நாகேஸ்வரி அண்ணாமலை

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் மிகவும் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது.  இரு கட்சி வேட்பாளர்களும் மிகத் தீவிரமாகப் பிரச்சாரம் நடத்தி வருகிறார்கள்.  ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் உதவி ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் இடையே பொது மேடையில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.  அமெரிக்கர்கள் அரசியல் தலைவர்கள் இப்படி விவாதங்கள் நடத்துவது தங்கள் நாட்டிற்கே சிறப்பான செயல் என்று பெருமைப்பட்டுக்கொள்கிறார்கள்.  அவர்கள் அப்படி பெருமைப்பட்டுக்கொள்வதிலும் நியாயம் இருப்பதாகவேப்படுகிறது.  கலைஞரும் அம்மாவும் இப்படி நேருக்குநேர் விவாதத்தில் கலந்துகொள்வதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.  

சென்ற 3-ஆம் தேதி ராம்னிக்கும் ஒபாமாவுக்கும் இடையே நடந்த  விவாதத்தில் ஒபாமா அடித்துப் பேசவில்லை என்று பரவலாக ஒரு எண்ணம் எல்லோரிடமும் இருந்தது.  ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த சிலர் ஒபாமா ஜெயிக்கும் வாய்ப்புகளையே  அது குறைத்துவிட்டதோ என்று கவலைப்பட்டனர்.  ஏனோ அன்று ஆரம்பத்திலிருந்தே ஒபாமா உற்சாகமாக இல்லாதது போல் தோன்றியது.  ராம்னி அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்று பொய்யாகக் கூறிய போதெல்லாம் அவர் அதை எப்படிச் செய்வார் என்று அழுத்திக் கேட்கவில்லை.  இத்தனைக்கும் விவாதம் நடந்த அக்டோபர் மூன்று பாரக் ஒபாமா-மிஷல் ஒபாமாவின் திருமண நாள்.  அவரே அதை விவாதம் ஆரம்பிக்கும் முன் கூறினார்.  அன்று ஏன் உற்சாகமின்றி இருந்தார் என்று புரியவில்லை.

முதல் விவாதம் ஆரம்பிப்பதற்கு முன்பே குடியரசுக் கட்சியினர் சிறந்த பேச்சாளரும் விவாதம் செய்வதில் வல்லமை படைத்தவருமான ஒபாமாவை எப்படி ராம்னி சந்திக்கப் போகிறார் என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.  ராம்னியும் அப்படி பயந்துகொண்டிருந்திருக்க வேண்டும்.  ஒபாமா அவ்வளவு துடியாக இல்லை முதலிலேயே கண்டுபிடித்துவிட்ட ராம்னிக்குத் தைரியம் பிறந்திருக்க வேண்டும்.  தான் சொல்வதெல்லாம் சரி என்பது போல் சரமாரியாகப் பொய்களைச் சொன்னதோடு யாராலும் எளிதாகச் சாதிக்க முடியாதவற்றை எல்லாம் தான் சாதித்துவிடுவேன் என்று அள்ளிவிட்டுக்கொண்டிருந்தார்.  ஆனால் ஒபாமா இது எதையும் மறுக்கவில்லை. விவாதத்திற்குப்பின் தொலைக்காட்சிளில் காமெடியன்கள் ஒபாமாவைக் கேலி பண்ணிக்கொண்டிருந்தார்கள். ஒரு காமெடியன், ராம்னி ஒசாமா பின்லாடனைக் கொன்றது தானே என்றார்; ஒபாமா தலையசைத்துக்கொண்டிருந்தார் என்று கிண்டலடித்தார்!

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கிடையே விவாதம்  நடந்து முடிந்து ஒன்பது நாட்களில் உதவி ஜனாதிபதிகளுக்கான விவாதம் ஒபாமாவின் உதவி ஜனாதிபதியான ஜோ பைடனுக்கும்  குடியரசுக் கட்சி வேட்பாளரான பால் ரயானுக்கும் இடையே நடந்தது.  பைடன் நாற்பது வருஷங்களாக அமெரிக்க செனட்டில் செனட்டர் பதவி வகித்து நல்ல அனுபவம் பெற்றவர்.  ரயானுக்கு சில வருடங்கள் கீழவை அங்கத்தினராக இருந்த அனுபவம் மட்டுமே உண்டு.  அவரும் அமெரிக்காவின் கடன் சுமையைக் குறைக்கச் சொன்ன சில யோசனைகள் கவைக்கு உதவாதது.  அவர் சில பொய்களை அள்ளிவிடும் போதெல்லாம் பைடன் சும்மா இருக்கவில்லை.  ஏளனமாகச் சிரித்தார்; குறுக்கே பேசிப் பதிலடி கொடுத்தார்.  ஒபாமா செய்யத் தவறியதை பைடன் செய்தார் என்று ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அவரைப் புகழ்ந்துகொண்டும் பைடன் அத்துமீறலாக நடந்துகொண்டார் என்று குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் குறைகூறிக்கொண்டும் இருந்தனர்.

அக்டோபர் 16-ஆம் தேதி ராம்னிக்கும் ஒபாமாவிற்கும் இடையே இரண்டாவது விவாதம் நடந்தது.  இதில் உசுப்பிவிட்ட சேவல் போல் ஒபாமா சண்டைக்களத்தில் இறங்கினார்.  இது வரை யாருக்கு ஓட்டுப் போடுவது என்று முடிவுசெய்ய முடியாத எழுபது பேர்களை விவாதம் நடக்கும் இடத்திற்கு அழைத்து  அவர்கள் வேட்பாளர்களைக் கேள்விகள் கேட்கும்படி செய்தனர்.  எல்லாம் உருப்படியான கேள்விகள். முதலிலேயே ஒபாமாவின் பதில்களில் வேகம் இருந்தது.  கடைசி வரை அந்த வேகம் குறையாமல் இருந்தது.  இதைக்கண்டு ராம்னி கொஞ்சம் பயந்துவிட்டது போல் நான் உணர்ந்தேன்.  வழக்கம் போல் ஒபாமா செய்யத் தவறியதாகத் தான் நினைத்ததையே சொல்லிக்கொண்டிருந்தார்.  கடந்த நான்கு வருடங்களாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் ஒபாமா ஏன் இது வரை அமெரிக்கப் பொருளாதாரத்தைச் சீர்செய்யவில்லை என்று அவர் அடிக்கடி கூறுவதை இந்தக் கூட்டத்திலும் கூறினார்.  அதற்குப் பதிலடி கொடுத்த ஒபாமா தான் ஆட்சிக்கு வரும்போது ஜனாதிபதி புஷ்ஷின் கொள்கைகளால் எப்படிப் பொருளாதாரம் சீரழிந்திருந்தது என்றும் தன்னுடைய ஆட்சி அதிலிருந்து மீள்வதற்கு எப்படிப் பிரயத்தனப்பட்டுக்கொண்டிருக்கிறது என்றும் எடுத்துச் சொன்னார்.  இது வரை ஒபாமா இப்படி புஷ்ஷை நேரடியாகக் குறை கூறியதில்லை.

கடைசியாக சமீபத்தில் லிபியாவின் பென்ஹாஸி நகரில் நடந்த ஆர்ப்பாட்டங்களின் விளைவாக லிபியாவின் அமெரிக்க தூதரும் இன்னும் மூன்று அமெரிக்கர்களும் கொல்லப்பட்ட விவகாரத்தைக் கொண்டுவந்து ஒபாமாவால் அமெரிக்காவைப் பாதுகாக்க முடியாது என்று பாய்ந்தார் ராம்னி.  அந்தச் சம்பவம் நடந்து பதினான்கு நாட்களுக்குப் பிறகே ஒபாமா அது பயங்கரவாதிகளின் செயல் என்று அறிவித்ததாகவும் அது வரை மும்முரமாக கலிபோர்னியாவில் தேர்தல் பிரச்சாரம் செய்துவந்ததாகவும் ராம்னி குற்றம் சாட்டினார்.  அது நடந்த மறு நாளே வெள்ளை மாளிகையின் ரோஜாப்பூத் தோட்டத்தில் தான், அது பயங்கரவாதிகளின் செயல் என்று சொன்னதை ஒபாமா எடுத்துக் கூறினார். அதையடுத்து நடுவராக இருந்தவரும் ’ஆம், ஜனாதிபதி ஒபாமா அப்படிச் சொன்னார்’ என்று கூறியதும் ராம்னிக்கு அசடு வழிந்தாலும், .ஒபாமா பலவீனமானவர் என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.

ஒபாமாவின் இரண்டாவது விவாதத்தைக் கேட்ட பிறகு அவரது ஆதரவாளர்கள் மிகவும் குஷியாக இருக்கிறார்கள்.  அவர் ஜெயிக்க வேண்டும் என்று இரவு பகலாக வேண்டிக்கொண்டிருக்கும் ஒரு பெண் ‘இனி நாம் நிம்மதியாக இருக்கலாம்’ என்றார்.

தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்த நாளிலிருந்து ராம்னி, ஒபாமா செய்யத் தவறியது, செய்திருக்க வேண்டியது என்று பல விஷயங்களில் பொய் கூறிக்கொண்டிருந்தார்.  ஒரு இந்திய நண்பரிடம் அமெரிக்காவில் அரசியல்வாதிகள் பொய் சொல்கிறார்கள் என்று சொன்னதும் அமெரிக்க அரசியல்வாதிகளும் இந்திய அரசியல்வாதிகளைப் போல் பொய் சொல்லுகிறார்களா என்று கேட்டு மிகவும் மகிழ்ந்து போனார்!  என்னே அரசியல்வாதிகளுக்கிடையே ஒற்றுமை!

படங்களுக்கு நன்றி :

http://www.bbc.co.uk/news/world-us-canada-20000409

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *