக்குப் பரிபூரணமாக அமையவேண்டும்.

என்ன இது, நாற்பது வருடங்களுக்கு மேல் தாம்பத்யத்தோடு வாழ்ந்த கணவர் மீதோ, பெற்றெடுத்த பிள்ளைகள் மீதோ வராத பரிவு இந்தப் பெண்ணிடம் தனக்கு ஏன் வரவேண்டும்?.. பற்று என்பதை மிகச் சுலபமாக தேவியின் அருளோடு அறுத்தெறிந்துவிட்டுத்தானே இங்கு வந்தேன். ஆனால் இந்தப் பெண்ணின் மேல் ஏன் பிடிப்பு அதிகமாகவேண்டும்.. இல்லை..இல்லை.. இவள் அனுபவித்த வேதனைகள் பரிதாபமாக மாறுகின்றன.. அது பந்தமாக மாற வழியில்லை என்று என் மனதுள் கூறிக்கொண்டேன்.

மாதாஜி அந்தப் பெண்ணின் கையைப் பிடித்துக் கொண்டே என்னைப் பார்த்துப் பேசினார். ”இன்னும் சற்று நேரத்தில் பிரசாதம் வந்துவிடும். உண்டு விட்டு உன் சாதனாவை நீ ஆரம்பித்து விடு மங்களா.. உனக்கு தனியாக ஒரு குடிசை கொடுக்கச் சொல்கிறேன். இந்தப் பெண் இந்த இரவு என்னோடு இருக்கட்டும். என் வழக்கமான தியானம் முடிந்தவுடன் நான் என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன்.. நீ கவலையே படாதே..!”

ஆஹா,, குருநாதருக்குத் தெரியாதா என் மனத்தின் நினைவுகள். என் மனதுள் என்றும் இருந்து ஆட்டுவிக்கும் சக்தி மாதாஜி அல்லவா.. அவர் பாதம் தொட்டு வணங்கி நான் எழுந்து கொண்டேன். மற்ற இரு சீடர்களுக்கும் மாதாஜி விடை கொடுத்தார்,

அடுத்த நாள் காலை எழுந்ததும் என் சாதனா முடிந்தநிலையில் மாதாஜியைக் காண அவர் குடிசைக்குள் நுழைந்தேன். அங்கு ஆச்சரியமான ஒரு நிலை. மாதாஜியின் மடியில் தலை வைத்து வர்ஷினி நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தாள்.

மாதாஜி உறங்கவில்லை போல. ஆனால் இது அவருக்கு சகஜநிலைதான். மாதாஜியால் நாட்க்கணக்கில் கூட உறங்காமல் இருப்பதை நானே பார்த்திருக்கிறேன். தேவியின் சாட்சாத் மனித உருவம் அவர். இரவு முழுதும் தூங்கவில்லையென்றாலும் அவர் முகம் மிகப் பிரகாசமாக அந்தக் காலை வேளையில் இருந்ததால் ஒரு பரவசத்தோடு அவர் முன் நமஸ்கரித்தேன். அவர் என்னைத் தன் பக்கத்தில் உட்கார்த்தி வைத்துக் கொண்டார். மிக மெல்லமாகப் பேசினார்.

”வர்ஷினியை, அவள் எழுந்ததும் நீ ஜாகேஷ்வர் வரை அழைத்துச் சென்று விட்டு வா. செல்லும் வழியில் அவளோடு பேசு. இனி இவள் உன் சிஷ்யை என்று ஏற்றுக்கொள். அவள் உள்ளத்தில் இனி நீ எப்போதும் இருந்து அவளைக் கரையேற்ற நான் தேவியை வேண்டிக்கொள்கிறேன்”

சந்தோஷமாகக் கேட்டேன்.  ”ஓ.. இனி வர்ஷினி இங்கேயே எங்காவது இருக்க வேண்டுமா.. அவள் அதைத்தான் என்னிடம் நேற்று கேட்டாள்.” மெதுவான குரலில்தான் கேட்டேன்.

‘இல்லை மங்களா! இவளுக்கு அந்தக் காலம் இன்னும் வரவில்லை. ஆனால் உனக்கு ஒரே ஒரு ரகசியம் சொல்கிறேன். இவளிடம் கூட சொல்லாதே.. இனி இவள் வாழ்க்கையில் கவலை என்பதே இருக்காது. உனக்கு எப்படி எல்லாம் சீராக உன் வாழ்க்கை இதுவரை சென்றதோ அதே நிலை இவளுக்கும் தொடரும். இவளும் வருவாள். இப்போதல்ல.. உன்னைப்போலவே தன் கடமைகளை முடித்துவிட்டு வருவாள். ஆனால் அடிக்கடி உன்னைப் பார்க்க ஜாகேஷ்வர் வருவாள். தவறாமல் பார்த்து இவளுக்கு சந்தோஷத்தைக் கொடு. போகும் வரை போகட்டும்.. அடுத்து நடப்பது அனைத்தும் தேவியின் கையில் இருக்கும்போது நமக்கேன் கவலை. நாமெல்லாருமே அவள் குழந்தைகள். நம் எல்லோருக்குமே அவள்தான் தாய்.”

நான் கையெடுத்துக் கும்பிட்டேன். மாதாஜியின் கை தன் மடி மீது தலைவைத்து நிம்மதியாக தூங்கிக்கொண்டிருந்த வர்ஷினியின் முடிக்கற்றைகளை வருடியது.

’ஜீ! இவள் உங்கள் மடி மீது..” தயக்கமாய்தான் குருநாதரிடம் கேட்டேன். அவர் சிரித்தார்.

”இரவு முழுதும் பேசிக்கொண்டிருந்தோமா.. அவள் இனி என்ன செய்ய வேண்டும் என்று விவரமாக சொல்லி இருக்கிறேன். அழுதழுது ஓய்ந்திருந்தாள். அவளுக்கு சற்று நேரம் முன்புதான் உறக்கம் வந்தது போலும். என்னைக்  கேட்டாள். ’அம்மா ஒருமுறை உன் மடியில் தலைவைத்துப் படுக்கும் உரிமையைக் கொடு’ என்றாள். இதைக் கூட ஒரு பெற்ற தாய் செய்யாவிட்டால் எப்படி?.. வாம்மா.. வந்து படுத்துக் கொள்!’ என்றேன்.. ஆனந்தமாகப் படுத்தாள். உடனே உறங்கி விட்டாள். பார் அவள் கை என் கையை எப்படி இறுகப் பற்றியிருக்கிறது..”

என் ஆச்சரியம் எல்லை கடந்தது.

”மாதாஜி! அப்படியானால் அந்த உத்தமத் தாய் நீங்களா? தேவி.. தாயே. உன் மகிமையை என்ன சொல்வது?”.

மாதாஜியின் மலர்ச்சியான முகம் மேலும் ஒளி வீச வாயில் ஒரே ஒரு சிறு புன்னகை மட்டும் எனக்கு பதிலாய் வந்தது..

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.