நாட்டார் படைப்புகளை நாடறியச் செய்த பண்பாளர்!
-மேகலா இராமமூர்த்தி
அறக் கருத்துகளையும் சிறந்த வாழ்வியல் விழுமியங்களையும் தம் படைப்புகள் வாயிலாக வலியுறுத்தி மக்கள் மனங்களில் இடம் பிடித்தவர் மு. வரதராசனார் எனும் மு.வ., என்றால் நாட்டார் படைப்புகளுக்கும் மார்க்சியச் சிந்தனைகளுக்கும் கல்விக் கழகங்களில் இடம்பெற்றுத் தந்தவர் என்ற வகையில் நம் போற்றுதலுக்குரியவர் நா. வானமாமலை எனும் நா.வா.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் திசம்பர் 7, 1907இல் பிறந்தவர் நா.வானமாமலை. திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் புகுமுகப் படிப்பையும், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை வேதியியல் படிப்பையும் முடித்தார். சென்னையிலுள்ள சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் கல்வியியல் பட்டம் பெற்றார். பின்னாளில் அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர் கார்மேகக் கோனாரின் அறிவுறுத்தலின்படி, முதுகலைப் படிப்பையும் முடித்தார். 1942 தொடங்கி சில ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார்.
சமூக ஆர்வம் காரணமாக அப் பணியிலிருந்து விலகிய அவர், அக்காலக்கட்டத்தில் முதல் தலைமுறையாகப் படிக்க வந்தவர்களுக்குத் தனிப்பயிற்சி நிலையங்களே (tuition centers) துணைநிற்பதை அறிந்து, 1948-இல் பாளையங்கோட்டையில் தனிப்பயிற்சி நிலையத்தை தொடங்கினார். அதேநேரத்தில், நாங்குனேரி வட்டார விவசாயிகள் இயக்கத்திலும், நெல்லை மாவட்டத் தொழிலாளர் இயக்கத்திலும் செயற்பட்டார்.
கோயில் நுழைவு, சாதிக் கொடுமைகள் எதிர்ப்பு, நில மீட்புப் போராட்டங்கள் ஆகியவற்றில் நா.வா. முன்னின்றார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலத் தலைவராகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் கல்விப் பிரிவின் பொறுப்பாளராகவும் பணியாற்றினார்.
முதல் விடுதலைப் போரின் நூற்றாண்டு விழா 1957-இல் கொண்டாடப்பட்டபோது கம்யூனிஸ்ட் தலைவர் பூர்ணசந்த்ர ஜோஷி அவர்கள், நாட்டுப்புற இலக்கியங்களைச் சேகரிக்கும் பணியை மேற்கொண்டார். புலவர்களால் உருவாக்கப்பட்டுக் கற்றவர்களால் காப்பாற்றப்படுபவை செவ்விலக்கியங்கள். ஆனால் பாமர மக்களால் உருவாக்கப்பட்டு அவர்களாலேயே காப்பாற்றப்படுபவை நாட்டுப்புற இலக்கியங்கள். எனவே பாமர மக்களின் வாழ்க்கையை அறிய நாட்டுப்புற இலக்கியங்களைச் சேகரிக்கவேண்டிய பணி இன்றியமையாத ஒன்றே. அதனை நன்குணர்ந்த ஜோஷி அவர்கள் தமிழிலுள்ள நாட்டுப்புறப்பாடல்களைச் சேகரித்து அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணியை மேற்கொள்ளுமாறு நா.வாவைப் பணித்தார். அதனை ஏற்றுக்கொண்ட நா.வா., தமிழ்நாட்டில் பரவலாக வழங்கப்பட்டுவரும் நாட்டுப்பாடல்களை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
அக்காலக்கட்டத்தில், வானமாமலையைப் போன்றே கி.வா.ஜகந்நாதன், செ. அன்னகாமு, பெரியசாமித்தூரன், சோமலெ போன்றவர்களும் நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆயினும், நாட்டுப்புறப் பாடல்களை அவற்றின் பொருண்மை, நிலவியல், சூழல் அடிப்படையில் வகைதொகைப்படுத்திய பெருமை நா.வா.வையே சாரும். மேலும், பாடியோர், பாடல் வழங்கும் இடம், சேகரித்தோர் பெயர் போன்ற விவரங்களையும் குறிப்பிட்டவர் அவரே. இந்தப் புதிய முறையோடு, தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்(1960), தமிழர் நாட்டுப் பாடல்கள்(1964) ஆகிய இரண்டு தொகுப்புகளை அடுத்தடுத்து அவர் வெளியிட்டார்.
’தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்’ என்ற நா.வா.வுடைய நூலில் அதுவரை ஏட்டுக்கு வராத பாமரர்களின் பாடல்கள் பல பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அப்பாடல்கள் நம் சமூகத்தின் அடித்தட்டில் வாழுகின்ற உழைக்கும் மக்கள் வாழ்வில் நிகழும் அனைத்தையும் படம்பிடித்துக் காட்டுகின்றன.
குறிப்பாக இப்பாடல்களில் சாதிப் பிரிவினைகளால் உழைக்கும் மக்கள் அனுபவிக்கும் கொடுமைகளும், அவற்றை எதிர்த்து அம்மக்கள் எழுப்பும் உரிமைக்குரலும் ஓங்கி ஒலிக்கின்றன எனலாம். இவற்றையெல்லாம் படித்தறிந்தால் மட்டுமே பாமர மக்களின் வாழ்க்கையில் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் பிரச்சினைகளும் ஏனையோர்க்கும் தெரியவரும்.
சான்றாகப் பொழுதடைந்த பின்பும் வீடுசெல்ல முடியாமல் முதலாளியின் பண்ணையில் மாடாய் உழைத்துக்கொண்டிருக்கும் ஏழைத் தொழிலாளி ஒருவன் மிகவும் தயக்கத்தோடும் பணிவோடும் முதலாளியிடம் கூலி கேட்பதை விளக்கும் பாடலிது:
வீடு ரெண்டுங் காரவீடு
வேட்டி ரெண்டும் வெள்ளை வேட்டி
இரக்கமுள்ள புண்ணியர்க்குப்
பிறக்கிறது ஆண்குழந்தை!
சம்பளமும் கட்டுதில்லை
சாதியுள்ள மாணிக்கமே
எங்க இர(ற)க்கம் பார்த்து
ஏத்த கூலி போடுமையா!
பொழுது அடைஞ்சிருச்சே
பூமரமும் சாஞ்சிருச்சே
இன்னம் இரங்கலையோ
எசமானே உங்க மனம்?
இந்தப் பாடலில் வெளிப்பட்டிருக்கும் ஓர் ஏழைத் தொழிலாளியின் இரங்கத்தக்க வறுமைநிலையும், முதலாளிக்கு அஞ்சியும் அவரைக் கெஞ்சியும் அவன் கூலிபெறவேண்டிய அவலமும் படிப்போர் நெஞ்சை மட்டுமல்லாது கண்களையும் கலங்கச் செய்கின்றன.
’தமிழர் நாட்டுப்பாடல்கள்’ என்ற நா.வா.வின் மற்றொரு நூலும் சிறப்பான ஒன்றாகும். இந்நூல் நமக்கு அறியத்தரும் செய்திகளில் சில:
தமிழ் மக்களிடையே வழங்கிவரும் கதைப்பாடல்களை நாம் நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.
- இதிகாசத் துணுக்குகள்
- கிராம தேவதைகளின் கதைகள்
- சமூகக் கதைகள்
- வரலாற்றுக் கதைகள்
இதிகாசங்கள் என்றும் இந்தியக் காப்பியங்கள் என்றும் போற்றப்படுகின்ற இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரண்டில், பாரதக் கதையோடு தொடர்புடைய நிகழ்ச்சிகளைக் கருப்பொருளாகக் கொண்டு பல கதைப்பாடல்கள் தோன்றியிருக்கின்றன. கிராம மக்கள் இராமாயணத்தைவிடவும் மாபாரதத்தையே அதிகம் விரும்பிக் கேட்கிறார்கள். அதில் வரும் வீமனும் அர்ச்சுனனும் கண்ணனும் கன்னனும் (கர்ணன்) அவர்கள் மனத்துக்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருக்கின்றார்கள் என்று தெரிவிக்கும் நா. வானமாமலை, சமூகக் கதைப் பாடல்களும் மக்கள் மத்தியில் புழங்கிவருகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை முத்துப்பட்டன் வில்லுப்பாட்டு, சின்னத்தம்பி வில்லுப்பாட்டு, சின்ன நாடான் கதை, வெங்கல ராஜன் கதை, கள்ளழகர் கதை, நல்லதங்காள் கதை, கௌதல மாடன் கதை முதலியன. இவையாவும் தமிழ்நாட்டுப் பாட்டாளி மக்களையும், தமிழ்நாட்டுத் தலைவர்களையும் கதைகளின் தலைமாந்தர்களாகக் கொண்டவை என்கிறார்.
இந்நூல், தமிழகப் பல்கலைக்கழகங்களிலும், கேரளப் பல்கலைக்கழகத்திலும், தமிழ்த்துறையின் மூல நூலாக (source book) பயன்படுகின்றது. ஆசிரியர்களும், ஆய்வாளர்களும் நாட்டுப்பாடல் துறையின் சிறந்த நூலென இந்நூலைக் கருதுவது இதன் சிறப்பையும் மதிப்பையும் உணர்த்துகின்றது.
அரிதின் முயன்று, பல இடங்களுக்கும் அலைந்து திரிந்து நா.வா.வும் அவருடைய மாணாக்கர்களும் சேகரித்து வெளியிட்டவை வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல், கட்டபொம்மு கூத்து, முத்துப்பட்டன் கதை, ஐவர் ராசாக்கள் கதை, பழங்கதைகளும் பழமொழிகளும் போன்றவை.
வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடலின் முன்னுரையில் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரரான கட்டபொம்முவின் வாழ்க்கைச் சித்திரத்தை விரிவாகத் தந்திருக்கின்றார் நா.வானமாமலை. கட்டபொம்மு, பாளையத்து மக்களிடம் ஈவு இரக்கமின்றி நடந்துகொண்டதையும், அதனால் அவர் அம்மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக்கொண்டதையும் நாட்டுப்பாடல்கள் பேசுகின்றன எனக் குறிப்பிடும் வானமாமலை, கட்டபொம்முவின் போக்கு பிடிக்காததால் அவன் வெள்ளையரை எதிர்த்தபோதும் பாளையத்து மக்கள் அவனுக்குப் பெரிதாக ஆதரவளிக்கவில்லை என்பதையும், எனினும் அவன் வெள்ளையரால் தூக்கிலிப்பட்டது அவன்மீது மக்களுக்கு அனுதாபத்தை ஏற்படுத்தியதையும் பதிவுசெய்திருக்கின்றார். திரைப்படங்களில் காட்சிப்படுத்தப்பட்ட ’உயர்ந்த மனிதன்’ எனும் பிம்பம் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மனிலிருந்து மாறுபட்டவராகவே உண்மையான கட்டபொம்மு இருந்திருக்கின்றார் என்பது நாமறிய வேண்டிய வரலாற்றுச் செய்தியாகும்.
பன்மொழிப் புலவர் தொ.பொ. மீனாட்சிசுந்தரனார் மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தபோது, நா.வா.வின் கதைப்பாடல் தொகுப்புகளை, அப் பல்கலைக்கழகம் நூலாக வெளியிட்டது. வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல், கட்டபொம்மு கூத்து, கான்சாகிபு சண்டை, முத்துப்பட்டன் கதை, ஐவர் ராசாக்கள் கதை, காத்தவராயன் கதைப்பாடல் ஆகிய ஆறு நூல்கள் இவ்வாறு வெளியிடப்பட்டவையே ஆகும்.
”நாட்டார் பாடல்கள் வாய்மொழிப் பாடல்களாக இருப்பதே சிறப்பு; அவற்றை ஏட்டில் எழுதிவைத்தால் அவை நாட்டார் பாடல்கள் எனும் தகுதியை இழந்துவிடும்” எனும் விமரிசனம் சிலரால் முன்வைக்கப்பட்டபோது, அதை மறுத்த நா.வா., நாட்டார் பாடல்களையும் படைப்புக்களையும் ஏட்டில் எழுதிவைத்தால் மட்டுமே அவை அழியாமல் காக்கப்படும். இல்லையேல் அவை விரைவில் மறக்கப்படுவதோடு அழிந்தும் போய்விடும். ஏட்டில் எழுதிவைக்கப்படும் நாட்டார் படைப்புக்கள்கூட அப்படியே வாழும் என்று கூறுதற்கில்லை; பண்பாட்டு மாறுதல்கள் காலப்போக்கில் நிகழும்போது அவையும் தம்முடைய வடிவை மாற்றிப் புத்துருக்கொள்ளும் என்று குறிப்பிட்டார்.
‘Folklore’ என்பதற்கு ’நாட்டுப்புறவியல்’ என்ற மொழிபெயர்ப்பு முதலில் உருவாக்கப்பட்டது. அதற்கு ‘நாட்டார் வழக்காற்றியல்’ என்ற மாற்றுப் பெயரைச் சூட்டி அழகுபார்த்தவர் நா. வானமாமலை.
தமிழ்மொழி இலக்கிய ஆய்வுகளை, வரலாறு, தொல்லியல், மானுடவியல், சமூகவியல், பண்பாட்டியல் போன்ற பிற துறைகளுடன் இணைந்த பல்துறைக் கூட்டாய்வுகளாக வளர்த்தெடுத்ததிலும் நா.வா.வின் பங்கு முதன்மையானது. நாட்டார் வழக்காற்றியலைப்போலவே மார்க்சியம் இன்று கல்விப்புலத்தில் ஒரு முறையியலாகவும், அணுகுமுறையாகவும் நிலைபெற்றிருப்பதற்கு வித்திட்டவரும் அவரே.
மக்கள் தம் நாட்டின் வரலாற்றை எழுதுவதிலும் நேரிய நோக்கையும் சீரிய போக்கையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்திவர் நா.வா.
”இந்திய நாட்டு வரலாற்றைக் கருத்தில்கொண்டால், வேத காலமே பொற்காலம் என்பர் ஆரியர்; சங்க காலமே தங்க காலம் என்பர் தமிழர். ஆனால் இவை எவையுமே உண்மையில்லை. ஏனெனில் ஒரு நாட்டின் உண்மையான வரலாறு என்பது அந்நாட்டில் வாழும் செல்வர், வறியவர், ஆண்டான், அடிமை, மேலோர் கீழோர் ஆகியோரிடையே நடந்த வர்க்கப் போராட்டங்களைப் பேசும் வரலாறே ஆகும். இம்முறையில் பொருளாதார வாழ்வையும் வர்க்க முரண்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாட்டு மக்களின் வரலாறு முழுதும் எழுதப்பட வேண்டும். இவ்வரலாற்றைத் தனி ஒருவர் எழுதுதல் இயலாது.
நூற்றுக்கணக்கான வரலாற்று வல்லுநர்கள், தமிழறிஞர்கள், மார்க்சியவாதிகளின் கூட்டுமுயற்சியால் இவ்வரலாறு உருவாகவேண்டும். தொடக்கத்தில் பல கருத்துவேற்றுமைகள் தோன்றுதல் இயல்பே. பல கருத்துமோதல்களின் விளைவாகவே உண்மை வெளிப்படும். பண்டைத் தமிழர் வரலாற்றை தொடக்கம் முதல் இடைக்காலம் வரை ஆராய்ந்து எழுதுதற்குப் பரவலான சான்றுகள் இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் நமக்குக் கிடைக்கின்றன. அவற்றைச் சேகரித்துச் சமூக வளர்ச்சி தொழில் கண்ணோட்டத்தில் ஒரு வரலாறு உருவாக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட தமிழர் வரலாறு நமக்கு அவசியம் தேவை.” என்பது மார்க்சியச் சிந்தனையாளரான வானமாமலையின் கருத்தாகும்.
அடிப்படையான அறிவியல் நூல்கள் சிலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்தவர் நா.வா. காகிதத்தின் கதை, இரும்பின் கதை, ரப்பரின் கதை முதலிய அறிவியல் நூல்களைச் சிறுவர்களுக்கென எழுதியவர். விண்வெளி ரசாயனம், விஞ்ஞானத் தொழில்நுட்பப் புரட்சியும் அதன் விளைவுகளும் போன்றவை நா.வா.வின் அறிவியல் நூல்களில் குறிப்பிடத்தக்கவை.
தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் துணை விளைவாக ‘அனைத்தும் ஆங்கிலம்’ என மாறிய சூழலில், சி. சுப்பிரமணியம், மோகன் குமாரமங்கலம் போன்ற அரசியலாளர்கள், தமிழில் அறிவியல் பாடநூல்கள் குறித்து அக்கறையும் ஆர்வமும் கொண்டனர். அத்தருணத்தில் ‘தமிழில் முடியும்’ என்னும் தொகுப்பு நூல் ஒன்றை நா.வா. வெளிக்கொணர்ந்தார்.
1967இல் ‘நெல்லை ஆய்வுக் குழு’ என்னும் அமைப்பை உருவாக்கினார். கற்றலில் ஆர்வம், ஆய்வில் ஈடுபாடு, அறிவியல் நோக்குடையவர்கள் எவர் வேண்டுமானாலும் இக்குழுவில் உறுப்பினராகலாம். இந்த ஆய்வுக் குழுவில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளை வெளியிடவும், தமிழில் ஆய்வுக் களத்தை விரிவாக்கவும் 1969இல் ‘ஆராய்ச்சி’ என்னும் ஆய்விதழைத் தொடங்கினார் நா.வா. பல்துறை அறிஞர்களின் கட்டுரைகளுடன், ஆராய்ச்சிக் குழுவினரின் கட்டுரைகளும் இந்த இதழில் வெளிவந்தன.
தமிழகத்தில் மட்டுமன்றி ஈழ, மலேசியத் தமிழர்கள் மத்தியிலும் மதிப்பிற்குரியவராகத் திகழ்ந்தார் நா. வானமாமலை. அவரது இலக்கியப்பணிகளைக் கௌரவிக்கும் வகையில், அவருடைய மறைவுக்குப் பிறகு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் அவருக்கு “இலக்கியக் கலாநிதி” என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது.
முதுபெரும் ஆராய்ச்சியாளர், பல துறைகளிலும் முன்னோடியாகத் திகழ்ந்த புதுமைவாதி; முற்போக்கு இலக்கியவாதி; பாட்டாளி மக்களின் தோழர்; இளம் எழுத்தாளர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் திறனாய்வாளர்களுக்கும் வழிகாட்டியாய்த் திகழ்ந்த ஆசான் எனப் பல்வேறு சிறப்புகளுக்கும் உரியவராய்த் திகழ்ந்தார் நா.வானமாமலை.
அரசர்களின் பெருமையைப் பறைசாற்றிக்கொண்டிராமல் சாமானிய மக்களின் சமூக வாழ்க்கையை, அவர்களின் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் தமிழக வரலாறு மீட்டுருவாக்கம் செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்திய நா.வா., மார்க்சியத்தை அடிப்படையாகக் கொண்ட பொதுவுடைமைச் சமுதாயம் நம் மண்ணில் மலர்வதே வர்க்க பேதங்களுக்குச் சாவுமணி அடிக்கும் செயலாக அமையும் என்று திடமாக நம்பியவர்.
குழந்தைகளுக்கு நீதிநூல்களையும் புராணக் கதைகளையும் அறிமுகப்படுத்துவதைவிடவும் அறிவியல் நூல்களை அறிமுகப்படுத்துவது சிறந்தது என்பது அவரது எண்ணம். அவ்வாறே பிறநாட்டு நல்லறிஞர் நூல்களைத் தமிழில் மொழியாக்கம் செய்வதிலும் அவருக்கு ஈடுபாடு இருந்திருக்கின்றது. நா.வானமாமலையின் 22 நூல்கள் அரசுடைமையாக்கப்பட்டிருக்கின்றன.
தமிழக மக்களுக்கு ஒல்லும் வகையிலெல்லாம் நல்லறிவு கொளுத்திச் சென்றிருக்கும் அவ்வறிஞரின் சிந்தனைகளைப் போற்றுவதும், அவர் வகுத்தளித்த பொதுவுடைமைப் பாதையில் பயணிப்பதும், அவர் விரும்பியபடி, சமூக உண்மைகளைப் பாசாங்கின்றிப் பிரதிபலிக்கும் வகையிலான தமிழர் வரலாற்றை அனைத்துத்துறை அறிஞர்களும் ஒருங்கிணைந்து எழுதுவதும் அன்னாருக்கு நாம் செய்யும் சிறந்த கைம்மாறாக அமையும்.
*****
கட்டுரைக்குத் துணைநின்றவை:
- தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள் – நா. வானமாமலை, எம்,ஏ., எல்.டி., என்சிபிஎச் பிரைவேட் லிமிடெட், சென்னை – 2
- தமிழர் நாட்டுப் பாடல்கள் – தொகுப்பாசிரியர் – நா. வானமாமலை, எம்.ஏ., எல்.டி., நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை – 98
- வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் – பதிப்பாசிரியர் – நா.வானமாமலை, எம்,ஏ., எல்.டி., அச்சிட்டோர் நியூ செஞ்சுரி பிரிண்டர்ஸ், சென்னை – 2
- https://www.hindutamil.in/news/opinion/columns/178979-.html