இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் …………………… (28)

0
சக்தி சக்திதாசன்

அன்பினியவர்களே,

இனிய வணக்கங்களுடன், ஈரமான இங்கிலாந்திலிருந்து உங்கள் முன்னே இம்மடல் விழுகிறது. என்ன ஈரமான இங்கிலாந்து என்கிறானே ! என்ன விடயம் என்று சிந்திக்கிறீர்களா ? 

வேறு ஒன்றுமில்லை, காலநிலையின் கோலத்தைத்தான் குறிப்பிடுகிறேன். இலையுதிர் காலம் எமைத்தேடி படுவேகத்தில் வந்து விட்டது. இருநாட்களுக்கு ஒருமுறை வருணபகவான் தனது அதீத கருணையை அள்ளி வீசுகிறார். இங்கிலாந்து மண்ணின் மீது தோய்ந்த ஈரம் இன்னும் காயவில்லை.

மண்ணின் மீதுள்ள ஈரம்தான் காயவில்லை,ஆனால் இங்கிலாந்து அரசுக் கட்டிலில் அமர்ந்திருக்கும் அரசியல்வாதிகளின் மனதில் ஈரம் காய்ந்து விட்டது போலுள்ளது.

என்ன புதிருக்கு மேல் புதிரை அடுக்கிக் கொண்டு போகிறானே ஒழிய அவிழ்க்கிற மாதிரித் தோன்றவில்லை என்று நீங்கள் அங்கலாய்ப்பது புரிகிறது. மனதில் எழும் கேள்விகளுக்கு விடைகாணா வகையில் விசித்திரமான எண்ணங்கள் உள்ளத்தில் சதிராடுகின்றன.

ஆமாம் ……..

எங்கே போகிறோம் ? என்ன ஆகிக் கொண்டிருக்கிறோம் ?

மனிதன் தனியாகத் தோன்றிச் சமுதாயமாக மாறினான் என்கிறது மனித சரித்திரம். ஆனால் இன்று 21ம் நூற்றாண்டின் ஆரம்பக் கட்டங்களிலே அச்சமுதாயக் கட்டமைப்பு உடைந்து மனிதன் மீண்டும் தனியாகப் போய்க்கொண்டிருக்கிறானோ என்று எண்ணத் தோன்றுகிறது.

என்ன ? எந்த ஆதாரத்தை வைத்துக் கொண்டு இந்தப் பீடிகை என்று கேட்காதீர்கள். கண்முன்னே நடப்பவை, காதால் கேட்பவை என்பன என்னை இத்தகைய எண்ணங்களால் அமைக்கப்பட்ட சாலைக்குள் இழுத்துச் செல்கின்றன.

பொதுவாக நாம் வாழும் சமூகத்தை எடுத்துக் கொண்டால், அன்றாட வாழ்க்கையின் வேகம் அடுத்தவரைப் பற்றிச் சிந்திக்கக் கூட நேரம் இல்லாமல் படு கனகதியில் சென்று கொண்டிருக்கிறது. காண்பவை எல்லாமே எமக்குத் தேவை என எண்ணும் எண்ணம் கொண்ட ஒரு இளஞ்சமூகம் முளைப்பது போல் தோன்றுகிறது.

அத்தியாவசியத் தேவைகளுக்கும், ஆடம்பரங்களுக்கும் வித்தியாசம் தெரியாத சமுதாயங்கள் பரவலாக உலகெங்கும் உருவாகிக் கொண்டு வருகிறது.

இத்தகைய உருமாற்றத்திற்கு உலகப் பொருளாதாரம் “உலக மயமாக்கப்படுவது (Globalisation)” உதவுகிறது. உலகின் நீளம் மிகவும் குறைந்து கொண்டு வருவது மனிதர்களுக்கிடையில் பரஸ்பரம் நட்பினையும், மனிதாபிமான உள்வாங்கலையும் துரிதப்படுத்தும் எனும் நம்பிக்கை, நடக்கும் நிகழ்வுகளினால் குறைந்து கொண்டே போவது போலத் தெரிகிறது.

எளிமை, பொறுமை, மனிதாபிமானம் எனும் மூன்று அத்தியாவசியமான பண்புகள் மனித மனங்களில் உறைய மறுக்கின்ற காலம் போலத் தெரிகிறது.

கல்வி புகட்டும் ஆசிரியர்கள், கண்ணாக வளர்க்கும் பெற்றோர்கள், நல் அறிவைப் பெருக்கிடும் சான்றோரின் கூட்டு என்பன மீதான இளநெஞ்சங்களின் பார்வையின் பரிமாணத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது.

வரவுக்குள் செலவு எனும் கொள்கை அறவே அற்றுப் போய்விட்டதோ எனும் அச்சம் மனதைக் கவ்விக் கொள்கிறது. 

இத்தகைய ஒரு சமுதாயத்தின் அடிப்படையில், இவ்வார்ப்புகளினால் வடிவமைக்கப்படுவதே அர்சியல் கட்சிகளின் கொள்கைகளும் அதன் முன்னணித் தலைவர்களும்.

இன்றைய இங்கிலாந்து அரசியல் கட்சிகளில் முன்னணி வகிக்கும் பிரமுகர்கள், இத்தகைய ஒரு சமுதாயத்தின் பிரதிபலிப்பாகவே அமைகிறார்கள். ஆனால் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முன்னணி அமைச்சர்கள் செல்வாக்கு மிகுந்தவர்களாக, செல்வமிக்க குடும்பத்தின் வாரிசுகளாக, பிரத்தியேக கெளரவமிக்க கல்லூரிகளில் பட்டம் பெற்றவர்களாக இருப்பதனால் அன்றாட வாழ்க்கையில் தள்ளாடிக்கொண்டிருக்கும் சாதாரண மக்கள், தாம் அவர்களிலிருந்து அந்நியப்பட்டவர்களாக இருப்பது போலத் தெரிவது சகஜமே.

அதேசமயம் இங்கிலாந்து நாட்டின் முத்திரை பதிக்கும் சமூக நலத் திட்டங்களினால் பயன் பெறும் பலர் தாம் தம்மை வேலையில்லாதவர் எனும் பட்டியலில் இருந்து வெளிக்கொணர்வதற்கான முழுமுயற்சியை எடுக்கிறார்களா? எனும் சந்தேகம் ஒரு வலுவான அடிப்படையைக் கொண்டது என்பது ஏற்றுக் கொள்ள‌ப்பட வேண்டியதொன்றே.

இந்தப் பின்னணியில் தான் இவ்வாரம் நடந்த அரசாங்கத்தின் முக்கிய கூட்டணிக் கட்சியாகிய “பழமை பேணும் (கன்சர்வேடிவ்) ” கட்சியைச் சேர்ந்த நிதியமைச்சர் “ஜார்ஜ் ஒஸ்போன் (George Osborne). 2015 இல் நடக்கும் தேர்தலில் தமது தேர்தல் விஞ்ஞாபனம் கொண்டிருக்கப் போகும் ஒரு முக்கிய கொள்கைப் பிரகடனத்தைச் சொல்லியதும், அப்பிரகடனம் பலரது மனங்களில் அதிர்வலையைக் கிளப்பியது.

“கம்பெனி ஊழியர்களிடமிருந்து அவர்களது பணிகளைக் காக்கும் உரிமைகளை அக்கம்பெனியின் பங்குகளை அளிப்பதன் மூலம் அக்கம்பெனி உரிமையாளர்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் ” என்பதே அப்பிரகடனம்.

படிக்கும் போது சாதாரணமாகத் தெரியும் இப்பிரகடனத்தின் உள் பதிந்திருக்கும் ஆபத்து அதி பயங்கரமானது. தொழிலாளர் தமது உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் தமக்கான நியாயமான உரிமைகளைச் சட்டமூலத்தில் பெற்றுக் கொள்வதற்கு நடத்திய போராட்டங்களும், அவற்றை முன்னெடுத்து அதற்காக தமது வாழ்வைத் தியாகம் செய்த தொழிலாளர் தலைவர்களும் ஏராளம்.

இப்படியாக பெற்றுக் கொண்ட உரிமைகளை வெறும் கம்பெனி பங்குகளுக்காக கம்பெனிக்கு விற்று விடுவது என்பது ஒரு சாதாரண விடயமா? அது தவிர பங்குகளின் நிலையைப் பற்றி அறியாதவர்கள் யார்? பங்குகளின் விலை எப்போதுமே உயர்ந்து கொண்டு செல்லாது. பங்குகளின் விலை பயங்கரமாக வீழ்ச்சியடையும் தன்மை கொண்டது. அப்படியான நிலையில்லா வெகுமதிக்காக தமது பணியைக் காத்துக் கொள்லும் உரிமையை இழக்கச் செய்யும் வகையில் தமது கட்சியின் கொள்கையை வகுப்பது கன்சர்வேடிவ் கட்சியின் மாறாத முதலாளித்துவ கொள்கைப் போக்கையே காட்டுகிறது என்கிறார்கள் மூத்த அரசியல் விமர்சகர்கள்.

இந்த இடத்தில் தான் நான், நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் எனும் கேள்வியை மீண்டும் கேட்டுக் கொள்ள விழைகிறேன். மனிதர்களைத் தொழிலாளிகள், முதலாளிகள் எனும் பாகுபாட்டைக் கடந்து மனிதர்கள் என்று பார்க்கும் தன்மையை இழந்து கொண்டு போகிறோமா? என்று எண்ணத் தோன்றுகிறது.

அனைத்தையும் அனுபவிக்க வேண்டும் எனும் ஆசை எமது மனதில் ஓடிக் கொண்டிருந்த சமுதாய உணர்வை மழுங்கடிக்கச் செய்கிறதோ ?

இங்கேதான் எமது இளைய சமுதாயம் விழிப்படைந்து கொள்ள வேண்டும். உழைப்பது அனைவரினதும் கடமை எனும் அதேநேரம் அந்த உழைப்பைத் தக்க வைத்துக் கொள்லும் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதும் எமது கடமை என்று உணர்ந்து கொள்ள‌ வேண்டும். தொழிலாளர்கள் இல்லையானால் முதலாளிகள் இல்லை.

அதற்காக மூடத்தனமாக, காலமாற்றத்தின் கட்டாயத்தினால் ஏற்படும் மாற்றங்களை உள்வாங்கிக் கொள்ள  வேண்டியவைகளை, நாம் எமது உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம் எனும் வாதத்தினால் மூடத்தனமாக எதிர்ப்பது அறியாமை.

ஆற்றிலே வெள்ளம் ஏற்பட்டால் அவ்வெள்ளத்தை எதிர்த்துக் கரையேறுவது முடியாத காரியம். அவ்வெள்ளத்தின் போக்கில் இழுபடுவது போல இழுபட்டு கரையேறுவதே புத்திசாலித்தனம். நாம் கரைசேறும் இடம் போக எண்ணிய இடத்தை விட சிறிது அப்பாலாய் இருந்தாலும் ஆற்றொடு அடிபட்டுச் செல்லாமல் கரைசேர்ந்து விடுவோம்.

மனிதாபிமானம் எனும் அடிப்படைக் குணாம்சத்தைக் கைவிடக்கூடிய எத்தகைய மாற்றத்திற்கும் சவால் விடக்கூடிய மனதைரியம் கொண்ட இளம் சமுதாயம் உருவாக வேண்டும். நாமும் வாழ்ந்து, மற்றவரும் வாழவேண்டும் எனும் எண்ணம் ஏற்படும் மனப்பக்குவத்தைச் சமுதாயம் இளந்தலைமுறைக்கு தரக்கூடிய வகையில் தன்னை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்.

நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்று அஞ்சுவதை விடுத்து, எவ்வழி போயினும் எமது இலட்சியத்தின் குறிக்கோள் எனும் ஊரை அடைந்து விடும் முயற்சியைக் கைபிடிப்பதே சாலச்சிறந்ததாகும்.

“ஆண்டவன் உலகத்தின் முதலாளி 
அவனுக்கு நானொரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி”

எனும் கவிஞரின் வரிகளின் வழி எப்பணி செய்யினும் அப்பணி தெய்வத்தின் பணியே என்பதே விதியாகும்

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்
லண்டன். 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *