நாகேஸ்வரி அண்ணாமலை

விட்ட குறை, தொட்ட குறை என்பார்களே அது போல் நான் பல ஆண்டுகளாக இஸ்ரேலுக்குப் போக வேண்டும் என்று ஆசைப்பட்டுக்கொண்டிருந்தேன்.  அந்த ஆசையை நான் வெளிப்படையாகச் சொல்லும் பொழுதெல்லாம் என் மகள், ‘இஸ்ரேலுக்கா, இப்போதைக்கு நாம் அங்கு போக முடியாது’ என்று வீட்டோ செய்துவிடுவாள்.  அவள் சொல்வது சரிதான் என்று எனக்கும் தோன்றும்.  அதனால் இஸ்ரேல் போகும் ஆசையை அப்போதைக்கு விட்டுவிடுவேன்.

என் கணவரோடு சிகாகோ பல்கலைக் கழகத்தில் வேலை பார்த்த துணைப் பேராசிரியர்  ஒருவர் யூத இனத்தைச் சேர்ந்தவர்.  இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்.  ஆறு வருடங்கள் சிகாகோவில் வேலை பார்த்துவிட்டு ஒராண்டு  ஆய்விற்காக இஸ்ரேலின் நகரங்களுள் ஒன்றான ஜெருசலேம் நகரில் இருக்கும் ஹீப்ரூ பல்கலைக் கழகத்திற்குச் சென்றார்.  அங்கிருக்கும் போது ஒரு முறை அமெரிக்காவின் விஸ்கான்ஸின் பல்கலைக் கழகத்தில் நடந்த ஒரு கருத்தரங்கிற்கு வந்தவர் சிகாகோவிற்கும் வந்திருந்தார்.

சிகாகோவில் அவரைச் சந்தித்துப் பேசிய போது இஸ்ரேலுக்குப் போக வேண்டும் என்ற என்னுடைய நெடுநாளைய  ஆசையை சும்மா கேஷுவலாகக் கூறினேன்.  அவர், ‘நீங்கள் இஸ்ரேலுக்குப் போவதற்கு இது நல்ல தருணம்’ என்றார்’  ‘ஏன் அப்படிக் கூறுகிறீர்கள்?  இப்போது அங்கு அமைதி நிலவுகிறதா?’ என்றேன்.  ‘நான் இப்போது அங்கு இருக்கிறேன்.  அதனால்தான் இது நல்ல சமயம் என்றேன்’ என்றார்.

அப்போதே என் கணவரிடம் இஸ்ரேல் போவது பற்றிப்  பேச ஆரம்பித்தேன்.  அவருக்கும் என்னுடைய வெகுநாளைய ஆசையை நிறைவேற்றுவதற்கு இது சரியான சமயமாகத் தெரிந்தது.  அடுத்ததாக எப்போது போவது என்று எண்ண ஆரம்பித்தோம்.  நண்பர் ஜூனில் வந்தால் தனக்கும் சற்று ஓய்வு இருக்கும் என்றும் மேலும் அப்போது பல்கலைக் கழகத்தில் என் கணவருக்கு ஒரு சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்வதற்குத் தகுந்த நேரம் என்றும் கூறினார்.  வருடா வருடம் ஜூனில் இந்தியாவிற்கு வருவோம்.  இந்த முறை அப்படிச் செல்லும்போது வழியில் இஸ்ரேலில் ஒரு வாரம் கழிக்கலாம் என்று முடிவு செய்தோம்.  தற்செயலாக இன்னொரு அமெரிக்க நணபர் ஒருவர் – இவரும் யூதர் – நாங்கள் போவதாகத் திட்டமிட்ட தினங்களில் அங்கு இருப்பதாகக் கூறியதும் இப்படி எல்லாம் கனிந்து வந்ததில் எல்லோருக்கும் ஒரே சந்தோஷம்.  (போன வாரம் நடந்தது போல் காஸாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஏவுகணைத் தாக்குதல் அப்போது நடந்திருந்தால் போயிருப்போமா என்பது சந்தேகமே.  நல்ல வேளையாக அப்போது எதுவும் நடக்கவில்லை.)

பல நூற்றாண்டுகளுக்கு  முன்பே அமெரிக்காவில் குடியேறி அங்கு செட்டிலாகிவிட்ட  அமெரிக்க யூதர்கள் பலர் இஸ்ரேல் என்ற நாடு 1948-இல் உருவாக்கப்பட்ட பிறகு அந்த நாட்டிற்குச் சென்று அங்கு சில நாட்களாவது தங்கி வர வேண்டும் என்று நினைக்கிறார்கள்.  யூதர்களுக்காக உருவாக்கப்பட்ட நாட்டில் யூதர்களாகிய தாங்கள் பங்குகொள்ள வேண்டும் என்று பிரியப்படுகிறார்கள்.  மேலே கூறிய நண்பரும் இந்த வகையைச் சேர்ந்தவர்.

இஸ்ரேலில் உதவுவதற்கு இரண்டு நண்பர்கள் இருக்கிறார்கள் என்ற செய்தி  கொடுத்த தெம்பில் மளமளவென்று என் மகள் டிக்கெட் வாங்குவது, ஜெருசலேமில் தங்குவதற்கு ஏற்பாடு செய்வது என்று எல்லாக் காரியங்களையும் செய்ய ஆரம்பித்தாள்.

அமெரிக்காவும் இஸ்ரேலும்  நண்பர்கள் ஆதலால் இஸ்ரேலுக்குப்  போவதற்கு அமெரிக்கக் குடிமக்களும் குடியுரிமை பெற்றவர்களும்  விசா எதுவும் இல்லாமல் போகலாம்.  இந்தியர்கள் என்றால் விசா வாங்க வேண்டும்.  அன்கு போவதற்கு ஒரு மாதமாவது இருக்கும் போதுதான் விசா கொடுக்கிறார்கள்.  இஸ்ரேலுக்குப் போய் வந்தவர்களை பல அரபு நாடுகள் தங்கள் நாட்டிற்குள் அனுமதிப்பதில்லை ஆதலால் இஸ்ரேல் விசாவை ஒரு தனித் தாளில் பெற்று இஸ்ரேலுக்குப் போய்வந்த பிறகு அதைப் பாஸ்போர்ட்டிலிருந்து பிரித்து எடுத்துவிடலாம் என்று ஒரு நண்பர் யோசனை கூறினார்.  அதனால் விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது இஸ்ரேல் தூதரகத்திடம் அந்த வேண்டுகோளைக் கூறுங்கள் என்றார்கள்.  ஆனால் அதை அவர்கள் கவனித்ததாகத் தெரியவில்லை.  பாஸ்போர்ட்டிலேயே குத்திக் கொடுத்துவிடுகிறார்கள்.

இஸ்ரேலின் தலைநகரமான டெல் அவிவ் ஒரு மாடர்ன் நகரம்.  அங்கு எங்களைப் போன்றோர்களுக்குப் பார்ப்பதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை.  எங்களுடைய விருப்பம் எல்லாம் பழமை வாய்ந்த ஜெருசலேம் நகரையும் அதைச் சுற்றியிருக்கும் மற்ற பழைய நகரங்களையும் பார்க்க வேண்டும் என்பதுதான். ஜெருசலேமில் விமான நிலையம் இல்லையாதலால் டெல் அவிவிற்குச் சென்று அங்கிருந்து சாலை வழியாக ஜெருசலேம் செல்ல வேண்டும்.  நாங்கள் சிகாகோவிலிருந்து கனடா நாட்டிலுள்ள டொரொண்டோ விமான நிலையத்திற்குச் சென்று அங்கிருந்து டெல் அவிவிற்குச் செல்லத் திட்டமிட்டோம்.

சிகாகோவிலிருந்து  டோரண்டோ செல்ல ஒன்றரை மணி  நேரம்தான்.  அதற்குப் பிறகு  டெல் அவிவ் செல்லும் விமானம்  கிளம்ப ஐந்து மணி நேரத்திற்கு மேல் இருந்தது.  இத்தனை மணி நேர இடைவெளி இருந்ததால் டெல் அவிவ் செல்லும் விமானம் கிளம்பும் இடத்திற்கு அப்போது எங்களைச் செல்ல அனுமதிக்கவில்லை.  விமான நிலையத்தில் வேலை பார்த்த பல தமிழர்கள் – டோரண்டோவில் இலங்கையிலிருந்து குடியேறிய பல தமிழர்கள் இருக்கிறார்கள் – நாங்கள் தமிழர்கள் என்று தெரிந்துகொண்டு நன்றாக உதவினர்.

டோரண்டோ-டெல் அவிவ்  விமானப் பயணம் பன்னிரெண்டு  மணி நேரம் எடுத்தது.  வழியில் மூன்று தடவை உணவு கொடுத்தார்கள்.  நாங்கள்  எப்போதும் விமானப் பயணத்தின்  போது சைவ, ஆசிய உணவையே கொடுக்குமாறு விமானக் கம்பெனியிடம் கேட்பதுண்டு.  இங்கும் அம்மாதிரிக் கேட்டிருந்தும் மூன்று முறையில் இரண்டு முறை பாலஸ்தீன உணவைக் கொடுத்தார்கள்.  பாலஸ்தீனத்திற்குப் போகும் முன்பே எங்களுக்குப் பாலஸ்தீன உணவு கிடைத்தாலும் விமான உணவு பாலஸ்தீனத்தில் கிடைத்த உணவு போல் இல்லை.  எல்லா விமான உணவுகளைப் பொறுத்த வரையிலும் இப்படித்தான்.  நம் இந்திய உணவு இந்திய உணவு போல் இருக்காது.

இஸ்ரேலுக்குப் போவதாக நண்பர்களிடம் கூறியதுமே  அங்கு மிகவும் கெடுபிடியாக  இருக்கும், விமான நிலையத்தில் உங்களிடம் பல கேள்விகள் கேட்பார்கள் என்று பலர் எச்சரித்திருந்தனர்.  அதிலும் அந்த நாட்டை விட்டு வெளியேறும் போது இன்னும் அதிகக் கேள்விகள் கேட்பார்கள் என்று கூறியிருந்தனர்.  ஆனால் அப்படி ஒன்றும் இல்லை.  விமான நிலைய அனுபவத்தைப் பொறுத்த வரை குறிப்பிடத் தகுத்தாற் போல் எதுவும் நடக்கவில்லை.  எங்களில் யாரும் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள் இல்லையென்பதும் மிகக் குறைந்த வயது இளைஞர் இல்லை என்பதும் காரணமாக இருக்கலாம்.  குடிபுகல் பகுதியில் இருந்த ஊழியர்கள் எல்லா நாட்டிலும் போல் முகத்தைக் கடுமையாக வைத்துக்கொண்டிருந்தார்கள்.  குடிபுகல் பகுதியில் வேலை பார்க்கும் எல்லா ஊழியர்களுக்கும் எல்லா நாடுகளிலும் மறந்தும் சிரித்துவிடாதீர்கள் என்று பயிற்சியின் போது அறிவுரை கூறியிருப்பார்கள் போலும் என்று நான் நினைத்துக்கொள்வேன்.

டெல் அவிவ் விமான  நிலையம் டெல் அவிவ் நகரிலிருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில்  இருக்கிறது.  ஜெருசலேம்  நகரம் டெல் அவிவ் விமான நிலையத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தூரம் இருக்கிறது.  விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் விமான நிலையத்திற்கு வெளியே நின்ற டாக்சி ஒன்றில் ஜெருசலேம் நோக்கிக் கிளம்பினோம்.  டாக்சி டிரைவர் ஏதோ கொஞ்சம் ஆங்கிலம் பேசினார்.  ஜெருசலேமிலும் டாக்சி டிரைவர்கள் ஏமாற்றுவார்கள் என்று நண்பர்கள் எச்சரித்திருந்ததால் விமான நிலையத்திலிருந்து ஜெருசலேமில் நாங்கள் தங்கியிருந்த இடத்திற்குச் செல்ல சுமாராக எவ்வளவு ஆகும் என்று நண்பர்களிடம் கேட்டு வைத்திருந்தோம். மேலும் விமான நிலையத்திற்கு வெளியே சில ஊர்களுக்குச் செல்வதற்குரிய கட்டண அறிவிப்புப் பலகை இருந்தது.  டாக்சி டிரைவர் கேட்ட தொகை அதை அடுத்து இருந்ததால் அதற்கு ஒத்துக்கொண்டு அவர் காரில் ஏறினோம்.

மைசூரில் ஆட்டோக்காரர்கள்  பக்கத்து இடத்திற்கு வருவதற்குத்  தயங்குவார்கள்; அல்லது குறைந்த கட்டணமான இருபது ரூபாயை விட அதிகம் கேட்பார்கள்.  ஜெருசலேமில் டாக்சி டிரைவர்களைப் பொறுத்தவரை இதே கதைதான்.  ஜெருசலேம் தெருக்கள் மேடும் பள்ளமுமாக இருந்ததாலும் சில இடங்களில் படிகளோடு இருந்ததாலும் என்னால் நடக்க முடியவில்லை.  போனில் டாக்சியைக் கூப்பிட்டு நாங்கள் தங்கியிருந்த இடத்தைக் குறிப்பிட்டு போக வேண்டிய இடத்தையும் குறிப்பிட்டால் வர முடியாது என்று கூறிவிடுவார்கள்.  அதனால் கூடியவரை போகும் இடத்தைக் கூறுவதை முடிந்தால் தவிர்த்துவிடுவோம்.  சில சமயங்களில் எங்களால் முடியாவிட்டால் நாங்கள் தங்கியிருந்த அபார்ட்மெண்ட் சொந்தக்காரரிடம் உதவி கேட்டால் அவர் தவறாமல் டாக்சியை வரவழைத்துவிடுவார்.  அவர்கள் மொழியில் அவர் பேசியது ஓரளவிற்கு உதவியிருக்கும் என்று நினைக்கிறேன்.

நாங்கள் ஜெருசலேம்  சென்ற அன்று நல்ல வெயில் அடித்தது.  பகலில் அங்கு ஜூனில் நல்ல வெயில் அடிக்கிறது.  பொழுது சாயும் போது வெப்பம் குறைந்து கொஞ்சம் குளிர ஆரம்பித்துவிடுகிறது.  நாங்கள் விருந்திற்குப் போன இரண்டு நண்பர்கள் வீட்டிலும் இரவு உணவைத் தோட்டத்தில் மேஜை, நாற்காலி போட்டுப் பரிமாறினார்கள்.  வெளியில் உணவருந்துவது இஸ்ரேல் நாட்டவர்களுக்குப் பிடித்தமான விஷயம் போல் தெரிகிறது.

ஜெருசலேமில் ஓட்டல்களிலும்  தங்கலாம்.  நாங்கள் அபார்ட்மெண்ட்டில்  தங்குவது என்று முடிவு செய்தோம்.  வீட்டின் ஒரு பகுதியை சில  வீட்டுச் சொந்தக்காரர்கள்  சுற்றுலாப் பயணிகளுக்காக வாடகைக்கு விடுகிறார்கள்.  இவற்றில் ஓட்டல்களில் இல்லாத சமைக்கும் வசதி உண்டு.  எங்கள் அபார்ட்மெண்ட்டில் நிறையச் சமையல் சாமான்கள் இருந்தன.  ஒரு மின்சார அடுப்பும் இருந்தது.  சிறிய சமையலறை இருந்தது.  ஒரு குளிர்சாதனப் பெட்டியும் இருந்தது.  பால், ரொட்டி, சீஸ், பழங்கள் என்று வாங்கிவைத்துக்கொண்டு காலை உணவை நாங்களே தயாரித்துக்கொண்டோம். ஒட்டலில் இல்லாத இன்னொரு வசதி துணிகளைத் துவைத்துக் காயப் போட அபார்ட்மெண்ட்டிற்கு வெளியே கொடி இருந்தது.  மூன்று நாட்களுக்கு ஒரு முறை அபார்ட்மெண்டைச் சுத்தம் செய்து கொடுப்பதற்கு ஒரு பெண் வந்தார்
 

நாங்கள் தங்கியிருந்த அபார்ட்மெண்ட் சொந்தக்காரர் எங்கள் அபார்ட்மெண்டிற்கு  மேலே உள்ள பகுதியில் குடியிருந்தார்.  அபார்ட்மெண்ட்டிற்குப் போவதற்கு இருநூறு அடிகள் இருக்கும்போதே படிகள் இருந்ததால் டாக்சியால் அதற்கு மேல் போக முடியவில்லை.  அங்கிருந்து மூட்டை முடிச்சுகளைத் தூக்கிக்கொண்டு அபார்ட்மெண்ட்டிற்கு நடந்தோம்.  அபார்ட்மெண்ட் சொந்தக்காரரைச் சந்தித்துச் சாவியைப் பெற்றுக்கொண்டோம்.  ‘உங்களைப் பார்க்க நண்பர் ஒருவர் ஏற்கனவே வந்திருந்தார்.  இந்தப் பழங்களையும் இனிப்புகளையும் என்னிடம் கொடுத்துவிட்டுச் சென்றார்’ என்று கூறி அவர் கொடுத்துவிட்டுப் போயிருந்த பொருள்களை எங்களிடம் கொடுத்தார்.

எங்களோடு எங்கள் அபார்ட்மெண்ட்டிற்கு வந்து எப்படி அதைத் திறப்பது என்று காட்டிவிட்டு, என்ன உதவி வேண்டுமானாலும் அவரிடம் கேட்கலாம் என்றும் எப்போதும் அவராவது அல்லது அவருடைய மனைவியாவது வீட்டில் இருப்பதாகவும் கூறிவிட்டுச் சென்றார்.  எங்கள் அபார்ட்மெண்ட் அவர் அபார்ட்மெண்ட்டிற்குக் கீழேதான் என்றாலும் எங்கள் அபார்ட்மெண்ட் வாசல் கிழக்குப் பார்த்தும் அவருடைய பகுதியின் வாசல் மேற்குப் பார்த்தும் இருந்ததாலும் பல வீடுகளைக் கடந்து சுற்றிக்கொண்டுதான் எங்கள் அபார்ட்மெண்ட்டிற்கு வர வேண்டியிருந்தது.  எங்கள் அபார்ட்மெண்ட் ஜெருசலேமின் பழைய நகரத்தில் இருந்தது.  இதை old city என்கிறார்கள்.  இது ஒரு பழைய கோட்டைச் சுவருக்குள் இருக்கிறது.  இதில் பல பகுதிகள் இருக்கின்றன.  இங்குதான் யூதர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய மூன்று மதத்தினரும் தங்கள் இடம்தான் என்று தங்களுக்குள் சண்டை போட்டுக்கொள்ளும் பல இடங்கள் இருக்கின்றன.  அங்குள்ள ஒரு மசூதியின் கூண்டு எங்கள் அபார்ட்மெண்ட்டிலிருந்தே தெரிந்தது.  எங்களை எங்கள் அபார்ட்மெண்ட்டிற்குக் கூட்டி வந்த அபார்ட்மெண்ட் சொந்தக்காரர் ‘இதோ தெரிகிறதே, இதற்குத்தான் மூன்று மதத்தினரும் சண்டை போட்டுக்கொள்கிறார்கள்’ என்று கூறினார்.  இவர் பெயர் யோசி (Yossi).  இவர் யூத மதத்தைச் சேர்ந்தவர்.

(தொடரும்)

படத்திற்கு நன்றி :

http://www.jewishvirtuallibrary.org/jsource/vie/Telaviv.html

 

 

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “இஸ்ரேல் பயணம்-1

 1. இஸ்ரேலுக்கு எங்களையும் உடன் அழைத்துச் செல்கிறீர்கள். உங்கள் கண்கள் வழியாக இஸ்ரேலைக் காண்கிறோம். குறுகிய காலத்தில் ஒரு நாடு  எப்படி இத்தகைய வளர்ச்சியை அடைந்தது என அறிய ஆவல். தொடருங்கள். 

 2. இந்த பயணக் கட்டுரை மிகவும் சுவையான நடையில் எழுதப்பட்டுள்ளது. சாதாரணமாக இஸ்ரவேல் நாட்டுக்கு நம்மவர்கள் சென்றுவருவது அரிதே. அப்படிப்பட்ட ஒரு நாட்டைப் பார்த்து அதனை எழுத்தில் கொண்டுவந்துள்ள விதம் நன்று. உங்களின் இந்த அபூர்வமான அனுபவத்தை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு நன்றி…டாக்டர் ஜி. ஜான்சன்.

 3. அன்பு சகோதரிக்கு வணக்கம்,
  தங்கள் கட்டுரையை முழுவதும் ரசித்தேன், இயல்பாகவே யூதர்களை பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்று அனைவ௫ம் வி௫ம்புவர், அப்படியான தேடலில் எனக்கு கிடைத்ததுதான் உங்கள் தளம், நீங்கள் இக்கட்டுரையை எழுதி நீண்ட நாட்கள் ஆகியி௫ந்தாலும், எப்போது படித்தாலும், தற்போது என எண்ணத் தோன்றும், இப்போது இந்தியாவில் Covid – 19 காரணமாக போட்டுள்ள Lock down நேரத்தை இது போன்ற கட்டுரைகளை படிப்பதில் செலவிடுகிறேன்.
  இந்த கட்டுரையில், அங்கு பார்த்தவைகளைப் பற்றி மட்டும் எழுதியி௫ந்தால், இதில் இத்தனை சுவை இ௫க்காது, எது எதனால் ஏற்பட்டது என்ற வரலாறு முக்கியம் அதுதான் இங்கு சுவையூட்டியி௫க்கிறது, ஒ௫ குறிப்பிடத்தகுந்த அளவிற்கு யூதர்கள் பற்றி அறிந்த நிறைவு ஏற்படுகிறது
  அழகிய தமிழில் நல்ல கட்டுரை நன்றி
  சில சந்தேகங்களுக்கு தங்களிடம் கேட்டு விடை காண விழைகிறேன்
  இவர்கள் ஜெர்மனிக்கு எப்போது சென்றார்கள், 4000 கி.மீ, தூரம் உள்ள அந்நாட்டை எப்படி பயணம் செய்து அடைந்தார்கள், யூதர்கள் இங்கிலாந்து நாட்டில் ஏன் ஆதிகாலத்தில் குடியேறிய வரலாறு இல்லை
  கி௫ஸ்து பிறப்பதற்கு முன்னர் அரேபியர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இ௫ந்தனர் என்ற வரலாறு உண்டா,
  கி.மு. வில் வாழ்ந்த யூதர்களுக்கு அரேபிய மொழி தெரியுமா,
  முஸ்லீம் மதம் தோன்றுவதற்கு முன்பே அரபு மொழி அரேபிய நாடு முழுவதிலும் பேசப்பட்டதா
  பல நாடுகளிலும் பரவியுள்ள யூதர்கள் வேறு இன மக்களை தி௫மணம் செய்வதில்லையா அதில் இனக்கலப்பு ஏற்படும் நிலைகள் உ௫வாகவில்லையா,
  இதுபோன்ற எனது சந்தேகங்களுக்கு விடை காண விழைகிறேன், நான் புதிதாக தேடுதலில் நுழைந்தவன், எனக்கு அர்த்தமற்ற சந்தேகங்கள் தோன்றியி௫ந்தால், அதை தவறாக க௫திவிட வேண்டாம்
  மேற்கண்ட என்னுடைய ஒவ்வொ௫ சந்தேகத்துக்கும் தங்களிடம் விடை எதிர்பார்க்கிறேன், இந்த கட்டுரையை வழங்கியதற்காக மீண்டும் நன்றியை தெரிவிக்கிறேன்

  சகோதரன்,
  காசி. இராமநாராயணன்,
  மதுரை – 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *