நிர்மலா ராகவன்

உதவினால் உற்சாகம் வரும்

`வயதாகிவிட்டதா! ஒரே மறதி!’ பலரும் அலுத்துக்கொள்வதைக் கேட்டிருப்பீர்கள்.

ஓர் அறைக்குள் சென்று, அல்லது ஐஸ்பெட்டி அருகே போய் நின்று, அங்கே எதற்காக வந்தோம் என்று மறந்து நிற்பது வயோதிகர்களுக்கு சகஜம். இது ஒன்றும் பெரிய வியாதி இல்லை.

நாற்பது வயதுகூட ஆகாத சிலர்கூட ஒரே இடத்தில் ஒன்றும் செய்யாது உட்கார்ந்திருந்தால் ஏதோ பெரிய பதவியிலிருப்பதுபோல் எண்ணிக்கொள்வார்கள். மூளையும் மந்தமாகிக்கொண்டே போகும். மூளைக்கு வேலை கொடுத்துக்கொண்டே இருந்தால்தானே அது சுறுசுறுப்பாக இயங்கும்?

வேலை என்றால் கையால், காலால் செய்வது மட்டுமில்லை. கையால் ஒரு சாமானை எடுக்க வேண்டும் என்றால், மூளைதானே அதற்கு அந்தக் கட்டளையை இடுகிறது? ஐம்புலன்களுக்கும் பயிற்சி கொடுத்துக்கொண்டே இருப்பது மூளைக்குப் பயிற்சி கொடுத்ததுபோல்தான்.

சில கலாசாரங்களில், எந்த நற்காரியத்தையும் வலது கையால்தான் செய்யவேண்டும் என்று சிறு வயதிலிருந்தே பழக்கியிருப்பார்கள். ஒரு பூட்டையோ, கதவையோ திறக்க அவ்வப்போது இடதுகையையும் பழக்கினால், அதுவே மூளைக்கு ஓர் உந்துதலாக ஆகிறது.

கதை

`நான் வலது கையை மட்டும்தான் உபயோகிப்பேன்! ஒரு கோப்பையைக்கூட இடக்கையால் தூக்க முடியாது’ என்று சிறு வயதில் நான் பெருமை கொண்டிருந்தேன். எல்லாம் வலக்கரத்தின் மகிமையைப் பிறர் சொல்லக் கேட்டதால்தான்!

ஆனால், நீந்தக் கற்கும்போது அப்பழக்கத்தால் அனர்த்தம் விளைந்தது. உடல் ஒரு பக்கமாகச் சாய்ந்தது. மிகவும் பிரயாசைப்பட்டு இடது கையைச் சுழற்ற வேண்டியிருந்தது. சில நாட்களிலேயே, `நீந்தினால் சுறுசுறுப்பு வருகிறதே!’ என்ற ஆச்சரியம் எழுந்தது. மூளைக்குப் பயிற்சி கொடுக்கிறோம் என்பது அப்போது புரியவில்லை.

நீச்சல் மட்டுமின்றி, நடைப்பயிற்சியும் மூளையைச் சுறுசுறுப்பாக்கும்.

வயோதிகர்கள் பூங்காவிலோ, கோயிலிலோ, கடைவீதிகளிலோ தம்மை ஒத்த பிறருடன் உரக்கப் பேசி மகிழ்வதைப் பார்க்கலாம்.

`சாயந்திரம் ஆனா, எங்க வீட்டுக்காரர் ஒரு கைத்தடியோட வாக்கிங் போயிடுவார்!’ என்று ஏளனமாக ஒரு மூதாட்டி சொன்னார். நடப்பது, பிறருடன் பேசுவது இரண்டுமே மன இறுக்கத்தைக் குறைக்கும் என்று அவருக்குப் புரியவில்லை.

உடல் உபாதைகளைப்பற்றியோ, `இனி என்ன இருக்கிறது! நம் காலம் முடிந்துவிட்டது!’ என்றோ நினைத்து வருந்தாது, ஆக்ககரமாக நடக்கிறாரே என்று மகிழ்ச்சிகொண்டிருக்கலாமே!

உட்கார்ந்த நிலையில் காலை ஆட்டுவது

படிக்கவோ, கணினிமுன் உட்கார்ந்து விளையாடவோ ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருக்கும் சிறுவர்கள் காலை ஆட்டியபடி தம் வேலையைக் கவனிப்பார்கள்.

`இது என்ன கெட்ட பழக்கம்?’ என்று திட்டு வாங்கினாலும், அவர்கள் அப்படியே செய்துகொண்டிருப்பார்கள்.

இயல்பாகவே அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது, புத்தகம் படிப்பது, காலுக்குப் பயிற்சி கொடுப்பது அனைத்துமே மூளையை அயராது வேலை செய்ய வைக்குமென்று. இப்பழக்கத்தால் ஞாபகசக்தி பெருக வாய்ப்பிருக்கிறது.

குறிப்பிட்ட இடத்துக்கு அனுதினமும் ஒரே வழியில் நடக்காது, வெவ்வேறு வழிகளில் நடக்க முயற்சித்தால், சிறிது யோசிக்க வேண்டியிருக்கும், அல்லவா? அதுவும் கற்பனை சக்தியையும், பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் ஆற்றலையும் பெருக்குகிறது.

`உங்கள் நாட்டிலிருந்து வரும் நகைகள் எப்படி அவ்வளவு துல்லியமான வேலைப்பாடுடன் அமைந்திருக்கிறது? என்று நான் கேட்டபோது, என் கொரிய நண்பர் தெரிவித்த செய்தி:

சாப்பிடும்போது, ஓரிரு அங்குல நீளமே கொண்ட மிகச் சிறிய “சாப் ஸ்டிக்” பயன்படுத்துவார்களாம் அந்நாட்டவர்கள். அதனால் அவர்கள் நுண்ணிய கைவேலைகளில் சிறந்திருப்பார்கள்.

கை, கால், கண் ஆகியவை மூளையை சுறுசுறுப்பாகவே வைத்திருக்க வழி செய்கின்றன. சரி, பிற புலன்களுக்கு எப்படி பயிற்சி அளிப்பது?

`மூக்கிற்கும், நாக்கிற்கும் பயிற்சியா!’ என்று அயர வேண்டாம். கண்ணை மூடிக்கொண்டு, இன்னொருவரை உங்கள் மூக்கின் அருகே ஒரு சாமானை, அல்லது உணவை கொண்டுவரச் சொல்லுங்கள். அது என்னவென்று கண்டுபிடிக்க முடிகிறதா? (பள்ளியில், விஞ்ஞான பாடத்தின்போது இந்தப் பரிசோதனையைச் செய்யச் சொல்வதுண்டு).

எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் தேகப்பயிற்சி ஒரு பாடமாக அமைந்திருக்கிறது. காலையில், அன்றைய தினப் பாடங்கள் ஆரம்பிக்குமுன்னர் யோகா கற்றுக்கொடுப்பதும் உண்டு. மூளை சுறுசுறுப்பாக, எவ்வித இறுக்கமுமின்றி இயங்க, மாணவர்கள் தூங்கி வழியாமல் இருக்கத்தான் இப்பயிற்சிகள். இதன் முக்கியத்துவம் புரியாது, பலரும் அரைமனதுடன் ஈடுபடுவார்கள்!

“நான் ஒரு பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக இருந்தபோது, மாணவர்கள் ஒளிந்துகொண்டு விடுவார்கள். அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கவே நேரம் போய்விடும்!” என்று என் சக ஆசிரியர் ஒருவர் அயர்ச்சியுடன் கூற, எல்லாரும் சிரித்தோம்.

வயது முதிர்ச்சியால் உபாதைகள்

அறுபது வயதுக்குமேல், பெண்மணிகளுக்கு ஆர்தரைடிஸ் வருகிறது. இடுப்பு, முழங்கால், பாதம் எல்லாவற்றிலும் வலி உயிர் போகும். `நான் குண்டாகக்கூட இல்லை. இருந்தாலும் காலில் பொறுக்க முடியாத வலி!’ என்று புலம்பிப் பயனில்லை.

நாம் அதிகம் பயன்படுத்தாத, அல்லது மிகையாகப் பயன்படுத்தும் எந்தப் பாகமும் விரைவில் வலுவிழந்துபோகும். இள வயதினர்களாக இருந்தாலும், கணினிமுன் நீண்ட நேரத்தைக் கழிப்பவர்களுக்கு தோள் மற்றும் மணிக்கட்டில் பொறுக்க முடியாத வலி ஏற்படுகிறது. அந்தந்த பாகங்களுக்கு உரிய பயிற்சி உண்டு.

`பள்ளி நாட்களிலேயே நான் உடற்பயிற்சி என்றால் ஓடி ஒளிவேன். இப்போது யார் செய்வார்கள்!’ என்பவர்களுக்கு விமோசனமே கிடையாது.

வலியால் மன இறுக்கம் அதிகரிக்க, வலியை மறக்க, தங்களுக்குக் கீழ் இருக்கும் அபாக்கியவான்களை ஓயாமல் சாடுவது என்ன நியாயம்?

இசையைச் செவிமடுப்பதன்மூலம் அமைதியை நாடலாம். நம்மைச் சிரிக்கவைக்கும் திரைப்படங்கள், புத்தகங்கள் ஆகியவைகளும் அமைதியை அளிக்கவல்லன.

தனிமையில் இனிமை காண முடியாதவர்கள் பிறருடன் கலந்து பழக, வாழ்க்கையில் பிடிப்பு வரும்.

சமீபத்தில் ஒருவர் தினசரியில் எழுதியிருந்தது: `நான் மன இறுக்கத்தால் அவதிப்பட்டேன். பிறருக்கு உதவி செய்தால், அது குறைந்துவிடுகிறது. `நம்மாலும் பிறருக்கு உதவி புரிய முடிகிறதே!’ என்று உணரும்போது, மனம் உற்சாகமாகிவிடுகிறது’.

உடற்பயிற்சியா, உதவியா?

இரண்டுமே அவசியம்தான். உடல் திடகாத்திரமாக இருந்தால்தானே பிறருக்கு உபத்திரவம் அளிக்காது, உதவியாக இருக்க முடியும்?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.