க்ஷேத்ரய்யா — தெலுங்கு மொழியின் ஜெயதேவர்

0

தி. இரா. மீனா

 

க்ஷேத்ரய்யா தெலுங்குக் கவிஞரும் கர்நாடக சங்கீதப் பாடலாசிரியருமாவார். ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் முவ்வா கிராமத்தில் பிறந்தவர். இயற்பெயர் வரதய்யா. இளம் வயதிலேயே ஒரு யோகி கற்றுத் தந்த “கோபால“ மந்திரத்தைத் தொடர்ந்து சொல்லி இறையருள் பெற்றவர். பதம் என்ற வடிவத்திலமைந்த இவருடைய பாடல்கள் பெரும்பான்மையாக நாட்டியத் துறையிலும், அடுத்த நிலையில் இசைத் துறையிலும் பயன்படுத்தப்படுகின்றன. அன்னமையாவுக்கு அடுத்தபடியான செல்வாக்கு இவர் பாடல்களுக்குரியதென கலை வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.

க்ஷேத்ரய்யாவின் [1600 -1680] வாழ்க்கை  பற்றிய குறிப்புகள் கிடைக்கவில்லை. தான் பிறந்த கிராமமான முவ்வாவிலுள்ள  வேணுகோபாலன் கோவில் இவரைப் பெரிதும்  கவர்கிறது. அக்கோவில் ஓரிரவில் கட்டப்பட்டதாகச் சொல்லப் படுகிறது. ஒரு நாள் கோயிலில் தியானம் செய்து கொண்டிருக்கும் போது “நீ  உயர்ந்த பாடலாசிரியனாகப் புகழும், பெயரும் பெறுவாய். புனித ஸ்தலங்களுக்குச் சென்று தெய்வீகப்பணி  செய்வாய்“ என்று குரல்  கேட்கிறது. விழித்துப் பார்த்தபோது எவருமில்லை. இறையருளே கிடைத்திருக்கிறது என்று மகிழ்ந்து வீட்டிற்கு ஓடி பெற்றோரிடம் சொல்கிறார். அதைக் கேட்டதும் மகன் தன்னைப் பிரிவானே எனத் தாய் வருந்த, மகன் வழியில் குறுக்கிடக் கூடாதென உணர்ந்த தந்தை சொல்லப்பட்ட செய்தியை நடத்திக் காட்ட மகனுக்கு உதவவேண்டுமெனச் சொல்லி மனைவியை ஆறுதல் படுத்துகிறார். பெற்றோர்  வழியனுப்பி வைக்கின்றனர். ஊரை விட்டுப் புறப்படுவதற்கு முன்பு  தன் இளம் பருவத்துத் தோழி மோகனாங்கியைச் சந்திக்க விரும்புகிறார்.  அவள் தாசி பரம்பரையில்  வந்தவள். இருவரும் இளம்பருவத்திலிருந்தே ஆடல், பாடல் ஒருங்கே  கற்றவர்கள் அவர் பாடல்கள் இயற்றுவதிலும், பாடுவதிலும் சிறந்தவராகிறார் அவர் பல பாடல்களைப்பாட அவள் கோயில் நடனப் பெண்ணாகிறாள். இருவரும் முவ்வகோபாலனின் பக்தர்களாகின்றர். தம்மை மறந்து  கோயிலில் பாடியும், ஆடியும் மகிழ்கின்றனர். போவதற்கு முன்பு தனக்குக் கிடைத்த அசரீரிசெய்தியைச் சொல்லி அவளைப் பின்னொரு நாளில் சந்திப்பதாகக் கூறி விடைபெறுகிறார்; பயணத்தைத் தொடங்குகிறார்.

முதலில் கோல்கொண்டா போகிறார். அங்குள்ள அரசரான அப்துல்லா குதுப்ஷா கலாரசிகர். அவர் அரண்மனையில் சில பதங்கள் பாடுகிறார். நவாப் அவரைத் தன் அவையில் இருக்கும்படி வேண்டுகிறார். வரதய்யா தன் வாழ்வு நோக்கத்தை எடுத்துச் சொல்லி புறப்படுகிறார். அடுத்தது மதுரை அவர் செல்லுமிடமாகிறது. திருமலைநாயக்கர் மதுரையை ஆண்ட காலகட்டமது. அன்றைய சூழ்நிலையில் காதல்பாடல்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன என்பதால் அந்த  அடிப்படையில் சில பாடல்களைப் பாடுகிறார். வெளிப்பார்வைக்கு காதலுணர்வை காட்டுவது போல அவை இருந்தாலும் ஆழமான கருத்துக்களை உள்ளடக்கியதாக அமைகின்றன. சாதாரண மக்களுக்கு அது காதல் பாடலாகத் தெரிய இறைச் சிந்தனை கொண்டவர்களுக்கு பரம்பொருளின் மீதுகொண்ட காதல் வெளிப்பாட்டின் தன்மை புரிகிறது. அதுதான் அவர் செய்தியும் கூட. அவருடைய புலமைகண்டு அரசனும், புலவர்களும் ஆச்சர்யமடைகின்றனர்.

அடுத்து அவர் காஞ்சி செல்கிறார். அது சிவனின் காஞ்சியாகவும்  விஷ்ணுவின் காஞ்சியாகவும் அவருக்குத் தெரிகிறது. சிவனின் காஞ்சியில் ஏகாம்பரேசுவரர் மற்றும் காமாட்சிதேவி கோயில்களுள்ளன. ஏகாம்பரேசுவவரர் கோயிலிலிருக்கும் ஒரு மாமரத்தினடியில் காமாட்சி சிவனைவேண்டித் தவமிருந்ததாக ஒரு கதையுண்டு. நான்கு வேறு கிளைகளாக உள்ள அந்த மரத்தின் மாங்கனிகள் நான்குவகையான சுவையுடையவை என்றும் அவை நான்கு வேதங்களைக் குறிப்பவை என்றும் சொல்லப்படுகிறது. அங்குள்ள விஷ்ணுகோயில் வரதராஜப் பெருமாள் என்றழைக்கப்படுகிறது. பெருந்தேவி தாயார்கோயிலும் சில அடிகள் தொலைவில் தானுள்ளது. சிவன்-விஷ்ணுவைத் தரிசனம் செய்த வரதய்யா தன் வாழ்க்கை சாபல்யம் பெற்றதாக நினைக்கிறார். முவ்வ கோபாலனுக்கு அடுத்தபடியாக அவர் மனதைக் கவர்ந்தவர் வரதராஜப் பெருமாள் தான். அங்கு அவர் பக்தி உச்சமடைகிறது. தன்னை நாயகியாகக் காணத் தொடங்கி சிருங்கார பக்தியை வளர்த்துக் கொண்டது காஞ்சியில்தான். பல மணிநேர தியானத்தில் தன்னை மறந்திருந்ததும் அங்குதான். ஒரு நாள் இரவு வழிபாட்டின்போது அவர்  தன்னை மறந்திருந்த தருணத்தில் அர்ச்சகர் கோயில் கதவைப் பூட்டிக் கொண்டு போய்விடுகிறார். இருவரும் இதை உணரவில்லை. வரதய்யா தன்னுணர்வுக்கு வந்தபோது பெருந்தேவி தாயார்  பெருமாள் ஆலயத் திலிருந்து தன்னிடத்திற்குப் போவதைப் பார்க்கறார். ரோஜாமாலையின் மணம் அவிழ்ந்த கூந்தலிருந்து வரக் கண்கள் தூக்கமிழந்து செம்மையாய். கழுத்தில் சங்கிலிகள் தாறுமாறாய்க் கிடக்க சேடியர் இருபுறத்திலும் வர… மெதுவாய் நடப்பதைப் பார்க்கிறார். என்ன அற்புதமான காட்சி! யாருக்கும் காணக் கிடைக்காத காட்சி..! அடுத்தநாள் கதவு திறக்க வரும் அர்ச்சகர் வரதய்யா உள்ளிருப்பதைப் பார்த்து ஆச்சர்யமடைகிறார். யாருக்கும் கிடைக்காத தரிசனம் அவருக்குக் கிடைத்ததைக் கேட்டு அனைவரும் ஆச்சர்யடைகின்றனர். கவிதை என்பது இயல்பாய் எழும் உணர்ச்சிப் பெருக்குத்தான். இதை வரதய்யா ஒரு பதத்தின்  கருவாக்குகிறார் [“மகுவ தன கேலிக்க மந்திரம் என்பது அப்பாடல் [‘Maguva tana Kelikaamandiram Vedalen Vagakada, Maa Kanchi Varada, Tellavaare Nanuchu] அவருடைய பாடல்களில் வரதராஜப்பெருமாள் பற்றிய குறிப்பு ஏறக்குறைய இருபத்து மூன்று பாடல்களில் வெளிப் படுகிறது. காஞ்சியில் தன்யாசி, கல்யாணி, பந்துவராளி, பைரவி,  தோடி, முகாரி ஆகிய ராகங்களில் மட்டும்  பாடியது குறிப்பிடத்தக்கது. அபூர்வக்காட்சி கிடைத்த காஞ்சியில்தான் அவர் அதிககாலம் இருந்தி ருக்கிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.பின்பு மோகனாங்கியிடம் சொன்னதுபோல தான் காஞ்சியிலிருக்கும் செய்தியை அவளுக்குத் தெரிவிக்கிறார்.

காஞ்சியிலிருந்து தஞ்சை செல்கிறார். தஞ்சையையாண்ட விஜய ராகவன் கலைஞர்களை ஊக்குவிப்பவன் என்பதால் அவனைப் பாராட்டும் வகையில் பாடலொன்று இயற்றுகிறார். அவருடைய அறிவின் கூர்மையைப் பொறுக்க முடியாத சிலர் அவரை அவமானப்படுத்த நினைக்கின்றனர். அவர் கருத்தில் குறை கூறுகின்றனர். அப்போது அவர் ”நான் அரசராக அவரை மதிக்கிறேன். ஆனால் நண்பராக நேசிக்கிறேன். என் பாடலில் அவரை நண்பனாகத்தான் காண்கிறேன். இன்னும் சொல்லப்போனால் கடவுளைக்கூட நானப்படித்தான் அழைக்கிறேன். அந்த தொனியிலான அழைப்பு இன்னும் என்னை அவர்களோடு நெருக்கப் படுத்துகிறது. என் பாடல்கள் உரைநடையாலானவை. நாட்டியநாடக அமைப்புடையவை என்பதால் பேச்சுவழக்கு மொழியோடு நெருங்கியிருக்க வேண்டும். அதனால் மொழி எளிமையாக இருக்க வேண்டு மென்பது என் விருப்பம். செய்யுள் என்பது இதிலிருந்து மாறுபட்டது. என் பாடல்களில் வெளிப்படும் காதல் உடல்சார்ந்ததல்ல. அது பேரானந்தம் தரும் தன்மையுடையது “என்று பெரிய விளக்கம் தருகிறார். பின்பு ஒரு பாடலைப் பாதியாக எழுதி அதை முடித்து வைக்கும்படி சொல்லி விட்டுப்போகிறார். அதே நேரத்தில் மோகனாங்கி காஞ்சியிலிருந்து தஞ்சை வருகிறாள். வரதய்யாவுக்கும் ,அவர் பாடல்களுக்கும் உள்ள மதிப்பையறிந்து அரசவையில் அவர் பாடல்களுக்கு நடனமாடுகிறாள்.

தஞ்சையிலிருந்து வரதய்யா ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் ஆகிய தலங்களுக்குப் போகிறார். அங்கும் பாடல்கள் இயற்றுகிறார். நீண்டகாலம் வெவ்வேறிடங்களில் தங்கிய அவருக்கு தன் இஷ்டதெய்வமான முவ்வ கோபாலனின் கோயிலுக்குச் சென்றுவிடவேண்டுமென்று தோன்றுகிறது. தஞ்சை வழியாகத் திரும்புகிறார். தன் பாடல்களுக்கு மோகனாங்கி ஆடி மக்களைப் பரவசப்படுத்தியதை அறிந்து மகிழ்கிறார். பாதி எழுதப்பட்ட தன் பாடலின் முடிவுபற்றிக் கேட்கிறார். ’ஒரு பெண் தன்காதலன் வருகைக்காக காத்திருக்கிறாள். மற்ற பெண்கள் தம் காதலர்களோடு கூடியிருப்பதைப் பார்த்து வருத்தமடைகிறாள். அவள் மனநிலை எப்படியிருக்கும்? ”இதுதான் அவர் எழுதிக் கொடுத்த பாதிப்பாடல். கவிஞர்கள் அதற்கான பதிலைத்தந்து கவிதையை முடிக்கவேண்டும். பொதுவாகக் காதலின் உச்சநிலையிலிருக்கும் எந்தப் பெண்ணுக்கும் காதலன் மீது கோபம் பொங்கும். அல்லது உணர்வுகளுக்கு அடிமையாகும் தன்மை ஏற்பட்டிருக்க  வேண்டும். இதுதான் சாதாரண நிலை. இந்த பதில் வரதய்யாவுக்குத் திருப்தி தராதென்று அனைவருக்கும் தெரியும். தங்களைக் கேலிப் பொருளாக்கிக்கொள்ள அவர்களுக்கு விருப்பமில்லை. மௌனம் சாதிக்கின்றனர். சிறிது ஆழமாகச் சிந்தித்திருந்தால் பாடலை முடித்திருக்க முடியும். வரதய்யா முன்பு குறிப்பிட்டது போல உடல்ரீதியான எண்ணங்களுக்கு இடமில்லாத போது சிருங்காரம் உயர்ந்த பக்திநிலையாக முடியும். தன்பாடல்களில் அவர் உயர்ந்த இறைபக்தியைப் பற்றிப் பேசியிருக்கிறாரே தவிர உடல்சார்ந்த நிலையையல்ல. கவிதையில் காட்டப்பட்ட பெண் மற்ற கோபிகை களைப்போல முதலில் உடல் சார்ந்த காதலனுக்காக, காதலுக்காகப் புலம்புகிறாள். பின்பு தன் காதலின் உன்னதத்தை, காதலனின் அருமையையுணர்ந்து கோபாலனுடனான அன்பை தத்துவார்த்தமாக வளர்த்துக் கொள்கிறாள் என்பதுதான் அவர் தரும் முடிவு. அரசன் உள்பட அனைவரும் அதுகேட்டு வியப்படைகின்றனர்.

”ராமா! ராமா! இது என்ன? நான் சாதாரணப் பெண் இல்லயே!
உன்மீது காதல் கொண்டவள் அல்லவா இது ஆயுள் பரியந்தம்”

என்ற பொருள்பட  [ராமா ராமா ஏ மெனிதோ“]

அந்தப் பதத்தை தானேமுடிக்கிறார். விடைபெறும் போது  அரசவையில ’மகுவ தன கேலிக்க மந்திரம்“ பாடலைப் பாட மோகனாங்கி அவர் கண்ட அபூர்வக்காட்சியை பாத்திர நிலையில் உணர்ந்து அனுபவித்து ஆடுகிறாள். அனைவரும் மகிழ்கின்றனர். அவருடைய சிறப்பறிந்து அரசன் உள்ளிட்ட அறிஞர்கள் அவருக்கு ’க்ஷேத்ரய்யா’ என்று பட்டம் தருகின்றனர். [க்ஷேத்திரங்களைக் கண்டு மகிழ்ந்தவன்] அவர் இருபது க்ஷேத்திரங்களுக்குப் போயிருக்கிறார். எங்கு போனாலும் கிருஷ்ணன் பாடலைப் பாடியிருக்கிறார். அந்த பக்தி அவரை வழிநடத்தியிருக்கிறது.

இறுதியில் அவர்கள் முவ்வா வருகின்றனர். கிருஷ்ண ஜன்ம தினத்தில் முவ்வ கோபாலன் கோயிலில் அவர் பாட மோகனாங்கி ஆடுகிறாள். அனைவரும் மகிழ்ந்திருக்கும் நேரத்தில் கருணையோடு தன்னை ஒரு கை தழுவுவதுபோல உணர்கிறார். பரமாத்மாவோடு கலக்கிறார். மோகனாங்கியும் அவருடன் மறைகிறாள்.

ஏறக்குறைய நான்காயிரம் பாடல்களை அவர் இயற்றியதாகச் சொல்லப்பட்டாலும் 381 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட பதம் முறைதான் இன்றும் வழக்கிலிருக்கிறது. பரதநாட்டியம், குச்சிப்புடி, மற்றும் கர்நாடக சங்கீதப் பாடல்களில் அவர் பதங்கள்தான் பாடப்படுகின்றன. அனுபல்லவி, பல்லவி, மூன்று சரணங்கள் என்பது அவர் பார்வையில் பதத்திற்கான இலக்கணமாகும். நாட்டியப் பின்னணியிலான பெரும்பாலான பாடல்களைத் தந்த பெருமை இவரையும், சீடனான சாரங்கபாணியையும் சேரும். நாற்பது வகை ராகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன பெரும்பான்மை பதங்களின்கரு கிருஷ்னணின் வருகைக்காக ஏங்குவதாகவே அமைந்திருக்கிறது. அவருடைய பாடல்களின் முக்கியகரு மதுரபக்தியிலமைந்த சிருங்காரமாகும். பெரும்பான்மைப் பாடல்களில் அவருடைய முத்திரையாக ’முவ்வ கோபாலா’ அமைகிறது. பொதுவாக முத்திரை என்பதை பெரும்பாலான கலைஞர்கள் தம் பாடல்களின் இறுதியில் பயன்படுத்தியிருக்க க்ஷேத்ரய்யா பாடலின் எந்தப் பகுதியிலும் அது இடம்பெறு வதான முறையைக் காட்டியுள்ளார். முவ்வ கோபாலன் தவிர, ’காஞ்சி வரதுடு’ செவ்வடி லிங்கடு’ ’ஆதிவரத’ ’தில்லைகோவிந்தராஜ’ ’ஸ்ரீரங்கேச”’ ‘யதுகிரிசெலுவராய’ ஆகிய முத்திரைகள் சில பாடல்களில் வெளிப்படுகின்றன. நாட்டியம், இசை என்ற துறைகளில் அவருடைய தாக்கம் மிக ஆழமாக இருந்ததும், இருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு காலத்தில் தென்னிந்தியாவில் நாட்டியம், இசை ஆகிய கலைகளை வாழ்வின் மூலாதாரமாகக் கொண்டும், பரம்பரை பரம்பரையாக கோயிலுக்காக வாழ்பவர்கள் என்ற நிலையில் வாழ்ந்த தேவதாசிப் பெண்களை வைத்தும் அமைந்தவை அவருடைய பல பாடல்கள். பிரிவு, பொறாமை, சந்தேகம், மகிழ்ச்சி அழுகை என்று எல்லாம் அடங்கிய காதல்வெளிப்பாட்டில் இவர் பதங்கள் சிறப்புப் பெறுகின்றன. நாயகன்-நாயகி பாவத்தில் பக்குவமானவள், இடைநிலையிலுள்ளவள், அனுபவமற்றவள், மனைவி, மற்றவன்துணை என்ற வகைகளில் தன்னை நாயகியாக பாவனை செய்துகொண்டு  பாடியிருப்பது இவருடைய புதிய அணுகுமுறையாகும். இந்த வெளிப்பாட்டிற்கு “நா மனசு வந்திதே“ என்ற பதம்

“நான் உனக்காக ஏங்குவதைப் போல நீ எனக்காக ஏங்கினால்
என் கனவு உண்மையாகும். கரும்பு இனிமையானது. அது கனி
தந்தால் எவ்வளவு இனிப்பு அதிலிருக்கும்! முவ்வ கோபாலா! நான்
உன்னை விரும்புவது போல என்னை நீ விரும்பினால் என்
மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.”

என்றும்

“உன்னுடல் என்னுடல் என்று சொல்வாய்  அது உண்மைதான்
முவ்வ கோபாலா! உன்னுடன் இவ்வளவு காலமிருந்தும் எனக்குத்
தெரியவில்லை உன் மார்பில் யாரோ கீறிய கீறலால் எனக்கு
வலிக்கிறது இரவு நீ தூங்கவில்லை ஆனால் என் கண்கள்
சிவக்கின்றன ”

என்றும் அவரது ஓரிரு உணர்வுபூர்வ பதங்களைச் சான்று காட்டலாம்.

பதக்காரர்களைப் பொறுத்தவரை நாயகன் தன் நாயகியோடு  நேரடியாகப் பேசும் நிலை என்பது மிக  அபூர்வமானதாகவேயுள்ளது. அதனால் அவர்கள் நாயகன் நாயகி  என்று  யாராக இருந்தாலும் அவர்களின் உணர்வுகளைத் தோழி / தூதன் மூலம்தான் வெளிப்படுத்துகின்றவர்களாக இருக்கின்றனர். சான்றாக க்ஷேத்ரய்யாவின் ஒரு பதத்தில் தலைவி தலைவனை விட்டுத் தனியாக வரும்போது தோழி நாயகியிடம் “அவனைத் தனியே விட்டு நீ ஏன் இங்கு வந்தாய். உன் கால்கள் ‘அதற்கு எப்படிச் சம்மதித்தன?அன்பே! முவ்வகோபாலன் உன்‘ நினைவுகளில் ஆழ்ந்து எப்போதும் உன் பெயரையே அரற்றிக் கொண்டிருக்கிறான். படுக்கையிலிருந்து திடீரென எழுகிறான். உன்னைத் தேடுகிறான். கண்களில் நீர் பெருகி கண்கள் செம்மையாகின்றன. உன்னுடைய ஒவ்வொரு நளினத்தையும் நினைவில் வைத்திருக்கிறான். அவன் காதலைச் சொல்ல நீ சுதந்திரம் தந்திருக்கிறாய். ஒப்புமைக்கு இயலாதவளாக உன்னைக் காண்கிறான்” என்று தோழி தன்னிடம் வந்த நாயகியிடம் சொல்வதாக ஒரு பதத்தை  அமைத்திருக்கிறார்.

இதே பதம் ஜெயதேவரின் அஷ்ட பதியிலும் வெளியாகிறது. தோழி தலைவனுக்காகப் பேசுகிறாள்.

”பெண்ணே! கிருஷ்ணன் யமுனை ஆற்றின் கரையில்
நிற்கிறான். அவனிடம் போ, சங்கமம் கொள், புல்லாங்குழலில் உன்
பெயரை இசைத்துத் தான் அங்கிருப்பதைச் சொல்கிறான் உன்
மேனியிலிருந்து பரவும் மணத்தை தென்றலின் மூலம்
உணர்கிறான். உன் மென்மையான அசைவொலி  கேட்க
உனக்காகக் காத்திருக்கிறான் “

என்ற பதத்தோடு ஒப்பிடலாம்.

வீணை தனம்மாள், பிருந்தா ஆகியோர் அவருடைய பாடல்களை பிரபலப்படுத்தியதில் பெரும்பங்குடையவர்கள். ’எவ்வடே’, ராரா சாமி ராரா’, ”பைய்யாடா’, ’இந்த மோகம் ஏமிரா’ ’ஏமி செய்யுது” ஆகிய பாடல்கள் பிரபலமான பாடல்களில் சிலவாகும். சுந்தரர், நம்மாழ்வார், திருமங்கை யாழ்வார், ஜெயதேவர் ஆகியோர் வழியில் இறைவனை நாயகன்—நாயகி பாவத்தில் கண்டு, ஏங்கி, புலம்பி, காத்திருந்து பேரின்பம் அடைந்தவர் இவர். ’சமஸ்கிருத மொழிக்கு ஜெயதேவர்போல தெலுங்கு மொழிக்கு க்ஷேத்ரய்யா என்று மிகப் பரவலாகச் சொல்லப்படும்’ பாராட்டும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *