நாகேஸ்வரி அண்ணாமலை

 

சில வாரங்களுக்கு முன்னால் அமெரிக்காவையும் இந்தியாவையும்  ஒப்பிட்டு ‘அங்கும் இங்கும் என்ற கட்டுரை எழுதினேன்.  அதில் முக்கியமாக தேர்தல் வாக்குறுதிகள் என்பதைக் கட்டாயமாகச் சேர்த்திருக்க வேண்டும்.  அதனால் இப்போது எழுதுகிறேன்.  இது முக்கியமாகச் சேர்க்கப்பட வேண்டிய ஒன்று.  ஏனென்றால் இந்தியத் தேர்தல் வாக்குறுதிகளுக்கும் அமெரிக்கத் தேர்தல் வாக்குறுதிகளுக்கும் அத்தனை வித்தியாசங்கள்.
 

அமெரிக்க அரசியல்  சாசனத்தில் எல்லோரும் எந்த மதத்தையும் பின்பற்றலாம் என்ற ஷரத்து இருக்கிறது.  என்றாலும் மதத்தில் நம்பிக்கை  இல்லாத ஒருவர் கண்டிப்பாக ஜனாதிபதித் தேர்தலில் ஜெயிக்க  முடியாது.  அது மட்டுமல்ல, கிறிஸ்தவரல்லாத ஒருவரும் ஜனாதிபதி பதவிக்கு வர முடியாது.  ஜான் கென்னடி 1960-இல் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படும் வரை கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாக வருவது கிட்டத்தட்ட இயலாத காரியம் என்று கருதப்பட்டது.  ஆனாலும் முதல் கத்தோலிக்க ஜனாதிபதியாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  கிறிஸ்தவரல்லாதவர் வருவது இதைப் போல் அல்ல.  ஆக மத நம்பிக்கையுள்ள, ஒழுங்காகத் தேவாலயத்திற்குச் செல்லும், கிறிஸ்துவக் கோட்பாடுகளில் தீவிர நம்பிக்கை கொண்ட ஒருவர்தான் ஜனாதிபதியாக வர முடியும்.  அதனால்தான் ஒபாமாவைப் பிடிக்காதவர்கள் அவர் கிறிஸ்தவரே இல்லை என்றும் அவர் ஒரு முஸ்லீம் என்றும் (கென்யா நாட்டைச் சேர்ந்த அவர் தந்தை ஒரு முஸ்லீம்.  ஒபாமா பிறந்து இரண்டு வருடங்களிலேயே அவர் ஒபாமாவின் தாயை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார்.  ஒபாமா அவர் தாய், தாயின் பெற்றோர்கள் ஆகியோரால் கிறிஸ்தவராக வளர்க்கப்பட்டார்.)  கூறி அவருடைய வெற்றி வாய்ப்புக்களைக் குறைக்கப் பார்த்தனர்.  ஆனால் அது ஒன்றும் எடுபடவில்லை.  அவரைப் பற்றிய இப்படிப்பட்ட வதந்திகளைக் கிளப்புபவர்கள் இப்போதும் இருக்கிறார்கள்.

 
காந்திஜி எல்லா  மதங்களும் சமம் என்றும்  இந்து மதமும் இஸ்லாம் மதமும் பாரதத் தாயின் இரு கண்கள் என்றும் இந்தியாவின் ஒற்றுமைக்காக இந்திய மக்களுக்கு போதித்துவந்தாலும்  தான் ஒரு இந்து என்பதை எப்போதும் மறக்கவில்லை.  அவருடைய அரசியல் வாரிசான  முதல் பிரதம மந்திரி நேருஜி ஒரு போதும் தான் ஒரு இந்து என்று மக்களுக்கு அடையாளம் காட்டிக்கொள்ளவில்லை.  அவரைப் பொறுத்த வரை இந்தியத் தொழிற்சாலைகள்தான் கோவில்கள்.  இந்திய அரசியலில் மதத்தை விட ஜாதிகள்தான் அதிக இடம் வகிக்கின்றன.  ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவரை அந்தத் தொகுதியில் வேட்பாளராக நிறுத்துவது அரசியல் கட்சிகள் கைக்கொள்ளும் வழக்கம்.  ஆனால் பிரதமரோ மாநிலத்தின் முதலமைச்சரோ எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று யாரும் அவ்வளவாக அக்கறைப்படுவதில்லை.  ஜனாதிபதி இந்து சமயத்தைச் சேர்ந்தவர் என்றால் உப-ஜனாதிபதி பதவிக்கு ஒரு முஸ்லீமை நியமிப்பது ஒரு மரபாகிவிட்டிருக்கிறது.  அவ்வளவே.

கிறிஸ்தவ மதத்தில் அதிலும் கத்தோலிக்கப் பிரிவில் கருத்தடைச் சாதனங்கள் உபயோகிப்பதும் கருச்சிதைவு செய்துகொள்வதும் பெரிய பாவங்களாகக் கருதப்படுகின்றன.  தகாத உறவால், கற்பழிப்பால் ஏற்பட்ட கருப்பம், தாயின் உடல்நிலைக்குக் கேடு ஆகிய இவை மட்டும் கருச்சிதைவு கூடாது என்ற விதிக்கு அப்பாற்பட்டவை.  (இவை கூட இறைவனின் செயலால் விளைந்தவை அதிலும் கருக்கலைப்பு செய்யக் கூடாது என்று கூறும் குடியரசுக் கட்சி அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.)  இவை தவிர மற்ற எந்தக் காரணங்களுக்காகவும் கருத்தடை செய்துகொள்வது இறைவனுக்கு எதிரான செயல்.  கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள் இதை வலியுறுத்தி மக்கள் மத்தியில் ஆதரவு தேட முயற்சிக்கிறார்கள்.  ஒபாமா போன்ற தாராளவாதிகள் இதை வற்புறுத்துவதில்லை.  ஆகையால் கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள் ஒபமாவிற்கு ஓட்டளித்தால் இந்த வகையான கிறிஸ்தவ மதிப்பீடுகள் வலுவிழந்துவிடும் என்று கூறுகிறார்கள்.  தங்களுக்கு ஓட்டளித்தால் அமெரிக்காவில் இந்த மதிப்பீடுகள் மாறாமல் இருக்கும் என்று உறுதி அளிக்கிறார்கள்.  ஒபாமா கொண்டுவந்த, (ஒபாமா மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டால்) 2014-லிலிருந்து அமலுக்கு வரவிருக்கும் மருத்துவ வசதிச் சட்டப்படி (Affordable Health Care law) மருத்துவ இன்சூரன்ஸ் கம்பெனிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகக் கருத்தடைச் சாதனங்களை வழங்க வேண்டும்.  கம்பெனிகள், மருத்துவமனைகள் தங்கள் ஊழியர்களுக்கு இலவசமாகக் கருத்தடைச் சாதனங்கள் கொடுக்கும் மருத்துவ இன்சூரன்ஸ் கம்பெனிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஒபாமா இப்போதே போட்ட நிபந்தனையை அடிப்படை மதவாதிகள் நடத்தும் மருத்துவமனைகள் எதிர்த்தன.

பெண்கள் கருச் சிதைவு செய்துகொள்வதை யார் எதிர்க்கிறார்கள், யார் எதிர்க்கவில்லை என்பது பெரிதாக விவாதிக்கப்படுகிறது.   உப-ஜனாதிபதி தேர்தல் விவாதத்தில் பைடனையும் ரயானையும் கேட்ட போது பைடன், ‘கருச் சிதைவு செய்துகொள்வதை என் மதம் எதிர்ப்பதால் எனக்கு அதில் ஒப்புதல் இல்லை.  ஆனால் நான் என்னுடைய மதக்கொள்கைகளை இதில் நம்பிக்கை இல்லாதவர்கள் மீதும் மற்ற மதத்தவர்கள் மீதும் திணிக்கும் எண்ணம் எனக்கில்லை.  அதனால் கருச் சிதைவு கூடாது என்று சட்டத்தை நான் ஆதரிக்கவில்லை’ என்றார்.  ஆனால் ரயான் ‘என் மனைவி முதல் முறையாகத் தாயாகத் தயாராக இருந்தபோது எடுத்த ஸ்கேனில் என் குழந்தையின் இதயத் துடிப்பைக் கேட்டேன்.  அப்படி உயிர் பெற்ற கருவை ஏப்படிச் சிதைப்பது.  கருச் சிதைவை நான் எப்போதுமே ஆதரிக்கப் போவதில்லை’ என்றார்.

அமெரிக்காவில் திட்டமிட்டுப்  பெற்றோராதல் (Planned Parenthood) என்ற ஒரு அமைப்பு இருக்கிறது.  இதற்கு மத்திய அரசிடமிருந்து மானியம் கிடைக்கிறது.  இது பெண்களுக்குக் கருத்தடைச் சாதனங்கள் வழங்குவதோடு பிள்ளை பெற்றுக்கொள்வதிலும் யோசனை கூறுகிறது.  ராம்னி தான் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்த அமைப்புக்குரிய மானியத்தை உடனே நிறுத்துவேன் என்கிறார்.  கிறிஸ்தவ மத அடிப்படைக் கோட்பாடுகளைக் கடைப்பிடிக்காத இப்படிப்பட்ட அமைப்புகளுக்கு அரசு உதவி இல்லையாம்.

இந்தியாவில் எல்லா  ஊர்களிலும் கருச் சிதைவு க்ளினிக்குகள் இருக்கின்றன.  கருச்சிதைவு செய்துகொள்ள  விரும்பும் பெண்களை யாரும் தடுக்கப் போவதில்லை.  சட்டம் இருக்கிறதோ என்னவோ.  ஆனால்  அரசியல்வாதிகளோ மக்களோ அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை.

ஓரினச் சேர்க்கையை ஆதரிப்பதா, ஓரினச் சேர்க்கைத் திருமணங்களை சட்டப்படி அனுமதிப்பதா என்பதில் இரு கட்சிகளுக்கும் இடையில் அமெரிக்காவில் பெரிய வித்தியாசம் இருக்கிறது.  மறுபடி குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் பைபிளில் ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்வதுதான் சரி என்று கூறியிருப்பதால் ஓரினச் சேர்க்கைத் திருமணங்கள் இறைவனுக்கு எதிரான செயல் என்றும் அதை எப்போதும் ஆதரிக்கப் போவதில்லை என்றும் கூறிவருகிறார்கள்.. சில மாநிலங்களில் ஓரினச் சேர்க்கைத் திருமணங்கள் சட்டப்படி செல்லும்.  ஆனால் மத்திய அரசு இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்காமல் இருந்தது.  வருடம் முடிந்ததும் ஒவ்வொரு பிரஜையும் மத்திய அரசுக்கு தங்கள் வருமான வரி பற்றித் தாக்கல் செய்ய வேண்டும்.  அப்படிச் செய்யும் போது திருமணம் செய்துகொண்டு ஆணும் பெண்ணுமாக வாழும் தம்பதிகள் சேர்ந்து தாக்கல் செய்யலாம்.  அவர்களுக்குச் சில சலுகைகளும் உண்டு.  ஒரு பெண்ணும் ஒரு பெண்னும் அல்லது ஒரு ஆணும் ஒரு ஆணுமாக சேர்ந்து வாழும் தம்பதிகளுக்கு – இவர்கள் வாழும் மாநிலத்தில் அவர்கள் தம்பதிகளாகக் கருதப்பட்டாலும் – ஈரினச் சேர்க்கைத் தம்பதிகளுக்குரிய எந்த சலுகையும் இல்லை.  இன்னொரு விதமாகச் சொன்னால் மத்திய அரசு இந்த ஓரினச் சேர்க்கைகளை ஆதரிக்கவில்லை.  தேர்தலில் இது ஒரு விஷயமாக விவாதிக்கப்படுவதால் சில மாதங்களுக்கு முன் பைடனிடம் இது பற்றிச் சிலர் கேட்ட போது ‘எனக்கு அதில் எந்த ஆட்சேபணையும் இல்லை’ என்று சொல்லியதைத் தொடர்ந்து ஒபாமாவும் அதை ஆதரிப்பதாகக் கூறினார்.  அதனால் ஒபாமா மீண்டும் பதவிக்கு வந்தால் இது மத்திய அரசாலும் ஒப்புக்கொள்ளப்படும் வாய்ப்பு இருக்கிறது.

இந்தியாவில் ஓரினச் சேர்க்கைகள் அமெரிக்காவில்  இருக்கும் அளவிற்கு இல்லை  என்று நான் சொல்லுகிறேன்.  இந்திய சமூகத்தில் அமெரிக்க சமூகத்தில் இருப்பது போல் தங்கள் அபிலாஷைகளை வெளியே சொல்வதற்கு சுதந்திரம் இல்லையாதலால் ஓரினச் சேர்க்கையாளர்கள் தங்கள் நிலைமையை வெளியே சொல்வதில்லை  என்று அமெரிக்கர்கள் கூறுகிறார்கள்.  எது எப்படியானாலும் இந்தியாவில்  இது ஒரு தேர்தல் பிரச்சினையாகக் கருதப்படவில்லை.

அமெரிக்காவில் இப்போது  கல்வி பெறுவது பெரிய  செலவினமாகிவிட்டது.  பல்கலைக்கழகங்கள் முன்னைக்கு இப்போது கல்விக்  கட்டணத்தை மிகவும் அதிகரித்திருக்கின்றன.  நல்ல பல்கலைக்கழகங்களுக்கு வசதி படைத்த மாணவர்கள் மட்டுமே  செல்ல முடிகிறது.  மற்றவர்கள் தங்கள் படிப்பை முடித்துவிட்டு வரும்போது பல ஆயிரக் கணக்கான  டாலர் கடனோடு வெளியில் வருகிறார்கள்.  அதைத் திருப்பிக் கட்ட மிகவும்  சிரமப்படுகிறார்கள்.  மாணவர்களுக்கு  படிப்புச் செலவுக்குரிய கடனை அரசே வழங்கும் என்றும் வட்டி விகிதமும் கணிசமாகக் குறைக்கப்படும் என்றும் ஜனநாயகக் கட்சி கூறுகிறது.   (இப்போதும் மாணவர்கள் படிப்பிற்கு வாங்கிய கடனுக்குக் கொடுத்த வட்டியை வருமான வரி தாக்கல் செய்யும் போது வருமானத்திலிருந்து கழித்துக்கொள்ளலாம்.)  ஆனால் குடியரசுக் கட்சி ராம்னி மாணவர்களிடம், ‘எந்தப் பல்கலைக்கழகத்தில் குறைந்த கட்டணம் இருக்கிறது என்று தேர்வு செய்து அதில் சேருங்கள், உங்கள் பெற்றோரிடம் உதவி பெறுங்கள்’ என்கிறார்.

இப்போது அமெரிக்காவில்  ஏழரை சதவிகிதம் வேலையில்லாத் திண்டாட்டம் இருக்கிறது.  பல லட்சம் வேலைகளை உருவாக்கி இந்த நிலைமையை மாற்றுவோம், ஜனநாயகக் கட்சியினரால் இது முடியாதது என்பது குடியரசுக் கட்சியினரின் வாதம்.   ஜனநாயகக்கட்சியினரோ குடியரசுக்கட்சியினர் சொல்வது போல் அவ்வளவு வேகமாக வேலைகளை உருவாக்க முடியாது, எப்படியும் பொருளாதாரம் முன்னேறி வருவதால் சீக்கிரமே வேலையில்லாத் திண்டாட்டம் நீங்கிவிடும் என்கின்றனர்.

அமெரிக்கா குடியேறிகளால் உருவான நாடு என்பார்கள்.  இப்போதும் உலகின் பல கோடிகளிலிருந்து குடியேறிகள் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.  அமெரிக்கா அறிவாளிகள், திறமைசாலிகள் உலகின் எந்த மூலையிலிருந்தாலும் அவர்கள் அமெரிக்காவிற்கு வர விரும்பினால் அவர்களை இரு கரம் நீட்டி வரவேற்கிறது.  அதே சமயத்தில் அனுமதி இல்லாமல் வருபவர்களை திருப்பி அனுப்புவதிலும் தயக்கம் காட்டுவதில்லை.  அமெரிக்காவிற்கும் அமெரிக்காவிற்குத் தெற்கே இருக்கும் மெக்ஸிகோ நாட்டிற்கும் இடையே உள்ள எல்லை நீண்டதாயினும் அந்த எல்லையைத் தாண்டி மெக்ஸிகோ மக்கள் அமெரிக்காவிற்குள் வருவது ஓரளவு எளிதாக இருப்பதால் மெக்ஸிகோவினர் இங்கு சரியான விசா இல்லாமல் வருகிறார்கள்.  இப்படி நூற்றி இருபது லட்சம் பேர் இருப்பதாகக் கூறுகிறார்கள்.  அவர்களை அப்படியே ஈவு இரக்கம் இல்லாமல் வெளியேற்றுவதா அல்லது குற்றம் புரிந்தவர்களைத் தவிர மற்றவர்களுக்குக் குடியுரிமை கொடுப்பதா என்பதில் இரண்டு கட்சிகளுக்கும் மிகுந்த வேற்றுமை இருக்கிறது.

1971-இல் பங்களா தேஷ்  அப்போதைய பாகிஸ்தானிலிருந்து  பிரிந்த போது நிறையப்  பேர் அங்கிருந்து இந்தியாவிற்கு அகதிகளாக ஓடிவந்து மேற்கு வங்காளத்திலும் அசாமிலும் தங்கினர்.  அவர்களைத் திருப்பி அனுப்புவது பற்றித் தேர்தல் சமயத்தில் மத்திய அரசு எந்தக் கருத்துக் கணிப்பையும் எடுக்கவில்லை.  இது அகில இந்தியப் பிரச்சினையாக இல்லை..

தேர்தலைச் சாக்காக  வைத்துக்கொண்டு அமெரிக்காவிலும்  பணத்தைத் தண்ணீராகச் செலவழிக்கிறார்கள்.  பெரிய பெரிய பணக்காரகள் தாங்கள் யார் ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கிறார்கள்.  அரசியல் கட்சிகள் அதை தேர்தல் விளம்பரங்களில் செலவிடுகின்றன.  ஆனால் எந்தக் கட்சியும் வாக்காளர்களுக்கு நேரடியாகப் பணம் கொடுத்துத் தங்களுக்கு ஓட்டுப் போடச் சொல்லுவதில்லை.   இந்தியாவில் தேர்தல் சமயத்தில் எப்படிப் பணம் நேரடியாக ஓட்டளிப்பவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது என்பதைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

அமெரிக்காவில் ஊழல் புரிபவர்களை சட்டம் பார்த்துக்கொள்வதால்  ஊழலை ஒழிப்பதாக எந்தக் கட்சியும்  சவால் விடுவதில்லை.

ராஜிவ் காந்தி இறந்த  போதே அவர் சம்பந்தப்பட்ட  போபர்ஸ் ஊழல் விசாரணையும்  இறந்துவிட்டது என்று நினைக்கிறேன்.  சோனியா காந்தியின் மருமகன் நில விஷயத்தில் ஊழல் புரிந்ததாகச் செய்தி வந்திருக்கும் இந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சிதான் ஊழலை ஒழிக்கப் பாடுபடுகிறது என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் அவர்.  ஊழல் நிறைந்த காங்கிரஸ் கட்சி என்று காங்கிரஸைக் குறைகூறும் பி.ஜே.பி.யின் அரசியல் தலைவர்கள் ஊழல்புரிவதில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள்.  நம் நீதிமன்றங்கள் செயல்படும் வேகம் ஊழல் புரிந்தவர்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்திருக்கிறது; அவர்கள் இறக்கும் வரை அவர்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

ஊழலே வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்ட பிறகு  தேர்தல் சமயத்தில் அது  பற்றிப் பேச என்ன இருக்கிறது?

இந்தியாவில் அரசியல்வாதிகள் எளிமையாக இருக்கிறார்களோ இல்லையோ எளிமையாக இருப்பதாகக்  காட்டிக்கொள்வார்கள்.  அமெரிக்காவில்  அப்படியல்ல.  தேர்தலுக்கு  நிற்பவர்களும் அவர்களுடைய மனைவிமார்களும் அல்லது கணவன்மார்களும் மிக ஆடம்பரமாக உடையணிந்துகொண்டு வருவார்கள்.  அதிலும் பெண்கள் எக்கச்சக்க மேக்கப் போட்டுக்கொண்டு வருவார்கள்.  முடியலங்காரம் செய்துகொள்ளாத யாரும் அமெரிக்காவில் இல்லை என்று சொல்லலாம்.  ஒபாமாவின் மனைவி மிஷல் ஒபாமா நேரத்திற்கு ஒரு உடை அணிந்துகொண்டு வருகிறார்.  நான்கு வருஷங்களுக்கு முன்பிருந்ததை விட – அதாவது ஒபாமா முதலில் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் போதிருந்ததை விட – இப்போது நிறைய உடற் பயிற்சிகள் செய்து உடலை ட்ரிம்மாக வைத்துக்கொண்டிருக்கிறார் மிஷல் ஒபாமா.  எவ்வளவு இளமையாகத் தன்னை காட்டிக்கொள்ள முடியுமோ அவ்வளவு இளமையாகக் காட்டிக்கொள்ள முயல்கிறார்.

இது இந்தியாவில் இல்லை  என்று சொல்லலாம் அல்லவா?
 
படத்திற்கு நன்றி:
 
http://www.bbc.co.uk/news/world-us-canada-20091303
 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *