அமெரிக்காவில் ஏழைகள் படும் பாடு

நாகேஸ்வரி அண்ணாமலை

கோவிட்-19 உலகில் பரவ ஆரம்பித்ததிலிருந்து எல்லா நாடுகளையும் – ஏழை நாடுகள், பணக்கார நாடுகள், கம்யூனிஸ்ட் நாடுகள், ஜனநாயக நாடுகள் – பல விதங்களில் பாதித்திருக்கிறது. கொரோனா வைரஸ்தான் உண்மையான நடுநிலையாளர்; எவரையும் விட்டுவைக்கவில்லை. தன் பண பலத்தாலும் படை பலத்தாலும் எந்த நாட்டையும் பணியவைத்துவிடலாம் என்று மமதை கொண்டு நடக்கும் நாடான அமெரிக்காவைத்தான் இந்த வைரஸ் அதிகமாகப் பாதித்திருக்கிறது. நான்தான் எல்லாவற்றிலும் முதல் என்று மார்தட்டிக்கொள்ளும் அமெரிக்கா இதிலும் முதல் இடம் வகிக்கிறது.

ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு இதைப் பற்றி எந்தவிதக் கவலையும் இருப்பதாகத் தெரியவில்லை. சரமாரியாகப் பொய் சொல்லுகிறார். தான் முதலிலேயே கோவிட்-19 பல இறப்புகளை விளைவிக்கும் என்று சொன்னதாகக் கூறுகிறார். கோவிட்டின் விளைவுகள் தோன்றத் தொடங்கிய காலத்தில், ‘எதற்கும் பயப்படத் தேவையில்லை. மாயமாக அது மறைந்துவிடும்’ என்று சொன்னவர் இவர். இவர் தேர்ந்தெடுக்கப்பட்ட நாளிலிருந்து அமெரிக்காவுக்கு சனி பிடித்துவிட்டது. பதவியை விட்டுப் போகும் முன் இன்னும் என்னென்ன கேடு விளைவிக்கப் போகிறாரோ. அமெரிக்காவில் எல்லாம் சட்டப்படி நடக்கும் என்று நினைத்ததெல்லாம் இப்போது முடிந்த கதையாகியிருக்கிறது.

ஒரு அமெரிக்கக் குடிமகனுக்கு அமெரிக்க ஜனாதிபதியாவதற்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டுமோ அவை எதுவும் இல்லாதது மட்டுமல்ல, என்னென்ன இருக்கக் கூடாதோ அவை எல்லாம் இருந்தன. இவர் எப்படி ஜெயிப்பார் என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்க, இவருக்கு எதிராகப் போட்டியிட்ட ஹிலரி கிளின்டன் தான் எப்படியும் ஜெயித்துவிடுவோம் என்று முழு நம்பிக்கையுடன் இருக்க, ட்ரம்ப் ஜெயித்துவிட்டார் என்ற செய்தி எல்லோரையும் உலுக்கிவிட்டது. சரி, ஜெயித்த பிறகு ஓரளவுக்கு மாறிவிடுவார் என்று என்னைப் போன்றவர்கள் நம்பிக்கொண்டிருக்க, அந்த நம்பிக்கையிலும் மண்ணைப் போட்டுவிட்டார். இப்போது கோவிட்-19 அமெரிக்காவைத் தாக்கிய நாளிலிருந்து இவர் பேச்சும் நடவடிக்கைகளும் சகிக்க முடியாதவாறு போய்க்கொண்டிருக்கின்றன.

வைரஸ்ஸினால் லட்சக் கணக்கான தொழிலாளிகள் வேலை இழந்திருக்கிறார்கள்; பொருளாதாரம் வேகமாகச் சரிந்துகொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் கொடுப்பவர்களால் அது சரியும் அளவுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இதன் விளைவுகள் சரியாவதற்குப் பல ஆண்டுகள் ஆகலாம் என்கிறார்கள். அமெரிக்காவில் யாரும் வேலையில்லாமல் இருந்தால் அவர்களுக்கு மத்திய அரசு வேலை இழப்பு ஊதியம் (unemployment benefits) என்று ஒரு தொகையை குறிப்பிட்ட சில மாதங்களுக்குக் கொடுக்கும். அந்தத் தொகையைப் பெற்றுத் தொழிலாளர்கள் வீட்டு வாடகை, உணவு போன்ற அன்றாடத் தேவைகளைக் கவனித்துக்கொள்வார்கள். அடுத்த ஆண்டு வருமான வரியைக் கணக்கிடும்போது அதை இந்த வருட வருமானத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதாவது, அதற்கும் வருமான வரி உண்டு. ட்ரம்ப் ஏழை எளியவர்கள் வயிற்றில் அடிப்பதற்கு ஓரளவும் தயங்க மாட்டார். அவரை ஆதரிக்கும் குடியரசுக் கட்சி செனட்டர்கள் அவரோடு முழுமையாக இதில் ஒத்துழைக்கிறார்கள். லிண்ட்ஸி கிரஹாம் என்னும் செனட்டர் வேலையில்லதவர்களுக்குக் கொடுக்கும் தொகையை கூட்டுவது என்பது ‘எங்கள் உயிர் போன பிறகுதான் நடக்கும்’ என்றார். அதற்குப் பத்திரிக்கையில் பத்தி எழுதும் ஒருவர், ‘ஆம், தொழிலாளிகள் உயிர் போன பிறகுதான்’ என்று நக்கலாகச் சொல்கிறார்.

அமெரிக்காவில் மருத்துவக் காப்பீடு இல்லாதவர்களின் பாடு மிகவும் பரிதாபத்திற்குரியது. வேலைபார்ப்பவர்களுக்கு அவர்கள் வேலைபார்க்கும் நிறுவனங்கள் மருத்துவக் காப்பீடு கொடுக்க வேண்டும் என்று ஒரு சட்டம் இருக்கிறது. இதனால் பலர் எப்போதும் ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்துவிடுவார்கள். இப்போது லட்சக் கணக்கானவர்களுக்கு வேலை போயிருப்பதால் வேலை கிடைப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. வேலை இல்லாததால் மருத்துவக் காப்பீடும் இல்லை. வேலை போய்விட்டால் மருத்துவக் காப்பீடும் இல்லாமல் போய்விடுமாதலால் ஒபாமா அவர்களுடைய கஷ்டத்தை ஓரளவாவது நிவர்த்தி செய்வதற்கு எல்லோராலும் எடுத்துக்கொள்ளக் கூடிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஒன்றைக் கொண்டுவந்தார். ஒபாமா செய்த எந்த நல்ல காரியத்தையும் ஒபாமா செய்தார் என்பதற்காகவே அதைக் கெடுத்துவிடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் ட்ரம்ப் இந்தத் திட்டத்தையும் குலைப்பதற்கு நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறார். அதுவரை, நல்ல வேளை, சிலருக்காவது ஒபாமா திட்டத்தால் மருத்துவக் காப்பீடு கிடைத்துக்கொண்டிருக்கிறது. ஒபாமா திட்டத்தை எடுத்துவிட்டால் ஒருவர் இன்சூரன்ஸ் எடுத்துக்கொள்வதற்கு முன்பிருந்த வியாதிகளின் விளைவுகளுக்கு இன்சூரன்ஸ் கம்பெனி பொறுப்பேற்காது; இப்போது கோவிட்-19-னால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அந்த நிலை ஏற்படலாம்.

உலகிலேயே பணக்கார நாடான அமெரிக்காவிலேயே இப்போது பலர் பட்டினியால் வாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஏழைகளில் வேலை இழந்தவர்களுக்கு இலவச உணவு வழங்கும் இடங்கள் கூட்டத்தைச் சமாளிக்க முடியாத நிலைக்குப் போயிருக்கின்றன. அங்கு தங்கள் கார்களில் காத்து நிற்கும் மக்களின் வரிசை ஒரு மைலுக்கும் மேல் இருக்கிறது. இந்தச் சிக்கலான கட்டத்தில் ஏழைகளுக்கு உணவு வழங்கும் திட்டத்தை மேலும் கொஞ்சம் விரிவுபடுத்த குடியரசுக் கட்சிக்காரர்கள் – ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் – மறுக்கிறார்கள். கோவிட் பரவ ஆரம்பித்ததிலிருந்தே வேண்டிய ஏற்பாடுகள் செய்திருந்தால் அது இத்தனை தூரம் அமெரிக்காவில் பரவியிருக்காது என்பது பலரின் வாதம். அதைப் பரவவிட்டுவிட்டு அதனால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு உதவுவதற்கு இவர்களுக்கு மனம் வரவில்லை.

ஏழைகளுக்கான உதவியை அதிகரித்தால் பட்ஜெட் பற்றாக்குறை வந்துவிடும் என்று இவர்கள் கூறுகிறார்கள். பட்ஜெட் பற்றாக்குறையைப் பற்றி இந்தக் குடியரசுக் கட்சிக்காரர்கள் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. 2017-இல் அதாவது ட்ரம்ப் ஜனாதிபதியாக ஆன பிறகு, கம்பெனிகளுக்கு வரியைக் குறைத்தார்கள்; அதனால் வந்த பட்ஜெட் பற்றாக்குறையைப் பற்றி எதுவும் பேசவில்லை. இப்போது சிறிய கம்பெனிகளுக்கு அரசு கொடுக்கத் திட்டமிட்ட கடன் வசதியை இந்தப் பெரிய கம்பெனிகளே பறித்துக்கொண்டிருக்கின்றன. ஏழைகளுக்கு உணவு உதவி செய்வதால் பற்றாகுறை வந்துவிடும் என்று சொல்லும் குடியரசுக் கட்சிக்காரர்கள் இன்னொரு அபத்தமான வாதத்தையும் வைக்கிறார்கள். ஏழைகளுக்கு இப்படி உதவினால் அவர்களுக்கு உழைத்துச் சம்பாதிக்க வேண்டும் என்ற உந்துதல் போய்விடுமாம்.

அமெரிக்காவில் இப்போது அமலில் இருக்கும் சமூக விலகலைக் கடைப்பிடிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, அதனால் பலர் உயிர் இழக்க நேரிட்டாலும் பரவாயில்லை வணிக நிறுவங்கள் எல்லாம் உடனேயே செயல்பட ஆரம்பிக்க வேண்டும் என்று ட்ரம்ப்பும் அவருடைய ஆதரவாளர்களும் கூக்குரலிடுகிறார்கள். சிலர் இறப்பதை தவிர்க்க முடியாது என்றும் சீக்கிரமே வணிக நிறுவனங்கள் செயல்பட ஆரம்பிக்க வேண்டும் என்று ட்ரம்ப் கூறிவருகிறார். எப்பேர்ப்பட்ட தலைவர் பாருங்கள்! மக்களின் நன்மைகளுக்காகப் பாடுபட வேண்டிய ஒரு தலைவர் மக்களில் ஒரு பகுதியினர் இறந்தாலும் பரவாயில்லை; அமெரிக்காவின் பொருளாதார ஆதிக்கம் குறையக் கூடாது என்கிறார். அமெரிக்காவின் பொருளாதாரம் சரிந்தால் தன்னால் இரண்டாவது முறையாகத் தேர்தலில் ஜெயிக்க முடியாது என்று பயப்படுகிறார். மக்களுக்கு என்ன ஆனாலும் ஆகட்டும், தன் நலன்கள்தான் முக்கியம் என்று நினைக்கும் இவரைத் தலைவராகப் பெற்றதற்கு அமெரிக்கா என்ன தவம் செய்ததோ! இது காலத்தின் கோலம் போலும்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.