நாகேஸ்வரி அண்ணாமலை

எனக்கு வெகு நாட்களாக அரேபிய தீபகற்பத்திலுள்ள ஏதாவது ஒரு நாட்டைப் பார்க்க வேண்டும் என்று ஆசை. இந்த நாடுகள் 1970 வரை பாலைவனமாக இருந்தவை. எழுபதுகளில் எரிபொருள் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இவை எல்லாம் இப்போது செல்வம் கொழிக்கும் நாடுகளாக மாறியிருக்கின்றன. வெளிநாடுகளிலிருந்து பலரை வரவழைத்துத் தங்கள் நாடுகளை நவீன நாடுகளாக ஆக்கிக்கொண்டிருக்கின்றன. துபாயும் இதில் ஒன்று. லிஸ்பனிற்குப் போனபோது வரும் வழியில் துபாயையும் பார்த்து வரலாம் என்று திட்டமிட்டோம்.

லிஸ்பனிலிருந்து துபாய்க்கு எட்டு மணி நேரப் பயணம். பயணக் களைப்போடு துபாய் விமான நிலையத்தில் இறங்கிக் குடிபுகல் பகுதிக்குச் சென்றோம். எல்லா விமான நிலையக் குடிபுகல் பகுதிகளில் போல் அலுவலர்கள் கறாராக இருந்தனர். துபாய்க்குள் நுழைவதற்கு வேண்டிய விசாவை மின்னஞ்சல் மூலம் பெறலாம். இருப்பினும், விமானநிலையத்தில் உள்ள குடிபுகல் பகுதியில் அங்கிருக்கும் அலுவலரைப் பார்க்கும் முன்பு நாம் படி எடுத்துக்கொண்டு வந்த மின்விசாவை இன்னொரு அலுவலரிடம் போய் சரிபார்த்துக்கொண்டு வர வேண்டும். குடிபுகல் பகுதியில் உள்ள ஆபீஸர் நம் கண்களைப் படம் எடுத்துக்கொண்டு மற்ற ஆவணங்களைச் சரிபார்த்து விட்டு அனுப்புகிறார். இங்கு வேலை பார்க்கும் அத்தனை பேரும் அவர்களுடைய பாரம்பரிய உடைகளில் இருந்தனர். இதை விட்டால் வேறு எங்கும் இம்மாதிரி பாரம்பரிய உடைகளில் யாரையும் பார்க்கவில்லை. கடைகள், மால்கள், காட்சியகங்கள், ஓட்டல்கள் என்று எங்கு பார்த்தாலும் வெளிநாட்டவர்கள்தான் சீருடை அணிந்து வேலை பார்க்கிறார்கள். துபாய் குடிமக்கள் என்ன செய்கிறார்கள் என்ற வியப்பு எங்களுக்கு ஏற்பட்டது.

துபாய் விமான நிலையம் மிகப் பெரியது. நிலையத்திற்குள் நிறைய நடக்க வைக்கிறார்கள். இப்போது எமிரேட்ஸ் விமானக் கம்பெனிக்கு இந்த விமான நிலையம்தான் விமானப் போக்குவரத்து மையம். கம்பெனி விமானங்கள் வந்த வண்ணமும் அங்கிருந்து கிளம்பும் வண்ணமுமாக இருக்கின்றன. விமான நிலையத்திற்கு வெளியே வந்தால் வரிசையாக டாக்சிகள் சீருடை போட்டுக்கொண்டு வந்தது போல் ஒரே மாதிரிக் கலரில் நிற்கின்றன. டாக்சிகள் மட்டுமல்ல டாக்சி ஓட்டுநர்களும் சீருடை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதுவும் ஒரு அழகாகத்தான் இருக்கிறது.

நாங்கள் டாக்சிக்குள் ஏறி உட்கார்ந்ததும் டாக்சி டிரைவரிடம் நாங்கள் போக வேண்டிய ஓட்டல் முகவரியைக் கூறினோம். அதை அவர் காதில் வாங்கினாரா என்று சரியாகத் தெரியவில்லை. அதனால் மறுபடி கூறினோம். இந்த முறை தனக்கு அந்த இடம் என்னவென்று தெரியும் போல் தலையை ஆட்டிக்கொண்டார். வேறு எதுவும் பேசவில்லை. அவர் இந்தியாவிலிருந்து வந்து அங்கு டாக்சி ஓட்டுநர் வேலை பார்க்கிறார். அதிலும் தமிழர் போலத் தெரிந்தது. அவர் வாயைத் திறந்தால் அல்லவா ஓரளவாவது அவர் எந்தப் பகுதியிலிருந்து வந்திருக்கிறார் என்று தெரிந்து கொள்ள முடியும்? மேலும் அவர் எங்கள் பக்கம் திரும்பவே இல்லை. எங்களை ஓட்டலில் எவ்வளவு சீக்கிரம் கொண்டு போய் விட்டு விட்டு எங்கள் பார்வையிலிருந்து மறைய முடியுமோ அவ்வளவு சீக்கிரம் போய் விடுவதிலேயே குறியாக இருந்தார்.

விமானநிலையம் முழுவதும் ஏர்கண்டிஷன் செய்யப்பட்டு இதமாக இருந்தது. ஆனால் வெளியே வந்ததுமே அந்த விடிகாலை நேரத்திலும் – காலை எட்டு மணிக்கு 35 டிகிரி செல்சியஸ் இருந்தது – வெக்கை தாக்கியது. ஓட்டலை அடைந்து டாக்சியிலிருந்து இறங்கியதும் முதல் முதலாக துபாய் வெப்பத்தை அனுபவித்தோம். மறுபடி ஓட்டலுக்குள் நுழைந்ததும் குளுகுளுவென்றிருந்தது.

துபாயில் இரண்டே நாட்கள் தான் தங்கினோம். அதனால் துபாயின் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய நேரம் இருக்கவில்லை. பல முறை டாக்சியில் சென்றோம். ஒவ்வொரு முறையும் எங்களை ஏற்றிச் சென்ற டிரைவர் இந்தியாவிலிருந்தோ, பாகிஸ்தானிலிருந்தோ அல்லது பங்களாதேஷிலிருந்தோ வந்தவராக இருந்தார். அதில் தமிழர்களும் இருந்தனர். எங்களை விமான நிலையத்திலிருந்து கூட்டிவந்த ஓட்டுநரைப் போல் அல்லாது இவர்கள் எங்களிடம் சரளமாகப் பேசினர். துபாயில் டாக்சி ஓட்டுநர்கள் எல்லோரும் மேலே குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வந்தவர்கள்தான் என்று பின்னால் தெரிந்தது. பாகிஸ்தானிலிருந்து வந்த ஒருவர் எங்களுக்கு இந்தி புரியும் என்று அவராக நினைத்துக்கொண்டு பிரயாணம் முழுவதும் இந்தியிலேயே பேசினார். இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து வந்தவர்கள் அவர்களுக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் பேசினார்கள். இவர்கள் எல்லோரும் தங்கள் டாக்சிகளில் இந்தி சினிமாப் பாட்டுக்களைப் போட்டுக் கேட்டுக்கொண்டு ரசித்துக்கொண்டிருந்தார்கள். துபாயில் நிறைய டாக்சிகள் இருக்கின்றன. எந்த இடத்திலிருந்து வேண்டுமானாலும் டாக்சிகள் கிடைக்கும். டாக்சி வாடகையும் குறைவு.

துபாயின் ஜனத்தொகையில் 70 சதவிகிதம் வெளிநாட்டுக்காரர்கள். இவர்கள் அங்கு பல விதமான வேலைகள் செய்கிறார்கள். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்கள் டாக்சி ஓட்டுநர்களாக, காட்சியகங்களில் கண்காணிப்பாளர்களாக, செக்யூரிட்டி ஆட்களாக வேலை பார்க்கிறார்கள். அந்தந்த நாடுகளிலிருந்து தரகர்கள் மூலம் வேலை தேடித் தரும் கம்பெனிகளுக்குப் பணம் கொடுத்து இங்கு வந்திருக்கிறார்கள். இவர்களுக்குத் தொடர்ந்து பன்னிரெண்டு மணி நேர வேலை. இடையில் விடுப்பு எதுவும் கிடையாது. அதன் பிறகு பன்னிரெண்டு மணி நேர ஓய்வு. விடுமுறை நாட்கள் எதுவும் கிடையாது. துபாய்க்கு வந்து தொடர்ந்து இரண்டு வருடங்கள் வேலை பார்த்தால் இரண்டு மாதங்களுக்கு சம்பளத்தோடு விடுமுறை கொடுக்கிறார்கள். ஒரு வருடத்திலேயே போக விரும்பினால் ஒரு மாத சம்பளமும் ஒரு மாத விடுமுறையும் உண்டு. தாய்நாட்டிற்குப் போய்வர டிக்கெட் செலவும் கம்பெனி கொடுக்கிறது.

துபாய் இன்று செல்வம் கொழிக்கும் நாடாக விளங்குகிறது. மூவாயிரம் வருஷங்களுக்கு முன்பே இப்பகுதியில் மனித இனம் வாழ்ந்ததற்கு அடையாளங்கள் இருப்பதாகக் கருதப்பட்டாலும் 18-ஆம் நூற்றாண்டிலிருந்துதான் இதன் சரித்திரம் கிடைக்கிறது. 1799-இல் அபுதாபியின் கீழ் இது ஒரு பகுதியாக விளங்கியது. 1833-இல் அபுதாபியை ஆண்ட அமீர் பரம்பரையைச் சேர்ந்த ஒருவர் 800 ஆட்களுடன் இப்போது துபாய் இருக்கும் இடத்திற்கு வந்து துபாயை தனி நாடாகப் பிரகடனம் செய்து ஆளத் தொடங்கினார். இன்று வரை இவருடைய பரம்பரைதான் துபாயை ஆண்டு வருகிறது.

அந்தப் பகுதியில் இருந்த சிறிய நாடுகள் எல்லாம் பிரிட்டிஷ் அரசோடு தங்களைக் கடற்கொள்ளைக்காரர்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொண்டன. 1841-இல் துபாயில் அம்மை நோய் பரவி பல மக்கள் இறந்து போயினர். பின் 1892-இல் பெரிய தீ விபத்து ஏற்பட்டு பல கட்டடங்கள் நாசமாயின. அதே ஆண்டில் துபாய் பிரிட்டிஷ் அரசோடு இன்னொரு ஒப்பந்தம் செய்துகொண்டது. இப்படி பிரிட்டிஷ் அரசின் பாதுகாப்பில் துபாய் இருந்து வந்தாலும் தனி நாடாகவே இருந்து வந்தது. அப்போது துபாய் முத்துக்களுக்கு உலகம் பூராவும் மவுசு இருந்தது. ஆயிரத்தித் தொளாயிரத்தி இருபதுகளில் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவும் ஜப்பான் துரித முறையில் முத்துக்களை உருவாக்கி உலக அரங்கில் இடம் பிடித்ததும் துபாய் முத்துக்களுக்கு மவுசு குறைந்தது. நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த அப்போதைய அமீர் துபாய் வழியாக வர்த்தகம் செய்த எல்லா வர்த்தகக் குழுக்களுக்கும் வரி விதிப்பை நீக்கினார். அது மட்டுமல்ல, துபாய்க்கும் அபுதாபிக்கும் இடையே நடந்த எல்லைப் பிரச்சினையில் பிரிட்டிஷ் அரசு மத்தியஸ்தம் செய்து ஜெபெல் அலி போர்ட் என்னும் அரசின் கட்டுப்பாடுகளற்ற ஒரு பகுதியை ஏற்படுத்திக் கொடுத்தது. இதனால் வெளியிலிருந்து தொழிலாளர்கள் எந்த விதத் தடையுமின்றி இந்நாடுகளுக்குள் வரவும் தேவையான பணத்தை வெளியே எடுத்துச் செல்லவும் வழி ஏற்பட்டது. அதனால் துபாயின் பொருளாதாரம் முன்னேறியது. ஆயிரத்தித் தொளாயிரத்தி ஐம்பதுகளில் முதல் வங்கி, மருத்துவமனை தொடங்கப்பட்டன. எண்ணெய் வளம் கிடைப்பது பற்றி ஆராய்ச்சியைத் தொடங்கப் பல கம்பெனிகளுக்கு துபாய் அனுமதி கொடுத்தது.

1966-இல் துபாயில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு துபாயின் பொருளாதாரம் வேகமாக முன்னேறியது. வெளிநாடுகளிலிருந்து எல்லா வகையான வேலைகளுக்கும் ஆட்கள் தேவைப்பட்டது. இப்படிக் கீழ்மட்ட வேலைகளுக்கு மட்டுமல்ல பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று மேல் நிலையில் உள்ள வேலைகளுக்கும் துபாய்க்கு ஆட்கள் தேவைப்பட்டனர்.

1971-இல் பிரிட்டிஷ் அரசு இந்த நாடுகளின் பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டதும் அந்தப் பகுதியில் உள்ள அபு தாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், உம் அல் குவான், ராஸ் அல் கைமா, ஃபுஜைரா ஆகிய ஏழு எமிரேட்டுகள் ஒன்று சேர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்டுகள் என்ற நாட்டை உருவாக்கின. இதன் தலைநகரம் அபுதாபி. ஐக்கிய அரபு எமிரேட்டிற்கு ஒரு ஜனாதிபதியும் துணைஜனாதிபதியும் இருக்கிறார். அதன் அங்கங்களான ஒவ்வொரு நாட்டிற்கும் தனி அமீர் ஒருவர் இருக்கிறார் சட்டம், பொருளாதாரம், ராணுவம் ஆகியவற்றைப் பொறுத்த வரை எல்லா நாடுகளுக்கும் பொதுவான அரசியல் சாசனம் உண்டு. ஆனால் உள்நாட்டு விவகாரங்களைப் பொறுத்தவரை தனித் தனி சட்டங்கள் இயற்றிக்கொள்ளலாம்.

அமெரிக்காவில் மாநிலங்கள் உருவான பிறகு அவை ஒன்று சேர்ந்து ஒரு கூ.ட்டாட்சி (Federation) அமைப்பை உருவாக்கிக்கொண்டன. ஐரோப்பிய யூனியன் பல தனி நாடுகள் சேர்ந்த கூட்டமைப்பு. தங்கள் பொருளாதாரத்தை வளர்த்துக்கொள்ள பொருளாதார முறையில் கூட்டாகச் செயல்பட்டால் நன்மை ஏற்படும் என்று ஐரோப்பிய நாடுகள் எண்ணி அந்தக் கூட்டமைப்பை ஏற்படுத்திக்கொண்டன. இந்தியா சுதந்திரத்திற்குப் பின் ஒரு நாடாக உருவாகிப் பிறகு மொழி அடிப்படையில் மாநிலங்களைப் பிரித்துக்கொண்டது. இது ஒரு வகைக் கூட்டமைப்பு. ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் சில மிகச் சிறியவை. கூட்டாகச் சேர்ந்து செயல்பட்டால் தங்கள் பாதுகாப்பிற்கும் பொருளாதாரத்திற்கும் நலம் என்று கருதி ஒரு கூட்டமைப்பை உருவாக்கிக்கொண்டன. இந்தக் கூட்டணியில் இருக்கும் நாடுகள் நம் இந்திய மாநிலங்களைப் போன்றவை. ஆனால் ஒரு பெரிய வித்தியாசம். இந்திய மாநிலங்கள் மீது மத்திய அரசுக்கு உள்ள அதிகாரம் ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் தலைமையான அபு தாபிக்கு இல்லை.

இந்தக் கூட்டமைப்பில் உள்ள நாடுகளில் அபுதாபி நிலப்பரப்பைப் பொறுத்த வரையில் பெரியது. துபாய் மக்கள் தொகையில் பெரியது. துபாயின் அமிர்தான் ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் உதவி ஜனாதிபதி. ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் சுப்ரீம் கவுன்சிலில் நாற்பது அங்கத்தினர்கள். துபாய் எட்டு அங்கத்தினர்களை அந்தக் கவுன்சிலுக்கு அனுப்புகிறது. அபு தாபி, துபாய் ஆகிய இரண்டு நாடுகளைத் தவிர சுப்ரீம் கவுன்சிலில் எடுக்கும் எந்த முடிவையும் எதிர்க்கும் அதிகாரம் மற்ற நாடுகளுக்கு இல்லை.

துபாய் எண்ணெய் வளத்தால் செழிக்கத் தொடங்கினாலும் இப்போது எண்ணெயிலிருந்து வரும் வருமானம் 6 சதவிகிதம் மட்டுமே. மற்றதெல்லாம் சுற்றுலாப் பயணிகள் வருகை, நிதி சேவை, கேளிக்கை அரங்கங்கள், ஓட்டல்கள், விளையாட்டுக்கள் ஆகியவற்றிலிருந்து வருவது. துபாய் கடலின் கரையில் இருப்பதால் பல நீர் விளையாட்டுக்கள் அங்கு நடக்கின்றன. பாலைவனப் பகுதியில் ஒட்டகப் பந்தயம் போன்ற விளையாட்டுக்களை நடத்துகிறார்கள். போலோ விளையாட்டு துபாயில் பிரசித்தம்.

துபாயை shopper’s paradise என்கிறார்கள். வருடத்திற்கு இரு முறை பொருள்கள் வாங்கும் திருவிழாவை (shopping festival) நடத்துகிறார்கள். சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து இழுக்க இங்கு அமெரிக்கப் பாணியில் நிறைய மால்கள். எந்தச் சாமானை எடுத்துகொண்டாலும் – எலெக்ட்ரானிக் சாமான்கள், சாக்லேட்டுகள், ஆடை வகைகள், உணவு வகைகள் – அமெரிக்க பிராண்டுகள் கிடைக்கின்றன. உள்ளே நுழைந்தால் அமெரிக்க மால் ஒன்றிற்குள் நுழைந்துவிட்ட மாதிரி தோன்றுகிறது. வண்ண விளக்குகள். எலிவேட்டர்கள், எக்ஸ்கலேட்டர்கள் என்று அமெரிக்க மால்கள் போலவே அமைக்கப்பட்டிருக்கின்றன. வெளியில் அடிக்கும் வெயில் தெரியாதவாறு எல்லா மால்களும் ஏர்கண்டிஷன் செய்யப்பட்டிருக்கின்றன.

துபாயில் வசதிகள் மிகுந்த ஓட்டல்கள் நிறைய இருக்கின்றன. எல்லா வகையான பயணிகளின் வசதிகளுக்குத் தக்கவாறு அவை அமைந்திருக்கின்றன. நாங்கள் தங்கியிருந்த ஓட்டலில் காலை உணவு –அதற்குரிய கட்டணத்தைப் பெற்றுக்கொண்டுதான் – பரிமாறுகிறார்கள். அதில் தமிழ்நாட்டு உணவு வகைகளான இட்லி, தோசை, சாம்பார், சட்னி போன்ற அயிட்டங்களும் இருந்தன. இரவுக் கேளிக்கைகள் உள்ள பல இடங்கள் துபாயில் உண்டு.

துபாயை கடல் உள்ளே புகுந்து இரண்டாகப் பிரிக்கிறது. இதை ஆங்கிலத்தில் க்ரீக் (creek) என்கிறார்கள். துபாயின் இரண்டு பகுதிகளையும் பர் துபாய், டெய்ரா துபாய் என்று அழைக்கிறார்கள். இவற்றை இணைக்க 1962-லும் 1972-லும் கட்டிய பாலங்களும் 1975-இல் கட்டிய சுரங்கப்பாதையும் இருக்கின்றன. துபாயில் முதல் முதலாக 1972-ல் தான் பொதுமக்களுக்கான மருத்துவமனை கட்டப்பட்டது.

துபாயில் போக்குவரத்து வழக்குகளை விசாரிக்க ஒரு நீதிமன்றம், குடும்ப வழக்குகளை விசாரிக்க குடும்ப நீதிமன்றம், மற்ற வழக்குகளை விசாரிக்கப் பொது நீதிமன்றம் என்று மூன்று நீதிமன்றங்கள் இருக்கின்றன. விவாகரத்து போன்ற வழக்குகள் குடும்ப நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும். ஆனால் அங்கு துபாய் குடிமக்களின் வழக்குகள் மட்டும்தான் விசாரிக்கப்படும். துபாயில் குற்றங்கள் குறைவு என்கிறார்கள். துபாய் ஒரு பாதுகாப்பான நகரம் என்ற பெயரையும் பெற்றிருக்கிறது.

துபாயில் நிறைய காட்சியகங்கள் இருக்கின்றன. இப்போது துபாயில் உள்ள பல நவீன கட்டடங்களைப் பார்த்து பிரமிப்பவர்கள் துபாய் சரித்திரத்தை விளக்கும் துபாய் காட்சியகத்தை பார்த்தால் துபாய் மிகச் சமீப காலம் வரை வளர்ச்சி இல்லாமல் இருந்தது புரியும். முதல் மருத்துவமனை 1943-இல் கட்டப்பட்டது. முதல் வங்கி 1946-இல். ஆயிரத்தித் தொளாயிரத்தி ஐம்பதுகளில் தங்க வியாபாரம் ஆரம்பிக்கப்பட்டது. (இப்போது தங்கம் விற்பனை செய்யும் கடைகள் எக்கச்சக்கமாக இருக்கின்றன. சுவிட்சர்லாந்திலிருந்து நேரடியாகத் தங்கத்தைத் தருவித்து விற்கிறார்கள்.) அறுபதுகளின் கடைசியில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு துபாய் மிகத் துரித கதியில் வளரத் தொடங்கியது.

துபாயின் அதிகாரபூர்வ மதம் இஸ்லாம். குடிமக்கள் எல்லோரும் இஸ்லாமியர்கள். அரசு இஸ்லாமிய மதக் கொள்கைகளை எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. நாங்கள் துபாய்க்குச் சென்ற சமயம் ரம்ஜான். அப்போது எல்லோரும் விரதம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதால் உணவகங்கள் எல்லாம் மூடியிருந்தன. யாரும் பொது இடங்களில் உணவருந்தக் கூடாது. அவரவர் வீடுகளில் வேண்டுமானால் உணவருந்தலாம். இந்த விதி உல்லாசப் பயணிகளுக்கும் உண்டு. காலையில் ஓட்டலில் உணவருந்திவிட்டு வெளியே போனால் எங்கும் உணவு கிடைக்காது. கையில் உணவை எடுத்துச் சென்றாலும் அதைப் பொது இடங்களில் உண்ண முடியாது. சரவண பவன் போன்ற இந்திய உணவகங்களும் காலை ஆறு மணியிலிருந்து இரவு ஏழு மணி வரை (இந்த நேரம் சூரிய அஸ்தமனத்தைப் பொறுத்து தள்ளிக்கொண்டே போகும்.) மூடியே இருக்க வேண்டும். யாராவது ஓட்டலை போனில் அழைத்து உணவு வேண்டும் என்றால் கேட்டவர் இருப்பிடத்திற்கு அதைக் கொண்டு போய்க் கொடுப்பார்கள். யாருக்கும் ஓட்டலில் பகல் நேரத்தில் உணவு பரிமாறக் கூடாது.

துபாயின் ஒரு வருட மழை அளவு 122 மில்லிமீட்டர்தான். மேலும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் போன்ற கோடை மாதங்களில் வெயில் மிகக் கடுமையாக அடிக்கிறது. இந்த மாதங்களில் வெப்பநிலை 48 டிகிரி செல்சியஸ் வரை போகுமாம். இருந்தாலும் சாலைகளின் ஓரங்களில் பூச்செடிகள் வளர்க்கிறார்கள். எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேல் என்று அந்தக் கோடைவெயிலிலும் புற்கள் காணப்பட்டன. நிறையப் பணம் செலவழித்து இந்தச் செடிகளுக்கும் புற்களுக்கும் தண்ணீர் பாய்ச்சுகிறார்கள். கடல்நீரை நல்ல தண்ணீராக மாற்றிப் பயன்படுத்துகிறார்கள். துபாய்க்குச் செல்ல விரும்புபவர்கள் நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் சென்றால் சீதோஷ்ணநிலை ரம்மியமாக இருக்கும்.

துபாயும் சிங்கப்பூரும் கிட்டத்தட்டஒரே காலத்தில் வளர்ச்சி காண ஆரம்பித்தன. பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து 1963-இல் விடுபட்ட சிங்கப்பூர் அறுபதுகளில் தீவிரமாக வளரத் தொடங்கியது. பல நாட்டுக் கப்பல்கள் கூடும் வியாபார கேந்திரமாக விளங்கிய சிங்கப்பூருக்கு அதுவே முன்னேற்றத்திற்கு வழி வகுத்தது. துபாய் எப்போதும் பல இடங்களை இணைக்கும் வியாபார ஸ்தலமாக இருந்திருக்கிறது. இப்போதைய ஈராக்கோடும் ஈரானோடும் தென் ஆப்பிரிக்காவோடும் வியாபாரத் தொடர்பு இருந்திருக்கிறது. அறுபதுகளில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. எண்ணெய் வளம் எப்போதும் இருக்கப் போவதில்லை என்பதை உணர்ந்த அரசு மற்ற வழிகளில் பொருளாதாரத்தை நிலைப்படுத்திக்கொள்ள முயன்று வருகிறது. துபாயில் தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு இலவசமாக நிலம் வழங்குகிறது. வரிச் சலுகை கொடுக்கிறது. உலகிலேயே பணக்கார நாடான அமெரிக்காவோடு நல்ல உறவு வைத்துக்கொண்டிருக்கிறது. உல்லாசப்பயணத் துறையை எப்படி வளர்க்கலாம் என்று ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறது.

உலகின் பல ஊர்களில் இருப்பது போல் துபாயிலும் hop on, hop off என்ற உல்லாசப் பயணிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட பேருந்துகள் உண்டு. இவை துபாயின் பல பகுதிகளுக்கும் பயணிகளை அழைத்துச் செல்லும். ஊரைச் சுற்றிக்கொண்டே இருக்கும் இவற்றில் பயணம் செய்யும் போது எந்த நிறுத்தத்தில் வேண்டுமானாலும் இறங்கிக்கொள்ளலாம், ஏறிக்கொள்ளலாம். நாம் ஒரு முறை வாங்கிய டிக்கெட் 24 மணி நேரத்துக்குச் செல்லுபடியாகும்.

நாங்கள் ஒரு காட்சியகத்திலிருந்து வெளியே வந்ததும் அந்தத் துறையைச் சேர்ந்த ஒரு பெண் (இவரும் வெளிநாட்டுக்காரர்தான்) எங்களைப் பேட்டி கண்டார். நாங்கள் துபாயிக்கு ஏன் வந்தோம், எத்தனை நாட்கள் தங்கியிருக்கிறோம், எந்த ஒட்டலில் தங்கியிருக்கிறோம், அங்கு நாங்கள் பார்த்த இடங்கள், எங்களைக் கவர்ந்த இடங்கள், கவர்ந்த விஷயங்கள், துபாயில் நாங்கள் இதற்கு மேல் வேண்டுவது என்ன என்று சரமாரியாகக் கேள்விகள்.

பணம் சம்பாதிக்கத் துபாய்க்குப் போகிறவர்களைப் போன்று பணத்தைச் செலவழிக்க வழி தேடுபவர்களும் துபாய்க்குப் போகலாம்!

 

படத்திற்கு நன்றி:

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “துபாய்ப் பயணம்

  1. அட, துபாய்க்கு வந்திருந்தீர்களா? நீங்கள் வந்த ஜூலை மாதம் கடுங்கோடை காலம் என்பதால், சற்று சிரமமாக இருந்திருக்கும்.

    அமீரகத்தின் வரலாற்றை அழகாகத் தொகுத்து எழுதியிருக்கிறீர்கள். பல ஆண்டுகளாக இங்கிருக்கும் எனக்கும் சில தகவல்கள் புதிது.

    //டாக்சி வாடகையும் குறைவு.//
    இப்படிச் சொல்லும் முதல் ஆள் நீங்கள்தான்!! அபுதாபியைவிட துபாயில் டாக்ஸி வாடகை மிக அதிகம் என்பதே இங்குள்ளவர்களின் (இந்தியர்) அபிப்ராயம். அபுதாபியிலும் அதிகம்தான். இதற்குப் பயந்தே எல்லாரும் கார் வாங்கிவிடுகிறார்கள், அல்லது மெட்ரோ/பேருந்து பயன்படுத்துகிறார்கள்.

    ஆனால், ஆங்கிலேயர்கள்தான் துபாய்/அபுதாபியில் living cost குறைவு என்று சொல்வார்கள். அவர்கள் நாட்டை ஒப்பிடும்போது இது குறைவு போல!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *