Tag: நிர்மலா ராகவன்

  • பெயரில் என்னமோ இருக்கு!

    நிர்மலா ராகவன்

     

    தன் சிநேகிதி வீட்டுக்குப் போய் திரும்பிய கமலம் படபடத்தாள்: “கன்னாபின்னான்னு பேர் வெச்சா இப்படித்தான் ஆகும்!”

    புத்தகத்தில் ஆழ்ந்திருந்த ரேணுகா நிமிர்ந்தாள். எதுவும் கேட்கவில்லை. அம்மா தானே சொல்வாள் என்று காத்திருந்தாள்.

    “மீனாட்சியோட பொண் வயத்துப் பேரனுக்கு துருவன்னு பேரு வெச்சா. ஸ்டைலா கூப்பிடறது த்ருவ். இப்போ என்ன ஆச்சு?”

    “என்னம்மா ஆச்சு?”

    “ரெண்டாவது குழந்தை பிறந்ததும், இந்தக் குழந்தையைக் கரிக்கிறாராம் அதோட அப்பா. ரெண்டு வயசுக் குழந்தையை அடிச்சுக்கொல்றாராம்!” என்னவோ, தானே அறைபட்டதுபோல் குமுறினாள். “சின்னக்குழந்தை கடையில பாக்கற சாமானையெல்லாம் கேக்கத்தான் செய்யும். அதுக்காக அடிப்பாளோ?”

    “சரி. இதுக்கும் துருவன்கிற பேருக்கும் என்ன சம்பந்தம்?”

    “அப்பா மடியில ஒக்காரணும்தானே அந்தப் பிள்ளையும் தவம் பண்ணினான்?”

    ரேணுகாவையும் கவலை பிடித்துக்கொண்டது. பெயர் சூட்டும்போது இன்னும் கவனமாக இருக்க வேண்டுமோ, பெற்றோர்?

    நல்ல வேளை, அவள் புராண காலத்து ரேணுகாவைப்போல் இல்லை.

    பூஜைக்கு ஆற்றில் நீர் மொண்டு வருவதற்காகப் போன முனிவர் பத்தினி ரேணுகா காந்தர்வக் காதலர்களின் சல்லாபத்தைப் பார்த்து சற்றே மயங்கினாளாம். அதற்குத் தண்டனையாக அவளுடைய தலையைக் கோடரியால் வெட்டும்படி மகனைப் பணித்தாராம் கணவர் ஜமதக்னி.

    பன்னிரண்டு வயதில், பழைய படங்களில் தோன்றிய சிவாஜி கணேசனைத் திரையில் பார்த்து மயங்கிய தானோ, கமலஹாசன், கார்த்தி, ஆர்யா என்று இன்றுவரை ஒவ்வொரு நடிகரையும் மனதால் நினைப்பதை நிறுத்தவில்லை.

    `ராமாயணத்திலே வர அகல்யாமாதிரி நான் கல்லாப் போகணும்னா, இருநூறு தடவை கல்லாகியிருப்பேன்! நல்லவேளை, அந்தக் காலத்திலே நான் பிறக்கலே!’ எத்தனை தடவை தங்கை பார்வதியிடம் அதைச் சொல்லிச் சிரித்திருக்கிறாள்!

    பதினேழு வயதில் படிப்பை முடித்துவிட்டு, “இதுக்குமேலே படிச்சா, வரன் கிடைக்கிறது கஷ்டம். அநியாயமா வரதட்சணை கேப்பா,” என்ற அம்மாவின் நியாயத்தை ஏற்றுக்கொண்டிருந்தாள் ரேணுகா.

    தனக்கு வரப்போகிறவருக்காவது நல்ல பெயர் இருக்கிறதா என்று பார்த்துத்தான் கழுத்தை நீட்ட வேண்டும் என்று முடிவு செய்துகொண்டாள்.

    முதல் வரன் ராமச்சந்திரன். ஜாதகம் கிடைத்திருந்தது.

    “எனக்கு இவன் வேண்டாம்மா,” என்றவளைப் பார்த்து அம்மா குழம்பினாள்.

    நிறையப் படித்திருந்தான். தரகரிடம் வரதட்சணையே வேண்டாம் என்று சொல்லியிருந்தானாம். ஒரே தங்கையும் கல்யாணமாகி வெளிநாட்டில் இருக்கிறாள். இதைவிட நல்ல வரன் கிடைக்குமா? மகளிடம் எடுத்துச்சொன்னாள்.

    “பேரைப் பாரு! அப்பா எது சொன்னாலும், அது சரியா, தப்பான்னு யோசிக்காம தலையாட்டுவான். நான் அந்த ராமரா இருந்தா, தசரதர்கிட்ட என்ன சொல்லியிருப்பேன் தெரியுமா?” என்று வீராவேசமாக ஆரம்பித்தவளுடன் மேலே பேசப் பிடிக்காது கமலம் அப்பால் நகர்ந்தாள்.

    எப்போதும் கேட்டதுதான். `நீங்க புத்தி கெட்டுப்போய் ரெண்டு மூணு தடவை கல்யாணம் பண்ணிண்டா, அதற்கு நானா பிணை?’ என்றிருப்பாள். ராமாயணமும் இந்த அளவுக்குப் பிரபலமாகி இருக்காது.

    அடுத்தது சுப்ரமணியன்.

    பயந்துகொண்டே அவன் பெயரைச் சொன்னாள் கமலம்.

    “நான் முதல் பொண்டாட்டியா, ரெண்டாவதா?”

    ஆச்சரியத்துடன், “எப்படிக் கண்டுபிடிச்சே?” என்றாள் கமலம். “மூத்தாள் போயிட்டாளாம். இந்த வரனுக்குச் சின்ன வயசுதான்! குழந்தையும் கிடையாது!”

    “முருகனுக்கு வள்ளி, தெய்வயானை. இந்த சுப்ரமணியனுக்கும் ரெண்டு வேணுமோ?”

    “பிடிக்காட்டா விட்டுடு. பிறத்தியாரைப்பழிக்காதே!”

    பெண்ணை அதிகமாகப் படிக்க வைத்தது தப்போ என்று யோசிக்க ஆரம்பித்தாள் தாய். எதர்க்கும் குதர்க்கம்தான். கேட்டால், `மூளை எதுக்கு? யோசிக்கத்தானே?’ என்பாள்.

    அடுத்து கிடைத்த ஹரிஹரனை கமலமே நிராகரித்துவிட்டாள் கமலம். `ஸ்ரீதேவி, பூதேவி’ என்று ஏதாவது ஆரம்பிப்பாள், மூளையைப் பயன்படுத்தும் மகள். எதற்கு வம்பு!

    தான் அந்தப் பிள்ளை துருவனைப்பற்றி இவளிடம் சொல்லியே இருக்கக்கூடாது என்று தன்னைத்தானே நொந்துகொண்டாள்.

    அதைவிடப் பெரிய தவறு, தகப்பனில்லாத பெண் கெட்டுவிடக்கூடாதே என்ற பரிதவிப்புடன் நாள் தவறாமல் அவளைத் தன்னுடன் கோயிலுக்கு அழைத்துச் சென்று இதிகாச புரணக்கதைகளெல்லாம் கேட்க வைத்ததுதான். சிறியவளென்று பார்வதியை வீட்டிலேயே விட்டுவிட்டுப் போனதால்தான் அவள் இன்று பரம சாதுவாக இருக்கிறாள்.

    “கிருஷ்ணனா? எப்பவும் பொண்களோடேயே சுத்திண்டு இருப்பான். ஜொள்ளுப்பார்ட்டி!”

    “நன்னாப் பாடுவானாம்!” சற்று நம்பிக்கையுடன் சொல்லிப்பார்த்தாள் கமலம்.

    “வேற வினையே வேண்டாம். ஆயர்பாடியில வளர்ந்த கிருஷ்ணன் புல்லாங்குழல் வாசிச்சுதானே எல்லாரையும் மயக்கினான்?”

    “ஒனக்குப்போய் வரன் பாக்கறேனே! இனிமே நான் ஒன்னோட கல்யாணப்பேச்சை எடுத்தா, `ஏண்டி?’ன்னு கேளு!’ என்று கத்திவிட்டு, அப்பால் நகர்ந்தாள் கமலம்.

    அம்மா இவ்வளவு கண்டிப்பாக இருப்பாள் என்று ரேணு எதிர்பார்க்கவில்லை. வயதோ இருபத்தாறு ஆகிவிட்டது! காதல் புதினங்கள் படித்துக்கொண்டும், வீட்டுக்குச் சாமான் வாங்கிப் போட்டுக்கொண்டும் காலத்தைக் கழித்தாள்.

    ஒரு நாள் சூபர்மார்க்கெட்டுக்குப் போயிருந்தபோதுதான் அவனைப் பார்த்தாள். பின்னாலிருந்து.

    என்ன உயரம், அமிதாப் பச்சன் மாதிரி! கடைச் சிப்பந்தியிடம் அவன் ஏதோ கேட்கையில், `எங்கோ கேட்ட குரலாக இருக்கிறதே! இது எந்த நடிகருடையது? சரத் பாபுவா?’ என்ற யோசனை எழுந்தது.

    அவன் இவளை நோக்கித் திரும்பினான்.

    ரேணுகாவிற்குத் தடுமாற்றம் ஏற்பட்டது. தான் வெறித்துப் பார்த்ததை தப்பாக எடுத்துக்கொண்டிருப்பானோ?

    “ரேணுதானே?”

    யாரிது, உரிமையுடன் தன் பெயரைச் சொல்வது?

    “சந்துரு! ஞாபகம் வருதா? ஒன் காதை முறுக்கி கணக்குச் சொல்லிக்கொடுப்பேனே?” சிரித்தான். பல்வரிசையும் அழகாக இருந்தது என்று குறித்துக்கொண்டாள் ரேணு.

    நிம்மதியுடன், சிரிப்பும் வந்தது. அவளுக்குப் பத்துப் பன்னிரண்டு வயதாக இருந்தபோது, மூன்றாவது வீட்டில் இருந்தவன்.

    அப்போதெல்லாம், “பாவம், சின்னப்பொண்ணுடா. ரொம்பத்தான் மிரட்டாதே. அன்பாச் சொல்லிக்குடு,” என்று அவனுடைய தந்தை அவளுக்குப் பரிவார்.

    “இப்போ என்ன பண்றே? `ஒன்கூடப் பேசறேன்’னு அறுக்காதே!” கலகலவென்று சிரித்தான்.

    “சில குழந்தைகளுக்கு டியூஷன் எடுக்கறேன்”.

    “என்ன பாடம்?”

    “கணக்கு!” இதைச் சொல்வதற்குள் அவளுக்கு வெட்கம் வந்துவிட்டது. முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

    சந்துரு பெரிதாகச் சிரித்தான்.

    அவனுடன் என்ன பேசுவது என்று புரியவில்லை. “ஒங்கப்பா சௌக்கியமா?” என்று கேட்டுவைத்தாள்.

    “இருக்கணும்,” என்றான். “என் தங்கை கல்யாணமாகி அங்கே இருக்கா. வீட்டையும், நிலபுலனையும் என்பேரில எழுதிவெச்சுட்டு, அவளோடேயே போய் இருக்கார்! அமெரிக்காவில எனக்குக் கிடைச்ச நல்ல வேலையை ஒதறிட்டு, நான் இங்கேயே வந்துட்டேன்னு அப்பாவுக்கு கோபம்.”

    மரியாதை குறித்து, “ஒரு நாள் ஆத்துக்கு வாயேன். அம்மா ஒன்னைப் பாத்தா ரொம்ப சந்தோஷப்படுவா,” என்று அழைப்பு விடுத்தாள் ரேணு.

    “இப்பவே வந்தா உள்ளே விடமாட்டியா?” மீண்டும் சிரிப்பு. “இன்னிக்குப் பண்ண முடியற காரியத்தை நாளைக்குன்னு ஒத்திப் போடக்கூடாது”.

    அவனுடைய காரில் பின்னால் உட்காரப்போனவளை, “முன்னாலேயே ஒக்காரு, வா!” என்று அழைத்தான் சந்துரு.

    அவன் பக்கத்தில் அமர்ந்திருந்தபோது, எதையோ இழந்ததுபோல் இருந்தது. எத்தனை தடவை ஜோடி ஜோடியாகப் போகும் தம்பதிகளையும் காதலர்களையும் பார்த்து ஏக்கப்பெருமூச்சு விட்டிருக்கிறாள்!

    முகமன் எல்லாம் முடிந்ததும், “ஒரு நாள் பொண்டாட்டியை அழைச்சிண்டு சாப்பிட வாடா, சந்துரு!” என்றாள் கமலம், உபசாரமாக.

    “நீங்க வேற, மாமி! எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலே”.

    ரேணுகா நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

    “ஒரு முப்பது வயசு இருக்காது ஒனக்கு? அமெரிக்காவில பொண்ணா இல்ல?”

    “எனக்கு வெள்ளிக்காரிகளைப் பிடிக்கலே. இங்கேதான் பொண்குழந்தை பிறக்கறபோதே கொன்னுடறாளே!” தனக்கு மனைவியாகும் பாக்கியம் பெறாத அந்தக் குழந்தைகளுக்காக வருத்தப்பட்டான். “இப்போ எல்லாருக்கும் ஒரே குழந்தைதான் இங்கே. அதுவும் பொண்ணா இருந்துட்டா, கேக்கவே வேண்டாம். தான் வெச்சதுதான் சட்டம்னு சாதிக்கும். சண்டை போடும். நிறைய பாத்துட்டேன். பயமா இருக்கு,” என்றான் சந்துரு.

    “எங்க பார்வதியைப் பண்ணிக்கிறயாடா? நீ கேக்கற பொண்ணுமாதிரி இருப்பா! பரம சாது, என்ற அம்மாவின்மேல் ரேணுவுக்கு வெறுப்பு ஏற்பட்டது. முதலில் தங்கைக்குக் கல்யாணமானால், அப்புறம் தன்னை யார் சீந்துவார்கள்?

    “ஏன் மாமி, ரேணுவை எனக்குக் குடுங்கோன்னா மாட்டேன்னு சொல்லிடுவேளா?”

    “இவ ஒன்னை ஆட்டிவைப்பா!” என்று கமலம் தயக்கத்துடன் கூற, “அதனால என்ன! காதை முறுக்கி, படிய வெச்சுடமாட்டேனா!” என்று சந்துரு சிரித்தான்.

    ரேணுவும் அந்தச் சிரிப்பில் பங்கு கொண்டாள்.

    “ஒரு வேடிக்கை, மாமி,” என்று எதையோ சொல்ல ஆரம்பித்தான் சந்துரு. “அப்பா என் ஜாதகத்தை தரகரிடம் குடுத்திருந்தாராம். யாரோ ஒரு பொண்ணு, இவன் பேரு எனக்குப் பிடிக்கலேன்னு சொல்லித்தாம்,” என்றவன், அந்தப் பெண் எதிரில் நிற்பதாகக் கற்பனை செய்துகொண்டு இரைந்தான்: “நீ என்னைப் பண்ணிக்காட்டா போயேன்! எங்காத்து கன்னுக்குட்டி புல் திங்காதா?”

    கமலம் கடைக்கண்ணால் மகளைப் பார்த்தாள். அவள் விறைப்பாக அமர்ந்திருந்தாள்.

    “நீங்களே சொல்லுங்கோ, மாமி. பேரில என்ன இருக்கு?”

    “அதானே! பேரில என்ன இருக்கு?” என்றவள் ரேணு.

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் 105

     

    (அ)சிரத்தையான அப்பா அம்மா

    நிர்மலா ராகவன்

     

    படிப்பு, உத்தியோகம், திருமணம், குழந்தைகள் என்று வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது, பலருக்கும். உரிய காலத்தில் எல்லாமே நடந்துவிட்டாலும், அவை சிறப்பாக அமைகின்றனவா?

    படிப்பை எடுத்துக்கொள்வோம். தங்களுக்குப் பிடித்த பாடம், அல்லது நிறைய பொருள் ஈட்டக்கூடிய கல்வி என்று சில பெற்றோர், `நீ இந்தப் பாடங்களைத்தாம் தேர்ந்தெடுக்க வேண்டும்,’ என்று பிள்ளைகளுக்கு யோசிக்கவோ, முடிவு செய்யவோ இடம் கொடுக்காது தீர்மானித்துவிடுவார்கள்.

    அப்படிச் செய்யாவிட்டாலும், தமது எதிர்பார்ப்பின்படி நடக்காத பிள்ளைகளைக் கண்டு மனம் நொந்துபோவார்கள்.

    கதை

    இங்கிலாந்தில் ஒரு பிரபல விஞ்ஞானியின் மாணவர் அந்த மலேசியர். முதுகலைப்பட்டம் பெற்று, கோலாலம்பூரில் ஆசிரியராக இருந்தார்.

    “என் மகள் விஞ்ஞானமே வேண்டாம் என்று, இடைநிலைப்பள்ளியில் ஆங்கிலம், சரித்திரம் என்று என்னென்னவோ எடுத்துப் படிக்கிறாள்,” என்று என்னிடம் அரற்றினார், ஏதோ தன்னையே அவள் விலக்குவதுபோல் பாவித்து.

    “என் பெண் அறிவில் என்னைக் கொள்ளவில்லை,” என்று அவர் திரும்பத் திரும்ப பேசியதைக் கேட்டு, நான் அப்பெண் மக்கு என்ற முடிவுக்கு வந்தேன்.

    அண்மையில், தனக்குப் பிடித்த துறையில் அப்பெண் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறாள் என்று அறிந்தேன். தந்தையின் எதிர்பார்ப்புக்கும் விருப்பத்திற்கும் அவள் இணங்கியிருந்தால், தன் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தி இருக்க முடியாதே! செய்ததில் திருப்தியும் கிடைத்திருக்காது.

    நல்ல வேளை, மகளைத் தன் அதிகாரத்திற்குப் பணியவைத்து, அவளைச் சுயமாக சிந்திக்கவிடாது செய்யவில்லையே என்று நண்பரைப் பாராட்ட வேண்டியதுதான்.

    பெற்றோரின் குறுக்கீடே இல்லாது வளர்பவர்களுக்கோ வேறு விதமான பிரச்னைகள்.

    தாம் பெற்ற குழந்தைகளின் உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுத்து, அவர்கள் பிறருடன் எப்படிப் பழகுவது என்று வழி காட்டாது இருக்கும் பெற்றோரை இருவகையாகப் பிரிக்கலாம்:

    பெரிய உத்தியோகத்தில் நிறைய சம்பாதித்து, இன்னும் எப்படி மேலே போகலாம் என்பதுபோல் நடப்பவர்கள்.

    `அதுதான் பள்ளிக்கூடத்திற்கு அனுப்புகிறோமே! அங்கே பார்த்துக்கொள்வார்கள்!’ என்ற அலட்சியம்.

    வேறு சில பெற்றோர், அவர்களும் அதிகம் படித்திருக்க மாட்டார்கள். அவர்களுடைய பெற்றோர் அவர்களை நடத்தியதுபோலவே, தம்மையும் அறியாது தம் பிள்ளைகளை அசிரத்தையுடன் நடத்த முற்படுவார்கள்.

    நான் இப்படிப்பட்ட ஒரு பள்ளிக்கூடத்தில் போதித்தபோது, பெற்றோருக்கு மகன் எந்த வகுப்பில் படிக்கிறான், என்ன பாடம் எடுத்திருக்கிறான் என்பதுகூடத் தெரியாது.

    இந்த அலட்சிய மனப்பான்மை கட்டொழுங்கு ஆசிரியர்களுக்குச் சாதகமாகப் போயிற்று. எந்த ஒரு தவற்றுக்கும் வன்முறையைப் பயன்படுத்தித் தண்டிப்பார்கள்.

    பெற்றோரோ, `இந்தப் பள்ளிக்கூடத்தில் வெரி குட் டிசிப்ளின்’ (very good discipline!) என்று ஒருவருக்கொருவர் சிலாகித்துக்கொண்டு, `இந்தவரைக்கும் நம் பொறுப்பைக் கழித்தார்களே!’ என்ற நிம்மதியுடன் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். மாணவர்களுக்காக பரிதாபப்படத்தான் என்னால் முடிந்தது.

    பணக்காரப் பெற்றோர் தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்த்துவிட்டு, `இனி ஆசிரியர்கள் பாடு!’ என்று நிம்மதியாக இருப்பார்கள்.

    இன்னொரு வகை, தனித்து வாழும் தாய் அல்லது வறுமையில் வாடும் தந்தை. குடும்பத்தின் அனைத்து பொறுப்புகளையும் சுமக்க வேண்டிய நிலை. குழந்தைகளுக்கான உணவு, உடை, படிப்புச்செலவு ஆகியவற்றிற்குத் தேவையான பொருளை ஈட்டுவதிலேயே இவர்களுடைய காலம் கழிந்துவிடுகிறது.

    கதை

    பதினைந்து வயதிலேயே ஜரீனா பள்ளியில் அடங்காது இருந்தாள். ஓயாமல் ஆண்களைப்பற்றித்தான் அவள் பேச்சு இருக்கும். ஆசிரியைகள் கொடுத்த எந்த வேலையையும் செய்யமாட்டாள். அப்படியே செய்தாலும், அரைகுறையாக இருக்கும். அவளால் பிற மாணவிகளும் அதேபோல் நடக்கும் நிலை.

    அவளுடைய தந்தை என்னைச் சந்திக்க வந்தார்.

    “நான் டாக்சி ஓட்டுகிறேன். பெரிய குடும்பம். காலையிலிருந்து இரவு வெகு நேரம் வீட்டிலே இருக்கமுடியாது. என் மகளை எப்படி அடக்குவதென்றே தெரியவில்லை. தயவுசெய்து உதவுங்கள், டீச்சர்!” என்று கெஞ்சினார் அந்த மலாய்க்காரர். (அவரைப் போன்றவர்களுக்கு ஆசிரியர்கள் என்றால் பெருமதிப்பு).

    அடுத்த முறை ஜரீனா என்னை எதிர்த்தபோது, “உன் அப்பாவை வரவழைக்கட்டுமா?” என்று மிரட்டினேன்.

    பயந்து, அடங்கினாள். அவ்வப்போது கண்டிக்க யாருமில்லாது, அளவுக்கு அதிகமான சுதந்திர உணர்வு அவளை மனம்போனபடி நடக்க வைத்திருந்தது.

    பெற்றோருக்கும், ஆசிரியர்கள் அல்லாதவர்களுக்கும் புரிவதில்லை, வீட்டில் ஒழுக்கம் கற்பிக்கப்படாத சிறுவர்களைத் திருத்துவது மிகக் கடினம் என்று.

    அத்தகைய பெற்றோர், `குழந்தைகளுக்குத் தேவையானவைகள் எல்லாவற்றையும்தான் கொடுக்கிறோமே! போதாதா?’ என்று திருப்தி அடைபவர்கள்.

    குழந்தைகளுக்கோ, `இதெல்லாம் பெற்றோரின் கடமை!’ என்ற அலட்சியம்தான் உண்டாகிறது. ஆனால், அத்தியாவசியத் தேவைகளுக்குப் பெற்றோர் வேண்டுமே! பெற்றோரிடம் தம் அதிருப்தியைக் காட்டத் துணியாது, ஆசிரியர்களை எதிர்க்க முனைகிறார்கள்.

    `வீட்டில் யாருமே நம் உணர்வுகளை மதித்து நடத்துவதில்லை!’ என்ற ஆத்திரம் உள்ளுக்குள் எழும். `யாருக்கும் என்னைப் பிடிக்கவில்லை!’ என்று நிச்சயம் செய்துகொள்வார்கள். இதனால் சுயமதிப்பு குன்றிப்போக, படிப்பிலும் சோடையாகிவிடும் அபாயமும் உண்டு.

    இவர்களுக்கு ஒத்த மனமுடைய நண்பர்களுக்கா பஞ்சம்! இப்படித்தான் தீய பழக்கங்களுக்கு அடிமையாகிறார்கள்.

    சில மாணவர்களே என்னிடம் கூறியிருக்கிறார்கள், `வீட்டில் யாரும் எங்களைக் கவனிப்பதில்லை. நண்பர்களுக்குத்தான் எங்களைப் புரிகிறது. அதனால் அவர்களுடன் காலத்தைக் கழிக்கிறோம்,’ என்று. நீலப்படங்களைப் பார்ப்பதைக்கூட விவரித்திருக்கிறார்கள்.

    எது நல்லது, எது கெட்டது என்று அறியாத பருவம். பெற்றோருக்குத் தம் பிள்ளைகளுடன் உணர்ச்சிபூர்வமான தொடர்பே கிடையாது. அவர்கள் யாருடன் பழகுகிறார்கள் என்பதிலும் அக்கறை செலுத்தமாட்டார்கள். எந்தவித வழிகாட்டலும் கிடையாது. இளைய வயதினர் திசை மாறுவது யாருடைய தவறு?

    சில பெற்றோருக்கு எப்படி வழிகாட்டுவது என்று புரிவதில்லை.

    ஒரு தாய் என்னைச் சந்தித்து, “என் மகனுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்க எனக்குத் தெரியவில்லை. அதுதான் குறைந்த மதிப்பெண்கள் வாங்குகிறான். அந்தக் காலத்திலே படிப்பு வேறு விதம் இல்லையா?” என்று சப்பைக்கட்டு கட்டினாள்.

    நானும், “ஆமாம். ஆமாம்,” என்று ஆமோதித்தேன். அப்போதுதானே அவள் நான் அடுத்துச் சொல்லப்போவதைக் கவனிப்பாள்!

    “தினமும் ஒரு மணி நேரமாவது அவனைப் படிக்கச் சொல்லுங்கள். அப்போது பக்கத்தில் உட்கார்ந்து, உரக்கப் படிக்கச் சொல்லுங்கள். அவ்வளவுதான்! நீங்கள் வேறு எதுவும் செய்யவேண்டாம்,” என்றேன்.

    (என் மகள் முதல் வகுப்பு படிக்கையில், “நீ ரொம்ப டிஸ்டர்ப் பண்றே! என்னாலே படிக்க முடியலே,” என்று குற்றம் சாட்டினாள்.

    நானோ, வாய்பேசாது, ஏதோ புத்தகத்தில் ஆழ்ந்திருந்தேன்! “நான் என்ன செய்யணும்?”

    “என் பக்கத்திலே உட்காரேன்!”

    அப்போதுதான் புரிந்தது, தாம் செய்வதில் பெரியவர்கள் அக்கறை காட்ட வேண்டும் என்ற குழந்தைகளின் எதிர்பார்ப்பு).

    அம்மாவுக்குத் தன் முன்னேற்றத்தில் எவ்வளவு அக்கறை என்ற பூரிப்பில் பையன் கடுமையாக உழைத்தான். அம்மாவை மாற்றிய என்னையும் பிடித்துப்போனது!

    பொது இடத்தில் பாருங்கள். எத்தனை பெற்றோர் பிள்ளைகளுடன் பேசுகிறார்கள்? சிறிய குழந்தைகளானால், பார்ப்பதையெல்லாம் விளக்குகிறார்கள்? `உன்னை ஹோட்டலுக்கு அழைத்து வந்திருக்கிறேனே! அதற்காக சந்தோஷப்படு!’ என்பதுபோல், தன் கைப்பேசியில் ஆழ்ந்திருக்கும் தந்தையோ, தாயோதான் அதிகம் இருப்பார்கள்.

    கதை

    பல ஆண்டுகளுக்கு முன்னர், நானும் என் உறவினர் ஒருத்தியும் காரம்ஸ் விளையாடிக்கொண்டிருந்தோம்.

    என் பாட்டி உள்ளே போய் பார்த்துவிட்டு, “குழந்தைக்கு நல்ல பசி. உங்களுக்கு என்ன விளையாட்டு?” என்று இரைந்தார்.

    “நான் போட்டுவிட்டு வந்தேனே!” என்றேன்.

    “எதுக்கு அவ்வளவு கஷ்டப்படணும்? `நீயே எடுத்துப் போட்டுண்டு சாப்பிடுடி,’ என்றால் சாப்பிட்டுவிட்டுப்போகிறாள்!”

    அவள் மூன்று வயதுக்குழந்தை!

    இருவரும் குற்ற உணர்ச்சியுடன் முழித்தோம்.

    அன்று நான் கற்ற பாடம்: ஒருவர் உணவருந்தும்போது கூடவே இருப்பது நல்லது. குழந்தைகளானால் கதை சொல்லலாம்.

    வளர்ந்தவர்களிடம் அன்றைய நடப்புகளை, முதல்நாள் பார்த்த திரைப்படத்தைப்பற்றிய விமரிசனத்தை, இப்படி எதையாவது பகிரலாம்.

    உறவுகள் பலப்படுவது இப்படித்தான்.

    தொடருவோம்.

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (104)

    நிர்மலா ராகவன்

     

    நான் தனிப்பிறவி. நீயும்தான்!

    அன்பாக வளர்க்கப்படும் குழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வளர்கிறார்கள். பிறரிடம் அன்பாக அவர்களால் நடக்க முடிகிறது. பெற்றோர் சொல்வதைக் கேட்டு நடந்தால் நற்பெயர் எடுக்க முடியும் என்று அவர்களுக்குத் தோன்றிப்போகிறது.

    சற்றே பெரியவர்களானதும், பிறரது எதிர்பார்ப்பின்படி நடந்தால்தான் அவர்களுக்கும் நம்மைப் பிடிக்கும் என்று அதன்படி நடக்க ஆரம்பிக்கிறார்கள். ஆனால், பலர் பாராட்டினாலும், மனத்துள் ஒரு வெறுமை. ஏனென்றால், அவர்கள் தமக்குப் பிடித்ததுபோல் நடக்கத் தவறிவிடுகிறார்கள். அவர்களுக்கு என்ன உகந்தது என்றே அறியாது நடக்கிறார்கள்.

    `நீ என்ன, இப்படி இருக்கிறாயே!’ என்று வித்தியாசமாக இருப்பவரைப் பிறர் கேலி செய்வார்கள். அவர்களை அலட்சியம் செய்வதுதான் சிறந்த வழி. ஏன் இப்படி இருக்கிறோம் என்று அனைவருக்கும் விளக்க வேண்டுவதோ, `ஏனோ இப்படி ஆகிவிட்டேன்!’ என்று வருந்துவதோ வேண்டாத காரியம்.

    பெரும்பாலும் இளைய வயதினர்தாம் பிறர் ஏற்க மாட்டார்களோ என்ற அச்சத்தால் கண்மூடித்தனமாக மற்றவர்களைப் பின்பற்றுவார்கள்.

    தமக்குப் பிடிக்கிறதோ, இல்லையோ, எங்காவது கிரிக்கெட் பந்தயம் நடக்கும்போது, அதைப்பற்றி விவாதிப்பார்கள் கல்லூரி மாணவிகள். எதுவும் புரியாவிட்டாலும், அல்லது ஆர்வம் இல்லாவிட்டாலும் கலந்துகொள்ள வேண்டும். வகுப்பிற்கு மட்டம் போட்டாவது வானொலியில் வர்ணனையை ரசித்துக் கேட்பார்கள்.

    பிரபல நடிகர் அஜித் ஒரு படம் முழுவதிலும் வேஷ்டி அணிந்து நடிக்க, பண்டிகைக்கு எல்லா இளைஞர்களும் வேஷ்டி வாங்கினராம்!

    `புகழ்பெற்ற திரைப்படத்தில் கதாநாயகி இந்தமாதிரி புடவையைத்தான் அணிந்திருந்தாள்!’ என்ற விளம்பரத்துடன் விற்பனைக்கு வரும் புடவைகளுக்கு அமோக வரவேற்பு கிடைக்கிறது.

    பிறரைப் பின்பற்றி நடந்தால் தம்மை யாரும் பழிக்க மாட்டார்கள், சங்கடம் எதுவும் வராது என்று அதிகம் யோசியாது எதையும் செய்பவர்கள்தாம் காப்பி அடிக்கிறார்கள். பிரபலமானவர்களின் உடையையோ, தலையலங்காரத்தையோ பின்பற்றினாற்போல், நாம் பிறர்போல் சிறந்துவிட முடியுமா?

    `புடவை அழகாக இருக்கிறதே!’ என்று வாங்குவது வேறு. `எல்லாரிடமும் இருக்கிறது. நான் மட்டும் வாங்கக்கூடாதா?’ என்று நினைப்பது சிறுபிள்ளைத்தனமான போட்டி.

    இதைத் தவிர்க்க, `பிறர் கூறுவது எதையும் ஏற்காது எதிர்த்தால்தான் வெற்றி பெறலாமா?’ என்று யோசனை போனாலும் ஆபத்துதான். நம் குணத்திற்கும் திறமைகளுக்கும் எது உகந்தது என்று புரிந்து நம்பகமான பிறரது அறிவுரையை ஏற்பதே சிறந்தது.

    நம்மை எதற்காகப் பழிக்கிறார்களோ, அதுவே வெற்றிக்கு வித்தாகலாம்.

    கதை

    என் பதின்ம வயதில், என் பாட்டி என்னை `நோணாவட்டம்’ என்று பழிப்பார். இயற்கையாகவே, எதிலும் என்ன குறை என்று உடனே என் யோசனை போய்விடும். அதை எப்படித் தீர்ப்பது என்று கேட்டால் அதற்கும் பதில் தயாராக இருக்கும். (இக்குணம் ஆசிரியர்களுக்கும் விமரிசகர்களுக்கும்தான் ஏற்றது).

    என் மாமி ஒருத்தர் மிகச் சுமாராகச் சமைப்பார். விடுமுறை காலங்களில், நாத்தனார்களும் மைத்துனர்களும் கேலி செய்யப்போக, வெட்கமும் பயமும் எழுந்தன. ஒவ்வொரு நாளும் ரகசியமாக என்னைச் சமையலறைக்குக் கூப்பிட்டு அனுப்புவார்.

    நான் ஒவ்வொன்றையும் ருசி பார்த்து, `சாம்பாரில உப்பு அதிகம்! ஒரு உருளைக்கிழங்கை வேகவைத்து, கொஞ்சம் கொதிக்க விடுங்கள்,’ `வெண்டைக்காய் (பயத்தங்காய்) பொரியலில் எண்ணை அதிகம். கொஞ்சம் ஓட்ஸ் போட்டு வதக்குங்கள்,’ என்று பலவாறாகக் கூறுவேன்.

    பிற்காலத்தில், இந்திய பாரம்பரிய இசை, நாட்டிய நிகழ்ச்சிகளுக்கு ஆங்கிலத்தில் விமரிசகராக இருக்கும்படி என்னைக் கேட்டுக்கொண்டார்கள்.

    `நான் எழுதுவது blunt ஆக இருக்கும்,’ என்று மறுத்தேன், சிரிப்புடன்.

    `இல்லை. நீ honest!” என்று வற்புறுத்தினாள் கலைப்பகுதியின் ஆசிரியை.

    குறைகாணும் தன்மைகூட சில சமயங்களில் உபயோகமாகிவிடுகிறது. பிறர் ரசிக்கிறார்களே என்று எல்லாரையும்போல பாராட்டிவைத்தால் கலைஞர்கள் எப்படி முன்னேறுவார்கள்?

    காற்றின் எதிர்த்திசையில் பறக்கும் பட்டம்தான் உயரத்திற்குச் செல்ல முடிகிறது. எதிர்ப்புகள் வரலாம். அவைகளைக் கண்டு மனம் தளராது இருப்பதுதான் வெற்றிக்கு வழி.

    ஒரு சிறுவனுக்குச் சற்று விவரம் புரிந்ததும், பெற்றோர் கூறுவதை அப்படியே கடைப்பிடிக்காது, தன் எண்ணம்போல் செய்ய முயற்சிக்கும்போது தடை விதிக்காது, அல்லது கேலி செய்யாது இருந்தால் தன் திறமையில் அவனுக்கு நம்பிக்கை எழும். அவன் செய்ததில் வெற்றி கிடைக்கிறதோ, இல்லையோ, சுயமாக யோசிக்கும் திறனைப் பெறுகிறான். குழப்பம் வரும்போது, எங்கே தவறு நேர்ந்தது என்று அவனுடன் அலசலாமே!

    மாறாக, `நீ இப்படித்தான் இருக்க வேண்டும். இப்படி இருக்கக்கூடாது!’ என்று ஒவ்வொருவர் கூறுவதையும் கேட்டு நடந்தால், சுயபுத்தியை உபயோகிக்கும் வாய்ப்பு குறைந்துவிடுகிறது. பிறர் ஒப்பாததால் நாம் செய்வது தவறு என்றாகிவிடாது.

    பிறருக்கு நம்மைப் பிடிக்கலாம். ஆனால் நமக்கே நம்மைப் பிடிக்காமல் போகும் அவல நிலை வரலாமா?

    ஒரு காரியத்தை ஆரம்பிக்கும்போதே அது மிகச் சிறப்பாக அமைய வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தாழ்வு மனப்பான்மைக்கு வித்தாகிவிடும்.

    ஒரு வெற்றி அடைந்தவுடனேயே அடுத்து என்ன சாதிக்கலாம் என்று வெறி பிடித்து அலையாது, அவ்வப்போது சிறிது ஓய்வு பெறுவது அவசியம். எப்படிச் செய்தால் வெற்றி அடைய முடிகிறது, ஏன் சுணக்கம் ஏற்படுகிறது என்று அவ்வப்போது அலசுவது நன்று.

    தவறு இழைத்துவிட்டோமா? அதனால் என்ன! நாம் என்ன, கடவுளா, தவறே செய்யாதிருக்க!

    `இதை எப்படி செய்து முடிக்கப்போகிறோம்!’ என்று மலைக்காது, ஒரு காரியத்தில் ஈடுபடுவதே உற்சாகத்தை அளிப்பதாக இருந்தால் என்றாவது வெற்றி கிட்டும்.

    வாழ்வில் மகிழ்ச்சி இல்லாது போவதற்கு போட்டி, பொறாமை, தன்னிரக்கம் ஆகியவை முக்கிய காரணங்கள்.

    `எனக்கு அதிர்ஷ்டமே கிடையாது!’

    `கலிகாலத்திலே நல்லவர்கள்தான் அதிகமாகக் கஷ்டப்படுவார்களாமே!’

    என்று பலவாறாகப் புலம்பிக்கொண்டு, `என்னால் இப்படி இருக்க முடியவில்லை, அவளைப்போல் எல்லாம் செய்ய முடியவில்லை!’ என்று பிறருடன் தன்னை ஒப்பிட்டுக்கொண்டு, தன்னைப் பார்த்துப் பரிதாபப்படுகிறவர்கள் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்?

    ஒருவரிடம் திறமை இருந்தாலும், பிறர் பாராட்டவில்லையே என்ற தாபம் இருந்தால் இந்த நிலைமைதான் வரும்.

    குறைகளுடன் தம்மைத்தாமே ஏற்றுக்கொள்பவர்களால்தான் ஆரோக்கியமான உறவுகளை அடைய முடிகிறது. இவர்களை எளிதில் வீழ்த்திவிட முடியாது. (ஆனால், குறைகளைப் பிறரிடம் சொல்லி, அவர்கள் நம்மை இளக்காரமாக நினைக்கச் செய்ய வேண்டாமே!)

    Papa, he loves Mama.

    Mama, she loves Papa.

    என்றிருக்கும் ஓர் ஆங்கிலப்பாடலை, என் குழந்தை மூன்று வயதில் இப்படிப் பாடினான்:

    Papa, he loves Sashi.

    Mama, she loves Sashi!

    அகம்பாவமா?

    இல்லை. `என்னை எனக்குப் பிடிக்கிறது , மற்றவர்களுக்கும் பிடிக்கிறது,’ என்ற எண்ணம் இருந்தால்தான் மகிழ்ச்சி நிலைக்கும்.

    நாம் நம்முடன்தான் எப்போதும் இருக்கிறோம். அந்த அருகாமை மகிழ்வூட்டுவதாக இருக்க வேண்டாமா?

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – 103

    நிர்மலா ராகவன்

     

    பழகத் தெரியவேண்டும்

    “எனக்குப் பல பெண்களுடன் நட்புடன் கூடிய தொடர்பு இருந்தது. ஆனால், எதுவுமே கல்யாணத்தில் முடியவில்லை!” என்று ஏக்கத்துடன் கூறினார் ஒருவர். பிறருடன் சரியான முறையில் பழகத் தெரியாததுதான் காரணம்.

    `வாழ்நாள் முழுவதும் இப்படி ஒருவருடன் கழிக்க முடியுமா!’ என்று அயர்ந்தே பெண்கள் இவருடன் நீண்டகாலத் தொடர்பு வேண்டாமென ஒதுக்கியிருப்பார்கள்.

    வெற்றிகரமான உறவுகள் அமைய வேண்டுமானால், பிறருடன் எப்படிப் பழகுவது என்று சிறுவயதிலிருந்தே போதிப்பது அவசியம். மூன்று வயதுக் குழந்தையிடம், `வணக்கம் சொல்லு!’ என்று சொல்லிக்கொடுப்பதில் ஆரம்பிக்கிறது இப்பழக்கம்.

    `அப்பாவின் கையைமட்டும் குலுக்குகிறாரே!’ என்று தானே வலியப்போய் கையை நீட்டும் குழந்தை கலகலப்பானவனாக, பிறர் மெச்ச வளரும்.

    ஏழு வயதானாலும், தாயின் பின்னால் ஒரு சிறுவன் ஒளிந்துகொண்டால் எங்கோ பிழை. “வெளியில் வந்தால் வெட்கப்படுவான்!’ என்று அவனை ஆதரித்துப் பேசும் பெற்றோர் அவனுக்கு நன்மை செய்வதில்லை.

    கதை

    “எனக்கு எப்படிப் பேச வந்தது?” என்று ஆச்சரியப்பட்டாள் நான்கு வயதான லதா.

    “நாங்கள் உன்னுடன் பேசுவதைக் கேட்டு, தானே வந்துவிட்டது”.

    இந்த விளக்கத்தைக் கேட்டபின், லதா எங்கு போனாலும் தன் `லேடி பொம்மை’யை எடுத்து வருவது வழக்கமாகப் போயிற்று. போகும் வழியில் அதனுடன் ஓயாமல் பேசிக்கொண்டிருப்பாள்.

    “என்ன செய்யறே?” என்று யாராவது கேட்டால், “நான் பேசினா, அப்புறம் என்னோட பொம்மையும் என்கூட பேசும்!” என்று பதிலளித்தாள் சிறுமி. நமக்கு வேடிக்கையாக இருந்தாலும், அந்த வயதில் அவளுக்கு நம்பிக்கை இருந்தது. அடுத்த வருடம் அதை மறந்துவிட்டாள். வயதாக ஆக, குழந்தைகளின் தன்மையும் மாறுகிறதே!

    கதை

    நான்கு வயதான பாபு அவனுடைய இரண்டு வயதுத் தங்கையுடன் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபடுவான். ஆண்பிள்ளை. அதிலும் வயதில் பெரியவன். நிச்சயம் அவன்தான் வெற்றி பெறுவான் என்று `பந்தயத்தை’ நடத்திய தந்தைக்குப் புரிந்துவிட்டது.

    “தங்கை, பாவம், சின்னக்குழந்தை! அவள் முதலில் ஓட ஆரம்பிக்கட்டும்,” என்று தந்தை சொல்ல, ஏற்றுக்கொண்டான் பாபு. அவள் பாதி தூரம் போனதும், “இப்போ நீ ஓடு!” என்று பச்சைக்கொடி காட்டப்பட்டது.

    இருவரும் ஒரே சமயத்தில் இறுதிக்கட்டத்தில் வர, “இரண்டுபேருக்கும் வெற்றி!” என்று தந்தை மகிழ்ச்சியுடன் கூவினார்.

    சற்று விழித்துவிட்டு, பாபுவும் அதை ஏற்றுக்கொண்டான், அப்பா சொன்னால் சரியாகத்தான் இருக்குமென்று.

    தினமும் பாபுவுடன் உட்கார்ந்து விளையாடுவாள் அவன் தாய். `இரு. இப்போது நான் ஆடவேண்டும். அப்புறம் நீ!’ என்று காத்திருக்க வேண்டிய அவசியத்தை மறைமுகமாக உணர்த்தினாள்.

    பாலர் பள்ளியில் சேர்ந்தபோது, “என் மேசைக்கு வந்து கலர் பென்சில்களை எடுத்துப் போங்கள்,” என்று ஆசிரியர் அறிவித்தபோது, பாபு மட்டும் முண்டியடித்துக்கொண்டு ஓடவில்லை.

    “ஜெண்டில்மேன்!” என்று ஆசிரியர் புகழ்ச்சியாகச் சொன்னதன் அர்த்தம் அவனுக்கு விளங்கவில்லை. ஏதோ பாராட்டுகிறார் என்றவரை புரிந்தது.

    “நீ என்ன செய்தாய்?” என்று வீட்டில் கேட்டபோது, “Wait my turn!” என்றான்.

    இப்படி வளரும் குழந்தைகள் சிறுபிள்ளைத்தனமாக பிறருடன் போட்டி போடுவது கிடையாது. சிறு வயதிலேயே விட்டுக்கொடுத்துப் போவார்கள். இதனாலேயே பல நண்பர்கள் வாய்ப்பார்கள்.

    பெற்றோருக்கு ஒரே குழந்தையாக வளர்பவர்களுக்கு பிறருக்கு விட்டுக்கொடுக்கும் அவசியம் இருப்பதில்லை. இதனாலேயே நல்ல நட்பை இழக்கக்கூடும்.

    கதை

    சகோதரர்கள் இருவர் ஒற்றுமையாக விளையாடிக்கொண்டிருந்தார்கள். அடுத்த வீட்டிலிருந்த பையன் அவர்களைவிட சற்றே சிறியவன். அவனும் அவர்களுடன் சேர்ந்து விளையாட வரும்போது, “சீக்கிரம் ஆரம்பி. அப்போதான் பாதி விளையாட்டிலே சேர்த்துக்க முடியாதுன்னு சொல்லலாம்,” என்று பெரியவன் கூற, இருவர் மட்டுமே அவசரமாக விளையாட ஆரம்பித்தார்கள்.

    “ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? பாவம்!” என்று நான் பரிதாபப்பட, “அவன் தப்பு தப்பா ஆடுவான். ஆனா, அவன் செய்யறதுதான் சரின்னு சண்டை பிடிப்பான், அழுவான்!’ என்று பதில் வந்தது. இவர்களுக்குச் சண்டை போட்டுப் பழக்கமில்லை. எல்லோருடனும் மரியாதையாகப் பழகவேண்டும் கற்றுக்கொடுக்கப்பட்டிருந்தது.

    மரியாதையாகப் பேசுவது

    பெற்றோரோ, வயதின் மூத்தவர்களோ மரியாதையாகப் பேசினால், குழந்தைகள் தாமே அப்படி நடப்பார்கள். நாம், `Please,” என்று ஒரு வேலை சொல்லி, அதைச் செய்து முடித்த சிறுவனிடம் `thank you,” என்று தவறாமல் நன்றி கூறினால் அவனுக்கும் அந்தப் பழக்கம் தன்னையுமறியாமல் வந்துவிடும்.

    `நான் பெரியவன்! ஒரு குழந்தைக்கு நன்றி சொல்வதா!’ என்ற மனப்பான்மை பெரியவர்களுக்கு இருந்தால், எப்படி குழந்தைகளுக்கு நற்புத்தி புகட்டுவது?

    நம்மைப்போல்தானே பிறரும்?

    தன்னைப்பற்றியே நினைத்துக்கொண்டிருப்பது சிறுபிள்ளைகளின் இயல்பு. ஆறு அல்லது ஏழு வயதில் பிறரது உணர்ச்சிகளும் புரியவேண்டும். புரிய வைக்கவேண்டியது பெற்றோரின் கடமை.

    புத்தகங்கள் படிக்கும்போதும், திரைப்படங்கள் படிக்கும்போதும் தென்படும் பாத்திரங்களைத் தாமாகவே பாவிக்கும்போது, பிறருடைய உணர்ச்சிகள் புரிந்துபோகும். மாறுபட்ட கருத்துக்களையும் ஏற்கும் பக்குவம் உண்டாகும்.

    புதிய இடங்களுக்குப் போகும்போது பலதரப்பட்ட மனிதர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைக்கிறது. உங்கள் குழந்தைகளுடன் அப்படி எங்காவது செல்லும்போது, அவன் வயதொத்த குழந்தைகளுடன் பழக வழி செய்யலாமே!

    “ஹலோ!” என்ற புன்சிரிப்புடன் ஆரம்பித்தாலே போதும். இன்னொருவர் மகிழ்ச்சியுடன் பேசுவார். `நீ எங்கிருந்து வந்தாய்? என்ன படிக்கிறாய்?’ என்று பேச்சை வளர்த்தினால், நட்பு வளரும்.

    ஒன்றாகப் பிரயாணம் செய்யும்போது, `இந்த இடம் எவ்வளவு அழகாக இருக்கிறது!’ `இங்கு எல்லாரும் மிகவும் உதவியாக இருக்கிறார்கள்!’ என்று பொதுப்படையாகப் பேசுவது பிறரை நம் பால் ஈர்க்கும்.

    புறம் கூறலாமா?

    எட்டு வயதானபோது, “ஐயே! இவள் என்ன மாதிரி டீச்சர்!” என்று தன் வகுப்புத்தோழிகள் ஏளனமாக ஓர் ஆசிரியைப்பற்றிக் கூறுவதாக என்னிடம் தெரிவித்தாள் என் மகள்.

    “ஒரு டீச்சரைப் பார்த்து அப்படியெல்லாம் சொல்லக்கூடாது,” என்று கண்டித்தேன்.

    “நான் சொல்லலே. மத்த பொண்கள்தான்,” என்றாள் அழுத்தமாக. புறம் கூறினால், பிறர் நம்மைக் கவனிப்பார்கள் என்று தோன்றிப்போகும் பலருக்கும். இது கீழ்த்தரமான புத்தி.

    “அதைத் திரும்பக்கூடச் சொல்லாதே. ஒங்கம்மாவும் டீச்சர். என்னைப்பத்தி மத்தவா அப்படிப் பேசினா ஒனக்கு எப்படி இருக்கும்?” என்றேன் சூடாக.

    இருப்பினும், புறம் கூறுவதுகூட சில சமயங்களில் நன்மை பயக்கலாம். எப்போதென்றால், ஒருவரின் செய்கையால் அவருக்கோ, பிறருக்கோ தீங்கு விளையக்கூடும் என்னும்போது.

    கதை

    ஆரம்பப்பள்ளியில் படித்துவந்த சங்கர் பேரங்காடிகளுக்குச் சென்று ரப்பர், பென்சில் போன்ற சிறு சாமான்களை நோட்டமிடுவதுபோல் அபகரித்துவிடுவான். அவைகளைத் தன்னுடன் படிக்கும் பிற பையன்களுக்குக் கொடுப்பான். அவனுக்கு அப்பொருட்கள் தேவையே இல்லை. ஆனால், சாமர்த்தியமாக கடைக்காரர்களை ஏமாற்றுகிறோம் என்ற பெருமைக்காக அப்படிச் செய்துவந்தான்.

    கோபி என்ற அவனுடைய சகமாணவன் தன் தாயிடம் விஷயத்தைச் சொல்ல, அவள் தலைமை ஆசிரியரிடம் புகார் செய்தாள்.

    நடந்தது தவறு என்று தெரிந்து, அதை நிறுத்த அச்சிறுவன் எடுத்த முயற்சி பாராட்டப்பட வேண்டியது. நட்பு நிலைக்க வேண்டும் என்பதற்காக அநீதிகளைப் பொறுத்துப்போக வேண்டியதில்லை.

    யாரை ஒதுக்கலாம்?

    பிறருடன் பழகுவது நல்ல குணம் என்றாலும், சிலரை விலக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

    அதனால்தான், `புதிய இடத்தில் முன்பின் தெரியாதவர்களிடம் உன்னைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருக்காதே!’ என்று குழந்தைகளைப் பழக்குகிறோம்.

    ஆகாயவிமானத்தில் தனியாகப் பயணம் செய்யும் இளம்பெண்ணிடம் பேச்சுக்கொடுத்தால், பராமுகம்தான் பதிலாகக் கிடைக்கும். `புதியவர்களை நம்பாதே!’ என்று அவளுக்குப் படித்துப் படித்துச் சொல்லியிருப்பார்கள்!

    முதல் முறையாகச் சந்திக்கும்போதே நம்மிடம் மிகுந்த நட்புடன் இனிமையாகப் பேசுகிறவர்களிடம் கவனமாக இருத்தல் நலம்.

    Share
  • மனித இயந்திரம்

    நிர்மலா ராகவன்

    விமானம் கீழே இறங்கிக்கொண்டிருந்தது.

    `குப்பை! குப்பை!’ என்று கூவியபடி, உதட்டுடன் ஒட்டிய நிரந்தரமான முறுவலுடன் விமான பணிப்பெண் பயணிகளின் இடையே விரைந்தாள்.

    வேலு தன் சட்டைப்பைக்குள் வைத்திருந்த காகிதத்தை எடுத்து அவள் பிடித்திருந்த பெரிய பிளாஸ்டிக் பைக்குள் எறிந்தார். சில வாரங்களாகவே தான் அனுபவித்த குழப்பம் அதனுடன் தொலைந்துவிட்டதாக ஓர் எண்ணம் உதிக்க, சிறு சிரிப்பில் உதடுகள் விரிந்தன.

    தானும் அவரது மகிழ்ச்சியில் பங்கு கொள்பவள்போல் அவரைப் பார்த்துப் புன்னகைத்தாள் பணிப்பெண். வெளிநாட்டில் சில காலத்தைக் கழித்துவிட்டு, தாய்நாடு திரும்பும் எத்தனைபேரை அவள் பார்த்திருக்கிறாள்!

    அச்சிரிப்பே அவளுடன் ஒரு நெருக்கத்தை உண்டுபண்ண, “என் மகளுக்குக் கல்யாணம்! அதுக்குத்தான் போறேன்,” என்று தெரிவித்தார். சொல்லும்போதே ஆனந்தமாக இருந்தது.

    `வெளிநாடு போனால், கைநிறையச் சம்பாதிக்கலாம்,’ என்று, கல்யாணமாகி ஒரே மாதத்தில் மலேசியாவுக்குச் சென்றிருந்தார். மூன்று, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் மனைவியைப் பார்க்க முடிந்தது. அவர் ஒவ்வொரு முறை வந்து போகும்போதும் ஒரு குழந்தைக்கு வித்திட்டிருப்பார். சும்மாவா? ஒவ்வொரு முறையும் இரண்டு பவுனுக்குக் குறையாது, சங்கிலி, வளை, தோடு என்று மனைவிக்கு வாங்கிப்போவாரே! மீனாட்சி அவர் அடுத்த முறை வரும்வரையில் நகைகளை எல்லாருக்கும் காட்டிக் காட்டிப் பெருமைப்படுவாள்.

    வேலுவால் அவ்வளவு எளிதாக திருப்தி அடைந்துவிட முடியவில்லை. மூத்தவள் ரஞ்சனி பாலுக்காகச் சிணுங்கும்போதும், தளர்நடை பழகும்போதும் பக்கத்திலிருந்து ரசிக்கக் கொடுத்துவைக்கவில்லை. எதிர்ப்படுகிற சிறு குழந்தை ஒவ்வொன்றையும் பார்த்து, `என் ரஞ்சனி இப்போது இவ்வளவு பெரியவளாக இருப்பாளா?’ என்றெழுந்த யோசனையைத் தவிர்க்க முடியவில்லை.

    மகள் கையைப் பிடித்து, பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் சென்றதில்லை. பூப்படைந்தபோது, `நமக்கு ரொம்பத்தான் வயதாகிவிட்டதோ!’ என்று பெருமையும் கவலையுமாக அவளருகில் நிற்கவில்லை.

    யோசிக்கும்போதே அயர்ச்சியாக இருந்தது. ஆனால், நல்ல தந்தையாக இருந்திருக்கிறோம் என்று திருப்திப்பட்டுக்கொண்டார்.

    தான்தான் சிறுவயதில் படிக்கவும் வசதியற்று, ஏழ்மையில் உழன்றுவிட்டோம், தன் குழந்தைகளாவது நன்றாகப் படித்து முன்னேற வேண்டும் என்று உடலை வருத்தி, அடுப்படியில் உழன்றார். ஒரு கெட்ட பழக்கத்திற்கும் இடம் கொடுக்காது, சம்பாதித்ததில் பெரும்பகுதியை மனைவிக்கு அனுப்பினார். வருமான வரி கிடையாது என்பதால் நிறையவே சேமிக்க முடிந்தது.

    தன் சம்பாத்தியத்தில் மனைவி வாங்கிய வீட்டை இன்னும் பார்க்கவில்லை. வீடு கிடக்கிறது, வெறும் உயிரற்ற பொருள்! கல்யாணத்தின்போது பூரித்து நிற்கும் மகளைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை வளர்ந்தது.

    கடை முதலாளி, “வெளிநாட்டிலிருந்து சமையல் செய்ய வர்றவங்களுக்கு மட்டும்தான் பர்மிட் கொடுப்பாங்களாம். அப்போ, யார் பரிமாறுவாங்களாம்?” என்று அலுத்தபோது, வேலுவுக்குப் பயம் வந்தது. பரிசாரகர்கள் பற்றாக்குறையால் பல சாப்பாட்டுக்கடைகள் மூடப்பட்டது அவருக்கு மட்டும் தெரியாதா, என்ன?

    “உள்ளூரிலே எவனாவது வரமாட்டானா, மொதலாளி?”

    “இங்க இருக்கிறவங்க நாலு பங்கு சம்பளமில்ல கேக்கறாங்க? அப்போ, நாம்ப இட்லி, தோசையோட வெலையைக் கூட்டினாத்தான் கட்டுப்படியாகும். யாரு சாப்பிட வருவாங்க?”

    வேலு பதட்டமாக, “நான் பரிமாறிட்டுப்போறேன். என்னோட சம்பளத்தை மட்டும்..,” என்று இழுத்துவிட்டு, “மகளுக்குக் கல்யாணம் வருது,” என்று அசட்டுச்சிரிப்புச் சிரித்தார்.

    அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து, காலைப் பலகாரத்துக்கான ஆயத்தங்களை ஆரம்பிப்பார். பத்து மணிக்கு பகல் உணவைத் தயார் செய்யவேண்டும். இரண்டு மணியிலிருந்து ஓரிரு மணி சற்று ஓய்வு. அதன்பின், இரவு ஒன்பது மணிவரை இடைவிடாத உழைப்பு. மகளைக் கல்யாண கோலத்தில் பார்க்கும் இன்பக்கனவில் உடல் இளைப்பும், அடிக்கடி வரும் சளி, காய்ச்சலும் துச்சமாகப்பட்டன.

    கல்யாணப் பத்திரிகையுடன், அவரை அதிரவைத்த அந்தச் செய்தியும் வந்தது.

    சாப்பாட்டுக்கடைக்கு வந்த அம்மாளிடம் முறையிட்டார்: “தங்கச்சி! என் மகளுக்குக் கல்யாணம். எனக்கு ஊருக்குப் போக ஆசையா இருக்கு,” என்று முறையிட்டுவிட்டு, “`நீங்க வரவேணாம், பிளேனுக்குக் கொட்டி அழற காசில தங்க நகை வாங்கி அனுப்பிடுங்கன்னு!’ மனைவி சொல்றாங்க! என்னா செய்யறதுன்னு புரியலே!” என்றார் அழமாட்டாக்குறையாக.

    “குடும்பத்துக்காக இவ்வளவு காலமா உழைச்சிருக்கீங்க. நீங்க போனா, `ஏன் வந்தே?ன்னு விரட்டிடுவாங்களா, என்ன! சந்தோஷமா போயிட்டு வாங்க!” என்று ஆதரவு வர, உற்சாகம் மீண்டுவந்தது. பக்கத்திலிருந்த அடகுக்கடையில் நான்கு பவுனில் மகளுக்கு ஒரு சங்கிலி, மாப்பிள்ளைக்கு ஒரு கடிகாரம் என்று வாங்கிக்கொண்டார். பிரயாணத்தின்போது பெட்டியில் வைத்தால் யாராவது எடுத்துவிடலாம் என்று பயமெழ, உடனே அவைகளை அணிந்துகொண்டார். அடிக்கடி தன் பிம்பத்தைச் சிறிய கண்ணாடியில் பார்த்துப் பூரித்தார்.

    “விமானம் சென்னையை அடைந்துவிட்டது. பயணிகள் தத்தம் இருப்பிடங்களிலேயே அமர்ந்திருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,” என்ற அறிவிப்பை யாரும் லட்சியம் செய்யவில்லை. பரபரப்புடன் எழுந்தனர்.

    நீண்ட காலத்திற்குப்பிறகு சந்திக்கப்போகிறோம்! பெண்டாட்டி பிள்ளைகளுக்கும் தன்னைப்போல்தானே மகிழ்ச்சியாக இருக்கும்!

    “எங்கே வந்தீங்க?” எடுத்த எடுப்பில் கேட்டாள் மனைவி மீனாட்சி. “கடுதாசி கிடைக்கலே?”

    “டேய்! அப்பா வந்திருக்காருடா!” என்று தொனியைச் சற்று மாற்றினாள், மகனைக் கண்டதும்.

    தான் எண்ணிக்கொண்டிருந்ததுபோல் இவன் படித்துப் பெரிய ஆளாக ஆகமாட்டான் என்று அவனைப் பார்த்ததுமே தெரிந்தது. மைனர்போல் இருந்தான். அருகில் வரும்போதே துர்வாடை. அலட்சியமாக அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு, எதுவும் பேசாமலேயே அப்பால் நகர்ந்தான்.

    `நான் மாடா ஒழைச்சுச் சம்பாதிச்ச காசைக் கரியாக்கிட்டியாடா!’ என்று மனத்துக்குள் அழுதார்.

    ஏதோ நினைத்துக்கொண்டதுபோல் திரும்பி, “கடிகாரத்தைக் கொண்டாங்க பாக்கலாம்,” என்று கையை நீட்டினான் மைனர்.

    “நீ சம்பாதிச்சு வாங்கிக்க,” என்று கத்திய அப்பா அவனுக்குப் பழக்கமில்லாதவர்.

    கடைக்குட்டி யாரோ புதிய மனிதர் வந்திருக்கிறார் என்று பயந்தவனாக, தாயின் பின்னால் ஒளிந்துகொண்டான்.

    “பிள்ளைங்களுக்கு என்ன வாங்கிட்டு வந்தீங்க?” மீனாட்சியின் அடுத்த கேள்வி. தனக்கும் ஏதாவது நகை வாங்கி வந்திருக்கமாட்டாரா என்ற ஆசையில் எழுந்தது.

    “நீ வேற! பிளேனுக்கே ஆயிரக்கணக்கிலே செலவழிஞ்சுடுச்சு!” என்று முணுமுணுத்தபடி, சட்டைக்காலரை இழுத்துவிட்டுக்கொண்டார். இவர்களுக்கெல்லாம் சங்கிலியும், பரிசுகளும் ஒரு கேடு!

    “மலேசியாவிலே பெரிய வேலை பாக்கறே! எங்களுக்கெல்லாம் என்ன கொண்டுவந்தே?” என்ற உறவினர்களிடம், “என்னைத்தான் கொண்டுவந்தேன்,” என்றார். ஆபத்து என்றாலும் மனைவிக்கு எந்த உதவியும் செய்யாதவர்கள்! தான் அயல்நாட்டிலிருந்து மூட்டை மூட்டையாகப் பணத்தைக் கட்டிக்கொண்டு வருவதுபோல் அல்லவா கேட்கிறார்கள்!

    கல்யாணம் முடிந்ததும், மாப்பிள்ளை, “ஒங்க கடிகாரம் நல்லா இருக்கு. தங்க செயின் மாட்டியிருக்கீங்க?” என்று நைச்சியமாக விசாரித்தான்.

    “இதுவா? கர்ணனோட கவச குண்டலம் மாதிரி. எப்பவும் என் கையிலேயேதான் இருக்கும். குளிக்கிறப்போதான் கழட்டுவேன்னா பாத்துக்குங்களேன்!” என்று அவன் வாயை அடைத்தார்.

    திரும்பும்போது, விமானத்தில் அதே பணிப்பெண். தாய்நாட்டுக்குப் போகிறபோது அவரிடம் இருந்த உற்சாகம் வடிந்திருந்தது அவள் கண்களுக்குத் தப்பவில்லை.

    “பிடிச்சவங்க எல்லாரையும்விட்டுப் போறோமே அப்படின்னு வருத்தமா இருக்கீங்க போல இருக்கு?” என்று விசாரித்தாள்.

    `பிடிச்சவங்களா! அவங்களைப் பொறுத்தவரைக்கும் நான் சம்பாதிச்சுப்போடற ஒரு இயந்திரம். அவ்வளவுதான். நானும் மனுஷன்தான், எனக்கும் உணர்ச்சிங்க உண்டுன்னு யாரும் நினைக்கலே!’

    தன்னைப்போன்றவர்களின் அவல வாழ்க்கை இவளுக்கு எங்கே புரியப்போகிறது என்று நினைத்தவராக, எதுவும் பேசாது, தலையைக் குனிந்துகொண்டார் வேலு.

     

     

     

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – (102)

    நிர்மலா ராகவன்

    உதவினால் உற்சாகம் வரும்

    `வயதாகிவிட்டதா! ஒரே மறதி!’ பலரும் அலுத்துக்கொள்வதைக் கேட்டிருப்பீர்கள்.

    ஓர் அறைக்குள் சென்று, அல்லது ஐஸ்பெட்டி அருகே போய் நின்று, அங்கே எதற்காக வந்தோம் என்று மறந்து நிற்பது வயோதிகர்களுக்கு சகஜம். இது ஒன்றும் பெரிய வியாதி இல்லை.

    நாற்பது வயதுகூட ஆகாத சிலர்கூட ஒரே இடத்தில் ஒன்றும் செய்யாது உட்கார்ந்திருந்தால் ஏதோ பெரிய பதவியிலிருப்பதுபோல் எண்ணிக்கொள்வார்கள். மூளையும் மந்தமாகிக்கொண்டே போகும். மூளைக்கு வேலை கொடுத்துக்கொண்டே இருந்தால்தானே அது சுறுசுறுப்பாக இயங்கும்?

    வேலை என்றால் கையால், காலால் செய்வது மட்டுமில்லை. கையால் ஒரு சாமானை எடுக்க வேண்டும் என்றால், மூளைதானே அதற்கு அந்தக் கட்டளையை இடுகிறது? ஐம்புலன்களுக்கும் பயிற்சி கொடுத்துக்கொண்டே இருப்பது மூளைக்குப் பயிற்சி கொடுத்ததுபோல்தான்.

    சில கலாசாரங்களில், எந்த நற்காரியத்தையும் வலது கையால்தான் செய்யவேண்டும் என்று சிறு வயதிலிருந்தே பழக்கியிருப்பார்கள். ஒரு பூட்டையோ, கதவையோ திறக்க அவ்வப்போது இடதுகையையும் பழக்கினால், அதுவே மூளைக்கு ஓர் உந்துதலாக ஆகிறது.

    கதை

    `நான் வலது கையை மட்டும்தான் உபயோகிப்பேன்! ஒரு கோப்பையைக்கூட இடக்கையால் தூக்க முடியாது’ என்று சிறு வயதில் நான் பெருமை கொண்டிருந்தேன். எல்லாம் வலக்கரத்தின் மகிமையைப் பிறர் சொல்லக் கேட்டதால்தான்!

    ஆனால், நீந்தக் கற்கும்போது அப்பழக்கத்தால் அனர்த்தம் விளைந்தது. உடல் ஒரு பக்கமாகச் சாய்ந்தது. மிகவும் பிரயாசைப்பட்டு இடது கையைச் சுழற்ற வேண்டியிருந்தது. சில நாட்களிலேயே, `நீந்தினால் சுறுசுறுப்பு வருகிறதே!’ என்ற ஆச்சரியம் எழுந்தது. மூளைக்குப் பயிற்சி கொடுக்கிறோம் என்பது அப்போது புரியவில்லை.

    நீச்சல் மட்டுமின்றி, நடைப்பயிற்சியும் மூளையைச் சுறுசுறுப்பாக்கும்.

    வயோதிகர்கள் பூங்காவிலோ, கோயிலிலோ, கடைவீதிகளிலோ தம்மை ஒத்த பிறருடன் உரக்கப் பேசி மகிழ்வதைப் பார்க்கலாம்.

    `சாயந்திரம் ஆனா, எங்க வீட்டுக்காரர் ஒரு கைத்தடியோட வாக்கிங் போயிடுவார்!’ என்று ஏளனமாக ஒரு மூதாட்டி சொன்னார். நடப்பது, பிறருடன் பேசுவது இரண்டுமே மன இறுக்கத்தைக் குறைக்கும் என்று அவருக்குப் புரியவில்லை.

    உடல் உபாதைகளைப்பற்றியோ, `இனி என்ன இருக்கிறது! நம் காலம் முடிந்துவிட்டது!’ என்றோ நினைத்து வருந்தாது, ஆக்ககரமாக நடக்கிறாரே என்று மகிழ்ச்சிகொண்டிருக்கலாமே!

    உட்கார்ந்த நிலையில் காலை ஆட்டுவது

    படிக்கவோ, கணினிமுன் உட்கார்ந்து விளையாடவோ ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருக்கும் சிறுவர்கள் காலை ஆட்டியபடி தம் வேலையைக் கவனிப்பார்கள்.

    `இது என்ன கெட்ட பழக்கம்?’ என்று திட்டு வாங்கினாலும், அவர்கள் அப்படியே செய்துகொண்டிருப்பார்கள்.

    இயல்பாகவே அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது, புத்தகம் படிப்பது, காலுக்குப் பயிற்சி கொடுப்பது அனைத்துமே மூளையை அயராது வேலை செய்ய வைக்குமென்று. இப்பழக்கத்தால் ஞாபகசக்தி பெருக வாய்ப்பிருக்கிறது.

    குறிப்பிட்ட இடத்துக்கு அனுதினமும் ஒரே வழியில் நடக்காது, வெவ்வேறு வழிகளில் நடக்க முயற்சித்தால், சிறிது யோசிக்க வேண்டியிருக்கும், அல்லவா? அதுவும் கற்பனை சக்தியையும், பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் ஆற்றலையும் பெருக்குகிறது.

    `உங்கள் நாட்டிலிருந்து வரும் நகைகள் எப்படி அவ்வளவு துல்லியமான வேலைப்பாடுடன் அமைந்திருக்கிறது? என்று நான் கேட்டபோது, என் கொரிய நண்பர் தெரிவித்த செய்தி:

    சாப்பிடும்போது, ஓரிரு அங்குல நீளமே கொண்ட மிகச் சிறிய “சாப் ஸ்டிக்” பயன்படுத்துவார்களாம் அந்நாட்டவர்கள். அதனால் அவர்கள் நுண்ணிய கைவேலைகளில் சிறந்திருப்பார்கள்.

    கை, கால், கண் ஆகியவை மூளையை சுறுசுறுப்பாகவே வைத்திருக்க வழி செய்கின்றன. சரி, பிற புலன்களுக்கு எப்படி பயிற்சி அளிப்பது?

    `மூக்கிற்கும், நாக்கிற்கும் பயிற்சியா!’ என்று அயர வேண்டாம். கண்ணை மூடிக்கொண்டு, இன்னொருவரை உங்கள் மூக்கின் அருகே ஒரு சாமானை, அல்லது உணவை கொண்டுவரச் சொல்லுங்கள். அது என்னவென்று கண்டுபிடிக்க முடிகிறதா? (பள்ளியில், விஞ்ஞான பாடத்தின்போது இந்தப் பரிசோதனையைச் செய்யச் சொல்வதுண்டு).

    எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் தேகப்பயிற்சி ஒரு பாடமாக அமைந்திருக்கிறது. காலையில், அன்றைய தினப் பாடங்கள் ஆரம்பிக்குமுன்னர் யோகா கற்றுக்கொடுப்பதும் உண்டு. மூளை சுறுசுறுப்பாக, எவ்வித இறுக்கமுமின்றி இயங்க, மாணவர்கள் தூங்கி வழியாமல் இருக்கத்தான் இப்பயிற்சிகள். இதன் முக்கியத்துவம் புரியாது, பலரும் அரைமனதுடன் ஈடுபடுவார்கள்!

    “நான் ஒரு பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக இருந்தபோது, மாணவர்கள் ஒளிந்துகொண்டு விடுவார்கள். அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கவே நேரம் போய்விடும்!” என்று என் சக ஆசிரியர் ஒருவர் அயர்ச்சியுடன் கூற, எல்லாரும் சிரித்தோம்.

    வயது முதிர்ச்சியால் உபாதைகள்

    அறுபது வயதுக்குமேல், பெண்மணிகளுக்கு ஆர்தரைடிஸ் வருகிறது. இடுப்பு, முழங்கால், பாதம் எல்லாவற்றிலும் வலி உயிர் போகும். `நான் குண்டாகக்கூட இல்லை. இருந்தாலும் காலில் பொறுக்க முடியாத வலி!’ என்று புலம்பிப் பயனில்லை.

    நாம் அதிகம் பயன்படுத்தாத, அல்லது மிகையாகப் பயன்படுத்தும் எந்தப் பாகமும் விரைவில் வலுவிழந்துபோகும். இள வயதினர்களாக இருந்தாலும், கணினிமுன் நீண்ட நேரத்தைக் கழிப்பவர்களுக்கு தோள் மற்றும் மணிக்கட்டில் பொறுக்க முடியாத வலி ஏற்படுகிறது. அந்தந்த பாகங்களுக்கு உரிய பயிற்சி உண்டு.

    `பள்ளி நாட்களிலேயே நான் உடற்பயிற்சி என்றால் ஓடி ஒளிவேன். இப்போது யார் செய்வார்கள்!’ என்பவர்களுக்கு விமோசனமே கிடையாது.

    வலியால் மன இறுக்கம் அதிகரிக்க, வலியை மறக்க, தங்களுக்குக் கீழ் இருக்கும் அபாக்கியவான்களை ஓயாமல் சாடுவது என்ன நியாயம்?

    இசையைச் செவிமடுப்பதன்மூலம் அமைதியை நாடலாம். நம்மைச் சிரிக்கவைக்கும் திரைப்படங்கள், புத்தகங்கள் ஆகியவைகளும் அமைதியை அளிக்கவல்லன.

    தனிமையில் இனிமை காண முடியாதவர்கள் பிறருடன் கலந்து பழக, வாழ்க்கையில் பிடிப்பு வரும்.

    சமீபத்தில் ஒருவர் தினசரியில் எழுதியிருந்தது: `நான் மன இறுக்கத்தால் அவதிப்பட்டேன். பிறருக்கு உதவி செய்தால், அது குறைந்துவிடுகிறது. `நம்மாலும் பிறருக்கு உதவி புரிய முடிகிறதே!’ என்று உணரும்போது, மனம் உற்சாகமாகிவிடுகிறது’.

    உடற்பயிற்சியா, உதவியா?

    இரண்டுமே அவசியம்தான். உடல் திடகாத்திரமாக இருந்தால்தானே பிறருக்கு உபத்திரவம் அளிக்காது, உதவியாக இருக்க முடியும்?

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – 101

    நிர்மலா ராகவன்

     

    `விட்டுக்கொடுப்பதும் அதிகாரம் செலுத்துவதும்

    அவனைப் பார்த்தால் இருபத்து நான்கு வயதுபோல் தெரியவில்லையே! சின்னக்குழந்தைமாதிரி அல்லவா நடந்துகொண்டான்?!’

    `பாட்டியிடம் வளர்ந்த பிள்ளை அவன்!’

    `ஓ! மேலே சொல்லாதீர்கள். புரிகிறது’.

    இந்த உரையாடலில் குறிப்பிடப்பட்ட இளைஞன் இந்திரன். அவனது நடத்தையைக் கண்டு அதிசயப்பட்டு என்னிடம் விசாரித்தவர் ஒரு மருத்துவர்.

    பாட்டி, தாத்தாவைவிட எந்தக் குழந்தையும் மிகச் சிறியதுதான். அதற்காக, `பாவம், குழந்தை!’ என்று விட்டுக்கொடுத்துக்கொண்டே இருந்தால் இப்படித்தான் ஆகிவிடுகிறது.

    இந்திரன் தான் தனக்காகச் செய்ய வேண்டிய வேலைகளிலிருந்து தப்புவதற்காக நெளிந்து, குழைவான். பாட்டிக்கு மனம் இளகிவிடும். தானே அதைச் செய்துமுடிப்பாள்.

    அவன் என்ன தவறு செய்தாலும், `சின்னப்பையன்! அவனுக்கு என்ன தெரியும்!’ என்று உடனே மன்னிப்பு கிடைத்துவிடும்.

    இப்படி வளர்ந்தவனுக்கு பிறருடன் பழகத் தெரிநாது போயிற்று. எல்லாரும் அவனுக்கு விட்டுக்கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தான். பிற சிறுவர்கள் அவனுடன் விளையாட விரும்பாது ஒதுங்கிப்போனார்கள்.

    பதின்ம வயதில், இந்திரன் மனம்போனபடி நடக்க ஆரம்பித்தான். எது சரி, எது தவறு என்று தெரியவில்லை. யாரிடம் எப்படிப் பழகுவது என்று புரியாததால், `மரியாதை தெரியாதவன்!’ என்று பெயரெடுத்தான்.

    அவனைப்போன்ற பிறரிடம் பழகி, தீய நடத்தை கொண்டவனாக மாற, `எவ்வளவு அருமையாக வளர்த்தேன்!’ என்று அவனுடைய பாட்டி வருந்தினாள், அதுதான் தான் செய்த தவறு என்று புரியாது.

    ஒருவன் பெரியவன் ஆனதும் எப்படி நடக்கவேண்டுமோ, அக்குணங்களைச் சிறு வயதிலேயே புகட்டவேண்டியது அவசியம்.

    `நீ இப்படி நடந்தால், அவர்களுக்குப் பிடிக்காது,’ என்று பிறர் வீட்டுக்குப் போகுமுன்னர் அவனை யாரும் எச்சரித்து வளர்க்கவில்லை. `அங்கே உரக்கப் பேசக்கூடாது. அவர்கள் வீட்டுச் சாப்பாடு நன்றாக இல்லையென்றாலும் வாயைத் திறக்காதே! அரைமணிக்கொருமுறை, `காப்பி!’ என்று அதிகாரம் செலுத்தாதே! கோபம் வந்தாலும் வெளியே காட்டாதே! மரியாதையாக இரு!’ என்று பலவாறாக அறிவுரை கூறப்பட்டு வளர்ந்த குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னை கிடையாது.

    கதை

    ஒரு வயதாக இருந்த பேரனுடன் நான் எங்கோ போயிருந்தபோது, ஒருவர் என்னிடம், “நீங்க செல்லம் குடுத்துக் கெடுக்கறீங்களாக்கும்!” என்றார், விளையாட்டாக. உடனே, நான் தப்பாக நினைத்துக்கொள்ளப்போகிறேனோ என்று, “எங்க வீட்டில அப்படித்தான் நடக்குது!” என்று சேர்த்துக்கொண்டார்.

    நான் சிரித்தபடி, “நானில்லை, என் பெண்தான் அப்படி நடக்கிறாள்,” என்றேன்.

    பக்கத்திலிருந்தவரிடம், “Very strict teacher!’ (மிகவும் கண்டிப்பான ஆசிரியை) என்று சிலாகித்தார்.

    தகுந்த வளர்ப்புமுறை இல்லாததால் எவரிடமும் மரியாதையற்று, அல்லது மிகவும் பயந்த சுபாவமாக ஆகிவிடுகிறார்கள் சிறுவர்கள். ஆசிரியத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்குத் தம் குழந்தைகளும் பிறர் குறை கூறும்படி அம்மாணவர்கள்போல் ஆகிவிடுவார்களோ என்ற அச்சம் எழுந்துவிடுகிறது. அதனால், அளவுக்கு அதிகமாகவே கண்டிப்பாக இருப்பார்கள்!

    ஆனால், எல்லா ஆசிரியைகளும் இப்படி நடப்பதில்லை.

    `என்னைச் சிறுவயதில் மிகவும் கண்டிப்பாக வளர்த்தார்கள். பெரியவர்கள் முன்னால் நிற்பதற்கே நடுங்குவேன். அதனால், இப்போது என் மகளும் அப்படிக் கஷ்டப்படக்கூடாது என்று அவளை வளர்த்திருக்கிறேன்!’ என்பாள் கமாரியா. இதை அவள் பெருமையுடன் சொல்லவில்லை. ஏனென்றால், கடைசிக்குழந்தையான அவள் மகளுக்கு – அளவுக்கு மீறிய செல்லத்தினால், சுதந்திரத்தினால் — யாருக்கும் மரியாதை கொடுத்து நடக்கத் தெரியவில்லை. எதிர்த்துப் பேசுவாள். சக ஆசிரியைகளிடமிருந்து ஒரே புகார் வர, கமாரியாவுக்கு வருத்தம் மிகுந்தது. பெண்ணை எப்படி அடக்குவதென்றும் தெரியவில்லை.

    குழந்தைகள் ஒழுங்காக வளர சில வழிமுறைகளைச் சிறு வயதிலிருந்தே சொல்லிக்கொடுக்க வேண்டியது அவசியம். அவை:

    1) நிலைமையைப் புரிந்து நடப்பது

    2 )உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது

    3) பிரச்னைகள் எழுந்தால், அவைகளுக்குப் பொருத்தமான தீர்வைக் கண்டுபிடித்து, அதன்படி நடப்பது.

    இக்கட்டில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க எந்த வயதானாலும், ஒரு புதிய சூழ்நிலையில் பிறருடன் எப்படிப் பழகுவது என்று புரியவேண்டும். இருப்பினும், நம்மை அளவுக்கு மீறி துன்புறுத்துபவர்களின் தொடர்பை அறுத்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

    கதை

    நான் ஆசிரியப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, வள்ளி என்பவள், `நான் முதுகலைப்பட்டம் பெற்றிருக்கிறேன், மந்திரி எங்கள் குடும்ப நண்பர்,’ என்றெல்லாம் ஒரேயடியாக அலட்டிக்கொள்வாள். அவளைப்போலவே, சிற்றூரிலிருந்த வந்திருந்த சிலர் அவளைத் தலைவியாக ஏற்றனர். அவள் சொற்படிதான் எல்லாரும் நடக்கவேண்டும் என்று மிரட்டுவது அவள் வழக்கம்.

    அந்த சர்வாதிகாரம் பிடிக்காது, நான் மட்டும் அவளிடமிருந்து விலகிப்போனேன். வள்ளிக்கு ஒரே ஆத்திரம். காரணமின்றி என்னிடம் சண்டை பிடிக்க ஆரம்பித்தாள். இறுதிவரை நான் பொறுமை இழக்காமல் அவளிடம் பேசியது அவளுடைய ஆத்திரத்தை அதிகப்படுத்த, ஒரு சமயம் ஒரேயடியாக இரைந்தாள். வேறொருவர் வந்து அவளை விலக்கும்படி நிலைமை மோசமாக ஆயிற்று!

    மனம்போனபடி எல்லாரையும் நடத்தலாம் என்று எண்ணி நடந்தது வள்ளி செய்த தவறு. உணர்ச்சிகளை அடக்கத் தெரியாததால் வந்த வினை. ஒருவருடைய நட்பு வேண்டுமானால் உதவிக்கரத்தை நீட்டினாலே போதுமே! அதிகாரமும் அலட்டலும் எதற்கு?

    இப்படி நடக்காமலிருக்க, சிறு வயதினரை பலர் கூடும் இடங்களுக்கு அழைத்துச் செல்கையில், `அவர் எப்படி சந்தோஷமா நடக்கிறார், பார்!’ `பொம்மையை அந்தக் குழந்தை எப்படி உற்றுப் பார்க்கிறது, வேறு எந்த நினைப்பும் இல்லாமல்!’ என்று எதிர்ப்பட்டவர்களைக் காட்டி விளக்குவது பிறரது உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள வழிவகுக்கும்.

    “பதின்ம வயதினர் தம் வயதொத்தவர்களுடன்தான் வெளியில் போகப் பிரியப்படுகிறார்கள், அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டு நடப்பதால்தான் கெட்டுப்போகிறார்கள்!” பெரியவர்களின் புகார்.

    இதைப்பற்றி நான் விசாரித்தபோது, `எங்கள் தந்தையுடன் வெளியில் போனால், அங்கே இங்கே திரும்பாமல், அவர் பின்னாலேயே நடக்கவேண்டும் என்கிறார்! அவரது பின்புறத்தையேதான் பார்த்தாகவேண்டும்!’ என்று அலுத்துக்கொண்டாள் ஒரு மாணவி.

    பிற மாணவ மாணவிகளும் அவளை ஆமோதித்துத் தலையாட்டினார்கள்.

    `நான் சொல்கிறபடியே நட!’ என்று மிரட்டினால், முதலில் பயந்திருப்பவர்கள்கூட ரகசியமாக பெற்றோருக்குப் பிடிக்காத காரியத்தைச் செய்வார்கள். அதற்காக தண்டித்தால் விவகாரம் முற்றும். அப்பா கத்த, மகனும் கத்த, செய்யக்கூடாத காரியத்தில் பற்று அதிகமாகிவிடும் அபாயம் உண்டு.

    கதை

    எட்டு வயது மகன் தாயின் சம்மதத்துடன் தன்னுடைய I pad-ஐக் கையில் எடுத்துக்கொண்டு, பெற்றோருடன் காரில் நீண்ட பயணம் செய்யப் புறப்பட்டான்.

    சில நிமிடங்கள் கழித்து, “போதும் விளையாடியது. மூடு,” என்றாள் தாய்.

    மும்முரமாக விளையாடிக்கொண்டிருந்த பையன் காதில் அது விழவில்லை.

    அவளுடைய குரல் ஓங்கிக்கொண்டே போயிற்று. அவனும் எதிர்த்துக் கத்தினான்.

    தாய் ஒரேயடியாக மிரட்ட, “இந்தா!” என்று குரலில் வெறுப்புடன், அவள்மேல் தன் விளையாட்டுச்சாமானைத் தூக்கி எறிந்தான்.

    “ஒனக்கு இருக்கு, வீட்டிலே!” என்று தாய் கறுவினாள். நாங்கள் சிலரும் காரில் இருக்க, பிறர்முன் மகன் தலைகுனிய வைத்துவிட்டானே என்ற அவமானம் அவளுக்கு.

    இந்தச் சூழ்நிலையை எப்படித் தவிர்த்திருக்கலாம்?

    `காரில் போகும்போது, ஆடும். வெகு நேரம் ஒன்றையே உற்றுப் பார்த்தால் தலை வலிக்கும். கண்ணும் கெட்டுவிடும்,” என்று முதலிலேயே எச்சரித்துவிட்டு, `இவ்வளவு நேரம்தான் பார்க்கலாம். நான் சொல்கிறபோது நிறுத்திவிட வேண்டும்,’ என்று ஒரு வரையறை வகுத்திருக்க வேண்டும்.

    அவள் தெளிவாக, கண்டிப்பாக முதலிலேயே விளக்காது, தன்னை மகன் மதிக்கவில்லையே என்று ஆத்திரப்படுவது என்ன நியாயம்?

    ஒரு குறிப்பிட்ட செயலுக்கான தண்டனை எப்போதும் ஒரேமாதிரி இருக்கவேண்டும். சில முறை திட்டுவது, பல முறை அலட்சியம் செய்வது என்பது சிறியவர்களைக் குழப்பத்திற்குத்தான் ஆளாக்கும்.

    உடற்குறையுள்ள குழந்தைகளையும் இதே கண்டிப்புடன் வளர்ப்பதுதான் சரியான முறை. பரிதாபப்பட்டு, அல்லது குற்ற உணர்ச்சியுடன், அவர்கள் என்ன செய்தாலும் வளர்ப்பவர்கள் பொறுத்துப்போகலாம். வளர்ந்தபின், உலகமும் அவர்களை அப்படி நடத்தவேண்டும் என்று எதிர்பார்க்க முடியுமா?

    Share
  • விருந்தோம்பலுக்கு ஒரு பாலம்

    நிர்மலா ராகவன்

     

    எங்கள் பள்ளிக்கூடத்திற்கு நேர் எதிர் வீட்டில் அரசாங்கத்திற்குச் சொந்தமான வீட்டில் குடியிருந்தார்கள் பாகீரதி மாமியும், மாமாவும்.

    பள்ளிக்கூடம் மத்தியானம் ஒரு மணிக்கு முடிந்துவிடும். அப்போது மாமி தன் வீட்டு வாசலில் நின்றிருப்பாள், வெயிலைப் பொருட்படுத்தாது.

    கோலாலம்பூரில் கோயில், கல்யாணம் போன்ற இடங்களில்தான் புடவை உடுத்திய தமிழர்களைப் பார்க்கமுடியும், என் அம்மா உள்பட. மாமி புடவை அணிந்திருந்தது இனம்புரியாத உவகையை ஊட்டியது.

    ஒரு நாள், என்னைப் பார்த்து சிநேகிதமாகச் சிரித்தபடி, “ஒன் பேர் என்னம்மா?” என்று விசாரித்தாள். வாட்டசாட்டமான உடலுக்குத் தக்க பெரிய குரல். அதில் மென்மை இல்லை. ஆனாலும், மஞ்சள் பூச்சுடன் முகம் களையாக இருந்தது.

    பள்ளிக்கூடத்தில் ஆங்கிலம், மலாயைத்தவிர வேறு மொழிகளில் பேசக்கூடாது என்ற விதியால் நொந்திருந்த எனக்குத் தமிழைக் கேட்டவுடனேயே மாமியைப் பிடித்துப்போயிற்று.

    இரண்டு பஸ் மாற்றி நான் வீடு போய்ச்சேர ஒரு மணி நேரம் பிடிக்கும் என்று விசாரித்துவிட்டு, “வளர்ற வயசு. அத்தனை நேரமா பசியோட இருப்பே? வந்து ஒரு வாய் சாப்பிட்டுட்டுப் போ, ஷீலு!” என்றாள் உரிமையோடு. (என் பெயர் சுசீலா என்றுதானே சொல்லியிருந்தேன்?) பிறருடன் சுலபமாக நெருங்கிவிடும் வித்தை மாமிக்குத் தெரிந்திருந்தது.

    ஆயிரக்கணக்கானவர்களுக்கு விரைவாகத் தயாரிக்கவென நிறைய எண்ணையைக் கொட்டியிருப்பார் பள்ளி காண்டீனை நடத்திய ஆ சேக். (சீன மொழியில் மாமா). உப்புக்குப் பதில் சோயாவிலிருந்து தயார்செய்யும் கீசாப். நாள் தவறாது இதையே சாப்பிட்டுச் சாப்பிட்டு நாக்கு செத்திருந்தது. அதிகமாகப் பிகு செய்துகொள்ளாது மாமியின் வீட்டுக்குள் நுழைந்தேன்.

    சில வாரங்களில், எங்களில் சிலருக்குத் தினமுமே மாமி கைச்சாப்பாடுதான் என்று ஆயிற்று. ஒரு சாம்பார், கொஞ்சம் மோர். வெண்டைக்காய், கத்தரிக்காய், வாழைக்காய் என்று ஏதாவது ஒரு `இந்திய’ கறிகாயை காரசாரமாக வதக்கி வைத்திருப்பாள். அவ்வளவுதான். ஆனால், மாமி அன்புடன் பரிமாறும்போது அமிர்தமாக இருந்தது.

    “விசு வரவர சரியாவே சாப்பிடறதில்லே. சொதப்பறான்,” என்று கரிசனப்பட்டுவிட்டு, “சிகரெட் பிடிக்கறியாடா? அதான் பசி மந்தமாயிடுத்து!” என்று கண்டுபிடித்தாள்.

    அவன் முழுப்பெயர் விசுவலிங்கம். மாமிக்கோ, முதல் நாளிலிருந்தே அவன் விசுதான்.

    “ஐயோ! இல்லே மாமி!” என்று விசு மறுத்தபோது, எங்கள் முகத்தில் புன்னகை.

    “பொய்யாடா சொல்றே? படவா! அதான் நாத்தம் கொடலைப் பிடுங்கறதே!” என்று சொரசொரப்பான அவன் கன்னத்தை மாமி உரிமையுடன் கிள்ளியபோது, நாங்கள் எல்லாரும் உரக்கச் சிரித்தோம்.

    விசு வெட்கத்துடன் நெளிந்தான்.

    “தினமும் நாலஞ்சு தமிழ்ப்பிள்ளைங்களுக்குச் சோறு போடற அந்த நல்லவங்க யாரு?” என்று அதிசயித்த அம்மாவுடன், அப்பாவும் ஒரு நாள் வந்திருந்தார்.

    மாமாவுக்கு அரசாங்கத்தில் ஏதோ சிறிய வேலை. அதனால் அவருக்கு அளிக்கப்பட்டிருந்த வீடும் சிறியது. விசாலமான மனதுள்ள மாமி வீட்டுக்குள்தான் இருந்தாள். பூஜை அறையில் மணியடிக்கும் ஒலி கேட்டது.

    `ஓ, இன்று வெள்ளிக்கிழமை இல்லை?’ என்று என் யோசனை போயிற்று. அன்று மாணவ மாணவிகளும், ஆசிரியர்களும் தொழுகைக்குப் போகவென பள்ளிக்கூடம் முன்னதாகவே முடிந்துவிடும்.

    ஐந்து நிமிடங்கள் பொறுத்து மாமி வந்தாள், பக்திப்பழமாக. நெற்றி நிறைய விபூதி, குங்குமம். தலையில் கொஞ்சம் மல்லிகைப்பூ. ரவிக்கை இல்லை. புடவை மட்டும்தான். என்னுடன் நின்றிருந்தவர்களைப் பார்த்து முக மலர்ச்சியுடன், “வாங்கோ, வாங்கோ,” என்று வாயார வரவேற்றாள். “பூஜையிலிருந்தேன்,” என்று மன்னிப்பும் கேட்டுக்கொண்டாள்.

    எனக்குப் பெருமையாக இருந்தது.

    சிறிது பொறுத்து, அம்மா விஷயத்துக்கு வந்தாள். “எங்க மகளுக்கு நீங்க தினமும் சாப்பாடு போடறீங்களாம். அது சரியில்லே. நீங்க ஏதாவது வாங்கிக்கணும்,” என்று தன் கைப்பையைத் திறக்கப்போனாள்.

    “மொதல்லே பையை மூடுங்கோ,” என்றாள் மாமி, அதட்டலாக. “படிக்கிற குழந்தைகளுக்கு சாப்பாடு போடறதால நான் ஒண்ணும் குறைஞ்சு போயிடமாட்டேன். அதிதிக்குப் பண்றது தேவர்களுக்குப் பண்றதுக்குச் சமானம்னு சொல்லி வெச்சிருக்கா! பாருங்கோ,” என்று ஓர் ஆன்மிகப் புத்தகத்தைப் பிரித்தாள்.

    நாங்கள் திரும்பும் வழியில் அம்மா, “இந்தக் காலத்தில இப்படியும் ஒத்தங்க!” என்று அப்பாவிடம் கூறி ஆச்சரியப்பட்டாள்.

    “ஒனக்கு ஒலகம் புரியல, ஜானு. ஆதாயமில்லாம யாரும் எந்தக் காரியமும் பண்ணமாட்டாங்க!” என்றார் அப்பா, வரண்ட குரலில்.

    என்ன ஆதாயம்? எனக்குப் புரியத்தானில்லை. ஒவ்வொரு நாளும் பள்ளிக்கூடத்தில் நடந்தவைகளையெல்லாம் நாங்கள் மாமியிடம் கூற, சிரித்தபடி கேட்பாளே, அதுவா?

    தனியாக இருக்கையில், அப்பா என்னிடம் கேட்டார் மாமாவைப்பற்றி.

    மாமா யாருடனும் அதிகம் பேசமாட்டார், வீணையை வைத்துக்கொண்டு தன் அறையிலேயே இருப்பார், இந்த வருடம் வேலையிலிருந்து ஓய்வு பெற்றதும், வாடகை வீட்டுக்குப் போய்விடுவார்கள் என்று எனக்குத் தெரிந்ததை ஒரே மூச்சில் கொட்டினேன்.

    `ஏழைக்குடும்பத்திலே பிறந்துட்டேனே, என்ன செய்யறதுடி, ஷீலு! இரண்டாந்தாரமா வாக்கைப்பட்டேன். `வயசானவரா இருந்தா என்ன, பணக்கார நாடு! நம்ப பாகீரதி அமோகமா இருப்பா!’ அப்படின்னா எல்லாரும். ஏண்டி, நான்தான் கேக்கறேன், பணக்கார நாடா இருந்தாப்போல அங்கே இருக்கிற எல்லாருமே பணக்காரான்னு ஆயிடுமா?” என்று பொரிந்துவிட்டு, “மாமாவுக்கு வீணைதான் பொண்டாட்டி! நான் வெறும் சமையக்காரிதான்!’ என்று பெருமூச்சுடன் மாமி என்னிடம் அந்தரங்கமாகக் கூறியதைச் சொல்லத் தோன்றவில்லை. பதினாறு வயதில் அதன் அர்த்தம் எனக்குப் புரியவுமில்லை.

    என் மன ஓட்டத்தைப் புரிந்துகொள்ளாது, “அந்தப் பொம்பளை நல்லவ இல்லே, சுசிம்மா!” என்றார் அப்பா ரகசியக்குரலில்.

    “ஏம்பா?”

    “`இந்தப் பக்கம் வரும்போது, நீங்க மட்டும் வாங்களேன்,’ அப்படின்னு அந்த …,” ஒரு கெட்ட வார்த்தையைப் பிரயோகித்தார். அவள் செய்யக்கூடாத செயல் ஒன்றைச் செய்ததாகவும் கூறினார். “அம்மாகிட்ட சொல்லிடாதே. என்னைச் சந்தேகப்படுவாங்க”.

    என்னால் நம்ப முடியவில்லை. அப்பா அதிகம் பேசமாட்டார். அதனால் நம்பாமலும் இருக்க முடியவில்லை.

    “சாமி பக்தியா இருப்பாங்களே?”

    “எல்லாம் வேஷம்!” ஏளனச்சிரிப்பு சிரித்தார். “ராத்திரியெல்லாம் தண்ணி அடிக்கிறவன் காலையில பட்டை பட்டையா விபூதி பூசிக்கிட்டு, வெள்ளையும் சொள்ளையுமா ஒலகத்தை ஏமாத்தற கதைதான் இதுவும்!”

    `எப்பவும் சைவச் சாப்பாடு போர்! யாருக்கு வேணும்?’ என்று விசுவும், நடராஜாவும் மாமி வீட்டுக்கு வருவதை நிறுத்திவிட்டதற்குக் காரணம் புரிந்தது.

    அதன்பின் நான் மாமி வீட்டுக்குச் சாப்பிடப் போகவில்லை. அம்மாவுக்குத் துரோகம் செய்யப்பார்க்கிறாள் என்று ஒரே ஆத்திரமாக இருந்தது.

    மாமி, “என்னடி, ஷீலு? இப்பல்லாம் நீங்க இந்த மாமியை மறந்துட்டேள்போல இருக்கே?” என்று கேட்டபோது, எங்கோ பார்த்தபடி, “பெரிய பரீட்சை வருதில்ல? நிறைய படிக்கணும்,” என்று சமாளித்தேன். எதற்காக உறவு முறை வைத்துக் கூப்பிடுவது!

    எதிர்வீட்டைக் காலி செய்துகொண்டு அவர்கள் போனபோதுகூட நாங்கள் யாரும் உதவிக்குப் போகவில்லை. காணாதமாதிரி இருந்துவிட்டோம்.

    என் கல்யாணத்திற்கு விசு வந்திருந்தபோது, முகம் சிரிப்பைக் காட்டினாலும், `பாவி! மாமியைப்பத்தி என்கிட்ட ஏண்டா அப்பவே சொல்லலே?’ என்று மனத்துள் திட்டிக்கொண்டேன்.

    கேட்டுத்தான் என்ன ஆகப்போகிறது! மாமியை இனி எங்கே பார்க்கப்போகிறேன்!

    ஒரு கச்சேரிக்கு கைக்குழந்தையுடன் போயிருந்தபோது, வயதானவர்களுக்கென்று பின்னால் போட்டிருந்த நாற்காலியில் மாமி உட்கார்ந்திருந்ததைப் பார்த்தேன்.

    “போய், பிள்ளையைக் காட்டிட்டு வா!” அம்மா பணித்தாள்.

    நான் தயங்கினேன்.

    “எதாச்சும் இருந்தாலும், சாப்பாடு போட்டிருக்காங்களே! போ,” என்றாள் அம்மா, வற்புறுத்தலாக.

    `எதாச்சும் இருந்தாலும்!’

    அதற்கு என்ன அர்த்தம்?

    அம்மாவை உற்றுப் பார்த்தேன். ஆமோதிப்பதுபோல் கண்களை ஒரு முறை சிமிட்டியபடி, மிக மிக லேசாகத் தலையாட்டினாள்.

    அப்படியானால், அம்மாவுக்கும் தெரியுமா? நான்மட்டும் ஏன் அவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறேன்?

    முன்பு சாதாரணமாகப்பட்டதெல்லாம் இப்போது பூதாகாரமாகத் தெரிந்தது. விசுவின் கன்னத்தைக் கிள்ளியது, நடராஜாவின் தோளை அணைத்தது, சதீஷ் வகுப்பில் முதல் என்று கட்டி அணைத்துப் பாராட்டியது – இப்படி எத்தனை சம்பவங்கள்!

    “போகலாம்மா. நவராத்திரி கச்சேரியிலே தரையில ஒக்காந்து கேக்க முடியலே,” என்று எழுந்தேன். கவனமாக, பின்பக்கம் திரும்பாது முன்வாசல்வழியாக மண்டபத்திற்கு வெளியே நடந்தேன்.

    வரிசை வரிசையான மேசைகளில் `பிரசாதம்’ என்ற பெயரில் பெரிய விருந்து தயாராக இருந்தது.

    “கச்சேரியும் பூசையும் முடிஞ்சுதான் சாப்பாடு,” என்றான் ஓர் இளைஞன். “ஊரிலேருந்து பால்கோவா தருவிச்சிருக்கோம். கொஞ்ச நேரம் இருங்களேன்!”

    “பரவாயில்லே,” என்று லேசாகப் புன்னகைத்தபடி நடந்தேன்.

    பசித்தவனுக்கு வெறும் ஊறுகாய் கிடைத்தாலே சற்று மகிழ்வதுபோல், அந்த விடலைப் பையன்களை யதேச்சையாகத் தொடுவதுபோல் தொட்டு, அற்ப சந்தோஷம் அடைந்திருக்கிறாள் பாகீரதி மாமி!

    என் நண்பர்களை அந்த வீட்டுக்குள் வரவழைக்க நான் ஒரு பாலமாகப் பயன்பட்டிருக்கிறேன்! நினைக்கவே கசப்பாக இருந்தது.

    “என்ன ஷீலு, இவ்வளவு சீக்கிரமா வந்துட்டீங்க? கச்சேரி நல்லா இல்லியா?” என்று வரவேற்ற கணவரிடம், “என்னை அப்படிக் கூப்பிடாதீங்கன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்?” என்று எரிந்துவிழுந்தேன்.

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (100)

    நிர்மலா ராகவன்

     

    உங்கள் மகள் ரேவதி வகுப்பில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, எல்லாரும் எழுதி முடித்தபின், அவசரமாகத் தன் வேலையைச் செய்து முடிக்கப் பிரயத்தனப்படுகிறாள்!’

    ஆரம்பப்பள்ளிப் பருவத்தில் தானும் அம்மாதிரி நடந்து ஆசிரியைகளிடம் திட்டு வாங்கியது நினைவுக்கு வந்தது தாய்க்கு.

    மகளிடம், `வகுப்பிலே இனிமே கவனி, என்ன?’ என்பதோடு நிறுத்திக்கொண்டாள்.

    குழந்தைகளோ, பெரியவர்களோ, எங்கோ யோசனை நிலைத்திருக்க, பகல் கனவு காண்கிறவர்கள். இப்படிப்பட்டவர்களுக்கு கற்பனை சக்தி அதிகம்.

    ஒழுங்குமுறை என்றால் சாமான்கள் எல்லாம் இருந்த இடத்தில் இருக்க வேண்டும், எடுத்தால் அதை அந்தந்த இடத்திலேயே திரும்பவும் வைக்கவேண்டும் என்று சிறு வயதிலேயே சொல்லிக்கொடுத்திருப்பார்கள்.

    ஒருவரது மேசையில் எல்லா சாமான்களும் வைத்த இடத்தில் வைக்கப்பட்டிருந்தால், அவரைப்பற்றி அறியலாம். இவருக்குப் பத்திரமாக இருப்பது முக்கியம். இவர் செய்வது அனைத்தும் பிறர் ஏற்றுக்கொள்ளும் வகையில்தான் இருக்கும்.

    ஒழுங்கீனமா?

    ரேவதி போன்றவர்களுக்கு அப்படி நடப்பது மிகக் கடினம். ஏதெனில், புதிதாக ஒரு விஷயத்தைப்பற்றி யோசிக்கையில், ஒழுங்காக எந்தப் பொருளையும் எடுத்த இடத்தில் வைக்கவேண்டும் என்பது இரண்டாம் பட்சமாகிவிடுகிறது.

    இது புரியாது, பிறர் அவர்களிடம் குற்றம் கண்டுபிடிப்பர்.

    கதை

    தன் சகோதரி வீட்டுக்குப் போன அருணா எப்போதுமே புத்தகமும் கையுமாக இருப்பாள். சில நிமிடங்களே உள்ளே போய்விட்டு வரும்போது, அவள் படித்த இடத்திலேயே வைத்துப்போன புத்தகம் மறைந்திருக்கும்.

    `புத்தகம் என்றால், அலமாரியில்தான் வைக்கவேண்டும். இது என்ன பழக்கம், நாற்காலியில் திறந்தபடி வைத்துவிட்டுப் போவது?’ என்று சகோதரி கடிந்துகொண்டாள். (அவளுக்குப் படிக்கப் பிடிக்காது என்பது சொல்லித்தான் தெரியவேண்டுமா?)

    ஓயாது படிப்பவர்களுக்கு ஒவ்வொரு முறையும் புத்தகத்தை அலமாரியிலிருந்து எடுத்து, பக்கத்தைப் பிரிப்பது நேரத்தை வீணடிக்கும் காரியம். சுவாரசியம் குன்றிவிடும். சிலர் அறைக்கு ஒரு புத்தகமாக வைத்துக்கூடப் படிப்பார்கள்!

    இம்மாதிரியானவர்கள் பிறரது அனுபவங்களிலிருந்து (அவை கதாபாத்திரங்களே ஆனாலும்) அவர்களிடமிருந்து புதிது புதிதாகக் கற்கிறார்கள். இதனால் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப மாற முடிகிறது. ஞாபகசக்தி குன்றாது வளர்வதோடு, எந்த விஷயத்திலும் ஊக்கம் காட்ட முடிகிறது. இவர்கள்தாம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பவர்களாக விளங்குகிறார்கள்.

    வாழ்வில் தினமும் எவ்வளவோ பிரச்னைகள், சிறியதும், பெரியதுமாக. ஒரு சாமானை எங்கே வைத்தோம் என்பதிலிருந்து, தினமும் பள்ளிக்கூடத்திற்கோ, அலுவலகத்திற்கோ நேரங்கழித்துப்போய், தண்டனை வாங்குகிறோமே என்பதுவரை நாம் மூளையைக் கசக்கிக்கொள்ள எவ்வளவோ நிகழ்வுகள்.

    கதை

    மண்ணெண்ணை அடுப்பைப் பற்றவைக்க தீப்பெட்டி பயன்படுத்திய காலம் அது. அவசரத்திற்குக் கிடைக்காது எங்காவது மறைந்திருக்கும். `ஒவ்வொரு சாமானையும் தேடவே பாதி நாள் போய்விடுகிறது!’ என்ற ஆயாசம் எழுந்தது எனக்குள்.

    அடுத்த முறை, `பாக்கெட்டில் வைத்திருக்கிறேன்!’ என்று ஞாபகமாகச் சொல்லிக்கொண்டேன். உரக்கவே.

    அது தேவைப்பட்டபோது, பாக்கெட் எங்கேயிருக்கிறது என்று சற்று யோசிக்க வேண்டியிருந்தது! வீட்டில் அணியும் சட்டையில் பாக்கெட் இருந்தது நினைவு வந்தது.

    `இங்கே வைக்கிறேன்!’ என்று இம்மாதிரி நாமே சொல்லிக்கொள்ளும் முறை எந்தப் பொருளையும் தேடி வீணடிக்கும் நேரத்தை மிச்சப்படுத்துகிறது. முக்கியமாக, மூக்குக்கண்ணாடி.

    பிரச்னை சிறியதாக இருந்தாலும் குழப்பத்தை விளைவிக்கிறது. பெரிய பிரச்னையாக இருந்தால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் தீர்வு காணமுடியும். அவை என்னவென்று ஆராய்வது முதல் படி.

    கதை

    இடைநிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த லீலா வழக்கமாக பள்ளிக்குத் தாமதமாகப் போவாள். தண்டனை: பள்ளி வளாகத்திலிருக்கும் குப்பைகளைப் பொறுக்கவேண்டும்.

    `பலரும்தான் தாமதமாகத்தான் வருகிறார்கள்!’ என்று முதலில் அலட்சியமாக அத்தண்டனையை ஏற்றாலும், முதலாவது பாடமாக அமைந்த கணக்கு கற்பிக்கப்படுகையில் அவள் வகுப்பில் இருக்க முடியாமல் போயிற்று. அதனால் எதுவும் புரியவில்லை.

    உரிய நேரத்துக்குள் எப்படி வருவது என்று யோசித்தாள். தனக்குத் தோன்றிய வழிகளை எழுதினாள்:

    நேரம் கழித்து எழுந்திருப்பது தவறு. ஏன் சீக்கிரம் எழுந்திருக்க முடியவில்லை?

    பதில்: இரவு நெடுநேரம் தொலைகாட்சி அல்லது கணினி விளையாட்டுகளில் ஈடுபட்டிருப்பதால்.

    மிகுந்த பிரயாசையுடன் தன்னை மாற்றிக்கொண்டாள் லீலா. அப்படியும் நேரத்தோடு செல்ல முடியவில்லை.

    காலையில், அன்றைய பாட புத்தகங்களை அடுக்கிவைத்துக்கொள்ளவும், சீருடையை இஸ்திரி செய்யவும் சிறிது நேரம் செலவழிந்தது. `இவைகளை முதல் நாளே செய்துகொள்ளலாமே!’ என்ற எண்ணம் உதிக்க, அதன்படி நடந்துகொண்டாள். ஆனாலும் கணக்கில் வாங்கும் மதிப்பெண்களில் மாறுதல் இல்லை.

    “கணக்குப் பாடத்தை சரித்திரம்போல சும்மா படித்தால் போதாது. எழுதிப் பழக வேண்டும்!” என்று ஒவ்வொரு நாளும், ஆசிரியை வகுப்பில் கூறியதைக் கடைப்பிடித்தாள் லீலா.

    “போட்ட கணக்கைப் பார்த்து, அதை அப்படியே எழுதவேண்டும். அதன்பின், மேலெழுந்தவாரியாக அதை ஒருமுறை பார்த்தாலே போதும். விளங்கிவிடும். எளிதில் மறக்காது. அதன்பின், புத்தகத்திலுள்ள அதேபோன்ற பிறவற்றைப் போடுவது கடினமாக இருக்காது. விஞ்ஞானமும் இப்படித்தான்,” என்றெல்லாம் ஆசிரியை விரிவாகக் கூறியிருந்தார்.

    பழக்கமில்லாமல் கடுமையாக உழைப்பதற்காகச் சிலவற்றைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கவேண்டும். விளையாட்டு, நண்பர்களுடன் ஊர்சுற்றுவது அல்லது வெட்டிப்பேச்சு என்று எத்தனை இல்லை! ஆனால், எப்பவும்போல் தண்டனை பெறாது, நினைத்ததற்கு மேலாகவே கணக்கில் தேர்ச்சி பெற்ற மகிழ்ச்சியில் லீலாவின் வருத்தமெல்லாம் மறைந்தே போயிற்று.

    வீட்டிலிருந்து பள்ளிக்கு பேருந்தில் பயணம் செய்யும் சமயம் கண்களை மூடிக்கொண்டதால் அவளுடைய கண்களும் ஓய்வுபெற்றன.

    இப்படி ஒவ்வொரு பிரச்னைக்கும் பலவித தீர்வுகளை யோசித்து, அதில் சிறந்ததாகப்படுவதைப் பின்பற்றினால் சாதிக்கமுடியும்.

    இவர்களிடமுள்ள குறைபாடு

    தம்மைச் சுற்றிலும் நடப்பவைகளில் அதிகக் கவனம் செலுத்துவது இவர்கள் குணம். ஆகவே, அவசியமில்லாத ஒலிகளால் பாதிக்கப்படுகிறார்கள்.

    பிறர் உணவருந்தும்போது, நாக்கை நீட்டிச் சாப்பிடுவது, விரல்களை நக்குவது, பெரிய ஒலியுடன் உறிஞ்சுவது ஆகியவை இவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கும். அதேபோல், பேனாவின் பின்புறத்தை அமுக்கி இடைவிடாத, ஒரேமாதிரியான ஓசை எழுப்புவது.

    பிறரிடமிருந்து வித்தியாசப்படுகிறவர்கள் எல்லாரும் அஞ்சத்தக்கவர்களோ, தீயவர்களோ அல்லர். இவர்கள் பிறரைவிடச் சீக்கிரமாகவே படுக்கப்போய்விடுகிறார்கள். உடனே தூங்கி விடுவார்கள் என்பதில்லை. இரவில்தான் யாருடைய தொந்தரவும் இல்லாது எதையாவது யோசிக்க முடியும்.

    இவர்கள் கற்பனை மிகுந்தவர்கள். `ஏன் இப்படி இருக்கிறது?’ `இதை எப்படி எளிதாக்கலாம்?’ என்று பலவாறாக யோசித்து, குழப்பத்தை உண்டாக்கும் நடைமுறைக்குத் தீர்வு காண்கிறார்கள்.

    சிலர் அவர்கள் காலத்தில் தமது வித்தியாசத்திற்காக கேலிக்கு ஆளாகி இருக்கலாம். அல்லது தண்டிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், தனக்குச் சரியென்று தோன்றிய பாதையிலிருந்து ஒருவர் வழுவாது இருந்ததால்தான் நிறைவு கிடைக்கும். வெற்றியும் அடையலாம்.

    கணினியைக் கண்டுபிடித்தவரின் கதை தெரியும்தானே?

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (99)

    நிர்மலா ராகவன்

    உண்மையாக இருத்தல்

    உண்மையைச் சொல். என் கதை நன்றாக இருக்கிறதா?’ அரும்பாடுபட்டு, ஒரு கதை எழுதி அது பிரசுரமும் ஆனபின், எழுத்தாளராகும் கனவுடன் பலரும் கேட்கும் கேள்வி இது.

    நானும் கேட்டேன், `நன்..றாக இருக்கு!’ என்று யார் கூறுவார்கள் என்று தேடி! ஒரு தோழி மாட்டிக்கொண்டாள். தன்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்று புரிந்து, அவளும் ஆமோதித்தாள்.

    `சும்மா சொல்றே!’ என்றாலும், பெருமையாகத்தான் இருந்தது. புகழவேண்டும் என்றுதானே அவளைத் தேடிப் பிடித்தேன்!

    `எப்பவோ வந்தமாதிரி இருக்கே!’ `நம்ப குடும்பத்திலே நடக்கறதையே எழுதியிருக்கா!’ என்றெல்லாம் நமட்டுச்சிரிப்புடன் உண்மையைச் சொல்பவர்களை நமக்குப் பிடிக்காமல் போகும்.

    புள்ளி விவரங்கள், நாம் காண்பது, கேட்பது எதிலுமே உண்மை கிடையாது. நுண்கலைகளில் பொய் உண்டு. ஆனால், அவைமூலம் உண்மையை அறியலாம்.

    கதை

    ஊர் சுற்றிப்பார்க்கவென்று தன் தூரத்து உறவினரான முரளியின் வீட்டுக்குப் போயிருந்தாள் பூரணி. போனவள் ஒரு மாத காலம் தங்கிவிட்டாள். அவளை எப்படிக் கிளப்புவதென்று முரளிக்கும், மனைவிக்கும் புரியவில்லை. வாக்குவாதம் நிகழ்ந்தது.

    `நான் என்ன ஹோட்டலா நடத்தறேன்! ஓயாம சமைக்க வேண்டியிருக்கு! நான் சமைக்கிறதிலேயும் ஆயிரம் லொட்டு லொசுக்கு!’ என்று மனைவி கத்த, `வந்தவளை எப்படிப் `போ’ன்னு சொல்றது!’ என்று முரளி தயங்கினார். இதன் சம்பந்தமாக அடிக்கடி அவர்களுக்குள் தகறாறு எழுந்தது.

    ஒரு வழியாக அங்கிருந்து புறப்பட்ட விருந்தாளி பூரணி, பார்ப்பவர்களிடமெல்லாம், `பாவம், நம்ப முரளி! பெண்டாட்டி பிசாசு! எப்பவும் கத்தறா!’ என்று சொல்லிக்கொண்டே இருந்தாள்.

    யாராவது அபூர்வமாக, `இதை ஏன் எங்கிட்ட சொல்றே?’ என்று முகத்தைச் சுளித்தால், `உண்மையைத்தானே சொல்றேன்!’ என்பாள் பூரணி.

    யாருக்கும் பயனில்லாத உண்மையை, பிறருக்குச் சங்கடம் விளைவிக்கும் உண்மையை, சொல்லாதிருப்பதே மேல். பூரணியிடம் ஒரு சமாசாரத்தையும் சொல்லக்கூடாது, ஒன்றைப் பத்தாக்கிவிடுவாள் என்ற பயம் அவள் உறவினருக்கு வந்தது. பொய்யைப் பரப்புகிறவர்கள் நீண்ட காலம் நிலைப்பதில்லை.

    நன்மை விளையும் என்றால், பொய்யே சிறந்தது. உடல் நிலை மோசமாக இருக்கும் ஒருவரைப் பார்த்து, `சீக்கிரமே குணமாகிவிடுவீர்கள்!’ என்று ஆறுதல் சொல்வதில்லையா, அதுபோல்தான்.

    கதை

    நான் அடிக்கடி போகும் வாசகசாலையில் இருந்த காதரீனுக்கு முப்பது வயதுக்குள்தான் இருக்கும். சில சமயம், குழந்தைமாதிரி அன்புடன் பழகுவாள். பிற சமயங்களில் மரியாதை இல்லாது கத்துவாள்.

    ஒரு முறை, என்னிடம் மன்னிப்பு கேட்கும் பாவனையில், “எனக்கு மனநிலை சரியில்லை. மருந்து சாப்பிடுகிறேன்,” என்றாள்.

    சில மாதங்களுக்குப்பின், அவளுக்குப் பதில் அவ்விடத்தின் சொந்தக்காரி மேரிதான் இருந்தாள்.

    “காதரீன் இல்லையா?” என்று கேட்டாள் புத்தகம் இரவல் வாங்க வந்த ஒருத்தி.

    “இப்போதெல்லாம் வருவதில்லை,” என்று பதில் வந்தது.

    காதரீனின் நிலைமை மோசமாகி, அவளை மருத்துவமனையில் சேர்த்துவிட்டார்கள் என்று எனக்குத் தெரியும்.

    “இப்போ எங்கே வேலை செய்கிறாள்?” (தெரிந்து இவளுக்கு என்ன ஆகப்போகிறது!)

    “தெரியாது!” வெடுக்கென்று சொல்லிவிட்டு, “என்னிடம் சொல்லவில்லை,” என்று சமாளித்தாள் மேரி.

    மேரி உரைத்தது பொய்தான். ஆனாலும் உண்மையைச் சொன்னால் அவதூறு பேசுவதுபோல் ஆகிவிடாதா! அவள் செய்தது சரிதான் என்றே தோன்றியது.

    உண்மையே பேசுகிறாளாம்! காந்தி என்ற நினைப்பு!

    மன நிறைவுக்கு உண்மை அவசியம். உண்மை எப்போதும் ஒன்றுதான். மாறுவது கிடையாது.

    தனக்குத்தானே உண்மையாக இருப்பவர்கள் பிறரிடமும் உண்மைதான் பேசுவார்கள். இக்குணத்தால் நிறைய எதிரிகளைச் சந்திக்க நேரலாம். இருந்தாலும் அவர்கள் மாற விரும்புவதில்லை.

    இப்படியெல்லாம் அவதிப்பட்டுக்கொண்டு எதற்காக உண்மையாக இருக்க வேண்டும் என்றுதான் பலருக்கும் தோன்றிப்போகிறது. தம்மைப்போல் இல்லாதவர்களைப் பழிக்கிறார்கள்.

    முகமூடி மனிதர்கள்

    தம்மைப்பற்றிய கசப்பான உண்மைகளை ஏற்க முடியாதவர்கள் பிறர் தம்மை எப்படி ஏற்பார்கள் என்பதற்கேற்ப நடக்கிறார்கள். அதாவது, மனிதருக்கு மனிதர் மாறுகிறார்கள்; வெவ்வேறு முகம் காட்டுகிறார்கள். அப்படிச் செய்தால்தானே பிறரது பாராட்டு கிடைக்கும்!

    கதை

    சங்கரின் இளமைக்காலம் பொறுக்க முடியாததாக இருந்தது. சிறு வயதிலிருந்தே, முடிந்தவரை வீட்டில் தங்காது, நண்பர்களுடன் பேசி, விளையாடுவதிலேயே கழிக்க ஆரம்பித்தான். அவன் போக்கிற்காகத் தந்தை தண்டிக்க, இன்னும் விலகிப்போனான். மகிழ்ச்சி என்றால் தெரிந்தவர்களுடன் ஓயாது, உரக்கப் பேசிச் சிரிப்பது என்று தோன்றிப்போயிற்று.

    பெரியவன் ஆனதும், தன்னைப்பற்றிச் சிறிதும் நினைக்க விரும்பாது, பிறருக்குத் தன் சக்திக்குமீறி உதவி செய்து, அவர்களது புகழ்ச்சியில் ஆறுதல் பெற்றான்.

    `இவன் சரியான ஏமாளி!’ என்று பலரும் சங்கரைப் பயன்படுத்திக்கொண்டனர், ஏமாற்றினர். வருத்தம் மிகுந்தது. யாரையும் நம்ப முடியவில்லை. இருந்தாலும், அவனால் மாற முடியவில்லை.

    பிறரிடம் ஒருவர் பொய்முகம் காட்டிவருவது தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வதுபோல்தான். தன்னையே புரிந்துகொள்ள முடியாது போய்விடும். இதனால் சுற்றி நடப்பவைகளையும் புரிந்துகொள்ள முடியாது போகிறது.

    அனுபவித்துச் செய்வது

    சமீபத்தில் ஒரு நடன நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். அடிக்கடி எழுந்த கைதட்டல் பலமாக ஒலித்தாலும், என் முகத்தில் ஏன் மகிழ்ச்சியுடன் கூடிய புன்னகை வரவில்லை என்று யோசித்தேன். பிறரை எப்படிக் கவர்வது என்று யோசித்துச் செய்ததுபோல் இருந்தது. அதாவது, நாட்டியமணியின் அங்க அசைவுகள் அவள் மனத்தின் ஆழத்திலிருந்து வரவில்லை! காதலியின் பாவத்தைக் காட்ட, அவளாகவே மாறும் திறமை, முயற்சி, இருக்க வேண்டும்.

    இதேபோன்று, இசை, நடிப்பு, எழுத்து எல்லாமே ஒருவர் அனுபவித்துச் செய்யும்போதுதான் பிறரிடமும் அதன் எதிரொலி எழும்பும். கதாபாத்திரமாக நம்மையே எண்ணிக்கொள்ளும்பொது அவர்களுடைய உணர்ச்சிகளை நடிப்பிலோ, எழுத்திலோ வடிக்க இயலுகிறது.

    நமக்கே உண்மையாக இருக்க

    `நான் ஏன் இப்படி இருக்கிறேன்?’ என்று கேட்டுக்கொண்டால், நமக்கு உண்மையான விடை கிடைக்கும்.

    `எனக்கு ஏன் வருத்தமாக இருக்கிறது?’ என்று உங்களையே கேட்டுப்பார்த்தால், உங்களை எது பாதிக்கிறது என்று புரியும். என்றோ நடந்தது இன்னமும் உங்களைப் பாதித்தால், அதைத் தாண்டி வரும் துணிவை வளர்த்துக்கொள்ளவேண்டும்.

    அறியாப்பருவத்திலிருந்தே பலவகைத் துயரங்களுக்கு ஆளாகியிருப்போம். காரணமில்லாமல் பெற்றோர் அல்லது ஆசிரியை தண்டித்தது, உறவினர் செய்த பாலியல் வதை, உற்ற நண்பரின் துரோகம் – இப்படி.

    நடந்து முடிந்ததை மாற்ற முடியாது என்ற நிலையில், தீமை இழைத்தவர்களை மன்னித்து, மறக்கலாம். `நான் என்ன, மகாத்மாவா?’ என்று கோபிப்பவர்களுக்கு: வேண்டாதவர்கள் நினைவை மானசீகக் குப்பை மேட்டில் சேர்த்துவிடலாம். அல்லும் பகலும் ஒருவரது நினைவு உங்களைக் கடுமையாகப் பாதித்தால் அதைப் போக்கும் வழி: பாறாங்கல்லில் அவரைக் கட்டி, கடலில் எறிந்துவிடுவதுபோல் கற்பனை செய்துகொள்ளுங்கள். மீண்டு வரமாட்டார். (இதெல்லாம் நான் எப்போதோ படித்து, பின்பற்றி, மனப்பாரத்தை இறக்கிவைத்த வழிகள்).

    அன்றாட வாழ்க்கையில் சுடுசொற்களாலும் செயல்களாலும் நம்மை வீழ்த்த நினைப்பவர்கள் பொறாமையால்தான் அப்படிச் செய்கிறார்கள். `நம் மீது குற்றம் இல்லையே,’ என்று தெளிந்தாலே போதும். அமைதி குன்றாது.

    இதேபோல், `மனம் லேசாக, மகிழ்ச்சியாக இருக்கிறதே, எப்படி?’ என்று கேட்டுக்கொள்வதும் நம்மை நாமே புரிந்துகொள்ள வழிவகுக்கும்.

    நான் ஒரு முறை அப்படி கேட்டுக்கொள்ள, நான் ஆசையாக நட்டுவைத்த செடியின் கிளை பிழைத்து, அதில் துளிர் விட்டிருக்கிறதுதான் காரணம் என்று புரிந்தது.

    சிறு குழந்தை முதன்முதலாக முகம் பார்த்துச் சிரிக்கும்போது, தவழும்போது என்று எத்தனை மகிழ்ச்சியூட்டும் நிகழ்வுகள் இல்லை நம் வாழ்வில்! இவைகளை விடுத்து, வேண்டாத நினைவுகளை ஏன் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்க வேண்டும்!

    தொடருவோம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (98)

    நிர்மலா ராகவன்

     

    உறவுகள் பலப்பட

    `கணவன்-மனைவியாகட்டும், ஒன்றாக வாழும் இரு ஆண்களாகட்டும், அவர்களது உறவைக் கண்டுபிடிக்க ஒரு வழி இருக்கிறது. பத்து நிமிடங்களுக்குள் அவர்களுக்குள் சண்டை வருகிறதா என்று பாருங்கள்!’ ஓர் உளவியல் நிபுணர் எனக்குத் தந்த குறிப்பு.

    இரு மனிதர்கள் நெருக்கமாக வாழ்ந்தால், சிறு சண்டை பூசல்களைத் தவிர்க்க முடியாது. இதனால்தான் ஓரிரு தலைமுறைகளுக்குமுன் தம்பதிகளைப் பிரித்து வைப்பார்கள் — ஆடி மாதம், கர்ப்பமாகி ஐந்தாம் மாதம் என்று ஏதேதோ சாக்கில்.

    சில தினங்களோ, மாதங்களோ அப்படிப் பிரிந்திருந்து, பிறகு புகுந்த வீட்டுக்கே ஒரு பெண் திரும்பி வரும்போது, மறைந்துபோன ஈர்ப்பு தம்பதிகளுக்குள் மீண்டும் தலைதூக்கும். சில காலமாவது நிலைத்திருக்கும்.

    பத்து நாட்களுக்குள் மீண்டும் ஏதாவது அபிப்ராய பேதம் வரலாம்.

    `குழந்தைகள்மேல் உனக்கு இருக்கிற அக்கறை எப்பவும் என்மேல் கிடையாது!’ என்று சாடுவான் கணவன்.

    இந்த வாக்கியத்தில் `எப்பவும்’ என்று இருப்பதைத் தவிர்த்தால் சண்டை பெரிதாக வளராது.

    `நீங்கள் மட்டுமென்ன? முன்பொருமுறை..,’ என்று மனைவி எதிர்த்து வாதாட இது வழி செய்துவிடுகிறது.

    இப்படி இருவரும் மற்றவரது குறைகளையே, அல்லது தமக்குப் பிடிக்காதவற்றையே, பெரிதுபண்ணிக் கொண்டிருந்தால், இல்வாழ்க்கையில் அமைதி ஏது?

    பணம் = அதிகாரம்

    குடும்பத்தில் வரவு செலவைக் கவனித்துக்கொள்ளும்வரைதான் தன் அதிகாரம் நிலைத்திருக்கும் என்று கணக்குப்போடுவார்கள் சிலர். துப்பாக்கி வைத்திருக்கும் ஒருவன் பத்து பேரைத் தன் அதிகாரத்திற்குள் கொண்டு வருவதில்லையா, அது போல!

    கதை

    மனைவி சம்பாதிப்பதை அப்படியே வாங்கிக்கொண்டுவிடுவான் அகிலன். அவள் கொடுக்க மறுத்தால், அவள் நடத்தையைக் கேவலமாகப் பேசுவான். அது பொறுக்காது, `கேவலம், பணம்தானே! தொலையட்டும்!’ என்று கொடுத்துவிடுவாள் தாராவும்.

    அகிலனின் அதிகாரத்தில், ஓயாத கட்டுப்பாட்டில், தாராவின் மன இறுக்கம் அதிகரித்தது.

    `என்னுடன் படித்தவன் என்மேல் உயிராக இருந்தான். அவன் கேட்டபோது, அவனையே கல்யாணம் செய்துகொண்டிருக்க வேண்டும்!’ என்று அவள் யோசனை போயிற்று.

    கணவன்மேல் அதிருப்தி, காழ்ப்பு இருக்கலாம். ஆனாலும், இத்தகைய எண்ணத்தால் என்ன பயன்? குழப்பம்தான் விளையும். காதலனாக இருப்பவன் கணவனானபின்பும் அப்படியே இருப்பான் என்று சொல்வதற்கில்லை. அதோடு, அவள்மேலும் குறை இருந்ததே! எதற்காக அவ்வளவு தூரம் விட்டுக்கொடுத்துப்போனாள்?

    விவாகரத்து செய்யலாமா என்று அடுத்த யோசனை வந்தது. புதிய பாதையில் இன்னும் என்னென்ன இடர்கள் இருக்குமோ, இருக்கிறதையே செப்பனிட்டுக்கொள்ளலாம் என்று தோன்றிப்போயிற்று. கணவனை மாற்ற முடியாவிட்டாலும், நாம் மாறலாமே என்ற ஞானோதயம் ஏற்பட்டது தாராவிற்கு.

    `நான் சம்பாதிப்பதை உங்களுக்கு எதற்குக் கொடுக்க வேண்டும்?’ என்று திமிறினாள்.

    இவளுடன் சண்டை போட்டு வெல்ல முடியாது என்று புரிந்துகொண்டான் அகிலன். `நமக்குள் என் பணம், உன் பணம்னு என்னம்மா வித்தியாசம்?’ என்றான் குழைவாக. அதிகாரம் நிலைத்திருக்க வேண்டுமானால் கட்டுப்படுத்தும் முறைகளை மாற்ற வேண்டும்.

    தாரா இணங்கவில்லை. மீண்டும் வாய்ச்சண்டை. இறுதியில், ஒரு மாதத்தில் மொத்த செலவு எவ்வளவு என்று உத்தேசமாகக் கணக்கிட்டு, அதை இருவருமாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று அவள் ஓர் உபாயம் கூறினாள்.

    அகிலனின் தந்தை மட்டுமே சம்பாதித்தபோது, அவரது கட்டுப்பாட்டில் குடும்பம் இருந்திருக்கலாம். ஆனால், காலம் மாற, மாற, அதற்கேற்ப மாறினால்தான் அமைதியோ, மகிழ்ச்சியோ தழைக்கும் என்றவரைக்கும் அவனுக்குப் புரிந்தது. புதிய ஏற்பாட்டிற்கு ஒத்துக்கொண்டான் – அரைமனதாகத்தான்!

    அதன்பின், இருவருக்குமே பொருளாதார சுதந்திரம் இருந்தது. மனைவியிடம் தன் தவற்றை ஒத்துக்கொண்டான்: “கணவனுக்கு மனைவி அடங்கி நடக்க வேண்டும், அவன் சொல்வதையெல்லாம் கேட்பவள்தான் நல்ல மனைவி என்று நினைத்திருந்தேன்!”

    (1981- ல், பிரிட்டிஷ் இளவரசி டயானா தன் கல்யாணத்தின்போது, `கணவருக்குக் கீழ்ப்படிந்து நடப்பேன்,’ என்று சபதம் செய்ய மறுத்துவிட்டதாகச் செய்தி வந்தபோது, அவளுடைய துணிச்சல் பெரும் புரட்சியாகக் கருதப்பட்டது).

    உடலுறவும் சோர்வும்

    உடல் சோர்வடைந்திருக்கும்போது, வேறு உறவில் எப்படி நாட்டம் போகும்? சீக்கிரமே படுத்துத் தூங்கிவிடுவது தாராவின் வழக்கமாக இருந்தது.

    `ஏதாவது நடந்தால், அதற்கு நான் பொறுப்பல்ல!’ என்று கூறிப்பார்த்தான் அகிலன்.

    `வெளியிலும் வேலை, வீட்டிலும் வேலை. எப்பவும் களைப்பாக இருக்கிறது!’ என்று தாரா அலுத்துக்கொண்டாள். கனமான வேலைகள் அவனுடையது, சமையல் அவள் பொறுப்பில் என்று பிரித்துக்கொண்டார்கள்.

    `வீட்டு வேலை மாறுதல் இல்லாமல், ஒரேமாதிரி இருக்கிறதே! இவ்வளவு சலிப்பைத் தருவதாக இருக்கும் என்று நான் நினைத்ததே கிடையாது!’ என்று ஆச்சரியப்பட்ட அகிலன் மனைவியைப் புரிந்துகொண்டான். `ஓயாமல் என்ன வேலை! இன்று வெளியில் போகலாம், வா!’

    வாரத்தில் ஒரு நாளாவது அவர்கள் தனித்து வெளியில் போனதால், நெருக்கம் அதிகரித்தது.

    நண்பர்களுடனேயே காலத்தைக் கழிப்பவர்கள், முகத்தைத் தூக்கிவைத்துக்கொள்ளும் மனைவியிடம், `என் முகத்தையே பார்த்துப் பார்த்து உனக்குப் போரடிக்கவில்லை?’ என்று விளையாட்டுப்போல் கேட்பார்கள்.

    ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரி இருப்பதால் ஏற்படும் சலிப்பைப் போக்க இருவருக்கும் பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஈடுபடலாம். புதிய இடங்களுக்குப் பயணம் செய்தால், மனம் புத்துணர்ச்சி அடையுமே!

    பேசும்போது கவனி

    வாய் திறந்து பழிக்காவிட்டாலும், சில செயல்கள் தாம்பத்திய உறவில் ஏமாற்றத்தை விளைவிக்கின்றன.

    மனைவி ஏதாவது சொல்லும்போது, நாளேடு, கைத்தொலைபேசி என்று ஏதாவது சாதனத்தில் மூழ்கி, `சொல்லு. காதில் விழுகிறது!’ என்பான் கணவன். இருந்தாலும், ஒருவர் பேசும்போது, கண்களைக் கவனித்துக் கேட்பது போலாகுமா?

    ஓருயிர், ஈருடல்?

    இது கேட்பதற்கு நன்றாக இருக்கலாம். ஆனால் இன்றைய நடைமுறைக்கு ஒவ்வாது. ஒவ்வொருக்கும் தனிப்பட்ட இலக்கு இருந்தால்தான் அவருக்கு நிறைவாக இருக்கும். இல்லாவிட்டால், எதையோ இழந்த உணர்வைத் தவிர்க்க முடியாது.

    இதற்காக, ஒரே குடும்பத்தில் இருக்கும் இருவர் வெவ்வேறு திசைகளில் பயணிக்க வேண்டுவது அவசியமில்லை. ஒருவரது தோற்றத்திலும் செய்கையிலும் மற்றவர் சிறிதளவு ஆர்வம் காட்டினாலே போதும்.

    இப்போது வேண்டாம்!

    `நான் சொல்வதை நீ அப்படியே கடைப்பிடித்து நடக்க வேண்டும்!’ என்று கணவர் சொல்வாரோ என்று பயந்து, படித்த பெண்கள் தற்காலத்தில் திருமணம் என்றாலே அஞ்சுகிறார்கள். முப்பது வயதுக்குமேல்தான் மணமுடிக்க இசைகிறார்கள் — நிறைய நிபந்தனைகளுடன். அதில் முக்கியமானது – கணவரது பெற்றோர் அவர்களுடன் சேர்ந்து இருக்கக்கூடாது.

    ஏன் தனிக்குடித்தனம்?

    கூட்டுக்குடும்பத்தில், `நான் செய்த தவற்றை நீங்களும் செய்துவிடக்கூடாது!’ என்று `நல்ல மனதுடன்,’ எந்தச் சிறிய காரியத்தையும் எப்படிச் செய்வது என்று சொல்லிக்கொடுத்துக்கொண்டே இருப்பார் ஒருவர். வயதும் அனுபவமும் இருப்பதாலேயே ஒருவர் தலைவராக முடியாது.

    அதைக் கேட்டு நடப்பவருக்கு ஆத்திரமும் குழப்பமும்தான் எழும். நாளடைவில் சுயமாக எதையும் செய்யும் ஆர்வமும் திறனும் அற்றுப்போகலாம்.

    அவரவர் காரியத்தை முடிந்த அளவுக்குச் சுயமாகச் செய்தால்தான் நிறைவாக இருக்கும். உதவி தேவையென்றால் மட்டும் பிறரை நாடலாம்.

    கல்யாணம் ஆனதால் மட்டும் ஒருவர் தன் தனிமனித சுதந்திரத்தை இழந்துவிட வேண்டுவதில்லை. அவ்வுணர்வு அளவு மீறினால்தான் பிரச்னை.

    Share
  • நடிக்கப் பிறந்தவள்

    நிர்மலா ராகவன்

     

    `அம்மா’ என்றாலே கதாநாயகிக்குப் பின்னால், இருபது, முப்பது பேருடன் ஏதோ ஒரு மூலையில் நடனமாடுபவள்தான் என் நினைவுக்கு வரும். அப்போதெல்லாம் நான் சூப்பிக்கொண்டிருந்த கட்டைவிரலை எடுத்துவிட்டு, கதாநாயகி செய்வதையெல்லாம் செய்துபார்ப்பேன்.

    சிரிப்புடன், `இது நடிக்கவே பிறந்திருக்கு! பெரிய நடிகையா வரும்!’ என்று அங்கிருந்தவர்கள் சிலாகிப்பார்கள். அம்மாவுக்கு அதுதான் டானிக். தன்னைத்தான் நடிகை என்று யாருக்கும் தெரியாமலே போய்விட்டது, மகளுக்கும் அதே நிலைமை வரக்கூடாது என்பதில் குறியாக இருந்தாள்.

    அவர்கள் வாக்கு பலித்தது. எல்லாருக்கும் அபிமானமான குழந்தை நட்சத்திரமாக ஒளிர்ந்தேன்.

    ஒன்பது வயதில் நான் வயதுக்கு மீறி உயர்ந்தபோது, எனக்குப் பெருமையாக இருந்தது. கலங்கியவள் அம்மாதான். போட்டி போட்டுக்கொண்டு என்னை ஒப்பந்தம் செய்ய வந்த திரைப்பட இயக்குனர்கள், `குழந்தைப் பாத்திரத்துக்குப் பொருந்தாது. பெரியவளாக இருக்கிறாளே!’ என்று ஒதுங்கிப்போனார்கள். அம்மாவின் கெஞ்சலுக்கு அவர்களில் யாரும் மசியவில்லை.

    மகளால் இனி குழந்தையாகத்தான் நடிக்க முடியாது, ஆனால் வளர்ந்த மங்கையாக நடிக்க முடியுமே என்று அம்மாவின் புத்தி குறுக்கு வழியில் போயிற்று.

    அரும்பாக இருந்த என் மார்புக்குள் எதையோ வைத்தார் மருத்துவர். எனக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. சிறு வயதிலிருந்தே, ` ஏம்மா எனக்கு மட்டும் உன்னைப்போல மார்பு பெரிசா இல்லை?’ என்று கேட்டவளாயிற்றே!

    அப்போது எனக்குத் தெரியவில்லை, நான் அம்மாவின் கைப்பாவையாய், நிரந்தரமாக மனதளவில் குழந்தையாகவே இருப்பேன் என்று. ஒரு குழந்தையைப் பருவ மங்கையின் உடலில் அடைத்தார்கள் என்பது புரியும் வயதா அது!

    பருந்தாக அலைந்த இயக்குனர்களின் கண்களுக்கு என் வளர்ச்சி தப்பவில்லை. அதிக சிரமமில்லாது என்னை நடிக்க வைக்கலாம் என்பது அவர்களுக்குத் தெரிந்த விஷயம். ஒரு காட்சியை விளக்கினால், அதை ஐந்து விதமாக நடித்துக் காட்டி, `உங்களுக்கு எது வேண்டும்?’ என்று கேட்கும் புத்திசாலி என்று பெயர் வாங்கியிருந்தேனே!

    `மரப்பாச்சிக்குப் புடவை சுத்தினாப்போல இருக்கு!’ என்று சில மாமிகள் முணுமுணுத்தாலும், திரைப்பட ரசிகர்கள் என்னை, என் சுட்டித்தனத்தை, அடிக்கடி மாறும் முகபாவங்களை முழுமனதாக ஏற்றுக்கொண்டார்கள். (இதெல்லாம் விமரிசகர்கள் எழுதியிருந்தார்கள் என்று அம்மா பெருமையுடன் படித்துக் காட்டியது).

    ஒரு நாளைக்கு இரண்டு ஷிஃப்ட். ஆனால், காமராவுக்கு முன்தான் நான் நானாக இருந்தேன். ஒவ்வொரு காட்சியிலும் வண்ண வண்ண ஆடைகளாக உடுத்தியபோது, எதையோ சாதித்த நிறைவு ஏற்பட்டது. (சிறு வயதில்கூட நான் பொம்மைகள் வைத்து விளையாடியதில்லை. `கடைக்குப் போகலாம், வரியா?’ என்று அம்மா என்னை எங்கும் அழைத்துப் போனதில்லை. பட்டும், பீதாம்பரமும் வாங்கித் தந்து, என்னை அழகு பார்க்கவில்லை. அதற்கெல்லாம் எங்கே நேரம்!)

    `முகத்தில் அவ்வளவாக முதிர்ச்சி இல்லையே!’ என்று பெரிய தயாரிப்பாளர்கள் தயங்கினார்களாம். அம்மா பயந்து, என் முகத்தில் எந்தெந்த பாகத்தை செப்பனிட முடியுமோ, அதையெல்லாம் சீர்படுத்தச் செய்தாள். கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் வாய்ப்புகள் வரும்போது, லட்சங்களைப்பற்றி யாராவது யோசிப்பார்களா!

    அம்மாவிற்கு லாபம் அளித்த ஒரே முதலீடு என் முகமாற்றம்தான். ஒன்றைப் பத்தாக்கலாம் என்று யாராவது ஆசை காட்டினால், உடனே நம்பி, மோசம் போகும் வர்க்கம் அம்மா. பொன்முட்டை இடும் வாத்தாக இருந்த நான் சம்பாதித்த கறுப்புப் பணமெல்லாம் அம்மாவின் பேராசையால் அழிந்துபோயிற்று.

    `இரவு பகலாக நான் உழைத்துச் சம்பாதித்த பணத்தை என்ன செய்கிறாய்?’ என்று கேட்கும் அறிவோ, துணிச்சலோ, நேரமோ எனக்கு இருக்கவில்லை. அம்மாதான் சகலமும்.

    `பத்திரிகைக்காரங்க எப்போ கல்யாணம்னு கேப்பாங்க. கலைத்துறைக்கே என்னை அர்ப்பணிச்சுட்டேன் அப்படின்னு சொல்லிடு!’ என்று அம்மா சொல்லிக்கொடுத்தாள். யார் யாரோ என் உடலைப் பயன்படுத்திக்கொண்டார்கள். அதையெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா, என்ன!

    என் வாய்ப்புகள் அதிகரித்தன. ஆனால், என் உடலில் இருந்த செயற்கையான பாகங்கள் அப்படியே மாறாது இருக்கவில்லை. முன்பு இருந்ததைவிட மோசமாக மாறின. மீண்டும் மீண்டும் அறுவைச் சிகிச்சை. வலி ஒருபுறமிருக்க, கண்ணாடியில் பார்த்துக்கொண்டபோது, எனக்கே என்னை அடையாளம் தெரியவில்லை.

    இப்படியே நாற்பத்தைந்து வயதை எட்டிவிட்டேன். என் இடத்தைப் பிடித்துக்கொள்ள சில அப்பாவிக் குழந்தைகள் விரைவாக பருவம் அடையும் வழிகளைத் தேடினர். எனக்கோ அக்காள், அம்மா போன்ற வேடங்கள்தான் கிடைத்தன. அதையும் சிறப்பாகத்தான் செய்தேன் என்று பத்திரிகைகள் பாராட்டின. என் கையிலிருக்கும் குழந்தையை என் கருவில் உருவாகி, அரைகுறையாக வெளியேற்றப்பட்டதாகவே பாவித்துக்கொண்டு, அன்பைப் பொழிவேன். ஆனாலும், படத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தவள் சில நிமிடங்களே தலைகாட்ட முடிந்தது அவமானமாக, வேதனையாக இருந்தது.

    என்னைப் பிஞ்சிலேயே பழுக்க வைத்ததன் விளைவுகள் விரைவிலேயே தெரிந்தன. என் குரலிலும் தோற்றத்திலும் அகாலமான முதுமை! பற்கள் ஆட ஆரம்பித்தன. சற்றே வளைந்த முதுகு. குரலிலும் நடுக்கம். வாய்ப்புகள் அறவே நின்றன. பத்து வயதிலிருந்தே என்னை அரவணைக்கக் காத்திருந்தவர்கள் ஒதுங்கிப்போனார்கள்.

    அதுவரை மிரட்டலாகவும், கொஞ்சலாகவும் என்னைத் தன்வழி நடத்திச்சென்ற அம்மாவும் மாறிப்போனாள். `கண்ணு’ என்றழைத்த நாக்கு இப்போது `சனியனே!’ என்றது.

    இதற்கா சின்னஞ்சிறு வயதிலிருந்தே அவ்வளவு கஷ்டப்பட்டேன்?

    நான் இழந்த குழந்தைப்பருவத்தை புகழும் பணமும் ஈடு செய்ய முடியவில்லையே! காலங்கடந்து வருத்தம் ஏற்பட்டது.

    மாரடைப்பை உண்டுபண்ணி, ஆனாலும் அதைக் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஏதேனும் வழி இருக்கிறதா என்று ஆராய்ந்து, அதைச் செயலிலும் காட்டினேன்.

    அம்மாவின் மரணம் என்னை எவ்வளவு தூரம் பாதித்துவிட்டது என்று காட்டிக்கொள்ள அன்ன ஆகாரமில்லாமல் மூன்று நாட்கள். நான் கடைசியாக நடித்தது அப்போதுதான்.

    ஆனால், நான் எதிர்பார்த்தபடி, எனக்கு நிறைவு கிட்டவில்லையே, ஏன்?

    எதிர்காலத்தை நினைக்கவே பயமாக இருந்தது. இனி யார் என்னை ஒவ்வொரு நிமிடமும், `இதை இப்படிச் செய், இந்தக் கேள்விக்கு இப்படிப் பதில் சொல்லு!’ என்று வழிகாட்டப்போகிறார்கள்?

    அடுத்த நாள்.

    `முன்னாள் கதாநாயகி … தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு உறுதுணையாக இருந்த தாயின் மரணத்தைத் தாங்கமுடியாமல் போனதுதான் காரணம் என்று நம்பப்படுகிறது!’ என்ற இரண்டே வாக்கியங்கள் தினசரி ஒன்றின் நான்காம் பக்கத்தின் ஒரு மூலையில் இடம்பெற்றிருந்தது.

    பலரும் அதைப் படிக்காது அசுவாரசியமாகப் பக்கங்களைப் புரட்டினாலும், சில மாமிகள், `இந்தப் பொண்ணுக்குத்தான் அம்மாமேல என்ன பாசம்!’ என்று பிரமித்து, `எனக்கும் வந்து பிறந்திருக்கே — வார்த்தைக்கு வார்த்தை எதிர்த்துப் பேசிண்டு!’ என்று தலையில் அடித்துக்கொண்டார்கள்.

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (97)

     

    நிர்மலா ராகவன்

     

    மூக்கை நுழைக்கலாமா?

    “உங்கள் கணவர் எதுவரை படித்திருக்கிறார்?” நேர்முகத் தேர்வில் ஒரு இளம்பெண்ணைக் கேட்டார்கள்.

    “அதற்கும் நீங்கள் விளம்பரம் செய்திருக்கும் வேலைக்கும் என்ன சம்பந்தம்?” என்று எதிர்க்கேள்வி கேட்டவளுக்கு வேலை கிடைக்கவில்லை. ஆனால் அவள் செய்தது சரியென்றே தோன்றுகிறது.

    பிறர் என்ன செய்கிறார்கள் என்றறியும் வேண்டாத ஆர்வம் உடையவர்கள்தாம் அத்தகைய கேள்விகளைக் கேட்பார்கள். இவர்களுக்கு யாராவது நிம்மதியாகவோ, மகிழ்ச்சியாகவோ இருந்தால் பிடிக்காது. எப்போதும் அவர்களது அதிகாரமே ஓங்கியிருக்க வேண்டும். தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்ற வித்தியாசமெல்லாம் கிடையாது இவர்களுக்கு.

    கதை

    ராஜன் ஒரு படித்த முட்டாள். நாம் குடித்துவிட்டு, வெகு நேரம் கழித்து வீட்டுக்குப் போனோமே, நம்முடன் இருந்த நண்பனும் அப்படித்தானே வீட்டில் `பாட்டு’ வாங்கிக் கட்டிக்கொண்டிருப்பான்?’ என்று அறியும் நப்பாசை அவனுக்கு.

    தொலைபேசியில் நண்பனின் வீட்டை அழைத்து, “நேற்றிரவு உன் அப்பா எத்தனை மணிக்கு வீட்டுக்கு வந்தார்?” என்று நண்பனின் மகளைக் கேட்டான் – மிக முக்கியம்போல்! “ஐந்து மணிக்கு என்று என்னிடம் சொல்கிறார். பொய்தானே?”

    “உங்களிடம் அப்பா சொல்வதை நம்பாமல், என்னிடம் கேட்கிறீர்களா? நல்ல நண்பர் நீங்கள்!” என்று சாடி, தந்தையின் கௌரவத்தைக் காப்பாற்றினாள் மகள்.

    சரிதான், வேறு திசையில் தன் கைவரிசையைக் காட்டலாம் என்று முடிவெடுத்தான் ராஜன்.

    “என் மனைவி உன் மனைவியைவிட கண்டிப்பானவள்!’ என்று பெருமை பேச ஆரம்பித்தான் நண்பனிடம். “நான் குடித்துவிட்டு வந்தால், எப்படிக் கத்துவாள், தெரியுமா?”

    பிறரது வாழ்க்கையில் குழப்பத்தை உண்டாக்கவே சிலர் இம்மாதிரி பேசுகிறார்கள் என்பது புரிந்தால், அலட்சியப்படுத்தலாம்.

    ஏன் அப்படிச் செய்கிறார்கள்?

    ராஜனைப்போல் பிறரது விவகாரங்களில் அநாவசியமாக மூக்கை நுழைப்பவர்கள் தம் பிரச்னைகளை நினைக்கவும் விரும்பாதவர்கள் . ஏதோ காரணத்தால் நிம்மதி குலைந்து போயிருக்கலாம். பிறர் நன்றாக இருந்தால் மட்டும் எப்படிப் பொறுப்பார்கள்? தாம் உற்ற நண்பர்தான் என்று நம்பவைப்பதுபோல், சாமர்த்தியமாக அவ்வப்போது வீட்டுக்கு வந்து, பரிசுப் பொருட்கள் கொடுக்கவும் தவறுவதில்லை இவர்கள்!

    இத்தகைய சிலர் நண்பர்களின் துணைவியரையும் விட்டு வைப்பதில்லை. வேடிக்கை என்றெண்ணி, சீண்டிப் பார்ப்பர். `நேற்று உங்கள் கணவர் இரண்டு, மூன்று பெண்களுடன் காரில் போவதைப் பார்த்தேனே!’

    வாகன வசதி இல்லாதவர்களுக்கு உதவியாகப் போயிருக்கலாம். அல்லது, அவர்களில் ஒருத்திக்கு உடல்நலக் குறைவாக இருக்கலாம்.

    பிறரது குடும்ப விவகாரத்தில் தலையிடும் இதுபோன்ற நபர்களின் பேச்சை அலட்சியம் செய்வது நல்லது. அதைவிட்டு, கணவரிடம் அதுபற்றி சந்தேகத்துடனோ, கோபத்துடனோ பேசினால் ஒன்றுமில்லாத சமாசாரம் பூதாகாரமாக வெடிக்கும்.

    வாழ்க்கைத் துணைவரையோ, பெற்றோரையோ, உற்றவரையோ அவமரியாதையாகப் பேசுபவரின் உறவைத் துண்டித்துக்கொண்டால்தான் நிம்மதி நிலைக்கும். இல்லாவிட்டால், சிறுகச் சிறுக நம்மை அவர் பக்கம் சாய்க்கப் பார்ப்பார்.

    தம்பதியரின் பிணைப்பு

    இருவருக்குள் மட்டுமே இருக்க வேண்டியது தாம்பத்திய உறவு. பலருடனும் தமது உறவை, அதன் குறைகளைப்பற்றிப் பேசுபவர் தன்னையும் அறியாது பிறரது குறுக்கீட்டை வரவேற்று, நிலைமையை இன்னும் மோசமாக்குகிறார். பிறரின் குறுக்கீடு எப்போதும் நன்மையை விளைவிப்பதாக இருக்காது.

    `மகனுக்குத் தன்மேல் இருந்த அன்பில் பங்கு கேட்க வந்துவிட்டாளே!’ என்ற பொருமலுடன், மருமகள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் குறுக்கிடும் மாமியாரும், “எல்லாரும் உன்னைப்போல் பெண்டாட்டிதாசனாக இருப்பார்களா!’ என்று கேலி செய்யும் நாத்தனாரும் ஒரு குடும்பம் இன்பமாக வாழவிடாது தடுக்கும் எதிரிகள்.

    இவர்கள் ஏன் அப்படி நடக்கிறார்கள் என்று தம்பதியர் அமைதியாக ஆராயும்போது, அவர்கள் உறவு பலப்படுகிறது. பொறுக்க முடியாது போய்விட்டால், நம்பகமான ஒருவருடன் பகிர்ந்து, தீர்வைத் தேடலாம்.

    மூக்கை நுழைப்பதால் நன்மையா?

    சில சமயங்களில், குறுக்கீடுகூட நன்மை விளைவிப்பதாக இருக்கிறது.

    கதை

    எங்கள் பக்கத்து வீட்டில் குடியிருந்த ஏலியம்மாவின் வாசற்கதவு எப்போதும் தாளிடப்பட்டிருக்கும். அக்கம்பக்கத்தில் யாருடனும் பேச்சு வைத்துக்கொள்ள அவள் விரும்பவில்லை.

    ஒவ்வொரு இரவும், பத்து மணிக்குமேல் தன் மூன்று வயதுக் குழந்தையை அடிப்பாள் ஏலியம்மா. குழந்தை, எமிலி, `அம்மா! அம்மா!’ என்று கதறும்.

    என்னால் பொறுக்கவே முடியவில்லை. பகலிலும் வாய் ஓயாது எமிலியைத் திட்டுவாள்.

    எந்தத் தாயாவது இப்படிச் செய்வாளா?

    யார், எப்படி குறுக்கிடுவது?

    ஒரு முறை, அவளுடைய கணவரின் குரல் கேட்டது: ”ஏய்! சும்மாச் சும்மா பிள்ளையை விரட்டாதே!” (எமிலி தந்தையின் சாயல்).

    “பால் குடிக்காம தூங்குதுங்க! எப்படிச் சும்மா விடறது?” என்ற ஆத்திரக்குரல் கேட்டது, இரவின் நிசப்தத்தில்.

    அந்தக் குழந்தையோ இளைத்துக்கொண்டே போயிற்று.

    ஒரு சாயந்திர வேளை, எங்கள் வீட்டின் இன்னொரு பக்கத்தில் இருந்த இளம்பெண்ணிடம் இதுபற்றி பேசினேன்.

    “எனக்கும் கேட்டிருக்கிறது, அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கும்போது, அந்தக் குழந்தையின் பரிதாபமான குரல் கேட்கும்,” என்று அவள் கலக்கத்துடன் ஆமோதித்தாள்.

    குடும்ப விவகாரம், நாம் என்ன செய்வது என்று எங்கள் கையாலாகாத்தனத்தை எண்ணி வருந்தினோம்.

    அன்றிரவு. “Hey, next door lady!” என்று என்னைக் கூவி அழைத்தாள் ஏலியம்மா. `நான் உன்னுடன் பேச வேண்டும்,’ என்றாள், அதிகாரமாக. தமிழச்சிதான். ஆனாலும், ஆங்கிலத்தில் கத்தினாள்.

    “உனக்குப் பேச வேண்டுமானால், நீ இங்கே வா!” என்றேன், அலட்சியமாக.

    அவள் வரவில்லை. நான் ஏன் அவள் குடும்ப விஷயத்தில் தலையிட வேண்டும், பிறருடன் அவளைப்பற்றிக் கண்டபடி பேசுகிறேன் என்றெல்லாம் கத்திக்கொண்டே இருந்தாள்.

    என்னை மிரட்ட முடியவில்லையே என்று மறுநாள் என் மூன்று வயது மகளை ஒரேயடியாகத் திட்ட, பயத்தில் அவளுக்குக் காய்ச்சல் வந்துவிட்டது.

    என் கணவர் அவள் வீட்டுக்குப் போய், “என் குழந்தைக்கு ஏதாவது ஆனால், உன்னைச் சும்மா விடமாட்டேன்!” என்று திட்டிவிட்டு வந்தார்.

    “உங்கள் மனைவி மிக நல்லவள் என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்! அவளோ..!” என்று அவள் கத்தியது என் காதில் விழுவதற்காகவே என்று எனக்குப் புரிந்தது.

    “எனக்கு என் மனைவியை நன்றாகத் தெரியும்!” என்று சொல்லிவிட்டு வந்தாராம். (பிறர்முன் தம்பதியர் ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்காமல் இருந்தால், அவர்கள் பிணைப்பு இறுகும்).

    மறுநாளிலிருந்து ஒரு நல்ல திருப்பம். அதற்குமுன் எப்போதும் கிழிந்த ஆடைகளில் காணப்பட்ட குழந்தை எமிலி பட்டுப்பாவாடையில் மிளிர்ந்தாள். தினமும், என் குழந்தைகளுக்கு எங்கள் வீட்டில் பூத்த டிசம்பர் பூவைத் தொடுத்து தலையில் சூட்டுவேன். ஏலியம்மாயும் தேடிப் பிடித்து அதே மலர்களை வாங்கி, தன் குழந்தையின் தலைகொள்ளாமல் வைப்பாள்! அன்பாக நடத்துகிறாளாம்!

    ஏலியம்மா மகப்பேறில்லாதவள், மைத்துனரின் குழந்தையை தத்து எடுத்துக்கொண்டிருக்கிறாள் என்று பிறகு கேள்விப்பட்டேன்.

    பொதுவாக, பிறரது விஷயங்களில் குறுக்கிடுவது நல்லதல்லதான். இதனால் சண்டை மூளும். நிம்மதியும், அமைதியும் சிறிது காலம் பறிபோகும். இவைகளைத் தவிர்க்கவே பலரும் தம் காரியத்தைப் பார்த்துக்கொண்டு போகிறார்கள் என்றே தோன்றுகிறது.

    ஆனால், நன்மை விளையுமானால், துணியலாம். யாரும் குறுக்கிடாவிட்டால், நிலைமை இன்னும் மோசமாகுமே!

    (மலேசியாவில், சில வருடங்களுக்குமுன் இதேபோல், அடுக்குமாடி வீடொன்றில் ஒரு குழந்தை இரவு பகலாக ஓயாது அழ, அக்கம்பக்கத்தினர் அதைக் கேட்டும் கேளாததுபோல் இருந்துவிட்டார்கள். அந்தச் சிறுவன் உடலெல்லாம் தீயால் சுட்ட காயத்தால் இறந்ததும் அவர்கள் குற்ற உணர்வால் துடித்துப்போயினர். அதன்பின்னர் குழந்தை வதை செய்பவர்களைத் தண்டிக்க சட்டம் அமலுக்கு வந்தது).

    அடுத்த வீட்டு விவகாரத்தில் நான் செய்ததில் எனக்கு வருத்தமோ, அவமானமோ கிடையாது. எப்போதாவது அந்தக் குழந்தை எமிலியின் நினைவு வரும். தாய் தனக்கு இழைத்த கொடுமை மாறி, எப்படித் தன்மீது இப்படி (போலியாகவாவது) அன்பைப் பொழிகிறாள் என்று அதற்குத் தெரிந்திருக்காது. அதற்காக எனக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் என்று நினைக்கும்போது ஒரு சிறு சிரிப்பு எழும்.

    தொடரும்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (96)

    நிர்மலா ராகவன்

    கோபம் பொல்லாத வியாதியா?

    நலம்

    பிறருக்கு என்ன துன்பம் வந்தபோதிலும், அதைக் கண்டும் காணாமல் அசட்டை செய்வது பயந்தவர்களின் சுபாவம். இவர்கள், `நான் பிறர் வழிக்கே போகமாட்டேன்!’ என்று பெருமையாகப் பேசிக்கொள்வர்.

    `எதுக்கு வீண் வம்பு! நீ உண்டு, உன் வேலை உண்டுன்னு இரு!’ என்று பிறர்க்கும் அறிவுரை வழங்குவார்கள்.

    இன்னொரு சாரார் தர்மத்துக்குப் புறம்பான நடப்புகளைக் கண்டு பொங்கி எழுவார். இத்தகையவர்கள் பாராட்டும், புகழும் எதிர்பார்ப்பதில்லை. இவர்களுக்கு வன்முறை இல்லாத ஆக்ககரமான செய்கைதான் முக்கியம். மகாத்மா காந்தியும் நெல்சன் மண்டேலாவும் கத்தியையா தூக்கினார்கள்? இவர்களுடையது தார்மீக கோபம்.

    தார்மீக கோபமா, என்ன அது?

    பிறர் படும் அவதிக்கு, துயரத்திற்காக நாம் அடைவது.

    சாத்வீக குணம்தான் சிறந்தது என்று மதங்கள் போதிக்கலாம். ஆனால் மற்றவருக்கு அநீதி இழுக்கப்படும்போது வாளாவிருக்கலாமா? பாதிக்கப்பட்டவர்களின் நிலையில் நம்மை வைத்துப் பார்த்தால் அவர்களின் துன்பம் புரியும். `பிறர் என்ன சொல்வார்களோ!’ என்ற பயமோ, தயக்கமோ எழாது.

    “அவன் சொன்னதைக் கேட்டு, எனக்குச் சரியான கோபம்!”

    “எனக்குக் கெட்ட கோபம் வந்தது!” என்றெல்லாம் கேட்டிருக்கிறோம்.

    கோபத்தில் எது நல்லது, எது கெட்டது?

    கதை

    கடந்த ஜனவரி மாதம் பினாங்குத் தீவருகே இருக்கும் Nibong Tebal (நிபோங் தெபால்) என்ற ஊரில் நடந்த சம்பவம் மலேசிய நாட்டையே உலுக்கியது.

    பதினான்கு வயதான வசந்தப்ரியா என்ற அழகிய பெண் தன் கைத்தொலைபேசியைத் திருடிவிட்டாள் என்று ஆசிரியை ரெமாலா ராமன் பழி சுமத்தி, ஐந்து மணி நேரம் அம்மாணவியை ஓர் அறையில் வைத்துப் பூட்டியிருக்கிறாள். (அதற்கு இரு தினங்களுக்குமுன்தான் அந்த ஆசிரியையின் பிறந்த நாளுக்காக சகமாணவிகளிடமிருந்து பணம் வசூல் செய்து, விருந்து வைத்திருக்கிறாள் அம்மாணவி).

    தான் அப்பொருளை எடுக்கவில்லை என்று எழுதிவைத்துவிட்டு, தன் அறையில் தூக்கு மாட்டிக்கொண்டாள் சிறுமி. சில தினங்கள் கோமா நிலையில் இருந்தவள் நினைவு திரும்பாமலேயே இறந்துபோனாள்.

    சம்பந்தப்பட்ட ஆசிரியையோ, மேசையில் உட்கார்ந்து செய்யும் வேறு வேலைக்கு மாற்றப்பட்டாள். அவ்வளவுதான்.

    பதின்ம வயதினர் பொதுவாகவே உணர்ச்சிவசப்படுபவர்கள். அதுகூடப் புரியாது, பல மணி நேரம் அவளை வதைத்தது என்ன நியாயம்?

    அற்பப் பொருள் ஒன்றுக்காக ஓர் உயிர் போயிருப்பது அநியாயம். இந்த அநியாயத்தைக் கண்டு பொங்கியெழுவது தார்மீக கோபம். சமூகம் சிறப்பாக நடக்க அவசியமானதும்கூட.

    எது சரி, எது தவறு என்று பிரித்துப் பார்க்கும் திறமையை நாம் வளர்த்துக்கொண்டால் இது சாத்தியமாகும்.

    கோபம் எழுந்தால், ஒருவரது ரத்த அழுத்தம் அதிகரிக்கும். மன இறுக்கம், தலைவலி என்று பல்வித உடல் உபாதைகளும் ஏற்படலாம். நம் கோபம் தகுந்த நேரத்தில் வெளிப்பட வேண்டும். தகுந்த காரணத்துக்காக வெளிப்பட வேண்டும். அதற்குப் பலன் இருக்க வேண்டும். அப்போதுதான் கோபப்படுபவர் உடல் ரீதியில் பெரிதளவில் பாதிக்கப்படுவதில்லை.

    `எங்கேயோ, யாரோ, எப்படியோ இறந்துபோனால் நமக்கென்ன!’ என்று இருந்தால், இம்மாதிரியான கொடுமைகள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்.

    பிறருக்கு விளைவிக்கப்படும் அநீதியால் கோபம் வந்தால், அது நாம் பிற உயிர்களிடம் செலுத்தும் அன்பைக் காட்டுகிறது. தார்மீக கோபம் உள்ளவர்கள் தமது கோபம் தணிந்தபின் செயலில் ஈடுபடுவதால் இங்கு வன்முறை கிடையாது.

    சிலருக்கு இத்தகைய கோபம் புரிவதில்லை.

    `எழுதினால் உங்களுக்கு என்ன கிடைக்கிறது?’ இப்படிக் கேட்பவர்கள் தம் குடும்பம் நன்றாக இருந்தால் போதும் என்று திருப்தி அடைபவர்கள். தமக்கு ஏதாவது சிறு துன்பம் நேர்ந்தாலும் இவர்களால் தாங்க முடியாது.

    `உங்கள் எழுத்தால் ஏதாவது மாறப்போகிறதா, என்ன?’ என்று அலட்சியத்துடன் கேட்பார் இன்னொரு சாரார்.

    கதை

    சில வருடங்களுக்குமுன், கணவரால் உடல் ரீதியில் வதைபட்ட பெண்கள் இருக்கும் ஒரு சமூகநல இல்லத்திற்குப் போனேன். இருபத்தேழு ஆண்டுகள் வதைபட்டும் பொறுமை காத்த குமுதா கூறினாள், “அவர் மாறிடுவார்னு நம்பிக்கையா இருந்தேங்க!” அவள் உடலில் பல எலும்புகள் நொறுங்கி இருந்தன.

    (`படித்தவர்கள் இப்படியெல்லாம் செய்வதில்லை!’ என்பவர்களுக்கு: குமுதாவின் கணவர் அரசாங்க நிறுவனம் ஒன்றில் இரண்டாவது இடம் வகித்த பெரிய அதிகாரி).

    அந்த இல்லத்தில் தங்கியிருந்த பல பெண்களுடன் பேசியதில், தம் அனுபவித்த இன்னல்களை, அதனால் எழுந்த துயரத்தை, வெளிப்படுத்தும் நிலையில் அவர்கள் இல்லை என்று புரிந்தது. சிலர் காலை விந்தி, விந்தி நடந்தார்கள். பற்களை இழந்தவர்கள் பலர். எல்லாம் கணவன்மார்களின் உபயம். (என் அதிர்ச்சியும், துயரமும் நீங்க இரு தினங்களாகின). அவர்கள் சார்பில், நான் அவர்களைப்பற்றி எழுதினேன்.

    நிறைய எழுதினேன், `கணவனே கண்கண்ட தெய்வம்’ என்று நம்பும் பெண்களின் மடமையைப்பற்றி. நமக்குச் சிறுவயதிலிருந்து போதிக்கப்பட்ட அகல்யா, அருந்ததி போன்ற `பத்தினித் தெய்வங்களின்’ தாக்கம் நம் பெண்களை எங்கு கொண்டு விட்டிருக்கிறதென்று. நான் எழுதியதை மேற்கோள் காட்டி, அதிர்ச்சியுடன் பல பெண்களும் தொடர்ந்து எழுதினார்கள்.

    இறுதியில், கணவன் மனைவியை அடித்தால் தண்டனை என்று சட்டம் விதிக்கப்பட்டது. கத்தியைவிட பேனாவால் நிறையவே சாதிக்க முடியும்.

    கோபத்திற்கும் சரியான இலக்கு இருத்தல் அவசியம்.

    சமீபத்தில், எவனோ ஒருவன் தற்கொலை செய்துகொண்ட பெண் படித்த பள்ளிக்கூடத்தில் பெரிய கற்களைத் தூக்கி எறிந்திருக்கிறான். அவ்வளவு ஆத்திரமாம்!

    இதனால் யாருக்கு என்ன பயன்?

    பிடிபட்டால், அவன்தானே சட்டத்தால் தண்டிக்கப்படுவான்?

    இம்மாதிரிதான் வெளிநாடுகளில் பணி புரிவோர் தம்மில் ஒருவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், ஒன்று திரண்டு தம் எதிர்ப்பை வன்முறையால் வெளிப்படுத்துவார்கள். இன்னொரு முட்டாள்தனம்.

    கதை

    சிங்கப்பூரில் இருக்கும் அந்த இடத்திற்குப் பெயர் லிட்டில் இண்டியா. இந்தியர்களும், பங்களாதேஷிகளும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெருவாரியாக இங்கு காணப்படுவார்கள். அவர்கள் திரள பிற காரணங்கள்: கோயிலைத் தவிர, மதுபானக் கடைகளும் உண்டு.

    டிசம்பர் 2013-ல் அந்த இடம் வேண்டாத பெருமை பெற்றது. திடீரென்று ஒருவன் தெருவின் குறுக்கே வர, அவன்மேல் தனியார் பேருந்து ஏற, அவன் தலத்திலேயே மாண்டு போனான். (அவன் குடிபோதையில் இருந்தான் என்று அப்போது வெளியிட்டிருந்தார்கள்).

    அங்கிருந்த 400 தொழிலாளிகளுக்க ஆத்திரம். சிங்கப்பூரில் நாற்பது வருடங்களாகக் காணாத கலவரம் அவர்களால் மூண்டது. பத்து காவல்துறையினர் காயமடைந்தனர். காவல்துறை வாகனங்கள், பேருந்து, ஆம்புலன்ஸ் என்று எல்லாவற்றின்மேலும் கற்களை எறியப்பட பெருஞ்சேதம் உண்டாகியது.

    பிடிபட்டவர்களில் 22 பேருக்கு சிறைத்தண்டனை. 57 பேர் தாய்நாட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டனர்.

    இந்த கோபத்தினால் அவர்கள் சாதித்தது என்ன? இந்திய கீழ்மட்டத் தொழிலாளிகளை ஏற்க ஒரு நாடே அஞ்சிவிட்டதுதான் கண்ட பலன்.

    `சிங்கப்பூரிலேதான் எங்களை விட மாட்டேங்கிறாங்களே!’ என்று அண்மையில் ஒரு தையல்காரர் என்னிடம் புலம்பினார். அங்கு கூடுதல் சம்பளம் கிடைத்திருக்கும். சிலரது அவசர நடத்தையால் பலரது கனவுகள் பாழாகிவிட்டன. தம் செயலால் எழக்கூடும் விளைவை கலகக்காரர்கள் எக்காலத்திலும் எண்ணிப் பார்ப்பதில்லை.

    கோபம் அடங்காமலே, ஆத்திரத்துடன் ஒருவர் செயல்பட்டால், அவரிடம்தான் ஏதோ கோளாறு. அவரது செயலால் எந்த பலனும் விளையப்போவதில்லை.

    கோபத்தை அறவே தணிப்பதென்பது இயலாத காரியம். ஆனால் கோபம் வரும்போது, ஆழ்ந்த மூச்சு, உலாவப்போதல், உடற்பயிற்சி போன்றவற்றால் அதை ஆறப்போடலாம். ஆக்ககரமாக என்ன செய்வது என்ற தெளிவு தானே பிறக்கும்.

    தொடரும்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (95)

    நிர்மலா ராகவன்

    நலம்-1-1-1-1

    நல்லதொரு தாம்பத்தியம் என்றால், இரு சாராரும் பிணைப்பால் நன்மை பெறுவதாக இருக்கவேண்டும்.

    நமக்கு நெருங்கியவர்கள் மகிழ்ச்சியையும், அமைதியையும் அளிப்பவர்களாக இருக்க வேண்டுவது அவசியம். மாறாக, `இப்படிச் செய்தால் அவர் என்ன சொல்வாரோ?’ என்ற பயமெழ, எந்த காரியம் செய்யுமுன்னரும் தயக்கம் ஏற்பட்டால், மன இறுக்கத்தைத் தவிர்க்க முடியாது.

    கதை

    முனைவர் பட்டம் வாங்கிய ஸாரா ஒரு மலாய் பெண். அவள் இருமுறை பத்திரிகையில் எழுதியவற்றிற்குப் நல்ல வரவேற்பு இருந்தது.

    “ஏன் அதற்குப்பின் நீங்கள் எழுதவேயில்லை?” என்று கேட்டேன்.

    “அவை வெளிவந்தபோது, பல தினங்கள் என் கணவர் என்னுடன் பேசவேயில்லை,” என்று பதிலளித்தாள். குரலில் வருத்தமில்லை. லேசான சிரிப்புடன், “ஆண்கள் அப்படித்தான்!” என்றாள்.

    ஸாராவைப் பொறுத்தவரை, குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டுமானால் கணவர் ஆத்திரப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    அவர் அவளைக் கட்டுப்படுத்தக் கையாண்ட வழி அவளை அலட்சியப்படுத்துவது.

    `உங்களுக்குப் பிடிக்கிறதோ, இல்லையோ, நான் எழுதிக்கொண்டுதான் இருப்பேன்!’ என்று ஆரம்பத்திலேயே ஸாரா திட்டவட்டமாகக் கூறியிருந்தால், கணவர் தொடர்ந்து எதிர்த்திருக்கமாட்டார்.

    மனைவி தன்னைவிட அதிக வளர்ச்சியடைந்தால் தன்னை மதிக்க மாட்டாளோ என்ற பொறாமை கலந்த பயத்துடன், நண்பர்கள் கேலி செய்வார்களே என்பதும் சேர்ந்து ஒரு சில ஆண்களை இப்படி ஆட்டுவிக்கிறது.

    அலட்சியம் காட்டுவது, ஆத்திரப்படுவது, மட்டம் தட்டுவது — இதெல்லாம் ஒருவரைக் கட்டுப்படுத்தும் ஆயுதங்கள். உடல் வதையைவிட உணர்ச்சிபூர்வமான வதையால்தான் பாதிப்பு அதிகம்.

    முதலில் அடங்கிப்போனால், `என்னை எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம். உங்களுக்கு அந்த உரிமை இருக்கிறது!’ என்று அனுமதி கொடுத்தாற்போல் ஆகிவிடும் அபாயமுண்டு.

    கதை

    தன்னைவிட மனைவி பெரிய பதவியில் இருந்ததை ஆரம்பத்தில் பெருமையாக நினைத்த சந்திரன் தன் தொழிலில் தோல்வியுற்றதும் மாறிப்போனார். மனைவி தன்னைக் குறைத்து மதிப்பிட்டுவிடப்போகிறாளே என்றஞ்சி, தன் அதிகாரத்தை நிலைநாட்டிக்கொள்ள முயன்றார். வார்த்தைக்கு வார்த்தை, `முட்டாள்’ என்று அவளைப் பழித்தார் — பலர் முன்னிலையில்.

    தனிமையில், பேச்சாலோ, அழுகையாலோ எதிர்த்தால், “உனக்கு எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளத் தெரியாது. சும்மா ஜோக்தானே!” என்றுவிடுவார், அலட்சியமாக. அவரைப் பொறுத்தவரை, அவருக்கு மட்டும்தான் உணர்ச்சிகள் உண்டு.

    அவள் அவரது வார்த்தைகள் தன் காதில் விழாததுபோல் இருக்கத் தலைப்பட்டாள். முகத்தில் எந்தவித உணர்ச்சியும் காட்ட மாட்டாள். தான் கோபித்துக் கத்தினாலோ, எதிர்த்துப் பேசினாலோ நிலவரம் இன்னும் மோசமாகிவிடும் என்று புரிந்து, அடங்கிப்போனாள். அதனால் பல வகையான உடல் உபாதைகள் ஏற்பட்டதைத் தவிர்க்க முடியவில்லை.

    கணவர் எப்போதாவது அவளைப் புகழ்வார். பரிசுப்பொருட்கள் வாங்கியளிப்பார். இதனால் அவருக்கு அவளைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கிடையாது என்பதில்லை. தனக்குக் குற்ற உணர்ச்சி ஏற்படாது பார்த்துக்கொள்கிறார். அவ்வளவுதான். பிறருக்கும் உணர்ச்சிகள் இருக்கலாம் என்பது இவரைப் போன்றவர்களுக்குப் புரிவதில்லை.

    தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ளத் தெரியாது, பிறரைக் கட்டுப்படுத்த நினைப்பவர் வீரரல்ல. இவர் பயந்தவர். ஒருக்கால் இவர் தவறு செய்தாலும், செய்யவே இல்லை என்று முதலில் சாதித்துவிட்டு, பிறகு பழியை வேறு ஒருவர்மேல் சுமத்துவார்.

    ஆணோ, பெண்ணோ, தம்பதியரில் ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்துதலில் வித்தியாசம் கிடையாது. யார் கை ஓங்கி இருக்கிறது, யார் அதிகமாக விட்டுக்கொடுத்துப்போவார் என்பதில்தான் சூட்சுமம் அடங்கியிருக்கிறது.

    கதை

    பத்து வயதுக்குமேல் வித்தியாசமாக இருந்த தம்பதிகளில் இளையவளான அருணா ஓயாமல் கணவரைப் பழிப்பாள். அவர் தனக்கு நிகரில்லை, வழுக்கை வேறு என்று ஏதேதோ குறைகள் அவளுக்கு.

    தன்மேல்தான் குறை என்று மனைவிக்கு விட்டுக்கொடுத்தே பழகியவருக்கு இறுதியில் பொறுக்கவே முடியாது போய்விட, உணவு உட்கொள்ளவே மறுத்தார் — மரணம்தான் தனக்கு விடுதலை அளிக்கவல்லது என்று முடிவு செய்தவர்போல.

    எல்லா ஆண்களும் இப்படி இருப்பதில்லை. பலர், `அவள் அப்படித்தான்! எல்லாவற்றிற்கும் கத்துவாள்,’ என்று அலட்சியப்படுத்திவிட்டு வெளியே போய்விடுவார்கள். நண்பர்களுடனாவது உல்லாசமாக இருக்கலாமே! இதனால் இவர்களுடைய சுதந்திரம் குறைந்து போவதில்லை.

    இவனா தலைவன்?!

    குடும்பத்தில் மட்டுமின்றி, பொது அமைப்புகளில் இருப்பவர்களும் தம்மைத்தாமே தலைவன் என்று நினைத்துக்கொள்வது வழக்கம்.

    `நான் சொல்வதுதான் சரி. ஏனெனில் நான் தலைவன்!’

    தலைவன் என்ற ஆணவம் இருப்பதால் பிறர் என்ன செய்யவேண்டும் என்பதையும் தானே நிர்ணயிக்கும் உரிமையை எடுத்துக்கொள்வார். தன் கீழ் இருக்கும் அனைவரும் தன் விருப்பப்படிதான் நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். யாராவது மறுத்தால், `தலைவரது’ கோபத்துக்கு ஆளாகத் தயாராக இருக்கவேண்டும்.

    எப்படிக் கண்டுபிடிப்பது?

    கட்டுப்படுத்துபவர்களுக்குச் சில பொதுவான குணங்கள் உண்டு.

    பிறர் பேசுவதைக் கேட்பதைவிடத் தாமே பேசுவது அதிகம். (ஆசிரியர்கள் விதிவிலக்கு!)

    கோபம், எதிலும் எதிர்மறையான அணுகுமுறை, கூசாமல் பொய்யுரைப்பது இதெல்லாம் இவர்களுக்குக் கைவந்த கலை.

    பிறரிடம் ஓயாது தப்பு கண்டுபிடிப்பார். ஆனால், அவர் செய்த தவற்றை யாரேனும் சுட்டிக் காட்டினால், அவர் தன்னை மோசமாக நடத்துவதுபோல் பாவனை செய்வார்.

    தனக்குப் பயந்து நடக்காதவர்களை, அடிமையாக இருக்க விரும்பாதவர்களை இகழ்வார். (`அவங்க ஒருமாதிரி! ராங்கி பிடிச்சவங்க!’)

    பிறருக்குத் தன்மேல் பரிதாபம் உண்டாக்க முயற்சி செய்வார். (`நான் உங்களுக்காக எவ்வளவு செய்யறேன்!’)

    இந்தத் தலைவரைச் சார்ந்திருந்தால் நமக்குத்தான் நன்மை என்று பிறரும் அவருக்குப் பிடிக்காதவர்களிடமிருந்து ஒதுங்கிவிடுவர். தனிமைப்படுத்தப்பட்டவர் பொறுக்க முடியாது, தாழ்ந்துபோவதும் உண்டு.

    தப்பிக்க வழி உண்டா?

    நம்மைப் பலகீனமாக ஆக்க பெருமுயற்சி எடுப்பவர்களுடன் மோதுவதோ, மாற்றுவதோ இயலாத காரியம். ஆனால், நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள முடியும். நம்மை அடிமைப்படுத்த நினைக்கும் இம்மாதிரியான `விஷ ஜந்து’க்களிடமிருந்து ஒதுங்கிவிட வேண்டும். பிடிக்காததை ஏற்பானேன்!

    மகிழ்ச்சியாக இருக்கத் தெரியாதவர்கள்தாம் பிறர் மகிழ்ச்சியைப் பறிக்க நினைக்கிறார்கள். இது புரிந்தால், நாம் கோபப்பட்டு, நம்மையே வருத்திக்கொள்ளத் தேவையில்லை. அவர்கள்மேல் பரிதாபம்கூட கொள்ள முடியும். பாவம், உடல் வளர்ந்தும், சிறுபிள்ளைத்தனம் மாறாது, வளர்ச்சி குன்றிப்போய் இருக்கிறவர்கள்!

    தானும் வாழ்ந்து, பிறரையும் வாழவைத்தால் மகிழ்ச்சி இரட்டிப்பாக ஆகும் என்பது புரியாதவர்கள்!

    தொடருவோம்

    Share